நசுங்கிய பித்தளைக்குழல்

2
0 minutes, 0 seconds Read
This entry is part 11 of 27 in the series 30 ஜூன் 2013

அந்த சுவற்றின்
நெற்றியைப்பார்க்கும் போதெல்லாம்
என் மனசுரங்கத்தில் நீர் கசியும்.
கண்கள் இன்றி
இமைகள் நனையாமல்
கண்ணீரின் விழுதுகள் பாம்பு நாக்குகள் போல்
கீழிறங்கும்.
ஆனால் அது அழுகை அல்ல.
அவலம் இல்லை
புலம்பலின் ஊதுவ‌த்திப்புகை சுருள்கள் இல்லை.
ஆனாலும் அந்த குகைக்குள்
சுரந்து கொண்டே தான் இருக்கிறது.
அந்த சுவற்றை கவிந்திருக்கும் நிழல்
சுட்டெரித்துக்கொண்டிருக்கிறது.
திகு திகு என்று சுவாலைகள் சுழற்றியடிக்கிறது.
அங்கணாக்குழியை அடுத்து
அடுக்களையை அணைவாய்ப் பொத்தியிருக்கும்
சுவர் அது.
ஒவ்வொரு பொங்கலுக்கும்
வீடு வெள்ளையடிக்கப்படும் போது
அந்த சுவரும் சுண்ணாம்புக்கரைசலில்
வெள்ளையாய் தீக்குளித்த போதும்
அடுப்பின் தீ நாக்குகளின் கோரம்
அங்கு இன்னும் அழிக்கப்படவில்லை.
அழகான பித்தளையில் நீண்ட”குழலாய்”
பளபளவென்று அது சீராக வந்ததை
என் அம்மா அதை உருட்டி உருட்டி ஊதி ஊதி
பெருமிதமாய்
கன்னம் பூரிக்க கண்கள் ஈரமாய் ஏக்கக்குழம்பில்
மினுமினுக்க அடுக்கி அடுக்கி
சொல்லிக்கொண்டே போவாள்.
அடுப்பு ஊதும் குழல் தான் அது.
அதை ஊதும்போது
அவள் அடிவயிற்றில்
என் தம்பியோ தங்கையோ
ஞாபகம் இல்லை..
தசைப்புடைப்பிலும்
பச்சைநரம்புகளின் மகர ரேகை கடக ரேகைகளாய்
உயிர்க்கவிதைகளின் பூகோளப்பாடம் தெரியும்.
புகை மண்டி அடர்ந்து சுருட்டி சுருட்டி
அவள் கண்மலர்களை
கசக்கி கூழாக்கி விடும்.
அன்று அவள் தான்
“குய்புகை கமழ துழந்து அட்ட”
புளிக்குழம்பை நாங்கள் சப்பி சப்பி சாப்பிட்டதை
இலக்கியமாக்கினால்
ஞானபீடங்கள் போதாது
அந்த கரிபிடித்த‌ சேலை முந்தானையின்
விளிம்புகளில் உள்ள‌
பரிவின்..ஊட்டுதலின்
பாச நெய்தல் பற்றி புரிந்து கொள்ள.
ஆனாலும்
எனக்குப் புரிவதே இல்லை.
ரெண்டு கல்லு உப்பு குறைந்தது சாம்பாரில் என்று
அன்று அப்பா தட்டை சுவற்றில் எறிந்தார்.
அருகில் கிடந்த
அந்த அடுப்பு ஊதும் குழலையும் எறிந்தார்.
சுவர் கூட பொளிந்து போய் அதில்
நீளமாய் ஒரு கோடு….
அம்மாவுக்கு நெற்றியில்
சிவப்பாய் விபூதி பூசினாற்போல்
குங்கும ரத்தம்.
அப்புறம் நெற்றியில் காயம் கட்டு சிகிச்சை…
அத்தியாயங்கள் ஓடி விட்டன.
எங்களுக்கு “மண்டையிடி” என்றால்
சுக்கை அரைத்து
பத்து போட்டுவிடுவாள்.
வாழ்க்கை சக்கரம் ஓட்டுவதில்
“எட்டு” போடத்தெரியாதவள்.
அதிமருதம் சித்தரத்தை நறுக்கு மூலம்
எல்லாம் போட்டு குடினி வைத்து
ஆவி பிடிக்க வைப்பாள்.
அவளது ஆழமான அந்த ஆவிதுடிப்பின்
நீள அகலத்து அங்குலங்கள்
என்னவென்று தெரியாமல்
இன்று வரை அந்த பழுப்படைந்த‌
இருட்டுச்சுவற்றின் நெற்றியை
புரிந்து கொள்ளமுடியாமல்
உற்று உற்று பார்க்கிறேன்.
ஆம்
அதோடு நசுங்கிய
அந்த பித்தளைக்குழலையும் தான்.

============================================

Series Navigationகேத்தரீனாஅகமும் புறமும்
author

ருத்ரா

Similar Posts

2 Comments

  1. Avatar
    கவிஞர் இராய.செல்லப்பா says:

    நீண்ட நாட்களுக்குப் பிறகு என்னை உலுக்கிய கவிதை இது. படிக்கும்போதே என் தாய், ஒரு மழைநாளில், ஈர விறகை அடுப்பிலிட்டு அடர்ந்த புகைச்சூழலில் பித்தளை ஊதுகுழலில் வாய்வைத்து புகை விரட்டி எரியும் கண்களை முந்தானையால் கண்களையும் துடைக்கும் காட்சி மனக்கண்ணில் தெரிகிறது. என்று அவள் இல்லை. அந்த ஊதுகுழலும் இல்லை. –நியூஜெர்சியிலிருந்து கவிஞர் இராய.செல்லப்பா.

  2. Avatar
    ருத்ரா இ.பரமசிவன் says:

    கவிஞர் இராய.செல்லப்பா

    பழைய நினைவுகளின் புகை மூட்டம் நம் கண்களில் கரிப்பதில்லை.ஆனாலும் மனம் நனைகிறது கண்ணீரால்.அம்மாவின் அன்புச்சிறகுகள் அடைகாப்பத்தில்
    அடைந்துகிடந்த தருணங்கள் மாணிக்கத்தருணங்கள்.
    நன்றி கவிஞர் இராய.செல்லப்பா அவர்களே.

    அன்புடன் ருத்ரா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *