தோழிக் குரைத்த பத்து

This entry is part 14 of 14 in the series 15 ஜனவரி 2017

 

இப்பகுதியில் வரும் பத்துப்பாக்களும் “தோழிக்கு உரைத்த பத்து” எனும் தலைப்பில் அடங்கி உள்ளன. இவை ஒவ்வொன்றுமே “அம்ம வாழி தோழி” என்றே தோழி கேட்கும்படிக்குச் சொல்லியதாகும். தலைவி, பரத்தையர், மற்றும் பிறரும் இப்பாடல்களைக் கூறுகிறார்கள். அதுபோலவே பல தோழிகள் கேட்கிறார்கள். ஆனால் ’தோழி’ என்று ஒருமையில் சொல்லக் காரணம் தோழியாம் தன்மையின் ஒற்றுமை கருதியேயாகும். இனிப் பாடல்களை நம் பேச்சு வழக்கில் காண்போம்

தோழிக்குரைத்த பத்து—1

அம்ம வாழி, தோழி! மகிழ்நன்

கடனன்[று] என்னும் கொல்லோ–நம்மூர்

முடமுதிர் மருதத்துப் பெருந்துறை

உடனா[டு]  ஆயமோ[டு] உற்ற சூளே!

[மகிழ்நன்= மருத நிலத் தலைவன் ;முடம்=வளைவு; பெருந்துறை=பெரியதான நீர்த்துறை; உழையர்=பக்கத்தில் இருப்போர்; கடன்=கடமை அல்லது சொன்னதைக் காப்பாற்ற வேண்டிய உறுதிப்பாடு]

முன்ன ஒரு நாளு அவன் வந்து அவளோட நீர்த்தொறையில ஆடிக்கிட்டு இருந்தான். அங்க பெரிய மருத மரங்கள் நெறைய இருந்தன. அப்ப அவளோட தோழிங்களும் நீராடிக்கிட்டு இருந்தாங்க. எல்லாரும் கேக்கும்படி அவன் என்ன சொன்னான் தெரியுமா? ‘இனிமே நான் அவங்க ஊட்டுக்குப்போக மாட்டேன்’ னு  சொன்னான். ஆனா இப்ப அவங்களோட போயி நீராடிக்கிட்டு இருக்கான். அதை கேள்விப்பட்ட தலைவி தோழிகிட்ட சொல்ற பாட்டு இது.

“ஏண்டி தோழி! நான் சொல்றதைக் கேளு; நம்ம ஊர்ல வளைஞ்சிருக்கற வயசான பெரிய மருத மரங்கள்ளாம் இருக்கற தண்ணித் தொறயில அன்னிக்கு ஒரு நாளு அவன் வந்து என்னோட நீராடிக்கிட்டு இருந்தாண்டி; அப்ப எல்லாரும் கேக்கும்படி அவன் சொன்ன சொல்லைக் காப்பாத்தறது இப்ப எனக்குக் கடமையில்லன்னு சொல்வானோடி?’

தோழிக் குரைத்த பத்து—2

அம்ம வாழி, தோழி! மகிழ்நன்

ஒருநாள் நம்மில் வந்ததற்[கு], எழுநாள்

அழுப என்ப, அவன் பெண்டிர்,

தீயுறு மெழுகின் ஞெகிழ்வனர் விரைந்தே!

அவன் அவளை உட்டுட்டு அவங்களோட போயி இருக்கறான். அதால அவளுக்குக் கோபம் வந்துடுச்சு; அவளைச் சமாதானம் செஞ்சு தன்னோட சேத்து வைக்கறதுக்காக தன்தோழருங்களை அனுப்பி வக்கறான். அப்படி வந்த தோழருங்கள்ளாம் கேக்கற மாதிரி அவ சொல்ற பாட்டு இது. தோழி கிட்ட சொல்றா.

”ஏண்டி, இதைக் கேளு; நம்ம மகிழ்நன் ஒரு நாள் என் ஊட்டுக்கு வந்தான்ல; அதுக்கே அங்க இருக்கற அவங்கள்ளாம் நெருப்புல பட்ட மெழுகுபோல உருகிப் போய் அழுதுகிட்டு இருந்தாங்களாமே”

இங்க ஒரு நாள் அவன் வந்ததையையே பொறுத்துக்காம ஏழுநாள் நெருப்புல பட்ட மெழுகுபோல அழுதாங்கன்னு அவங்களைப் பெருமையாச் சொல்றா; பொறாமையோடும் சொல்றா; அத்தோட நான் எவ்வளவு பொறுமையா இருக்கேன். அவங்களால இருக்க முடியுமா?ன்னு இகழ்ச்சியாகவும் கேக்கறா.

=====================================================================================

தோழிக்குரைத்த பத்து—3

அம்ம வாழி, தோழி, மகிழ்நன்

மருதுயர்ந்[து ஓங்கிய விரிபூம் பெருந்துறைப்

பெண்டிரொ[டு] ஆடும் என்பதன்

தண்டார் அகலம் தலைத்தலைக் கொளவே

போன பாட்டு மாதிரியே அவனோட தோழருங்கள்ளாம் கேக்கற மாதிரி அவ தோழிகிட்ட சொல்றா;

”இவங்கள்ளாம் வந்து இப்ப சமாதானம் பேசறாங்களே! அவன் என்னா செஞ்சான் தெரியுமா? மருத மரங்கள்ளாம் ஒசரமா இருக்கற பெருமையுள்ள தண்ணித்துறையடி அது; அவன் குளிர்ச்சியான மாலையைப் போட்டிருக்கான்; அங்க அவங்கள்ளாம் வந்திருக்காங்க; அவங்களோட சேந்துகிட்டு நீராடராண்டி; வந்த ஒவ்வொருத்தியும் அவன் மார்பைத் தெப்பாமா நெனச்சுத் தழுவறாங்கடி

அப்படி இருக்கச்சே நான் இப்பதேவை இல்லைதான?

இதேபோல “வவ்வு வல்லார் புணையாகிய மார்பினை உடையாயினை’ன்னு மார்பத் தெப்பமாகக் கூறும் பாட்டு பரிபாடல்ல[6] உண்டுங்க;

============================================================================

தோழிக்குரைத்த பத்து—4 அம்ம வாழி, தோழி, நம்ஊர்ப்

பொய்கைப் பூத்த புழைக்கால் ஆம்பல்

தாதேர் வண்ணம் கொண்டன

ஏதி லாளர்க்குப் பசந்தஎன் கண்ணே!

[பொய்கை=நீர்நிலை; மானிடரால் ஆக்கப்படாது தானாகவே அமைந்த நீர்நிலை என்பார் நச்சினார்க்கினியர்; கால்=தண்டு;]

அவனோட தோழருங்கள்ளாம் கேக்கற மாதிரி அவ சொல்றா, “ஏண்டி, அவனுக்குத்தான் என்கிட்ட அன்பில்ல; ஆனா அவனைப் பிரிஞ்சதால என் கண்ணு எல்லாம் தண்ணியில பூத்த தொளை இருக்கற தண்டைக் கொண்ட ஆம்பல் பூவோட தாதுப்பொடியோட நெறத்துக்கு மாறிடுச்சே அது ஏண்டி?”

சங்க காலத்துல எல்லாம் அவனைப் பிரிஞ்சிருந்தா அவளுக்கு உடம்பெல்லாம் பவுனு நெறத்துல ஒரு தேமல் மாதிரி வந்துடுமாம். அதைத்தான் பசலைன்னு சொல்வாங்க; பொன் நெறத்துல மாறிடுச்சேன்னு சொல்றா; அதால அது செவ்வாம்பலாம்; அதோட தாதுதான் பொன் நெறத்துல இருக்கும். அவள் ஒடம்பு தாமரை இன்னும் குவளையோட பூ நெறத்துல இருக்கறதுதான் இயற்கையான அழகாம். ஆம்பல்தாது நெறத்துல மாறினா அது இழிவாம். மொதல்ல பசலையா இருந்தது; இப்ப இது மாதிரி மாறிடுச்சே இது ஏன்னு கேக்கறா? நம்மை எல்லாம் அவன் மறந்து போயிட்டான்; ஆனா அவனை இன்னும் நாம மறக்காம இருக்கறதுக்காக வந்த நெலை இதுவோன்னு கேக்கறா?

 

 

தோழிக்குரைத்த பத்து–5

அம்ம வாழி, தோழி, நம்ஊர்ப்

பொய்கை ஆம்பல் நார்உரி மென்கால்

நிறத்தினும் நிழற்று மன்னே

இனிப் பசந்தன்று, என்மாமைக் கவினே!

மாமைன்னு சொன்னா இயற்கையான அழகுங்க; நோய்நொடி எதுவுமில்லாத, அழகு, இளமை, ஒழுக்கம் எல்லாம் இருக்கற பொண்ணுங்களோட நெறம்னு மாமையைச் சொல்வாங்க; மழையால நனைஞ்சுபோயி துளித்த பச்சை நெறத் துளிர் இலைகளைத்தான் அதற்கு ஒப்பாச் சொல்வாங்க; செவ்வாம்பலோட தண்டின் நாரை உரிச்சா பொன் நெறத்துல இருக்குமாம். அதைவிட மாமை ஒளிர் விடுமாம்.

அவனோட தோழருங்கள்ளாம் அவனைப் பத்தி இல்லாதது எல்லாம் சொல்லிப் புகழ்ந்து பேசறாங்க; அதைக்கேட்ட அவ சொல்றா, “ஏண்டி இதைக் கேளு, நம்ம ஊருல இருக்கற நீர்நெலையில பூத்திருக்கற ஆம்பலோட தண்டிலேந்து நார் உரிச்சா அது பொன்னு மாதிரி இருக்குமே; அதைவிட என் நெறம் அழகா இருந்ததுடி; ஆனா இப்ப இவங்கள்ளாம் அவனைப் பத்திப் பேசற பொய்யான பேச்சைக் கேட்டே அந்த மாமையான அழகெல்லாம் போயிடுச்சேடி; பசலை வந்துடுச்சே”

தோழிக்குரைத்த பத்து—6

அம்ம வாழி, தோழி! ஊரன்

நம்மறந்[து] அமைகுவன் ஆயின் நாம்மறந்[து]

உள்ளா[து] அமைதலும் அமைகுவம் மன்னே.

கயலெனக் கருதிய உண்கண்

பயலைக்[கு] ஒல்கா வாகுதல் பெறினே

அவன் அவனோட தோழருங்கள அனுப்பித் தலைவியோட மறுபடியும் சேர்றதுக்குத்தான் விரும்பறான். அவளும் அதைவிரும்பறா; ஆனா அவ தோழி அதைப் புரிஞ்சுக்காம அவன் தோழருங்களைத் திருப்பி அனுப்பறா: அப்ப அவ தன் தோழிகிட்ட சொல்ற பாட்டுதான் இது;

[பயலை=பசலை; ஒல்காவாகுதல்=தளராதிருத்தல்]

“ஏண்டி என் தோழியே இதைக் கேளு; அவன் நம்மை விட்டுப் போயிட்டான்தான்; ஆனா என் மனசு இன்னும் அவனை மறக்கலே; என் கண்ணெல்லாம் தளராம பசல வராம இருக்கணும்னு உறுதியா இருந்தா அவனை மறக்க முடியும்; ஆனா அப்படி இருக்கலயே”

கண்ணெல்லாம் பசலை நோய் வராம இருக்கறதால அவனை ஏத்துக்கறதுதான் சரின்னு அவ நெனக்கறா; அதால்தான் தோழிகிட்ட மனசுல இருக்கறதை இப்படி மறைச்சுப் பேசறா.

தோழிக்குரைத்த பத்து—7

அம்ம வாழி, தோழி, மகிழ்நன்

நயந்தோர் உண்கண் பயந்துபனி மல்க

வல்லன் வல்லன் பொய்த்தல்

தோற்றான் உற்ற சூள்வாய்த் தல்லே!

[நயந்தோர்=விரும்பியோர்; பயந்து=பசலை பூத்து; பனிமல்க=நீர் நிறைய; தேற்றான்= அறியான்; சூள்வாய்த்தல்=உரைத்த சொற்காத்து அதன்படி நடத்தல்]

இந்தப்பாட்டுதான் மொதமொதல்ல அவன் அவளை உட்டுட்டு அவங்ககிட்டப் போனானே! அவங்கள்ள ஒருத்தி சொல்ற பாட்டு; அவன் திரும்ப அவகிட்டயே போயிட்டான்; அதுவும் சபதமெல்லாம் போட்டு அங்கியே தலைவியோட கலந்து ஒறவாடினான்னு இவ கேள்விப்பட்டா; அப்ப தன் தோழிகிட்ட சொல்ற மாதிரி அவன் தோழருங்கள்ளாம் கேக்க சொல்றா.

ஏண்டி என் தோழி. இதைக் கேளு; அவன் தான் சொன்ன வார்த்தையை எப்பவுமே காப்பாத்தறதை நெனக்க மாட்டான். தன்னை விரும்பறவங்க கண்ணெல்லாம் பசலை வந்து கண்ணீர் வர்ற மாதிரி செய்வான்; சொன்ன சொல்லெல்லாம் பொய்யாக்கி வருத்தம் குடுக்கறதுல அவன் வல்லவன்தாண்டி”

தோழிக்குரைத்த பத்து—8

அவன்தான் இப்ப தன் ஊட்ட உட்டுட்டு அவங்களோட போய்த்தங்கி இருக்கான்ல; அப்ப அங்க இருக்கற ஒருத்திகிட்ட தோழி வந்து அவன் திரும்பித் தலைவி கிட்டப் போறதா இருக்கான்னு சொல்றா. அதைக்கேட்ட அவ தோழிகிட்ட சொல்ற பாட்டு இது.

அம்ம வாழி, தோழி! மகிழ்நன்

தன்சொல் உணர்ந்தோர் அறியலன்; என்றும்

தண்தளிர் வௌவும் மேனி,

ஒண்தொடி முன்கை யாம்அழப் பிரிந்தே

[தண்தளிர்=குளிர்ச்சியான மாந்தளிர்; வௌவம்=தாமரை; ஒண்தொடி= ஒளிபொருந்திய வளயல்கள் அணிந்த முன்கை]

”ஏண்டி, தோழி, இதைக்கேளு, குளிர்ச்சியான மாந்தளிர் போல இருக்கற ஒடம்பினையும், வளையெல்லாம் போட்டிருக்கற முன்னங்கையையும், இருக்கற நாங்கள் எல்லாரும் அழுவறமாதிரி அவன் எங்களை உட்டுட்டுப் போகப் போறான்னு சொல்ற; அவன் எப்பவுமே இப்படித்தாண்டி; தான் சொன்னதை உண்மைன்னு நெனச்சுக்கிட்டு அன்போட இருக்கறவங்களத் தெரிஞ்சுக்கற அறிவு கொஞ்சம் கூட இல்லடி அவனுக்கு”

அவன் பிரிஞ்சு போனா தளிரு போல இருக்கற ஒடம்பு கெட்டுப்போகும்; அத்தோட வளையெல்லாம் கழன்று போற மாதிரி முன்னங்கையெல்லாம் மெலிஞ்சு போகும்றதைக் குறிப்பா அவ சொல்றா.

தோழிக்குரைத்த பத்து–9

அம்ம வாழி, தோழி! ஊரன்

வெம்முலை அடைய முயங்கி, நம்வயின்

திருந்திழைப் பணைத்தோள் நெகிழப்

பிரிந்தனன் ஆயினும் பிரியலன் மன்னே

அவன் இப்ப கொஞ்சம் தெளிவா ஆயிட்டான்; அதால மறுபடி கட்டினவ கிட்டயே வந்துட்டான். அதால அவளுக்கு மகிழ்ச்சி; தன் தோழிகிட்ட ”இனிமே அவன் தன்னைவிட்டுப் பிரிஞ்சு போகாம இங்கியே கெடப்பான்”னு சொல்றா; இப்படி அவ சொன்னதை முன்னாடி அவன் போனானே அங்க இருந்த கேள்விப்பட்டா; அவ தன் தோழிகிட்ட சொல்ற பாட்டு இது.

”தோழீ, இதைக் கேளு; அந்த ஊரன் இங்க இருந்தப்ப நம்ம மார்பெல்லாம் அழுந்த வச்சு நல்லா தழுவினாண்டி. இப்ப நகையெல்லாம் போட்டிருக்கற நம்ம தோளெல்லாம் மெலிஞ்சுபோற மாதிரிப் பிரிஞ்சு போயிட்டாண்டி; ஆனா அங்க போகணுமேன்னுதான் அவன் போயிருக்கானே தவிர உண்மையா பிரிஞ்சு போனவன் இல்லடி”

இதை ஏன் அவ சொல்றான்னா தோழி இதப் போயி தலைவிக்கிட்ட சொல்வா. அதனால அவன் தங்கிட்டயே இருப்பான்னு தான் நெனக்கறது தப்போன்னு தலைவி வருந்துவா. இதுதானே அவ விருப்பம்.

தோழிக்குரைத்த பத்து—10

அம்ம வாழி தோழி, மகிழ்நன்

ஒண்தொடி முன்கை யாம்அழப் பிரிந்து,தன்

பெண்டிர் ஊர்இறை கொண்டனன் என்ப

கெண்டை பாய்தர அவிழ்ந்த

வண்டுபிணி ஆம்பல் நாடுகிழ வோனே.

[ஒண்தொடி=ஒளி பொருந்திய வளை; பாய்தர=பாய]

இந்தப் பாட்டு ஒரு அருமையான பாட்டு; மனைவியை விட்டுட்டு அவங்ககிட்டப் போனவன் திரும்பி அவகிட்டயே வரான்; அதால அங்க இருக்கற சிலபேரு அவனை மடக்கித் தன்கிட்ட வச்சுக்க ஒனக்குத் துப்பில்லையேன்னு சொல்றாங்க; அப்ப அவ தன் தோழிகிட்ட சொல்ற பாட்டு இது.

”தோழி, இதைக் கேளு, அவன் ஊர்ல கெண்டை மீன் பாய்ந்து அதால ஆம்பல் மலர்ந்துடும்; அந்த ஆம்பல் தன்கிட்ட வர்ற வண்டுகளை விடாது பிணிச்சு வச்சுக்கும்; அவன் அப்படிப்பட்ட ஊரைச் சேந்தவன்னு அவங்களுக்குத் தெரியாது; அதாலதான் ஒளி பொருந்திய வளையிருக்கற முன்னங்கை இருக்கற நாங்க அழும்படி அவன் தன் பொண்டாட்டிகிட்டப் போயிட்டான்னும் அங்கியே தங்கிட்டான்னும் சொல்றாங்க”

இதுல மறைஞ்சிருக்கற பொருளுதான் முக்கியமாம். அதாவது வண்டு எங்கெங்கெல்லாமோ போகும் வழக்கம் உடையதுதான். ஆனா அந்த வண்டைத் தங்கிட்ட மறுபடியும் வரவழைக்கிறத் தேனைக் கொண்டது ஆம்பல். எனவே அந்த வண்டு எப்பவும் ஆம்பல்கிட்ட வந்துடும். அதுபோல அவன் தன் பெண்டிர்கிட்ட அவங்க ஊருக்கு ஏதாவது திருவிழாவுக்கோ அல்லது சாமி கும்பிடவோ போயிருக்கலாம்ல; ஆனா அவன் அன்பு எங்கிட்டதான் இருக்கும்னு அவ சொல்றா.

இதோட தோழிக்குரைத்த பத்து முடியுதுங்க.

=====================================================================================

Series Navigationமொழிபெயர்ப்பு த்தளத்தில் திசைஎட்டும் நிகழ்த்தும் சாகசம்
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *