தொடுவானம் 241.தாழ்ந்தவர் உயர்ந்தனர்

This entry is part 7 of 9 in the series 23 செப்டம்பர் 2018

தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் புதிய ஆலோசனைச் சங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டது. இது திருச்சபையின் வரலாற்றில் ஒரு புதிய திருப்பம் என்பதே உண்மை. இதுவரை திருச்சபையை ஒரு சாராரே ஆட்சி செய்து வந்தனர். பேராயர் சுவீடன் தேசத்தவராக இருந்தார்கள். ஆனால் ஆலோசனைச் சங்கமும் அதன் செயலாளரும் படித்த மேல் சாதிக்கார்களாகத்தான் இருந்துள்ளனர். மேல் சாதி என்னும்போது அவர்கள் பிராமணர்கள் இல்லை. வேளாளர்கள்தான். அவர்களை படித்தவர்களாகவும் பட்டணங்களில் வாழ்பவர்களாகவும் இருந்தனர்.அவர்கள் அங்கு வேலை செய்து மாதச் சம்பளம் வாங்கினர் .அதனால் அவர்கள் பொருளாதார வசதியுடனும் வாழ்ந்தனர். . அவர்களால் சரளமாக ஆங்கிலம் பேச முடியும். இத்தகைய தகுதிகளின் அடிப்படையில் அவர்களால் மேல்நாட்டு மிஷனரிகளுடன் எளிதில் பேசவும் முடிந்தது. இவர்களின் பிள்ளைகளும் உயர்கல்விக்கு பல்கலைக்கழகம் செல்ல முடிந்தது.ஆதாலால் இத்தகையோர் திருச்சபையில் உயர்ந்த சாதியினராகவே மதிக்கப்பட்டனர். ஆராதனையின்போது அனைவரும் ஒன்றுபட்டு இயேசுவை வழிபட்டாலும் பரம்பரை சாதி வேற்றுமையை மறந்து ஒரே கிறிஸ்துவ சகோதரர்களாக வாழ முடியவில்லை. திருமணங்கள் கூட அவர்கள் சாதிக்குள்தான் நடந்தன.கலப்புத் திருமணத்துக்கு வழியே இல்லை!
இதற்கு நேர்மாறாக தாழ்த்தப்படட சபை மக்கள் கிராமப்புறங்களில் பரம்பையாக வாழ்ந்தனர்.அவர்கள் வாழ்ந்த பகுதிகள் பெருபாலும் சேரிகள்தான்! இவர்கள் கிறிஸ்துவர்களாக ஆவதற்கு முன்னாள் இந்துக்களாக சேரியில் வாழ்ந்தவர்கள். அங்கு அவர்கள் அடைந்த ஏற்றத்தாழ்வை அறிந்துகொண்ட மிஷனரிகள் அவர்களை சாதிக் கொடுமையிலிருந்து விடுவிக்க முயன்றனர். அவர்களை அணுகி ஏசுவின் போதனைகளைக் கூறி கிறிஸ்துவர்களாக மாற்றி, அவர்கள் வாழ்ந்த சேரிகளில் பள்ளிகளும் சிற்றாலயங்களும் கட்டி அவர்களுக்கு கல்வியறிவுடன் கிறிஸ்துவ நற்செய்தியையும் போதித்து வந்தனர். இந்த மக்கள் கூலி வேலை செய்யும் ஏழைகளாகவும், உயர் சாதியினரிடம் கொத்தடிமைகளாகவும்கூட இருந்தவர்கள்.இவர்களுக்கு சுயமரியாதையைப் போதித்து கொத்தடிமையிலுருந்தும் விடுவித்தனர் மிஷனரிகள்.இவர்களுக்கு திருச்சபையில் அடைக்கலம் தந்தனர். இந்தகைய எளிய மக்களையே கிராம சபைகளாக உருவாக்கினர். இந்த ஏழை எளிய மக்கள் திருச்சபையை ஆளப் பிறந்தவர்கள் உயர்சாதி வெள்ளாளர்களே என்றும் நம்பி அவர்களுக்கு பயந்து, அடங்கி அடிமை வாழ்க்கையை நடத்தினர்!
இந்த கிராமச் சபையினரும் கிராமங்களில் வயல் வேலை செய்யும் கூலியாட்களாகவே இருந்தனர். இவர்களில் ஒரு சிலருக்கு சில நிலபுலன்கள் இருந்தன. அதில் வரும் வருமானமும் வருடத்தில் ஒரு முறைதான் அறுவடையின்போது கிடைக்கும். அது உணவுக்கும் இதர அன்றாட செலவுக்கும் போதுமானதாக இருக்காது. இதன் காரணமாக பிள்ளைகளை உயர் கல்விக்கு அனுப்ப முடியாமல் கிராமத்து ஆலய ஆரம்பப் பள்ளியுடன் படிப்பை முடித்துக்கொண்டு விவசாயத்திலேயே ஈடுபடுத்த வேண்டிய கடடாயம் எழுந்தது. இவர்களில் தப்பித் தவறி ஒரு சில குடும்பத்துப் பிள்ளைகள் தரங்கம்பாடியில் உள்ள ஆண்கள் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியிலும், உசிலம்பட்டியில் உள்ள பெண்கள் ஆசியைப் பயிற்சிப் பள்ளியிலும் சேர்ந்து ஆசிரியர்களாக ஆகியுள்ளார். இன்னும் சில வசதி படைத்தவர்கள் பல்கலைக்கழகம் சென்று பி.ஏ. பட்டம் பெற்று மதுரையில் உள்ள இறையாண்மைக் கல்லூரியில் சேர்ந்து பி. டி.பட்டம் பெற்று சபைகுருக்களாக ஆகியுள்ளார்கள். . இத்தகையோர் திருச்சபையின் நடவடிக்கைகளில் பங்கு கொள்ளாமல் பல காலம் ஒதுங்கியே வாழ்ந்துள்ளனர். திருச்சபையை ஆளும் பொறுப்பு தங்களுக்கு இல்லை என்று வாளாவிருந்தனர். இதில் என்ன வேடிக்கை என்றால் திருச்சபையில் கிராமச் சபைகள்தான் அதிகம். அதனால் அவர்களிடமே அதிகமான வாக்குகளும் இருந்தன. தங்களுடைய பலம் என்னெவென்று தெரியாமலேயே அவர்கள் அதிகாரத்தை உயர் சாதியினர் என்று கருதப்படும் வெள்ளாளரிடம் தந்துவிட்டு அடிமைகளாகவே வாழ்ந்து வந்தனர்.அவர்களும் கிராமச் சபைகளுக்கு ஒரு ஆரம்பப் பள்ளியும், ஒரு சிற்றாலயமும் தந்தாலே போதும் என்று தொடர்ந்து நிர்வாகத்தை தங்கள் வசமே வைத்து வந்தனர்.
இந்த திருச்சபை நிலைமை ஒரு வகையில் இன்றைய இந்திய நிலைமையை பிரதிபலிப்பதாகவே உள்ளது. இப்படித்தான் என்னால் எண்ணத் தோன்றுகிறது!
இந்தியாவை நான் கிராமங்களில் காண்கிறேன் என்றார் மகாத்மா காந்தி. அவர் இப்படி சொன்னதற்குக் காரணம் இந்தியா கிராமங்களால் ஆன ஒரு விவசாய நாடு என்பதால் இருக்கலாம்.இந்த கிராமங்களில் சாதி வேற்றுமைகள் உள்ளன என்பதும் உண்மை. ஏறக்குறைய கிராமத்து மக்கள் தாழ்த்தப்பட்ட வகுப்புகளை சேர்ந்தவர்களாகத்தான் இருக்க வேண்டும்.இந்தியாவை நான் கிராமத்து சேரிகளில் காண்கிறேன் என்று காந்தி சொல்லியிருந்தால் இன்னும் பொருத்தத்தமாக இருந்திருக்கும். காரணம் இந்திய கிராமங்களில் சேரிகளில் வாழும் தாழ்த்தப்படட மக்கள் அதிகம். ஆக மொத்த இநதியாவை எடுத்துக்கொண்டால் தாழ்த்தப்பட்ட மக்களே அதிகம் இருப்பார்கள்.. உயர் சாதியினர் பெரும்பாலும் பட்டணங்களில்தான் வாழ்ந்துகொண்டிருப்பார்கள்.. பெரும்பான்மையினரான தாழ்த்தப்பட்டவர்களை சிறுபான்மையினரான ” உயர்ந்தவர்கள் ” ஆண்டுகொண்டிருந்தனர்- திருச்சபையில் உள்ளது போல்!
இது எப்படி சாத்தியம்? பதில் மிகவும் எளிது. கிராமத்து மக்களுக்கு போதிய கலவி வசதி தரப்படவில்லை. அவர்களை கொத்தடிமைகளாகவே மன்னர்கள் காலத்திலிருந்து வைத்திருந்தனர். மதத்தின் பெயரால் சாதியைக் காட்டி அவர்களை ஏமாற்றி தாழ்ந்த நிலையிலேயே வைத்துவிட்டனர் உயர் சாதியினர். இதற்குக் காரணமாக இருந்தவர்கள் மன்னர்களை வழி நடத்திய ராஜ குருக்களாகத் திகழ்ந்த பிராமணர்கள்! இவ்வாறு சொந்த நாட்டிலேயே தாழ்த்தப்பட மக்களாக மேல்சாதியினருக்கு அடிமைகளாகவே வாழ்த்து வந்தனர் .இவர்களை இந்த சாதிச் சாக்கடையிலிருந்து மீட்டெடுத்து விடுவிக்க ஒரு தலைவன் அகில இந்திய ரீதியில் இன்னும் பிறக்கவில்லை.
அண்ணல் அம்பேத்கர் மகாராஷ்டிரத்தில் தோன்றி மேல் நாட்டில் சட்டம் பயின்று திரும்பினாலும் தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக்காக அவரால் தலைமைத்துவம் ஏற்க முடியவில்லை. காரணம் அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்ததே! அவரை நேரு இந்தியாவின் முதல் சட்ட அமைசச்சராக அமர்த்தி அவருடைய சமுதாய விடுதலை உணர்வுக்கு தடை போட்டுவிட்டார். அவர் சட்ட அமைச்சராக இருந்தபோதிலும் சாதிக் கொடுமைக்கு ஒரு தீர்வு காண முடியாமல் மனம் உடைத்த நிலையில் இறுதிக் காலத்தில் இந்து மதத்தை விட்டுவிட்டு புத்த மதத்தைத் தழுவிய நிலைக்குள்ளானார்.
அவர் தீண்டாமையை ஒழிப்பதில் மும்முரம் காட்டியது உண்மையே. ஆனால் அது பயனற்ற நிலைக்குள்ளானது! தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு என்று சட்டம் கொண்டுவந்து ஓரளவு மக்களைவையிலும் மாநில அவைகளிலும் தாழ்த்தப்படட மக்களுக்கு பிரதிநிதித்துவம் வாங்கித் தந்தாலும் அதன்மூலம் சாதியை மேலும் வளர்க்க அது உதவுகிறதே தவிர அதை ஒழிக்க அல்ல!
சாதிக்கு சாவுமணி அடிக்க அம்பேத்கர் ஒன்று செய்திருக்கலாம். அவர் காங்கிரஸ் கட்சியில் சேராமல் அகில இந்திய ரீதியில் சுற்றுப்பயணம் செய்து சாதிக்கு எதிராக விழிப்புணர்வை உண்டுபண்ணியிருக்க வேண்டும். தாழ்த்தப்படட மக்களை அதன்வழியாக ஒன்று திரட்டி அகில இந்திய ரீதியில் ஒரு புதிய அரசியல் இயக்கத்தை உருவாக்கியிருக்க வேண்டும். தாழ்த்தப்படட மக்கள் அனைவரும் அந்த இயக்கத்தில்தான் இருக்கவேண்டும்., அவர்கள் வேறு அரசியல் கட்சியில் இருக்கக்கூடாது என்று கட்டுப்பாடு விதித்திருக்க வேண்டும். இத்தகைய அகில இந்திய அமைப்பு நிச்சயமாக ஒரு தலைவனின் கீழ் காங்கிரசை விட பலம்பொருந்திய அமைப்பாக உருவாகியிருக்கும். அப்போது இந்த அமைப்பு ஓர் அரசியல் கட்சியாக மாறி தேர்தலில் போட்டியிட்டு மத்தியிலும் மாநிலங்களிலும் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கலாம்! அதன் மூலம் இந்தியாவையும் அதன் மாநிலங்களையும் ஆள்பவர்கள் தாழ்த்தப்பட்டவர்களாகவே இருந்திருப்பர்! அப்போது சட்டத்தின் மூலம் தீவிர நடவடிக்கை எடுத்து சாதியை அடியோடு ஒழித்திருக்கலாம்!
திருச்சபை அரசியலை நான் கவனித்தபோது எனக்கு தோன்றிய எண்ணம் இப்படி இருந்தது. ஆனால் அந்தோ பரிதாபம்! தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இன்றுவரை இப்படி வழிநடத்தி சாதிக் கொடுமையிலிருந்து விடுதலை வாங்கித்தந்து நாட்டை ஆளும் தகுதியுடைய ஒரு தேசியத் தலைவன் இன்னும் உதிக்கவில்லை!

( தொடுவானம் தொடரும் )

Series Navigationமீண்டும் வேண்டாம் !ஜெயபாரதன் படைப்புகளைத் தொடா்ந்து படிக்கும் ஆா்வலா்களுக்கோர் அரிய போட்டி!
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *