நீங்காத நினைவுகள் – 49

This entry is part 1 of 24 in the series 8 ஜூன் 2014

ஜோதிர்லதா கிரிஜா

மறு பிறவி என்பது உண்டா இல்லையா? – உண்டு என்று சில மதங்கள் சொல்லுகின்றன. இந்து மதம் இந்த விஷயத்தில் மிக உறுதியான கருத்துக்கொண்டுள்ளது. இந்தப் பிறவியில் எந்தத் தவறும், பாவமும் செய்யாத நல்ல மனிதர்கள் நல்லவற்றை அனுபவிப்பதற்குப் பதில் எண்ணிறந்த துன்பங்களுக்கு ஆளாவதற்குக் காரணம் அவர்கள் தங்கள் முந்தைய பிறவிகளில் புரிந்துள்ள பாவங்களே என்று இந்து மதம் அடித்துச் சொல்லுகிறது. ’ஆன்மாவுக்கும அழிவு கிடையாது, அது திரும்பத் திரும்பப் பிறக்கிறது’ என்கிறது கண்ணன் மகாபாரதத்தில் சொன்னதாய்க் கருதப்படும் பகவத் கீதை. “போன ஜென்மமாவது புண்ணாக்காவது! மறு பிறவியாவது, மண்ணாங்கட்டியாவது!” என்று புரட்சி வாதம் பேசுகிறவர்களால் கூட நல்லவர்கள் துன்பப்படுவதற்கான காரணத்தை அறிவியல் ரீதியாயச் சொல்ல முடிவதில்லை. கெட்டவர்களுக்குத் தண்டனை கிடைக்க வேண்டும் என்பதும், நல்லவர்களுக்கு நல்லதே நடக்க வேண்டும் என்பதும் அறிவார்ந்த வாதம் என்பதில் இரண்டாம் கருத்து இருக்க முடியாது. ஆனால், அப்படி நடக்காததற்கு என்ன அடிப்படை என்பதைச் சொல்ல முடியாதவர்கள் ”முற்பிறவி-மறுபிறவி”த் தத்துவத்தை ஏற்கத்தான் வேண்டும். இதனை வெறும் தற்செயல் என்று கூறி அறிவுஜீவிகள் தட்டிக்கழிக்க முடியாது. விஞ்ஞானப்படி எது ஒன்றும் தற்செயல் ஆகாது.
முற்பிறவி பற்றிய நிகழ்வுகள் சார்ந்த சில சுவையான கதைகள் அவ்வப்போது பத்திரிகைகளில் வருகின்றன. ஆனால் அவற்றை வெறும் கப்சா என்று கருதும் அறிவுஜீவிகள் பலர் இருக்கிறார்கள். எனினும் எங்கள் குடும்பத்தில் நிகழ்ந்த ஒன்றைத் திண்ணை நேயர்களுக்குச் சொல்லி என் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளும் பொருட்டே இதனை எழுதலானேன்,
என் அன்புத் தந்தையார் காலமானதன் பின் என் தங்கையின் திருமணம் நடந்தது. அவளுக்குத் திருமணம் ஆன மறு ஆண்டிலேயே ஓர் ஆண்குழந்தை பிறந்தது. அது மற்ற எல்லாரிடமும் விட என்னிடமே அதிகமாய் ஒட்டிக்கொண்டது. என்னை விட்டுக் கணமும் பிரியாது. பெற்ற தாயிடத்தில் விடவும் என்னிடம் அதிகமாய் அது அன்பு காட்டியது. சாயலில் அது எங்கள் அப்பாவைக் கொண்டிருந்தது. எங்கள் அப்பாதான் திரும்பவும் எங்கள் குடும்பத்தில் பிறவி எடுத்துள்ளார் என்பதை மெய்ப்பிப்பதற்கான சில அதிசய நிகழ்வகள் நடந்தன. அவை எங்கள் குடும்ப விஷயங்கள் சம்பந்தப்பட்டவை என்பதால் அவற்றை இங்கே விவரிக்கப் போவதில்லை.
எல்லா நிகழ்வுகளுக்கும் சிகரமாய் இருந்த ஒரே ஒரு நிகழ்வைப் பற்றி மட்டுமே இந்தக் கட்டுரையில் சொல்ல எண்ணம். அதற்கும் முன்னால் சிலவற்றைச் சொல்லியாக வேண்டும். எங்கள் அப்பாவுக்குத் தம் குழந்தைகளுள் என் மீது அதிக அன்பு. நான் முதல் குழந்தை என்பதே அதற்குக் காரணமாக இருக்க வேண்டும். குறிப்பிடத்தக்க வேறு எந்தக் காரணமும் இல்லை. அதனால்தான் எங்கள் குடும்பத்தில் மீண்டும் வந்து பிறந்த அவர் மற்ற எவர் மீதும் காட்டிய அன்பைவிடவும் அதைக ஒட்டுதலை என்னிடம் காட்டினார் என்று தோன்றுகிறது.
மகேஷ் (மகேந்திரன் என்பதன் செல்லப் பெயர்) என்று நாங்கள் அழைத்த அக் குழந்தை பேசத்தொடங்கியதும், அம்மா, அப்பா, பாட்டி, மாமா, சித்தி ஆகிய உறவுமுறைகளைச் சொல்லிக் குடும்பத்து உறவினர்களை அழைக்கலாயிற்று. ஆனால், என்னை மட்டும் அவன் கிரிஜா என்றுதான் அழைப்பான். நான் அவனுக்குப் பெரியம்மா முறை ஆக வேண்டும் என்றும், எனவே பெயர் சொல்லி அழைக்கக்கூடாது என்றும் அவன் அப்பா எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், அவன் கேட்பதாக இல்லை. ஒரு முறை, “பெரியம்மான்னெல்லாம் கூப்ட மாட்டேன். அவ குட்டிப்பாப்பாவா இருந்ததுலேர்ந்து அவளை எனக்குத் தெரியும். அவளை கிரிஜான்னுதான் கூப்டுவேன்’ என்று அறிவித்தான் மகேஷ். இதுதான் முதன் முதலாய் அவன் எங்களுக்கு அளித்த அதிர்ச்சி. அதற்கு அவன் அப்பா, ‘”சரிடா. பெரியம்மான்னு கூப்பிடாட்டாலும், கிரிஜாம்மான்னாவது கூப்பிடுடா” என்றார். “சரி. கிரிஜாம்மான்னு கூப்பிட்றேன்” என்றான் மகேஷ். அவன் அவ்வாறு கூப்பிடத் தொடங்கியதால், எங்கள் குடும்பத்துப் பிற குழந்தைகளுக்கெல்லாமும் நான் கிரிஜாம்மா ஆனேன்.
அவன் நன்கு பேசத் தொடங்கியதன் பிறகு, என் அப்பாவின் மறு பிறவி அவன் என்பதை எங்களுக்குச் சில குடும்ப விஷயங்கள் பற்றிக் குறிப்பிட்டு எங்களை யெல்லாம் அவன் அயர்த்தினான். அவற்றில் சில என் அம்மாவுக்கு மட்டுமே தெரிந்தவையாம். அவற்றைப் பற்றியும் வேறு சிலவற்றைப் பற்றியும் இங்கே சொல்லப் போவதில்லை – அவை எங்கள் குடும்ப விஷயங்கள் என்பதால்.
நான் சொன்ன முக்கியமான நிகழ்வு பற்றி மட்டுமே சொல்லிக் கட்டுரையை முடிக்கிறேன். நான் பெரியவர்க்கு எழுதத் தொடங்கியிராத ஓர் ஆண்டில் கண்ணன் மாதமிருமுறை இதழ் நடத்திய தொடர்கதைப் போட்டியில் எனக்கு இரண்டாம் பரிசு கிடைத்தது. முதல் பரிசுக்கதை தொடரக வெளிவந்து முடிந்த பிறகு 1966 ஆம் ஆண்டில் ”சுவடிகள் சொன்னதில்லை” எனும் எனது தொடர்கதை கண்ணல் இதழில் வெளியாகத தொடங்கியது. என் அப்பா அதன் 4, 5 அத்தியாயங்களைப் படித்த பின், “தொடர் முடிந்த பிறகு மொத்தமாய்ப் படிக்கிறேன். கதை வெளிவந்த பிறகு பைண்ட் செய்து என்னிடம் தா…” என்றார். நானும் சரி என்றேன்.
ஆனால் அதன் பின் நோய்வாய்ப்பட்ட எங்கள் அப்பா 1967 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் காலமானார். 1969 இல் மகேஷ் என் தங்கையின் மகனாய்ப் பிறந்தான். 1973 இல் அவன் யூகேஜி யில் படித்துக்கொண்டிருந்த போது, ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று நான் எனது அறையில் என் புத்தகங்களைத் தூசு தட்டி அடுக்கிக் கொண்டிருந்தேன். மகேஷும் வழக்கம் போல் எனது அறையின் ஒரு புறத்தில் உட்கார்ந்து தன் பாடப் புத்தகம் ஒன்றைப் படித்துக்கொண்டிருந்தான். பைண்ட் செய்யப்பட்ட சுவடிகள் சொன்னதில்லை எனும் எனது பத்தகத்தை நான் கையில் எடுத்த போது, அவன் பார்வை தற்செயலாக அதன் மீது விழுந்தது. எழுந்து ஓடி வந்து, “கிரிஜாம்மா! அதை இங்க குடேன்” என்று கேட்டு வாங்கிப் புரட்டிவிட்டுச் சொன்னான்:
”இதை நான் கொஞ்சம்தான் படிச்சேன். ஏன் முடிக்க முடியல்லே?” என்று கேட்டான். நான் சிலிர்த்துப் போனேன். அவன் என் அப்பாதான் என்பது இதனால் மேலும் வலுப்பெற்றது.
எனினும், அவன் அப்போதுதான் தமிழ் எழுத்துகளைப் பள்ளியில் கற்று வந்ததால், “நீ இன்னும் நிறையத் தமிழ் கத்துண்டதும் படிக்கத் தறேன். இப்ப உன்னால படிக்க முடியாது…” என்கிற ரீதியில் ஏதோ பதிலைச் சொல்லிவைத்தேன்.
அவன் எதிரில் நாங்கள் யாரும் சுவடிகள் சொன்னதில்லை கதை பற்றியோ அதை எங்கள் அப்[பா அரைகுறையாய்ப் படித்திருந்தது பற்றியோ பேசியதே இல்லை. தவிர அது எனக்கும் என் அப்பாவுக்கும் இடையில் நிகழ்ந்த உரையாடல். வீட்டில் வேறு யாரும் அறியாதது. தவிர அந்தப் புத்தகத்தை அவன் அடையாளம் கண்டு கொண்டது வியப்பான ஒன்றே. மேலும் அந்தப் புத்தகத்தை வாங்கிப் புரட்டிவிட்டு, அதில் கொஞ்சம் மட்டுமே தான் படித்திருந்ததாய் அவன் சொன்னது இன்றளவும் என்னை வியப்புறச் செய்துகொண்டிருக்கும் விஷயம்.
முற்பிறவி பற்றிய ஞாபகங்கள் ஒருவருக்கு ஐந்து வயது ஆகும் வரை இருக்கும் என்று சொல்லப் படுகிறது. மகேஷும் அப்படித்தான் அவனுக்கு ஐந்து வயது ஆனதன் பிறகு இது போன்ற ஞாபகங்கள் அவனுக்கு வந்ததில்லை. இன்றளவும் அவன் எங்கள் அப்பாவின் மறு பிறவி என்பதை நாங்கள் அவனிடம் சொன்னதில்லை. அவன் தற்போது கலிஃபோர்னியாவின் ஒரு கணிப்பொறி சார்ந்த கம்பெனியின் மென்பொருள் பொறியாளராக இருந்து வருகிறான்.
ஆதாரத்துடன் எழுதும் போதே கூட, ‘அது அவரின் நம்பிக்கை’ என்று கூறும் அறிவுஜீவிகள் இதற்கு என்ன சொல்லுவார்களோ, தெரியவில்லை.

Series Navigation
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *