பஞ்சதந்திரம் தொடர் 29- முட்டாள் நண்பன்

This entry is part 1 of 31 in the series 5 பிப்ரவரி 2012

முட்டாள் நண்பன்

‘’பிறகு அவர்கள் அந்த ஊரில் வியாபாரியின் மகனைப் பேரம் பேசிவிட்டு மூன்று ரத்தினங்களையும் விற்றனர். பணம் நிறையக் கொண்டு வந்து அரசகுமாரன் முன் வைத்தனர். அவன் மந்திரி குமாரனைத் தனது மந்திரியாக நியமித்துக் கொண்டான். அவன் மூலம் அந்த ராஜ்யத்தைக் கைப்பற்ற எண்ணினான். வியாபாரியின் மகனைத் தனது பொக்கிஷ அதிகாரியாக நியமித்தான். இரண்டு மடங்காகச் சம்பளம் கொடுத்து பொறுக்கியெடுத்த நேர்த்தியான யானை, குதிரை, காலாட் படைகளைத் திரட்டினான். ராஜநீதியின் ஆறு அம்சங்களும் அறிந்த அந்த நாட்டின் மந்திரியுடன் சண்டை செய்து அரசனைக் கொன்று, ராஜ்யத்தைக் கைப்பற்றி அரசனானான். பிறகு ராஜ்யத்தின் சகல பொறுப்புக்களையும் அவர்களிடமே ஒப்படைத்துவிட்டு, தன்னிஷ்டம் போல் கேளிக்கைகளில் மூழ்கித் திளைத்திருந்தான்.

அரசன் அடிக்கடி அந்தப்புரத்துக்குப் போய் வருவது வழக்கம். ஒரு சமயம் இப்படிப் போய் வந்துகொண்டிருக்கையில் அந்தப்புரத்திற்கு அருகிலுள்ள லாயத்தில் இருந்த ஒரு குரங்கை எடுதுது செல்லமாக வளர்க்க ஆரம்பித்தான். எப்போதும் அதைத் தன் பக்கத்திலேயே வைத்துக்கொண்டான். ஏனெனில் கிளி, சகோரப்பறவை, புறா, ஆடு, குரங்குகளிடம் இயற்கையிலேயே மன்னர்களுக்குப் பிரியம் உண்டாகிறதல்லவா? அரசன் தந்த பலவிதமான தின்பண்டங்களைத் தின்று காலக் கிரமத்தில் அந்தக் குரங்கு பெரியதாய் வளர்ந்தது. அரச குலத்தினரிடையே பெருமதிப்பும் பெற்றது. அதன்மேல் அன்பும் விசுவாசமும் செலுத்தி அதைத் தன் கத்தி ஏந்தும் பணியாளாக அரசன் நியமித்துக் கொண்டான்.

அரசனின் அரண்மனைக்கு அருகிலே பலவித மரங்கள் நிறைந்த சிங்காரத் தோட்டம் ஒன்று இருந்தது. வசந்த காலம் வந்ததும் வண்டுகள் மன்மதனின் கீர்த்தியை ரீங்காரம் செய்தன. மலர்கள் பரப்பும் மணம் மனோரம்மியமாயிருந்தது. அந்தத் தோட்டத்தைக் கண்டு, மன்மதனால் தூண்டப்பட்டு அரசன் தன் பட்டமகிஷியுடன் அதற்குள் புகுந்தான். எல்லா வேலையாட்களும் வாயிலிலேயே தங்கி விட்டனர்.

உற்சாகத்தோடு தோட்டத்தைச் சுற்றிப் பார்த்து வந்ததிலே அரசன் களைப்படைந்தான். ‘’இந்த மலர் மண்டபத்தில் கொஞ்சம் தூங்குகிறேன். என்னை யாரும் தொந்தரவு செய்யாதபடி கவனமாகப் பார்த்துக்கொள்’’ என்று குரங்குக்குக் கட்டளையிட்டுவிட்டு, அரசன் தூங்கினான். அவன் உடம்பில் பூவும், சந்தனமும், கஸ்தூரியும் மணங்கமழ்ந்தன. அப்போது ஒரு வண்டு வந்து அரசன் தலையில் உட்கார்ந்தது. அதைக் கண்டு கோபங்கொண்ட குரங்கு, ‘’நான் பார்த்துக்கொண்டிருக்கும் போதே அந்த அற்பப் பிராணி அரசனைக் கடிக்கிறதே!’’ என்று எண்ணி அதைத் தடுக்க முற்பட்டது. எவ்வளவோ தடுத்துப் பார்த்தும் வண்டு மறுபடியும் மறுபடியும் அரசனை நெருங்கியபடியே இருந்தது. கோபத்தால் குருடாகிய குரங்கு, கத்தியை உருவி வண்டைக் குறி பார்த்து வீசி எறிந்தது. ஒரே வீச்சில் அரசன் தலை துண்டாகி விழுந்தது.

உடனே அரசனோடு, தூங்கிக் கொண்டிருந்த பட்டமகிஷி பயந்து எழுந்து அந்த மூடனைப் பார்த்துவிட்டு அழ ஆரம்பித்தாள். ‘’மூட வானரமே, உன்மேல் நம்பிக்கை வைத்த அரசனிடம் ஏன் இப்படி நடந்துகொண்டாய்?’’ என்று கேட்டாள்.

நடந்ததை நடந்தபடி குரங்கு சொல்லிற்று. அங்கு கூடிய எல்லோரும் அதைத் தூஷித்துத் திரஸ்கரித்தனர்.

அதனால்தான் ‘முட்டாள் நண்பனைவிட, அறிவுள்ள எதிரியே மேலானவன்; குரங்கு அரசனைக் கொன்றது’ என்று சொன்னேன்’’ என்றது கரடகன்.
மேலும் கரடகன் பேசியது:

போக்கிரித்தனத்தில் மட்டும் தேர்ச்சி பெற்று நட்பை முறித்தெறிகின்ற உன் போன்றவர்களின் பேச்சைக் கேட்டால் எந்தக் காரியமும் நன்மையாக முடியாது. நெருக்கடி மிகுந்த காலத்தில் கூட உலகம் புகழக்கூடிய காரியத்தைத்தான் சான்றோர்கள் செய்கின்றனர். இதுபோன்ற தீய காரியங்களை அவர்கள் ஆதரிப்பதில்லை.

நெருக்கடி மிகுந்த காலத்தில்கூட புத்திசாலிகள் கௌரவமளிக்கும் காரியத்தைக் கைவிடுவதில்லை. மயில் தின்று எறிந்துவிட்டாலும் சங்கு தன் வெண்ணையை இழக்கிறதில்லை.

ஒரு பழமொழி கூறுவதுபோல்,

கெட்ட காரியம் என்றும் கெட்ட காரியமே; அதில் புத்திசாலிகள் மனஞ்செலுத்துவதில்லை. எவ்வளவுதான் தாகம் எடுத்தாலும் சாக்கடை நீரை யாரும் குடிப்பதில்லை. உயிர்போகிற நிலைமை ஏற்பட்டாலும் செய்யத்தக்க காரியத்தையே செய்ய வேண்டும், செய்யத்தகாததைச் செய்யலாகாது.

இப்படி நல்ல வழிக்கு வரக்கூடிய வார்த்தைகளைக் கரடகன் சொல்லவே, குற்றமுள்ள நெஞ்சுடைய தமனகன் அவற்றை விஷம் போல் எண்ணி அந்த இடத்தைவிட்டு அகன்றது.

இதற்கிடையில் பிங்களகனும் சஞ்சீவகனும் கோபத்தினால் அறிவு குருடாக்கி மறுபடியும் சண்டைபிடித்தன. சஞ்சீவகனைக் கொன்றதும் பிங்களகனின் கோபம் அடங்கியது. பழைய நட்பை நினைத்துப் பார்த்து பச்சாதாபப்பட்டு கண்ணீர் விட்டது. ரத்தம் தோய்ந்த கையால் கண்களைத் துடைத்தபடியே, பச்சாதாபத்துடன் சொல்லிற்கு; ‘’என்ன கெட்ட காலம், நான் பெரும்பாவம் செய்துவிட்டேன். என் இரண்டாவது உடம்புபோல் இருந்த சஞ்சீவகனைக் கொன்று என்னையே துன்புறுத்திக்கொண்டிருக்கிறேன். ஒரு பழமொழி கூறுவதுபோல்,

வளங்கொழிக்கும் பூமியின் ஒரு பகுதியையும் அறிவுள்ள வேலையாளையும் இழக்கும்பொழுது, இழந்த பூமியையாவது திரும்பப் பெற்றுவிடலாம். வேலையாளைப் பெற முடியாதே என்று அரசர்கள் கொடிய வேதனை அனுபவிக்கிறார்கள்.

பிங்களகன் துயரப்பட்டு மனங்கலங்கி நிற்பதைத் தமனகன் பார்த்தது. மிகுந்த துணிச்சலுடன் மெள்ள நெருங்கி, ‘’அரசே, எதிரியைக் கொன்றபிறகு நீங்கள் இப்படி உறுதி குலைந்து நிற்பது நியாயமில்லை. ஒரு பழமொழி கூறுவதுபோல்,

தந்தையானாலும், மகனானாலும், சகோதரனானாலும், சிநேகிதன் ஆனாலும் உயிருக்கு ஆபத்து உண்டாக்க முற்பட்டால் அவர்களை நன்மை விரும்புவோர் கொல்ல வேண்டும்.

இரக்கங்காட்டும் அரசன், கண்டதைச் சாப்பிடும் பிராமணன், அடங்காப் பிடாரியான பெண்டாட்டி, கெட்ட எண்ணமுள்ள சிநேகிதன், கவனமற்ற நீதிபதி, வணக்கமற்ற வேலைக்காரன் இவர்கள் தம் காரியம் அறியாதவர்கள். இவர்களைக் கைவிட வேண்டியதுதான்.

உண்மைச் சுகம்பெற எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் போ! அறிவுள்ளவன் வயதில் சிறியவனானாலும் அவனிடம் கேட்டுத் தெரிந்து கொள்! தரம்மம் செய்யும் பொருட்டு யாசிக்கிறவர்களுக்கு உயிரையும் கொடு! தன் கையே பாவம் செய்தாலும் அதை வெட்டு!

மேலும், அரசர்களின் தர்மம் வேறு, சாதாரண சுபாவமுள்ள மனிதர்களின் தர்மம் வேறு! ஒரு பழிமொழி கூறுவதுபோல்,

மனித சுபாவத்தைக்கொண்டு ராஜ்யத்தை ஆளமுடியாது. மனிதர் களுக்குத் தோஷமாக அமைவது மன்னர்களுக்குக் குணமாக அமைகின்றது.

ராஜநீதி வேசியைப்போல் பல ரூபங்கள் கொள்வது, சஞ்சல புத்தியுடையது. உண்மையையும் பேசும், பொய்யும் பேசும்; கொடுமையும் செய்யும், அன்பும் செய்யும்; இம்சிக்கவும் செய்யும், தயை காட்டவும் செய்யும்; செல்வத்தைச் சேர்க்கவும் செய்யும், விரயமாக்கவும் செய்யும்; பொருளை வழங்கவும் செய்யும்; பறிக்கவும் செய்யும்’’

என்றது தமனகன்.

தன்னிடம் தமனகன் திரும்பி வராததைக் கண்ட கரடகன் தானும் சிங்கத்தின் அருகில் சென்று உட்கார்ந்துகொண்டு தமனகனைப் பார்த்துப் பேசியது; ‘’உனக்கு மந்திரித் தொழிலே இன்னதென்று தெரியாது. காரணம், அன்பு செலுத்திப் பழகும் சிநேகிதர்களிடையே சாவை உண்டாக்கும் சண்டையை மூட்டிவிடுவது மந்திரிகள் கையாள்கிற வழி அல்ல. ஸாமம், தானம், பேதம் ஆகிய மூன்று முறைகளைக் கையாண்டு காரியத்தைச் சாதிக்க முடியும் என்று இருக்கிறபொழுது, தன் சொந்த வேலைக்காரனோடு சண்டை செய்யும்படி அரசருக்கு உபதேசம் செய்து அவரை ஆபத்தில் சிக்க வைக்கிறாய்.

எப்பொழுதுமே சண்டையில் யாருக்கும் வெற்றி நிச்சயம் இல்லை. குபேரனும், இந்திரனும், வாயுவும், வருணனும் யுத்தத்தில் தோல்வியைத் தான் கண்டனர். யுத்தத்தினால் ஒரு நன்மையும் இல்லை; அறிவில்லாதவர்களே யுத்தத்தை விரும்புகின்றனர். சாஸ்திரங்கள் நயத்தைத் தான் போதிக்கின்றன. சாஸ்திரங்களின் மூலமாகத்தானே ஸாமம் முதலான உபாயங்களைக் கையாள வேண்டும்.

எனவே ஒருபோதும் மந்திரிகள் அரசர்களுக்கு யுத்த வழியை உபதேசிக்கலாகாது. விவேகம் நிறைந்த இன்னொரு பழமொழி உண்டு, கேள்:

நல்ல குணம், நல்ல நடத்தை, தன்னடக்கம் உள்ளவனும், எதிரிகளை அழிக்கத் துணிவுள்ளவனும், பேராசையில்லா திருப்பவனுமான வேலைக் காரர்கள் இருக்கிற அரண்மனையில் அரசன் எதிரியின் வசமாவதில்லை.

ஆகவே,

கேட்பதற்குக் கடுமையாயிருந்தாலும் நல்லதையே சொல்ல வேண்டும். எப்போதும் பிரியமான வார்த்தைகளையே பேசுவது வேலைக் காரர்களுக்குத் தகுந்ததல்ல. அரசன் விரும்பினாலும் சரி, விரும்பா விட்டாலும் சரி. மந்திரி பிரியமான வார்த்தைகளே பேசி வந்தால் அது அரசன் மனத்தைப் பாழ்படுத்தி ராஜ்யத்தையே நலியச் செய்யும்.

இன்னொன்று,

அரசனும் மந்திரிகளைத் தனித்தனியே அழைத்துக் கேட்கவேண்டும். கேட்டபின் நன்மை எது தீமை எது என்று தனக்குள்தானே தீர ஆலோசிக்க வேண்டும். ஏனெனில், ஒரு சமயத்தில் ஒருவிதமாக எடுத்த முடிவு. மற்றொரு சமயம் சிந்தனை மாறுபடுவதினால் வேறொரு விதமாகத் தோன்றக்கூடும்.

ஒரு பழமொழி கூறுவதுபோல்.

சமதரை மாதிரியே ஆகாயம் காணப்படுகிறது; மின்மினி போலத்தான் நெருப்பும் காணப்படுகிறது. என்றாலும் அவை இரண்டும் ஒன்றல்ல.

பொய் மெய் போலவும், மெய் பொய் போலவும் தோன்றும்; ஆகையால் தீர ஆராய்ந்தறிய வேண்டும். ஆகையால் ராஜநீதியறியாத சேவகன் சொல்வதை அரசன் அப்படியே எடுத்துக்கொள்ளக் கூடாது. ஏனெனில் கெட்ட எண்ணமுள்ள வேலைக்காரர்கள் தம் காரியத்தைச் சாதிப்பதற்காக அழகான வார்த்தைகளைக்கொண்டு உண்மை விஷயத்தைத் திரித்துக் காட்டலாம். எனவே, நன்றாக ஆலோசித்தே ராஜகாரியம் செய்ய வேண்டும்.

ஒரு பழமொழி கூறுவதுபோல்,
ஆப்த நண்பர்களை அடிக்கடி கேட்டு, அவர்கள் சொன்னதில் ஒவ்வொரு எழுத்தையும் சுயபுத்தியுடன் யோசித்து யார் காரியம் செய்கிறானோ அவனே புத்திசாலி; அவனே புகழும் செல்வமும் பெற்று வாழ்வான்.

கடைசியாகச் சொல்வதாவது:

பிறருடைய பேச்சில், அரசர் மயங்கிவிடக் கூடாது. ஒவ்வொரு மனிதனிடமும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் தரக்கூடிய பதில் அல்லது ஆலோசனைகளில் இருக்கிற நன்மை, தீமைகளைப் பற்றியும், செய்கையில் இறங்குவதற்குரிய நேரத்தைப் பற்றியும் நன்றாக ஆலோசித்துப் பார்த்து வரவேண்டும். களங்கமற்ற மனத்துடன் ராஜ்யத்தின் சகலவிதமான அலுவல்களையும் சுயபுத்திகோடு தானே நிர்வகித்து வரவேண்டும்’’

இத்துடன் நட்பு அறுத்தல் என்ற முதல் தந்திரம் முடிவடைகிறது. அதன் முதற் செய்யுள் பின்வருமாறு:

காட்டில் சிங்கத்துக்கும் எருதுக்குமிடையே சிறப்பாக வளர்ந்து வந்த சிநேகத்தை, பேராசையும் போக்கிரித் தனமுள்ள ஒரு நரி நாசம் செய்தது.

Series Navigationஆரோக்கியமேரி என்றழைக்கப்பட்ட மேரி ஃபிலோமினா
author

அன்னபூர்னா ஈஸ்வரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *