தொலைக்கானல்

This entry is part 6 of 15 in the series 1 மார்ச் 2015

அப்பாவுக்கு நில சர்வேயர் வேலை. படித்தது என்னமோ டிப்ளமோ தான்! ஆனால் ஊரில் எல்லோரும் அவரை இஞ்சியர் என்றுதான் கூப்பிடுவார்கள்.
“ எடே! அது இஞ்சியரும் இல்ல.. மாஞ்சியரும் இல்ல.. இன்ஜினியர்!”
“ இந்த பொகை வண்டிய ஓட்டுவாகளே? அவுக மாதிரியா?”
“ அடே மாக்கான்! அது இன்ஜின் டைவரு! இவரு இஞ்சியரு “
திருத்தம் சொல்லி அலுத்துப் போய்விட்டார் அப்பா!
அப்பாவுக்கு இவனும் அண்ணனுமாக இரண்டு ஆண் பிள்ளைகள். மூத்தவன் கோபால் அடிக்கடி மாறும் அப்பாவின் வேலை நிரந்தரமின்மையால் சரியாக படிப்பு ஏறாமல் பள்ளி இறுதியோடு நின்று போனான். இவன் வளர்ந்து பள்ளிக்கு போகும் காலத்தில் ஆத்தா ஒரு வைராக்கியத்தோடு கூறி விட்டாள்.
“ எந்த ஊரு சீமைக்கு வேணா வேலைக்கு போங்க.. ஆனா புள்ளைங்களும் நானும் வரமாட்டோம். ஊர் ஊராப் போயி மூத்தவன் படிப்பு கெட்டது போதும். சின்னவனாவது படிக்கட்டும்”
அப்பாவுக்கு எதிர் பேச்சு பேச திராணியில்லை! அவரது வருமானம் குடும்பத்துக்கு போதவில்லை. ஆத்தா ஒயர் கூடை பின்னி விற்பது கொஞ்சம் வருமானத்தைக் கூட்டிற்று.
நாலாப்பு என்றாலும் ஆத்தா தன் திறமையால் எல்லாவற்றையும் கற்றுக் கொண்டாள். படிக்கும் ஆர்வமும் படிக்க முடியாத ஏக்கமும் அவள் மனதில் வடுவாக இருந்தன. அதனால் எதைக் கண்டாலும் எழுத்துக் கூட்டி படிப்பாள். கொஞ்சம் படித்த, படிக்கத் தெரிந்த பெண்களே அவளுக்கு சிநேகிதிகள்.
அப்படி அவள் கற்றுக் கொண்ட்து தான் ஒயர் கூடைகள் பின்னும் முறை. ஒரு நாள் ஏதோ ஒரு துண்டு காகிதத்தை வைத்துக் கொண்டு கையை ஆட்டி ஆட்டி பேசிக் கொண்டிருந்தாள். இவன் என்று சொல்லப்படுகிற ஜனாவுக்கு ஏதும் விளங்கவில்லை.
மறுநாள் சந்தையில் இருந்து சின்ன மூங்கில் கூடை ஒன்றை வாங்கி வந்தாள் ஆத்தா!
“ சின்னவனே! வாத்யார் வீட்டுக்குப் போயி பழைய நூஸ் பேப்பர் நாலஞ்சு வாங்கிட்டு வாடே”
வாத்தியார் வீட்டில் ஆங்கில செய்தித்தாள் தான் வாங்குகிறார்கள். அதுவும் அரக்கோணம் டவுன் பள்ளிக்கூட ஆசிரியர் என்பதால் அவருக்கு அவை கிடைக்கின்றன. இவனது கிராமத்தில் அது கிடைக்காது.
ஆத்தாவுக்கு ஆங்கிலம் தெரியாதே! இல்லை, யாரிடமாவது அதையும் கற்றுக் கொண்டு விட்டாளா? மறுநாள் பள்ளி முடிந்து அவன் வீடு வந்தபோது வெயிலில் காயவைத்திருந்த அழகு வண்ணக் கூடை அவனை வரவேற்றது.
“ பாத்தியாடே! மொளவா மடிச்சு கொடுத்த தாள்ல போட்டிருந்தாக.. செஞ்சு பாத்தேன்.. நல்லாத்தான் இருக்குது.. காயக்காய கெட்டிப்படுமாம். நாளைக்கு பெயிண்ட் வாங்கியாந்து தீட்டணும்”
மறுநாள் சின்ன சின்ன டப்பாக்களில் வர்ணங்கள் வாங்கி தீட்டினாள் ஆத்தா. கூடை புது அவதாரம் எடுத்திருந்தது. வெயிலில் காய வைத்த போது ஊரே கூடி நின்று பார்த்தது.
“ இஞ்சியர் சம்சாரம்னா சும்மாவா? “ என்று மூக்கின் மேல் விரல் வைத்தது ஊர்.
ஆத்தாவை ஆச்சரியமாகப் பார்த்தான் ஜனா! இவள் மட்டும் இன்னும் கொஞ்சம் படித்திருந்தால்!
0
வேறு வழியில்லாமல் தான் ஒரு கட்டத்தில் தான் ஆத்தா அந்த கிராம மண்ணை விட்டு வரச் சம்மதித்தாள். அப்பாவுக்கு சென்னை மாநகராட்சியில் வேலை கிடைத்திருந்தது. மேசை வேலை இல்லை. அந்த பிரம்மாண்ட வெள்ளைக் கட்டிடத்தின் முன்புற வராந்தாவில் உட்காரும் பெஞ்சு வேலை. புதிதாக வீடு கட்ட வரைபடம் போட்டுக் கொண்டு வருபவர்கள் இவரிடம் கையெழுத்து வாங்கினால் உள்ளே செல்லுபடியாகும்.
அதோடு ஜனாவின் படிப்பும் கோபாலின் வேலையும் ஆத்தாவை சென்னையை நோக்கி இழுத்தது. யார் யாரோ குத்தகைக்கு நிலத்தை எடுக்க வந்தபோது ஆத்தாதான் கறாராக பேசி மொந்தக்குடி ராமனுக்கு அந்தக் குத்தகையை கொடுத்தாள்.
“ என் உசுருடே இந்த மண்ணு.. கண்ணைப் போல பாக்கோணும்.. வெளங்கிச்சா?’
மொந்தக்குடி பேருக்கேற்றபடி தலையோடு உடலையும் ஆட்டினான். ஆனால் வருடா வருடம் ஆத்தா போய் பார்க்கும்போது ராமனின் வேலை திருப்தி தருவதாகவே இருந்தது. சில வருடங்களாக பயண சோர்வு காரணமாக ஆத்தா ஊர் போவதை நிறுத்தி விட்டாள். அவளுக்கும் வயதாகிக் கொண்டிருந்தது. சில வருடங்களாக கோபால் போய்க் கொண்டிருந்தான். அவனுக்கு கல்யாணம் ஆனதிலிருந்து அண்ணி அவனை தன் பிடிக்குள் இறுக்கி அதற்கு தடை போட்டு விட்டாள். இப்போது அது ஜனாவின் தலையில் விழுந்திருக்கிறது!
0
ஜனா கொஞ்சம் சோர்ந்து போயிருந்தான். இது இரண்டாவது முறைதான் என்றாலும் பேருந்திலிருந்து இறங்கியதிலிருந்தே சோர்வு அவனுக்குள் வந்து ஒட்டிக் கொண்டது.
எல்லாம் இரண்டு வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்தது தான். அவனுக்கு அந்த நாள் நன்றாக நினைவிலிருந்தது.

“ முப்பாட்டன் சொத்து என்று அலட்சியமா இருக்காதிங்கடே. பொன்னு வெளையற பூமின்னு தாத்தன் அடிக்கடி சொல்லும். ஒரு எட்டு போய் பாத்திட்டு வந்திருங்க “

ஆத்தா கத்தினது இன்னமும் பசுமையாக அவன் காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்தது. அவனுக்கு மூத்தவன் கோபால். சின்ன வயதிலிலேயே வேலைக்கு போய் குடும்பத்தைத் தாங்கிக் கொண்டிருந்தான். அவன்தான் ஜனாவை படிக்க வைத்தது. கல்லூரி படிப்பு என்றான போன ஆத்தா சொன்னது:

“ வெவசாயம் படிங்கடே.. அதான் நமக்கு சோறு போடும். டஸ் புஸ்ஸ¤னு தொரையாட்டம் படிச்சிட்டு வெளிநாட்டுக்கு போலாம்னு எண்ணமிருந்தா சொல்லு. அத முறிச்சி அடுப்புல போடுதேன். “

கோபால் மணமுடித்த கையோடு தனி வீடு பார்த்துக் கொண்டான். அதற்குள் ஜனா கல்லூரி படிப்பு முடித்திருந்தான். விவசாயக் கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராக வேலையும் கிடைத்திருந்தது. கோபாலின் மனைவி கொஞ்சம் டவுன்காரி. அப்படி இப்படி இருக்க வேண்டும் என்பதில் அவளுக்கு ஆர்வம் அதிகம். அதனால் கிராம நிலம் எப்போதும் போல மொந்தக்குடி ராமனுக்கே குத்தகைக்கு போனது.

“ சாகுபடிக்கும் செலவுக்கும் சரியாவுது. பெரியவர் நினைப்புக்காக ஒரு மூட்டை அரிசி மிச்சம் புடிச்சு தாரேன்.. தப்பா நெனைச்சுக்காதீங்க “ என்று சொல்லியபடியே வருடத்துக்கு இரண்டு முறை ஊருக்கு வந்து போவான் மொந்தக்குடி ராமன்.

ஜனாவுக்கு ஊர் அடையாளம் தெரியவில்லை. அரக்கோணத்திலிருந்து டவுன் பேருந்தில் போகவேண்டும். பதினாலாவது கிலோமீட்டரில் சாலை சந்திப்பில் இறங்கி நடக்க வேண்டும். நாலரை கிலோமீட்டர். வழியெங்கும் தறிகள் இயங்கும் வீடுகள் இருக்கும். வாசலில் சாயம் போட்ட துணிகள் காய வைக்கப்பட்டிருக்கும். பெருமாள்ராசப்பட்டி, குருவராசபட்டி, சோலைராசபட்டி என ஊர்கள்.. சிற்றூர்கள்.

போனமுறை வந்தபோது தார் சாலை இல்லை. வெறும் செம்மண் பாதைதான். போய் வந்தவுடன் செருப்பை மாற்ற வேண்டியிருந்தது. இம்முறை பரவாயில்லை. செருப்பு காப்பாற்றப்பட்டுவிடும்.

“ நம்ம பூமி இருக்குதா? இல்ல அதையும் அந்த சாயப்பட்டறைக்காரன் அடிச்சிக்கிட்டு போயிட்டானான்னு ஒரு எட்டு பார்த்துட்டு வா “ என்று ஆத்தா சொல்லி அனுப்பியது. போன வருடம் பம்பாய்க்காரன் சுத்துப்பட்டு கிராமங்களிலிருந்து ஏராளமான நிலங்களைக் கையகப்படுத்தியதாக செய்தித்தாள்கள் பேசின. தாராளமயமாக்கலில் அரக்கோணம் பகுதி தொழில் மேம்பாடு பகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது.

“ நெசவாளர் குடும்பங்கள் அதிகமாக வசிக்கும் இடமென்பதால், அரசு அங்கே ஆடைகள் தயாரிக்கும் தொழிலுக்கே முன்னுரிமை அளிக்கும் “ என்று அமைச்சர் பேசிவிட்டு வானம் பார்த்த பூமிகளை தாரை வார்த்து விட்டு போனார்.

அந்த வருடம் அரிசி மூட்டை வரவில்லை. என்ன ஏது என்று பார்ப்பதற்குத்தான் ஜனா போகிறான்.

“ வாங்க தம்பி “ என்று வரவேற்றான் மொந்தகுடி ராமன். வாசலில் கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்திருந்தான்.

“ நெலத்த பாத்துட்டு வரச் சொல்லிச்சு ஆத்தா “

“ நம்ம நெலத்த சுத்தி இருக்கற மத்த நெலத்த எல்லாம் வாங்கிபுட்டான் பம்பாய்க்காரன். சுத்தி வேலி போட்டுட்டான். உள்ளாறயே நொழைய முடியல.. நல்ல வெல வந்தா குடுத்துரலாமா? “
0
ராமன் சொன்னதுபோல அப்படித்தான் ஆகியிருந்தது. சுற்றிலும் கம்பி வேலி. இரவில் மின்சாரம் பாய்ச்சுகிறார்கள் என்றான் ராமன். பராமரிப்பு இல்லாமல் காய்ந்து கிடந்தது பூமி. இவன் நிற்பதை பார்த்துவிட்டு கோட்டு சூட்டு ஆசாமிகள் இரண்டு பேர் காரில் வந்து இறங்கினார்கள். நேரடியாக விசயத்துக்கு வந்தார்கள். இங்கு தொழிற்சாலை வராதாம். பயணியர் விடுதியும் பூங்காவும் அமைக்கப் போகிறார்களாம். சுற்றிலும் தென்னை மரங்களும் மாமரங்களும் நீச்சல் குளமும் வரப்போகிறதாம். சுற்றுச்சூழலுக்கு ஏற்படப்போகும் பாதிப்புக்கு சரிகட்ட அரசு விதித்த நிபந்தனையாம். நூறு வருடங்களுக்கு அவனுக்கு அவன் சந்ததியருக்கும் இலவசமாக தங்க அனுமதி உண்டாம். விலையும் கொஞ்சம் அதிகம் கிடைக்குமாம்.

ஆத்தாவை ஆஸ்பத்தியில் சேர்த்திருந்தார்கள். இதய நோய். மூன்று அடைப்புகள். நீக்க ஒன்றரை லட்சம் செலவாகியிருந்தது. டாக்டர் சொன்னார். கொஞ்சம் காற்றோட்டமான இடத்தில் வைத்திருக்க வேண்டுமாம். தினமும் நடை பயிற்சி அவசியம்.

குளுகுளுவென்ற தென்னை மா மரங்களுக்கு நடுவில் ஆத்தா தினமும் நடந்து கொண்டிருக்கிறாள். அடிக்கடி குனிந்து ஒரு கை மண்ணை எடுத்து வைத்துக் கொண்டு “ எம் முப்பாட்டன் சொத்து.. பொன்னு வெளையற பூமி “ என்று புலம்புகிறாள். ஜனா புதிய ஹோண்டா சிட்டியைத் துடைத்துக் கொண்டிருக்கிறான்.

Series Navigationதொடுவானம் 57. பெண் மனம்ஆத்ம கீதங்கள் –18 காத்ரீனா காதலனுக்கு எழுதியது.. ! மறுபடி நீ மணமகன் ஆயின் ..!
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *