நினைவுகளின் சுவட்டில் – (73)

This entry is part 40 of 47 in the series 31 ஜூலை 2011

சோப்ராவின் தங்கையுடன் பேசிக்கொண்டிருக்கலாம் கொஞ்ச நேரம் என்ற நினைப்பில் நான் சீக்கிரமே அவன் வீட்டுக்குக் கிளம்பினேன். அண்ணனிடம் அவ்வளவு பிரியம் அவளுக்கு. அவன் இல்லாது இருக்க முடியவில்லை அந்த 10 – 11 வயது தங்கைக்கு. திருட்டுத் தனமாக கொஞ்சம் பணம் சேர்த்துக் கொண்டு கிளம்பிவிட்டால், ரோஹ்தக்கிலிருந்து. இது என்ன தில்லியிலிருந்து காஜியாபாத் போகிற மாதிரியா இல்லை க்ரோம்பெட்டிலிருந்து மாம்பலம் போகிற சமாசாரமா? இல்லை நான் அவள் வயதில் வீட்டிலிருந்து ஓடி நிலக்கோட்டை பார்க் கட்டிட தாழ்வாரத்தில் படுத்துத் தூங்கிய சமாசாரமா? ரோஹ்தக்கிலிருந்து பஸ்ஸில் ரயிலில் தில்லி வந்துவிடலாம் தான். ஆனால் தில்லியிலிருந்து ஒரிஸ்ஸாவிலிருக்கும் புர்லா காம்ப்புக்கு வருவது வயதானவர்களுக்கே சிரமம் தரும் காரியம். வழி சிக்கலானது. அங்கங்கே கேட்டு விசாரித்துக்கொண்டு வரவேண்டும் இது அந்நாட்களின் (1950) சமாசாரம். தில்லியில் அவள் இறங்குவது பழைய தில்லி ரயில் நிலையமாக இருக்கும். அங்கிருந்து புது தில்லி நிலையம் வந்து ரயில் ஏறவேண்டும். தில்லியிலிருந்து பீனா வில் இறங்க வேண்டும். பின் பீனாவிலிருந்து கட்னி வரை பயணம். பின் மறுபடியும் இறங்கி கட்னியிலிருந்து ஜெர்சகுடா. வண்டி ஜெர்ஸகுடா வரை நேரே போகுமா இல்லை பிலாஸ்பூரில் இறங்கி கல்கத்தா மெயில் பிடித்து ஜெர்ஸகுடா போகணுமா என்பது இப்போது நினைவில் இல்லை. ஜெர்சகுடாவில் இறங்கி ஒரு பாஸஞ்சர் வண்டி சம்பல்பூருக்குப் போக. சம்பல்பூர் ரோட் (சம்பல்பூர் மெயின் அல்ல) நிலையத்தில் இறங்கி புர்லாவுக்கு பஸ் பிடிக்க வேண்டும். இந்த நாலைந்து இடங்களில் ஏறல் இறங்கல்; பதினோரு வயசுப் பெண், ரோஹ்தக்ககைத் தாண்டி அறியாதவள், கையில் காசில்லாமல் வந்து சேர்ந்து விட்டாள். சாதாரண காரியமா?. சாப்பாட்டுக்கு அங்கங்கே என்ன செய்தாள்? என்னவோ வந்து சேர்ந்து விட்டாள் பத்திரமாக. தன்னைச் செல்லம் கொஞ்சும் அண்ணனைத் தேடி. அம்மா அப்பா வேண்டாம். ரோஹ்தக் தோழிகள் வேண்டாம். அண்ணன் போது.ம்.

அவன் வீட்டுக்குப் போனதும், “கூப்பிடு உன் தங்கையை, கேக்கணும் அந்த ஜான்ஸி ராணி எப்படி வந்தாள் என்று” என்றேன். சிரித்துக்கொண்டே ,”குட்டீ, அங்கிள் ஆயே ஹைம் தேக்கோ, தும்ஹாரே ஹாத் கா கானா கானே” என்று அவன் அழைத்ததும், சிரித்துக்கொண்டே கொஞ்சம் வெட்கத்தோடு வந்து முன்னால் நின்றாள். அவளை முதலில் கேட்டது, “க்யா கஹேகி, அங்கிள் யா பாய் சாஹேப்?” என்று அவளுக்கு திகைப்பாய் இருந்தது. சிரிப்புத் தான் பதில். ”சரி, எப்படி வந்தே, அதைச் சொல் முதல்லே, அண்ணன் கிட்டே அவ்வளவு பிரியமா?. எங்காவது அகப்பட்டுக்கொண்டிருந்தால் என்ன செய்வே? உம்ம்..” என்றேன். அவள் அண்ணனையும் என்னையும் பார்த்து சிரித்துக்கொண்டே, ”‘முதலில் ரொட்டி பண்ணி எடுத்துக் கொண்டு வருகிறேன். சாப்பிட்டுக்கொண்டே சொல்றேன்” என்றாள்.

அப்புறம் அவள் எட்டிப் பார்க்கவே இல்லை. அங்குமிங்கும் நடமாடுவது தான் தெரிந்தது. இந்த வாண்டு என்னடா சமைக்கும்? இது விளையாடற வயசு இல்லையாடா? இது கிட்டே வேலை வாங்குகிறோமே? என்று சொன்னேன். சோப்ராவுக்கு தன் தங்கையிடம் இல்லாத பாசமா? அவ நல்லா பண்ணுவாடா? சாப்பிட்டுப் பாரேன். அப்புறம் சொல்வே” என்றான். இருந்தாலும் அது குழந்தை, அல்லது சிறுமி. மனது கஷ்டமாகத் தான் இருந்தது. நாங்கள் பேசிக்கொண்டிருந்த போது திடீரென்று பரோட்டா வும் சப்ஜியும் சலாதுமாக வர ஆரம்பித்தது. சோப்ராவும் அவளுக்கு உதவினான். நன்றாகவே எல்லாம் செய்யத் தெரிந்தது அவளுக்கு. நிறைய சாப்பிட்டோம். உருளைக் கிழங்கு வைத்துச் செய்த பரட்டா. நானே ஆறோ ஏழோ சாப்பிட்டேன். அது தவிர வெறும் ரொட்டி. சப்ஜி, சாலத் எல்லாம். நன்றாக இருந்து விட்டால் அதோடு ஒரு அன்பான சூழலும் இருந்துவிட்டால் சாப்பாடு ஏதும் வரைமுறை இல்லாது உள்ளே போய்விடுகிறது. பேசிக்கொண்டே சாப்பிட்டோம். அவள் சொன்னாள் தான் ரயிலில் வந்த சாகஸ பயணத்தை. சின்னப் பொண். அந்த குழந்தைத் தனமே அதன் பலம். பார்ப்பவர்கள் எல்லோரும் வழி சொல்வார்கள். சாப்பிடக் கொடுப்பார்கள். கவனித்துக் கொள்வார்கள். ஆனால் வயது வந்தவர்கள் விஷயம் வேறு. எதற்கும் அவர்களோடு சண்டையிட்டு, அல்லது சாமர்த்தியமாக எமாற்றிக் கிடைப்பதெல்லாம் குழந்தைகளுக்கு அன்புடன் தாமாகவே கிடைக்கும்.. அண்ணாவிடம் வந்து சேர்ந்து விட்டாள் அல்லவா?, இடையில் பயணத்தின் போது இருந்திருக்கும் பயம்,. திகில்,. என்ன ஆகுமோ போன்ற கவலைகள், எல்லாம் மறந்தாயிற்று. இப்போது அவளுக்கு எல்லாம் விளையாட்டாகவும் ஒரு சாகஸ காரியமாகவும் தான் மனதில் பதிந்திருக்கிறது. ”பயமா யில்லையா?” என்று கேட்டால், “இஸ் மேம் க்யா டர் ஹை, ஆ தோ கயி ஹூம். என்று சிரித்துக்கொண்டே சொல்கிறாள்.” என்ன பயம் வந்துட்டேனா இல்லையா?”

நான் என் கதையைச் சொன்னேன். மாமாவுக்கு லெட்டர் எழுதினது. அவர் எப்படி வரணும், எந்த வண்டியில் ஏறணும், அது எங்கே என்னிக்கு எத்தனை மணிக்கு கரக்பூர் வரும், அப்புறம் சாயந்திரம் எத்தனை மணிக்கு ஜெம்ஷெட்பூருக்கு வண்டிவரும் என்று எல்லாம் விவரமாக எனக்கு எழுதியது, என்னை கும்பகோணத்திர்லிருந்து மெட்ராஸ் வரை அப்பா வந்து என்னை சென்னையில் கல்கத்தா மெயிலில் ஏற்றியது, இரண்டு நாளைக்கு சாப்பாடு அம்மா கட்டிக் கொடுத்தது, அம்மா, “வண்டியை விட்டு இறங்காதேடா, இருந்த இடத்திலேயே இருந்துக்கோ என்று கண்ணைக் கசக்கிக்கொண்டே உடையாளுரில் விடை கொடுத்தது, வால்டேர் ஸ்டேஷனில் ஒரு மாமா அந்த வண்டியில் என்னைக் கண்டு பிடித்து சாப்பாடு போட்டது, பின் மறுபடியும் இன்னொரு மாமா கரக்பூரில் தன்னுடைய நண்பருக்குச் சொல்லி என்னை வண்டியிலிருந்து வீட்டுக்கு அழைத்துச் சென்று சாப்பாடு போட ஏற்பாடு பண்ணியது, பின்னர் வண்டியில் ஏற்றியது, மாலை ஜம்செட்பூரில் மாமா வந்து என்னை வீட்டுக்கு அழைத்துச் சென்றது எல்லாம் விஸ்தாரமாக் சொல்லி…… ”அப்படியும் அம்மா அப்பாவுக்கு கவலை நான் ஒழுங்கா போய்ச் சேர்ந்தேனா இல்லையா என்று” ..

நான் ஒவ்வொரு விவரத்தையும் சொல்லச் சொல்ல அவளுக்கு ஒரே சிரிப்பு. அங்கிளோ, பாயி சாஹபோ, (அது இன்னும் அவள் மனதில் தீர்மானமாகவில்லை) தன்னையே கேலி செய்துகொள் கிறார் அவளைக் குஷிப்படுத்த என்பது அவளுக்குப் புரிந்துதான். இருந்தாலும் அது அவள் சந்தோஷத்தைக் குறைக்கவில்லை. அவள் சிரித்துக் கொண்டே இருந்தாள். ஆலு பரோட்டாவும், சப்ஜியும் நி/றைய கொடுத்து என்னை வயிறு முட்ட தின்ன வைத்து சந்தோஷப்படுத்திய அந்தச் சிறு பொண்ணை சந்தோஷப் படுத்த முடிந்ததே. எனக்கும் சந்தோஷம் தான். அன்றைய அந்தப் பொழுது மிக அருமையான நினைவுகளை என்றென்றைக்குமாக விட்டுச் சென்றது..

மறு நாள் திங்கட்கிழமை ஆபீஸில் எல்லோரிடமும் நடந்த கதையைச் சொன்னேன். அவர்களுக்கு எல்லாம் ஒரே கோபம். பொறாமை. அதிலும் ராம் சந்த் என்னும் பஞ்சாபிக்கும், எங்கள் செக்ஷனிலேயே மூத்தவரான, அவருக்கு 55-56 வயது இருக்கும், பாண்டே என்னும் ஒரிஸ்ஸா காரருக்கும் தான். ஒரே பொறாமை. இந்த சாலா மதராஸியை மாத்திரம் கூப்பிட்டுப் போய் விருந்து வைத்திருக்கிறான், இந்த பஞ்சாபி. என்று. அதை ஒரு பொய்க் கோப சினிமா டயலாக் சொல்லி தங்கள் ஆதங்கத்தைக் காண்பித்துக் கொண்டனர்.

எங்கள் செக்‌ஷனில் இருந்த இன்னொரு வங்காள நண்பன் ரஜக் தாஸ். மெல்லிய சின்ன தேகம். அவன் வந்து விட்டால் ஒரே கும்மாளம் தான். நல்ல தமாஷ் பேர்வழி. தன்னையே கேலிசெய்துகொள்ளும் அவன் பாங்கு தனி ரகமானது. மற்றவர்களைக் கேலி செய்வதிலும் அவனது பாணி தனி தான். சாதாரண விஷயங்களைக் கூட அவன் தமாஷ் பண்ண சாத்திய மான விஷயங்களாக்கி விடுவான். அவன் தமாஷ் பேசும் தொனியில் அது பெறும் அழுத்தங்களில் இருக்கும். அதையெல்லாம் எழுத்தில் சொல்வது கஷ்டம். சிலது வங்காளி மொழிக்கே உரிய அர்த்தங்களால் வருவது. அதையும் எழுத்தில் சொல்வது கஷ்டம். ஆபாசமாக இருக்கும். அதை எப்படி எழுத்து நாகரீகம் கெடாமல், பூடகமாகச் சொல்வது என்பது தெரியவில்லை. அவன் அந்நாளைய கிழக்கு பாகிஸ்தானிலிருந்து வந்தவன். மிருணால் காந்தி சக்கரவர்த்தியின் அப்பா அப்போதும் டாக்காவில் ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்தார். இந்த விவரத்தைச் சொல்லியிருக்கிறேனோ என்னவோ. சொல்லியிருந்தாலும் இன்னும் விவரமாகச் சொல்லவேண்டிய சந்தர்ப்பங்கள் பின்னால் வரும். இப்போதைக்கு ரஜக் தாஸ். அவன் பரிஸால் ஜில்லாவிலிருந்து வருபவன். பரிஸால் ஜில்லா நீர்வளம் அபரிமிதமாக உள்ள பூமி.. ரோடுகள் அவ்வளவாக கிடையாது. ஒரு இடத்திலிருந்து இன்னொரு கிராமத்துக்குப் போவது படகில் ஆற்றைக் கடந்து தான். ரயில் வண்டி கிடையாது. அவன் பின்னால் அகதியாக வரும்போது தான் ரயில் வண்டியைப் பார்த்தானாம்.

வங்காளிகளுக்கு சில விஷயங்களில் உயிர். கால் பந்து, மீன், அதிலும் ஹில்ஸா என்னும் வகை. ரவீந்திரநாத் தாகூர், துர்கா மாதா. பின் தங்கள் மொழி. வங்காளி. எப்போ பார்த்தாலும் கால்பந்தாட்டத்தைப் பற்றித் தான் பேச்சு. இந்தியாவிலேயே கால் பந்தாட்டம் மிகவும் பிரபலமாக, ஒரு வெறியாக இருப்பது வங்காளத்தில் தான். இதைப் பற்றி நான் மிகவும் வியப்போடு அவனிடமும் மிருணால் காந்தியிடமும் பேசிக்கொண்டிருப்பேன். அப்போது மிருணால் சொல்வான். நீ ரொம்பவும் வேதனைப் படாதே. அப்போது ஈஸ்ட் பெங்கால் அணியிலோ, மோஹன் பகானிலோ, எதுவென்று தெரியாது, அந்த ஒரு அணியில் நக்ஷத்திர வீரனாக இருந்தது ஒரு மதராஸி தான் என்று மிருணால் சொன்னான். வாஸ்தவம்.அந்நாட்களில் கால்பந்தாட்ட செய்திகள் பத்திரிகைகளில் வரும்போது அந்தப் பெயர் நிறைய அடிபடும். எனக்கு அது யாரென்று மறந்துவிட்டது. ரஜக் தாஸ் ஒரு நாள் ஒரு பெரிய கலாட்டா பண்ணிக்கொண்டிருந்தான். பரிஸாலிலிருந்து வந்த அந்த கிழக்கு வங்காள அணி கல்கத்தாவுக்கு வந்து மோஹன் பகானோடு விளையாடிக் கொண்டிருந்ததாம். நல்ல போட்டியாம். ஆனால் ஈஸ்ட் பெங்கால் தான் அப்போது ஜயிக்கும் அணியாக இருந்ததாம். கடைசியாக பெனால்டி ஸ்ட்ரோக் அடிக்க ஒரு வாய்ப்பு வந்ததாம் அதைத் தடுக்க நின்று கொண்டிருந்த பரிஸால் வீரர்கள் கோல் கீப்பர் எல்லோரும் ஸ்தம்பித்து நின்று விட்டார்களாம். காரணம் கோல் போஸ்ட் இருக்கும் எதிர் திசையில் ஸ்டேடியத்துக்குப் பின்னால் ரயில் வண்டித்தடம் அந்த சமயம் பாத்து ரயில் வண்டி ஒன்று வந்து கொண்டிருந்ததாம். அது ஓடி மறையும் வரை அதை அதிசயமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்களாம். மோகன் பகான் கோல் போட்டு விட்டது. அப்புறமும் அவர்கள் ரயில் வண்டியையே பார்த்துக் கொண்டிருந்தார்களாம். அவர்கள் ஊரில் பரிஸால் ஜில்லாவில் ஏது ரயில் வண்டி? இப்போது பார்க்கவிட்டால் பின் எப்போ ரயில் பாக்கறது?

இது எவ்வளவு தூரம் நிஜம் என்பது தெரியாது. ஆனால் செக்‌ஷனில் ஒரே ரகளை. மிருணாலும் அதில் சேர்ந்து கொண்டான். என்ன சமாசாரம் என்று பட்டாசார்யா வந்து எட்டுப் பார்த்தார்.

Series Navigationகூறியிருக்கவில்லைபாகிஸ்தான் சிறுகதைகள்
author

வெங்கட் சாமிநாதன்

Similar Posts

2 Comments

  1. Avatar
    வெங்கட் சாமிநாதன் says:

    இப்போது தான் நங்கநல்லூரில் (சென்னையின் ஒரு புறநகர்ப் பகுதி) வசிக்கும் நண்பர் டோண்டு ராகவன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சொன்னார்: “இப்போது தான் உங்களைப் படித்துக்கொண்டிருக்கிறேன். பாதி படித்துக்கொண்டிருக்கும் போதே உங்களுக்குச் சொல்ல வேண்டும் என்று தோன்றிற்று. அந்த கால்பந்தாட்டு வீரர் பெயர் தங்கராஜ். அவர் கோல்கீப்பராக இருந்தார். பெங்கால் அணி சென்னை வந்து விளையாடிய போது சென்னை வென்றது” சரி தானா?” என்று கேட்டார். 50-60 வருடங்களுக்கு முந்திய சமாசாரங்களை நினைவு வைத்துக்கொண்டிருக்கும் (கூகிள் துணியில்லாமலேயே)சொல்லும் ஒரு மனிதரின் சந்திப்பை இழந்துவிட்டு பங்களூர் வந்துவிட்டோமே என்று நினைக்க வருத்தமாகத் தான் இருக்கிறது. அவ்வப்போது நங்கநல்லூரிலிருந்து மடிப்பாக்கம் வந்து பேசிச் செல்வார். கண்ணியில் நான் கேட்கும் ஆரம்பப் பாடங்களையும் முகம் கோணாது கற்றுத் தந்து போவார்.

  2. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \ பின் தங்கள் மொழி. வங்காளி. \

    அமார் பாங்க்லா ஸோனார் பாங்க்லா. எங்களது வங்காளம் சொக்கத்தங்கமான வங்காளம்.

    நான் தமிழகத்திலிருந்து பெயர்ந்து இருபத்தைந்து இருபத்தாறு வருஷமாகிறது. மாகாண மாகாணமாக சுற்றியதில் எங்கள் ஒரே மகனுக்குத் தமிழும் ஹிந்தியும் ஆங்க்லமும் ஸம்ஸ்க்ருதமும் சொல்லித்தர நானும் என் மனைவியும் பட்ட பாடுகள் நினைவு வருகிறது. அவனுக்கு எந்த ஒரு புது வார்த்தையாயிருந்தாலும் அதற்கு தமிழில் என்ன ஹிந்தியில் என்ன ஆங்க்லத்தில் என்ன என்று சொல்லியாக வேணும். ஒரு நாளில் அவன் அதிகமாய் புழங்கும் மொழி ஹிந்தி என்பதால் பேசும் தமிழில் ஹிந்தியின் தாக்கம் அதிகம். என் மகன் இப்போது பள்ளியிறுதியிலிருக்கிறான். கல்லூரி செல்ல வேண்டும். தங்களது வ்யாசம் வாசிக்கையில் என் மகனது ஹிந்தி கலந்த தமிழ் படிப்பது போல் இருந்தது.

    நாங்கள் தில்லியிலிருந்திருந்தால் ஒருக்கால் வித்யாசமாயிருந்திருக்கலாம். தமிழ் பேசுவோர் அதிகமே.அலைச்சலில் மகன் படிப்பு கெடக்கூடாதென்பதால் NCRலேயே ஜாகை. பின்னும் NCRல் அவன் வயதொத்த பிள்ளைகளின் தமிழுடன் பார்க்கையில் பரவாயில்லை என தோன்றும். தில்லி DTEA பள்ளியில் படித்த பிள்ளைகளுக்கு தமிழ் கற்பது ஒரு வரப்ரசாதம். தங்களுக்கு தில்லித்தமிழ்ச்சங்கத்தில் தொடர்பிருந்தால் DTEA கிளைகள் மற்ற NCR பகுதிகளான ஃபரீதாபாத், குட்காவ், காஜியாபாத், நொய்டா போன்ற பகுதிகளுக்கும் விஸ்தரிப்பது பேசினீர்களனால் பலர் பயன் பெறுவர்.

    தில்லியில் இல்லாததன் மற்றும் உத்தர பாரதம் வருமுன் தக்ஷிண பாரத ஹிந்தி ப்ரசார சபாவில் ஹிந்தி கற்காததின் ஒரே விளைவு எங்கள் ஹிந்தியை மதராஸி ஹிந்தி என அடையாளப்படுத்த மாட்டார்கள்.
    ஸ்பஷ்ட் தேஸி ஹிந்தி.

    ஆப்கே யாதோன் கி பாராத் ஆகே படே.
    பர் ஏக் சோடிஸி பாத். பாத் ஸலாத் கி. ஸாலத் நஹீன் போல்தே.
    வைஸேஹி பராடா. உஸ்கோ ஆப்நே மதராஸி பரோட்டா பனாதியேதே

    பர் ஸாஹப் மேரி சோடி மூஹ் படீ பாத் கோ மாஃப் கீஜியேகா.

    இப்போது நயீ தில்லியிலிருந்து ரோஹ்தக்கிற்கு EMU வண்டி உண்டு.

Leave a Reply to வெங்கட் சாமிநாதன் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *