நினைவுகளின் சுவட்டில் (105)

This entry is part 12 of 26 in the series 9 டிசம்பர் 2012

கொஞ்ச நாட்கள் கழிந்தன. எந்த இடத்திலிருந்தாவது ஏதும் ஆர்டர் வருமா என்று காத்திருப்பு. இன்னும் wanted column-ல் ஏதும் எனக்கு ஏற்ற விளம்பரங்கள் வருமா என்ற காத்திருப்பு. ஒரு மாதம் இரண்டு மாதங்கள் கழிந்திருக்கும். முதலில் வந்தது Northern Railway-யிலிருந்து. எனக்கு வேலை கிடைத்துவிட்டது. சந்தோஷமாக இருந்தது. முதல் தடவையாக நானே முயன்று பெற்ற வேலை அல்லவா? இங்கு யாரும் ராஜாவோ, செல்ல ஸ்வாமியோ சொல்லி ஒரு முரளீதர் மல்ஹோத்ரா கருணை மனம் கொண்டு, ”boys service-ல் எடுத்துக்கொள்,” என்று தனிச் சலுகை காட்டிப் பெறவில்லையே. எத்தனையோ பேருடன் போட்டி போட்டல்லவா கிடைத்திருக்கிறது. அந்த சமயத்தில் அந்த சந்தோஷம் தகுதியில் பெற்றதாகத்தான் தோன்றியது.
எல்லோரிடமும் சொல்லிச் சந்தோஷப்பட்டேன். அவர்களுக்கும் சந்தோஷம் தான். ஆனால், ”இன்னம் பொறு. மூன்று இடங் களுக்குப் போய் வந்திருக்கிறாயே, அவை என்ன ஆகிறது என்று பார்க்கலாம்,” என்று மிருணாலும், என் செக்‌ஷன் அதிகாரி தேஷ் ராஜ் பூரியும் சொல்லவே, அது சரியாகத்தான் பட்டது. இரண்டாவது நான் வேலைக்குச் சேர பிக்கானீர் போகவேண்டும். பாலைவனம். வெயில் வறுத்து எடுக்கும். இங்கேயே ஆறு வருடங்கள் அஸ்பெஸ்டாஸ் ஷீட் போட்ட கூரையில் காய்ந்து வரண்டாயிற்று. பிக்கானீர் போவதா என்ற தயக்கம் ஒரு மூலையில் எட்டிப் பார்த்தது. இங்காவது ஆறு வருடங்களோடு போயிற்று. பிக்கானீர் போனால் ஆயுள் முழுக்க அல்லவா கஷ்டப் படவேண்டும். இந்த நினைப்பு மற்ற இடங்களிலிருந்து என்ன வருகிறது என்று பார்க்கலாம் என்று ஆலோசனை சொன்னதால் வந்ததா இல்லை, பிக்கானீர் பாலைவன தகிப்பின் காரணமாக மற்றவர்கள் சொன்ன ஆலோசனைப்படி காத்திருக்கத் தீர்மானித்தேனா தெரியவில்லை. இரண்டுமே இருக்கலாம்.

பிக்கானீர் ஆர்டர் வந்த பத்திருபது நாட்களுக்குள்ளேயே Eastern Railway  யிலிருந்தும் கடிதம் வந்தது. கல்கத்தாவில் வேலைக்குச் சேரவேண்டும். எங்கு நான் சொதப்பிவிட்டு வந்ததால் வேலை கிடைக்காது என்று நினைத்தேனோ அங்கிருந்தும் வேலைக்கு ஆர்டர் வந்தது. இரண்டு இடங்களிலிருந்தும், கல்கத்தாவுக்கும் பிக்கானீருக்கும் பயணம் செய்வதற்கான ரயில்வே பாஸும் உடன் வைக்கப்பட்டிருந்தன. எங்கு சேர்ந்தாலும் வாழ்நாள் பூராவும் இலவசமாக ரயிலில் பயணம் செய்யலாம். எனக்கு ஏதோ லாட்டரி விழுந்த மாதிரித் தான் சந்தோஷம். “ஔர் க்யா சாஹியே சாலே, குதா சப்பர் ஃபாட்கே தேதியா? மௌஜான் ஹி மௌஜான்” (இன்னம் என்ன வேணும் உனக்கு. கடவுளே கூரையைப் பிய்த்துக் கொண்டு கொடுக்கறார் உனக்கு, கொண் டாடம்  தான்) என்று பஞ்சாபி நண்பர்கள் சந்தோஷத்தோடு கேலியும் செய்தார்கள். ஆக, பிக்கானீர் தான் போயாகணும்னு இல்லை. கல்கத்தா போகலாம். கிடைக்காது என்று நிச்சயமாக நினைத்த இடத்தி லிருந்தே வேலை கிடைக்கிறதே. அந்த இண்டர்வ்யூ போர்டுலே இருந்த மனுஷன் ரொம்ப நல்ல மனுஷனா இருக்கணும், அவர்களையெல்லாம் மரியாதையாக, “ஸார்” னு சொல்லாததுக்காக வேலை கொடுக்காமல் இல்லை. இந்த உலகத்திலும் சில நல்ல மனுஷங்களும்  இருக்கத் தான் செய்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டேன்.

இப்படி இந்த மயக்கத்தில் கொஞ்ச நாட்கள் கழிந்து கொண்டி ருக்கும் போதே தில்லியிலிருந்து ஒரு அழைப்பு வந்தது. மத்திய உள்விவகாரத் துறையிலிருந்து. வேலை தில்லியில் மத்திய அரசாங்கத்தில். புது இடம் சம்பளமும் அதிகம். கல்கத்தா பிக்கானீர் வேலைகளை விட கிட்டத்தட்ட அறுபது ரூபாய்கள் அதிகம். வேலையில் க்ரேடும் வேறு. உயர்ந்த அடுக்கில் உள்ளது. பின் என்ன வேண்டும்.? பிக்கானீர் பாலவன வெயிலில் சுட்டெறிய வேண்டாம். கல்கத்தா வேலையை விட சம்பளம் அதிகம்  அது தானே அன்று எனக்கு வேண்டியது! தில்லி தான் என்று மனதுக்குள் நிச்சயப்படுத்திக்கொண்டேன். ஒரே ஒரு குறை. தில்லியில் வேலைக்கு அழைப்போடு இலவச ரயில் பாஸ் இல்லை. சொந்த செலவில் தான் போகவேண்டும்.   இலவச பயணம் என்ற கனவிலிருந்து விழித்தெழ வேண்டும். சரி. இப்போது கிடைக்கும் அதிக சம்பளம் அறுபது ரூபாய் போகப் போக இன்னும் அதிகமாகாதா என்ன? பதவி உயருமே? அதுவும் எனக்கு அதிக சம்பளம் தருமே? இப்படியேவா இருக்கப் போகிறது எல்லாம் எப்போதும்?

ஒரு மாதிரியான தீர்மானம் மனதுக்குள் ஆனதும் முதலில் நான் இச்செய்தியைச் சொன்னது மிருணாலிடம் தான். அவன் அப்போது மஞ்சு சென்னோடு உட்கார்ந்து வம்பளந்து கொண்டிருந்தான். போய்ச் சொன்னேன் ஒரே ஆரவாரம். இருவருக்கும் ரொம்ப சந்தோஷம் “இது என்ன இது. தினம் தினம் வந்து உங்களுக்கு ஒரு புது ஆர்டர் வந்திருக்குன்னு சொல்கிறீர்கள்? இது எத்தனாவது ஆர்டர்?….” என்றாள் மஞ்சு முகத்தில் வியப்பும் பூரிப்பும் பொங்க. “oh hundreds” என்றான் மிருணால். “அவன் சும்மா கேலி பண்றான். மூணு இடத்துக்குப் போனேன். மூணு இடத்திலிருந்தும் வேலைக்கு அழைப்பு வந்துவிட்டது. இது எப்படி நூற்றுக் கணக்காகும், மிருணால் அப்படித்தான் சொல்வான்” என்றேன்.

சரி எங்கே போகிறதுன்னு தீர்மானிக்கமுடியாது, இப்படி தினம் இவ்வளவு இடத்திலேயிருந்து அழைப்பு வந்தால், இல்லையா?” என்றாள் மஞ்சு.

தில்லி போகலாம்னு நினைக்கிறேன். புதிய இடம். தலைநகரம். அதெல்லாம் போக, இந்த தில்லி மத்திய மந்திரி அலுவலகம். அறுபது ரூபாய் அதிகம் கிடைக்கும்.” என்றேன்.

புர்லாவில் இருந்த அந்த கடைசி நாட்களில் எங்கே போவது அடுத்து? என்று தீர்மானித்தது அந்த அதிகப்படியாக கிடைக்க விருந்த அறுபது ரூபாய் தான். அதை இன்று நினைத்து[ப் பார்க்கப் பார்க்க   நான் திகைத்துப் போகிறேன். அறுபது ரூபாய் ஆசை காட்டி இழுத்த தில்லி, என்னையும் என் வாழ்க்கையையும் என் சிந்தனைகளையும் முற்றிலும் மாற்றி அமைத்தது கால் பதித்த தினத்திலிருந்தே தொடங்கிய தில்லி வாழ்க்கை தான். பார்க்கக் கண்களை விழித்திருந்தால் காட்சி தர தில்லி தன்னுள் நிறைய கொண்டி ருந்தது தில்லி. தேடத் தொடங்கினால அது என் முன் விரித்த உலகம் வித்தியாசமானதாக, புதியதாக என்னை முற்றிலும் புதிய மனிதனாக ஆக்க தன்னிடம் நிறைய கொண்டிருந்தது. சுற்றியிருந்த ஜன்னல்கள் எத்தனையோ அத்தனையையும்  திறந்தால் அது காட்டும் உலகம் தேடுபவர் களுக்கு மாதிரமே காட்சி தரும் ஒன்றாக இருந்தது. அந்த ஜன்னல்கள் எதையும் திறக்காது, ஜன்னல்களையோ மூடியிருக்கும் அதன் கதவுகளையோ காணாது, தன் இருந்த அறைக்குள் தனக்குப் பழக்கமான பாளையங்கோட்டையையோ, மன்னார்குடியையோ விருத்தாசலத்தையோ உருவாக்கி அதனுள் தம் ஆயுளைக் கழித்த பெருந்தகைகள அங்கு இருந்தனர். அது பற்றிய அவர்கள் பெருமையை, சமயம் வாய்க்கும் போதெல்லாம் சொல்லிச் சொல்லி தாம் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டி ருப்பதைப் பற்றி கர்வம் கொண்டனர். “தமிழனென்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா” என்ற வரிக்கு தம் உணர்வில் புதிய அர்த்தங்களை உருவாக்கிக்கொண்டவர்கள் அனேகர்.

புர்லா மண்ணிலிருந்து என்னை அழைத்து  ஆசை காட்டியது அறுபது ரூபாய் அதிகம் தரும் வேலை தான். ஆனால் வெகு சீக்கிரம் அதை பின்னுக்குத் தள்ளி தில்லி என்னை வேறு மனிதனாக்கியது.

”அது மட்டுமில்லை, செல்லஸ்வாமி அங்கு தானே இருக்கிறார்?. எனக்கு உதவவும், புது இடத்தில் வழிகாட்டவும் தான் அவர் எனக்கும் முன்னால் போய் அங்கு எனக்காகக் காத்திருப்பது போல் இருக்கிறது” என்றேன்.

“அப்போ எங்களையெல்லாம் விட்டுப் பிரிகிறதாத் தீர்மானம் ஆயாச்சு, இல்லையா?” என்றாள் மஞ்சு. இந்த உணர்வு மிருணாலிடம், மஞ்சுவிடம் என்னிடமும் எப்போதும் ஒரு மறைவிடத்தில் ஒளிந்து இருந்து கொண்டேதான் இருந்தது. கடைசியில் தான் அது மெல்ல தலை நீட்டும். இப்போது மறுபடியும் தலை நீட்டியது.

உடன் யாரும் பேசமாட்டார்கள். ஒரு அசாதாரண மௌனம் நிலவும். எங்கோ மனமும் பார்வையும் திரும்பும்.

“என்ன செய்ய? இன்னம் கொஞ்ச நாளில் நாங்களும் எங்கேயாவது தான் போகவேண்டியிருக்கும். அதை எப்படித் தவிர்ப்பது? எல்லோரும் போய்க்கொண்டிருக்கிறார்கள். நாமும் ஒவ்வொருவராகப் போகத் தான் வேண்டும்.” என்று மூவரும் ஆளுக்கொரு வார்த்தையாக, சொல்லி சமாதானம் கொண்டோம்.

முதலில் சம்பல்பூர் Chief Medical Officer- இடம் போய் உடல் ஆரோக்கியத் தகுதிச் சான்று வாங்க வேண்டும். அங்கு நான் போன சமயம் கட்டக்கில் என்னோடு நேர்காணலுக்கு வந்திருந்த ஏ. ஸ்ரீனிவாசன் போற்றியும், டி.ஆர்.ஜி. பிள்ளையும் இருந்தனர். அவர்களும் இந்த அணைக்கட்டிலேயே வேலை பார்த்த போதிலும், கட்டக்கில் பார்த்துத்தான் ஒருவரை ஒருவர் ஹிராகுட் அணை சகாக்களாக அறிந்து கொண்டிருந்தோம். எங்கோ மூலையில் அவர்கள் வேலை பார்த்திருக்க வேண்டும். சிப்ளிமாவோ, பர்கரோ, இப்படி இன்னும் எத்தனை இடங்கள் இருக்கின்றனவோ. ஆனால், ஆறு வருஷங்கள் கழித்து புர்லாவைவிட்டுப் போகும் போதாவது. ஒருவரை ஒருவர் பரிச்சயம் செய்துகொண்டு இணைந்தோமே. இப்போது அவர்களுக்கும் தில்லி ஆர்டர் கிடைத்துவிட்டதால், தில்லி போகும் போதாவது ஒன்றிணைந்து போவது என்று தீர்மானித்துக் கொண்டோம். பயணத்திலும், பின் அங்கு புது இடம் தில்லியில் ஆரம்ப நாட்களில் தங்குவதற்கும் ஒன்றிணைந்து கொண்டால் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளலாமே. அன்றே சி.எம்.ஓ எங்களுக்குத் தகுதிச் சான்றிதழ் கொடுத்து விட்டார். எந்தக் கையூட்டு பற்றியும் அவருக்கும் சரி, எங்களுக்கும் சரி, அந்த மருத்துவமனையின் வேலையாட்களுக்கும் சரி, அந்த நினைப்பே தோன்றாத பொற்காலம். அது. ஒரிஸ்ஸாவில் சம்பல்பூரில் 1956- டிஸம்பரில் ஒரு தினம் அது.

எல்லோரும் சேர்ந்தே தில்லிக்குப் பயணப்படுவது என்று தீர்மானித்துக்கொண்டோம். நாங்கள் எங்கு எந்த மூலையில் இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட நாள் சாயந்திரம் சம்பல்பூரிலிருந்து ஜர்ஸகுடாவுக்குப் போகும் சாயந்திர ரயில் 5.00 5.30 மணிக்கு சேர்ந்துகொள்வது என்று முடிவாயிற்று.

செக்‌ஷன் அதிகாரி தேஷ் ராஜ் பூரி முன்னாலேயே கொடுத்த வாக்கு இருக்கிறது. எப்போது வேண்டுமானாலும்  தடை சொல்லாது பணியிலிருந்து விடுவிப்பதாக. வீட்டில் ஒரு சின்ன பையன் சில மாதங்களாக வந்து சேர்ந்திருக்கிறான். வேலை தேடிக்கொண்டு. அவ்வப்போது ஏதோ வேலை கிடைத்து வருகிறது. என் வீட்டை அதிகாரபூர்வமாக பங்குகொண்டிருக்கும் சிவராம கிருஷ்ணன் பார்த்துக்கொள்வான் அந்த புதிதாக வந்த பையனை. இன்னும் யாருக்காவது என் இடத்தில் அந்த வீடு ஒதுக்கப்பட்டாலும், ஒரு காலத்தில் 12 பேர் இருந்த இடம். அவனுக்குத் தெரியும். இப்போது அந்த 20 வயது பையனுக்கா இடம் இராது.? அதிக பந்தங்கள் இல்லை. தகர ட்ரங்க் ஒன்று. பின் படுக்கை. தில்லியில் அதிகம் குளிரும் என்றார்கள். அவர்கள் சொன்ன ஆலோசனையில், இரண்டு கம்பளி ஸ்வெட்டர் வாங்கிக் கொண்டேன். வேறு என்ன? மிகுந்தது புத்தகங்கள். அவற்றைத் தூக்கிக் கொண்டு போகமுடியாது. மூன்று பெரிய மரப்பெட்டி களில் அடுக்கி சுற்றி ஸ்டீல் டேப் போட்டு பத்திரப்படுத்தினேன். ‘இவை இங்கேயே இருக்கட்டும். பத்திரமாகப் பார்த்துக்கொள். பின் அங்கு இருக்கும் இடத்தின் சௌகரியத்தைப் பொருத்து நான் சொல்லும்போது இவற்றை ரயிலில் அனுப்பி வை. செய்வாயா?” என்று கேட்டேன். “இதென்ன பெரிய காரியம். நீங்கள் கவலைப் படாமல் சௌகரியமாகப் போய் வாருங்கள். இப்போது இதை யெல்லாம் எப்படி எங்கு தூக்கிக் கொண்டு போக முடியும்?. அந்தக் கவலை உங்களுக்கு வேண்டாம், என்னிடம் விட்டு விடுங்கள்” என்றான். நான் பழகி ஒரு சில மாதங்களில் அவன் சாதுவாகவும் சொன்ன காரியத்தைச் செய்பவனாகவும் தெரிந்தான்.

தேஷ் ராஜ் பூரி கொடுத்த வாக்குப் படியே எனக்கு தடை ஏதும் செய்யவில்லை. அப்போது நிர்வாக அதிகாரியாக இருந்த கிர்தாரி லால் எனக்கு கொடுத்த Relieving Order-ல் ஒரு விஷமம் செய்திருந்தான். அதாவது நான் என் இஷ்டத்துக்கு வேலையை விட்டுப் போவதால் ஹிராகுட் அணைக்கட்டுத் திட்டத்திலிருந்து வேலையை விட்டு நீங்க அனுமதிப்பதாக அந்த ஆர்டர் எழுதியிருந்தது. இந்த நிர்வாக பொறுப்பில் இருப்பவர்கள் செய்யும் சில விஷமங்கள் உடனே சட்டெனெ புரிவதில்லை. எனக்கும் அப்போது புரியவில்லை. நான் சந்தோஷமாக அந்த ஆர்டரை எடுத்துச் சென்றேன்.

அருகில் இருந்த நண்பர்களுக்கும் ஹிராகுட்டிலிருந்த எஸ் என் ராஜாவுக்கும் நான் தில்லி போவதைப் பற்றிச் சொன்னேன். அவர் சந்தோஷப்பட்டார். ”முடிந்தால் எழுதிக்கொண்டிரு. அங்கு போய் விலாசம் தெரிவி,” என்றார். இது சம்பிரதாய வார்த்தை என்று தான் தோன்றும். ஆனால் இந்த சம்பிரதாயங்களில் எவ்வளவு அர்த்தங்கள், அவசியங்கள், காரியங்கள் இருந்தன என்பது எனக்கு வெகு சீக்கிரம் தெரிய வந்தது.

கடைசியாக என்னுடன் சம்பல்பூர் வரை வந்து வழியனுப்ப புறப்பட்டது மிருணால் தான். ஏதும் வண்டி கிடைக்கவில்லை. ஒரு ரிக்‌ஷா தான் கிடைத்தது. அதில் நானும் மிருணாலும். ஒரு பெட்டி படுக்கை. இவ்வளவு தான். சைக்கிள் ரிக்‌ஷா நேரத்துக்கு என்னை சம்பல்பூரில் கொண்டு சேர்க்கும் என்று தோன்ற வில்லை. ஆனாலும் செய்வதற்கு ஏதும் இல்லை. மகாநதிப் பாலம் தாண்டியதும் பின்னாலிருந்து ஒரு லாரி வந்தது. ரிக்‌ஷாவிலிருந்து இறங்கி அந்த லாரியை நிறுத்தி, ”எனக்கு மிக அவசரமாக சம்பல்பூரி போய் தில்லிக்கு ரயில் ஏறவேண்டும். உதவ முடியுமா?” என்று கேட்டேன். ”சரி ஏறிக்கொள்,” என்றான். ரிக்‌ஷாவுக்கு பேசிய பணத்தைக் கொடுத்துவிட்டு நானும் மிருணாலும் லாரியில் ஏறிக்கொண்டோம். லாரி ஓட்டுபவர்கள் இந்த மாதிரி சமயங்களில் உதவுவார்கள். காசு கேட்க மாட்டார்கள். மிஞ்சி கடக்க வேண்டிய ஆறு மைல் தூரத்தை வெகு சீக்கிரம் கடந்து சம்பல்பூரில் ரயிலைப் பிடிக்க முடிந்தது.

தில்லிப் பயணம் அந்த நாட்களில் அவ்வளவு சுலபம் இல்லை.  முன் பதிவு இல்லாத நாட்கள் அவை. எப்போது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் பயணம் செய்யலாம். எந்த வண்டியிலும் எங்கும் பயணம் செய்யலாம். டிக்கட் கிடைக்க இல்லை என்ற பேச்சு இல்லை. ஆனால் கூட்ட நெரிசலில் இடிபட  வேண்டியிருக்கும். நீண்ட தூரப் பயணங்கள் சிரமம் தருபவை. தூங்கவும் சாப்பிடவும். அத்தோடு நாலைந்து இடங்களில் இறங்கி வண்டி மாறவும்  வேண்டும். 1956-ல் நான் தில்லி சென்ற மார்க்கம் இதோ. சம்பல்பூர் ரயில் நிலையத்தி லிருந்து ஜார்ஸகுடா. ஜார்ஸ குடாவில் வண்டி மாறி பிலாஸ்பூர். பிலாஸ்பூரிலிருந்து பினா. பின் மறுபடியும் வண்டி மாறி கட்னி. கட்னியில் இறங்கி பின் தில்லிக்கு வண்டி மாற வேண்டும். எத்தனை ஆயிற்று? அவ்வப்போது மாறும் வண்டிகளில் இருக்க இடம் பொருட்களை வைக்க இடம், சாப்பிட கிடைக்கும் வசதி இரவுகளில் தூங்கக் கிடைக்கும் வாய்ப்புகள் இவை என்ன கிடைக்கின்றனவோ அனுபவித்து வதை படத் தான் வேண்டுமே ஒழிய அவற்றை நீட்டி முழக்கி எழுதுவது இன்றைய தலைமுறையினருக்கு வெறுப்பேற்றும்.

ஜார்ஸகுடாவில் ஏ. ஸ்ரீனிவாசன் போற்றியும், டி.ஆர்.ஜி  பிள்ளையும் சேர்ந்து கொண்டார்கள். அது பயணத்தின் கடுமையை அவ்வப்போது மறக்க உதவியது.

  • புது தில்லி ரயில் நிலையத்தை இரண்டு நாள் பயணத்துக்குப் பின் டிசம்பர் 30-ம் தேதி இரவு ஏழு மணிக்கோ எட்டு மணிக்கோ போய்ச் சேர்ந்தோம். ஸ்டேஷனை விட்டு வெளியே வந்து பார்த்தேன். ஸ்டேஷனும் புதிதாகக் கட்டப்பட்ட ஒன்று. வெளியே அகன்று பரந்திருந்த சாலை மரங்கள் அடர்ந்து அழகாக இருந்தது. விளக்குகள் சிறிய எட்டடி ஸ்தம்பங்களில் குளிர்ச்சியாக ஒளி வீசியதும் அழகாக இருந்தது. வெளியே கேட்டை விட்டு வந்ததும் சாலையில் கண்ட காட்சி ஆச்சரியப்பட வைத்தது. சாலையின் இரு மருங்கிலும் குதிரை பூட்டிய  டாங்கா வண்டிகள். இடையிடையே சில பாரம் எடுத்துச் செல்லும் வண்டிகளை ஒட்டகங்கள் இழுத்துச் சென்றன. எத்தனை நூற்றாண்டுகளை ஒரே சமயத்தில் தில்லி வாழ்ந்து காட்டுகிறது என்ற திகைப்பு. வெளியே வலது பக்கம் ஒரு நீண்ட சாலையின் எதிர்ச்சாரியில் ஒரு கட்டிடத்தின் இரண்டாவது மாடியின் மேலே Star Hotel என்று  விளம்பரம் செய்யும் நியோன் விளக்குகள் மின்னின. பக்கத்திலேயே ஹோட்டல் இருக்கிறதே. இன்று இரவோ அல்லது இன்னும் வசதியான இடம் கிடைக்கும் வரையோ  இந்த ஹோட்டலிலேயே தங்கலாமே என்று சொன்னதும் அவர்களும் உடன் சம்மதித்தார்கள். அன்று இரவு ஸ்டார் ஹோட்டலில் ஒரு அறை எடுத்து தங்கினோம். ஆளுக்கு ஒரு நாள் வாடகை ரூபாய் ஆறு. என்றார்கள். அந்த சாலைக்கு குதப் ரோட் என்று தெரிந்தது. தில்லியில் கால் பதித்த முதல் நாள் இரவே நாங்கள் தங்கியது குதப் ரோடில் என்பதில் ஒரு விசேஷம் இருந்தது மறு நாள் காலையில் அலுவலத்தில் பணிக்கு சேர்ந்ததும், அங்குள்ளவர்களின் அட்டஹாச கேலிச் சிரிப்பில் எங்களுக்குத் தெரிய வந்தது.
Series Navigationஒருவர் சுயத்தனம் பற்றி எனது பாடல் -1 (1819-1892) (புல்லின் இலைகள் -1)சந்திப்பு
author

வெங்கட் சாமிநாதன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *