பசுமையின் நிறம் சிவப்பு

This entry is part 23 of 28 in the series 5 மே 2013

 

”ஏம்மா.. வீட்டில யாரும்மா. எங்கம்மா உன் புருசன்? பணம் வாங்கறப்ப தேடி வந்து மணிக்கணக்கா குந்திக்கிட்டிருந்து வாங்கத் தெரியுது.  வட்டி கூட நேரத்துக்கு ஒழுங்கா வந்து கட்ட முடியல..  ஏம்மா எல்லாரும் சோத்துக்கு உப்பு போட்டுத்தானே திங்கறீங்க. எத்தனை வாட்டி நடக்குறது? எங்களுக்கெல்லாம் வேற பொழப்பே கிடையாதா?”

 

“ஐயா, அவுரு கடைவீதிக்கு போயிருக்காருங்க.  வந்தவுடனே வரச்சொல்றேங்க. சத்தம் போடாதீங்க ஐயா, அக்கம் பக்கத்துல மானம் போவுது.”

 

“ஓ.. மானமா அப்படி ஒன்னு இருக்குதா உங்களுக்கு. இருந்தா இப்படி பணத்தை வாங்கிக்கிட்டு மூனு மாசமா வட்டியும் கட்டாம, முதலுக்கும் வழியில்லாம தலை மறைவா இருப்பானா உன் புருசன், பேச வந்துட்டா.. இந்தா இந்த வெட்டி நியாயமெல்லாம் வாண்டாம். உன் புருசனை உடனடியா பணத்தைக் கொண்டாந்து கட்டச்சொல்லு. இல்லேனா நடக்குறதே வேற ஆமாம்…”

 

முறுக்கு மீசையும், கருத்த இரட்டை நாடி உருவமும், சிவந்த கண்களும் பார்ப்பதற்கே ஐயனாரப்பன் போல ஒரு பயமுறுத்தும் தோற்றம் கொண்ட இந்த மனுசனிடம் போய் மாட்டிக் கொண்டோமே என்ற கிலி போட்டு ஆட்டிவைக்க, இதிலிருந்து எப்படி மீண்டு வரப்போகிறோம் என்ற  அதிர்ச்சியில் அப்படியே உறைந்து நின்றிருந்தாள். குழந்தையின் அழுகை சத்தம் சுய நினைவை மீட்டுக் கொண்டுவர  எடுத்து பால் புகட்ட ஆரம்பித்தாள். குழந்தைக்கும் அந்த வேதனை உணர்வு தொற்றிக் கொண்டதோ என்னவோ, அமைதியில்லாமல் நெண்டிக்கொண்டே பாலருந்திக் கொண்டிருந்தது.  வீட்டில் ஒழுங்காக சோறு பொங்கி பல நாட்கள் ஆகிவிட்டது. அவ்வப்போது அடுப்பில் பூனை தூங்கிக் கொண்டிருக்கிறது.

 

கருகாத பயிரின் பசுமை நிறைந்த ஊர் என்பதாலேயே கருகாவூர் என்று பெயர் வைத்தார்கள். அதெல்லாம் ஒரு காலம். இன்று மழையும் இல்லாமல், தண்ணீருக்கும், மின்சாரத்திற்கும் தட்டுப்பாடும் ஏற்பட்டு  காய்ந்து போன வயல் வெளிகள் நிறைந்து  கிடக்கும் ஊருக்கும் அதே பெயர்தான்.  விதை நெல்லுக்கும், உரத்திற்கும், கூலியாட்களுக்கு கொடுப்பதற்கும் என்று மொத்தமாக வாங்கிய கடன் இன்று மிரட்டிக் கொண்டிருக்கிறது. குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் அள்ளி வழங்கும் தாய் திருக்கருகாவூர் அம்மன். ஆனால் இன்று அவள் கொடுத்த வரத்தில் பிறந்த பல குழந்தைகள் பாலுக்கும் வழியில்லாமல் கிடப்பதைக் காண நேரமில்லையோ அவளுக்கு என்று நினைத்து மருகிக் கொண்டிருந்தாள் மங்கையர்கரசி என்ற மங்கை.  குழந்தையை தூங்க வைத்துக் கொண்டிருந்தவள் வாசல் கதவு திறக்கும் சத்தம் கேட்டு கணவன் தான் வந்திருக்க வேண்டும் என்று அரக்கப் பரக்க எழுந்து வந்தாள்.

 

மிகவும் சோர்ந்த முகத்துடன், களைத்துப்போய் வந்திருக்கும் சந்திரனைப் பார்க்க அவளுக்கும் வேதனையாக இருந்தது. அவன் முகத்தைப் பார்த்தவுடன் தெரிந்துவிட்டது போன காரியம் ஆகவில்லை என்று. எப்படியாவது பணம் புரட்டிக் கொண்டு வருவதாகச் சொல்லிச் சென்ற கணவன் முகத்தை தொங்கப் போட்டுக் கொண்டு வந்திருப்பதைப் பார்த்தவுடன் அந்த ஃபைனான்சுகாரனின் முகம்தான் நினைவிற்கு வந்தது. கழுத்தில், கையில், காது மூக்கில் கிடந்த நகைகள் அனைத்தும் ஒவ்வொன்றாக அடமானத்தில் சென்று, பாதிக்கும் மேல் மூண்டும்விட்டது.  இப்போது என்னதான் வழி என்று புரியாமல் திகைத்து நிற்பவளைக் கண்ட சந்திரன்,

 

”என்னம்மா, என்னாச்சு ஏன் இப்படி இருக்கே. யாராவது வீட்டுக்கு வந்தாங்களா.. ஏதும் பிரச்சனையா?” என்றான்.

 

கண்ணில் முட்டிக்கொண்டு வந்த கண்ணீரை அடக்கிக்கொண்டு பேசவும் நா எழாமல் திக்கித் திணறி ஃபைனான்சுகாரன் வந்து சத்தம் போட்டதை சொன்னவுடன் அவன் முகம் மாறிப்போனது. இன்னும் இரண்டொரு நாட்களில் தான் கேட்டிருந்த இடத்தில் பணம் கிடைத்துவிடும் என்றும் அவனுக்கு மொத்தமாகக் கொடுத்து செட்டில் பண்ணிவிடலாம் என்றும் சொல்லி மனைவியை சமாதானம் செய்துவிட்டு, அவனை நேரில் பார்த்து இன்னும் இரண்டு நாட்கள் டைம் கேட்டுவிட்டு வருவதாகக் கூறி சாப்பிடாமல்கூட சென்று விட்டான். திருமணம் ஆகி சந்திரனுடன் வாழ்ந்த இந்த எட்டு ஆண்டு கால வாழ்க்கையில் இதுவரை கஷ்டம் என்றால் என்னவென்றே தெரியாமல் ராணி போல வைத்திருந்தான். மூத்தவள் லட்சுமிக்கு இப்போது ஏழு வயது ஆகிறது ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு வரமாய் வந்து பிறந்தவன் விஜயன். குழந்தைக்கு ஒரு வயது முடிந்து விட்டது. இப்படி ஒரு நிலை வரும் என்று கனவிலும் நினைத்துப் பார்த்தவளில்லை அவள். தங்கள் உறவுகளிலேயே ஓரளவிற்கு படித்தவளும், நல்ல சிவந்த நிறத்துடன் அழகாக இருப்பவளும் தன் மனைவி மட்டுமே என்பதில் பெரிய பெருமை அவனுக்கு. அவளுடைய முகத்தில் இன்று பரவி இருக்கும் சோகத்தைக் காணச் சகிக்காமல் வேதனையின் உச்சத்திற்கே சென்றிருந்தான்.

 

எதையோ நினைத்துக் கொண்டே நடந்தே ஃபைனான்சுகாரன் வீடு வரை வந்தவன் வெளியில் இருந்த ஆட்களிடம் ஐயாவைப் பார்க்க வேண்டும் என்று அனுமதி கேட்டான். உள்ளே வரச்சொன்னவுடன் என்ன பேசுவானோ என்ற அச்சத்தில்தான் மெதுவாகத் தயங்கித் தயங்கி சென்றான். ஆனால் அவன் எதிர்பார்த்த அளவிற்கு ரொம்ப கோபமாக இல்லாதது ஆறுதலாக இருந்தது. ‘என்னப்பா.. பணம் கொண்டாந்துட்டியா, பரவாயில்லையே அதுக்குள்ளார வந்துட்ட’ என்று சொன்னபோது அவனும் தயங்கியபடி இன்னும் இரண்டு நாட்கள் மட்டும் டைம் கொடுத்தால் பணம் முழுவதும் கொண்டுவந்து கட்டிவிடுவேன் என்று கெஞ்சலாகக் கேட்டபோதும், சற்றும் கோபப்படாமல், ரொம்பவும் அமைதியாக அவன் சொன்ன விசயம் அடி வயிற்றை கலக்கியதோடு கோபத்தில் நெற்றிப் பொட்டும் துடிக்க ஆரம்பித்துவிட்டது. ஆனாலும் பல்லைக் கடித்துக்கொண்டு வீடுவந்து சேர்ந்துவிட்டான். மனைவியின் முகத்தைக் காணப்பிடிக்காமல் ஒன்றும் பேசாமல் நேரே படுக்கையறையினுள் நுழைந்து அப்படியே படுக்கையில் சாய்ந்துவிட்டான். கொஞ்சமாவது சாப்பிட்டு படுக்கச் சொல்லி மங்கை எவ்வளவோ கட்டாயப்படுத்தியும் மறுத்துவிட்டு திரும்பிப் படுத்துக் கொண்டான். அவளும் எல்லாவற்றையும் எடுத்து வைத்துவிட்டு சாப்பிடப் பிடிக்காமல் வந்து படுத்துவிட்டாள். அசதியும், பசியும் சேர்ந்து அவளை தூங்கச் செய்துவிட்டது.

 

தூங்கிக் கொண்டிருந்த மனைவியின் விகல்பமில்லாத முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான் சந்திரன். 0 வாட்ஸ் விளக்கு வெளிச்சத்தில் பொன்னாக மின்னும் அந்த வதனம் இன்று ஏனோ பாரமேற்படுத்துகிறது. எத்தனை நாள் நிலவொளியில் ரசித்திருப்பான் இந்த தெவிட்டாத பேரின்பத்தை. ஆனால் இன்று அந்த படுபாவி பாழாய்ப்போன அந்தப் பணத்திற்காக என்ன கேள்வி கேட்டுவிட்டான்.  தன் அன்பு மனைவியை அல்லவா பணயம் வைக்கச் சொன்னான்..  அவளைப் பற்றி எத்துனை நாராசமாக தன் முன்னாலேயே வர்ணித்ததை நினைக்கும்போதே உள்ளம் குமுறி இதயம் வெடித்து சிதறியது. இன்னும் இரண்டு நாட்களில் எப்படி பணம் கொடுப்பது என்று எதுவுமே புரியவில்லை. எந்த வழியும் புலப்படவில்லை.  பெற்ற தாயாகக் காத்துவந்த பூமி மாதாவே கைவிட்ட பின்பு இனி தன்னை யார்தான் காப்பாற்ற முடியும்? அரசாங்கத்தில் எத்தனையோ திட்டம் விவசாயிகளுக்காகப் போட்டு வைத்தாலும், சிலதெல்லாம் ஏட்டளவிலேயே நின்று போவதும், பெரும்பாலும்  வசதியும், பதவியும் படைத்தவர்களுக்கே அவையெல்லாம் சென்று சேர்வதே வழமையாகிவிட்டது. கிசான் அட்டைக்காகத் தான் நடந்து களைத்துப் போனதும் நினைவிற்கு வந்தது. ஒரு வேளை அந்த அட்டைக் கிடைத்திருந்தால் இந்த ஃபைனான்சுகாரனிடம் மாட்டி அவதிப்பட்டு  இன்று இப்படி ஒரு நிலையில் துடிக்க வேண்டி வந்திருக்காதோ.. ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும் என்று துவண்டு விழுந்தான்..

 

சுள்ளென்று முகத்தில் சூரிய ஒளி சன்னல் வழியாக பரவ, சுருட்டிப் பிடித்துக் கொண்டு எழுந்தாள் மங்கை. ஏனோ இன்று இவ்வளவு நேரம் தூங்கிவிட்டாள். தொட்டிலில் குழந்தை முழித்து, விளையாடிக் கொண்டிருந்தான்..  கட்டிலில் மகள் லட்சுமி மட்டும் தூங்கிக் கொண்டிருந்தாள். அருகில் படுத்திருந்த கணவனைக் காணாமல், ஒருவேளை பாத்ரூமில் இருப்பானோ என்று போய் பார்த்தாள். கதவு திறந்தே இருந்தது. தேடிக்கொண்டே சமயலறைப் பக்கம் வந்தவள் அதிர்ச்சியில் வீல் என்று அலறியதில் அக்கம் பக்கத்தினர் நிமிடத்தில் கூடிவிட்டனர். அங்கு உத்திரத்தில் தூக்கு போட்டு, நாக்கு வெளியே தள்ளி,  விகாரமான முகத்துடன் தொங்கிக் கொண்டிருந்தான் சந்திரன். உலகமே அஸ்தமித்துப் போனது போல சுய நினைவே இல்லாமல் கிடந்தவளை தண்ணீர் தெளித்து எழுப்பி, சடங்கு, சாங்கியங்களெல்லாம் செய்து முடித்து சந்திரனை அனுப்பிவைத்து விட்டு உறவினர்களெல்லாம் அழுத முகத்துடன், கிளம்பிவிட்டனர். வயதான தாய் மட்டும் அருகில் இருக்க அடுத்த வேளை சாப்பாட்டிற்கு என்ன வழி என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தாள். ஏனோ இப்படி ஒரு இக்கட்டான நிலையில் அனாதரவாக விட்டுவிட்டு சுயநலமாக செத்துப் போனவனை நினைக்கவேப் பிடிக்கவில்லை அவளுக்கு. குழந்தைகளை எப்படியும் காப்பாற்றி ஆகவேண்டும் என்ற உறுதியான மனம் மட்டும் இருந்தது. ஆனாலும் முதலில் வயிறு நிறைய வேண்டுமே..  குழந்தைக்கு கொடுப்பதற்கு தாய்ப்பால் கூட சுரப்பது குறைந்துவிட்டது. சகோதரன் வீட்டில் மூன்று வேளை சாப்பாடாவது ஒழுங்காக சாப்பிட்டுக்கொண்டிருந்த அம்மாவும் இன்று தன்னோடு சேர்ந்து பசி, பட்டினியில் வாட வேண்டாம் என்று முடிவு எடுத்தவள்,  கட்டாயப்படுத்தி தாயையும் சகோதரன் வீட்டிற்கே அனுப்பி வைத்தாள்.

 

எப்படியும் ஃபைனான்சுகாரன் வந்து விரைவில் பணத்திற்கு தொல்லைக் கொடுப்பான் என்று தெரியும். அவன் ஊரில் இருந்திருந்தால் பிணத்தைக்கூட எடுக்க விட்டிருக்க மாட்டான். நல்ல வேளையாக வெளியூர் சென்றுவிட்டான் என்று அக்கம் பகத்தினர் சொல்லித்தான் தெரிந்தது.  அவன் வந்து சேருவதற்குள் என்ன செய்ய முடியும் என்று யோசித்தவளுக்குத் தெரிந்த ஒரே வழி அந்த இரண்டு ஏக்கர் நிலத்தை விற்று இந்தப் பிரச்சனைக்கு முடிவு கட்டுவதுதான். நிலத்தை விற்க ஏற்பாடு நடக்க ஆரம்பித்தபோதுதான் புற்றீசல் போல பல கடன்கள் கிளம்பியது. ஆம் சந்திரன் பல இடங்களிலும் கடன் வாங்கியிருந்தது அப்போதுதான் தெரிந்தது அவளுக்கு. நிலம் விற்று கடன் போக மீதமிருக்கும் காசில் ஏதாவது சிறிய தொழில் செய்தாவது பிழைக்கலாம் என்ற எண்ணத்திலும் மண் விழுந்துவிட்டது. அந்த நேரத்தில்தான் பெரியவர் சிதம்பரம் வந்து உதவ முன்வந்தார்.  நெற்றியில் பட்டையாகத் திருநீரும்,  கழுத்தில் உத்திராட்சமும்  போட்டுக் கொண்டு சிவப்பழமாக காட்சியளிக்கும் சிதம்பரம் ஐயாவின் சொல்லிற்கு ஊரில் அனைவரும் கட்டுப்படுவார்கள். சற்றும் தயங்காமல் அந்த நிலத்தை நியாயமான விலைக்கு தானே எடுத்துக் கொண்டதோடு, கடன்காரர்களை வரவழைத்துப் பேசி, பாதிப்பணம் மட்டும் அனைவருக்கும் கொடுத்து செட்டில் பண்ணிவிட்டு மீதமுள்ள தொகையை குழந்தைகளின் பெயரில் வங்கியில் போட்டு வைத்தார்.

 

ஏதாவது கூலி வேலைக்குப் போகலாமா அல்லது இட்லி கடை ஏதும் வைக்கலாமா என்று  பலத்த யோசனையில் இருந்தாள். காலையிலிருந்து சமைக்கவில்லை, சாப்பிடவில்லை என்ற நினைவே இல்லாமல்  இருந்தாள். குழந்தை அழும் போதெல்லாம் தன் பாலைக் கொடுத்துக் கொண்டிருந்தாள். அதுவும் வாய் வலிக்க வெற்று மார்பை சப்பிவிட்டு அசதியில் கண் அசந்து கிடந்தது. லட்சுமியும் , ‘அம்மா, பசிக்குது’ என்று ஓரிரு முறை கேட்டுப்பார்த்துவிட்டு அவளிடமிருந்து சரியான பதில் வராததால், மெல்ல பக்கத்து வீட்டில் போய், ‘அத்தை எனக்கும் பசிக்குது, நானும் இங்கேயே சாப்பிடவா’ என்று விகல்பமில்லாமல் கேட்டபோது, அவர்களும் நிலைமையை புரிந்து கொண்டு லட்சுமிக்கும் சாப்பாடு கொடுத்து, மங்கைக்கும் சாப்பாடு எடுத்துக் கொண்டுவந்து கொடுத்தார்கள். இதைச் சற்றும் எதிர்பாராத மங்கை அவமானத்தில் கூனிக்குருகிப் போனதோடு , அவர்கள் சென்றவுடன் லட்சுமியை கோபத்தில் நன்றாக அடித்துவிட்டாள். குழந்தை பயத்தில் சுவர் ஓரமாக ஒடுங்கி உட்கார்ந்திருப்பதைப் பார்த்து மனம் பொறுக்காமல் ஓவென்று அழுதவள், அடுத்த நொடி கண்களைத் துடைத்துக்கொண்டு யதார்த்தத்திற்கு வந்தாள். உடனடியாக ஏதாவது ஒரு வேலையில் சேர்ந்து குழந்தைகளுக்கு சாப்பாட்டிற்காவது வழி பண்ண முடிவு செய்தாள். எக்காரணம் கொண்டும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக வங்கியில் போட்ட பணத்தை தொடக்கூடாது என்ற முடிவிலும் உறுதியாக இருந்தாள்.

 

பெற்ற தகப்பனைப்போல எல்லா பிரச்சனைகளையும் தீர்த்து வைத்த சிதம்பரம் என்ற அந்த மனித தெய்வத்தின் மீது அளவு கடந்த நம்பிக்கை கொண்டாள். அதனாலேயே அவர் சொல்லிற்கு கட்டுப்பட்டு இரண்டு குழந்தைகளையும் கூட்டிக் கொண்டு காலையில் சிதம்பரம் ஐயாவின் வீட்டிற்குச் சென்று  சமையல்  வேலைகளெல்லாம் முடித்துவிட்டு மாலை வீடு திரும்பிக் கொண்டிருந்தாள். நல்ல சம்பளமும் கிடைத்ததால் குழந்தைகளுக்கு தேவையானதை வாங்கிக் கொடுக்க முடிந்தது. எவ்வளவுதான் மறக்க முயன்றாலும் இரவில் வந்து படுத்தவுடன் கணவனின் நினைவு வாட்டத்தான் செய்தது. எவ்வளவு அன்பாக வைத்திருந்த ஒரு ஜீவன், திடீரென்று இல்லாமலே போனால் அதன் வலி பெரியதுதானே…

 

வழக்கம் போல அன்று காலை குழந்தைகளுடன் வேலைக்குக் கிளம்பியவள்  இளைய மகன் விடாமல் அழுது கொண்டிருக்கவும் வயிற்று வலியோ என்னவோ என்று தொப்புளுக்கு சிறிது விளக்கெண்ணெய் வைத்து தோளில் போட்டு சமாதானம் செய்ய முயற்சித்தாள். காலையில் பாலும் சரியாகக் குடிக்கவில்லை. வயிற்றுப் போக்கும் இருந்தது. சற்று ஓய்ந்த குழந்தை மீண்டும் குரலெடுத்து அழ ஆரம்பிக்க பக்கத்து வீட்டு கோமுப்பாட்டி வந்து குழந்தையை வாங்கி வயிறை தட்டிப்பார்த்து, பொடபொடவென சத்தம் வந்ததைப் பார்த்து குடல் ஏற்றம் தட்டியிருக்கு, எடுத்தால் சரியாப் போகும் என்று சொல்லி குழந்தையை வெகு இலாவகமாகப் பிடித்து வயிற்றில் விளக்கெண்ணெய் தடவி பதமாகத் தட்டியதில் குழந்தை அழுகை ஓய்ந்து அசதியில் அப்படியே தூங்கிவிட்டான். வேலைக்கு நேரமானதால் என்ன செய்வது என்று புரியாமல் விழித்த போது கோமுப்பாட்டி, ‘புள்ளைய இங்கயே தொட்டில்ல போட்டுட்டுப் போம்மா, நான் பாத்துக்கறேன். நீ சிக்கிரமா பெரியவருக்கு சமைத்து வச்சுட்டு வந்துடு’ என்று சொன்ன யோசனை சரியாகப்பட அப்படியே செய்துவிட்டு கிளம்பினாள்.

 

அந்த நேரத்தில் வாசலில் தினசரி இதழ்களைப் படித்துக்கொண்டு ஈசி சேரில் உட்கார்ந்திருக்கும் பெரியவரைக் காணவில்லை. கதவு தாளிடப்படாமல் இருந்ததால் திறந்துகொண்டு உள்ளே சென்றவள் அங்கு படுக்கையறையில் சுருண்டு படுத்திருந்தவரைக் கண்டு பதறியவளாக,

 

“ஐயா, என்ன ஆச்சுங்க.. உடம்புக்கு முடியலையா. நேத்தே தலைவலின்னு சொன்னீங்களே” என்றாள்.

 

அவரும், ‘ஆமாம்மா, உடம்பெல்லாம் ஒரே அசதியா இருக்கு. இரண்டு மூனு நாளா இரவெல்லாம் சரியா தூக்கம் வேற இல்லியா’ என்று சொன்னபோது ஒரு மாதிரி தன்னை உற்றுப் பார்த்தது ஏதோ உறுத்தலாக இருந்தாலும், அதைக் கண்டுகொள்ளாதவள் போல, ‘இப்ப என்ன சாப்பிடுறீங்க, கஞ்சி ஏதாவது வச்சிக் கொடுக்கட்டுமா’ என்றாள்.

 

‘கஞ்சியெல்லாம் வேணாம், நல்லா சுருக்குனு கார சட்னி ஏதாவது அரைச்சி, இரண்டு ஊத்தப்பம் போட்டு கொண்டு வாம்மா’ என்ற போது புரிந்து போனது அவர் உடல் நலம் இல்லாததன் காரணம். சில நாட்களாகவே அவருடைய பார்வையிலும், செயலிலும் சில மாற்றங்களை உணர முடிந்தது அவளால். தேவையில்லாமல் கையைத் தொட்டு வாங்குவதிலும், மிக நெருக்கமாக நின்று மூச்சுக் காற்று மேலே படும்படியாக பேசுவதிலும், பேச்சில் தேவையற்ற நெருக்கமும், உரிமையும் காட்டுவதிலும் சந்தேகம் அதிகமாகிக் கொண்டிருந்தாலும் முடிந்த வரை பொறுத்துக் கொண்டிருந்தாள். ஒரு வேளை தன் சந்தேகம் தவறானதாக இருந்தால் ஒரு பெரிய மனிதரை நோகடித்த பாவம் வந்துவிடுமே என்று அஞ்சினாள். அவள் சமயலறையில் சென்று காரச் சட்னியும், ஊத்தப்பமும் தயார் செய்து கொண்டு வருவதற்குள் பெரியவர் குளித்து திருநீரு பட்டையுடன் தயாராக வந்துவிட்டார்.  இன்று ஏதோ விபரீதமாக நடக்கப் போகிறது என்று உள்ளுணர்வு சொல்லிக்கொண்டேயிருந்ததால் எச்சரிக்கையுடனே இருந்தாள்.  எப்பொழுதும் தானே போட்டுக் கொண்டு சாப்பிடுபவர் அன்று மங்கையைக் கூப்பிட்டு பக்கத்தில் இருந்து பரிமாறச் சொன்னார்.  அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவர்,

 

‘ஏம்மா.. இப்ப நீ ஓரளவிற்கு மனசு தெளிஞ்சிருப்பே இல்லையா.. இந்த வயசுல இப்படி ஒரு தனிமை ரொம்ப கொடுமை. உன்னைப் பார்த்தால் எனக்கு வேதனையா இருக்கும்மா. என் மனைவி இறந்து மூனு வருசம் ஆச்சு. தனிமையோட கொடுமையைப் பத்தி எனக்குத் தெரியும். இந்த 65 வயசுல எனக்கே இப்படி இருக்குன்னா உன்னைய மாதிரி சின்னப் பெண்ணிற்கு எத்தனை சிரமம் இருக்கும். அதெல்லாம் மனசுல வச்சுக்கிட்டுதான் நான் ஒரு முடிவு எடுத்திருக்கேன். நீ இனிமே தனியா வீட்டில இருக்க வேண்டாம். இங்க நம்ம வீட்டிலயே ராணியாட்டமா இருக்கலாம். என் பொண்ணும் ஏதோ ஒரு நாளைக்குத்தான் வருவாள். அந்த நேரத்துல மட்டும் நீ உன் வீட்டில போய் தங்கிடு. எந்த பிரச்சனையும் இல்லாம இருக்கலாம். வெளிய பாக்குறவங்களுக்கும் சந்தேகம் வராது. ‘

 

‘ஐயா என்னய்யா சொல்லுறீங்க. பெத்த அப்பா மாதிரி உங்களை நினைக்கிறேன். என்னைப்போய் இப்படி கேட்டுப்புட்டீங்களே,  மனசு தாங்கலை ஐயா’

 

‘இதுக்கு மேலே ஒரு வார்த்தை சொல்லாத தாயீ, அப்பான்னெல்லாம் சொல்லாதே.. உன் கையை காலா நினைச்சு கேக்கறேன், என்னை ஏத்துக்கோம்மா.. ‘ சட்டென்று எழுந்து கையைப் பிடித்தவுடன் கம்பளிப் பூச்சி ஊறுவது போல ஒரு அருவருப்பில், கையை உதறிவிட்டு, வியர்த்துக்கொட்ட பின் வாங்கவும், மேலும் சிதம்பரம் ஒரு அடி முன்னேறவும் மங்கை ஒரு முடிவிற்கு வந்தவளாக மேசையின் மீது இருந்த கனமான வெள்ளித்தட்டை எடுத்து அந்த மிருகத்தின் மண்டையைக் குறி பார்த்து தாக்க முனைந்த அதே வேளை,

 

‘சபாஷ்… ரொம்ப நல்லாயிருக்கு.. சே, உன்னை அப்பான்னு கூப்பிடவே வெறுப்பா இருக்கு. நீயெல்லாம் ஒரு மனுசனே இல்ல. உனக்கு பொம்பளை சுகம் தேவைன்னா ஊர்ல போய் கல்யாணத்துக்குத் தயாரா இருக்குற  உன் வயசுக்கு தகுந்த மாதிரி பொண்ணைப் பார்த்து கல்யாணம் பண்ணிக்கிட்டு போய்த் தொலைய வேண்டியதுதானே. ஏன் இப்படி  நல்ல மனுசனாட்டம் இரட்டை வேசம் போட்டுக்கிட்டு அலையணும்.. சே..இனி உன் மூஞ்சியிலேயே முழிக்க மாட்டேன் போ’ என்று கத்திவிட்டு சடாரென திரும்பிப் போய்விட்டாள். இதனை சற்றும் எதிர்பாராத சிதம்பரம் பொட்டில் அறைந்தது போல தடுமாறி அதிர்ச்சியில் உறைந்து நின்றார்.

 

மங்கை, சிதம்பரத்திற்கு இதைவிட ஒரு பெரிய தண்டனை எப்பொழுதும் யாரும் கொடுக்க முடியாது என்பதை உணர்ந்து ஒன்றும் பேசாமல் லட்சுமியை கூட்டிக் கொண்டு ஒரேயடியாகக் கிளம்பிவிட்டாள்.  கண்ணில் ஒரு துளியும் கண்ணீர் வராதது அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது. தன் மனம் பக்குவப்பட்டு எதையும் தாங்கி மீண்டு வரும் சக்தியும் பெற்றுவிட்டதை உணர்ந்து பெருமிதம் கொண்டாள். வாழும் வழிக்கான அடுத்த முயற்சிக்கு தயாராகிவிட்டாள் அந்த அபலைப் பெண்!

————-

Series Navigationகரையைத் தாண்டும் அலைகள்குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 9
author

பவள சங்கரி

Similar Posts

4 Comments

  1. Avatar
    Dr.G.Johnson says:

    கடன் பட்டு விவசாயத்தில் போட்ட பணத்தை மீட்ட முடியாமல் மேலும் வட்டியில் மாட்டிக்கொள்ளும் ஒரு விவசாயக் குடும்பத்தின் சோகக்தைச் சொல்லும் கதை ” பசுமையின் நிறம் சிவப்பு “.

    சந்திரனின் தற்கொலை பரிதாபமானது.துன்பம் வந்தபோது எதிர்கொள்ளத் திராணி இல்லாமல் இப்படி கொழைத்தனமாக ஒரு குடும்பத் தலைவன் தப்பித்துக் கொள்வது முறையற்றத்துதான் அனால் இவ்வாறுதான் சில கிராமங்களில் இன்று நடை பெறுகிறது என்பதையும் நம் அறிந்துள்ளோம்.

    பெரியவர் சிதம்பரம் உதவ வந்தபோதே இப்படித்தான் ஆகும் என்ற சந்தேகம் வலுத்தது.அதுவும் அப்படியே ஆனது.

    எளிமையான வகையில் நல்ல நடையில் கதையைக் கொண்டு சென்றுள்ள பவள சங்கரிக்கு எனது பாராட்டுகளும் நல்வாழ்த்துகளும் …டாக்டர் ஜி.ஜான்சன்.

  2. Avatar
    பவள சங்கரி says:

    அன்பின் மரு.ஜான்சன் அவர்களுக்கு,

    வணக்கம். தங்களுடைய ஊக்கமான வார்த்தைகளுக்கும், வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றி.

    அன்புடன்
    பவள சங்கரி

  3. Avatar
    கவிஞர் இராய. செல்லப்பா. says:

    கதைக் கரு பழைமையானது தான் என்றாலும், கந்துவட்டிக்காரர்களின் நடவடிக்கைகள் அத்துமீறிப்போகும் இன்னாளில் மீண்டும் நினைவூட்டிக்கொள்ளவேண்டிய ஒன்று தான். திருக்கருகாவூருக்கு வந்து முல்லைவனநாதரையும் கர்ப்பரட்சாம்பிகையையும் வணங்கி எண்ணெய்ப் பிரசாதம் பெற்றுக்கொண்டது நினவுக்கு வருகிறது. அந்தப் பேரனுக்கு இப்போது இரண்டு வயதாகப்போகிறது. அவன் வீட்டிலிருந்துதான் எழுதுகிறேன். –நியுஜெர்சியிலிருந்து கவிஞர் இராய. செல்லப்பா.

  4. Avatar
    பவள சங்கரி says:

    அன்பின் திரு கவிஞர் இராய.செல்லப்பா,

    வணக்கம். தங்களுடைய வாசிப்பிற்கும் கருத்துரைக்கும் நன்றி. திருக்கருகாவூர், கர்ப்பரட்சாம்பிகை அம்மனின் பூரண அருள் பெற்ற தங்கள் பெயரனுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    அன்புடன்
    பவள சங்கரி

Leave a Reply to பவள சங்கரி Cancel reply

Your email address will not be published. Required fields are marked *