நீங்காத நினைவுகள் – 10

This entry is part 10 of 18 in the series 14 ஜூலை 2013

கவியரசு கண்ணதாசனின் பிறந்த நாள் ஜூன் மாதம் 24 ஆம் நாளில் கடந்து சென்று விட்டது. எனினும் சில நாள்களே அதன் பின் சென்றிருப்பதால், அவரைப் பற்றிய ஞாபகங்களைப் பகிர்ந்து கொள்ளுவதில் ரொம்பவும் கால தாமதம் நிகழ்ந்து விடவில்லை என்று தோன்றுகிறது.

1960 களில் என் தோழியும் சமூக சேவகியுமான அனசூயா தேவிதான் சந்திப்புக்கு நாள், நேரம் பெற்றபின், அவரைச் சந்திக்கப் போனபோது வழக்கம் போல் என்னை உடனழைத்துச் சென்று அறிமுகப் படுத்தினார்.

அவரது இல்லத்துள் நாங்கள் இருவரும் நுழைந்த போது முன்னடிக் கூடத்தில் ஆண்கள் சிலர் குழுமியிருந்தார்கள். எங்களைக் கண்டதும், கண்ணதாசன், “அவங்க ரூம்ல உக்காரட்டும்!” என்று பணிக்க, ஒருவர் எங்களை ஒரு தனியறைக்கு இட்டுச் சென்று அமரச் செய்தார்.

சிறிதே பொழுத்துக்குள் கண்ணதாசன் நாங்கள் அமர்ந்திருந்த அறைக்கு வந்து, மரியாதைக்காக எழுந்து நின்ற எங்களை, ‘அதெல்லாம் வேணாம்’ என்று மறுதலித்து, எங்களை உட்காரப் பணித்த பிறகே தாம் எங்கள் எதிரில் அமர்ந்தார்.

அப்போது  ‘இவள் குழந்தைகளுக்காக எழுதுகிற எழுத்தாளர்’ என்று என் தோழி என்னை அவருக்கு அறிமுகப்படுத்திப் பெயரையும் கூற அந்தப் பெயரை மீண்டும்  அழுத்தந்திருத்தமாய் ஒரு முறை சொல்லிப் பார்த்துவிட்டுச் சிரித்துக்கொண்டார். முழுக்க முழுக்க வடமொழிப் பெயராக இருக்கிறதே என்று நினைத்துச் சிரித்துக்கொண்டாரோ என்னவோ. அப்படி அவர் கூறினாலோ, அதில் குறை கண்டாலோ என்ன பதிலைச் சொல்லவேண்டும் என்று கணத்துள் முடிவுக்கு வந்தாலும், அவர் வேறு எதுவும் கூறாததால்   பதில் சொல்லும் வாய்ப்புக் கிட்டவில்லை. (வேறென்ன! ‘நீங்கள் வைத்துக்கொண்டிருக்கும் பெயரில் உள்ள தாசன் என்பது வடமொழிதானே?’ எனும் அதிகப்பிரசங்கித்தனமான பதில் கேள்விதான். அவர் வடமொழி எதிர்ப்பாளரா அல்லரா என்பதொன்றும் அப்போது தெரிந்திராத நிலையிலேயே எந்தக் காரணமும் இன்றி இப்படி ஓர் ஊகம்! பின்னாளில் அவரைப் பற்றித் தெரிந்துகொண்டதன் பின்னர், அப்படி நினைத்திருக்க மாட்டார் என்று தோன்றியது.)

என் தோழியை ஏற்கெனவே அறிந்தவராதலால் என்னைப் பற்றி ரொம்பவே விசாரித்தார். தான் நடத்திக் கொண்டிருந்த விடுதிக்கு நன்கொடை கேட்டு வழக்கம் போல், “ஆகட்டும்,” பதிலைப் பெற்றுக்கொண்டார் அனசூயாதேவி. பின்னர் நாங்கள் விடைபெற்றுப் புறப்பட்டோம்.
இது நடந்து சுமார் நான்கைந்து ஆண்டுகளுக்குப் பின்னர், ஒரு கேரளத்துப் பெரிய மனிதர்க்கு நடத்தப்பட்ட இரங்கற்கூட்டம் ஒன்றில் பேசக் கண்ணதாசன் வந்திருந்தார். (ஏதோ ஒரு மேனன் என்று நினைவு. அவர் பெயரின் முன்னெழுத்துகள் – இனிஷியல்ஸ் – ஞாபகமில்லை. அவர் இலக்கியவாதியா அல்லது அரசியல்வாதியா என்பதும் தெரியாது.) கேரள சமாஜத்தோடு தொடர்புடையவளான என் மலையாளத் தோழி ஒருத்தியுடன் அக்கூட்டத்துக்குச் சென்றிருந்த எனக்கும் அவளுடன் முன்வரிசையில் உட்காரும் வாய்ப்புக் கிடைத்தது.

சற்றே தாமதமாய் வந்த கண்ணதாசன் மேடை யேறுகையில் என்னைப் பார்த்துவிட்டார். நாற்காலியில் உட்காரும்போது என்னைப் பார்த்துப் புன்னகை செய்தது போல் இருந்தது. எனினும் எனக்கு நம்பிக்கை இல்லை. எனக்குப் பின் வரிசையில் உட்கார்ந்துகொண்டிருந்த எவரையோ பார்த்து அவர் புன்னகை செய்திருக்கலாம் என்று தோன்றவே இலேசாய்த் தலை திருப்பிப் பார்த்த போது நாங்கள் அமர்ந்திருந்த  வரிசையின் பின்னால் சில நாற்காலிகள் காலியாக இருந்தது தெரிந்தது. எனவே அந்தப் புன்னகை என்னை அடையாளம் தெரிந்துகொண்டதன் விளைவே என்பது கண்கூடானது. அப்படி இருக்காது என்று நினைத்ததனால் பதிலுக்குப் புன்னகை செய்யாதிருந்துவிட்ட அசட்டுத்தனம் புரிந்தது. ஆனால் அதன் பின் அவரை நோக்கிப் புன்னகை செய்தால் அது மேலும் ஓர் அசட்டுத்தனமாகிவிடும் என்பதால் சும்மா இருக்க வேண்டிய தாயிற்று.

ஆனால், பேசுவதற்கான அவரது முறை வந்த போது ஒலிபெருக்கியின் முன் வந்து நின்ற அவர் மீண்டும் என்னைப் பார்த்துப் புன்னகை புரிய, இந்தத் தடவை அவநம்பிக்கையோடு பின் புறம் திரும்பிப் பார்க்காமல் சிரித்து வைத்தேன்.

அவரது நினைவாற்றல் வியப்பூட்டியது என்று சொல்லத் தேவையில்லை. பேசிமுடித்த பின் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தவர்களிடம் ஏதோ சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டார்.  மேடையிலிருந்து இறங்கும்போதும் என்னைப் பார்த்துப் புன்னகை புரிய அவர் தவறவில்லை.

பெரியவர்களுக்காக எழுதும் எழுத்தாளராக நான் உருப்பெற்ற பின், அவரே கண்ணதாசன் எனும் தமது பெயரிலேயே ஓர் இலக்கிய இதழைத் தொடங்கினார். “கண்ணதாச”னுக்குச் சிறுகதைகள் அனுப்புமாறு கேட்டு அவ்விதழின் பொறுப்பாளரிடமிருந்து கடிதம் வந்தது. சர்ச்சையைக் கிளப்பக் கூடியவை என்று தோன்றிய சிறுகதைகளைக் கண்ணதாசன் இதழுக்கு அனுப்பத் தொடங்கினேன். அவை வரிசையாக அதில் வெளிவரத் தொடங்கின. அவ்வாறு எழுதிய ஒரு கதை “காவு” என்பதாகும். திரைப்படப் பாடலாசிரியர்களைக் கண்டித்து எதிர்ப்புக் காட்டிய உரையாடல்கள் நிறைந்த கதை அது. முக்கியமாய்க் கவிஞர் கண்ணதாசன் அவர்களைக் குறி வைத்தே அக்கதை எழுதப் பட்டது. (அக்கதையின் சுருக்கத்தை இங்கே சொல்லியாகவேண்டும். ஒர் எழுத்தாளன். விகார எண்ணங்களை எழுப்பும் வண்ணம் பெண்ணின் அங்க வர்ணனைகளையும், பாலுறவு சார்ந்த விஷயங்களையும் அதிரடியாக எழுதுபவன். அதை ஏற்காத அவன் தங்கை அப்படி எழுதுவது படிப்பவர்க்குத் தீமை பயக்கும் என்றும், பெண்களை அவன் அவமானப் படுத்தி வருவதாகவும் அடிக்கடி அவனோடு வாதிடுகிறாள்.  ஆனால் அவளது கருத்தை அவன் பொருட்படுத்துவதில்லை.

ஒரு நாள் தன் தோழியைச் சந்திக்க அவள் வீட்டுக்குப இவள் போகிறாள். இவள் போன நேரத்தில் அந்தத் தோழி வீட்டில் இல்லை.  ஆனால் அவள் அண்ணன் இருக்கிறான்.  அவன் கையில் அவளுடைய எழுத்தாள அண்ணனின் நாவல் இருக்கிறது. தான் படித்துக்கொண்டிருக்கும் அதன் பக்கத்தை விரித்துவைத்துக்கொண்டபடி தன் தங்கையின் தோழியை வரவேற்கும் அவன் தன் தங்கை மாடியறையில் இருப்பதாய்ப் பொய் சொல்லிவிட்டு அவள் மாடிக்குச் சென்ற பின் உட்புறக்கதவைத் தாளிட்டு விட்டு, அவளைப் பின் தொடர்ந்து தன் தங்கையின் மாடியறைக்குள் நுழைந்து கதவைச் சாத்திவிடுகிறான். அதற்குப் பின் அந்தப் பெண்ணுக்கு நிகழ்ந்த அவலத்தை இங்கே விவரிக்கத் தேவையில்லை.  எவ்வளவோ போராடியும் ஒரு மல்லனான அவனை அவளால் வெற்றிகொள்ள முடியாமற் போகிறது.

வீடு திரும்பும் அவளது சோர்ந்த முகத்தையும் தள்ளாட்டத்தையும் பார்த்து அவள் மீது உயிரையே வைத்துள்ள அவளுடைய எழுத்தாள அண்ணன் கவலைப்பட்டு வினவும் போது அவள் தனக்கு நிகழ்ந்துவிட்ட கோரம் பற்றி உடனே சொல்லாமல்,  அவன் படைப்புகள் பற்றிய விவாத்த்தைத் தொடங்குகிறாள். அவன் ‘யதார்த்தம்’   என்கிற போர்வைக்குள் புகுந்து தன் எழுத்துக்கு வக்காலத்து வாங்க முயல்வதை அவள் ஏற்கவில்லை. அவர்களுக்குள் வாக்குவாதம் நிகழ்கிறது. அப்போதுதான் அவள் தனக்கு நேர்ந்துவிட்ட கொடுமையை அவனுக்குச் சொன்னதோடு அவனது எழுத்தே அதற்குக் காரணம் என்று தான் நினைப்பதையும் சொல்லுகிறாள். அவளுக்காகக் கதவு திறந்த போது அவன் கையில் அவனது நாவல் இருந்ததையும், அவன் விரல் வைத்துப் பிரித்திருந்த பக்கத்தில் பாலுறவு பற்றிய வர்ணனைகளும். ஆபாசப் படமும் இருந்ததே அவன் விகாரப் பட்டதற்குக் காரணம் என்பதையும் அவள் தெரிவிக்கிறாள்…எழுத்தாளர்கள், இரட்டை அர்த்தத் திரைப்படப் பாடலாசிரியர்கள் ஆகியோரைத் தாக்குகிறாள். ….. மீதிக் கதை இங்கே தேவையில்லை.)

கண்ணதாசனைத் தாக்குவதே நோக்கம் என்பது தெரிந்தும், கவிஞர் கண்ணதாசன் இந்தக் கதையைக்  “கண்ணதாசன்” இதழில் வெளியிட்டார்! ‘கண்ணதாசன்களைத் தாக்கிக் கண்ணதாசனிலேயே உங்கள் கதை!’ என்று ஓர் அன்பர் அதை விமர்சித்துக் கடிதம் எழுதினார்.
கண்ணதாசனே தாக்கப்பட்ட சொல்லாடல்கள் நிறைய இருந்த இந்தக் கதை  “கண்ணதாச”னில் வெளிவரும் என்று சிறிதும் எதிர்பார்க்கவில்லை. அத்துடன் மட்டுமின்றி, இனிக் கண்ணதாசனுக்கு எழுதும் வாய்ப்புக் கிடைக்காது என்று நினைத்ததும் பொய்யாயிற்று.

இன்னும் ஒரு நிகழ்ச்சி.     உடன்பிறவாச் சகோதரராய் நான் கருதி மதித்தும் வந்த தமிழ்வாணன் அவர்கள் காலமான போது, கண்ணதாசனில் ஒரு வாசகர்,  நூறு ஆண்டுகள் வாழ்வது எப்படி என்று புத்தகம் எழுதிய தமிழ்வாணன்  இப்படி அல்ப ஆயுளில் மறைந்துவிட்டாரே என்று சற்றே கிண்டல் தொனித்த கடிதம் ஒன்றைக்  “கண்ணதாசன்” இதழில் எழுதியிருந்தார். தமிழ்வாணனின் ஒருகாலத்திய நெருங்கிய நண்பரான கண்ணதாசன் அந்தக் கடிதத்தை வெளியிட்டிருந்திருக்கக் கூடாது என்று கருதிய நான், “தமிழ்வாணன் அவர்கள் வாழ்ந்தது குறுகிய காலமே என்றாலும் அவருடைய சாதனைகள் நூறு ஆண்டுகள் வாழ்ந்த ஒரு மனிதருடைய சாதனைகளுக்கும் மேல். இரவு, பகல் பாராமல் மிக அதிக அளவில் அவர் உழைத்ததே அவரது மரணத்துக்குக் காரணம். கண்ணதாசனில் இப்படி ஒரு கடிதம் வந்தது வருத்தமளிக்கிறது’ எனும் பொருள்பட நான் எழுதிய கடித்த்தைக் கண்ணதாசன் வெளியிட்டார்.

கொஞ்ச நாள்கள் கழித்துப் புத்தக வெளியீட்டாளர் ஒருவர் எனது அலுவலகத்துக்கு வந்து என்னைச் சந்தித்தார்.   ‘கண்ணதாசனைச் சந்தித்துவிட்டு இங்கே வருகிறேன். அவர் உங்களைப் பற்றி விசாரித்தார். குழந்தை எழுத்தாளராக நீங்கள் இருந்த போது சில ஆண்டுகளுக்கு முன் யாரோ சமூக சேவகியுடன் அவரைச் சந்திக்க வந்தீர்களாம்… ‘அந்தப் பொண்ணுக்கு ரொம்ப தைரியம். என்னைத் தாக்கி நான் நடத்துற பத்திரிகைக்கே கதை அனுப்பி வெச்சாங்கன்னா பாத்துக்குங்க! அவங்களை நான் சந்திச்சுப் பேசணுமே!’ என்றார்….” என்று தெரிவித்தார்.

“அப்படியா சொன்னார்!” என்று கேட்டு நான் மகிழ்ந்து போனேன்.

எனினும் “என் தைரியம் ஒரு பக்கம் இருக்கட்டும். அவரைத் தாக்கி நான் எழுதிய பல  சாடல்கள் இருந்த கதையை அவர் தமது பத்திரிகையிலேயே போட்டுள்ளாரே! அந்த நேர்மைக்கும் பெருந்தன்மைக்கும் நியாய உணர்வுக்கும் முன்னால் என் தைரியம் ஒரு பெரிய விஷயமா? கண்டிப்பாக ஒரு நாள் நேரம் கேட்டுக் குறித்துக்கொண்டு அவரைப் பார்ப்பேன்,” என்றேன்.

பல இடையூறுகளால் நான் அவரைச் சந்திப்பது தடைப்பட்டுக் கொண்டே
இருந்தது. இதற்கிடையில்  அவர் ஒரு பிரபல வார இதழில் “இந்த வாரம் சந்தித்தேன்” என்னும் தலைப்பில் தம்மைப் பார்க்க வந்தவர்கள் பற்றியும் அவர்களுடன் பேசியவை பற்றியும் கட்டுரைத் தொடர் ஒன்றை எழுதத் தொடங்கினார். அந்தக் காலகட்டத்தில் அவரைச் சந்தித்தால், அந்தத் தொடரில் இடம் பெறும் பொருட்டு நான் அவரைச் சந்திக்க வந்திருப்பதாக எண்ணிவிட்டால் என்ன செய்வது என்று அஞ்சியும் கூசியும் அவரைப் பார்க்கப் போகாமல் இருந்துவிட்டேன்.

அவர் காலமான செய்தி வானொலியில் ஒலிபரப்பப்பட்ட நேரத்தில் என் தமிழ்த் தட்டெழுத்துப் பொறியைத் துப்புரவுசெய்து பழுது பார்த்துக் கொண்டிருந்த ஓர் ஒக்கீட்டாளர், தமது வேலையை நிறுத்திவிட்டு, ‘வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடுவரை பிள்ளை, கடைசி வரை யாரோ?’  என்கிற வரிகளை வாய்விட்டுச் சொல்லி நினைவு கூர்ந்த பின், ‘இனிமேல்பட்டு யாருங்க, அவர் மாதிரி எழுதப்போறாங்க!’ என்று சொல்லிப் பெருமூச்செறிந்தார்.

என்னைச் சந்திக்க விரும்புவதாய் அவர் சொன்னது தெரிந்த பிறகும் ஒத்திப் போட்டுக்கொண்டே இருந்ததும், நான் முடிவெடுத்துப் போய்ப் பார்ப்பதற்குள் அவர் காலமாகிவிட்டதும் என்னை உறுத்திக்கொண்டே இருக்கின்றன.
jothigirija@live.com
………    `

Series Navigationபோதி மரம் சத்யானந்தன் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 28வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -10 மூன்று அங்க நாடகம்
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Comments

  1. Avatar
    Dr.G.Johnson says:

    தன்னைத் தாக்கியோ அல்லது தன்னை விமர்சிக்கும் எந்த எழுத்தையும் அவர்போல் சொந்த பத்திரிகையான “கண்ணதாசன்’ பத்திரிகையில் போடும் வாய்ப்பில்லை. அவர் எது பற்றியும் கவலைப்படாதவர் என்பதைக் காட்டுகிறது.இது அவரின் பெருந்தன்மையைக் கூறுகிறது .அவர் அழைத்தும் போகாமல் போனது பெரும் இழப்பே! நல்ல நினைவும் பகிர்வும் இது…டாக்டர் ஜி,ஜான்சன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *