தொடுவானம் 21. உயிருக்கு தப்பி ஓட்டம்

This entry is part 1 of 23 in the series 22 ஜூன் 2014

21. உயிருக்கு தப்பி ஓட்டம்

பள்ளியிலிருந்து சற்று தொலைவில் இருந்தது அந்த புது வீடு. அதை வீடு என்று சொல்ல முடியாது. கடை வீடு எனலாம். அப்பகுதியில் வரிசையாக இருந்த கடைகளில் ஒன்றின் பின்பறம் அது இருந்தது..அந்தக் கடையில் ஒரு தமிழர் சிகை அலங்கரிக்கும் கடை வைத்திருந்தார். அப்போது அதை கண்ணாடிக் கடை என்போம். ஆம். முடி வெட்டும் கடைதான். அதன் பின்புறம் அவரின் குடும்பம் இருந்தது. அங்கு எங்களுக்கு ஒரு அறை வாடகைக்கு தரப்பட்டிருந்தது!
முன் பக்க கடையின் வழியாகத்தான் எங்களின் அறைக்குச் செல்ல முடியும். அங்கு நுழை ந்ததுமே, வெட்டப்பட்டு தரையில் கிடக்கும் முடிகளின் வாசம் அல்லது துர்நாற்றம் வீசும். குமட்டிக்கொண்டும் வரும்! எப்படித்தான் அந்த சுகாதாரமற்ற இடத்தை எப்போதுமே சுத்தம் பார்க்கும் அப்பா தேர்ந்தெடுத்தார் என்பது எனக்குப் புரியவில்லை.
எந்நேரமும் கடைக்குள் ஆட்கள் வந்து போய்க் கொண்டிருப்பார்கள். அங்குள்ள வானொலியும் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கும். சிலர் உரக்க பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருப்பார்கள். நிச்சயம் அந்த சத்தங்கள் அனைத்தும் எங்கள் அறையில் கேட்கும். எனக்கு சத்தம் என்றாலே பிடிக்காது. நிச்சயம் அங்கு அமர்ந்து பாடங்களைப் படிக்கும் சூழல் இல்லவே இல்லை.
ஒரேயொரு வசதிதான் அங்கு இருந்தது. குளியல் அறையும் கழிவறையும் அருகிலேயே இருந்தது. ஆனால் அதிலும் ஒரு குறைபாடு இருந்தது.
கடைகாரரின் குடும்பத்தினரும் அவற்றையே பயன்படுத்துவர். அவர்கள் வீட்டில் இரண்டு பையன்களும் ஒரு சிறுமியும் இருந்தனர். அதனால் சில அவசர நேரத்திலும்கூட காத்திருக்க வேண்டும். மூத்தவன் கனகசபாபதி என் நண்பனானான்.
நான் பள்ளியிலிருந்து திரும்பியதும் கடைச் சாப்பாட்டை சாப்பிட்ட பின்பு உடன் என் புத்தகங்களைத் தூக்கிக்கொண்டு நேராக தமிழ்ப் பள்ளிக்குச் சென்று விடுவேன்.அது நடக்கும் தொலைவில்தான் இருந்தது. மாலை வரை அங்கு தனியாக வகுப்பறையில் அமர்ந்து பாடங்களைத் தயார் செய்வேன். அதோடு கதைக் கட்டுரைகளையும் எழுதுவேன். இருட்டியபின் திடலில் ஓடுவேன்.பள்ளியிலேயே குளித்துவிட்டு இரவு உணவுக்கு வீடு திரும்புவேன். உணவுக்குப் பின்பு மீண்டும் பள்ளிக்குத் திரும்பி விடுவேன்.அங்கு சிதம்பரம் சித்தப்பா இருந்தது ஒரு வகையில் ஆறுதல் தந்தது. சில வேளைகளில் ஜெயப்பிரகாசம் அல்லது கோவிந்தசாமி அந்நேரம் இரவில் வருவார்கள்.எப்போவாவது வெளியில் செல்வோம்.
அங்கு குடியேறிய பின் கொஞ்ச நாட்கள் பிரச்னைகளின்றி நகர்ந்தன.
அந்த கடை வரிசையில் ஒரு இந்தியரின் தையல்கடை இருந்தது.அதில் குரூப் என்பவன் தையல் பழகி வந்தான்.அவன் மலையில் லதா வீட்டின் அருகே வசிப்பவன். நாங்கள் அங்கு குடியிருந்தபோது என்னை நன்றாகத் தெரியும்.நானஅந்தக் கடை வழியாக பள்ளிக்கு செல்லும் போதெல்லாம் என்னைப் பார்த்து முறைப்பான். எனக்கு அவனுடைய பார்வை பிடிக்கவில்லை.நானும் அவனை முறைத்துப் பார்த்துக்கொண்டு செலவேன்.
ஒரு நாள் மாலையில் நான் நன்றாக உடுத்திக்கொண்டு கடை வரிசையின் வராந்தாவில் நடந்து பள்ளிக்கு நடந்து சென்றேன்.வழக்கம்போல் தையல் கடையைத் தாண்டி சென்றேன்.அப்போது அந்த சத்தம் கேட்டது.
” டேய்! இங்கே வாடா! ” அது குரூப்பின் குரல்தான். திடுக்கிட்டு அப்படியே நின்று திரும்பிப் பார்த்தேன்.அவன் தையல் இயந்திர இருக்கையிலிருந்து எழுந்து வராந்தாவில் ஓடி வந்தான்.
” நீ என்ன காதல் மன்னன் என்ற நினைப்போ? நீ லதாவைக் காதலிக்கிறாயா? ” உரக்கக் கத்தினான்.
நான் செய்வதறியாது திடுக்கிட்டு நின்றேன். ஆனால் அது கேட்டு கோபம் பொங்கியது.திடீரென்று அவனுக்கு என்ன வந்தது என்றும் குழம்பினேன்.
” டேய்! நான் யார் தெரியுமா? ” இது அவனின் அடுத்த கேள்வி. அதற்குமேல் என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. நானும் தயாரானேன்.
” நீ யாராக இருந்தால் எனக்கு என்ன? ” ஆத்திரமாகஅவனைப் பார்த்து கேட்டேன்.
சற்றும் எதிர்ப்பாராத வகையில் என்னுடைய வலது கன்னத்தில் பளார் என்று அறைந்துவிட்டான்! சற்று நிலை தடுமாறிப்போனேன். கன்னத்தைக் கையால் பிடித்துக்கொண்டு குனிந்து நிமிர்ந்த நான் அவனை நோட்டமிட்டேன். என்னை அடித்துவிட்ட பெருமிதத்தில் நின்றான்.
நிமிர்ந்த நான் என்னுடைய வலது காலால் ஓங்கி அவனுடைய வயிற்றில் உதைத்தேன்! அவன் கொஞ்சமும் அதை எதிர்ப்பார்த்திருக்க முடியாது. வயிற்றைப் பிடித்துக்கொண்டு அப்படியே உட்கார்ந்து விட்டான். சத்தம் கேட்டு ஒருசிலர் முடி வெட்டும் கடையிலிருந்து ஓடி வந்தனர்
உட்கார்ந்திருந்த நிலையிலிருந்து எழுந்தவன் பாக்கட்டிலிருந்து ஒருகத்தியை எடுத்துக்கொண்டு என்னை நோக்கி ஓடி வந்தான். நானும் பாக்கட்டில் கத்தி வைத்திருந்தேன். அதை எடுத்து நீட்டியவாறு அவனை எதிர்கொண்டேன். அந்த நேரம் பார்த்து ஓடி வந்தவர்கள் எங்கள் இருவரையும் பிடித்துக்கொண்டனர்.கத்திகளைப் பிடுங்கிக் கொண்டனர். நாங்கள் திமிறிக் கொண்டு கட்டிப் புரண்டோம்.என் சட்டை நார் நாராகக் கிழிந்து போனது.
எப்படியோ எங்களை அங்கிருந்தவர்கள் பிரித்து விட்டனர். அங்கே வந்த அப்பாவும் அவனுக்குச் சாதகமாகவே பேசியது என் ஆத்திரத்தை மேலும் அதிகமாக்கியது.
‘ அவனை அடித்துக் கொல்லடா! இந்த வயதில் காதலாம் காதல்! ” என்று அனைவர் மத்தியிலும் என்னை அவமானப்படுத்தினார்! அப்படிச் சொன்னவர் எது பற்றியும் கவலையின்றி எங்கோ சென்றுவிட்டார்!
” டேய்! இப்போ நீ தப்பிச்சே! நீ இனிமேல் மலை பக்கம் வந்து பார்! உன்னைக் கொல்லாமல் விட மாட்டேண்டா! ” ஆவேசமாக மீண்டும் கத்தினான். அவனுக்கும் பெரும் அவமானம் தான். அவனுக்கு வயது இருபத்தைந்தைத் தாண்டி இருக்கும்.
அவனுடைய எச்சரிக்கையைக் கேட்டு நானும் மனம் தளரவில்ல.
” மலைக்குதானே வரணும். இன்றே வரேண்டா! உன்னால் முடிந்ததைச் செய்து பாரடா! ” அவனுடைய சவாலையும் அப்போதே ஏற்றுக்கொண்டேன்!
ஆவேசத்துடன் குடியிருக்கும் கடைக்கு திரும்பினேன்,( அதை இல்லம் என்று கூற விரும்பவில்லை! )
உடன் முகம் கழுவி விட்டு, வேறு சட்டை மாட்டிக்கொண்டு நேராக ஜெயப்பிரகாசம் வீடு சென்றேன். அவனை உடன் அழைத்துக்கொண்டு பள்ளி திடலுக்குச் சென்றேன்
நடந்தவற்றைக் கூறி அவன் சவால் விட்டிருப்பதையும் சொன்னேன்.
” இது என்ன பெரிய சவால். நீ சொன்னபடியே இன்று இரவு மலைக்கு நாம் இருவரும் போவோம். அவன் என்ன செய்து விடுவான் என்பதையும் பார்த்துவிடுவோம். ” தைரியமூட்டினான். அது எனக்கு பெரிய ஆறுதலாக இருந்தது.
” வா. நாம் சீனன் கடை சென்று முதலில் தெம்பாக சாப்பிட்டு விடுவோம். ” என்று அழைத்தான்.
” கோவிந்தசாமியிடம் சொல்லவேண்டாம். அவன் பயந்தாங்கொள்ளி. காரியத்தைக் கெடுத்து விடுவான். இது நம் தன்மானப் பிரச்னை. இன்று கட்டாயம் நீ சொன்னபடி மலைக்கு சென்றே ஆகவேண்டும்”
” ஆமாம். ” நான் ஆமோதித்தேன்.
” உன் கதியைக் காட்டு. ” என்றான்.
நான் பாக்கெட்டில் கைவிட்டு கத்தியை எடுத்து அவனிடம் தந்தேன். அதைப் பார்த்த அவன் சிரித்தான்.
” இதை வைத்துக்கொண்டு என்ன செய்யப் போகிறாய்? இது வேண்டாம். நான் வீட்டிலிருந்து இரண்டு பெரிய கத்திகள் கொண்டு வருகிறேன். வேறு வழி தெரியாவிட்டால் அவனைக் குத்தி விடுவோம். ” தைரியமூட்டினான்.
( அப்போதெல்லாம் வெளியிசெல்லும்போது பாதுகாப்புக்கு கத்தி வைத்திருப்பது வழக்கில் இருந்தது. எங்கள் வட்டாரத்தில் குண்டர் கும்பல்களின் அட்டூழியம் அப்படி. நானும் ஒரு பேனாக் கத்தியை எப்போதும் பாக்கெட்டில் வைத்திருந்தேன். சட்டப்படி அது குற்றமே! )
” ஆமாம். அவனை அப்படிதான் செய்ய வேண்டும். ” பதில் கூறினேன்.
சீனன் கடையில் சீன உணவு உண்டோம். எங்களுக்குப் பிடித்த ” கொய் தியாவ் ” உண்டோம். பீர் பருகவில்லை.
இருட்டிய பின்பு இருவரும் மலையில் ஏறினோம். அந்த வயதில் உண்டான அசட்டுத் துணிச்சல் அது!
பேசிக்கொண்டே வேக வேகமாக மலை மீது வீதியில் நடந்து சென்றோம்.
” நீ சொன்னபடி வந்து விட்டாய் என்பதை அவனுக்குக் காட்ட வேண்டும்.அப்போதான் நீ அவனுக்குப் பயப்படவில்லை என்பது தெரியும்.” தைரிய மூட்டினான் ஜெயப்பிரகாசம்..
நாங்கள் மலை உச்சிக்குச் சென்று விட்டோம். வலது பக்க மேட்டுப் பகுதியில்தான் குரூப்பின் வீடு. சன்னல் வழியாக வெளியே வீதி தெரியும். தெரு விளக்கு மங்கியதாக இருந்தாலும் நாங்கள் நடந்து வருவது நன்றாகத் தெரியும். அவனுடைய அறைக்குள் வெளிச்சம் இருந்தது.அந்த சன்னலைப் பார்த்தோம். அவனுடைய தலை தெரிந்தது. எட்டி எங்களைப் பார்த்தான். உள்ளே ஓடுவது தெரிந்தது. உடன் ஒரு நீண்ட பாராங் கத்தியை சன்னல் வழியாகக் காட்டினான். அது ஒளியில் பளபளத்தது!
” வந்துட்டாயாடா! உன்னை வெட்டாமல் விடமாட்டேண்டா ! ” உரக்கக் கத்திவிட்டு வெளியேறுவது தெரிந்தது.
எனக்கு அந்த பாராங் கத்தியைப் பார்த்ததும் பயம் வந்துவுட்டது!
” இப்போ என்ன செய்வது? நம்முடைய கத்திகள் சின்னதாக உள்ளதே? ” நான் பதறினேன்.
” ஆமாண்டா! நமக்கு துணிவு இருந்தாலும் இது போன்ற நேரத்தில் தப்பித்துக் கொள்வதே நல்லது. அந்த பாராங் கத்தியால் நாம் தான் வெட்டு படுவோம்.” என்று எச்சரித்தவன் வேகத்தை அதிகமாக்கினான்.நானும் பின்தொடர்ந்தேன்.
அதற்குள் குரூப் அந்த பளபளக்கும் கத்தியைத் ஓங்கிக் கொண்டு வீதியில் இறங்கி விட்டான்.
நாங்கள் ஓடினோம். அவன் துரத்தினான்.அவனிடமிருந்து தப்பிக்க வேண்டுமானால் யாருடைய வீட்டிலாவதுதான் புகுந்தாக வேண்டும். வேறு வழியேயில்லை.
நல்ல வேளையாக இரத்தினசாமியின் வீட்டுக் கதவு திறந்திருந்தது. நாங்கள் அங்கு புகுந்து கதவைத் சத்தினோம். உள்ளிருந்து ஓடிவந்த இரத்தினசாமி என்ன ஆயிற்று என்று பதறினார்.நான் கதவைக் காட்டி, ” குரூப் வெட்ட வாரான்! ” மூச்சு இறைக்கக் கூறினேன்.
அவர் கதவைத் திறந்து அவனைத் தடுத்து கத்தியைப் பிடுங்கிக் கொண்டார். அவனிடம் எதோ சமாதானம் கூறினார்.கத்தியை அவன் திரும்ப வாங்கிக் கொண்டு, ” இன்னிக்கு இல்லாவிட்டாலும ஒருநாள் இந்த கத்திக்கு உன்னை பலியிடாமல் விடமாட்டேண்டா! ” என்று உரக்கக் கத்தி விட்டுத் திரும்பினான். அது கேட்டபோது என் உடல் நடுங்கியது.அப்போதுதான் பயம் என்பது என்னவென்று தெரிந்தது!
” ஓ! இது உன் காதல் பிரச்னையா? சரி போய் ஜாக்கிரதையாக இரு. ” என்று கிண்டலாகக் கூறி அனுப்பினார் இரத்தினசாமி. வில்லனாக வந்தவர் அப்போது காப்பாற்றிவிட்டார்! ஆயிரம் ஆனாலும் அவர் எனக்கு மாமாதானே!
தப்பித்தோம் பிழைத்தோம் என்ற நிலையில் மலையில் இருந்து வேகமாக கீழே இறங்கினோம்.
தேநீர்க் கடையில் சிறிது நேரம் அமர்ந்து தேநீர் பருகினோம்.
” டேய். இதோடு உனக்கு ஆபத்து தீரலை. எந்த நேரத்திலும் இது நேரலாம்.” ஜெயப்பிரகாசம் ஏதோ யோசித்தப்படி கூறினான்.
” ஆமாம். இப்ப என்ன செய்யலாம்? ஏதாவது செய்தாக வேண்டுமே? ஏதாவது யோசனை சொல். ” அவனிடம் கேட்டேன்.
” இதற்கு ஒரேயொரு வழிதான் உள்ளது . ”
” என்ன அது? ”
” பேசாமல் போலீசில் ரிப்போர்ட் பண்ணுவோம்.”
” என்ன? போலீசா ? ” நான் திடுக்கிட்டேன். ” அதன் பின் அவன் இன்னும் பழிவாங்க துடிப்பானே! அது இன்னும் ஆபத்து இல்லையா? ”
” இல்லை . உன் உயிர் பத்துகாப்புக்கு இதை நாம் இப்பவே செய்தாக வேண்டும். அவன் தான் உன்னமுதலில் வம்புக்கு இழுத்தான். உன் மேல் எந்த குற்றமும் இல்லை. அதோடு நீ நல்ல பள்ளியின் மாணவன். நீ சொல்வதை அவர்கள் நம்புவார்கள். ”
அவன் சொன்னது சரியாகப் பட்டது. அதற்குமேல் சிந்திக்க நேரமும் இல்லை.நான் சம்மதித்தேன்.
நாங்கள் அங்கேயே பேருந்து ஏறி குவீன்ஸ் டவுன் காவல் நிலையம் சென்றோம்.
நாங்கள் மாணவர்கள் என்றதும் அங்கிருந்த சீன இன்ஸ்பெக்டர் மிகவும் கவனமாக நாங்கள் சொல்வதைக் கேட்டார். நாங்கள் ஆங்கிலத்தில்தான் பேசிக்கொண்டோம். என்னுடைய பள்ளியின் பெயர் அப்போது எனக்கு பெரிதும் கைகொடுத்தது தெரிந்தது.
அதன் பின்பு நடந்தவையெல்லாம் நம்பமுடியாத வகையில் துரிதமாக நடந்தேறியது. அது எனக்கு வியப்பைத் தந்தது!
எழுத்து மூலம் ஒரு புகார் என் கைப்பட எழுதி வாங்கினர். உடன் வேறு இரண்டு சாதாரண உடையில் இருந்த உளவு காவல் அதிகாரிகளை அழைத்து அவர்களிடம் உடன் நடவடிக்கை எடுக்கச் சொன்னார்.
அந்த இருவரும் எங்களை போலீஸ் ஜீப்பில் ஏற்றிக்கொண்டு மலைக்குச் சென்றனர். அதற்குள் இரவு மணி பத்து ஆகிவிட்டது. ஜீப்பை வீதியிலேயே நிறுத்தினர். குரூப்பின் வீட்டுக்கு எங்களை அழைத்துச் சென்றனர்!
வீட்டின் கதவு உள்ளே தாளிடப்பட்டிருந்தது. விளக்குகள் அணைக்கப்பட்டிருந்தன.வாசலிலும் நல்ல இருட்டு!
என்னை அந்தக் கதவைத் தட்டச் சொன்னார் .நெஞ்சம் படபடக்க தட்டினேன். பதில் இல்லை. பின்பு அந்த சீனர்களில் ஒருவர் பலமாகத் தட்டி . ” கதைவத் திற! ” என்று மலாய் மொழியில் கூறினார்.
” யார் நீ? ” உள்ளிருந்து கேட்டது.
அதற்கு அவர் என் பெயரைச் சொல்லி என்னுடைய நண்பன் என்றார்.
ஒரு கணம் நிசப்தம்! திடீர் என்று கதவைத் திறந்தவன் அதே பாராங் கத்தியை ஓங்கியபடி வெளியே வந்தான். அதை லாவகமாகப் பிடித்த சீன அதிகாரியைப் பார்த்து ” நீங்கள் எல்லாம் கேங்க்ஸ்டரா? ” என்று கத்தினான்
அவர் கைத்துப்பாக்கியை எடுத்து அவனை நோக்கி நீட்டி,, ” நீ என்ன பெரிய கேங்க்ஸ்டரோ? சி.ஐ. டி,. போலீசையே வெட்டிவிடுவாயோ? ” என்றார்.
அது கேட்ட அவன் பதறிப்போனான்! ” சாரி சார்…சாரி சார்… ” என்று மன்றாடினான்!
” அதை இப்படிக் கொடு! ” அவன் பாராங் கத்தியை அவரிடம் தந்தான்.
” சரி. இவனை ஏன் வெட்ட துரத்தினாய்? இவன் என்ன செய்தான்? ” அவனைப் பார்த்து கேட்டார்.
” அது வந்து… வந்து.. இவன் இங்கு வந்து பெண்களை தொந்தரவு செய்கிறான்.. ” தட்டுத் தடுமாறிக் கூறினான்.
” இவன் கூறுவது பொய். நான் என் காதலியைப் பார்க்க இங்க வருவேன். அது இவனுக்குப் பொறுக்கவில்லை. வேண்டுமானால் இங்குள்ளவர்களை எழுப்பி என்னைப்பற்றி கேளுங்கள். அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.” நான் மறுப்பு தெரிவித்தேன்.
” அதெல்லாம் ஸ்டேசனில் பேசிக்கொள்வோம். நீயும் என்னுடன் வா! ” குரூப்பை நோக்கிக் கூறினார்.
நாங்கள் அனைவரும் மீண்டும் காவல் நிலையம் சென்றோம். இந்த சம்பவத்தை பலர் கதவுகளை லேசாகத் திறந்து பார்த்துக்கொண்டிருந்தனர்.
காவல் நிலையத்தில் அவனுக்கு எச்சரிக்கை விடுத்தனர். அதன் பிறகு என்னுடைய பாதுகாப்புக்கு அவன்தான் இனிமேல் பொறுப்பு என்றும் கூறி அவனிடம் எழுத்து மூலமாக எழுதி வாங்கிக் கொண்டனர்.. அதோடு இனிமேல் என்னுடைய உடலில் ஏதாவது காயம் உண்டானால் அவனைத்தான் தேடிப் பிடிப்பார்கள் என்றும் எச்சரித்தனர். எல்லாவற்றுக்கும் சரி என்று எழுதித் தந்தான்.
நள்ளிரவுக்குப் பின் எங்கள் மூவரையும் மீண்டும் மலையில் கொண்டு வந்து விட்டுச் சென்றனர்!

( தொடுவானம் தொடரும் )

Series Navigation
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Comments

  1. Avatar
    Dr.G.Johnson says:

    அன்புள்ள புதிய மாதவி அவர்களுக்கு வணக்கம். தாமதமாக இதை எழுதுவதற்கு மன்னிக்கவும்.பின்னூட்டமிடுவதில் எதோ பிரச்னை. என்னுடைய தொடுவானம் படித்து கருத்து கூறியுள்ளதற்கு நன்றி. என்னுடைய வாழ்க்கையில் நடந்த சில மறக்க முடியாத சம்பவங்களை கோர்வையாக எழுதி வருகிறன். இது சுய சரிதைபோல் தோன்றுகிறது. தொடர்ந்து படித்து கருத்து சொல்லுங்கள்.நன்றி. அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *