தொடுவானம் 62. நேர்காணல்

This entry is part 5 of 14 in the series 5 ஏப்ரல் 2015

College EntranceCollege Chapelஅதிகாலையிலேயே விடுதி பரபரப்புடன் காணப்பட்டது. காலை வணக்கம் சொல்லிக்கொண்டு குளியல் அறைக்குச் சென்றோம். அங்கு வரிசையாக ஒருபுறம் கழிவு அறைகளும் எதிர்புறம் குளியல் அறைகளும் இருந்தன.நுழைவாயிலில் நீண்ட கண்ணாடியும் தண்ணீர்க் குழாகளும் இருந்தன. அங்கு சில சீனியர் மாணவர்கள முகச் சவரம் செய்து கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் என்னைப் பற்றி விசாரித்தனர். ஆர்தர் என்னை தன்னுடைய உறவினர் என்று அறிமுகம் செய்தார், நேர்முகத் தேர்வில் தேர்வு பெறவும் வாழ்த்து கூறினார்கள். அவர்கள் அனைவருமே குளிக்கும் அவசரத்தில் இருந்தனர். அவர்களில் தமிழர்கள் அதிகம் இல்லை.
இருவரும் அறை திரும்பியதும் உடன் புறப்பட்டு காலை ஏழரை மணிக்கு கீழே இரங்கி விட்டோம். நாங்கள் இருந்தது முதல் மாடி. உணவுக் கூடத்தில் பல புது மாணவர்கள் வந்திருந்தனர். எட்டு மணிக்கு காலை உணவு வழங்கப்படும் . அப்போதே நேர்காணலும் தொடங்கிவிடும். விடுதியில் தங்காத சில மாணவர்கள் ( போட்டியாளர்கள் ) டாக்சிகளில் வந்திறங்கினர். எட்டு மணிக்கெல்லாம் எழுபது மாணவர்களும் கூடிவிட்டோம். அவர்களில் இராஜகுமாரைக் காணோம். அவன் தேர்வில் தோல்வி அடைந்திருப்பான்.அதனால் என் வாய்ப்பு அதிகமானது. தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபைக்கு ஓர் இடம் உள்ளது. நான் இந்தத் தேர்விலும் நன்றாகச் செய்தால் நிச்சயம் எனக்கு இடம் கிடைத்துவிடும்.
எழுபது மாணவர்களும் பத்து பத்து பேர்களாக ஏழு குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர்.ஒவ்வொரு குழுவுக்கும் இரு பார்வையாளர்கள் இருப்பார்கள்
எங்கள் குழுவின் இரண்டு பார்வையாளர்களும் வந்தனர். அவர்கள் மருத்துவக் கல்லூரியின் விரிவுரையாளர்கள். இருவரும் மலையாளிகள். பூனூஸ் மாத்யூஸ், ஜேக்கப் ஜான் என்பது அவர்களின் பெயர்கள். இருவரும் எங்களை மிகவும் அன்பாக வரவேற்று பேசினார்கள். தேர்வு குறித்து சில விளக்கங்கள் கூறினார்கள் . பதற்றப் படாமல் இயல்பாகவே இருக்கச் சொன்னார்கள். மூன்று நாட்களும் எங்களுடன் அவர்கள் உடன் இருந்து கவனிப்பார்களாம். தேர்வு முடிவில் எங்களில் பாதி பேர்களை ( முப்பத்தைந்து பேர்கள் ) பரிந்துரை செய்வார்களாம்.அதன்பின் தேர்வுக் குழு ஒன்றுகூடி இறுதி முடிவு செய்யுமாம். மூன்றாம் நாள் மாலை முடிவுகள் அறிவிக்கப்படும். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மறு நாள் வகுப்புகள் தொடக்கிவிடுமாம். தேர்வு ஆகாதவர்கள் ஊர் திரும்ப வேண்டுமாம்.
ஒவ்வொரு குழுவும் காலை உணவு அருந்த ஒரு மேசையைச் சுற்றி அமர்ந்தனர். சூடான தோசை ஒரு தட்டில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அருகில் சட்டினி, சாம்பார், குடிக்கும் நீர் வைக்கப்பட்டிருந்தன. பார்வையாளர்களில் ஒருவர் ஜெபம் செய்தார். நாங்களே பறிமாறிக்கொண்டோம். மிகுந்த மரியாதையுடன்தான் அனைவரும் நடந்து கொண்டனர். உதாரணமாக தண்ணீர் கூஜா வேண்டுமானால் ” தயவுசெய்து தண்ணீர் கூஜாவைத் தாருங்கள் .” என்று ஆங்கிலத்தில் பேசிக்கொண்டோம். நிச்சயமாக மதிப்பெண்கள் தரும் எங்களுடைய பார்வையாளர்கள் இருவரும் திக்குமுக்காடி இருப்பார்கள். உணவு உண்டபோது அவர்கள் எங்களைப் பற்றிய சில தகவல்களைக் கேட்டு தெரிந்து கொண்டனர். இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்து மாணவர்கள் வந்திருந்தனர்.அனைவருமே சிறப்பான பல்கலைக்கழகங்களில்தான் புகுமுக வகுப்பு பயின்றவர்கள். போட்டி கடுமையாகத்தான் இருக்கும் போலிருந்தது.
உணவு உண்ணும் படலம் முடிந்தது. கைகளைக் கழுவிக்கொண்டு வெளியில் வந்தோம். அந்த ஆண்கள் விடுதியிலிருந்து எதிரே இருந்த கல்லூரி கட்டிடங்கள் நோக்கி நடந்து சென்றோம். அது தார் போடாத செம்மண் சாலை. வலது பக்கத்தில் உயர்ந்த கற்பாறை மலை தென்பட்டது. அதன்மீது மரங்களோ செடிகளோ இல்லை. போகும் வழியில் இரு புறத்திலும் சில பங்களாக்கள் காணப்பட்டன. அவை விரிவுரையாளர்களின் இல்லங்கள் என்றனர். அவற்றைச் சுற்றிலும் அழகிய பூந்தோட்டங்கள் காணப்பட்டன.ஆங்காங்கு பூ மரங்களும் வளர்ந்து நிழல் தந்தன.அது செயற்கையாக உருவாக்கப்பட்ட வளாகம் போன்று தோன்றியது. சென்னை கிறிஸ்துவக் கல்லூரி போன்று இங்கு இயற்கையான காடு இல்லை. இரவில் நிறைய மரங்களைக் கண்டதால் இதையும் இயற்கைக் காடு என்று தவறாக எண்ணிக்கொண்டேன். இந்த வளாகம் அப்படி இல்லையெனினும் இது அழகிய பூஞ்சோலைகள் நிறைந்த வளாகமாகவே தோன்றியது. ஆனால் காலையிலேயே வெயில் கொஞ்சம் சூடாகேவே இருந்தது. இது வட ஆற்காடு மாவட்டம். மலைகள் அதிகம் இருந்தாலும் அவை பெரும்பாலும் கருங்கல் பாறைகளால் உண்டானவை. அவற்றிலிருந்து வெயில் காலங்களில் சூடு அதிகம் வெளியேறும். அதோடு இங்கு வற்றாத ஆறுகளும் அதிகம் இல்லை.
வளாகம் அமைந்திருந்த ஊர் பெயர் பாகாயம் .அங்கிருந்து வேலூர் செல்லும் வீதியின் மறு புறத்தில் கல்லூரியின் வளாகம் அமைந்திருந்தது. எதிரே இரண்டு அடுக்குகள் கொண்ட நீண்ட கட்டிடம் காணப்பட்டது, அதுதான் பெண்களின் விடுதி. ஆண்கள் விடுதி போன்றே செதுக்கிய சதுரமான கருங்கற்களால் கட்டப்பட்டிருந்தது. அதைச் சேர்ந்தாற்போல் கல்லூரியின் அலுவல் அறைகளும் வகுப்பறைகளும் இரண்டு அடுக்கு மாடியில் அமைந்திருந்தது. அலுவலக அறைகளின் எதிரே ஒரு சிற்றாலயம் வட்ட வடிவில் அழகுடன் இருந்தது. அதன் எதிரே ஒரு சிறு தாமரைக் குளம் இருந்தது. அதில் அழகிய தாமரைகள் பூத்திருந்தன. அது மனதுக்கு இதமாக இருந்தது.
நாங்கள் கல்லூரி முதல்வரின் அறைக்கு எதிரே கூடினோம். அப்போது பெண்கள் விடுதியிலிருந்து தேர்வுக்கு வந்துள்ள ஐம்பது மாணவிகளும் வந்து சேர்ந்தனர். அவர்களில் அதிகமானோர் பல்வேறு வண்ணங்களில் சேலைகள் அணிந்திருந்தனர். தமிழ்ப் பெண்கள் குறைவாகவே தென்பட்டனர். சிலர் வட இந்திய பாணியில் பஞ்சாபி உடையிலும் வந்திருந்தனர். பலர் நல்ல நிறத்துடன் கவர்ச்சியாகக் காணப்பட்டனர். அவர்களில் இருபத்தைந்து பெண்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்றால் அவர்களுடன் சேர்ந்து நாங்கள் ஐந்தரை வருடம் மருத்துவம் பயில்வோம்.
கல்லூரியின் முதல்வர் டாக்டர் ஜேக்கப் சாண்டி. அவர் மலையாளி. அவர்தான் இந்தியாவில் பிரபலமான மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர். அவர் நல்ல உயரம். எங்களை கூர்ந்து நோக்கினார். மிக அன்பாக எங்களை வரவேற்று வாழ்த்து கூறிவிட்டு விடை பெற்றார்.
அதன் பின்பு குழுக்களாக நாங்கள் பிரிந்து சென்றோம். நாங்கள் ஒரு வகுப்பறைக்குள் நுழைந்தோம். அங்கு எங்களுக்கு வசதியாக இருக்கைகள் வட்ட வடிவில் போடப்பட்டிருந்தது. அது ஒரு கலந்துரையாடல். ஒரு பொதுவான பொருள் பற்றி நாங்கள் கலந்துரையாடல் செய்தோம். அன்று நாங்கள் எடுத்துக்கொண்ட பொருள், ” இந்திய கிராமங்களில் சுகாதாரம். ” என்பது. இது பற்றி நாங்கள் ஆங்கிலத்தில் எங்களுடைய கருத்துகளைப் பரிமாறிக்கொண்டோம். ( இங்கு நாங்கள் அனைவருமே ஆங்கிலத்தில்தான் உரையாடினோம். ) இது சுலபம்தான். அனைவருமே பொதுவான கருத்துகளைத்தான் கூறினோம். அநேகமாக எங்களுடைய பொது அறிவையும், சமுதாயச் சிந்தையையும் தெரிந்துகொள்ளும் வகையில் இது அமைந்திருந்தது. இதில் எவ்வாறு பங்கு கொள்கிறோம் என்பதற்கேற்ப மதிப்பெண்கள் வழங்குவார்கள். அந்த கலந்துரையாடல் இரண்டு மணி நேரம் நடந்தது.
அதன் பின்பு வகுப்பறைகள் வழியாக மீண்டும் வெளியில் வந்தோம். சாலை வழியாக நடந்து ஒரு மூலைக் கடையை அடைந்தோம். அங்கு குளிர் பானம் அருந்தினோம். அரை மணி நேரம் அங்கு இளைப்பாறியபின்பு மீண்டும் வகுப்பறைக்குச் சென்றோம்.
இந்த முறை கலந்துரையாடல் இல்லை. ஆனால் பேச்சுப் போட்டி மாதிரி இருந்தது. ஒவ்வொருவருக்கும் தனித்தனி தலைப்புகள் தரப்பட்டன. அதைப் பார்த்தபின் எழுந்து நின்று அந்த பொருள் பற்றி பேசவேண்டும். இது சற்று கடினமானதுதான். காரணம் தயார் செய்வதற்கு நேரம் இல்லை. எனக்கு ” வியட்நாம் போர் ” என்பது தலைப்பு. அப்போது அந்தப் போர் தீவிரமாக நடந்துகொண்டிருந்தது. நல்ல வேளையாக அது பற்றி செய்தித் தாள்களில் படித்து வந்தேன். நான் அந்த போர் பற்றியும், அதனால் உயிர் துறக்கும் போர் வீரர்கள் பற்றியும், அப்பாவி பொது மக்கள் படும் இன்னல்கள் பற்றியும் கூறி, கூடிய சீக்கிரம் அந்த போர் ஒரு முடிவுக்கு வருவது நல்லது என்று பேசி முடித்தேன்.
மதிய உணவுக்கு மீண்டும் ஆண்கள் விடுதிக்குச் சென்றோம். காலை போலவே அந்தந்த குழுவினர் ஒரு மேசையைச் சுற்றி அமர்ந்து மதிய உணவு உண்டோம். அதன்பின்பு மாலை நான்கு மணிக்குதான் மீண்டும் சந்திப்பு. அதுவரை அறைக்குச் சென்று ஓய்வு எடுக்கலாம். நான் ஒரு சிறு தூக்கம் போட்டேன்.
மாலையில் ஒன்று கூடிய நாங்கள் விளையாட்டு மைதானத்துக்குச் சென்றும். வாலிபால் விளையாடும் இடத்தில் கூடி இரண்டு குழுக்களாகப் பிரிந்து எங்களின் விளையாட்டுத் திறமையைக் காட்டினோம். எனக்கு அந்த விளையாட்டு ஓரளவு தெரியும். நன்றாகத்தான் விளையாடினேன். விளையாட்டுப் போட்டி முடிந்தபின்பு அங்கேயே புல் தரையில் அமர்ந்தவாறு, யார் யாருக்கு எந்தெந்த விளையாட்டில் ஆர்வமும் அனுபவமும் உள்ளது என்பதைக் கேட்டு தெரிந்துகொண்டனர் பார்வையாளர்கள். நான் ஓட்டப்பந்தயம் பற்றி கூறினேன்.ரக்பியும் நன்றாகவே விளையாடுவேன்.அது பற்றியும் சொன்னேன்.
அத்துடன் முதல் நாள் நேர்காணல் முடிந்தது. மீண்டும் அடுத்த நாள் காலை தொடரும். நான் அறைக்குச் .சென்றேன். ஆர்தர் மூன்றாம் ஆண்டு மாணவர். அவர் மருத்துவமனையிலிருந்து திரும்பிவிட்டார். ( மூன்றாம் ஆண்டிலிருந்து மருத்துவமனையில்தான் பாடங்கள் நடக்கும். ) தேர்வு எப்படி இருந்தது என்று கேட்டார். நான் அன்று நடந்த அனைத்தையும் அவரிடம் விவரித்தேன். அவர் தைரியப்படுத்தி உற்சாகமூட்டினார்.
குளித்து ஆடைகள் மாற்றிக்கொண்டு அவருடன் மாலைச் சிற்றுண்டி உண்ண கீழே சென்றோம். அங்கு பல சீனியர் மாணவர்களுக்கு என்னை அறிமுகம் செய்து வைத்தார். தேநீரும் பஜ்ஜியும் உண்டோம்.
இரவு ரூபனும் அண்ணனும் வந்தனர். அவர்களும் தேர்வு பற்றி விசாரித்தனர். அவர்களுடன் சேர்ந்து இரவு உணவு உண்டோம். அவர்கள் சென்றபின்பு நாங்கள் மீண்டும் அறைக்குத் திரும்பினோம். பேசிக்கொண்டே நன்றாக தூங்கிவிட்டோம்.

( தொடுவானம் தொடரும் )

Series Navigationபிரபஞ்ச உருவாக்கத்தில் பேபி ஒளிமந்தைக் கொத்துக்கள் வடிப்பில் கரும்பிண்டத்தின் பங்குமிதவை மனிதர்கள்
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *