நப்பின்னை நங்காய்

This entry is part 4 of 22 in the series 8 மார்ச் 2015

முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்!
செப்ப முடையாய்! திறலுடையாய்! செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்!
செப்பன்ன மென்முலைச் செவ்வாய் சிறு மருங்கல்
நப்பின்னை நங்காய் திருவே! துயிலெழாய்!
உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை
இப்போதே எம்மைநீ ராட்டேலோ ரெம்பாவாய்!

ஆண்டாள் நாச்சியார் அருளிச் செய்த திருப்பாவையின் 20- ஆம் பாசுரமாகும் இது. கடந்த பாசுரத்தில் ‘தத்துவம் அன்று, தகவும் அன்று’ என்று நப்பின்னையைப் பிராட்டியைக் குறை கூறி விட்டோமே. அவளுக்குச் சினம் வந்திருக்குமோ? அதனால்தான் அவள் பேசவில்லையோ என்று வெளியிலிருந்து எழுப்பும் ஆயர் குலப் பெண்கள் சந்தேகிக்கிறார்கள். அவளுக்குக் கோபம் வந்தால் கண்ணனுக்கும் கோபம் வந்துவிடுமே என்றும் அவர்கள் நினைக்கிறார்கள். இவ்வாறெல்லாம் எண்ணிப் பார்ப்பதை ‘அதிசங்கை’ என்பார்கள்.
ஆனால் அவளோ தக்க காலம் வந்தவுடன் எம்பெருமானிடம் பரிந்துரை செய்யலாம் என்று எண்ணிப் பேசாமலிருக்கிறாள். ஆயர்குலப் பெண்கள் கண்ணன் அவளை விடவில்லை என்று எண்ணி இப்பாசுரத்தின் முற்பகுதியில் அவனை எழுப்புகிறார்கள். அவனும் பேசாமலிருப்பதால் மீண்டும் பாசுரத்தின் பிற்பாதியில் பிராட்டியின் பெருமையைப் பேசுகிறார்கள். அவளின் தேககுணங்களையும், ஆத்ம குணங்களையும் சொல்லி, அவன் உனக்கு உரியவன்; ”அவனை எங்களுக்குத்தா” என்று வேண்டுகிறார்கள்.
தேவர்களுக்குப் பெருமான் உபகாரம் செய்ததைச் சொல்லி, வேண்டுகிறார்கள். இந்த இடத்தில் முப்பத்து மூவர் என்றது முப்பத்து முக்கோடி தேவதைகளுக்கும் உபலட்சணமாகும். அஷ்டவசுக்கள் 8 கோடி, ஏகாதச ருத்ரர்கள் 11 கோடி, த்வாத சாதித்யர்கள் 12 கோடி, அஸ்வினிகள் 2 கோடி ஆக மொத்தம் முப்பத்து முக்கோடி தேவர்கள் ஆகின்றனர். பொய்கையாழ்வாரும் இதை, “எண்மர் பதினொருவர் ஈரறுவர் ஓரிருவர்” என்று முப்பது கோடிக்குக் கணக்குக் காட்டுவார். நம்மாழ்வார், இதனையே “இருநால்வர் ஈரைந்தின் மேலொருவர் எட்டோடு ஒரு நால்வர் ஓரிருவர் என்று அருளிச் செய்வார்.
ஆயர்குலச் சிறுமிகள் கேட்கிறார்கள். “நீ முப்பத்து முக்கோடியான தேவர்களைத்தாம் காப்பாற்றுவாயா? அஞ்சு லட்சம் குடியான எங்களைக் காப்பாற்ற மாட்டாயா? நீ காப்பாற்ற நாங்களும் முப்பத்து முக்கோடியாக வேண்டுமா?
ஆண்களும் அதிகமாயும் இருப்பவர்களுக்கு உதவி செய்தவன் பெண்களாகவும் சிறுகுடியாகவும் இருக்கும் எங்களுக்கு உதவி செய்தால் ஆகாதோ?
பெரும் மிடுக்கு உடைவர்களின் கிலேசங்களைத்தான் தீர்ப்பாயா? அபலைகளின் சோர்வை நீக்க மாட்டாயா?
‘நாங்கள் தேவர்’ என்று செருக்கு கொண்டு மார்பு நெறித்திருப்பவர்களின் வருத்தங்களைத்தான் போக்குவாயா? ’தாஸோஹம்’ என்று வினயம் கொண்டிருப்பவர்களின் வருத்தங்களைப் போக்க மாட்டாயா?
க்ஷுத்ர புருஷாத்ரத்தங்களை அடைய ஆசைப்பட்டு வந்து, பணிவாருடைய காரியமே செய்வேன், பரம புருஷார்த்தம் பேணி வருவாருடைய காரியம் செய்யகில்லேன் என்று கூறுவாயா?
ப்ரார்த்திக்கும்போது திருவடியைப் பிடிப்பதும், ப்ரார்த்தனை நிறைவேறியதும் அம்பு தொடுப்பதுமாக இருப்பவர்க்கே சேவகம் செய்வாயா? ‘உன் சேவடி திருக்காப்பு’ என்பதைத் தவிர வேறொன்றும் தெரியாதவர்க்கு உபகாரம் செய்யமாட்டாயா?
உன் திவ்ய மங்கள விக்ரகத்தை நோவு படுத்திக் காரியத்தைச் சாதிப்பவரின் மனோரத்தைப் பூர்த்தி செய்வாயா? உன் திருமேனிக்குக் காப்பிடுதலே பணியாகக் கொண்டவர்க்கு உன் அருள் கிடைக்காதா?
நச்சரவமான உடலைப் பற்றின ஆபத்தைப் போக்கத்தான் வருவாயா? ஆத்மாவுக்கு அருள் செய்ய வர மாட்டாயா?
‘பேணலும் இல்லா அரக்கர் முந்நீர பெரும்பதிவாய் நீள்நகர் நீளெரி வைத்தருள்வாய் என்று நின்னை விண்ணோர்தாள் நிலந்தோய்ந்து தொழுவர்” [திருவிருத்தம்-92] என்பதுபோல் உன்னை எழுப்பி அம்பு போடச் செய்பவர்களுக்குத்தான் காரியம் செய்வாயா? உன்மேல்பசும்புல்விழுந்தாலும்மனம்பொறுக்காதஇடையர்குலப்பெண்களுக்கு அருள் செய்ய வர மாட்டாயா?
தேவர்கள். மரணம் இல்லாதவர், கொன்றாலும் சாகாதவர்; அவர்களுக்குத்தான் உதவுவாயா? உன்னைக் கணப்பொழுது பிரிந்தாலும் மரணமடையும் எங்களுக்கு அருள் செய்யமாட்டாயா?
அதிலும் ‘முன்சென்று’ என்று கூறப்படுவதால் பகவான் எப்போதும் முன்னால் வந்து நிற்பான் என்பது விளக்கப்படுகிறது. இந்த அடிக்கு பெரியவாச்சான் பிள்ளை “இங்கே தமிழர்கள் இடமும் காலமும் என்றார்களிலே” என்று வியாக்கியானம் செய்கிறார். கஜேந்திரன் ஒரு குளத்தில் நின்று கொண்டு ‘ஆதிமூலமே’ என்று அழைத்தபோது முன்னால் வந்த வரலாறு இங்கு கூறப்படுகிறது என்பார் முக்கூரார். வருணன், இந்திரன், பிரம்மா, பரமசிவன் முதலான அனைவரும் கைவிட்டபோது எம்பெருமான்தான் முன்னால் வந்து ரக்ஷித்தான். இதைக் கம்பர்,
கடுத்த கராம் கதுவ, நிமிர் கை கொடுத்து, மெய் கலங்கி
உடுத்த திசை அனைத்தினும் சென்று ஒலிகொள்ள,உறுதுயரால்
அடுத்த பெருந்தனி மூலத்து அரும்பரமே! பரமே! என்று
எடுத்து ஒரு வாரணம் அழைப்ப, நீயோ அன்று ஏன் என்றாய்?
[கம்ப ராமாயணம் 4-1-48]
என்று பாடுகிறார். திருமங்கையாழ்வாரும்,
மீனமர் பொய்கை நாண்மலர் கொய்வான்
வேட்கையி னோடுசென் றிழிந்த,
கானமர் வேழம் கையெடுத் தலறக்
கராவதன் காலினைக் கதுவ,
ஆனையின் துயரம் தீரப்புள் ளூர்ந்து
சென்றுநின் றாழிதொட்டானை,
தேனமர் சோலை மாடமாயிலைத்
திருவல்லிக் கேணி கண்டேனே
[பெரிய திருமொழி 2-3-9]
என்று அருளிச் செய்கிறார்.
’முன்’ என்பது இடத்திலும் முன் என்றும் காலத்திலும் முன் என்றும் குறிக்கும். இடத்தில் முன்னால் நிற்பதற்கு அர்ச்சுனனின் தேர்த் தட்டில் வந்து நின்றது பிரமாணமாகும். இதைப்
“பற்றலர் வீயக்கோல் கையிற்கொண்டு
பார்த்தந்தன் தேர்முன் நின்றானை” என்று ஆழ்வார் அருளிச் செய்வார்.
’காலத்தில் முன்னே நிற்பது’ என்பது துன்பம் வரும்முன் தன் அடியவர்களுக்குக் காப்பாக நிற்பதாகும். துர்வாச முனிவர் மூலம் தன் பக்தன் அம்பரீஷனுக்குத் துன்பம் வரப்போகிறது என்று முன்னரே உணர்ந்த பரமாத்மா அவனுக்குத் தன் சக்ராயுதத்தையே கொடுத்தான் அன்றோ?
கர்ணன் ஏவிய நாகாஸ்திரம் அர்ச்சுனனை நோக்கி வருகையில் தேரை அழுத்தி அர்ச்சுனனின் கிரீடத்தை மட்டும் அது தட்டிப் போகுமாறு செய்தான் அன்றோ?
அர்ச்சுனனைக் காக்க வேண்டி கர்ணனின் கவச குண்டலத்தை இந்திரனை விட்டு வாங்கச் செய்ததோடு மற்றும் அவன் செய்த புண்ணியம் அனைத்தும் போய்ப் பெற்று வந்தான் அன்றோ?
அர்ச்சுனன் மேல் ஏவிவிடவே கர்ணன் வைத்திருந்த இந்திரன் தந்த வேலை கடோத்கஜன் மீது ஏவவைத்தான் அன்றோ?
ஜயத்ரதனை வதம் செய்து அர்ச்சுனனின் உயிரைக் காக்க தன் சக்ராயுதத்தால் சூரியனையே மறைத்தான் அன்றோ?
இப்படியெல்லாம் பக்தர்களுக்குத் துன்பம் வரும் முன் சென்று உபகாரம் செய்வதுதான் அவன் சுபாவமாகும். அதனால்தான் ‘மழைக்கன்று வரை முன் ஏத்தும் மைந்தனே’ என்று தொண்டரப்பொடியாழ்வார் அருளினார்.
”அப்படித் துன்பம் வரும் முன் காக்கும் நீ இன்னும் எமக்கு அருள் செய்யாமல் இருக்கலாமா? அவர்கள் வந்து உன்னைப் பற்றவேண்டும் என்று நினைப்பதற்கு முன்னமே உன் அடியார்களை ரக்ஷிக்கும் நீ இன்னும் வாளாயிருப்பதேனோ?
அதுவும் நீதானே முன் சென்று நிற்பாய்? ”நான் வந்து உங்களுக்குக் காரியம் செய்ய வேண்டி இருக்க நீங்கள் வந்து என்னக் காண்பது எனக்கு மிகவும் வெட்கமாயிருக்கிறது” என்று தண்டகாரண்ய முனிவர்களிடத்தில் கூறினாயே? ”காலால் வந்து என்முன் நின்று எதிர்கொண்டழைத்ததினாலேயே நான் உன்னால் கௌரவிக்கப்பட்டேன்” என்று குகப்பெருமாளிடத்தில் கூறினாயே?
நோவு வருவதற்கு முன்னரே வந்து பரிகரிக்க வேண்டியவன் நோவுபட்ட எம்மை இன்னும் காப்பாற்றாதது ஏனோ? முப்பத்து முக்கோடி தேவர்கள் நோவு பட்டாலும் பொறுப்பார்கள். நோவுபடப் பொறுக்காத எமக்கு இன்னும் உதவாதது ஏனோ?
உன்மீது ஆசைப்பட்டவர்களுக்கு உதவ வேண்டாமா? அமுதினில் பிறந்த பிராட்டியை அகலகில்லேன் என்று ஆகத்தில் வைத்துள்ளாய். எங்களை என்ன செய்ய உத்தேசித்துள்ளாய்? உன் மனத்தில் என்ன நினைத்துள்ளாய்?” என்று ஆயர்குலப் பெண்கள் வேண்டுகிறார்கள்.
இந்த இடத்தில் திருமங்கை ஆழ்வார் திருவிடவெந்தை திவ்ய தேசத்தை மங்களாசாசனம் செய்யும் பாசுரம் நினைவு கூறத்தக்கது.
“திவளும் வெண்மதிபோல் திருமுகத்தரிவை
செழுங்கடல் அமுதினிற் பிறந்த
அவளும் நின் ஆகத்திருப்பதும் அறிந்தும்
அகலும் ஆசை விடாளானால்
குவளையங்கண்ணி கொல்லியம் பாவை
சொல்லு நின்தாளே நயந்திருந்த
இவளை உன் மனத்தால் என்நினைந்திருந்தாய்
இடவெந்தை எந்தை பிரானே “
நாச்சியார் திருமொழியில் [8-2] மேகத்தை நோக்கி ’அவன் சொன்ன வார்த்தை என்னாவது’ என்று ஆண்டாள் நாச்சியார் கேட்பதும் இங்கு நினைவுக்கு வருகிறது.
”மாமுத்த நிதிசொரியும் மேகங்காள்! வேங்கடத்துச்
சாமத்தின் நிறங் கொண்ட தாடாளன் வார்த்தை என்னே
காமத்தீயுள் புகுந்து கதுவப்பட்டு இடைக்கங்குல
ஏமத்தோர் தென்றலுக்கு இங்கு இலக்காய் நானிருப்பேனே!”
’கம்பம்’ எனும் வட சொல்லுக்கு நடுக்கம் என்று பொருளாகும். அது திரிந்து கப்பம் என்றாயிற்று.
தேவர்கள் இரணியனிடம் தங்கள் இருப்பிடத்தை இழந்ததினால் நடுங்கினர். அதுபோல இராவணன் கும்பகருணன் செய்த கொடுமையினால் தேவர்கள் நடுங்கினர். அவர்கள் பெருமாளிடம் சென்று,
”பொங்கு மூவுலகையும் புடைத்து அழித்தனர்
செங்கண் நாயக; இது தீர்த்தி இல்லையேல்
நுங்குவர் உலகை ஓர் நொடியில்” என்று நடுங்கி வேண்டினர். ”அப்படி நடுங்கிய தேவர்களின் நடுக்கம் தீர்த்தாயே! எம் துன்பம் தீர்ந்திட அருள் செய்ய மாட்டாயா? அவர்களின் நடுக்கம் எதிரிகளினால் வந்தது. ஆனால் எம்நடுக்கம் உன்மேல் கொண்ட அன்பினால் அன்றோ வந்தது.” என்கிறார்கள். ’கப்பம் தீர்க்கும் கலியே’ என்பது நடுக்கம் போக்கும் கலியே என்று பொருள் தரும். எவனுடைய திருநாமத்தைச் சொன்னால் கலி கெட்டு இல்லாமல் போகுமோ அப்படிப்பட்டவன் கண்ணன் எம்பிரான்.
’கலி’ எனும் சொல்லுக்குப் பலம் என்றும் ஒரு பொருள் உண்டு. கீதையில் கண்ணன் ‘”பலம் பலவதாம் சாஹம்” என்று கூறி உள்ளான். ’பலவான்களின் பலம் நானே’ என்பது இதன் பொருளாகும். அப்படி உனக்குப் பலம் இருப்பது எம்மைக் காப்பதற்காகத்தானே என்று வேண்டுகிறார்கள்.
’கலி’ என்பதற்கு மிகுதி என்னும் பொருளுண்டாம். எல்லார்க்கும் மேலானவன் அன்றோ அவன்! உபநிஷத்துகளில் “தம் தேவதாநாம் பரமஞ்ச தேவதாம்” என்றிருப்பதை இங்கே நினைவூட்டுகிறார்கள். அதாவது எல்லாத் தேவதைகளுக்கும் மேலான தெய்வம் அவன் என்று சொல்கிறார்கள்
கப்பம் என்பது சக்ரவர்த்தி போன்று அதிகாரம் உள்ளவர்களுக்குச் சிற்றரசர்கள் செலுத்தும் திறைப் பொருளாகும். தேவர்கள் எல்லாரும் இராவணன் போன்றோர்க்குக் கப்பம் செலுத்திவந்தனர். அதை நீக்கிய கலியே என்று கொண்டாடுகிறார்கள்.
யசோதை கம்சனுக்குப் பயந்திருந்தாள். அவனுக்குக் கப்பம் கட்டவேண்டி இருந்தது. ‘கஞ்சன் கடியன் கற எட்டு நாளில் என் கை வலித்தாதுமில்லை’ என்று சொன்னதாகப் பெரிய திருமொழி கூறும்.
’கலி’ என்பதற்கு அரண் என்னும் பொருள் கொண்டால் பெருமான் சுதர்ஸன, பாஞ்சசன்ய, அனந்த ஆழ்வார்களை அரணாகக் கொண்டவன் என்ற பொருள் உண்டாகும்.
”பெருமானே! எங்களை நீ விரும்பக்கூடிய முப்பத்து மூவராக நினைப்பாய்; ஆண்களாக நினை; மருந்து தின்று சாவாதவராக நினை. உன்னையே ரக்ஷகனாக நினைப்போராக நினை; எங்களுக்கு நீ உணரும்படியும், நீ நோக்கும் படியும், நீ வார்த்தை சொல்லும்படியும் தொடக்கமானவற்றைக் காண்கையே வேண்டுவது என்பது ஆறாயிரப்படி. இதன் பொருளாவது ”நீ தேவர்களுக்கும் அவர்களைப் போன்ற அமரர்களுக்கும் மட்டும்தான் உதவி செய்வது என்று விரதம் ஏதேனும் கொண்டிருந்தால் எங்களையும் அவர்களைப் போல் நினத்து அருள் செய்ய வேண்டும் என்று அவர்கள் வேண்டுகிறார்கள்” என்பதாகும். அதற்காக நீ யோனியில் பிறக்க வேண்டா; அவதாரம் ஏதும் செய்ய வேண்டா; துயில் எழுவாயாக; அதுவே போதும் என்கிறார்கள். அது சரி. அவர்கள் இடக்கை வலக்கை அறியாத ஆய்ச்சியர்கள் ஆவார்களே? அவர்களுக்கு எப்படி முப்பத்து முக்கோடி தேவர்களைத் தெரியும் என்று ஓர் சந்தேகம் எழலாம்.
கண்ணனெம்பெருமான் அவதாரம் செய்தபோதே “தொட்டில் பேணியுனக்குப் பிரமன் விடுத்தான்” என்று சொன்ன படிக்கு பல தேவர்களும் வந்து தங்காளாலியன்ற கைங்கர்யங்களைச் செய்தனர். மேலும் அவ்வப்பொழுது அவனைக் கண்குளிரக் காண தேவர்கள் எல்லாம் மறைந்தும் மறையாமலும் வருவதுண்டு. மற்றும் அவன் கன்று காலி மேய்க்கும் போதும் குழலூதுவான் அன்றோ? அதைக் கேட்டு இன்பம் அடைய தேவர்கள் அவனை எப்பொழுதும் தொடர்ந்து கொண்டே இருப்பார்கள். இதை நாச்சியார் திருமொழி அருளிச் செய்கிறது
”புவியுள் நான் கண்டதோர் அற்புதம் கேளீர்
பூணிமேய்க்கும் இளம் கோவலர் கூட்டத்து
அவையுள் நாகத்தணையான் குழலூத
அமரலோகத்தளவும் சென்றிசைப்ப
அவியுணா மறந்து வானவரெல்லாம்
ஆயர்பாடி நிறையப் புகுந்து ஈண்டி
செவியுணாவின் சுவைகொண்டு மகிழ்ந்து
கோவிந்தனைத் தொடர்ந்து விடாதே”
அமரர்க்கதிபதியான தேவேந்திரன் வந்து கண்ணனுக்குக் கோவிந்த பட்டாபிஷேகம் செய்ததை ஆய்ச்சியர்கள் கண்டார்கள். ஆதலால் அவர்கள் முப்பத்து முக்கோடி அமரரை அறிந்திருப்பார்கள் எனலாம்.
அடுத்து அவனைச் செப்பமுடையாய்! என்கிறார்கள். செப்பம் என்பது ஆர்ஜவம் என்பதைக் குறிக்கும் மனம், வாக்கு, காயம் ஆகியவற்றால் ஏகரூபன் ஆவதே ஆர்ஜவம் ஆகும். அதாவது பாகவதர்களோடு பொருந்தும்போது அவர்களின் ருசிக்குத் தக்கபடி தான் தன்னை அமைத்துக் கொண்டு அவர்கள் செவ்விக் கேடே செவ்வியாகும் படி அருள் செய்தலாகும்.
”முன்சொன்னது அப்படியே இருக்கட்டும். இந்த ஸ்வபாவம் எவ்வளவு ஆச்சரியமானது. எவனொருவன் எம்மாதிரியான ஸ்வரூபத்தையும், குணத்தையும், உடையவனாய், உம்மிடம் பக்தி செய்கிறானோ, அவனோடு அம்மாதிரியான ஸ்வரூபத்தையும், குணங்களையும் உடையவனாயும் அவனுக்கு வசப்பட்ட எல்லா வ்யாபரங்களையும் உடையவனாகவும், அவனோடொத்த ஆசாரத்தை உடையவனாகவும் இங்கேயே நீ இருக்கிறாய்” என்று ஆளவந்தார் ஸ்ரீ வைகுண்டஸ்தவத்தில் அருளிச் செய்கிறார்.
மேலும்” உன் திருவடி நிழலிலே ஒடுங்கினவன் எவனாயிருந்தாலும் அவன் எந்த ஜாதியை உடையவனாயிருகிறானோ, எந்த ஆசாரத்தை உடையவனோ, எந்த குணங்களை உடையவனோ, அந்த ஜாதியையும், அந்த ஆசாரத்தையும், அந்த குணங்களை உடையவனாய், அவனிடமுள்ள வாத்ஸல்யத்தினால் அவனுடன் சேருகிறார் பகவான்” என்று ஸுந்தரபாஹூஸ்தவத்திலும் ஆழ்வானும் அனுபவித்துள்ளார்.
”நான் தேவனல்லன்; கந்தருவனல்லன்; யக்ஷனல்லன்; அசுரனுமல்லன், உங்களுக்கு உறவினனாகப் பிறந்துள்ளேன்.” என்று செப்பமான குணத்துடன் கூறிய கண்ணனிடம் ”அப்படிப்பட்ட நீ எம்மை வரச் சொல்லி விட்டு இப்போது பேசாமல் கிடக்கலாமா?” என்று கேட்கிறார்கள். செப்பம் என்பதை ரக்ஷை என்றும் பொருள் கொள்ளலாம். கண்ணன் சங்கு, சக்கர ஆயுதங்களையும், பல்லாண்டு பாடும் பக்தர்களையும் ரக்ஷையாகக் கொண்டுள்ளானாம்.
ஆனால் இந்த ஆர்ஜவ குணம் எதிரிகளிடத்தில் கிடையாது. அங்கே அவன் திறல்தான் தெரியும். எனவே அடுத்து ’திறலுடையாய்’ என்கிறார்கள். போர்க்களத்தில் ஆயுதம் எடுக்க மாட்டேன் என்றவன் பாண்டவர்க்காக ஆயுதம் எடுத்ததும், சூரியனைத் தன் சக்கரத்தால் மறைத்ததும் அவன் திறலைக் காட்டும். ”அபலைகளான எம்மிடம் நீ உன் ஆர்ஜவத்தைக்காட்டாமல் திறலைக் காட்டலாமா” என்கிறார்கள். அடுத்து உன் திறலை யாரியம் காட்ட வேண்டும் என்பதைக் கூறுமுகத்தான் “செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா” என்று போற்றுகிறார்கள்.
”எதிரிகளுக்கன்றோ நீ வெப்பம் கொடுக்க வேண்டும்? அவர்களுக்குத்தானே பயாக்னியை விளைவிக்க வேண்டும்? எமக்கு விரகாக்னியை உண்டாக்கலாமா?” என்று கேட்கிறார்கள். அவனுக்கு தனிப்பட்ட விரோதி என்று யாரும் கிடையாது. அவனின் பக்தர்களின் விரோதிகள் அவனுக்கும் விரோதிகள் ஆகிறார்கள். இரணியன், இராவணன், கம்சன் போன்றோர் அப்படித்தான் அவனுக்கு விரோதிகள் ஆனார்கள். வெப்பம் கொடுப்பது என்பது அவர்களுக்குப் பயத்தை விளைவிப்பது. விரோதிகளின் குற்றம் அழிப்பவன் அவன்; தனது பக்தர்கள் விரோதிகளிடம் பட்ட கஷ்டத்தை, அவ்விரோதிகள் படும்படி செய்பவன் அவன். அவனிடம்
“பாண்டவர் தம்முடைய பாஞ்சாலி மறுக்கமெல்லாம்
ஆண்டங்கு நூற்றுவர்தம் பெண்டிர் மேல் வத்த அப்பன்”
என்றும்
“சந்தமல் குழலாள் அலக்கண் நூற்றுவர்தம் பெண்டிரும் எய்தி
நூலிழப்ப”
என்றும்
ஆழ்வார்கள் அருளிச்செய்தது ஈண்டு எண்ணத்தக்கது.’விமலன்’ என்பது எக்குற்றமும் இல்லாத தூய்மையானவன் என்று குறிப்பதாகும். அவன் சிலரை மட்டும் அணைக்கிறான், சிலரை அழிக்கிறான். இது குற்றமில்லையா என்று அவன் பெருமை அறியாத சிலர் கேட்கக் கூடும். ஆனால் பக்தர்களின் விரோதிகளை அழிப்பதே அவன் புனிதன் தூய்மையானவன் என்பதைக்காட்டும் என்று ஞானிகள் கூறுவார்கள்.
அதனால்தான் “அங்கண் ஞாலமஞ்ச அங்கோர் ஆளரியாய் அவுணன் பொங்க ஆகம் வள்ளுகிரால் போழ்ந்த புனிதன்” என்று திருமங்கையாழ்வார் போற்றுகிறார்.
மீண்டும் கண்ணனிடம் ‘துயிலெழாய்’ என்று வேண்டுகிறார்கள். ”எமக்காக விரோதிகளை அழிக்க வேண்டாம். நீ எழுந்து வரும் அழகை நாங்கள் பார்த்தாலே போதும்.”என்று அவனை எழுப்புகிறார்கள்.
ஆனால் அவன் எழுந்திருக்கவில்லை. எனவே இப்பொழுது நப்பின்னைப் பிராட்டியை எழுப்புகிறார்கள். பிராட்டியின் திவ்யரூபத்தைச் சொல்லிப் புகழ்கிறார்கள். செப்புக்குடத்தில்தான் பொன்னை வைப்பர். அவனே பெரிய நிதியாவான். அவனை வைத்திருக்கும் செப்பு போன்றவள் நப்பின்னை.
அவளின் அழகு மார்புகள் செப்புக்கலசம் போன்று இருப்பதால் செப்பன்ன மென்முலை என்றார்கள். ஏன் இதைச் சொல்லி எழுப்புகிறார்களென்றால் அவன் அவளது மலை போன்ற மார்புகளைத் தஞ்சமாகக் கொண்டு கிடப்பானாம். பஞ்ச காலத்திலே மக்கள் மலையையும், கடலையையும் பற்றிக் கொண்டு வாழ்வதைப் போல அவனும் மலையையும் கடலையும் பற்றிக் கிடக்கிறான். திருமாலிருஞ்சோலையே, திருப்பாற் கடலே என்பார் ஆழ்வார்.
மேலும் பேயாழ்வார், ”மாகடல் நீருள்ளான், மலரால் தனத்துள்ளான்” என்று அவன் மலையையும், கடலையும் பற்றிக் கிடப்பதைப் பாடுவார். “சுடர்வான் கலன் பெய்ததோர் செப்பினைத் திருமங்கை மணாளனை” என்று ஆழ்வார் அருளியபடி, அவனே சிறந்த பொருள்களைத் தன்னுள் அடக்கி வைத்திருகும் செப்புப் போன்றவன். அவனையும் அடக்கி வைத்திருக்கும் செப்புப் போன்றவை அவளின் ஸ்தனங்கள். அவற்றை ஏன் மென்முலை என்று குறிப்பிடுகிறார்கள் என்றால் அவை அவன் பிரிவை சிறிதளவும் தங்க மாட்டாதனவாம்.
அவன் மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும் சிங்கம் ஆவான். அம்மலையில் அவனுண்ணுவது தேனும் கனியும் ஆகும். பிராட்டியின் செவ்வாயும் முறுவலுமே அவன் உண்ணும் கனிகளாகும். ”தொண்டையஞ் செங்கனிவாய் நுகர்ந்தான்” என்றும் “தளவேல் முறுவல் பின்னைக்காய்” என்றும் ஆழ்வார்கள் அருளிச்செய்வார்கள். அடுத்து மலைமேலிருந்து பார்த்தால் உண்டோ இல்லையோ என எண்ணும்படியான சிறு மருங்குல் என்று இடையழகைக் கூறுகிறார்கள். இப்படி எல்லாம் பிராட்டியைப் போற்றிப் பாடுகிறார்கள்.
மார்பு, வாய், மருங்குல் இவை மூன்றும் போக உறுப்புகள். மேலும் இவை கண்ணனை வசீகரித்த உறுப்புகள். அவற்றைச் சொல்லிப் பிராட்டியைப் போற்றி எழுப்புகிறார்கள். பிராட்டியின் வடிவழகைச் சொல்லி அவளின் பெருமைகளை போற்றுகிறார்கள் பிராட்டிக்கு ஏன் வடிவழகு எனில் ஸ்ரீ வசன பூஷணம் இதற்கு பதில் சொல்கிறது. பிராட்டி சேதரனையும் திருத்துபவள்; எம்பெருமானையும் திருத்தக் கூடியவள்; உபதேசத்தினாலே மீளாத போது சேதரனை அருளாலே திருத்துவாள். எம்பெருமானை வடிவழகாலே திருத்துவாள். ஆதலால் இங்கு வடிவழகு பேசப்படுகிறது.
இப்போது ’நப்பின்னை நங்காய்’ என்கிறார்கள். நங்காய் என்பது பூரண குணங்களும் பொருந்தியவளே என்று பொருள் தரும்.”நீ பூரணையாய் இருக்கிறாயே! எங்களையும் பூரணையாக ஆக்க வேண்டாமா?” என்று அவர்கள் வேண்டுவதாகப் பொருள் கொள்ளலாம். பிராட்டி பூரணையாக இருப்பதால்தான் எம்பெருமா நாராயணனும் தேவனாயிருக்கும் தன்மையை அடைகிறான்.
“அழகு அவளாலே! குணங்கள் அவளாலே! மேன்மை அவளாலே! நீர்மை அவளாலே! நிரூபித்தால் அடங்கலும் அவளாலேயாயிருக்கும்” என்பது ஆறாயிரப்படியாகும். ஸ்ரீ வசன பூஷணம் இங்கு மகாலட்சுமியைச் சொல்கிறது. எனவேதான் நப்பின்னையே என்றவர்கள் உடனே ‘திருவே’ என்றழைக்கிறார்கள்.
“நீ மகாலட்சுமியைப் போன்றவள்; அவன் திருவாகிய செல்வமாவான்; மகாலட்சுமியாகிய நீயோ திருவுக்கும் திருவாவாய்; அவளைப் போன்றிருப்பவள் அவளைப் போன்று நடக்க வேண்டாமோ? அவள் எப்பொழுதும் எம்மைப் போன்ற பாகவதர்க்குத் துயர் துடைக்க பத்து மாதம் கூட உறங்காது இருப்பாள். ஆனால் நீயோ நாங்கள் இவ்வளவு எழுப்பியும் கண் விழிக்காதிருப்பது ஏனோ? அவன் வேண்டுமானால் பெண்களின் வருத்தம் அறிய மாட்டான். ஆனால் நீ அப்படி இருக்கலாமா? விழித்து எழுந்து எம் குறை போக்குவாயாக” என்று வேண்டினார்கள்.
நப்பின்னப் பிராட்டி கண் விழித்தாள். “சரி நான் உறங்கவில்லை; உங்களுக்கு என்ன வேண்டும்” என்று கேட்கிறாள். உடனே அவர்கள் ‘உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை இப்போதே எம்மை நீராட்டேலோ” என்று வேண்டுகிறார்கள் அதாவது உக்கம், தட்டொளி எனும் இரண்டையும் கேட்கிறார்கள். உக்கம் என்பதற்கு ஆலவட்டம் அதாவது விசிறி என்று பொருள்; தட்டொளி என்பதற்கு கண்ணாடி அல்லது பறை என்றும் பொருள் கொள்ளலாம்.
இவை இரண்டும் நோன்பிற்கான உபகரணங்கள். இவற்றைச் சொல்வதனால் மற்ற உபகரணங்களையும் சொன்னதாகக் கொள்ளலாம். அவள் ”சரி, இவை போதுமா” என்று கேட்கிறாள். அவர்கள் உடனே “இல்லை, இல்லை உன் மணாளனை எமக்குத் தா என்கிறார்கள். ’எம்மை’ என்று பன்மையிலே பேசுகிறார்கள். ’பேய்ப்பெண்ணே’ என்றும், ’பிள்ளாய்’ என்றும், ’அநந்தலுடையாய்’ என்றும் ஒருமையிலே அழைத்துக் கொண்டவர்கள் இப்போது ’நாராயணனே நமக்கே பறை தருவான்’ என்றபடி எல்லார்க்கும் உபாயம் ஒன்றானாய்ப் போலே உபேயமும் ஒன்றானபடியாய் இருப்பதால் இப்படி அழைக்கிறார்கள்.
”அவன் உன் மணாளன்; அவன் உன் சொற்படி நடப்பவன்; உன்னுடனேயே கிடப்பவன்; உன் மனத்தை ஆட்சி செய்பவன்; அவன் வந்தால் நாங்களும் நீராடுவோம்; எம்மை அவன் வந்து நீராட்ட வழி செய்வாயாக. தன் தந்தை தேடித் தந்தவள் சீதை என்று இராமன் மகிழ்வதைப் போல, தன் தந்தை தேடித் தந்தவன் இராமன் என்று சீதை மகிழ்வதைப் போல் நப்பின்னை தேடித் தந்தவன் கண்ணன்” என்று நாங்களும் மகிழ்வோம். ”நாளை வாருங்கள்” என்று சொல்லி விடுவாளோ என்று பயந்து ‘இப்போதே எம்மை நீராட்டு’ என்று வேண்டுகிறார்கள்.
கடந்த பாசுரம் சிருங்கார ரசம் பொருந்தியது என்றால் இப்பாசுரத்தில் கண்ணனின் மற்றும் நப்பின்னையின் குணஸ்வரூபங்கள் பேசப்படுகின்றன.
கலியே! செப்பமுடையாய்! திறலுடையாய்! விமலா! என்று நான்கு பெருமைகள் அவனுக்குக் கூறப்பட்டன என்றால் பிராட்டிக்கு செப்பன்ன மென்முலை! செவ்வாய்! சிறு மருங்குல் ! திரு! என்று நான்கு கூறப்படுகின்றன.
ஆக இப்பாசுரம் கண்ணனெம்பிரானையும், நப்பின்னைப் பிராட்டியையும் எழுப்பி அவர்களின் அருளை ஆயர் சிறுமிகள் வேண்டி நிற்பதாக ஆண்டாள் நாச்சியார் அருளிச் செய்திருக்கிறார் எனலாம்.
==============================================================

Series Navigationஹைதராபாத் பயணக்குறிப்புகள்: சுப்ரபாரதிமணியன்வைரமணிக் கதைகள் -6 ஈரம்
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *