தொடுவானம் 75. காதலிக்க காலமுண்டு

This entry is part 4 of 19 in the series 5 ஜூலை 2015

ஆங்கில வகுப்பு மதிய உணவுக்குப்பின் தூக்க நேரத்தில் நடந்தாலும் நாவலின் கதை உற்சாகம் நிறைந்ததாகவே தொடர்ந்தது. வழக்கம்போல் ஒருவர் உரக்கப் படிக்கவேண்டும். அப்படி செய்தால் தூங்குபவர்கள் விழித்துக்கொள்வார்கள் என்பது குண்டர்ஸ் அவர்களின் அற்ப ஆசை. ஆனால் ஆழ்ந்த உறக்கத்தில் கனவுலகில் சஞ்சரித்துக்கொண்டவர்களை எவ்வளவு உரத்த குரலாலும் ஏதும் செய்ய முடியவில்லை.
Casterbridge மேயர் ஆப் கேஸ்ட்டர்பிரிட்ஜ் கதை தங்குதடையின்றி தொடர்ந்தது.
கேஸ்ட்டர்பிரிட்ஜ் டவுனில் உள்ள பெரிய ஹோட்டலில் இரவு விருந்து நடைபெறுகிறது. அதில் ஊரின் முக்கிய பிரமுகர்களும், செல்வந்தர்களும் கலந்துகொள்கின்றனர். அந்த கட்டிடத்தின் சன்னல்கள் திறக்கப்பட்டு உள்ளன. வேடிக்கைப் பார்க்க வந்திருந்த ஊர் மக்கள் உள்ளே நடப்பதைக் கேட்கலாம். அந்தக் கூட்டத்தைப் பார்த்த ஜேனும் எலிசபெத்தும் அங்கு செல்கின்றனர். அப்போது மைக்கல் ஹென்சார்ட் அந்த நகரின் மேயர் என்பதைக் கேள்விப்படுகின்ற்னர்! நாற்பது வயதில் நல்ல திடகாத்திரமான உடலுடன் அதிகாரமிக்க தோரணையுடன் செல்வச் செழிப்பில் அவன் இருப்பதை அங்கு சிலர் பெசிக்கொண்டத்திலிருந்து அறிகின்றனர். அவன் பளிச்சிடும் கருநிறக் கண்களும், அடர்ந்த புருவங்களும் தலைமுடியும் கொண்டவன் என்று அவர்கள் வர்ணிப்பதையும் செவிமடுக்கின்றனர்.
ஹென்சார்ட் ஒரு செல்வந்தன் என்றும், நகரின் கோதுமை கொள்முதல் செய்யும் முக்கிய வியாபாரி என்றும், அந்த வருடம் அவன் தரக்குறைவான மலிவான கோதுமையைத் தந்துவிட்டதால் அவர்களுக்கு நல்ல ரொட்டி கிடைக்கவில்லை என்று பேசிக்கொள்கிறார்கள்.
மேயர் ஹென்சார்ட் மதுபானத்தைத் தொடுவதில்லை என்றும் அவன் தேநீர்ப் பிரியன் என்றும் பேசிக்கொள்கின்றனர்.அவன் கோவிலில் கடவுளிடம் பல வருடங்களுக்குமுன் செய்த சத்தியம்தான் அதற்குக் காரணம் என்றும் அந்த வேண்டுதல் முடிவடைய இன்னும் இரண்டு ஆண்டுகள்தான் உள்ளதாகவும் பேசிக்கொள்கின்றனர்.
classroom தங்களுடைய ” உறவினர் ” ஹென்சார்டின் செல்வச்செழிப்பையும் சமுதாயத்தில் பெற்றுள்ள செல்வாக்கையும் அந்தஸ்த்தையும் கேட்டு எலிசபெத் ஜேன் உவகை கொள்கிறாள். ஆனால் சூசனுக்கு அது அச்சத்தை உண்டுபண்ணுகிறது.அவனைச் சந்திக்கவும் பயப்படுகிறாள். எலிசபெத் அந்த மக்களிடம் பேசியதில் அவன் மனைவியை இழந்தவன் என்பதையும் தெரிந்துகொள்கிறாள்.
உள்ளே விருந்து தடபுடலாக நடைபெறுகிறது. அப்போது கடைசி வரிசையில் இருந்த சாதாரண வியாபாரி ஒருவர் தரக்குறைவான கோதுமையை விற்ற ஹென்சார்ட் அதற்கு பதிலாக தரமுள்ள கோதுமை தந்து ஈடு செய்வாரா என்று கேள்வி கேட்கிறார். வெளியிலிருந்து வேடிக்கைப் பார்த்த சாதாரண மக்கள் அதையே ஒரு கோரிக்கையாகக் கொண்டு குரல் எழுப்புகின்றனர். அதை அறிந்த ஹென்சார்ட் கவலை கொள்கிறான். அதோடு அவர்களுக்கு பதிலும் கூறுகிறான்.
” இங்குள்ளவர்களில் யாராவது தரமற்ற கோதுமையை தரமானதாக மாற்றுவது எப்படி என்று கூறினால் நான் அதை மகிச்சியோடு திரும்ப பெற்றுக்கொள்கிறேன்.ஆனால் அப்படிச் செய்ய இயலாது. ” என்று கூறியவன் அதுபற்றி தானும் அறிந்துள்ளதாகவும், அதுபோன்று மீண்டும் நடக்காமல் இருக்க, கோதுமை இலாக்காவுக்கு, ஒரு திறமையான மேனேஜர் தேவை என்று விளம்பரம் செய்துள்ளதாகக் கூறி அந்தப் பிரச்னைக்கு அத்துடன் முற்றுப்புள்ளி வைக்கிறான்.
view

view இந்தப் பகுதியில் நாவலாசிரியர் இரண்டு காரியங்கள் பற்றி நம்மை சிந்திக்க வைத்துள்ளார். இன்னும் இரண்டு ஆண்டுகள் கழித்து வேண்டுதல் நிறைவேறிய பின்பு ஹென்சார்ட் மீண்டும் மதுவுக்குத் திரும்புவானா? புதிதாக வரப்போகும் மேனேஜர் எப்படிப்பட்டவனாக இருப்பான்? இவை இரண்டாலும் நாவலில் புது திருப்பம் உண்டாகலாமா? இது பற்றி குண்டர்ஸ் கேள்வி கேட்பார். இதில் வேடிக்கை என்னவென்றால் நன்றாகத் தூங்கி எழுந்தவர்களிடம்தான் கேட்பார். அவர்களோ தலையும் தெரியாமல் வாலும் தெரியாமல் திருதிருவென்று முழிப்பார்கள். அதைக்கண்டு நாங்கள் கை தட்டி ஆரவாரம் செய்வோம். ஆக ஆங்கில வகுப்பு கலகலவென்றுதான் முடியும்!
மற்ற வகுப்புகளில் இதுபோல் தூங்க முடியாது. அங்கு அறிவியல் பாடங்களில் அதிகம் கவனம் செலுத்தினோம்.புகுமுக வகுப்பு பாடங்களைவிட கொஞ்சம் அதிகமான பாடங்கள் பயின்றோம். எங்களுடைய வகுப்பு மாணவ மாணவிகள் அனைவரும் நெருக்கமாகப் பழகிக்கொண்டிருந்ததால் தெரியாத அல்லது புரியாத பாடங்களை நாங்கள் கேட்டு தெரிந்துகொள்வோம். மதியம் உணவருந்தும்போதுகூட பாடங்கள் பற்றிப் பேசிக்கொள்வோம். வகுப்பு ஆசிரியர்களும் மிகவும் நெருக்கமாகத்தான் பழகினார்கள். அவர்களிடம் எப்போது வேண்டுமானாலும் சந்தேகங்களைக் கேட்டு தெரிந்துகொள்ளலாம்.
விடுதி வாழ்க்கை ஆங்கில வகுப்பைவிட மிகவும் கலகலப்பாகவே இருந்தது.விடுதியில் ஒரு பொது தொலைபேசிதான் உள்ளது. அது உணவுக்கூடம் அருகில் ஒரு மூலையில் சிறு அறைக்குள் இருக்கும். அழைப்பு மணி அடித்ததும் அங்குள்ள பணியாளர் அறைக்கு வந்து கூப்பிடுவார். சில வேளைகளில் கீழிருந்தே பெயர் சொல்லி உரக்க கூப்பிடுவார். அது கேட்டு யாராவது கீழே இரங்கி வந்தால் அதைக் காணும் மாணவர்கள் ” ஓ ” வென்று கத்தி கூக்குரல் இடுவார்கள். காரணம் அந்த அழைப்பு பெண்கள் விடுதியிலிருந்துதான் வருவது வழக்கம். முன்பு கூறியதுபோல் எங்கள் வகுப்பில் சில காதல் ஜோடிகள் உருவாகிக்கொண்டிருன்தனர். அதை அறிந்துள்ள நாங்கள் அதுபோன்று அழைப்பு வரும்போது கத்தி ஆரவாரம் செய்வோம். ( அப்போதெல்லாம் கைபேசி கிடையாது.)
முதல் ஆண்டிலேயே வகுப்பில் முதல் காதல் ஜோடி என்ற பெருமை பிலிப் ஸ்டோக்கோ என்பவனுக்கும் உஷா ஆண்டனுக்கும் உரியதாகும். ஸ்டோக்கோ எப்போதும் சிரித்த முகத்துடன் உற்சாகமாகவே காணப்படுவான். அவர்கள் இருவருமே ஆங்கிலோ இந்திய இனத்தினர். ஆங்கிலத்தை அழகான உச்சரிப்புடன் பேசுவார்கள். அவர்களுக்குள் முதலாண்டிலேயே ஆழ்ந்த காதல் உருவானது வியப்பில்லைதான். அது இரகசிய காதல் இல்லை. பலரும் அறிந்த பகிரங்கக் காதல். அதனால் வகுப்பிலும் அவர்கள் ஒன்றாகத்தான் அமர்ந்துகொள்வார்கள். அவர்களுடைய காதல் திருமணத்தில் கைகூட நாங்கள் அனைவரும் வாழ்த்தி உதவினோம். மற்ற காதல் ஜோடிகளும் வகுப்பில் உருவாக அதுபோன்று காத்திருந்தோம். காதலிப்பதில் அவசரம் தேவை இல்லாமல் போனது. எப்படியும் ஐந்தரை வருடங்கள் ஒன்றாக இருக்கப்போகிறோம். காதலிக்க நிறைய காலம் இருந்தது. சரியான ஜோடியை நிதானமாக தேர்ந்தெடுக்கலாம்.எனக்கு இருந்த காதல் அனுபவங்கள் போல் வேறு யாருக்கும் இருக்க வாய்ப்பில்லைதான். அவர்களிடம் பேசியதிலிருந்து அதைத் தெரிந்துகொண்டேன். வேறு காதல் ஜோடிகள் உருவாகுமா என்றுதான் காத்திருந்தேன். நான் இன்னொரு புது காதல் வேண்டாம் என்றே ஒதுங்கியிருந்தேன்.
Susan எனக்கு முன்பே இரண்டு காதலிகள் உள்ளனர். லதா கடல் கடந்து சிங்கப்பூரில் உள்ளாள். அவள் எப்படி இருக்கிறாள் என்று தெரியவில்லை. எப்போதாவதுதான் அவளிடமிருந்து கடிதம் வரும். அதற்கு நானும் உடன் பதில் போடுவதில்லை. அவள் எழுதும் கடிதமும் நான் போடும் பதிலும் எப்போதும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். நலம் விசாரித்துவிட்டு நன்றாகப் படிக்கச் சொல்வாள். நானும் நலம் விசாரித்துவிட்டு நன்றாகப் படிக்கிறேன் என்பேன். அப்போதெல்லாம் கடிதங்களைத் தவிர வேறு தொடர்பு வசதிகள் இல்லை. கடிதம் வந்து சேர ஒரு வாரத்துக்கு மேலாகும்.அந்த நீண்ட இடைவெளி கடிதம் எழுதும் ஆவலைக் குறைத்துவிட்டது.
தாம்பரம் காதலி வேரோனிக்கா அருகில் இருந்தாலும் நினைத்த மாத்திரத்தில் போய்ப் பார்க்கும் நிலையில் இல்லை. பேருந்து மூலம் சென்னை செல்ல இரண்டு மணி நேரமாகும். அங்கிருந்து மின்சார இரயிலில் தாம்பரம் செல்ல ஒரு மணி நேரமாகும். மனம் வைத்தால் வார இறுதியில் சென்று பார்க்கலாம். பார்க்கலாம் பார்க்கலாம் என்று நாட்களைத் தள்ளிப் போட்டேனே தவிர சிரத்தை எடுத்து பிரயாணம் மேற்கொள்ளவில்லை. அவளிடமிருந்தும் கடிதங்கள் வந்துகொண்டிருந்தன. நானும் பதில் எழுதிக்கொண்டுதானிருந்தேன். எப்போது வருவீர்கள் என்று கேட்பாள். கூடிய சீக்கிரம் வருவேன் என்று பதில் எழுதுவேன்.
பெண்களுடன் பழக்கம் இல்லாதபோது ஒரு பெண் நெருக்கமானால் அவள்மீது அலாதி பிரியம் ( காதல் ) உண்டானது. பெண்களுடன் நெருக்கம் அதிகமானபோது யார் மீதும் அவ்வளவு பிரியம் உண்டாகவில்லை.
வகுப்புப் பெண்களில் பலர் தேவதைகளாகத்தான் தோன்றினார்கள். அவர்களிடம் பேசும்போது இனிமையாகத்தான் இருந்தது. அப்போதெல்லாம் லதாவும் வெரோனிக்காவும் நினைவுக்கு வருவார்கள். அது போன்ற சூழல்களில் பாரதியின் ” மனதில் உறுதி வேண்டும் ” என்ற பாடல் வரிகளை நினைவில் கொள்வேன்!

( தொடுவானம் தொடரும் )

Series Navigationஜெயமோகன் – என் குறிப்புகள்.ஆம்பளை வாசனை
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

2 Comments

  1. Avatar
    Dr.N.Sivakumar, Bangalore says:

    வணக்கம் டாக்டர்!!! அடியேன் N.Sivakumar,New Delhi. ஒரு நீண்ட இடைவேளைக்குப் பிறகு திண்ணைக்கு வந்திருக்கிறேன் ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள், பெயருக்கு முன்னால் ஒரு டாக்டர் பட்டம் சேர்ந்திருக்கின்றது (முனைவர்) அதன் பொருட்டு, ஆய்வு கட்டுரை எழுதுவதிலும், இடம் பெய்ர்வதிலும், பணியில் சேர்வதிலும் இரண்டு ஆண்டுகள் ஓடி விட்டன. எண்ணம் திண்ணையை விட்டு அகலவில்லை, தங்கள் எழுத்துக்களை விட்டும். தாங்களும் இன்ன பிற எழுத்தாளர்களும் நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். மீண்டும் தங்கள் அனுபவங்களை மகிழ்வோடு காண்கிறேன். இடைவேளை எனக்குத்தான், திண்ணை முன்போலவே சிறப்பாக இருப்பதில் மகிழ்ச்சி! தங்களுக்கும் அனைவருக்கும் நன்றி.. இனி இனிதே என் வாசிப்பும் பின்னூட்டங்களும் தொடரும்!

  2. Avatar
    Dr.G.Johnson says:

    அன்புள்ள டாக்டர் N. சிவகுமார் அவர்களே, உங்கள் அன்புக்கு நன்றி. நீங்கள் இந்த இரண்டு ஆண்டுகளில் ஆராய்ச்சியில் ஈடுபட்டு, இடம் பெயந்து, வேலையிலும் சேர்ந்துள்ளது அறிந்து மகிழ்ச்சி. உங்களின் எதிர்காலம் சிறப்புற வாழ்த்துகள். உங்களுடைய இலக்கிய ஆர்வம் குன்றாமல் மீண்டும் திண்ணைக்கு வந்துள்ளது சிறப்பாகும்.இனி அடிக்கடி திண்ணையில் சிந்திப்போம். தொடுவானம் படித்து கருத்துகள் கூறவும். மீண்டும் சந்திப்போம். வணக்கம். அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

Leave a Reply to Dr.G.Johnson Cancel reply

Your email address will not be published. Required fields are marked *