பஞ்சதந்திரம் தொடர் 31- பாருண்டப் பறவைகள்

This entry is part 10 of 31 in the series 19 பிப்ரவரி 2012

ஒரு ஏரிக்கரையில் பாருண்டப் பறவைகள் என்று சொல்லப்படும் பறவைகள் இருந்து வந்தன. அவை ஒவ்வொன்றுக்கும் ஒரு வயிறும், இரண்டு தனித்தனி கழுத்துகளும் இருந்தன. அந்தப் பறவைகளில் ஒன்று இங்கும் அங்கும் திரிந்துகொண்டிருக்கும்போது, ஏதோ ஒரு இடத்தில் அதன் ஒரு கழுத்துக்கு அமிர்தம் கிடைத்தது. அப்போது அதைப்பார்த்து ‘’அதில் எனக்குப் பாதி கொடு’’ என்று இரண்டாவது கழுத்து கேட்டுக்கொண்டது. முதல் கழுத்து மறுத்துவிடவே இரண்டாவது கழுத்துக்குக் கோபம் வந்துவிட்டது. எங்கோ விஷத்தைத் தேடிப் பிடித்துச் சாப்பிட்டுவிட்டது. இரண்டுக்கும் வயிறு ஒன்றுதான். எனவே அந்தப் பறவை செத்துப் போயிற்று.

அதனால்தான் ‘ஒரே வயிறும், இரண்டு கழுத்துகளும் உள்ள பாருண்டப் பறவைகள்…’ என்ற செய்யுளைச் சொல்கிறேன். ஒற்றுமையே பலம் தரும்’’ என்றது சித்ரகிரீவன்.

உயிர்மேல் ஆசைக்கொண்டிருந்த அந்தப் புறாக்கள், இதைக் கேட்டு ஒன்றாய்ச் சேர்ந்து வலையைத் தூக்கிக்கொண்டு, அம்புபோல் ஆகாயத்தில் கிளம்பி விட்டன. வானத்தில் ஒரு விதானம் அமைந்தது போல் வலையை விரித்துக் கொண்டு பயமில்லாமல் பறந்து போயின.

புறாக்கள் வலையைத் தூக்கிச் செல்வதைப் பார்த்து வேடன் ஆச்சரியமடைந்தான், உயரப் பார்த்தபடியே, ‘’இதற்குமுன் இப்படிப்பட்ட காட்சியை நான் கண்டதேயில்லை!’’ என்று யோசித்தான்.

அந்தப் புறாக்கள் ஒன்று சேர்ந்து ஒத்துப்போகிறவரை வலையைக் கொண்டு போக முடியும். அவற்றிடையே வேற்றுமைகள் கிளம்பிவிட்டால் அந்த வினாடியெ அவை என்வசமாகிவிடும்.

என்று ஒரு செய்யுளைச் சொன்னான்.

இந்த எண்ணத்தோடு வேடன் புறாக்களைப் பின்தொடர்ந்து சென்றான். அந்தக் கொடியவன் பின் தொடர்வதைச் சித்ரகிரீவன் பார்த்து விட்டது. அவன் எண்ணத்தையும் புரிந்துகொண்டது. கொஞ்சங்கூட மனம் கலங்காமல் மலைகளும் மரங்களும் அடர்ந்த கரடுமுரடான பிரதேசத்தின் மேல் அது பறக்கத் தொடங்கியது.

சித்ரகிரீவனின் அறிவு நிறைந்த செய்கையையும், வேடனின் குரூர சிந்தனையையும் கண்டு லகுபதனகனும் ஆச்சரியப்பட்டுப் போயிற்று. அடிக்கடி மேலும் கீழும் பார்த்துக் கொண்டிருந்தது. இரை தேடும் யோசனையை அதற்கு இல்லாமல் போயிற்று. ‘’அது ஒரு மகாத்மா. இவன் ஒரு துராத்மா. இருவரும் இனி என்ன செய்யப்போகிறார்கள் என்று பார்ப்போம்’’ என்று எண்ணியபடியே, மிகுந்த ஆவலோடு தானும் புறாக்களைப் பின் தொடர்ந்து சென்றது.

கடைசியில், கரடுமுரடான பாதையால் புறாக்கள் தப்பித்துத் தங்களைக் காப்பாற்றிக் கொண்டதை வேடன் தெரிந்து கொண்டான்.
விதியின்றி ஒன்றும் நடக்காது. விதியிருந்தால் முயற்சியின்றியே எதுவும் நடக்கும். விதியில்லை என்றால் கைக்கு எட்டினதுகூட வாய்க்கு எட்டாமற் போய்விடும் என்று சொன்னான்.

மேலும்,

விதி மட்டும் சதி செய்தால், இருக்கிற செல்வத்தையும் வந்த செல்வம் வாரிக்கொண்டு போய்விடும். மந்திரத்தாலான பொற்குவியல் மறைவதுபோல் மறைந்து போய்விடும்.

என்று சொன்னான்.

‘’புறாக்கள்தான் தின்னக் கிடைக்காமல் போய் விட்டன என்றால், என் குடும்பத்தைக் காப்பாற்றிவந்த வலையும் போய்விட்டதே!’’ என்று சொல்லி, மிகுந்த ஏமாற்றத்துடன் வேடன் திரும்பிப் போய்விட்டான்.

நிராசையோடு வேடன் திரும்பிப் போகிறதைச் சித்ரகிரீவன் பார்த்து விட்டு, புறாக்களிடம், ‘’நண்பர்களே, இனி நாம் நிம்மதியாகப் போகலாம். அந்தத் துஷ்ட வேடன் திரும்பிப் போய்விட்டான். நாம் பிரமதாரூப்ய நகரத்துக்குப் போவதுதான் சரி. அதன் வடகிழக்குப் பாகத்தில் ஹிரண்யன் என்றொரு எலி இருக்கிறது. அது என் உயிர் நண்பன். நம்மைக் கட்டிப் போட்டிருக்கும் வலையை அது ஒரு நொடியில் அறுத்துவிடும். இந்த ஆபத்திலிருந்து நம்மை விடுவிக்க அதற்குத் திறமையுண்டு’’ என்று சொல்லிற்று.
ஹிரண்யன் என்ற எலியைக் காண விரும்பிய புறாக்கள் எல்லாம் சித்ரகிரீவன் சொன்னபடியே செய்தன. ஹிரண்யன் கோட்டை போல் ஆக்கிக் கொண்டிருந்த வளையை நெருங்கியதும் புறாக்கள் கீழிறங்கின.

முன்பு அங்கே,

நீதி சாஸ்திரத்தில் தேர்ச்சி பெற்ற எலி (ஹிரண்யன்) ஆபத்து வருவதை எதிர்பார்த்து நூறு வாயில்களுள்ள வளையொன்றைச் செய்துகொண்டு இருந்து வந்தது.

அப்படி இருக்கையில், பறவைகள் இறங்கும் சத்தத்தைக் கேட்டதும் ஹிரண்யன் நடுங்கிவிட்டது. பூனைக்காலுக்கு எட்டாத தூரத்தில் வளையின் ஒரு வாயிலில் வந்து நின்றுகொண்டது. ‘’இது என்னவாக இருக்கலாம்?’’ என்று வியந்தபடியே சுற்று முற்றும் பார்த்தது.

அந்த வளையின் வாயிலில் சித்ரகிரீவன் இருந்துகொண்டு ‘’நண்பா! ஹிரண்யா! சீக்கிரம் வெளியே வா. நான் படுகிற அவஸ்தையை வந்து பார்!’’ என்றது.

அதைக்கேட்ட ஹிரண்யன், வளைக்குள் இருந்தபடியே, ‘’ஐயா, நீங்கள் யார்? எதற்காக வந்திருக்கிறீர்கள்? உங்களுக்கு என்ன துன்பம் நேரிட்டிருக்கிறது? சொல்லுங்கள்’’ என்று விசாரித்தது.

‘’நண்பனே, நான் புறாக்களின் அரசன். உன் சிநேகிதனாகிய சித்ரகிரீவன். சீக்கிரமாக வெளியே வா’’ என்றது சித்ரகிரீவன்.
இந்தச் சொற்களைக் கேட்டதும் ஹிரண்யனுக்கு உடம்பெல்லாம் புல்லரித்தது; உள்ளத்தில் ஆனந்தம் பொங்கியது.
அன்பு கனிந்த நண்பர்கள் தினந்தோறும் வீட்டுக்கு விஜயம் செய்தால் கண்ணுக்கு மகிழ்ச்சியாயும், மனத்துக்கு ஆனந்தமாயும் இருக்கிறது

என்று சொல்லிக்கொண்டே எலி வெளியே வந்தது.

சித்ரகிரீவனும் அதன் பரிவாரங்களும் வலையில் சிக்கிக்கொண்டு இருப்பதைக் கண்டுவிட்டு, வருத்தத்தோடு, ‘’நண்பனே, என்ன இது? எப்போது ஏற்பட்டது? சொல்லுங்கள்’’ என்றது ஹிரண்யன்

‘’நண்பனே, அதை ஏன் கேட்கிறாய்? உனக்குத்தான் தெரியுமே!

எங்கிருந்து வரவேண்டுமென்றிருக்கிறதோ அங்கிருந்து தான் வரும்; யாரால் எது எப்படி ஆகவேண்டுமென்று இருக்கிறதோ அப்படியே அவனால் அது நடக்கும்; எப்பொழுது நடக்க வேண்டுமென்றிருக்கிறதோ அப்பொழுதுதான் அது நடக்கும்; எவ்வளவு காலத்துக்கு நடக்க வேண்டு மென்று இருக்கிறதோ அவ்வளவு காலத்துக்கு நடந்தே தீரும்; எங்கு நடக்க வேண்டுமென்று இருக்கிறதோ அங்கு நடந்தே தீரும். நல்லதும் கெட்டதும் விதிப்படிதான் நடந்தேறுகின்றன

என்று ஒரு பழமொழி கூறுகின்றது. மேலும்,

நீலோற்பல மலரைப் பழிக்கும் ஒளி பொருந்திய ஆயிரங் கண்களோடு உலகத்தைக் காண்பதாக மயில் நினைத்துக் கொள்ளலாம். ஆனால் மரண பயம் ஏற்பட்டவுடன் அது பிறவிக் குருடன் போல் நடந்துகொள்கிறது.

நூற்றிருபத்தைந்து யோஜனைகளுக்கும் அப்பாலுள்ள மாமிசத்தை கழுகு பார்த்துவிடுகிறது. என்றபோதிலும், அது விதிவசமாகிறபோது பக்கத்திலுள்ள வலையைக் காண்பதில்லை.

சந்திர சூரிய கிரகணங்களையும், யானை, பாம்பு, பறவைகள் படிபடுவதையும், அறிவாளிகள் ஏழைகளாக இருப்பதையும் பார்க்கிறபோது, விதி கொடிய பலசாலிதான்

என்று எண்ணுகிறேன். ஏனென்றால்,

வானத்தில் தனியே விளையாடித் திரியும் பறவைகளுக்கும் விபத்துக்கள் ஏற்படுகின்றன. ஆழமிக்க கடலின் அடியிலிருக்கிற மீன்களையும் திறமை மிகுந்தவர்கள் பிடித்து விடுகின்றனர். நல்ல நடத்தை கெட்ட நடத்தை என்று இங்கு என்ன இருக்கிறது? குணம் மட்டும் காணக்கிடக்கிறது எங்கே, வெகு தொலைவிலிருந்தபடியே காலன் தனது சாவுக்கரத்தை நீட்டிப் பறித்து விடுகிறான்.

இவ்வாறு சித்ரகிரீவன் பேசிய பிறகு, ஹிரண்யன் அதன் கட்டை அறுக்க முற்பட்டது. உடனே சித்ரகிரீவன் அதைத் தடுத்து, ‘’நண்பனே, அப்படிச் செய்வது சரியல்ல. என் கட்டை அறுப்பதற்கு முன் என் பரிவாரங்களின் கட்டை அறுத்துவிடு!’’ என்றது. இதைக் கேட்டதும் ஹிரண்யனுக்குக் கோபம் வந்தது. ‘’நண்பனே, நீ சொல்வது சரியல்ல, எஜமானருக்குப் பிறகுதான் வேலையாட்கள் எல்லாம்’’ என்றது.

‘’அப்படிச் சொல்லாதே! பாவம், இவையெல்லாம் மற்ற பறவைகளை விட்டு வந்து என்னை அண்டிப்பிழைக்கின்றன. இந்தச் சிறிய மதிப்புக்கூட இவைகளுக்கு நான் காட்டாமல் இருப்பதா?

தங்கள் தகுதிக்கு மேலாகவே தங்களுக்கு மதிப்புக் கொடுத்து நடத்துகிற அரசனை வேலையாட்கள் விட்டுப்போவதில்லை. அரசனிடம் செல்வம் இல்லாத காலத்திலும் மனம் வாடாமல் ஒட்டிக் கொண்டிருப்பார்கள்.

என்று ஒரு பழமொழி உண்டு. மேலும்,

நம்பிக்கையே அதிகாரத்தின் அடிப்படை. அதைப் பெற்றுத்தான் மிருகம் ராஜ பதவியை அடைகிறது. பிறவியிலேயே சிங்கம் அரசனாகப் பிறந்த போதிலுங்கூட, இந்த நம்பிக்கையைப் பெறாவிட்டால் அது கொடுங் கோலனாகத்தான் ஆட்சி செய்ய முடியும்.

அத்துடன் இன்னொரு விஷயமும் உண்டு. என் கட்டை அறுத்த பிறகு உனக்கு ஒருவேளை பல்வலி ஏற்படலாம். அல்லது அந்தத் துஷ்ட வேடன் திரும்பி வரலாம். அவ்விதம் நேர்ந்தால் எனக்கு நரகம் தான் கிடைக்கும்.

விசுவாசமுள்ள வேலையாட்கள் கஷ்டப்படுவதைக் கண்டு திருப்தி அடைகிற அரசன் இகலோகத்தில் துன்பத்தையும், பரலோகத்தில் நரகத்தையும் அடைகிறான்.

என்று ஒரு பழமொழி கூறுகிறது’’ என்றது சித்ரகிரீவன்.

‘’ஆம், அந்த ராஜதர்மத்தை நானும் அறிவேன்’’ என்றது ஹிரண்யன். ‘’உன்னைச் சோதிக்கவே நான் அப்படிச் சொன்னேன். எல்லோருடைய கட்டுக்களையும் நான் அறுத்துவிடுகிறேன். உனக்கு ஒரு பெரிய பரிவாரமாக அவை இருந்துவரும்.

நல்லவற்றில் வேலையாட்களுக்கும் தகுந்த பங்கு தந்து கருணையோடு நடந்து கொள்கிற அரசன் மூவுலகங்களையும் ஆள்வதற்குத் தகுதி பெறுகிறான்.

இவ்வாறு சொல்லிவிட்டு ஹிரண்யன் புறாக்களின் கட்டுக்களை எல்லாம் அறுத்தெரிந்தது. சித்ரகிரீவனைப் பார்த்து ‘’நண்பனே, இனி நீ உன் இடத்துக்குப் போகலாம்’’ என்றது. சித்ரகிரீவன் தன் பரிவாரத்தோடு தன் இருப்பிடத்துக்குப் போய்விட்டது.

சாதிக்க முடியாத காரியத்தையும் நண்பர்களைக்கொண்டு ஒருவன் சாதித்துவிட முடியும். ஆகவே, நண்பர்களைத் தேடிக்கொள்! அவர்களை உன் சொத்துக்குச் சமமாக நினைத்துக்கொள்!

என்ற வாக்கில் எவ்வளவு விவேகம் இருக்கிறது!

சித்ரகிரீவன் வலையில் சிக்கிக் கொண்டதையும் பிறகு விடுதலை பெற்றதையும் பார்த்து லகுபதனகன் ஆச்சரியமடைந்தது. ‘ஆஹா, இந்த ஹிரண்யனுக்குத்தான் என்ன அறிவு. என்ன திறமை! அதன் கோட்டைதான் எவ்வளவு விசித்திரமாயிருக்கிறது! ஹிரண்யனை நண்பனாக்கிக்கொள்வது எனக்கும் தகும். நான் யாரையும் நம்பாத சந்தேகப் பிராணிதான். யாராலும் என்னை ஏமாற்ற முடியாதுதான். என்றாலும், எனக்கும் ஒரு சிநேகிதன் இருக்க வேண்டும்.

தனக்கு வேண்டியதைத் தானே செய்துகொள்ளும் திறமை இருந்தாலும் கூட ஒருவனுக்கு நண்பர்கள் இருப்பது அவசியம். குறைவு படாதபடி சமுத்திரம் எப்பொழுதும் நிரம்பித்தான் இருக்கிறது. என்றாலும் அது ஸ்வாதி நட்சத்திரத்திடமிருந்து மழையை எதிர்பார்க்கிறது அல்லவா?

இவ்வாறு லகுபதனகன் யோசித்துவிட்டு மரத்திலிருந்து பாய்ந்து இறங்கி வளையின் வாயிலை அடைத்து, -முன்பே எலியின் பெயரைக் கேட்டிருந்தபடியால் – நண்பா, ஹிரண்யா! வெளியே வா’’ என்று கூப்பிட்டது.

ஹிரண்யன் அதைக் கேட்டு, ‘கட்டிலிருந்து விடுதலை பெறாத வேறு எதாவது புறாவாக இருக்குமோ? அதனால்தான் என்னைக் கூப்பிடுகிறதோ?’ என்று நினைத்து, ‘’ஐயா, நீங்கள் யார்?’’ என்று கேட்டது.

‘’நான் ஒரு காக்கை. என் பெயர் லகுபதனகன்’’ என்றது காக்கை.

இதைக்கேட்டதும் ஹிரண்யன் இன்னும் கொஞ்சம் தூரம் தள்ளி வளையில் இருந்துகொண்டே, ‘’அன்புள்ள ஐயா, இந்த இடத்தை விட்டுப் போய் விடுங்கள்’’ என்றது.

‘’உன்னிடம் ஒரு முக்கியமான காரியமாக வந்திருக்கிறேன். என்னைப் பார்க்கத் தயவு செய்து வெளியே வா!’’ என்றது காக்கை.

‘’உன்னைத் தெரிந்துகொள்வதில் எனக்கு ஒரு லாபமும் இல்லை’’ என்றது எலி.

‘’நண்பனே! சித்ரகிரீவனை நீ கட்டிலிருந்து விடுவித்ததைப் பார்த்து உன்மேல் எனக்கு அபார நம்பிக்கை உண்டாகியிருக்கிறது. நானும் எப்போதாவது சிக்கிக் கொள்ள நேரிடலாம். அப்போது உன் மூலம் எனக்கு விடுதலை கிடைக்கும். ஆகவே நீ என் நண்பனாக வேண்டும்’’ என்றது காக்கை.

‘’நீ என்னைத் தின்கிறவன். நான் உனக்குத் தீனியாயிற்றே! உன்மேல் எனக்கு எப்படி நேசபாசம் ஏற்படும்?

தமது பரஸ்பர அந்தஸ்தின் உயர்வு தாழ்வுகளைப் பார்க்காமல் நட்புகொள்கிறவர்கள் மூடர்களே. அவர்களை மக்கள் பரிகசிப்பார்கள்.

என்று ஒரு பழமொழி கூறுகிறது. ஆகையால், நீ போய்விடு’’ என்றது எலி.
‘’இதோ பார், உன் வளை வாசலில் இப்படியே உட்கார்ந்து விடுகிறேன்; நீ என் நண்பன் ஆகாமற்போனால் பட்டினி கிடந்து சாகிறேன்’’ என்றது காக்கை.

‘’நீ என் எதிரியாயிற்றே! உன்னோடு நான் எப்படி சிநேகம் பாராட்ட முடியும்?

கொடிய பகைவர்களின் குணம் எவ்வளவுதான் மாறுபட்டுப் போனாலும் அவர்களுடன் சேராதே! கொதிக்கிற நீரும் நெருப்பை அணைக்கிறதல்லவா?

என்று ஒரு பழமொழி உண்டு’’ என்றது எலி.

‘’நீ என்னைப் பார்த்ததே இல்லையே! பிறகு சண்டை எங்கிருந்து உண்டாகும்? இந்த வீண் பேச்செல்லாம் எதற்கு?’’ என்றது காக்கை.

‘’ஐயா, பகை இரண்டு வகைப்பட்டது. இயற் பகை, செயற் பகை என்று. நீ என் இயற்கைப் பகைவன்.

செயலால் ஏற்பட்டட பகை, வேறு சில செயல்களால் மறைந்து போகிறது. ஆனால் இயல்பாயுண்டான பகை உயிர் போகிறவரைக்கும் மறைவதில்லை.

என்று ஒரு பழமொழி உண்டு’’ என்றது எலி.

‘’அந்த இருவகைப் பகைகளின் குணாதியங்களை அறிய விரும்புகிறேன்’’ என்றது காக்கை.

‘’அப்படியானால் கேள். செயற் பகை என்பது ஏதோ ஒரு காரணத்தால் உண்டாகிறது. தகுந்த பரிகாரம் செய்தால் அது மறைந்துவிடும். அதற்கு மாறாக, இயற்பகை என்பது ஒருபொழுதும் மறையாது. கீரியும் பாம்பும்; மாமிசபட்சணியும் சாகப்பசணியும்; நீரும் நெருப்பும்; தேவர்களும் அசுரர்களும்; நாயும் பூனையும்; சக்களத்திகளும்; சிங்கமும் யானையும்; வேடனும் மானும்; காக்கையும் ஆந்தையும்; அறிவாளியும் மூடனும்; பதிவிரதையும் விபசாரியும்; சாதுவும் துஷ்டனும்; இவர்களிடையே நிரந்தரமான பகை இருக்கிறது. யாரோ எவனையோ அல்லது எவனுக்கு வேண்டியவனையோ கொன்றான் என்பதனால் இந்தப்பகை ஏற்பட்டதில்லை. ஆனாலும் உயிர் போகும்வரை அவர்கள் சண்டையிட்டுக் கொள்கிறார்கள்’’ என்றது எலி.

‘’அது அர்த்தமில்லாத விஷயமாக இருக்கிறதே! என் பேச்சைக் கேள்;

நட்புக்கும் ஒரு காரணம் உண்டு; பகைமைக்கும் ஒரு காரணம் உண்டு. அப்படியென்றால் அறிவாளிகள் நட்பைத் தேட வேண்டும், பகைமையைத் தவிர்க்க வேண்டும்.

என்றது காக்கை.

‘’உனக்கும் எனக்கும் மத்தியிலே என்ன கொடுக்கல் வாங்கல் இருக்கமுடியும்? நீதி நூலின் சாரத்தைக் கேள்!
நம்பிக்கைத் துரோகம் செய்த நண்பனை மறுமுறையும் ஒருவன் நேசித்தால், கர்ப்பம் தரித்த கோவேறு கழுதைக்கு சாவு எப்படி நிச்சயமோ, அப்படியே அவனுக்கும் சாவு நிச்சயம்.

மொழியிலக்கணத்தின் தந்தையான பாணினியை ஒரு சிங்கம் கொன்றது. மீமாம்ஸ தத்துவ தரிசனம் அருளிய ஜைமினி முனிவரை ஒரு மதயானை கொன்றது. யாப்பிலக்கணத்தின் பொக்கிஷமாகிய பிங்கள முனிவரைக் கடற்கரையில் ஒரு முதலை கொன்றது. ஞானமில்லாத மூட மிருகங்களுக்கு மேதாவிகளின் குணசாதனைகள் என்ன தெரியும்?’’
என்றது எலி.

‘’நீ சொல்வது சரிதான். ஆனாலும் கேள்!

காரணத்தை உத்தேசித்து மிருகங்களும் பறவைகளும் நண்பர்களாகின்றன. உதவி செய்ததை உத்தேசித்து சாதாரண ஜனங்கள் நண்பர்களாகின்றனர். பயத்தையோ அல்லது பேராசையையோ உத்தேசித்து மூடர்கள் நண்பர்களாகின்றனர். ஆனால், பார்த்த மாத்திரத்திலேயே நல்லவர்கள் நண்பர்களாகி விடுகின்றனர்.

மண் குடம் சீக்கிரமாக உடைந்து போகும்; ஆனால் மறுபடியும் அதை உருப்பெறச் செய்வது முடியாத காரியம். துஷ்ட நண்பனும் இந்த மண் குடம் மாதிரிதான்! பொற்குடம் சுலபத்தில் உடையாது. உடைந்தாலும் மறுபடியும் சரி செய்துவிட முடியும். நல்ல நண்பனும் இந்தப் பொற்குடம் மாதிரிதான்!

நுனியிலிருந்து தொடங்கிச் சென்றால் கணுவுக்குக் கணு கரும்பின் ருசி அதிகமாவதுபோல், நல்லவர்களின் நட்பும் வளர்ந்து கொண்டே யிருக்கும். மற்றவர்களின் நட்பு தேய்ந்துகொண்டே போகும்.

நான் நேர்மையானவன் என்பதை நம்பு. சத்தியங்கள் செய்து அதை உறுதிப்படுத்த ந £ன் தயார்’’ என்றது காக்கை.

‘’உன் சத்தியங்களை நான் நம்பமுடியாது. ஒரு பழமொழி கூறுவதுபோல்,

விரோதி சத்தியம் செய்து கொடுத்திருந்தாலும் அவனை நம்பாதே! விருத்திரன் என்ற அசுரன் சத்தியம் செய்து கொடுத்திருந்தபோதிலும் அவனை இந்திரன் கொன்றான்.

எதிரிகளின் நம்பிக்கையைப் பெற்ற பிறகுதான் தேவர்களும் அவர்களை வெற்றிகொள்கிறார்கள். திதியின் நம்பிக்கையைப் பெற்ற பிறகுதான் இந்திரன் அவள் கர்ப்பத்தை அழித்தான்.

சின்னஞ்சிறு ஓட்டையின் வழியே மெள்ள நீர் புகுந்து படகைக் கவிழ்த்து விடுகிறது. அதேமாதிரி, மிகநுட்பமான நமது பலவீனத்தையும் பயன்படுத்திக்கொண்டு பகைவன் உள்ளே நுழைந்து நம்மை நாசம் செய்கிறான். மெள்ள மெள்ள விரோதியின் பணவசதிகளைப் பார்த்து அவனை நம்புகிற மனிதனும், அன்பில்லாத மனைவியை நம்புகிற மனிதனும், உடனே சாவார்கள்.
என்றொரு பழமொழி உண்டு’’ என்றது எலி.

இதைக் கேட்டதும் காக்கை மௌனமாகி யோசிக்கத் தொடங்கியது. ‘’ஆஹா, நீதி சாஸ்திரத்தில்தான் இவனுக்கு என்ன அறிவு! அதற்காகவென்றே இவனை நான் நண்பனாக்கிக் கொள்ளவேண்டும்’’ என்று எண்ணிற்று. பிறகு வெளிப்படையாகப் பேசிற்று:

உண்மை நட்பு என்பது ஏழு வார்த்தைகளில் அடங்குகிற பொருள் என்று சான்றோர் தெரிவிக்கின்றனர்.

நட்புக் கொள்ளும்படி உன்னைப் பலவந்தப்படுத்தினேன். என் கடைசி வார்த்தையையும் நீ கேட்டுவிடு! உன் நட்பை எனக்குத் தா! இல்லாவிட்டால் இங்கேயே உயிர் விடுவேன்’’ என்றது காக்கை.

ஹிரண்யன் யோசித்தது. ‘அவனுக்கு அறிவில்லாமல் இல்லை. அவன் பேச்சிலிருந்தே அது தெரிகிறது.

புத்தியற்றவன் முகஸ்துதி செய்ய மாட்டான். காமமற்றவன் அலங்காரப்பிரியன் ஆகமாட்டான். பற்றறுத்தவன் அதிகாரபீடத்தில் அமரமாட்டான். சத்தியம் பேசுபவன் வஞ்சகன் ஆகமாட்டான்.

ஆகையால் அவனுக்கு என் நட்பைத் தருவது அவசியம்’ என்று முடிவு செய்தது. பிறகு காக்கையைப் பார்த்து, ‘’நண்பனே, நீ என் நம்பிக்கையைப் பெற்றுவிட்டாய். உன் அறிவைச் சோதிக்கவே இப்படியெல்லாம் பேசினேன். இதோ, உன் மடியில் தலைவைத்துப் படுக்கிறேன். பார்!’’ என்று சொல்லிக் கொண்டே வெளியே வரத் தொடங்கியது. ஆனால் பாதி வழி வந்ததும் நின்று விட்டது.

‘’இன்னும் என்மேல் ஏதாவது சந்தேகம் கொஞ்ச நஞ்சம் இருக்கிறதா, என்ன? வளையிலிருந்து வெளியே வரமாட்டேன் என்கிறாயே!’’ என்றது காக்கை.

‘’இல்லை. உன் மனத்தைச் சோதித்துவிட்டேன். உன்னிடம் எனக்குப் பயமே கிடையாது. ஆனால், உன்னை நம்புகிற எனக்கு உன் நண்பர்கள் யாராவது தீங்கு செய்தால் என்ன செய்வது?’’ என்றது எலி.

காக்கை சொல்லிற்று:

ஒரு உண்மைச் சிநேகிதனைக் கொல்வதின் மூலமாக இன்னொரு சிநேகிதனைத் தேடிக் கொள்கிறவனை, நெல்லிலிருந்து பதரை விலக்கி விடுவதுபோல், விலக்கிவிட வேண்டும்.

Series Navigationமயிலு இசை விமர்சனம்கலங்கரை விளக்கு
author

அன்னபூர்னா ஈஸ்வரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *