நாடோடிகளின் கவிதைகள்

author
0 minutes, 1 second Read
This entry is part 2 of 13 in the series 4 பெப்ருவரி 2018

வித்யாசாகர்

1, அம்மா எனும் மனசு..

வாட்சபில் அழைக்கிறேன்,
என்னப்பா அழைத்தாய என்கிறாள் அம்மா
இல்லைமா, இதோ உனது பெயரனைப் பாரேன்
ஒரே அமர்க்களம் தான் செய்கிறான்
அதனால் பார்ப்பாயே என்றழைத்தேன் என்றேன்,
அம்மா நினைத்துக் கொண்டிருப்பாள்
அப்போ என்னிடம் பேச அழைக்கவில்லையா என்று,
எனக்கும் உறுத்தியது, உன்னிடம் பேசத்தானேம்மா
அழைதேனென்று சொல்லியிருக்கலாமே..
————————————————————

2, விடுமுறைக்கு வந்த மகனும் அப்பாவும்..

கோடை விடுமுறையில் ஊருக்குப் போகிறோம்
பிள்ளைகள் வந்ததும் பெட்டியைப் பிரிக்கிறோம்
அம்மா அண்ணி தங்கை தம்பி எல்லோரும்
சூழ்ந்து நிற்கிறார்கள்
இந்தா இது அண்ணனுக்கு என்றேன்
அம்மா சிரித்தாள்
இந்தா இது தங்கை வீட்டிற்கு என்றேன்
அம்மா சிரித்தாள்
இந்தா இது அவளுக்கு என ஒரு ஜப்பான் புடவை தந்தேன்
அம்மா அதற்கும் சிரித்தாள்
அம்மாவிற்கென என்ன கொடுக்க
ஒரு இன்னொரு புடவையை எடுத்து நீட்டினேன்
அம்மாவிற்கு முகமெல்லாம் வெளிச்சம்
எல்லாம் முடிந்து வெளியே எழுந்துப் போகையில்
அப்பா வெளியே சாய்விருக்கையில் அமர்ந்திருந்தார்
அப்பாவிடம் அருகில் அமர்ந்து
நலமாப்பா என்றேன்
நல்லாருக்கேன்ப்பா என்றார்
சரக்கென்று ஏறி மாடிப்படியில் நடக்கையில்
உள்ளே சுருக்கென்றது, அப்பா நினைத்திருப்பாரோ
அவருக்கேதும் வாங்காதது குறித்து???

அப்பாவிற்கு எண்ணம்
மகன் மாடிக்குதானே போயிருக்கான்
எனக்கென்று ஏதோ கொண்டுவராமலா வந்திருப்பான்(?)!!
————————————————————

3, பிந்து காதலும் கத்தார் வேலையும்..

ஊருக்குச் சென்றதும்
அடுத்த நாளே அவளை அழைத்து
பேசிட நினைத்திருந்தேன்,

எட்டி எட்டி
பக்கத்து வீட்டையும்
சன்னலையுமே பார்கிறேன் ஒரு சத்தமுமில்லை
அக்காவை அழைத்து
என்னக்கா அவர்கள் யாரும் இல்லையா
என்றேன்
யார் சேட்டா வீடா என்று
சந்தேகமாக இழுத்தாள் அக்கா
ஆம் ஆம் அந்த பிந்து..

அவளுக்கு கல்யாணம் ஆயி
ஆறு மாதம் ஆச்சு

போ போயி வேலையிருந்தால் பாரு
என்றாள்

உயிரை இழுத்து யாரோ
தெருவில் வீசியது போலிருந்தது..

நான் எனது கடவுச்சீட்டை எடுத்து
தலையில் அடித்துக் கொண்டு அழுதேன்

அம்மா ஏன்டி அவனிடம் சொன்னாய்
என்கிறாள்
அக்கா அவன் தான் மா.. என்று இழுக்கிறாள்

அங்கிருந்த ஒரு குளிரூட்டி மீது
அந்த பிந்துவின் கண்ணீர்ப் பட்ட
திருமண அழைப்பிதழ் பழசாகி
காற்றில் அசைந்து அசைந்து
சற்றேறக்குறைய கீழே விழயிருந்தது..
————————————————————

4, அப்பா யெனும் செல்லாக்காசு..

திருமணம் முடிந்த கையோடு விட்டுச்சென்றவன்
பிரசவத்தின்போது கூட
அவளோடு இல்லை
குழந்தை பிறந்து வளர்ந்தே போயிருந்தாள்

மூன்று வருடங் கழித்து
ஊருக்கு வந்திருக்கிறேன்

மகள் சற்று விலகி விலகி
தூரமாகவே போயிருந்தாள்,

எனைக் கண்டாலே
வேறு யாரோவென பயம்போலும், அவளுக்கு

நானும் வந்ததிலிருந்துப்
பார்க்கிறேன் அவள் வாயில் அப்பா என்ற
சொல்லே வரவில்லை

எனக்கு வருத்தமாக இருந்தது
மகள் பிறக்கையில் உடனிருக்காத வலி
சம்பாதித்த பணத்தை விட
அதற்குமுன் இருந்த ஏழ்மையை விட
இப்போது முள்ளாக தைத்தது, மிகக் கொடிதாக வலித்தது..

மகளுக்கு என்னிடம் பாசமே இல்லையே
என்று வருத்தம் வேறு..

மனைவி உள்ளே வந்தாள்
தனியே அழைத்து
என்னமா பாப்பா என் கிட்ட வரவேயில்லையே
என்றேன்,

அதலாம் சரியாயிடுங்க
இன்று தானே வந்திருக்கீங்க, பேசி
பழகவேணாமா…” என்று இழுத்து நிறுத்தினாள்
அதில் ஏன் போனாய் எனும் ஒரு கேள்வியும்
தொக்கி நின்றது..

நான் சற்று நேரம் கழித்து
பெட்டியை பிரித்தேன்
எனது மகளுக்கு வாங்கிவந்திருந்த
பொம்மைகளை எல்லாம் வாரிக் கொடுத்து
வாம்மா வா என்றேன்

குழந்தை ஓடிவந்து
ஒவ்வொன்றாய் எடுத்து ஆசையாசையாய்ப்
பார்த்துக்கொண்டிருந்தது,

மேலே தரையிறங்கும் விமானமொன்று
சொய்ய்ய்யென வீட்டு கூரைமீது பறக்க
அது கீழிறங்கும் சப்தம் சுர்ரென..
வீட்டுக்குள் கேட்டது

கேட்டது தான் தாமதம்
உடனே மகள் விருட்டென அலறி
ஓ…… அப்பா
அப்பா..
அப்பா வென வெளியில் எழுந்தோடி
வானத்தைக் காட்டி
விமானத்தை காட்டி.., கைகொட்டி சிரித்தாள்

அதோ அதுதான் அப்பா
அப்பா
எங்கப்பா வரும் விமானம் என்றாள்,

எனக்கு கண்ணீர் உடைந்து
அந்த வெளிநாட்டு பொம்மைகளின் மீது சொட்டியது..
————————————————————

5, துபாய்.. குறுக்குச்சந்து.. விவேகனந்தர் சாலை..

துபாயிலிருந்து நான்
ஆறேழு வருடங்கள் கழித்து
ஊருக்கு வந்திருக்கிறேன்

பசேலென்றிருந்த ஊரே
பல கட்டிடமும்
பெரிய வீடுகளாகவும் மொத்தத்தில் மாறியிருந்தது.

தெருக்குழாயும்
ஊர்க்கோடியில் நாங்கள் அமர்ந்துப் பேசும்
கிணற்றடியுமெல்லாம் அகற்றப்பட்டு
நெடுக வீடுகளே இருந்தது..

அப்போதெல்லாம்
இதே தெரு அவ்வளவு வடிவா
ஊரே சொந்தமும்பந்தமுமா இருக்கும்,
நாங்களெல்லாம் ஆங்காங்கே
தெருவிலேயே இருந்து ஆளாளுக்கு
கூட்டம் கூட்டமாக விளையாடுவோம்

தெருவில் படிக்கப் போகும்
பிள்ளைகள் கூட இன்று மொத்தமாக ஏறியொரு
கூண்டு வண்டியில் போகிறார்கள்..

நிறைய மாறி இருந்தது
வீட்டிற்கு வீடு புகுந்து ஓடிய
வேலிகளும் இல்லை,
அக்கம்பக்கம் வாடகைக்கு தங்கியிருந்த
கரோலின் அக்காவும் இல்லை
காலித் மாமாவும் இல்லை
யார் யாரோ புதிதாக வந்திருந்தார்கள்
மாடியும் ஓடுமாக நிறைய வீடுகள் மாறியிருந்தது

சைக்கிள் நின்ற தெருக்களில்
காரும் மோட்டார்சைக்கிள்களும் நின்றிருக்க

நான்
நாங்கள் அன்று ஒடிவிளையாடிக் கொண்டிருந்த
தெருவையும், ஏறி விளையாடிய புங்கை மரங்களையும்
பூவரச மரங்களையும் எட்டி எட்டி தேடினேன்

அம்மா உள்ளிருந்து குரல் தந்தாள்
எடேய்…. எங்கயும் இவண் கூப்டான்
அவன் கூப்டான்னு போயிராத என்றாள்

எனக்கு கோபம்; அது ஏதோ பழக்கத்தில்
சொல்லுது போல,

இங்கே எனக்கான ஊரே இல்லை
எனது தெருக்களை தொலைத்திருந்தேன்
சொந்தங்களை தொலைத்திருந்தேன்
எனது நண்பர்கள் யாராவது ஓடிவந்து
டேய் சொட்டைன்னு கூப்பிடுவார்களா என்றிருந்தது எனக்கு!!
————————————————————
வித்யாசாகர்

Series Navigationகாதற்காலம்- (பிரணயகாலம்)‘தமிழை ஆண்டாள்’ கட்டுரையில் வைரமுத்து செய்த 18 சறுக்கல்கள்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *