தொடுவானம் 236. புதிய ஆரோக்கியநாதர் ஆலயம்

This entry is part 6 of 6 in the series 19 ஆகஸ்ட் 2018

என் வீட்டில் இரவு தங்கியிருந்த மறைதிரு ஜெயசீலன் ஜேக்கப் தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் பேராயராக தேர்ந்தெடுக்கப்பட்டுவிடடார். தமிழகத்திலுள்ள அனைத்து லுத்தரன் ஆலயங்களுக்கும், பள்ளிகளுக்கும், தொழிற்பள்ளிகளுக்கும், ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளுக்கும் விழியிழந்தோர் பள்ளிகளுக்கும், தாதியர் பயிற்சிப் பள்ளிக்கும், மாணவர் மாணவியர் தங்கும் விடுதிகளுக்கும், கல்லூரிக்கும், மருத்துவமனைகளுக்கும் அவர்தான் தலைமை வகிப்பார்! அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனி நிர்வாகம் இருந்தபோதிலும் அதன் முக்கிய காரியங்களில் பேராயரின் ஆலோசனையும் அங்கீகாரமும் தேவைப்[படும். ஒரு நாட்டின் ஜனாதிபதி போன்றவர் பேராயர். சபைச் சங்க செயலாளர் என்பவர் பிரதமர் போன்றவர். அவரிடம் அனைத்து அதிகாரமும் இருந்தாலும் பேராயரின் ஒப்புதலையும் பெற வேண்டும். ஆதலால் லுத்தரன் திருச்சபையின் பேராயரிடம் நிறைய அதிகாரங்கள் இருந்தன. இவர் தாய்ச சபைகளான சுவீடன் மிஷன் , ஜெர்மனி லேப்சிக் மிஷன் ஆகியவற்றுடன் நேரடி தொடர்பு கொள்ளலாம். அவர்கள் அனுப்பும் மானியத்துக்கும் பேராயர் முக்கிய பொறுப்பு வகிப்பார்.
பேராயரின் இல்லமும் அலுவலகமும் திருச்சியில் உள்ள தரங்கைவாசம் வளாகத்தில் உள்ளது. அவருடைய அலுவலகத்தில் பத்து பேர்கள் வேலை செய்கின்றனர். அவரைக் காண அங்கு செல்லலாம். இனி அவர் என் வீட்டில் தங்க வரமாடடார்.அவனுடைய பதவியும் முக்கியத்துவமும் அப்படி. அவர் எங்கு சென்றாலும் ராஜ மரியாதைதான். ஒரு குசேகரத்துக்கு அவர் சென்றால் அவர் மேளதாளத்துடன் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படுவார். அவருக்கென்று தனியாக காரும் முழுநேர வாகனமோட்டியும் வழங்கப்பட்டிருக்கும்.இனி அவர் பேருந்தில் செல்ல மாடடார்.
இந்த பேராயர் தேர்தலுக்குப்பின்பு லுத்தரன் முன்னேற்ற இயக்கம் முழு மூச்சுடன் செயல்படலாயிற்று. பேராயரும் அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரின் ஆதரவு அதற்கு அதிகம் இருந்தது. ஆனால் அவர் அதை வெளிக் காட்டிக்கொள்ள மாடடார். காரணம் அவர் முழுத் திருச்சபைக்கும் பேராயர். ஒரு குறிப்பிடட சமூகத்தினருக்கு மட்டுமல்ல. லுத்தரன் முன்னேற்ற இயக்கம் தாழ்த்தப்படட மக்களின் உரிமைக்குப் போராடும் இயக்கமாக செயல்பட்ட்து.
வெற்றி விழா கொண்டாடியபோது திருச்சபையில் நாம் புதிய சகாப்தத்தினுள் புகுந்துள்ளோம். இத்தனை நாட்களும் நம்முடைய பலம் தெரியாமல் வாழ்ந்துவிட்டோம். இனிமேல் நாம்தான் திருச்சபையை ஆளப்போகிறோம். இனி நமது அடுத்த இலக்கு திருச்சபையின் பொதுச் செயலாளர் பதவி. அதையும் நாம் கைப்பற்றுவோம். இப்போது இருக்கும் ஒற்றுமை பலத்தோடு நாம் செயல்படடால் போதுமானது. அதையும் நாம் எளிதில் கைப்பற்றிவிடலாம். அதன் பின்பு இனி நம்மை யாரும் அசைக்க முடியாது என்று மோசஸ் தம்பிப்பிள்ளை காரசாரமாகப் பேசினார். அவரைத் தொடர்ந்து அதிஷ்டம் பிச்சைபிள்ளை, மறைதிரு ஐ.பி. சத்தியசீலன்,மறைதிரு ஏ.ஜெ.தேவராஜ், மறைதிரு பிச்சானாந்தம்,மறைதிரு ஜான் மாணிக்கம் , ஜெ.டி.எட்வார்ட், அண்ணன் பீட்டர் ஆகியோர் பேசினார்கள்.நான் பேசவில்லை. நான் இன்னும் தலைவர் ஆகும் அளவுக்குப் பிரபலம் ஆகவில்லை. ஆனால் லுத்தரன் முன்னேற்ற இயக்கத்தின் ஒரே மருத்துவர் என்ற பெயர் மட்டும் எனக்கு இருந்தது!
அப்போது திருச்சபையின் செயலராக இருந்தவர் பேராசிரியர் விக்டர். அவர் வெள்ளாளர் வகுப்பைச் சேர்ந்தவர். பொறையாரில் இருந்த பிஷப் மாணிக்கம் கலைக் கல்லூரியின் முதல்வர். அவருடைய பதவிக் காலம் மூன்று வருடங்கள் முடியும் தருவாயில் இருந்தது. விரைவில் ஆலோசனைச் சங்கத் தேர்தல் நடைபெறும். அதில் தேர்ந்தெடுக்கப்படும் ஒன்பது உறுப்பினர்களில் ஒருவர் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். அந்த ஒன்பது பேர்கள் தேர்தலில் நான்கூட நின்று பார்க்கலாம். ஆலோசனைச் சங்க உறுப்பினர் ஆகிவிடடால் திருச்சபையில் நிறைய காரியங்களை ஆற்றலாம்.ஆனால் அண்ணன் அதில் போட்டியிட்டால் நான் போட்டி போட இயலாது. எதற்கும் பொறுத்திருந்து பார்க்கலாம்.
புதிய ஆரோக்கியநாதர் ஆலயத் திறப்பு விழாவின் நாள் நெருங்கியது. புதிய பேராயர்தான் அதைத் திறந்து வைத்து பிரதிஷ்டை செய்து வைப்பார். சபைகுரு எரிக் தாஸ், செயலாளர் ஜெயராஜ், ஆகியோருடன் நான் திருச்சி சென்று பேராயரிடம் தகவல் சொன்னோம். . அவர் தேதி தந்துவிடடார். துரிதமாக செயல்பட்டோம்.
நினைவு மலர் அச்சகத்தில் முடியும் தருவாயில் இருந்தது. அது என் கைவண்ணத்தில் உருவானது.அதைக் கண்டு கண்டு மகிழ்ந்தேன். பரவாயில்லை. ஒரு நூல் தயாரிக்கும் திறமை என்னிடம் இருந்தது
நினைவுக் கல்லை சபைகுரு திருச்சியில் தயாரித்து கொண்டு வந்தார்.அது பெரிய ஏமாற்றம் எனக்கு! அதில் என் பெயர் இல்லை! முறைப்படி சபையின் செயலாளரின் பெயரையும் பொருளாளரின் பெயரையும் அதில் பொறித்திருக்க வேண்டும். அவர் பேராயர் பெயரையும் தன்னுடைய பெயரை மட்டும் அதில் பொறித்திருந்தார். அது பற்றி அவரிடம் ஏதும் கேட்டுக்கொள்ளவில்லை. அனால் மனதுக்குள் ஒரு உறுத்தல் இருக்கவே செய்தது!
ஒரு ஞாயிற்றுக்கிழமை விழா நடந்தது. காலை ஒன்பது மணிக்கே பெருங் கூட்டம் பழைய ஆலயத்தில் கூடி விட்டது. மருத்துவமனை , விழியிழந்தோர் பள்ளி, தாதியர் பயிற்சிப் பள்ளி ,சபை உறுப்பினர்கள், திருப்பத்தூர் பிரமுகர்கள், வெளியுயூரிலிருந்து வந்திருந்த சிறப்பு விருந்தினர் என்று ஏராளமானோர் வந்திருந்தனர்.பேராயர் ஜெயசீலன் ஜேக்கப் வந்துவிட்டார்.ஆனால் பொதுச் செயலாளர் பேராசிரியர் விக்டர் வரவில்லை. வர இயலவில்லை என்று தந்தி வந்தது. இது அரசியல் என்பது அப்போது தெரிந்தது.
பழைய ஆலயத்திலிருந்து பாமாலைகள் பாடிக்கொண்டு பவனியாக புது ஆலயத்துக்கு நடந்து வந்தோம். அது கண்கொள்ளாக் காட்சி! கடவுளின் பிரசன்னம் அங்கு உள்ளதை உணர்ந்தேன்! வாழ்க்கையில் மறக்கமுடியாத நிகழ்வு அது! ஒரு பெரிய ஆலயத்தின் திறப்பு விழாவில் எனக்கு முக்கிய பங்கு இருந்ததை என்னால் நம்ப முடியவில்லை!
புது ஆலயம் மிகப் பெரிதாக இருந்தாலும் அன்று அதன் இருக்கைகள் போதவில்லை.வெளியில் பந்தல் போட்டு நாற்காலிகள் போட்டிருந்தோம். ஆலயத்தைச் சுற்றிலும் மணல் பரப்பியிருந்தோம்.அதிலும் பலர் அமர்ந்திருந்தனர். பெரும் விழாக்கோலமாக அன்று காட்சி தந்தது.
பேராயர் ஜெயசீலன் ஜேக்கப் சிறப்பாக நற்செய்தியை தூய தமிழில் உரையாற்றினார். அவர் மனம்போன போக்கில் பேசாமல் குறிப்புகளுக்கு எண்களிட்டு பேசினார். மிகவும் அருமையான சொற்பொழிவு அது. உண்டியல் எடுக்கும்போது பீடத்தின் முன் நான் நின்றபோது கடவுளின் பிரசன்னம் அங்கு உள்ளதை உணர்ந்தேன். அப்போது உடல் நடுங்கியது!
ஆராதனை முடிந்ததும் பேராயருக்கு வரவேற்பு அளித்தோம். அவருக்கும் அவருடைய மனைவிக்கும் ரோஜாப்பூ மாலை அணிவித்தோம். நான் பேராயருக்கு மாலை அணிவித்துவிட்டு ஒலிவாங்கியில் பேராயரைப் பாராட்டிப் பேசினேன். ஏற்புரை வழங்கிய பேராயர் என்னுடைய வீட்டில் இரவு தங்கியிருந்ததைக் குறிப்பிட்டார். அது எனக்கு அளவு கடந்த மகிழ்ச்சியை உண்டுபண்ணியது.பேராயர் நான் தயாரித்த நினைவு மலரை அப்போது வெளியிட்டார். அனைவருக்கும் அது தரப்பட்டது.
அனைவருக்கும் அன்று மதிய உணவு வழங்கினோம். காலையிலிருந்து நண்பர்கள் பால்ராஜும் கிறிஸ்டோபரும் பம்பரமாக சுழன்று செயல்பட்டனர்.இத்தகைய நல்ல நண்பர்கள் இருப்பது எவ்வளவு நல்லது என்பதை அப்போது உணர்ந்தேன்!
இனிமேல் புது ஆரோக்கியநாதர் ஆலயத்தில் ஞாயிறு காலையிலும் வெள்ளிக்கிழமை மாலையிலும் ஆராதனைகள் நடைபெறும். புது ஆலயத்தில் இட வசதி தாராளமாக இருந்தது. பெரிய வளாகம் அது. ஆலயத்தின் பின்புறம் வெற்றிடம் நிறைய இருந்தது. அதில் தென்னந்தோட்டம் உருவாக்க வேண்டும்.. தோட்டக்காரன் பொசலன் அங்கிருந்த முட்செடிகளை அகற்றி விட்டான். . வரிசையாக குழிகள்தான் தோண்டவேண்டும். அதையும் அவன் செய்துவிடுவான். என்னுடைய எண்ணம் நிறைவேறினால் ஆலயத்தின் பின்புறம் ஓர் அருமையான தென்னந்தோப்பு உருவாகிவிடும்!

( தொடுவானம் தொடரும் )

Series Navigationமருத்துவக் கட்டுரை – தொடர் மூக்கு அழற்சி ( Chronic Rhinitis )
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *