நூல் மதிப்புரை – செல்லம்மாவின் அடிச்சுவட்டில்…

This entry is part 19 of 31 in the series 5 பிப்ரவரி 2012


பொதுவாக இலக்கிய ஆளுமைகளின் பன்முகங்களில் ஒரு முகம் குறிப்பாக மிகவும் அணுக்கத்தில், கூடவே வாழ்ந்து அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புலப்படுவதாக இருக்கும். அப்படியொரு அனுபவசாலி,  தான் அறிந்த ஆளுமையைப் பற்றிய விவரங்களை வெளியிடுகிறபோது அதற்கு விசேஷ கவனம் கிடைப்பதில் வியப்பில்லை என்பதோடு கிடைக்கவும் வேண்டும். அந்த ஆளுமையின் பல்வேறு பரிமாணங்களை கணிப்பதற்கு இது இன்றியமையாத தாகிறது. ஏனெனில் ஒரு ஆளுமையின் புற இயக்கங்கள் அக இயல்புகளின் அடிப்படையிலேயே ஆக்கம் கொள்கின்றன.  அந்தரங்கம் என அவற்றைப் புறந்தள்ளல் சரியாக இருக்காது.

 

சுப்பிரமணிய பாரதி என்கிற ஆளுமைக்கு அப்படியொரு அணுக்க அனுபவஸ்தர் மனைவி என்னும் தனி உரிமையுடன் அமைந்தார். ஆனால் பாரதியாரின் மனைவி செல்லம்மாவுக்குத் தமது அனுபவங்களையும் உணர்வுகளையும் பதிவு செய்வதில் சில இயலாமைகள் இருந்ததை அவரது பதிவிலேயே காண முடிகிறது.

 

“நீ இந்த மாதிரி கவலைப்படும் நேரங்களில் தமிழை நன்றாகப் படித்து வந்தாயானால் மிகவும் சந்தோஷமுறுவேன்” என்று பாரதியாரால் கடிதம் கிடைக்கப் பெற்றவர் செல்லம்மா. கணவரின் விருப்பத்திற்கு ஏற்பத் தமிழை நன்கு எழுதவும் படிக்கவும் அவர் கற்றுகொண்டுவிட்ட போதிலும் தமக்கு வாய்த்த கணவர் வாழ்ந்த முறையையும் வாழ்ந்த காலத்தையும் மேலும் ஆழமாகப் பதிவு செய்வதில் அவருக்கு இருந்த இயலாமையினை நம்மால் புரிந்துகொள்ள முடியும். இருந்தாலும் ஒரு தனித்துவமும் பாரதியைக் கணவராக ஒரு மனைவியின் கோணத்தில் பார்க்கிற சுய மதிப்பீட்டின் பெறுமானமும் அவரது பதிவுக்கு தனிக் கவனம் பெற்றுத் தருகின்றன.

 

சமீப காலம்வரை நம்மோடு இருந்து கலந்துறவாடிய கவிஞரும் பல்வகை எழுத்தாளருமான சுந்தர ராமசாமியைக் கணவராக அடையப் பெற்ற கமலா ராமசாமியும் தம் கணவரைப் பற்றிய தமது நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும் பதிவு, ‘நெஞ்சில் ஒளிரும் சுடர்’ என்ற தலைப்பில் அருமையான கட்டமைப்புள்ள புத்தகமாக வெளிவந்துள்ளது. புத்தகம் முழுவதும் விரவிக் கிடக்கும் மருதுவின் கோட்டுச் சித்திரங்கள் பதிவுகளின் உயிர்த் துடிப்புக்கு உருவம் கொடுக்கின்றன. சு.ரா.வுடன் தொடர்புள்ள புகைப் படங்களின் தொகுப்பும் ஓர் இணைப்பாக இறுதியில் காணப்படுகிறது.

 

“மனைவி: செங்கமலம் என்ற கமலா. மாதரசி புண்ணியத்தால்தான் மனிதன்போல் நடமாடிக் கொண்டிருக்கிறேன். எந்த நெருக்கடி வந்தாலும் நான் கட்டிலில்போய் படுத்துகொண்டு விடுவேன். அவள்தான் என்னைத் தூக்கி நிறுத்தியிருக்கிறாள்” என்று சுந்தர ராமசாமி ஒரு கடிதத்தில் எழுதுகிறார். இந்த மாதிரியான கணவரைப் பற்றி எழுதுவதற்கு மனைவிக்கு நிறையவே ஆழமான விஷயங்கள் இருக்கும்தான்.

 

“நமது துயரத்துக்கெல்லாம் கண்ணீர்விட்டுக் கரைந்தாள். நமது மகிழ்ச்சியின் போதெல்லாம் உடல் பூரித்தாள்” என்றுதான் தம் மனைவியைப் பற்றி எழுதுகிறார், பாரதியாரும்.

 

அவரவர் மனைவிமார் பற்றி இவ்விரு ஆளுமைகளும் தெரிவித்துள்ள புரிந்துணர்விலிருந்தே செல்லம்மாவுக்கும் செங்கமலம் என்கிற கமலாவுக்குமுள்ள வேறுபாடு தெளிவாகிறது.

 

செல்லம்மாவின் காலம் வேறு. செங்கமலத்தின் காலம் வேறு (சுந்தர ராமசாமியின் குடும்பத்துடன் அவருடைய தந்தையார் காலத்திலிருந்தே அறிமுகம் உள்ளவன். சுந்தர ராமசாமியின் தாய் மாமன் நாராயணன் என்கிற பரந்தாமனும் நானும் ஒரே இடத்தில் பணியாற்றி நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்றவர்கள். கமலா சுந்தர ராமசாமிக்கு உறவுமுறையும் கூட. ஆகையால் கமலா என்கிற பெயரைவிட பாரம்பரியமான செங்கமலம் என்கிற பெயரையே எனது பிரஸ்தாபங்களில் மட்டும் பயன்படுத்த விரும்புகிறேன். மேலும் அதுவே எவ்வளவு அழகாயிருக்கிறது!).

 

அடக்குமுறையில் ஆட்சி செய்யும் ஒர் அந்நிய ஏகாதிபத்தியத்தின் கீழ் நாடு இருந்த நிலையில் அந்த ஆட்சிக்கு எதிராகக் குரல் கொடுக்கவும் துணிந்த வரைக் கணவராக அடையப் பெற்று இரவும் பகலும்  தவிப்புடனேயே காலங் கழிக்க நேர்ந்த சங்கடம் செல்லம்மாவுக்கு இருந்தது. தேவையின்றியே வறுமையில் உழலவும் நேர்ந்தது, செல்லம்மாவுக்கு. செங்கமலத்துக்கு இந்த அனுபவங்கள் ஏதும் இல்லை. ஆனால் செங்கமலத்துக்கு உள்ள பிரச்சினை உளவியல் சார்ந்தது. அது கூடுதலான மன அழுத்தம் தருவது.

 

கணவருக்கும் மாமனாருக்கும் வீட்டில் எப்போதும் பனிப் போர் நிலவிக் கொண்டிருக்கும் சங்கடத்தைச் சகித்துக் கொள்ள வேண்டிய சோதனை செங்கமலத்துக்கு.

 

தந்தைக்குத் தமது ஜவுளி வியாபாரத்தில் மகனை இறக்கி விடுவதிலேயே குறி. மகனோ இலக்கிய நாட்டத்தில் பொழுதைக் கழிப்பதிலேயே கவனமாயிருப்பவர். போதாக்குறைக்கு மார்க்சியத்தில் ஈடுபாடு வேறு. கம்யூனிஸ்ட் கட்சியுடன் நேரடித் தொடர்பு கொள்ளும் அளவுக்கு அன்றாட அரசியலிலும் கவனம்.

 

ஜவுளிக் கடையில் உடகாரத் துளியும் விருப்பமில்லாதவர் சுந்தர ராமசாமி. கதையாவது, கவிதையாவது, அதையெல்லாம் அனுபவிக்கலாம் ஆனால் அது சோறு போடாது என்பதில் சுந்தரம் ஐயருக்குச் சந்தேகமே இல்லை. மகன் கதை எழுதுகிறேன், கவிதை எழுதுகிறேன் என்று திசை மாறிப் போவதை அவரால் சகித்துக்கொள்ள இயலவில்லை. ஏதோ செய்யக் கூடாத காரியம் செய்வது போல இரவு வீட்டில் எல்லாக் காரியங்களும் நடந்தேறி, விளக்கணைந்த பிறகு, ஊர் அடங்கிய பின்னர் ஒரு குற்ற உணர்வுடன் கதை எழுத வேண்டிய கட்டாயம் மகனுக்கு.

 

எழுதி, எழுதிச் சோர்ந்து, ஒரு மணிக்கும் ஒன்றரை மணிக்கும் படுக்கையில் வந்து விழும் கணவருடன் கழியும் இரவுகள், செங்கமலத்துக்கு.

 

செல்லம்மாவுக்குத் தான் சொல்லச் சொல்ல மகள் தங்கம்மா எழுதிச் செல்ல வேண்டிய கட்டாயம். செங்கமலத்துக்கு அந்த அசெளகரியம் இல்லை.

 

மேலே படிக்க உள்ளூரில் பள்ளிக்கூடம் இல்லாததால் தேர்ச்சியடைந்துவிட்ட ஐந்தாம் வகுப்பிலேயே திரும்பவும் படிக்க வேண்டிய நிர்பந்தம் செங்கமலத்துக்கு. ஆனாலும் திருமணத்துக்குப் பிறகு கல்வியைத் தொடரும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.

 

செல்லம்மாவின் ’பாரதியார் சரித்திரம்’ எடுத்த எடுப்பில் பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றைப் பள்ளிக்கூடப் பாட புத்தகம்போல் பதிவு செய்யத் தொடங்கி விடுகிறது.

 

ஆனால் இருபத்தைந்து அத்தியாயங்கள் உள்ள கமலா ராமசாமியின் நூலில் பத்து அத்தியாயங்கள் சுந்தர ராமசாமியின் பிரவேசம் இல்லாமலேயே கமலாவின் பிறப்பு, வளர்ப்பு, என்று பூர்வீக சமாசாரங்களைப் பேசுகின்றன. உண்மையில் இந்தப் பத்து அத்தியாயங்களில் வெளிப்படுகிற ஜீவ களை, மீதமுள்ள பதினைந்து அத்தியாயங்களில் ஒரு மாற்று குறைவாக இருப்பதாகவே தோன்றுகிறது.

 

அறுபது, எழுபது ஆண்டுகளுக்கு முந்தைய தென் தமிழ் நாட்டு கிராமங்களில் வாழ்க்கை எவ்வளவு அமைதியாகவும் நகர்ப்புற மாசுகள் படியாமலும் இருந்து வந்துள்ளது என்பதை விமர்சனப் பார்வையின்றி மிகவும் இயல்பாக அந்த முதல் பத்து அத்தியாயங்கள் பதிவு செய்கின்றன. போக்குவரத்து வசதியோ, மருத்துவ வசதியோ முறையான பள்ளிக் கல்வியோ போதிய அளவு இல்லாத நிலைமைதான். ஆனால் அது ஒரு குறையாகச் சுட்டப்படாமல் ஒரு தகவலாக மட்டுமே பதிவு செய்யப்படுகிறது. வாழ்க்கையில் எதையும் இயல்பாக எதிர் கொள்ளும் பக்குவம் அது. அன்று ஒவ்வொரு கிராமமும் தன்னாட்சியுடன் தனது தேவைகளைத் தானே நிறைவு செய்துகொள்ளும் அமைப்பாக இருந்துள்ளது என்பதை வாசகனால் உணர்ந்துகொள்ள வைக்கிறது கமலா ராமசாமி எழுதிச் செல்லும் முறை.

 

கழிப்பறை என்கிற கருதுகோளே அன்று நமது சமுதாயத்தில் கிடையாது. ஆகையால் மனிதக் கழிவை மனிதர் சுமக்கும் தோட்டி என்கிற சாதிப் பிரிவே நம்மில் இல்லை என்பதை கமலா ராமசாமி உறுதி செய்கிறார். அவர் கிராமத்திலேயே பெருந் தனக்காரரான பண்ணையார் வீட்டுப் பெண். ஆனால் எவ்வளவு பெரிய சீமானின் வீடாக இருந்தாலும் கழிப்பறைக்கு வீட்டில் இடமில்லை.

(பூமியிலிருந்து உணவைப் பெறும் மனிதன், அவ்வாறு உணவைப் பெற்றுக் கொண்டமைக்குக் கைம்மாறாக அதன் உயிர்ச் சத்தைக் காக்கும் வண்ணம் தான் உண்டதன் கழிவை பூமிக்கே திரும்பக் கொடுக்கும் வாழ்க்கை முறை அது. சரியான சுகாதார முறையில் கடைப்பிடிக்கப்பட்டால் இது ஒரு சிறந்த ஏற்பாடுதான். மனிதக் கழிவு வீணடிக்கத் தக்கதல்ல. அது ஒரு சிறந்த, தீங்கு விளைவிக்காத இயற்கை உரம் என்பதோடு, இயற்கை எரிவாயுவை உற்பத்தி செய்வதற்கான மூலப் பொருளும் ஆகும். இன்று ஜப்பானில் ஒவ்வொரு குடும்பத்திலும் மனிதக் கழிவுகளைப் பயன்படுத்தியே எரிவாயுவைத் தயாரித்துக்கொண்டு மின்சாரத்திற்கு மாற்றாகவும் எரிபொருளுக்கு பதிலாகவும் இலவசமாகப் பயன்படுத்திக்கொள்வதில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. மனிதக் கழிவின் மூலம் உற்பத்தி செய்துகொள்ளும் எரிபொருளைக் கொண்டு வாகனங்களை ஓட்டவும் அவர்கள் ஆய்வு நிலையில் ஆரம்பித்திருக்கிறார்கள். மேலும், கழிப்பறைகளைப் பயன்படுத்தும் இன்றைய கலாசாரத்தின் விளைவாக எவ்வளவு தண்ணீர் விரையம் செய்து வருகிறேம் என்பதைக் கணக்கிட்டுப் பார்த்தால் மலைப்புத் தட்டும்).

 

உமிக்கரி கொண்டு பல் தேய்ப்பதும், பாத்திரங்கள் துலக்குவதும், துணிகள் துவைப்பதும் வாய்க்கால்களிலேயே முடிந்து விடுகின்றன.

 

செங்கமலம் பிறந்து வளர்ந்த தெல்லாம், ‘கடன்படா வாழ்வு’ என்ற சுந்தரத் தமிழ்ப் பெயர் தாங்கிப் பின் பேச்சு வழக்கில் ’கடம்போடு வாழ்வு’ என நிலைத்துவிட்ட சிறு கிராமத்தில். திருநெல்வேலி மாவட்டத்தில் களக்காடு, நாங்குனேரிப் பக்கம் என்று சொல்லலாம். அப்பாதான் ஊர்ப் பண்ணையார்.

 

ஊரில் என்ன சண்டை சச்சரவு நடந்தாலும் அப்பாவிடம்தான் தீர்ப்புக்கு வருவார்கள் என்று எழுதுகிறார், கமலா ராமசாமி. பெரிய, பெரிய கேஸ் என்றால்தான் கோர்ட்டுக்குப் போகும் பழக்கம் இருந்ததாம். ‘சில சமயங்களில் அவர்கள் வீட்டு வாசலுக்கே வந்து பஞ்சாயத்து கூடி, தீர்ப்புகள் வழங்கப்படும்.

விசாரணை முடிந்ததும் அப்பா தீர்ப்பு வழங்குவார்.’

 

என்னவாக இருக்கும் அந்தத் தீர்ப்பு?

 

‘குற்றவாளிக்கு நாலைந்து சாட்டை அடியும் எட்டணா அபராதமும் விதிப்பார் அப்பா’ என்கிறார், கமலா ராமசாமி. ‘அநேகத் தீர்ப்புகள் இதையொட்டித்தான் இருக்கும். சில சமயம் எட்டணா கட்ட முடியாது. பெண்டாட்டி, குழந்தைகள் பட்டினியாகி விடுவார்கள் என்று குற்றவாளி அழுவான். எட்டணாவுக்குப் பதிலாகக் கூட நாலு சாட்டையடி கொடுக்கும்படித் தீர்ப்பு வழங்குவார், அப்பா.’

 

சரியான நிலப்பிரபுத்துவ சமுதாயமும் அதற்குரிய நியாயங்களுந்தாம். படிக்கிறபோது நமக்குச் சீற்றம் எழுவதைத் தவிர்த்துக் கொள்ள இயலாது. ஆனால் அது ஒரு பெரிய விஷயமாக இல்லாமல் எல்லாம் முடிந்ததும் நீர்மோர் குடித்துவிட்டுப் போகிற சமாசாரமாக இருக்கிறது!

 

பதினொன்றாம் அத்தியாயத்திலிருந்துதான் சுந்தர ராமசாமியுடனான மண வாழ்வு தொடங்குகிறது. ‘எங்கள் திருமணம் முடிந்து முதல் பரிசாக சு.ரா. எனக்கு வாங்கித் தந்தது ஒரு ஜோடிச் செருப்பு. அதை அவர் பிரியத்துடன் வாங்கித் தந்த முறை எனக்கு விகல்பமாகவே தோன்றவில்லை. அதை வெகு நாட்கள் பத்திரமாக வைத்திருந்தேன்’ என்கிறார் கமலா ராமசாமி.

 

நூல் முழுவதும் கணவரை ‘சுரா’ என்றே குறிப்பிடுகிறார், கமலா ராமசாமி. அதில் ஒரு அந்நியோன்னியம் புலப்படுவதோடு ஒரு மூன்றாம் நபரின் விலகி நின்று பார்க்கும் விமர்சனப் பார்வையும் ஒருங்கே சாத்தியமாகிறது.

 

கமலா ராமசாமியின் வாசிப்பு ‘கல்கண்டு’ பத்திரிகையில் ‘சங்கர்லால் துப்பறிகிறார்’ என்கிற தமிழ்வாணனின் தொடர்கதையை விருப்பத்துடன் படிப்பதாகத்தான் இருந்திருக்கிறது. அவருக்கு தி. ஜானகி ராமனின் ‘சிகப்பு ரிக்‌ஷா’ சிறுகதைத் தொகுப்பைக் கொடுத்து சம காலத் தமிழ்ப் படைப்பிலக்கியத்தை அறிமுகம் செய்து வைக்கிறார், சுந்தர ராமசாமி. தொடர்ந்து அழகிரிசாமி, புதுமைப் பித்தன், கி.ரா., லா.ச.ரா., க. நா.சு. முதலானோரின் புத்தகங்களையும் படிக்கக் கொடுத்திருக்கிறார். அந்த எழுத்துகளைப் பற்றி அவருடன் உரையாடிக் கருத்தறிவதிலும் சுந்தர ராமசாமி தவறவில்லை. சாந்தி இதழில் தான் எழுதிய தண்ணீர் என்கிற சிறுகதைக்கு முதல் பரிசாக ரூ. நூறு கிடைத்ததும் தொகைக்குப் பதிலாகப் புத்தகங்களைத் தேர்ந்துகொள்ளலாம் என்று சொன்னபோது சுந்தர ராமசாமி புத்தகங்களையே விருப்பத்துடன் எடுத்துக் கொண்டாராம். அந்தப் புத்தகங்களை அவருடைய அறையில் வலை அலமாரியில் வைத்து மகிழ்ச்சி பொங்கப் பலவிதமாக அடுக்கி அழகு பார்த்துக் கொண்டிருந்தாராம். பிறகு கொஞ்சங் கொஞ்சமாகத் தொடர்ந்து புத்தகங்கள் வாங்கியதில் அந்த வலை அலமாரியில் இடங் காண வில்லை. நாலைந்து வருடங்களுக்குப் பிறகு அம்மாவின் சிபாரிசுடன், அப்பாவின் அரைகுறை சம்மதத்துடன் ஒரு பெரிய புத்தக அலமாரியை வீட்டிலேயே செய்துவைத்துக் கொண்டார்.  புத்தகங்கள் வாங்கியதும், தொட்டுத் தடவி முகர்ந்து பார்த்துப் பிரிண்டிங் மணத்தை, அட்டையின் அழகை ரசித்த பிறகுதான் வாசிக்க ஆரம்பிப்பார்.  ஒரு புத்தகம் வாசிக்கும்போது நடுவில் புத்தகத்தை மூடி வைப்பதற்குக் கண்டிப்பாக ‘புக் மார்க்’தான் உபயோகிப்பார். அடையாளத்திற்காகப் பக்கத்தின் மேல் மூலையை யாராவது மடிப்பதைப் பார்த்தால் விரலை ஒடித்ததுபோல் துடித்துப் போய்விடுவார். ‘நான் எப்பவாவது புத்தகத்தைக் கவிழ்த்து வைத்தால் சட்டென்று ‘புக் மார்க்’கை எடுத்துத் தந்து ‘இதை வைத்து மூடி வையேன்’ என்பார். புத்தகங்கள் பேரிலுள்ள அவருடைய பிரியம் குழந்தைகள் பேரிலுள்ள பிரியத்துக்கு ஒப்பானது.’

 

கிராமத்தில் படிப்பைத் தொடர முடியாமல் மதுரையில் சிறிது காலம் அதைத் தொடர்ந்து பின்னர் அதுவும் முடியாமல் போன செங்கமலத்துக்குத் திருமணமாகி நாகர்கோவிலுக்கு வந்த பிறகு பள்ளிக் கூடத்தில் படிப்பைத் தொடரும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது! கணவர் மட்டுமினிறி மாமியாரும் அந்த வாய்ப்பை அளித்து ஊக்குவித்திருக்கிறார்கள்.

 

சு.ரா.வின் குணச் சித்திரத்தைச் சரியாக உள்வாங்கிக்கொண்டு அதைச் சரியாகவே பதிவு செய்திருக்கிறார், கமலா ராமசாமி என்கிற செங்கமலம். மிகவும் அனுசரணையான கணவர், வீடு எப்போதும் விருந்தினரை உபசரிப்பதற்கென்றே அமைந்ததுபோல இருக்கும். வரும் விருந்தினரில் எழுத்தாள நண்பர்கள்தாம் அதிகம். அவர்களுடன் இயல்பாகப் பழகி உபசரிப்பில் கணவரையும் மிஞ்சியவர், மனைவி. ஆனால் வந்த எழுத்தாளர்களில் பெரும் பாலானவர்களை அவர் பட்டியல் போடுவதுபோலப் பதிவு செய்துவிட்டிருப்பது ஆயாசம் தருகிறது. அவருக்கே எழுதி எழுதிச் சோர்வு தட்டிவிட்டதோ என்று நினைக்கத் தோன்றுகிறது. மனப்பாடம் ஒப்பிக்கிற மாதிரி இப்படிப் பட்டியல் போடாமல் அந்த எழுத்தாளர்கள் அனைவருடனுமான சுந்தர ராமசாமியின் இலக்கியம் சார்ந்த உரையாடல்கள், நிகழ்வுகளை கமலா ராமசாமியால் பதிவு செய்ய முடிந்திருக்குமானால் புத்தகம் வாசகனுக்கு முழு நிறைவைத் தந்திருக்கும்.

 

சுந்தர ராமசாமியே ஒருமுறை ‘எழுதிப் பாரேன்’ என்று தம்மிடம் கூறியதை நினைவு கூர்ந்துள்ளார், கமலா ராமசாமி.

 

‘பனித்துளியினுள்ளும் பனை மரம் தெரியும்’ என்று எழுதியவர், சுந்தர ராமசாமி.

 

தெரிகிறது.

 

நெஞ்சில் ஒளிரும் சுடர்

(சுந்தர ராமசாமி பற்றிய நினைவுகள்)

ஆசிரியர்: கமலா ராமசாமி (மனைவி)

வெளியீடு: காலச் சுவடு அறக் கட்டளை

669 கே.பி. சாலை, நாகர்கோவில் 629 001

பக்கங்கள் 160 விலை ரூ. 100/-

 

நன்றி: கணையாழி ஃபிப்ரவரி 2012.

Series Navigationபுகுஷிமா விபத்துக்குப் பிறகு அணுமின் நிலையங்களின் எதிர்கால இயக்கம் பற்றி உலக நாடுகளின் தீர்மானங்கள் -1இந்திய பிரெஞ்சு பண்பாட்டு உறவுளை மேம்படுத்தும் வகையில் சந்திப்பு
author

மலர்மன்னன்

Similar Posts

7 Comments

  1. Avatar
    balaiyer says:

    Publishers are ready to publish anything from the dependents of well known writers and make fast buck. But, if any new writer attempt to write worth writing, they are not even ready to look at them even. Strange indeed is this tamil pathipagangal.

  2. Avatar
    SRINIVASAN. V. says:

    இந்த நூல் அறிமுகத்துக்கு நன்றி.
    அவசியம் வாங்கிப் படிக்கும் ஆவல் வந்திருக்கிறது .
    நன்றி .
    வணங்கி மகிழ்கிறேன்.
    அன்புடன்,
    ஸ்ரீனிவாசன்

  3. Avatar
    Thiruvaazh Maarban (Kavya) says:

    ஒரு ஹவுஸ் வைஃப் எப்படி வீட்டில் கோலம்போட்டார்; எப்படி அலமாரியில் புத்தகங்களை தூசிதட்டி அடுக்கி வைத்தார்; அவர் தகப்பனார் என்ன வேலை பார்த்தார் என்றெல்லாம் எழுதிய சுய சரிதையை அவர் தன் உறவுக்காரர் எனப்தற்காக ஒஹோவென்று பாராட்டிய திண்ணையில் விமர்ச்னம் எழுதியதன் நோக்கமென்ன ? அதைப்படித்து மற்றவர்கள் திருமதி சுந்தர ராமசாமி பெரும் இலக்கியவாதி என்று மெச்ச வேண்டும். அவர் நூலைப்படிக்கவேண்டுமென்பதுதானே நோக்கம்?

    அப்படியென்றால், நான் ஏன் பாரதியாரை நம்பி, கம்பனையும் வள்ளுவனையும் இளங்கோவையும் மெச்சக்கூடாது? பாரதியார் இவர்களுக்கு உறவுக்காரில்லை.

    If you are related to the author, you should not write about the book. None will believe it valid.

  4. Avatar
    Thiruvaazh Maarban (Kavya) says:

    She is an insignificant housewife. She did not lead any other eventful life. She is unknown to others except among her relations. Her only qualification is that being the wife of a well known Tamil writer.

    But Malarmannan chose the book for writing about in Thinnai.

    We can take two reasons:

    1. She is a brahaman woman
    2 She is related to him.

  5. Avatar
    punai peyaril says:

    எங்க ஊரில் ஏதோ ஒரு பொ எரிச்சல் என்பார்கள். அது காவ்யாவிற்கு பொருந்தம். இந்த புத்தகம் படிக்க நிறைய பேர் இருப்பார்கள்.படித்து விட்டு போகட்டுமே… பிடிக்கவில்லையென்றால் இணையத்தில் பக்கமா இல்லை படிக்க… ஏன் வெறுப்பு உமிழ வேண்டும்… விஷ சிந்தனை மட்டுமே வாழ்க்கையா இருப்பவர்கள் உண்டு என்று நினைத்ததே இல்லை…..

  6. Avatar
    மலர்மன்னன் says:

    1. பிராமணன் என்கிற சாதிக்கும் எனக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.
    2.சுந்தர ராமசாமியோ அவர் மனைவி ஸ்ரீமதி கமலா ராமசாமியோ எவ்விதத்திலும் எனக்கு உறவினர் அல்ல. அவர்களுடன் நெருக்கமான பழக்கங்கூட எனக்கு இல்லை. குடும்பப் பரிச்சயம் மட்டுமே உண்டு. பொதுவாக எனக்கு உண்மையாகவே உறவினர்களாக இருப்பவர்களிடம்கூடத் தொடர்பு இல்லை. சுந்தர ராமசாமிக்கு ஏராளமான நண்பர்கள். அவர்களில் நானும் ஒருவன். ஆனால் ஓரிரு முறைக்குமேல் அவர் வீட்டுக்குச் சென்றதில்லை. கருத்தளவில் எமக்குள் ஒற்றுமை இருந்ததும் இல்லை. அவர் மனைவிக்கு என் முகங்கூட நினைவிருக்க வாய்ப்பில்லை.
    3. எழுதத் தெரிந்த யார் வேண்டுமானாலும் சுய சரிதை எழுதலாம். இன்னார்தான் எழுதலாம் என்கிற மேலாதிக்கம் ஒரு சுதந்திரமான இலக்கியவெளியில் இருக்க முடியாது. பதிவுகள் தெளிவாகவும் கவனிக்கத் தக்கவையாகவும் இருந்தால் தானே பாராட்டுப் பெறும். பிராமணர் அல்லாத சாமானியப் பெண்மணி எழுதிய முள் என்கிற சுய சரிதையையும் அதன் சாரம் கருதிப் பாராட்டியிருக்கிறேன்.
    4. நாற்பதைந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதி வருகிறேன் வேண்டியவர் வேண்டாதவர் என்றெல்லாம் பார்த்தோ முக தாட்சண்யத்துக்காகவோ எதுவும் எழுதுவதில்ல. எதற்காகவும் சமரசம் செய்துகொள்வது மில்லை. கோஷ்டி சேர்ப்பதுமில்லை. காய்க்கின்ற மரம்தான் கல்லடி படும் என்பதை அறிந்தே இருக்கிறேன். எவர் மீதும் தனிப்பட்ட முறையில் துவேஷம் இல்லை. இந்தப் புத்தகம் பற்றிச் சொல்வதானால் நானாகவே முதலில் வாங்கிப் படித்துவிட்டு அதில் ஒரு இயல்பான இன்னொசென்ஸ் மிகவும் அழகாகப் பதிவாகியிருப்பதாலும் கிராமிய வாழ்க்கையின் சிறப்பும் குறைபாடும் சொந்த விருப்பு வெறுப்புகளின்றி அதில் வெளிப்பட்டிருப்பதாலும் புத்தகத்தைப்பற்றி எழுத முடிவு செய்தேன். எதைப்பற்றி எழுதுவது, எதைப்பற்றி எழுதத் தேவையில்லை என்று முடிவு செய்யும் சுதந்திரம் எனக்கு உண்டு. கணையாழியில் எழுத நானாகவே முடிவு செய்து காலச் சுவடு கண்ணனிடம் கணையாழிக்கு ஒரு பிரதி அனுப்புமாறு கூறிவிட்டு எனது கட்டுரையை எழுதிக் கணையாழிக்கு அனுப்பினேன். அதில் பிரசுரமான பிறகு திண்ணைக்கு உள்ள உலகளாவிய வீச்சு மூலை முடுக்குகளில் உள்ள வாசகர்களிடம் எல்லாம் சென்றடைவதால் மறுபிரசுரம் வேண்டித் திண்ணைக்கும் அனுப்பினேன்.
    5. அண்ணாவுடனான எனது பழக்கத்தைப் பற்றி நான் தம்பட்டமடித்துத் திரிந்ததில்லை. அவருடனான எனது பழக்கம் அரசியல், இயக்கக் கொள்கைகள் அடிப்படையில் உருவானது அல்ல. பரஸ்பர ஈர்ப்பு என்பதே அதன் அடிப்படை. எனக்கும் அவருக்கும் இருந்த பழக்கத்தை அறிய நேரிட்டவர்கள் அவரது மறுபக்கத்தைச் சரியாகப் பிரதிபலிக்க என்னால் இயலும் என்று கருதி இடைவிடாது வற்புறுத்தி வந்தமையால்தான் அண்ணா மறைந்து 36 ஆண்டுகள் கடந்த பிறகு அவரைப்பற்றி எழுதலானேன். இது திண்ணைக்கும் தெரியும். திண்ணையில் அண்ணா என்ற தலைப்பில் எனது கட்டுரைகளின் தொகுப்பை வெளியிட ஒரு பதிப்பாளர் ஆர்வம் காட்டி வருகிறார். நான் இன்னும் முடிவு செய்யவில்லை. அண்ணாவைப்பற்றி இப்போது எழுதுவதால் என்ன பிரயோசனம், கருணாநிதியைப் பற்றி எழுதினாலாவது எதாவது பயன் இருக்கும் என்று சொன்னவர்களும் உண்டு. எழுதுவது ஏதேனும் ஆதாயத்திற்காகத்தான் என்கிற எண்ணம் உள்ளவர்கள் இவர்கள்!
    6. என்னைப்பற்றிய அவதூறுகளுக்கெல்லாம் பதில் சொல்லி பொழுதை விரையம் செய்யும் வழக்கம் எனக்கு இல்லை. ஆனால் இந்த விஷயத்தில் அனாவசியமாகவும் அநாகரிகமாகவும் சுந்தர ராமசாமியின் மனைவியார் பெயர் விமர்சிக்கப்பட்டதால் விளக்கம் எழுதும்படியாகிவிட்டது.
    7. அண்ணா சமாசாரத்தை இதில் நுழைத்திருக்க வேண்டாம்தான். ஆனால் இதைப் பற்றியும் வாசகர்களிடமிருந்து அவ்வப்போது விளக்கம் கேட்டு அஞ்சல்கள் வருவதால் இதையே ஒரு வாய்ப்பாகக் கொண்டு கருத்துத் தெரிவித்துவிட்டேன்.
    -மலர்மன்னன்

  7. Avatar
    punai peyaril says:

    மம, நீங்கள் காவ்யா ஒரு எண்ணத் தொந்தரவு என்று புரிந்து உங்கள் எழுத்துப் பணி தொடருங்கள். காலம் தான் சிலவற்றிருக்கு பதில் சொல்ல முடியும். காவ்யாவை நீங்கள் புறந்தள்ளுதல் எங்களுக்கு நிறைய படிக்க உங்கள் மூலம் கிடைக்கிறது… – சத்திய எழுத்துக்களை அது இருக்கும் ஒரு நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *