நீங்காத நினைவுகள் – 11

This entry is part 7 of 20 in the series 21 ஜூலை 2013

காமராஜ்!
‘காலா காந்தி’ – கறுப்பு காந்தி –  என்று அழைக்கப்பட்டவர். காந்திக்கு இணையானவர் என்கிற மதிப்பையும் மரியாதையையும் பெற்றவர். அதனாலேயே இந்த ஆகுபெயர். இவ்வாறு அழைக்கப்படுவதற்கு மிகவும் பொருத்தமானவர். தகுதியுள்ளவர். இன்னும் சரியாகச் சொல்ல வேனண்டுமானால் காமராஜ் காந்தியை விடவும் உயர்ந்தவர் என்று கூடச் சொல்லிவிடலாம் என்று தோன்றுகிறது. காந்திஜியாவது தம் இள வயதில் ‘அப்படி, இப்படி’ இருந்தவர். தம் தப்புகள், தவறுகள், சறுக்கல்கள் ஆகியவற்றை யெல்லாம் தமது தன்வரலாற்றில் மக்களுக்குத் தெரிவித்தவர்.

ஆனால் காமராஜ் அவர்களைப் பொறுத்தமட்டில் அப்படியெல்லாம் அவர் வாழ்க்கையில் தப்புகள் நிகழ்ந்ததாய்த் தெரியவில்லை. அவர் தம் வரலாற்றை எழுதவில்லைதான். எனினும், பராபரியாய்க் கூட அவரைக் குறைத்து மதிப்பிடக்கூடிய எதுவும் காதில் விழுந்ததில்லை என்றே சொல்லிவிடலாம். இதன் அடிப்படையிலேயே அவர் மகாத்மா காந்தியையும் விட உயர்ந்தவர் என்கிற மதிப்பீடு எழுகிறது.

தவறுவதற்கான சந்தர்ப்பங்கள் மகாத்மாவைத் தேடி வந்து அவரைப் புடமிட்ட பொன்னாக்கின என்பது உண்மைதான்.  ஆனால் காமராஜ் அவர்களின் வாழ்க்கையில் இது போல் நிகழ்ந்ததாய்த் தெரியவில்லை. காந்தியினும் சிறந்தவராய்க் கருதப்படுவதற்கான தகுதி இவருக்கு வந்தது தற்செயலான இதனாலும் இருக்கலாம். மகாத்மாவின் வாழ்க்கையில் நடந்தவை போன்ற சோதனைகள் காமராஜ் அவர்களுக்கு   ஏற்படவில்லை என்பது  கூட அதற்குக் காரணமாக இருக்கக்கூடும். எனவே, மகாத்மா காந்தியை இவருடன் ஒப்பிட்டு அவரைக் குறைத்து மதிப்பிட்டுவிட்டதாக யாரும் தப்புக் கணக்குப் போட வேண்டாம்.

காமராஜ் அவர்களைப் பற்றி நினைக்குந்தோறும், அவரது எளிமை, பணத்துக்கு ஆசைப்படாமை, கடமையுணர்வு, ஏழைகள் மீது இயல்பாகவே அவருக்கு இருந்த ஈவிரக்கம்  ஆகியவையே நினைவுக்கு வருகின்றன. அதனால்தான், ஏழைமையின் விளைவாகவே சிறுவர் சிறுமியர் படிப்பில் ஈடுபடாமல் வேலை செய்து சம்பாதிக்கப் போய்விடுகிறார்கள் என்கிற காரணத்தை உணர்ந்து இலவச மதிய உணவுத் திட்டத்தை அமலுக்குக் கொண்டுவந்து ஏழைக் குழந்தைகளின் பெற்றோர் அவர்களைப் பள்ளிக்கு அனுப்பச் செய்தார். இது யாவர்க்கும் தெரிந்ததுதான்.

ஆனந்தவிகடனில்  உதவி ஆசிரியராக இருந்த அமரர் சாவி அவர்கள் அப்போது முதலமைச்சராக இருந்த காமராஜ் அவர்களின் தாயார் சிவகாமி அம்மாளைப் பேட்டி கண்டபோது, அவ்வம்மையார், ‘இந்த வீடு ஒழுகுது. எம்மவன் ரிப்பேர் பண்ணக் காசு அனுப்ப மாட்டேன்றான். என் சாப்பாட்டுக்கும் மத்தச் செலவுக்கும் அவன் அனுப்புற பணம் பத்தலைன்னு, கூடக் கொஞ்சம் அனுப்பச் சொல்லிக் கேட்டா அதுவும் அனுப்புறதில்லே. ‘இதைவிடக் கொறஞ்ச பணத்துதுல லச்சக்கணக்கான ஏழைங்க இந்த நாட்டில வாழறாங்கன்னு தெரியுமா? அவங்களைப் பாரு’ன்றான்’ என்று தம் மகன் காமராஜைப் பற்றி அவரிடம் அங்கலாய்த்தது இந்தத் தலைமுறையினரில் எத்தனை பேருக்குத் தெரியுமோ!

ஒரு முறை அவர் தேர்தலில தோற்றுப் போனது நமக்குத் தெரியும். அப்போது ஒரு காங்கிரஸ்காரர், ‘மக்களுக்காக நீங்கள் எவ்வளவோ செய்திருக்கிறீர்கள். அப்படியும் நீங்கள் ஜெயிப்பதற்குத் தேவையான வாக்குகள் விழவில்லை. என்ன காரணம் என்று யோசித்துப் பார்த்தீர்களா? எதிர்க்கட்சிக்காரர்கள் ஓயாத பிரசாரத்தின் மூலம் நம்மை வீழ்த்திவிட்டார்கள். நீங்களோ நாம் மக்களுக்கு என்னவெல்லாம் நன்மைகள் செய்தோம் என்பதைக் கூடப் பிரசாரத்தில் விவரமாய்த் தெரிவிக்கவே இல்லை. நீங்கள் தோற்றதற்கு அதுதான் காரணம்!’ என்று சொன்ன போது, காமராஜ் சொன்னார்: ‘அட, போய்யா! பெத்த தாய்க்குச் சேலை வாங்கிக் குடுக்கிற மகன், ‘எங்கம்மாவுக்கு நான் சேலை வாங்கிக் குடுத்தேன், எங்கம்மாவுக்குச் சேலை வாங்கிக்க குடுத்தேன்னு தம்பட்டம் அடிக்கலாமான்னேன்! நம்ம கடமையைத்தானேய்யா நாம செஞ்சோம்? அதில பீத்திக்கிறதுக்கு என்ன இருக்குன்னேன்?’

பாவம், காமராஜ்! பொய்யான அவதூற்றுப் பிரசாரங்கள் உண்மையைக் காட்டிலும் வலிமை வாய்ந்தவை என்பது கள்ளமற்ற அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. தம்மை மக்களுக்கு நன்கு தெரியுமாதலால், எதுவும் பேசாமல், கும்பிட்டபடியே தம் தொகுதியில் நடந்து போனாலே போதும்,  தம்மை நன்றி மிக்க அவர்கள் வெற்றிகொள்ள வைப்பார்கள் என்று வெகுளித்தனமாய் நம்பி ஏமாந்தார். பொய்யான அவதூறுகளைத் திரும்பத் திரும்பச் சொன்னால், அவை உண்மை போல் ஒலிக்க, அவற்றை மக்கள் நம்பி ஏற்றுக்கொண்டுவிடுவார்கள் என்பது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.
எனினும் இந்தத் தோல்விக்குப் பிறகு, காமராஜ் மக்களோடு பேசத்தொடங்கினார்.

ஸ்விஸ் வங்கியில் காமராஜ் ஏழு கோடியோ அதற்கும் மேலோ போட்டு வைத்திருப்பதாய்ப் பிரசாரம் செய்தார்கள். ‘’என்னிடம் அவ்வளவு காசு கிடையாது. அது ஜனங்களுக்குத் தெரியும்” என்று மவுனமாய் இருக்கலாமா? அவர் காலமான போது அவரது சட்டைப்பையில் மிகச் சில ரூபாய் நோட்டுகளே இருந்ததாயும், வங்கிக் கணக்கிலும் அப்படித்தான் என்றும் செய்திகள் வெளியாயின.

இப்படிப்பட்ட அப்பாவி காமராஜ் அவர்களையும் அனசூயாதேவி மூலம் தான் சந்திக்க வாய்த்தது. அவரைச் சந்திக்க நாங்கள் இருவரும் அழைக்கப்பட்ட போது, காமராஜ் ஒரு தலையணையை முதுகுக்கு முட்டுக்கொடுத்தபடி சுவரில் சாய்ந்து உட்கார்ந்துகொண்டிருந்தார். அந்த அறையில் நாற்காலிகளோ சோஃபாக்களோ இல்லை.
வழக்கம் போல் அறிமுகப்    படலம் முடிந்த பின், ‘கல்கண்டுல எழுதுவாங்களா?  தமிழ்வாணன் பத்திரிகையில்லே அது? அதெல்லாம் படிக்க எனக்கேது நேரம்?’ என்று புன்னகை செய்தார்.

பொதுவாக அவர் பேசிக்கொண்டிருந்த போது, அவருடைய உதவியாளர் – அவர் பெயர் வைரவன் என்று நினைவு – அவரது அறைக்கு வந்து, ‘வக்கீல் குமாஸ்தா உங்க கிட்ட என்னவோ படிச்சுக் காட்டணுமாம். வரலாமான்னு கேக்குறாரு,” என்று தெரிவித்தார்.  காமராஜ் ஒப்புதல் அளித்த்தும் இரண்டே நிமிடங்களில் அந்த வக்கீல் குமாஸ்தா அங்கு வந்து நின்றார்.    ”படிங்கன்னேன்” என்று அவர் சொன்னதும் ஆங்கிலத்தில் தட்டெழுதப் பட்டிருந்த அந்தத் தாள்களின் முதல் பக்கத்தை அவர் படிக்கலானார்.

தம் தலையைத் தடவியவாறே, காமராஜ் அதைக் கவனத்துடன் செவிமடுத்தார்.  சில வரிகளை அவர் படித்த்தும், “எதுக்கு வளவளன்னு சொல்லணும்? ஹேபியஸ் கார்ப்பஸ்னு சுருக்கமாச் சொல்லவேண்டியது தானேன்னேன்!” என்றாரே பார்க்கலாம்!  அப்போது அந்தச் சொல் தெரிந்திருந்ததே தவிர அதன் பொருள் தெரியாது. (திரும்பிப் போன பின் ஆங்கில அகராதியைப் பார்த்துத் தெரிந்து கொண்டேன்.)

அனசூயா தேவி,  ‘காமராஜுக்கு ஆங்கிலம் தெரியாதென்று பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆங்கிலத்தில் அவருக்குப் பெரிதாக எழுதத் தெரியாதே தவிர, என்ன பேசினாலும், ஆங்கிலத்தில் உள்ளதைப் படித்துக் காட்டிலும் சரியாகப் புரிந்து  கொள்ளுவார். அதற்குப் பதிலும் சொல்லுகிற அளவுக்கு அவருக்கு ஆங்கிலத்தில் பழக்க அறிவு உண்டு.  காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி அவர்களைத் தம் தலைவராக ஏற்றுக்கொண்டு அவருடன் பலகாலம் உடனிருந்து பழகியதன் விளைவு அது!’ என்று ஏற்கெனவே சொல்லியிருந்தது உண்மைதான் என்பது தெளிவாயிற்று.

வக்கீல் குமாஸ்தா கூச்சத்துடன் தலையைக் கவிழ்த்துக்கொண்டார். காமராஜ் தொடர்ந்து, “அஃபிடவிட் இன்னும் தெளிவாயிருந்தா நல்லது.  நீங்க நல்லாத்தான் எழுதியிருக்கீங்க. ஒரு அரை மணி  கழிச்சு வாங்க. நாம அது பத்தி வெவரமாப் பேசலாம்!’ என்றார். வக்கில் குமாஸ்தா தலையசைத்து அங்கிருந்து அகன்றார்.

அவர் போன பிறகு, காமராஜ்  ‘அப்ப? உங்க ஹரிஜன் ஹாஸ்டலுக்கு நிதிதிரட்ட அடுத்தாப்ல என்ன சினிமாப் படம் போடப் போறீங்க?’   என்று அனசூயாதேவியை நோக்கி வினவினார்.

‘இன்னும் முடிவு பண்ணலீங்க.  ஆனா, எழைப் பங்காளன் சினிமாப் போடலாமான்னு ஒரு யோசனை. அதை எடுத்தவங்களைப் பாத்துப் பேசணும், ‘ என்று அவர் சொன்னதும்,  ‘நான் இப்ப கேட்டதையும் நீங்க சொன்னதையும் அவங்க கிட்ட சொல்லுங்க. ஒத்துக்குவாங்க. அப்படி ஒத்துக்காட்டி, எனக்குச் சொல்லுங்க. அப்பால பாக்கலாம்!…போன வாட்டி போட்டீங்களே அந்த மலைக்கள்ளன்ற சினிமா ரொம்பவே நல்லாருந்திச்சு. அதான் கடேசி வரை இருந்து பாத்தேன்.  அதுல வர்ற அந்த ஃபோர்ஃப்பார்ட்டிவொன்  (441) கான்ஸ்டபிள் நடிப்புத்தான் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்திச்சு. கண்ணைக் கண்ணை உருட்டிக்கிட்டு அவரு நல்லாப் பண்ணினாரு!’ என்று நகைச்சுவை நடிகர் டி.எஸ். துரைராஜ் அவர்களின் நடிப்பை நினைவு கூர்ந்து புன்னகை செய்தார்.

ஒரு நன்கொடை விழாவுக்கு அவரிடம் தேதி பெற்றபின், நாங்கள் விடை பெற்றோம். வீடு திரும்பிய பிறகும், அன்றெல்லாம் அவர் ஞாபகமாகவே இருந்தது.

இந்த ஒரே ஒரு சந்திப்புக்குப் பிறகு சில நாள்கள் கழித்துச் சென்னை மாநகராட்சிக்கான கவுன்சிலர்களின் தேர்தல் வந்தது.  பல ஆண்டுகளுக்கு நடக்காமலே இருந்த பின் அறிவிக்கப்பட்ட தேர்தல் அது. மிக நெடிய இடைவெளிக்குப் பின்னர் வந்த தேர்தலாதலால் அரசியல் கட்சிகளிடையே வலுத்த போட்டி இருந்தது.  காமராஜ் அவர்கள் பிரசாரத்துக்காக எங்கள் இருப்பிடம் (ஷெனாய்நகர்) அமைந்த தொகுதிக்கு வரப் போவது ஒரு நாள் தெரிந்தது.

காமராஜ் வந்தார். ஒரு மாட்டு வண்டியில் நின்று இருகைகளையும் கூப்பியவாறு நாங்கள் வசித்த தெருவின் இரு மருங்கிலும் அவரவர் வீட்டு வாசலில் நின்றிருந்த மக்களை நோக்கிப் புன்சிரிப்புடன் குபிட்டவாறே அவர் இருக்க, வண்டி நகர்ந்தது. அது எங்கள் வீட்டு வாயிலை நெருங்கிய கணத்தில் எல்லாரையும் பார்த்துக் கும்பிட்ட அவர் பார்வை சட்டென்று என் மீது பதிந்தது.

‘அசால்ட்டாய்’ என்று  சொல்லுவார்களே, அது மாதிரி யாருக்கு வந்த விருந்தோ என்பது போல் நின்றுகொண்டிருந்தேன்.
ஆனால், என்ன ஆச்சரியம்! எங்கள் வீட்டை அவரது மாட்டு வண்டி நெருங்கிய கணத்தில் எல்லாரையும் நோக்கிக் கும்பிட்ட காமராஜ், அவர் பார்வ என் மீது பதிந்ததுமே, தம் விழிகளை மலர்த்திப் புன்னகை செய்து ஆசீர்வதிக்கும் பாணியில் – அல்லது நல்லா இருக்கியாம்மா என்று கேட்கும் தோரணையில் – கையை அசைத்தார். இது நான் சிறிதும் எதிர்பாராத ஒன்றாதலால், திகைத்துப் போனதில், பதிலுக்கு உடனே கும்பிடத் தோன்றாமல், சிலையாகச் சில நொடிகள் நின்று போன பிறகே அவரை நோக்கிக் கும்பிட்டேன். அவரது நினைவாற்றல் பற்றிய பெருவியப்பு ஏற்பட்டது.
மிகவும் குறுகலான தெருவாதலால், அவர் பயணித்த மாட்டுவண்டி எங்கள் வீட்டு வாசலின் மிக அருகே வந்தது. இதனால், காமராஜ் அவர்கள் விசேஷமாய்க் கண் மலர்த்தி என்னை நோக்கிப் புன்னகை செய்து கையையும், அசைத்தது அருகில் இருந்த எல்லாரும் கவனித்துவிட்டார்கள்.  நான் மிகவும் பெருமைப்பட்டுப் போனேன்.

‘காமராஜை உனக்குத் தெரியுமா?’ என்று பக்கத்து விட்டு அம்மாள் கேட்க,  ‘தெரியும்! ‘ என்று பெருமிதத்தோடு பதில் (பொய்) சொன்னேன். (ஒரே ஒரு முறை அவரது வீட்டுக்குச் சென்று சந்தித்துவிட்டு, ‘தெரியும்’ என்று சொன்னால், அது பொய்தானே?)    பண்புக்கும் படிப்புக்கும் சம்பந்தமே இல்லை என்பதை அடிக்கடி மெய்ப்பித்தவர். ஒரு முறை சட்ட மன்றத்தில் அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அறிஞர் அண்ணா அவர்களைக் காங்கிரஸ் கட்சிக்காரர் ஒருவர் அவரது தனிப்பட்ட வாழ்க்கை சார்ந்த ஒன்றைக் குறிப்பிட்டுப் பண்பற்ற முறையில் அவரை இழிவுபடுத்த முற்பட்ட போது, உடனேயே குறுக்கிட்ட காமராஜ் தம் கட்சிக்காரதை வன்மையாய்க் கண்டித்து அவரை உட்காரப் பணித்துவிட்டார்.

இப்போதும் இருக்கிறார்களே!  ஒலிபெருக்கியின் முன் நிற்கையில், சில அரசியல் தலைவர்களுக்குத் தலைகால் தெரிவதில்லை. அருவருக்கத்தக்க மட்டரகமான சொற்களைப் பயன்படுத்தி ஆபாச மழையன்றோ பொழிகிறார்கள!

அரசு சார்ந்த பதவியில் ஒருவர் அமர்வது மக்களுக்கு நல்லது செய்வதற்காக மட்டுமே என்பதைப் புரிந்துகொண்டு அதைச் செயல்படுத்தவும் கெய்த  மிக, மிகச் சில அரசியல் தலைவர்களில் காமராஜ் மிகச் சிறந்தவராய்த் திகழ்ந்தவர். அவரது ஆட்சிக்காலத்தில்தான் தமிழகத்தின் அனைத்துப் பட்டிதொட்டிகளுக்கும் மின்வசதி வந்தது.

ஒரு முறை ஓர் அமைச்சர், ஒரு நாட்டில், அதன் நகரங்களை எவ்வாறு ஒழுங்குடன் அமைக்கவேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ள அமெரிக்காவுக்குச் சென்று அங்குள்ள நகரங்களைப் பார்த்து வர அனுமதி கோரிக் கோப்பில் குறிப்பு எழுதிய போது, அப்போது முதலமைச்சராக இருந்த காமராஜ், ‘இதற்கு அமெரிக்காவுக் கெல்லாம் போக வேண்டிய அவசியம் இல்லை. தமிழ்நாட்டு மதுரைக்குச் சென்று தெரிந்துகொள்ளலாம்’ என்று பதில் எழுதினாராம்!  அரசுப் பணத்தை வீணாக்கக்கூடாது என்பதில் கண்ணுங் கருத்துமாக இவரைபோல் மிகச் சிலரே இருந்திருக்கக் கூடும். காமராஜ் இந்தியக் குடியரசின் தலைவராக இருந்திருப்பின், தமக்கு அயல் நாடுகளிலும் இந்தியாவிலும் அளிக்கப்பட்ட பரிசுகளையெல்லாம் தமது பணிக்காலம் முடிந்ததும் அள்ளி முடிந்து கொண்டு போயிருந்திருப்பாரா என்ன! அல்லது தமது இலவச மாளிகையில் தம் உறவினர்களை யெல்லாம் அவர்களுக்கு ஓசிச் சாப்பாடு போட்டுத் தங்கத்தான் வைத்திருந்திருப்பாரா! அல்லது வெளி நாடுகளுக்கு ஒரு பட்டாளத்தையே உடனழைத்துக்கொண்டு போயிருந்திருப்பாரா! நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை.

பொது மக்களுக்காக உழைப்பதை விடுத்துத்  “தம்  மக்களுக்காக”  இடைவிடாது உழைக்கும் இன்றைய அரசியல்வாதிகளைப் பற்றி நினைக்கையில், “காமராஜ் உண்மையில் எவ்வளவு பெரிய மனிதர்!  உத்தமர்! ‘படிக்காத மேதை’, ‘பெருந்தலைவர்’ போன்ற பட்டங்கள் காமராஜ் அவர்களுக்கு மிகவும் பொருத்தமானவைதான் என்று தோன்றுகிறதல்லவா!

jothigirija@live.com

Series Navigationமருத்துவக் கட்டுரை குடல் வால் அழற்சிபுகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ – 16
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

5 Comments

  1. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    அன்புமிக்க கிரிஜா,

    கறுப்புக் காந்தியைப் பற்றி இனிய நினைவுக் கட்டுரை திண்ணையில் அரங்கேற்றியதற்கு எனது பாராட்டுகள். முதல்வராய் இருந்த போது என் தந்தையாருக்கு தேசத் தியாகிகள் செம்புப் பட்டயம் கொடுத்து, 100 ரூ உபகாரச் சம்பளமும் கொடுத்தார். அப்போது எங்கள் வீட்டில் வறுமை; பெற்றோர், ஐந்து பிள்ளைகள்.

    அன்புடன்,
    சி. ஜெயபாரதன்

  2. Avatar
    ஷாலி says:

    கர்மவீரர் காமராஜ் அவர்களை நேரில் சந்தித்தவர்கள் பாக்கியசாலிகள்தான்.நிச்சயம் இதுகுறித்து கட்டுரையாசிரியர் பெருமிதம் கொள்ளலாம்.இன்று வாழும் பல அரசியல் ஆட்சித் தலைவர்கள் கரங்களெல்லாம் கறைபடிந்து கருந்தலைகளாக இருப்பது நம் செய்த பாவம் என்றுதான் சொல்லவேண்டும். அன்று அரசு சொத்துக்கு ஆசைப்பட்டவர்கள் விரல் விட்டு எண்ணும் நிலையில்தான் இருந்தனர்.காரணம் தெய்வ பயம்.
    “ஏழையின் சிரிப்பில் இறைவனைக்காண்போம்” என்ற கோஷம் போட்டு ஆட்சியைபிடித்த சுயமரியாதை சுடர்கள் காலத்தில்தான் எங்கும் ஊழல் எதிலும் ஊழல்.அரசு அலுவலகங்களிலிருந்து அமைச்சர் வரை கையூட்டு இன்றி காரியமில்லை.லஞ்சப் பணத்தில் மஞ்சம் கொள்பவர்களுக்கு சுயமரியாதையும் இல்லை வெட்கமும் இல்லை. “உனக்கு வெட்கம் இல்லையேல் நீ விரும்பியதை செய்து கொள்” என்று நபிகள் நாயகம் சொன்னதுபோல் இவர்கள் லஞ்சம் வாங்க வெட்கப்படுவதில்லை.
    பெருந்தலைவர் காமராஜரால் வளர்த்தெடுக்கப்பட்ட கக்கன் போன்றவர்கள்,அமைச்சர் பதவி முடிந்ததும் நடந்து சென்று பஸ் ஏறி தம் குடிசை வீட்டிற்கு சென்ற சம்பவத்தை இனிக் காண முடியாது. தமிழ் நாடு காமராஜரை மட்டும் இழக்கவில்லை,அவர் காலத்தில் இருந்த உயர்ந்த பண்பாட்டு விழுமியங்களையும் நாம் இழந்து விட்டோம். கல்விக் கண் திறந்த காமராஜ் புகழ் என்றும் நிலைத்திருக்கும்.

  3. Avatar
    murali says:

    //ஒரு முறை ஓர் அமைச்சர், ஒரு நாட்டில், அதன் நகரங்களை எவ்வாறு ஒழுங்குடன் அமைக்கவேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ள அமெரிக்காவுக்குச் சென்று அங்குள்ள நகரங்களைப் பார்த்து வர அனுமதி கோரிக் கோப்பில் குறிப்பு எழுதிய போது, அப்போது முதலமைச்சராக இருந்த காமராஜ், ‘இதற்கு அமெரிக்காவுக் கெல்லாம் போக வேண்டிய அவசியம் இல்லை. தமிழ்நாட்டு மதுரைக்குச் சென்று தெரிந்துகொள்ளலாம்’ என்று பதில் எழுதினாராம்! அரசுப் பணத்தை வீணாக்கக்கூடாது என்பதில் கண்ணுங் கருத்துமாக இவரைபோல் மிகச் சிலரே இருந்திருக்கக் கூடும்.//

    Kamarajar is good man. Worst townplanning in Tamilnadu – he ignored that ministers and officals plea. Now look a tamilnadu cities….streets like rat holes…..no good infrastrucure….now currently govt is struggling to lay new roads or to expand the present streets…KAMARAJAR DONT HAVE A VISION ON FUTURE…..because he is uneducated…Now,We are jealous on america,singapore,malaysia,gulf looking at their buildings and townplanning …what is the use….at the time of independence they should have thought about it…Mr. Clean slate kamarajar ignored many welfare schemes…that is other side of a coin….

  4. Avatar
    K.Muthuramakrishnan says:

    //காந்திஜியாவது தம் இள வயதில் ‘அப்படி, இப்படி’ இருந்தவர்.//

    கெட்ட சகவாசம் இருந்த அண்ணனுடன் சேர்ந்து ஒரே ஒரு முறை மாமிசம் சாப்பிட்டார்.கையில் அணிந்திருந்த தங்கக் காப்பை வெட்டி செலவு செய்தார்.இதற்காக தந்தையிடம் மன்னிப்புக் கேட்டார்.

    நீண்ட நாள் படுக்கையில் இருந்த தந்தையார் இறந்த போது அருகில் இருக்காமல் தன் தனி அறையில் மனைவியுடன் இருந்தார்.

    ச‌க தோழர்கள் அழைத்துச் சென்றதால் வேசையிடம் சென்றும் இன்னதென்று விளங்காமல், அவளிடம் திட்டு வாங்கி வெளியேறினார்.

    இவை மூன்றுமே மஹாத்மாவைப் பற்றி அவரே கூறிய தகவல்கள்.’இப்படி அப்படி’என்று பூடகமாக எழுதி, மகாத்மா இளம் வயதில் ஒழுக்கம் கெட்டவர் என்று ஒரு உருவகத்தை உருவாக்கிவிட்டீர்கள். வருந்துகிறேன்.

  5. Avatar
    Dr.G.Johnson says:

    நான் வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியில் பயின்றபோது ஜெகதீஸ் என்பவன் என் வகுப்பு மாணவன். இவனின் தந்தை டாக்டர் இராமலிங்க சுவாமி. அவர் இந்திய அரசின் மருத்துவ இயக்குநர்.

    எங்கள் விடுதியில் ஞாயிறுகளில் மதிய விருந்து சிறப்பாக நடைபெறும். சில முக்கியமானவர்களை அதில் விருந்தினராக அழைப்போம்.

    ஜெகதீஸ் ஒரு நாள் திரு காமராஜரை தன்னால் அழைத்துவர முடியும் என்று சொன்னபோது நாங்கள் யாரும் நம்பவில்லை.அவர் அப்போது அகில இந்திய காங்கிரஸ் தலைவர்.

    ஆனால் அவன் சொன்னபடியே செய்து காட்டினான். குறிப்பிட்ட ஞாயிறு மதிய உணவு நேரத்தில் திரு காமராஜ் காரில் வந்து இறங்கினார்.அவருடன் ஒரு உதவியாளர் கையில் சுடுநீர் பிளாஸ்க் ஏந்தியவண்ணம் பின் தொடர்ந்தார்.

    விருந்து உண்டபின் எழுந்து நின்று பேசினார்!

    நாங்கள் அது கேட்டு வியந்தோம்!

    அவர் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசினார்!

    திரு காமராஜரை அவ்வாறு நேரில் பார்த்து பேசுவது கேட்டது மறக்க முடியாத அனுபவம்!

    டாக்டர் ஜி.ஜான்சன் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *