பஞ்சதந்திரம் தொடர் 42- அரசனைத் தேர்ந்தெடுத்த பறவைகள்

This entry is part 13 of 40 in the series 6 மே 2012

முன்பு ஒரு சமயம் அன்னப்பறவை, கொக்கு, குயில், மயில், சாதகப் பறவை, ஆந்தை, மாடப்புறா, புறா, நீலக்குயில், கழுகு, வானம்பாடி, நாரை, மைனா, மரங்கொத்திப் பறவை, இன்னும் பல பறவைகள் எல்லாம் ஒன்றுகூடி யோசனை செய்யத் தொடங்கின. ‘’நமக்குக் கருடன் தான் ராஜா. ஆனால் அவரோ மகாவிஷ்ணுவுக்குப் பணிவிடை செய்து வருகிறார். நம்மைக் கவனிப்ப தில்லை. ஆகவே அப்படிப்பட்ட போலி ராஜாவால் நமக்கு என்ன லாபம்? வலையில் சிக்கிவிடுவது போன்ற துக்கங்கள் நமக்கு ஏற்படும்போது அது நம்மைக் காப்பாற்றுவதில்லை.

கஷ்டமான நிலைமையிலும், அதைவிடக் கஷ்டமான நிலைமையிலும் யார் துயரத்தைப் போக்கிப் புத்துயிர் அளிக்கிறானோ அவனே எனக்கு ராஜா. சந்திரனுக்குச் சூரியன் ஒன்றே ராஜா. அதுபோல் அவன் ஒருவனுக்கே பணி விடை செய்வேன்.

மற்றவன் பெயரளவில்தான் ராஜா.

சதா துயரத்தால் பீடிக்கப்பட்டு பயந்துள்ளவர்களைக் காப்பாற்றாத அரசன், உண்மையில் அரச உருக்கொண்ட யமனே ஆவான்.

அறிவுக்குறைவான பண்டிதன், வேதம் கற்காத புரோகிதன், மக்களைக் காக்காத அரசன். வெறுப்பாகப் பேசும் மனைவி, ஊரை விரும்பும் இடையன், பணத்தில் ஆசை கொள்ளும் நாவிதன் – இவர்களை ஓட்டை விழுந்த கப்பலை விட்டுச் செல்வதைப்போல் துறக்க வேண்டும்.
.
ஆகவே பறவைகளின் அரசனாக வேறு யாரையாவது பொறுக்கி நியமிக்க வேண்டும்’’ என்று பேசின.

ஆந்தை பெரிய உருவம் உடையது அல்லவா? அதைப் பார்த்து மற்ற பறவைகள், ‘’இந்த ஆந்தை நமக்கு அரசனாக இருக்கட்டும்.  மகுடா பிஷேகத்துக்கு வேண்டிய எல்லாவிதமான பொருட்களையும் குவியல் குவியலாகக் கொண்டு வாருங்கள்’’ என்று சொல்லின. அதன்பிறகு, எல்லா புனித நதிகளிலிருந்தும் நீர் கொண்டுவரப்பட்டது. சக்கர அடையாளமுடைய பூ, மஞ்சள் தாமரை உள்ளிட்ட நூற்றெட்டு மலர்களாலான மாலை தயாரிக்கப்பட்டது. சிம்மாதனம் அமைக்கப்பட்டது. தரையில் ஏழு கண்டங்களும், சமுத்திரங்களும், மலைகளும் படமாக வரையப்பட்டன. புலித்தோல் விரிக்கப்பட்டது. பொற்கலசங்களில் ஐந்துவிதத் தளிர்கள், மலர்கள், அட்சதைகளை நிரப்பினர். அர்க்கியங்கள் தயாரிக்கப்பட்டன. ஸ்துதி பாடகர்கள் பாடினர். நான்கு வேதங்களையும் ஓதுவதில் நிபுணர்களான பிராமணர்கள் வேதம் ஓதினர். பெண்கள் மங்கல கீதங்கள் பாடினர். மஞ்சள் பூதிய அரிசி, வெண்கடுகம், பொரி, மஞ்சள்பொடி, பூமாலை, சங்கு ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்ட அட்சதைப் பாத்திரம் தயாரித்து முன்னால் வைத்தனர். ஆரத்தி எடுப்பதற்கு விதிப்படி தேவைப்பட்ட பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டன. மங்கல வாத்தியங்கள் முழங்கின. ஆந்தை உருவம் பொறித்த மேடையின்மீது சிம்மாதனம் நிறுவப்பட்டது. அபிஷேகத்தின் பொருட்டு ஆந்தையை அலங்கரித்துக்கொண்டிருந்தன. அந்த வேளையில், எங்கிருந்தோ கா கா என்று கொடூரமாகக் கத்தித் தன் வரவை அறிவித்தபடியே ஒரு காக்கை அங்கு வந்து சேர்ந்தது. ‘’ஓஹோ, என்ன இது? எல்லாப் பறவைகளும் ஒன்றுகூடி இருக்கின்றனவே! ஏதாவது உற்சவமோ?’’ என்று காக்கை எண்ணிற்று. காக்கையைப் பார்த்ததும் மற்ற பறவைகள் தங்களுக்கிடையே பேசிக்கொண்டன. ‘’பறவைகளுக்குள்ளே காக்கை சாமர்த்தியசாலி என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆகவே இவனுடைய பேச்சையும் கேட்கலாம்.

மனிதர்களில் நாவிதன் கெட்டிக்காரன்; பறவைகளில் காக்கை கெட்டிக்காரத்தனமுள்ளது; மிருகங்களில் நரி கெட்டிக்காரத்தனமுள்ளது. தபஸ்விகளில் வெள்ளையுடை தரித்தவன் கெட்டிக்காரன்.

என்றொரு பழமொழி உண்டு. மேலும்,

பல அறிவாளிகளையும் கூடிக்கலந்து பேசி, பல அத்தாட்சிகளையும் கொண்டு, பல கோணங்களிலிருந்து ஆலோசித்துச் செய்கிற காரியம் ஒருபொழுதும் வீணாவதில்லை.

என்றும் ஒரு பழமொழி இருக்கிறது’’ என்று பேசிக்கொண்டன.

ஆகவே, பறவைகள் காக்கையைப் பார்த்து, ‘’காக்கையே, பறவைகளுக்கு ராஜா இல்லை  என்பது உனக்குத் தெரியும். எனவே, எல்லாப் பறவைகளும்  சேர்ந்து இந்த ஆந்தையை ராஜாவாக அபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்திருக்கின்றன. ஆகவே நீயும் உன் அபிப்பிராயத்தைச் சொல். நீ சரியான வேளையில் வந்திருக்கிறாய்’’ என்றன.

காக்கை சிரித்தபடியே, ‘’கனவான்களே, இது சரியல்ல, அன்னப்பறவை, மயில், குயில், சகோரப்பறவை, சக்ரவாகம், புறா, கொக்கு முதலியவை முக்கியமாக இருக்கும்போது, பயங்கரமான முகத்தையுடைய இந்தப் பகல் குருடனை ராஜாவாக அபிஷேகம் செய்வது எனக்குச் சரியென்று தோன்ற வில்லை.

கொக்கிபோல் வளைந்த மூக்கு, அரைக்கண் பார்வை, கருணையும், அழகுமில்லாத முகம் கொண்டது ஆந்தை. சாந்தமாக இருக்கும்போதே அதன் முகம் அப்படியிருக்கிறது என்றால் கோபமடையும்போது எப்படியிருக்கும்? இயற்கையாகவே ஆந்தை கோபம் உள்ளது, அதிக உக்கிரமானது, கொடூரமானது, வெறுப்பாகப் பேசுகிற தன்மையுடையது. அதை அரசனாக ஆக்கினால் உங்களுக்கு என்ன நன்மை ஏற்படப்போகிறது?

மேலும், ஏற்கனவே கருடன் உங்களுக்கு அரசனாக இருக்கையில், இவனால் உங்களுக்கு என்ன பிரயோஜனம்? இவன் குணமுள்ளவனாகவே இருக்கட்டுமே, ஒருவன் அரசனாக இருக்கையில் இன்னொருவனை அரசனாக்குவது நல்லதல்ல.

தேசு நிறைந்த அரசன் ஒருவன் இருப்பதே உலகுக்கு நன்மை. பல அரசர்கள் இருந்தால், பிரளய காலத்தில் உதிக்கும் பல சூரியர்கள்போல் நாசம்தான் உண்டாக்குவார்கள்.

நிஜமான கருட ராஜாவின் பெயரைக் கேட்டாலே யாரும் உங்களைத் துன்புறுத்த அணுகுவதில்லை.  எப்படி என்று கேட்டால்,

பெரிய அரசனின் பெயரைத் துஷ்டர்களின் முன் சொன்ன மாத்திரத்திலே நன்மை உண்டாகும். பெரிய காரியம் இருப்பதாகப் பாசாங்கு செய்வது ஒருவனுடைய நிலையை உயர்த்துகிறது. சந்திரனிடமிருந்து பெரிய காரியமாக வந்திருப்பதாகப் பாசாங்கு செய்த முயல் சுகமாக வாழ்ந்தது.

என்றொரு பழமொழி உண்டு’’ என்றது காக்கை.

‘’அது எப்படி?’’ என்று பறவைகள் கேட்கவே, காக்கை சொல்லத் தொடங்கியது

யானையை ஏமாற்றிய முயல்

ஒரு காட்டில் ஒரு யானையரசன் இருந்தது. அதன் பெயர் சதுர்தந்தன். அதன் பரிவாரமாகப் பல யானைகள் இருந்துவந்தன. யானைக் கூட்டத்தைக் காத்து, அது காலத்தைக் கழித்து வந்தது. ஒரு சமயத்தில் பன்னிரெண்டு வருஷங்கள் மழையே இல்லாமற்போய்விட்டது. அதனால் குளம், குட்டை, ஏரி, சதுப்பு நிலம் எல்லாம் வற்றிப்போய் விட்டன. எல்லா யானைகளும் யானையரசனிடம் போய், ‘’அரசே, தாகத்தின் வேதனை பொறுக்கமுடியாமல் சில யானைகள் சாகும் நிலைமையில் உள்ளன, சில செத்தும் விட்டன. ஆகவே தாகத்தைப் போக்கிக்கொள்ள உபாயம் ஏதாவது செய்யுங்கள்’’ என்று முறையிட்டன. உடனே யானையரசன் நீர்நிலையைக் கண்டுபிடிப்பதற்காக எட்டுத் திக்குகளுக்கும் யானைகளை அனுப்பியது. அவை காற்றைப் போல் வேகமாக சென்றன.

அவற்றில் கிழக்குத் திசையில் சென்ற யானைகள் முனிவர்களின் ஆஸ்ரமத்துக்குப் பக்கத்தில் உள்ள பாதையில் சுந்திரஸரஸ் என்ற ஒரு ஏரியைக் கண்டன. அன்னம், கொக்கு, மீன்கொத்தி, வாத்து, சக்ரவாகம், நாரை முதலான நீர்ப்பறவைகள் வசித்த அந்த ஏரி பார்க்க அழகாக இருந்தது. பலவிதமான மரங்கள் இரு கரைகளிலும் இருந்தன. அவற்றின் கிளைகள் மலர்களின் பாரத்தால் குனிந்து போயிருந்தன. கிளைகளில் இளந்தளிர்கள் நிறைந்திருந்தன. காற்று அடித்து அலைகள் எழும்பி நடனமாடிக்கொண்டே வந்து கரையில் மோதின. அதனால் அந்தச் சுத்த ஜலத்தில் உண்டான நுரை கரைகளை முத்தமிட்டது. யானையரசன் நீரில் மூழ்கியபோது, அதன் கன்னத்தில் இடைவிடாது பெருகிக்கொண்டிருந்த மதநீரைப் பருகி வந்த வண்டுகள் மேலே பறந்தன. அந்த மதநீரால் ஏரிநீர் வாசனை கூடியிருந்தது. கரைகளில் வளர்ந்திருந்த மரங்களின் இலைகள் கணக்கற்ற குட்டைகள்போல் விரிந்து சூரியனின் வெப்பத்தைத் தடுத்துத் தணித்தன. நீரில் மூழ்கிக் குளிக்கும் மலைக் கன்னியரின் பருத்த தொடைகளிலும், பிருஷ்டங்களிலும், ஸ்தனங்களிலும் அலைகள் மோதித் திரும்பியதில் பலவிதமான கம்பீரமான நாதங்கள் எழுந்தன.  ஏரியில் பளிங்குபோன்ற நீர் நிறைந்திருந்தது. முழுதும் மலர்ந்த தாமரை மலர்கள் கூட்டம் கூட்டமாகப் புஷ்பித்து ஏரிக்குச் சோபிதம் அளித்தன. அதிகம் சொல்வானேன்? அது சுவர்க்கத்தின் ஒரு பகுதியாகவே காணப் பட்டது.

அதைக் கண்டுவிட்ட யானைகள் அதிவேகமாகத் திரும்பி யானை அரசனிடம் வந்தன. செய்தியைத் தெரிவித்தன.

அதைக் கேட்ட சதுர்தந்தன் தன் பரிவாரங்களோடு நாளடைவில் சந்திரஸரஸை அடைந்தது. சுலபமாக இறங்குவதற்குத் தகுந்த மாதிரி ஏரியைச் சுற்றிலும் சரிவுகள் இருந்தன. அந்தச் சரிவுகளில் யானைகள் இறங்கின. அப்போது அங்கே ஏற்கனவே வசித்துவந்த ஆயிரக்கணக்கான முயல்களின் தலைகளும், கழுத்துகளும், கைகால்களும் நசுக்கப்பட்டுவிட்டன. நீரைக் குடித்துக் குளித்துவிட்டு, யானையரசன் தன் பரிவாரங்களோடு வெளியே வந்து, ஒரு அடர்ந்த காட்டுக்குள் சென்றது.

கொல்லப்பட்டவைபோக மற்ற முயல்கள் எல்லாம் ஒரு அவசரக் கூட்டத்தைக் கூட்டின. ‘’இனி என்ன செய்யலாம்? யானைகளுக்கு வழி தெரிந்து விட்டது. எனவே தினசரி வந்து கொண்டிருக்கும். அவை இங்கு வராதபடி தக்க உபாயம் ஒன்று செய்ய வேண்டும்’’ என்று ஆலோசித்தன. அவற்றில் விஜயன் என்றொரு முயல் இருந்தது. குடும்பமும் உறவினர்களும் நசுக்கப்பட்டுத் துக்கமடைந்த அந்த முயல்களை விஜயன் பார்த்துவிட்டு, இரக்கத்துடன், ‘’நீங்கள் பயப்பட வேண்டாம். அவர்கள் மறுபடியும் இங்கே வரமாட்டார்கள். இது சத்தியம். ஏனென்றால் என் இஷ்டதெய்வத்தின் அருள் அப்படி வாய்த்திருக்கிறது’’ என்று சொல்லியது.

அதைக்கேட்டு சிலீமுகன் என்ற முயலரசன் விஜயனைப் பார்த்து, ‘’நண்பனே, அதில் சந்தேகமென்ன? காரணத்தைக் கேள்! விஜயன் நீதிநூல் சாரத்தில்  தேர்ச்சி மிகுந்தவன். காலத்தையும் தேசத்தையும் நன்கு தெரிந்தவன். எங்கே விஜயனை அனுப்புகிறோமோ அங்கே வெற்றி நிச்சயம் கிடைக்கும்.

அதிகமாகப் பேசாமல் இதமாகவும், மிதமாகவும் நன்றாய் யோசித்தும், அர்த்தத்தை அலசியாராய்ந்தும் பேசுகிறவனால் எல்லாக் காரியங்களையும் சாதிக்க முடியும்.

உன் புத்திசாதுரியத்தைப் பார்த்து, முயலரசனாகிய என்னுடைய மூன்று பலங்களையும் யானைகள் தூரத்திலிருந்தபடியே அறிந்து கொள்ளும். எப்படியென்றால்,

ஒரு அசரனை நேரில் பார்க்கவிட்டாலும் அவனுடைய தூதனையோ ராஜப்பிரதிநிதியையோ பார்த்தே அந்த அரசன் புத்திசாலியா மூடனா என்று தெரிந்து கொள்வேன்.

என்றொரு பழமொழி உண்டு.

தூதன்தான் கட்டுப்போடுகிறான். தூதன்தான் கட்டையும் அவிழ்த்து விடுகிறான். தூதன்தான் காரியம் செய்து சத்ருக்களை ஜெயிக்கிறான்.

நீ போவது நானே நேரில் போவதுபோல், ஏனென்றால்,

இலக்கணப் பிழையற்ற பேச்சும், சாதுக்களின் மதிப்பைப் பெறத்தக்க பேச்சும் எல்லோருக்கும் சம்மதமான பேச்சும் அரசன் பேசிய பேச்சுக்குச் சமானம்.

காரியத்துக்கான பேச்சுப் பேசவேண்டும்; அந்தப் பேச்சில் முடிந்த வற்றை பலனளிக்கத் தக்கமாதிரி நிறைவேற்ற வேண்டும். சுருங்கச் சொன்னால், இதுதான் தூதனின் வேலை.

எனவே, நண்பனே, நீ போய் வா! அந்தத் தூதுவேலையே உன் இரண்டாவது இஷ்ட தெய்வமாயிருந்து உன்னைக் காக்கட்டும்’’ என்றது முயலரசன்.

விஜயன் போயிற்று. ஆயிரக்கணக்கான யானைகள் புடைசூழ யானையரசன் ஏரிக்கு வரப் புறப்பட்டுக் கொண்டிருப்பதை விஜயன் கண்டது. மலர்ந்த பூக்கள் நிறைந்த இலவங்க மரக்கிளைகளின் நுனித்துளிர்களாலான படுக்கையில் படுத்து, அதன் மகரந்தப் பொடியால் யானைகளின் உடம்பு பூசப்பட்டிருந்தது. மின்னல்கொடி படர்ந்து நீர் நிறைந்து செல்லும் கனத்த கருமேகங்கள்போல் அவற்றின் உடம்புகள் காட்சியளித்தன. யானைகளின் பிளிறு கனமாகவும், பயங்கரமாகவும் கேட்டது. மழைக்காலத்தில் மேகங்கள் மோதிக்கொள்வதால் ஏற்படும் இடியோசை போலவும் அதிலிருந்து பளிச்சிடும் மின்னல்கள் போலவும் இருந்தது. நிர்மலமான நீலோற்பல மலரிதழ்களைப்போல் அவற்றின் உடல்கள் ஒளி மிகுந்திருந்தன. சிறந்த நாகசர்ப்பம்போல அவற்றின் துதிக்கைகள் வளைந்து விளங்கின. இந்திரனின் ஐராவதம்போல் அவை இருந்தன. அவற்றின் தந்தங்கள் தேன் நிறமுடையவை; பளபளப்பாயும், கம்பீரமாயும் நீண்டு வளர்ந்திருந்தன. அவற்றின் அகன்ற கன்னங்களிலிருந்து பெருக்கெடுக்கும் மதநீரின் நறுமணத்தால் வசீகரிக்கப்பட்ட வண்டுக்கூட்டங்கள் யானைகளின் முகத்தின்  அருகே ரமணீயமாக ரீங்காரம் செய்தன. துளிர்த்துப் பூத்துக் குலுங்கும் கிளைகளைப்போல் அவற்றின் காதுகள் மெல்ல அசைந்து நடனமாடின. அந்த யானைக்கூட்டத்தைப் பார்த்து விஜயன் யோசிக்கத் தொடங்கியது. ‘’என்னைப் போன்றவர்கள் இவனைக் கிட்ட நெருங்கவே முடியாது. ஏனென்றால்,

யானை தொட்டாலும் சாவு, பாம்பு மூச்சுவிட்டாலும் சாவு. அரசன் சிரித்தாலும் சாவு, துஷ்டன் கௌரவித்தாலும் சாவுதான்.

என்றொரு பழமொழி உண்டு. எனவே, என்னைத் தாக்கமுடியாத இடமாகப் பார்த்துப் பிடித்து உட்கார்ந்துகொண்டு, இந்த யானைகளோடு பேசுகிறேன்’’ என்று எண்ணியது.

எண்ணியபடியே முயல் ஒரு உயரமான கரடுமுரடான கற்குவியல்மேல் ஏறியமர்ந்தது. யானையைப் பார்த்து, ‘’யானை அரசனே! நீ சௌக்கியந்தானா?’’ என்று கேட்டது. யானை அரசன் சுற்றுமுற்றும் கூர்ந்து பார்த்துவிட்டு, ‘’யார் அது?’’ என்றது. ‘’நான் ஒரு தூதன்’’ என்றது முயல். ‘உன்னை அனுப்பியது யார்?’’ என்று கேட்டது யானை அரசன்.

‘’சந்திரபகவான் என்னை அனுப்பியிருக்கிறார்’’ என்று பதிலளித்தது முயல். ‘’உன் காரியத்தைச் சொல்’’ என்றது யானை அரசன்.

முயல் பதில் சொல்லத் தொடங்கியது: தன் காரியத்தை நிறைவேற்ற வந்திருக்கும் தூதனுக்குக் கெடுதல் செய்யக்கூடாது என்பதை நீங்கள் அறிவீர்கள். எல்லா அரசர்களுக்கும் தூதர்கள் தான் வாய்மாதிரி இருக்கிறார்கள்.

கத்திகளை உருவிக்கொண்டு நின்றாலும், பந்துவர்க்கங்களைக் கொன்று கொண்டிருந்தாலும், தூதன் நிந்தனையாகப் பேசினால் தூதர்களை மட்டும் அரசன் கொல்லக்கூடாது.

எனவே, சந்திரபகவானின் கட்டளையின்பேரில் நான் பேசுகிறேன். ஏ மரிக்கத்தக்கவனே, நீ உன் பலத்தையோ எதிரியின் பலத்தையோ தெரிந்துகொள்ளாமல் ஏன் பிறருக்குப் பாதகம் செய்து கொண்டிருக்கிறாய்?

தன் பலத்தையும் உணராமல், பிறர் பலத்தையும் விசாரித்தறியாமல் முட்டாள்தனமாகக் காரியத்தில் இறங்குபவன் ஆபத்தைத்தான் விரும்பிச் சேருகிறான்.

என் பெயரைத் தாங்கி புகழ்பெற்றிருக்கும் அந்தச் சந்திரஸரஸை அநியாயமாக நீ கலக்கிவிட்டிருக்கிறாய். அங்கே என் மடியில் விளையாடிக்கொண்டு, என்னால் காக்கப்பட்டு வரும் முயலரசனின் இனத்தைச் சேர்ந்த பல முயல்களைக் கொன்றிருக்கிறாய். அது ஒரு பெரிய குற்றம். இன்னொரு விஷயம். எனக்குச் ‘சசாங்கன்’ (முயலை அடையாளமாக உள்ளவன்) என்று உலகெங்கம் புகழ்பெற்ற பெயர் ஒன்று உண்டு என்பது உனக்குத் தெரியாதா? நீட்டிப் பேசுவதினால் என்ன பலன்? டூந்தக் காரியத்தைக் கைவிட்டு நீ போய்விடவில்லை என்றால் உனக்குப் பெரிய அனர்த்தம் என்னால் விளையும். விட்டுப்போய்விட்டால் உனக்குப் பெரிய நன்மையுண்டாகும். என் நிலவொளியில் நீராடியபடியே இந்தக் காட்டில் நீயும் உன் பரிவாரங்களும் இஷ்டம்போல் இன்பமாக விளையாடிக்கொண்டிருக்கலாம். இல்லாவிட்டால் நான் நிலவைப்பொழியாமல் இருந்து கொள்வேன். சூரிய வெப்பத்தில் நீயும் உன் பரிவாரங்களும் துன்பப்பட்டு நாசமடைவீர்கள்’’ என்று சந்திரன் சார்பில் முயல் சொல்லியது.

இதைக்கேட்டு யானை அரசன் மிகுந்த மனக்கவலை அடைந்தது. ரொம்ப நேரம் யோசித்தது. கடைசியில், ‘’நண்பனே, சந்திரபகவானுக்கு நான் பாதகம் செய்தது உண்மையே. இனிமேல் அவரைப் பகைத்துக்கொள்ள மாட்டேன். சந்திரனின் மன்னிப்பை நான் பெறுவதற்குச் சீக்கிரமாக நீ ஒரு வழியைக் காட்டு. நான் போய் மன்னிப்புக் கேட்கிறேன்’’ என்றது யானை அரசன்.

‘’நீ தனியாக வா. நான் வழிகாட்டுகிறேன்’’ என்றது முயல். பிறகு முயல் யானையை அழைத்துக்கொண்டு சந்திரஸரஸ¤க்குப் போயிற்று. அப்போது வானம் நிர்மலமாயிருந்தது. கிரஹங்களும், சப்தரிஷி மண்டலமும், தாரகைகளும் வானத்தில் ஏறி உலா வந்து கொண்டிருந்தன. அவற்றின் மத்தியிலே சுடர்விட்டுப் பிரகாசிக்கும் அழகிய நிலாவட்டம் தகதகவென்று துடித்துக் காய்ந்து கொண்டிருந்தது. சகல கலைகளையும் விரித்து, பூர்ண வடிவத்திலே சந்திரிகை பொலிவோடு பவனிவர, அதன் நிழல் ஏரியில் தென்பட்டது.

பூர்ண சந்திரனைப் பார்த்துவிட்டு யானை அரசன் ‘நான் சுத்தம் செய்துகொண்டு தெய்வத்தை வணங்குகிறேன்’ என்று சொல்லியது. இரண்டுபேர் கட்டியணைக்கத்தக்க அளவுக்குப் பருமனுள்ள தன் துதிக்கையை நீரில் விட்டது. உடனே நீர் கலங்கியது. சுழலும் சக்கரத்தில் ஏறியவன் மாதிரி நிலாவட்டம் சுற்றிச் சுற்றி அசைந்தாடியது. ஒரே சமயத்தில் ஆயிரம் சந்திரிகைகள் நீரில் தோன்றின.

உடனே விஜயன் மிகுந்த பரபரப்புடன் வந்து யானை அரசனைப் பார்த்து, ‘’கஷ்டம், கஷ்டம்! அரசே, சந்திரனை நீங்கள் இரண்டு மடங்காகக் கோபங்கொள்ளச் செய்திருக்கிறீர்கள்’’ என்றது.

சந்திரபகவான் என்னைக் கோபிப்பானேன்?’’ என்று யானை அரசன் கேட்டது.

‘’இந்த நீரைத் தாங்கள் தொட்டதினால்தான்’’ என்றது முயல். உடனே யானை அரசன் தன் காதுளை மடக்கி பூமியில் குனிந்து தலை வணங்கி சந்திரபகவானிடம் மன்னிப்புக் கோரியது. பிறகு விஜயனைப் பார்த்து, ‘’நண்பனே, மற்ற விஷயங்களுக்கும் என் சார்பில் சந்திரனிடம் நீ மன்னிப்புக் கேள். இனிமேல் இங்கே நான் வரமாட்டேன்’’ என்று சொல்லிற்று. பிறகு யானை வந்தவழியே திரும்பிப் போய்விட்டது.

அதனால்தான், ‘பெரிய காரியமாக…’ என்ற செய்யுளைச் சொன்னேன்’’ என்று கதையை முடித்தது காக்கை. அது மேலும் பேசிற்று: ‘’அதைவிட மோசமாக விஷயம் ஒன்றிருக்கிறது. இந்த ஆந்தை ஒரு துராத்மா, பாப எண்ணங்கொண்டவன், கடைகெட்ட நீசன். பிரஜைகளைக் காப்பாற்றப் பலமில்லாதவன், காப்பது ஒருபுறமிருக்கட்டும், இவனாலேயே உங்களுக்கு ஆபத்து உண்டாகுமே!

ஒரு நீசன் நீதிபதியாக அமர்ந்தால் வாதிப்பிரதிவாதிகளுக்கு என்ன சுகம்? பூனையிடம் நியாயம் கேட்கப்போய் முயலும் தித்திரிப் பறவையும் இறந்தன.
என்ற பாட்டு உங்களுக்குத் தெரிந்திருக்குமே?’’ என்றது காக்கை. ‘’அது எப்படி?’’ என்று பறவைகள் கேட்டன. காக்கை சொல்லத் தொடங்கியது:

Series Navigationஅகஸ்டோவின் “ அச்சு அசல் “ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம், இறுதிக் காட்சி) அங்கம் -3 பாகம் – 22
author

அன்னபூர்னா ஈஸ்வரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *