நினைவுகளின் சுவட்டில் – (70)

This entry is part 8 of 46 in the series 19 ஜூன் 2011

சீனுவாசன் மிகவும் சுவாரஸ்யமான மனிதர். நண்பர். சுவாரஸ்யமான என்றால், அவர் பேச்சில், பார்வையில், ரசனையில், சில பிரசினைகளை அணுகும் முறையில் அவர் வித்தியாசமானவர். சாதாரணமாக அவர் செய்வதையும், சிந்திப்பதையும், பேசுவதையும் இன்னொருவர் பேசக்கூடும் என்று நாம் எதிர்பார்க்கவியலாது. முன்னரே ஒன்றிரண்டு சம்பவங்களைச் சொல்லியிருக்கிறேன். இதன் காரணமாக அவருடன் பழகுவதில் எங்களுக்கு எவ்வித சிரமும் இருந்ததில்லை. சாதாரணமாக எதிர்பார்க்கக்கூடியதை அவர் செய்வதில்லையாதலால் எங்களுக்கு அதனால் லாபமே தவிர கஷ்டங்கள் எதுவும் நிகழ்ந்ததில்லை.

 

முதலில்  எப்படி எங்கள் அறைக்கு சீனுவாசன்  ஓர் அரிய நண்பராக வந்து சேர்ந்தார், யார் அறிமுகத்துடன் என்று எவ்வளவு யோசித்தாலும் நினைவுக்கு வருவதில்லை. அதிலும் கூட அவர் வித்தியாசமானவராகத் தான் தன்னைக் காட்டிக்கொள்கிறாரோ என்னவோ.

 

(அறைக்கு என்றால் ஏதோ ஒரு ஹாஸ்டலில், ஹோட்டலில் தங்கி இருக்கும் அறை என்றோ, இன்னொருவர் வீட்டில் குடி இருக்கும் அறை என்றோ தான் எண்ணத் தோன்றும். எனக்கு அரசு கொடுத்த முழு வீட்டையே தான் அறை என்று சொல்கிறேன். அப்படித்தான் நாங்கள் ஒவ்வொருவரும் சொல்லிக்கொண்டோம். இந்த விந்தையான சொல் எப்படி வந்தது என்று யோசித்தேன் தெரியவில்ல)

 

ஒரு முறை வேலுவுக்கு காலில் ஏதோ உபாதை. தோல் சம்பந்தப்பட்டதா, இல்லை இன்னும் ஆழமானதா, என்னவென்று இப்போது நினைவில் இல்லை. ஆலிவ் ஆயில் போட்டு நன்றாகத் தேய்த்துக்கொள் கொஞ்ச நாளைக்கு என்று யாரோ சொல்லியிருக்கிறார்கள். ஏதோ அவருக்குத் தெரிந்த நாட்டு வைத்தியர். அவருக்கு ஹாஸ்பிடலுக்குப் போக விருப்பமில்லை. போன வருடம் ஹிராகுட்டில் இருந்த ஹாஸ்பிடலில் ஒரு சர்தார்ஜி டாக்டராக இருந்தார். அவர் பெயரே ஹிராகுட்டில் மிகவும் பிரசித்தமாகியிருந்தது. காரணம் ஒரு அறுவை சிகிச்சையின் போது கத்தரிக்கோலையும் உள்ளே வைத்துத் தைத்துவிட்டார் என்று ஹிராகுட்டே சொல்லிக்கொண்டிருந்தது. அது தான் காரணமோ இல்லை அவருக்கும் அவர் குடும்பத்துக்கும் நாட்டு வைத்தியத்தில் தான் நம்பிக்கையோ என்னவோ?. ஆலிவ் ஆயிலுக்கு நான் எங்கே போவேன். அது எங்கே கிடைக்கும்.? என்று புலம்பிக்கொண்டே இருந்தார். எங்களுக்கோ ஆலிவ் ஆயில் என்கிற ஒரு எண்ணையை அப்போது தான் கேள்விப்படுகிறோம். சீனுவாசன் வந்த புதிதில் அவர் பேச்சும் கிண்டலும் எங்களில் சிலரை சிராய்த்திருந்தது. அதில் வேலு முக்கியமானவர். ஒரு சம்பவம் நினைவில் இருக்கிறது. ஏதோ வம்புப் பேச்சில் சீனுவாசன் இளவரசி மார்கெரெட் பற்றி ஏதோ தமாஷாகச் சொல்லிவிட்டார். அது வேலுவுக்குப் பிடிக்கவில்லை. கோபமாக சீனுவாசனின் குணத்தைப் பற்றி பாதகமாக ஏதோ சொல்லப் போக, சீனுவாசன் சிரித்துக்கொண்டே, “மிஸ்டர் வேலு, உங்களுக்குத் தான் இந்த உபாதையெல்லாம். நீங்கள் கல்யாணமானவர். ஊரிலிருக்கும் உங்கள் மனைவியைத் தவிர வேறு யாரைப் பற்றி நினைச்சுக்கூட பாக்கக் கூடாது. பாவம். ஆனால் நான் பிரம்மச்சாரி. கல்யாணமாகாத யாரைப் பற்றியும் நான் நினைத்துப் பார்க்கலாம். கனவு காணலாம். பேசலாம். அது பிரிட்டீஷ் இளவரசியானாலும் சரிதான்.  மார்கரெட்டுக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை தெரியுமோ?” என்று ஒரு நீள விளக்கம் தந்தார்.  அப்போது அங்கு வெடித்த சிரிப்பு வேலுவுக்கு உவப்பாக இருக்கவில்லை. அது போல இன்னும் சில சில்லரை விஷயங்க அவர் மனதுக்குள்  புகைந்துகொண்டே இருந்திருக்கிறது. . அவருடைய போஷகரும் ஊர் நண்பருமான தேவசகாயம், ‘சே வேலு என்னங்க இது. இதெல்லாம் தமாஷ் தானே. பெருசா எடுத்துக்காதீங்க” என்று ஒவ்வொரு சமயம் சமாதானம் சொல்வார்.

 

சீனுவாசன் வந்த நான்கு ஐந்து நாட்களுக்குள் ஒரு நாள் மாலை..திரும்பும்போது  அந்தக் காலத்தில் புழங்கிய ஒருகாலன் பெட்ரோல் டின் ஒன்றையும் கையில் எடுத்து வந்தார். வந்தவர் “வேலு இந்தாங்க இது உங்களுக்குத் தான்  .”உங்க கவலை எல்லாம் இன்றோடு தீர்ந்தது” என்றார். “என்னய்யா இது? என்று நாங்கள் கேட்க, ”ஆலிவ் ஆயில். இதானே வேலு கேட்டார்?” இத்தனை நாளா கிடைக்காமல் தவித்துக்கொண்டிருந்தாரே, என்றார் எங்களுக்கெல்லாம் வாய் பிளக்க வைக்கும் ஆச்சரியம். “இவ்வளவை வச்சிண்டு என்னய்யா பண்றது? எங்கே கிடைச்சது இது? என்று எங்கள் கேள்வி சத்தமாகத் தான் வந்தது. “அதே தான். கிடைக்கறது கஷ்டமா இருக்குல்லியா? அப்பறம் தேவையான எங்கே போறது?. கிடைக்கற போது கொஞ்சம் நிறையவே வாங்கி வச்சுக்கணும். இனிமே எங்கேயும் அலைய வேண்டாம் இல்லியா?” என்றார்

 

அவ்வப்போது வாரத்துக்கு ஒரு முறையோ இரண்டு தடவையோ சம்பல்பூர் போவோம். சினிமா பாக்க. சீனுவாசன் எங்கள் கூட்டாளியாவதற்கு முன்னால் ஆளுக்கொரு சைக்கிள் எடுத்துக்கொண்டு  போவோம். ஒன்பது பத்து மைல் தூரம். இரண்டாவது ஷோ பார்த்துவிட்டு திரும்பும்போது, இரவு மணி 12 க்கு மேலே ஆகிவிடும். புர்லா திரும்பும்போது மணி இரண்டாகிவிடும். போவதற்குத் தான் பஸ் கிடைக்குமே ஒழிய திரும்புவதற்கு கிடைக்காது. ஆனால் இதிலும்  ஒரு பிரசினை. ஐந்திலிருந்து எட்டு பேர் போவோம். எல்லாருக்கும் சைக்கிள் கிடைக்காது. ஆனால் சீனுவாசன் வந்ததிலிருந்து அவர் வேலையை விட்டு திருக்கருகாவூருக்குப் போகும் வரை அவர் வேலை பார்த்த கண்ட்ராக்டரின் ஜீப் ஒன்றை எடுத்து வந்துவிடுவார். அவர் போன பிறகும், ஹிராகுட்டில் இருந்த போதும் நான் சம்பல்பூரிலேயே எங்காவது பொது இடத்தில் படுத்துத் தூங்கிவிட்டு மறுநாள் காலை எழுந்து நடந்தே வந்துவிடுவேன். இது நேர்வது எனக்குப் பிடித்த நான் பார்த்தே ஆகவேண்டும் என்று  நினைக்கும் படங்களாகவோ, அல்லது வேறு யாரும் துணைக்குக் கிடைக்காத காலங்களிலோ தான். இந்த மாதிரி ஜீப்பில் ஏழெட்டுப் பேராக சினிமா பார்க்கப் போவது என்பது முன்னால் சிப்ளிமாவிலிருந்து ஒரு பெரியவர் என் அறையில் தங்க வரும் நாட்களில் நிகழும். அப்போது சினிமா செலவும் அங்கு ஏதாவது சிற்றுண்டி டீ செலவும் அவரதாக ஆகிவிடும்.

 

இதெல்லாம் ஒன்றும் பெரிய காரியமில்லை. சீனுவாசனை நான் சொன்ன வித்தியாசமான மனிதராக, நண்பராகக் காட்டாது. சீனுவாசன் நல்ல படிப்பாளி. நானும் நிறைய படித்துக்கொண்டு இருப்பதைப் பார்த்த மனிதனுக்கு இவன் நம்ம ஆளு என்று தோன்றியிருக்க வேண்டும். என்னிடம் அவர் மிக நெருக்கம் கொண்டிருந்ததை நானும் சரி மற்றவர்களும் உணர்ந்திருந்தோம்.

 

இந்த சமயத்தில் பாதி என்பவருடன் எங்களுக்குப் பரிச்சயம் ஏற்பட்டது. பாதியின் மனைவி சம்பல்பூரில் ஏதோ பள்ளியில் ஆசிரியையாக இருந்தார். பாதி சம்பல்பூரிலிருந்து புத்தகங்களும், பத்திரிகைகளும் எடுத்து வருவார். இரண்டு பைகளில் புத்தகங்கள் நிரம்பி சைக்கில் ஹாண்டில் பாரில் தொங்கும். சைக்கிளில் தான் அவர் சுற்றிக்கொண்டிருப்பார். வாரம் அல்லது பத்து நாட்களுக்கு ஒரு முறை வருவார். அவர் எனக்கு பல புதிய புத்தகங்களையும் ஆசிரியர்களையும் அறிமுகம் செய்து வைத்தார். வில் ட்யூரண்டின் (Will Durant) Story of Philosophy பல பாகங்களில் Speculative Philosophers, Political Philosophers, Social Philosophers, Philosophers of Science என்று வெளிவந்திருந்தது. Will Durant-ஐ எனக்கு அறிமுகப் படுத்தியது மிருணால் காந்தி சக்கரவர்த்தி என்னும் என் ஆபீஸ் நண்பன். வில் டூரண்ட் உலக வரலாற்றையும் பல பாகங்களில் மிக விஸ்தாரமாகவும் புதிய பார்வையிலும் எழுதியிருந்தார். அவரது தத்துவ ஞானிகளைப் பற்றிய புத்தகங்களைப் படித்த பிறகு தான், தில்லி வந்த பிறகு என் அலுவலக லைப்ரரியில் அப்போது அங்கிருந்த The Oriental Heritage என்ற புத்தகத்தைப் படிக்க வாய்ப்பு கிடைத்தது. கந்த தலையணை மொத்த புத்தகத்தில் இந்தியாவைப் பற்றி எழுதும் போது சர் சி வி. ராமனுக்கும் ரவீந்திர நாத் டாகுருக்கு தனித் தனி அத்தியாயங்கள் விரிவாக எழுதியிருந்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர்களுக்கு இருந்த சாம்ராஜ்ய ஸ்தாபக கனவுகள் அதில் பெற்ற  வெற்றி தோல்விகளையும், உலகத்திற்கே வழிகாட்டிய தத்துவ வளத்தையும் ஞானிகளையும் பற்றி ஒரு தடித்த வால்யூம். ஆனால் அதை வீட்டுக்கு எடுத்துப் போக வழியில்லை. வேடிக்கையாக இருக்கும். Piccaso’s Piccaso என்று ஒரு தடித்த புத்தகம். அதாவது பிக்காஸோ ஒரு சித்திரம் வரைந்து முடிப்பதற்குள்ளாகவே அதன் விற்றுவிடுகிற நிலையில் தனக்கு மிகவும் பிடித்த, விற்க விரும்பாது தன்னிடமே வைத்துக்கொள்ள ஆசைப்பட்டு சேர்த்து வைத்துக்கொண்ட சிற்பங்களையும், சித்திரங்களையும் அச்சிட்ட புத்தகம் எங்கள் அலுவலக லைப்ரரியில் கிடைத்தது. ஆச்சரியப்பட வைக்கும் விஷயங்கள் தான். பின்னர் தான் தெரிந்தது லைப்ரரிக்கு யார் வேண்டுமானாலும் புத்தகங்களை சிபாரிசு செய்யலாம். அதை டைரக்டர் ஏற்றுக்கொண்டால் அந்த புத்தகம் வாங்கப்படும் என்று. எனக்கு William Shirer -ன் Rise and Fall of Third Reich படிக்க வேண்டியிருந்தது. என்னால் வாங்க முடியாது. அதை வாங்க வேண்டுமென்று நான் சிபாரிசு செய்ய, அது என் அதிர்ஷ்டம் அபூர்வமாக டைரக்டரின் ஒப்புதலைப் பெறவே வாங்கப்பட்டது. எனக்கும் அது படிக்கக் கிடைத்தது.

 

ஏதோ சொல்ல வந்து எங்கேயோ போய்விட்டேன். எனக்கு இந்த விஸ்தாரமான உலகை அறியச் செய்தவர்கள் அனேகர். அவர்களில் ஹிராகுட்டில் முக்கியமானவர்கள் சீனுவாசனும் பாதியும் தான். நிறையப் படித்த மனிதர். ஆனால் பளிச்சென்று இருக்கும் வெள்ளை பஞ்ச கச்சமும் வெள்ளை சட்டையுமாக சைக்கிளில் புஸ்தகங்களை சுமந்து கொண்டு வீடு வீடாகச் சென்று விற்றுக் கொண்டிருந்தார். அதில் என்ன கிடைத்து விடும் என்று யோசித்தோம். ஆனால் அவரை அது பற்றிக் கேட்கவில்லை. அவர் எங்களுக்கு மிக மரியாதைக் குரியவர்.

 

மிஸ்டர் ஹாஃப் வந்தாரா? எப்போ வருவார்? என்று தான் சீனுவாசன் விசாரிப்பார். பாதியின் வருகையை எதிர்நோக்குபவர்கள் நானும் சீனுவாசனும் தான். அவரிடமிருந்து தான் சாதாரணமாக கடைகளில் கிடைக்காத, நாங்கள் சந்தா கட்டியும் பெற முடியாத பத்திரிகைகளும் கொணர்ந்து கொடுப்பார். Russian Literature, Hungarian Quarterly தவிர மிக முக்கியமாக Hungarian Quarterly யும் Encounter என்ற பத்திரிகையும் இவற்றில் எல்லாம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது Hungarian Quarterly –ம் Encounter -ம் தான். Encounter பத்திரிகை, அந்நாளில் பிரபலமாக இருந்த  Stephen Spender என்னும் ஆங்கில கவிஞர் நடத்தி வந்தார். ஒரு பிரதி ஒரு ரூபாய் தான். இந்தியாவுக்கான விசேஷ சலுகையில் Henrik Wilhem Van Loon என்று நினைவு. அவர் உலக சரித்திரத்தை மிக வேடிக்கையாக மிக சரளமாகச் சொல்லிச் செல்வார். அவரை எனக்கு அறிமுகப்படுத்தியது பாதி தான். H.G.Wells ஐயும் சேர்த்து.

 

 

 

 

 

Series Navigationஅப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது : திரு.எஸ்.ராமகிருஷ்ணன்எதிர்மறை விளைவுகள் – கடிதப்போக்குவரத்து
author

வெங்கட் சாமிநாதன்

Similar Posts

Comments

  1. Avatar
    charusthri says:

    Srinivasan character migachirandha padhivu .It is proved in this week also.When Srinivasan mentioned mr .PADHI,Mr HALF.i burssecurity t out laughing.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *