நீங்காத நினைவுகள் 32

This entry is part 1 of 22 in the series 2 பெப்ருவரி 2014

           குறிப்பிட்ட தொழிலைச் செய்பவர்களை அத்தொழிலால் இனம் பிரித்துக் கிண்டல் செய்வதோ, அத்தொழில் சார்ந்த அவர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதோ காலங்காலமாக நடந்து வந்துள்ளதாய்த் தெரிகிறது.

பல ஆண்டுகளுக்கு முன்னால் வெளியான பழைய திரைப்படத்தில் வந்த சலவைக்காரர்கள் பற்றிய ஒரு பாடலுக்குச் சலவைத் தொழிலாளர்களிடமிருந்து எதிர்ப்புக் கிளம்பியதாக என் அம்மா சொல்லக் கேட்டதுண்டு.

“வண்ணான் வந்தானே,

வண்ணாரச் சின்னான் வந்தானே!

வெளுக்கப் போகையிலே, வண்ணாத்தி

         வெளுக்கப் போகையிலே!”  – என்று என் அம்மாவே பாடக் கேட்டிருக்கிறேன்.

 

மிகச் சிறு வயதில் கேட்ட பாடலாதலால் மேற்கொண்டு அவர் பாடிய வரிகள் நினைவில் இல்லை. எனவே, சலவைத் தொழிலாளிகள் ஆட்சேபிக்கும் வண்ணம் அதில் இருந்த வாசகம் இன்னதென்பது தெரியவில்லை.

கொஞ்ச நாள்கள் கழித்து அந்தப் பாட்டில் மேற்கொண்டு வரும் வரிகளைப் பற்றிக் கேட்ட போது என் அம்மாவ்க்கும் சொல்லத் தெரியவில்லை. மறந்து போய்விட்டிருந்தார். ஆனால், சலவைத் தொழிலாளிகள் அதன் எந்த வரிகளுக்கு ஆட்சேபித்தார்கள் என்பதும் அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.  (95 அகவைகள் கடந்து இன்று வாழ்ந்துகொண்டிருப்பவர்களுக்க் ஒருகால் தெரிந்திருக்கக் கூடும்.)

இதே போன்று, பி.யூ. சின்னப்பா, பி. கண்ணாம்பா ஆகியோர் நடித்திருந்த “கண்ணகி” திரைப்படத்தில் என்.எஸ். கிருஷ்ணனும் பொற்கொல்லர்கள் சிலர் செய்யும் நாணயக்குறைவான செயலைக் கிண்டல் செய்திருந்தார். தங்க நகையை ஒருவரிடமிருந்து பெற்றுக்கொண்டு வீட்டினுள் சென்று திரும்பிவந்து உரசிப் பார்த்ததில் அது பித்தளை என்று தெரிந்ததாய்ச் சொல்லி அதே போன்ற வேறொன்றை அவரிடம் கொடுத்துப் பொற்கொல்லர் ஏமாற்றுவார். “கண்ணகி”யைப் பொறுத்த மட்டில் அவ்வாறு காட்ட வேண்டியது அவசியமாகவும் இருந்தது. அதற்குப்   பொற்கொல்லர்களிடமிருந்து எதிர்ப்புக் கிளம்பியதாகவும், ஆனால் என்.எ.ஸ். கிருஷ்ணன் அதைப் பொருட்படுத்தவில்லை என்றும் சொல்லப்பட்டது.

எனினும், அவர் யாரைத்தான் விட்டு வைத்தார்! “மணமகள்’ என்னும் திரைப்படம் என்று ஞாபகம். அதை அவரே இயக்கினார் என்றும் ஞாபகம். அந்தக் காலகட்டத்தில் தந்தை பெரியார் பிள்ளையார் சிலை உடைப்பு இயக்கத்தை மிக மும்முரமாய்த் தமிழ்நாட்டில் நடத்திக் கொண்டிருந்தார். “மணமகள்”  திரைப்படத்தில் கீழ்க்காணும் உரையாடல் ஒன்று வரும்:

”பிள்ளையாருக்குத் தேங்காயை உடைக்கட்டுமா, இல்லாட்டி, தேங்காய்க்குப் பிள்ளையாரை உடைக்கட்டுமா?”

என்.எஸ். கிருஷ்ணன் சொல்லுவார்: “பிள்ளையாரை எதுக்குப்பா உடைக்கணும்? அவர் பாட்டுக்கு இருந்துட்டுப் போகட்டும்!” என்று பதில் சொல்லுவார்.

இதிலிருந்து என்.எஸ். கிருஷ்ணனின் நடுநிலைப்பாடும், துணிச்சலும் வெளியாகின்றன அல்லவா!

மதிப்புக்குரிய அதே பெரியார் பரம்பரைப் பணியாக அவரிடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளையார்  கோயில் ஒன்றின் அறங்காவலராகவோ அல்லது பொறுப்பாளராகவோ இருந்தார் என்பது பலருக்கும் தெரிந்த உண்மை. அது வேறு, இது வேறு என்னும் பெரியாரின் நடுநிலைப் போக்கையும் பாராட்ட வேண்டியதுதான், இல்லையா? நிற்க.

தொழில் சார்ந்த கிண்டல்கள் பற்றி எழுதுகையில், சில ஆண்டுகளாய்த் தமிழ் இதழ்கள் பணிப்பெண்கள் பற்றித் தரக்குறைவாகவும், கொச்சையாகவும் வெளியிட்டுக்கொண்டிருந்த நகைச்சுவைத் துணுக்குகள் பற்றி நினைவு கூராதிருக்க முடியவில்லை.

சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்னால், தமிழ்த் திரைப்படங்கள் சிலவற்றிலும் நடித்துள்ள மலையாள நடிகர் ஜெயராம் தமிழகப் பணிப்பெண்கள் பற்றி ரசக்குறைவான கருத்தை வெளியிட்டார். ‘தமிழ் நாட்டுப் பணிப்பெண்கள் கறுப்புப் போத்துகள். அவர்களை யார் வேலைக்கு வைத்துக்கொள்ளுவார்கள்?” என்று அவர் திருவாய் மலர்ந்தார். (உங்கள் வீட்டில் வேலை செய்வது தமிழ்ப்பெண்ணா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு இவ்வாறு பதில் சொன்னதாய்க் கேள்வி.) இது பற்றிய செய்தி வெறும் வாயையே மெல்லும் நம் தமிழ் இதழ்களில் அவல் கிடைத்த சுவையுடன் வெளிவந்தது.

அவ்வளவுதான்! தமிழ் இரத்தம் ஓடும் உடம்பும், உணர்வும் படைத்த ஓர் இளைஞருக்கு ஆத்திரம் பொத்துக்கொண்டு புறப்பட்டுவிட்டது. அவர் ஒரு திரைப்பட இயக்குநரும் அரசியலில் ஈடுபாடு கொண்டவரும் ஆவார். அவருடைய கோபப் பேச்சால் கிளர்ந்தெழுந்த பச்சைத் தமிழர்கள் சிலர் நடிகர் ஜெயராமின் பங்களாவை முற்றுகை யிட்டு அடித்து நொறுக்கிப் பெரும் சேதம் விளைவித்துவிட்டார்கள். ஜெயராம் தம் தரக்குறைவான சொற்களுக்காக மன்னிப்புக் கேட்டதோடு தமிழக அரசின் பாதுகாப்பையும் நாட வேண்டியதாயிற்று. ஜெயராம் சொன்னது ரசகுறைவானதே யென்றாலும், அ;ந்த அளவுக்குப் போகவேண்டுமா என்று தோன்றியதால் என்னிடமிருந்து கீழ்க்காணும் கடிதம் தமிழ் இதழ்கள் சிலவற்றுக்குப் பறந்தது.

தமிழகப் பணிப்  பெண்களிடம் மன்னிப்புக்

கேட்கத் துணியுமா (1)……(2)….. வகையறாக்கள்?

ஜோதிர்லதா கிரிஜா

(இப்போது புள்ளி வைத்துள்ள இடங்களில் பணிப் பெண்களை அதிக அளவில் கேவலப் படுத்திக்கொண்டிருந்த 2 தமிழ் இத்ழ்களின் பெயர்களை வெளிப்படையாகவே எழுதியிருந்தேன்.)

                                               

 

நாக்கிலே சனி இருந்ததாலோ அல்லது போதாத காலம் என்கிறார்களே அதனாலோ – வகையாக நடிகர் ஜெயராம் மாட்டிக்கொண்டார். ஜெயராம் பேசியது தவறுதான்.  ஆனால், ஈயத்தைப் பார்த்து இளிக்கின்ற பித்தளைகளாய்த் தமிழ் இதழ்கள் அவரை வாங்கு வாங்கென்று வாங்கி வருகின்றன. படிக்கத் தெரியாத பாமரப் பணிப்பெண்களைத் தமிழகப் பத்திரிகைகள் அவமானப் படுத்தி வருவது போல் வேறு எவரும் அவமானப் படுத்துவதாய்த் தெரியவில்லை. தமிழச்சிகளான பணிப்பெண்களை யெல்லாம், அவர்கள் தாங்கள் பணி புரியும் வீட்டு எசமான ஆண்களை மயக்குகிறவர்கள் என்பது போலவும், கொச்சையாய்ச் சொல்ல வேண்டுமெனில் அவர்களோடு கள்ளத் தொடர்பு கொண்டிருப்பவர்களாயும் சித்திரித்து மட்டமான நகைச்சுவைத் துணுக்குகளை வெளியிட்டு வரும் தமிழ் நாட்டு இதழ்கள் மீது தமிழ் உணர்வு உள்ளவர்களாய்த் தங்களைக் காட்டிக்கொள்ளும் எவரும் பாயாதது ஏன்? பணிப்பெண்களுக்கு மட்டும் படிக்கத் தெரிந்திருந்தால், பத்திரிகை அலுவலகங்கள் என்ன நிலைக்கு ஆட்பட்டிருக்கும் என்பதைக் கண மேனும் உங்களில் எவரேனும் நினைத்துப் பார்த்தது உண்டா? இனியாகிலும் நகைச்சுவையின் பெயரால் பணிப்பெண்களைக் கேவலப் படுத்தும் ஜோக்குகுகளை நிறுத்துங்ககள் உங்களுக்கெல்லாம் மனச் சாட்சி என்பதாய் ஒன்று இருந்தால்.

                இன்னும் சொல்லப் போனால், தாய்மையின் சின்னங்களான பெண்களின் உடலுறுப்புகளையும், அவர்களின் உள்ளாடைகளையும் வைத்து ஜோக்குகள் வெளியிட்டு வரும் பத்திரிகைகள் ஒட்டு மொத்தப் பெண் குலத்திடமும் அன்றோ மன்னிப்புக் கேட்க வேண்டும்?

                இக்கடிதத்தின் வாயிலாக, அனைத்து இதழ்களையும் எழுத்தாளராகிய நான் எந்த அளவுக்குப் பகைத்துக்கொள்ளுகிறேன் என்பது எனக்கு மிக நன்றாய்த் தெரியும். அதைப் பற்றிக் கவலை இல்லை.

                ‘கடவுள் ஒருவர்க்குக் கொடுக்க நினைப்பதை மனிதர்களால் தடுக்க முடியாது. கடவுள் ஒருவர்க்குக் கொடுக்க விரும்பாததை மனிதர்களால் அவருக்குக் கொடுக்கவும்  முடியாது என்னும் பொன்மொழியில் நம்பிக்கை உள்ளவள் நான். எனவே, எனக்கென்று விதிக்கப்பட்டது எனக்குக் கிடைக்கும்!

                இதனை வெளியிட்டு, இனிப் பணிப்பெண்களைக் கேவலப் படுத்தும் ஜோக்குகளைத் தயவு செய்து யாரும் எழுதாதீர்கள் என்று ஆசிரியர் குறிப்பும் போடுவீர்களா? மாட்டீர்களே!

                                                                                                                                                ………

மேற்காணும் கடிதத்தை அவ்விரு பத்திரிகைகளுக்கு மட்டுமின்றி பணிப்பெண்களை இழிவுபடுத்திக்கொண்டிருந்த வேறு சிலவற்றுக்கும், அவ்வாறெல்லாம் செய்யாத கண்ணியமான இதழ்கள் சிலவற்றுக்கும் அதன் நகலை அனுப்பினேன்.

நான் நினைத்தபடியே அவ்விதழ்களில் எதுவும் அதை வெளியிடவில்லை. கண்ணியமான ஏடுகளில் கூட அமுதசுரபி மட்டுமே என் கடிதத்தை வெளியிட்டதோடு அதன் ஆசிரியர் திருப்பூர் கிருஷ்னன் அதன் கீழே ஒரு குறிப்பும் வெளியிட்டிருந்தார்.

”ஏன் போடமாட்டோம்? இதோ போட்டுவிட்டோம். ஆனால் அப்படிப்பட்ட ஜோக்குகளை அமுத சுரபிக்கு அனுப்ப வேண்டாம் என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் நாங்கள் அது போன்றவற்றைப் போடுவதில்லை என்பதை அனைவரும் அறிவார்கள்.” எனும் ரீதியில் அக்குறிப்பை எழுதியிருந்தார்.  எனினும் பத்திரிகைப் பண்பு கருதி நான் வெளிப்படையாகக் குறிப்பிட்டிருந்த அவ்விரண்டு இதழ்களின் பெயர்களையும், யாராருக்கு அதன் நகல் அனுப்பப் பட்டது என்கிற விவரத்தையும்  நீக்கிவிட்டார். (அந்த அமுதசுரபி இதழ் கிடைக்கவில்லையாதலால், அக் குறிப்பின் கருத்தை மட்டும் குறிப்பிட்டுள்ளேன்.)

எப்படியாவது பணம் வந்தால் சரி என்று, மலினமான விஷயங்களையும் (பிற நல்ல விஷயங்களோடு) பிரசுரிக்கும் பத்திரிகைகள் தங்களை மிகுந்த பொறுப்புள்ளவர்கள் போலவும், நாட்டுப்பற்று மிக்கவர்கள் போலவும் காட்டிக்கொண்டு தலையங்கங்களும், கட்டுரைகளும் வெளியிடும் இரட்டை வேஷ ஆஷாடபூதித்தனத்தை என்ன சொல்ல!

அதன்பின், அதிக அளவில் பணிப்பெண்களை இழிவுபடுத்திக்கொண்டிருந்த அவ்விரண்டு இதழ்களிலும் அத்தகைய ஜோக்குகள் வருவதில்லை.  அத்தி பூத்தது போல் எப்போதேனும் ஒரு பத்திரிகை போடுகிறது என்றும், மற்றொன்று அறவே அதை நிறுத்திவிட்டதாகவும் தெரிகிறது.

அது என் கடிதத்தின் விளைவா இல்லாவிட்டால் தற்செயலாக நிகழ்ந்த ஒன்றா என்று தெரியவில்லை. ஒருகால் அமுதசுரபியைப் படித்த அந்த ஜோக்கெழுத்தாளர்கள் அப்படி எழுதுவதை நிறுத்திவிட்டார்களோ என்னவோ! இந்தக் கட்டுரையைப் படிக்க வாய்த்தால், ஒரு வீம்பில், மறுபடியும் தொடங்குவார்களோ என்னவோ! மாட்டார்கள் என்று நம்புவோமாக.

………

Series Navigationஜோதிர்லதா கிரிஜாவின் “மாறாத மனிதர்கள்”சூரிய மண்டலத்தில் பூமியை நெருங்கச் சுற்றித் திரியும் மூர்க்க முரண் கோள்கள் [Rogue Asteroids]வால்ட் விட்மன் வசனக் கவிதை – 60 ஆதாமின் பிள்ளைகள் – 3சீதாயணம் நாடகப் படக்கதை – 18
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Comments

  1. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    மிகவும் துணிச்சலான எழுத்து. அழுத்தமான கருத்து. தமிழ் இதழ்களுக்கு இருக்க வேண்டிய ஓர் படைப்பு நெறி.

    பாராட்டுகள் கிரிஜா.

    சி. ஜெயபாரதன்.

Leave a Reply to சி. ஜெயபாரதன் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *