பஞ்சதந்திரம் தொடர் 5 – நரியும் பேரிகையும்

This entry is part 45 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011


நரியும் பேரிகையும்

 

ஒரு வட்டாரத்தில் ஒரு நரி இருந்தது. அது பசியால் வாடி தொண்டை வறண்டு போய் இரை தேடியபடி காட்டில் சுற்றித்திரிந்தது. காட்டின் மத்தியில் அரசனின் போர்க்களத்தைப் பார்த்தது. அங்கே நரி ஒரு நிமிஷம் நிற்பதற்குள் பலத்த சத்தம் ஒன்று கேட்டது. அதைக் கேட்டதும் நரிக்கு மனக்கலக்கமும் கவலையும் உண்டாயிற்று. ”ஐயோ, ஆபத்து வந்து விட்டதே! இனி நான் செத்த மாதிரிதான். யார் இப்படிச் சத்தமிடுகிறார்கள்? என்ன மிருகமாயிருக்கக் கூடும்?” என்றது யோசித்தது. இங்குமங்கும் பார்த்தபோது மலையுச்சி போல் உருவமுள்ள ஒரு பேரிகையைக் கண்டது. ”இதிலிருந்து சத்தம் தன்னாலே வருகிறதா? அல்லது யாராவது உண்டாக்குகிறார்களா?” என்று யோசித்தது. காற்று வீசி நாணல் நுனிகள் பேரிகையின் மீது படும்போதெல்லாம் சத்தம் கிளம்பும். பிறகு சத்தம் அடங்கிவிடும். இதை நரி கண்டு கொண்டது. பேரிகைக்குச் சுயமான சக்தியில்லை என்று தெரிந்தவுடன் அதனருகில் சென்றது. ஆவலோடு பேரிகையின் இருபக்கங்களிலும் அடித்தது. பிறகு சந்தோஷமடைந்து, ”ஆஹா, ரொம்ப நேரம் கழித்து இரை கிடைத்திருக்கிறது. நிச்சயமாக இதில் மாமிசமும், கொழுப்பும் நிறைய இருக்கும்” என்று நரி எண்ணியது. இந்த முடிவுக்கு வந்தவுடன் பேரிகையின் ஒரு பக்கத்தைக் குடைந்து உள்ளே புகுந்தது. பேரிகையின் தோல் கெட்டியாகத்தான் இருந்தது. நரியின் நல்ல காலம். அதன் பல் உடைந்து போகவில்லை. புகுந்து பார்த்தபோது வெறும் தோலும் ”மரக்கோல்களுமாக இருக்கக்கண்டு நரி நிராசையுடன் இந்தச் செய்யுளைப் பாடியது.

 

‘பேரிகையின் பயங்கரச் சத்தத்தைக் கேட்டு அது மாமிச மலையென்று எண்ணினேன்; உள்ளே நுழைந்து பார்த்தபோது வெறும் தோலும், மரக்கோல்களுமாக இருக்கக் கண்டேன்.’

 

பேரிகையிலிருந்து வெளியே வந்த நரி தனக்குள் சிரித்துக் கொண்டே, ”இது கொழுப்பும் மாமிசமும் நிறைந்ததென்று நினைத்தேன்…” என்று சொல்லிற்று.

 

அதனால்தான், ”சத்தத்தைக் கண்டு கலக்கமடையக் கூடாது” என்கிறேன்’ என்றது தமனகன்.

 

”என் பரிவாரங்கள் பயமும் கலக்கமும் கொண்டு ஓடப் பார்க்கிறார்களே! தைரியத்தோடு இருப்பது எப்படி?” என்றது பிங்களகன்.

 

”அரசே! அது அவர்கள் குற்றமல்ல. எஜமானர்களுக்கு ஏற்ற மாதிரிதான் ஏவலாட்கள் வந்து சேருகிறார்கள். இந்தப் பழமொழி சொல்வதுபோல்:

 

குதிரை, ஆயுதம், சாஸ்திரம், வீணை, சொல், ஆண், பெண்- எல்லாம் பயனுள்ளவையா பயனற்றதா என்பது உபயோகிப்பவனின் திறமையைப் பொறுத்திருக்கிறது.

 

நான் அந்த ஜந்துவைக் கண்டு திரும்பும் வரையில் ஆண்மையுடன் இங்கேயே நில்லுங்கள். திரும்பி வந்தபிறகு உசிதம்போல் செய்யலாம்” என்றது தமனகன்.

 

”என்ன இது! அங்கு போகவா விரும்புகிறாய்?” என்று கேட்டது பிங்களகன்.

 

”அரசன் கட்டளையிடும் பொழுது நல்ல வேலைக்காரனுக்கு இது தகும், இது தகாது என்று ஒன்று உண்டா? ஒரு பழமொழி சொல்வதுபோல்:

 

எஜமானர் கட்டளையிடுகிறபோது நல்ல வேலைக்காரன் பயமெதுவும் கொள்வதில்லை. எரிகிற நெருப்பிலும் நுழைகிறான். கடக்கமுடியாத கடலையும் கடந்து விடுவான். அரசன் இட்ட கட்டளையைக் கேட்டு இது கஷ்டம், இது சுலபம் என்று வாதுக்கு நிற்கும் வேலையாளை அரசன் தனது மந்திரியாகக் கொள்ள மாட்டான்.

 

என்றது தமனகன்.

 

அதைக்கேட்டு பிங்களகன், ”நல்லது. அப்படியென்றால் நீ போ! உன் பயணம் மங்களமாய் முடியட்டும்” என்றது.

 

தமனகன் சிங்கத்தை வணங்கிவிட்டு சஞ்சீவகனுடைய சத்தத்தைப் பின் தொடர்ந்தவாறே தேடிச் சென்றது. தமனகன் சென்ற பின் பயந்த மனத்துடன் பிங்களகன் யோசிக்கத் தொடங்கியது.

 

”ஐயோ! என் மனதிலிருந்ததை அவனுக்குத் தெரிவித்து விட்டேனே! அப்படிச் செய்தது சரியல்ல. இருவரிடமும் லஞ்சம் வாங்க நினைத்தோ, அல்லது நான் அவனை வேலையிலிருந்து நீக்கியதற்காகவோ, தமனகன் ஒருவேளை எனக்குத் தீமை செய்தாலும் செய்யலாம். ஒரு பழமொழி சொல்லியிருக்கிறபடி:

 

ஒருவனை அரசன் முதலில் கௌரவித்துவிட்டுப் பிறகு அவமானப் படுத்தினால், அவன் நற்குலத்தில் பிறந்தவனானாலும் அரசனை என்றைக்கும் ஒழிக்கவே விரும்புவான்.

 

ஆகவே, அவன் நோக்கம் தெரியும் பொருட்டு வேறு இடத்துக்குப் போய்க் காத்திருப்போம். நம்மைக் கொல்வதற்காக அந்த மிருகத்தைத் தமனகன் அழைத்து வந்தாலும் வரலாம். ஒரு பழமொழி கூறுகிறபடி,

 

ஒரு ஆளைச் சுலபத்தில் அப்படியே நம்பிவிடும் பல சாலியைப் பலமில்லாதவனும் வென்றுவிடுகிறான். அப்படி சுலபத்தில் நம்பாத பலவீனனை பலசாலியாலும் வெல்ல முடியாது.

 

இப்படி தனக்குள் முடிவு செய்து கொண்டு பிங்களகன் வேறிடம் சென்றது. தமனகன் போன வழியைப் பார்த்தபடியே தன்னந்தனியாக நின்றது.

 

தமனகன் சஞ்சீவகன் அருகில் சென்று, அது எருதுதான் என்று தெரிந்து கொண்டு, குதூகலத்தோடு பின்வருமாறு நினைத்தது: ”பேஷ் எனக்கு அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது. இந்த எருதைக் கொண்டு சண்டை மூலமோ சமாதானத்தின் மூலமோ பிங்களகனை என் வசப்படுத்துகிறேன். ஒரு பழமொழி கூறுவதுபோல:

 

விடாமல் சங்கடங்களில் அரசன் மாட்டிக்கொண்டிருந்தால்தான் மந்திரிகளுக்குச் சுகம். அதனால்தான் எப்பொழுது பார்த்தாலும் அரசனுக்குச் சங்கடங்கள் இருந்துவர வேண்டும் என்று மந்திரிகள் விரும்புகின்றனர்.

 

ஆரோக்கியமுள்ளவன் ஒருபொழுதும் வைத்தியனைத் தேட மாட்டான்; அதேமாதிரி சங்கடங்கள் இல்லாத அரசன் மந்திரியைத் தேடுவதில்லை.

 

இப்படியெல்லாம் எண்ணியபடியே தமனகன் பிங்களகனிடம் திரும்பிச் சென்றது. பிங்களகன்  அது வருவதைப் பார்த்ததும், முகபாவத்தை மறைப்பதற்காக முன் நின்றிருந்த மாதிரியே நின்று கொண்டது. தமனகன் பிங்களகனை நெருங்கி வணங்கிவிட்டு உட்கார்ந்தது.

 

”நண்பனே! அந்த மிருகத்தைப் பார்த்தாயா?” என்று பிங்களகன் கேட்டது.

 

”தங்கள் கிருபையால் பார்த்தேன்.”

 

”நிஜமாகவா?”

 

”நிஜமில்லாமல் தங்களிடம் வேறுவிதமாகச் சொல்வேனா? ஒரு பழமொழி கூறுகிறபடி:

 

அற்பமான பொய்யானாலும் அதை அரசன்முன் சொன்னால், சொல்கிறவனின் தெய்வங்களுக்கும் குருவுக்கும் அழிவு ஏற்படும்.

 

தெய்வத்தின் அவதாரமே அரசன் என்று முனிவர்கள் பாடுகின்றனர். ஆகையால் அவரைத் தெய்வம்போல் கருதவேண்டும். அரசனிடம் பொய் சொல்லக் கூடாது.

 

தெய்வத்தின் அவதாரமான அரசனுக்கும், தெய்வத்திற்கும் வித்தியாசம் இதுதான். செய்கிற பாவ புண்ணிங்களுக்கான பயனை அரசன் அன்றே அளிப்பான்; தெய்வமோ ஒரு ஜன்மத்திற்குப்பின் அளிக்கும்.”

 

பிங்களகன், ”சரி! நீ உண்மையில் பார்த்ததாகவே இருந்து விட்டுப் போகட்டும்! சிறியோரிடம் பெரியோர் கோபப்படுவதில்லை. ஒரு பழமொழி கூறுவது போல்:

 

வளைந்து குனிகிற மிருதுவான நாணல் புல்லைச் சூறைக்காற்று பிடுங்கி எறிவதில்லை. ஓங்கி வளர்ந்த மரங்களைத்தான் பிடுங்கி எறிகிறது. அதுபோல் பெரியவர்கள் பெரியவர்களிடத்திலேதான் தமது பராக்கிரமத்தைக் காட்டுவார்கள்.”

 

”அப்படிச் சொல்வீர்கள் என்று எனக்கு முன்னமேயே தெரியும். பேச்சை வளர்ப்பானேன்? அந்த மிருகத்தையே நேரில் அழைத்து வந்து விடுகிறேன்” என்றது தமனகன்.

 

பிங்களகன் முகம் சந்தோஷத்தால் மலர்ந்தது, மனத்திருப்தியைக் காட்டியது.

 

தமனகன் திருப்பிப்போய் சஞ்சீவகனைப் பார்த்தது. நிந்தனை கலந்த குரலில், ”துஷ்ட எருதே! வா இங்கே! ‘உடம்பில் பயமில்லாமல் ஏன் இப்படி அடிக்கடி அனாவசியமாகக் கத்துகிறாய்’ என்று எஜமானர் பிங்களன் உன்னை அதட்டுகிறார்.” என்றது. “நண்பரே, யார் அந்தப் பிங்களன்?” என்றது சஞ்சீவகன். தமனகனுக்கு ஒரே ஆச்சர்யமாகப் போய்விட்டது. “என்ன, எஜமானர் பிங்களகனைக் கூட உனக்குத் தெரியாதா?” என்று சொல்லிவிட்டு, மிகுந்த கோபத்துடன் தொடர்ந்தது: ”உனக்கு ஏற்படப்போகும் கதியிலிருந்து அவர் யாரென்று தெரிந்து கொள்வாய், பார்! சகல மிருகங்களும் அவரைச் சூழ்ந்து நின்று சேவிக்கின்றன. கர்வமிக்க நெஞசுடையவர்; மிருகங்களுக்கும் இதர செல்வங்களுக்கும் அரசர் அவர். பிங்களகன் என்ற பெயருள்ள பெரிய சிங்கம். பரந்து கிடக்கும் ஆலமரத்தடியில் அவர் வசிக்கிறார்” என்றது.

 

இச் செய்தியைக் கேட்டதும், ‘நான் செத்தேன்’ என்று சஞசீவகன் பயந்து போயிற்று. மிகுந்த மனக்கவலையுடன், ”நண்பரே! நீங்கள் தயையுள்ளவராகவும், வாக்குச் சாதுரியமுள்ளவராகவும் காணப்படுகிறீர். என்னை அவரிடம் அழைத்துச் செல்லுங்கள். நான் அவரிடம் அபயம் கேட்கிறேன்” என்றது.

 

தமனகன், ”அதுதான் சரி! அதுதான் நியாயம்! ஒரு பழமொழி கூறுவதுபோல்:

 

பூமிக்கு ஒரு எல்லையுண்டு. கடலுக்கும் மலைக்கும் கூட எல்லையுண்டு. ஆனால் அரசனின் எண்ணங்கள் எப்படிப்பட்டவை, யாரைப்பற்றியவை, எதைப்பற்றியவை, என்று சொல்வதற்கு எல்லையே கிடையாது.

 

ஆகையால் முதலில் நான் போய் அவரோடு நேரம் குறித்து வந்து உன்னை அழைத்துப் போகிறேன். அதுவரை இங்கேயே இரு!” என்றது.

 

பிறகு தமனகன் பிங்களகனிடம் சென்று, ”அரசே! அது மண்ணுலகைச் சேர்ந்த மிருகமல்ல. அது சிவபிரானுக்கு வாகனமாயிருந்திருக்கிறது. நான் அதை விசாரித்த போது, ”பரமசிவன் என்மேல் சந்தோஷமடைந்து யமுனா நதிக்கரையில் புல் மேய்வதற்கு என்னை அனுப்பியிருக்கிறார். சுருங்கச் சொன்னால், நான் விளையாடு வதற்காக இந்தக் காட்டையே எனக்குப் பகவான் அளித்தருளியிருக்கிறார்’ என்று பதிலளித்தது” என்று சொல்லிற்று.

 

பிங்களகன் பயந்துபோய், ”ஆஹா, இப்போதுதான் புரிகிறது! கடவுள் அருள் இல்லாவிட்டால் மனிதவாசனையற்ற இந்தக் காட்டில் புல் மேய்ந்தபடி இப்படி அவர் கத்திக்கொண்டு திரியமாட்டார். சரி, நீ என்ன சொன்னாய்?” என்றது.

 

”அரசே! நான் சொன்னேன், ‘இந்தக் காடு சண்டீதேவியின் வாகனமான பிங்களகனுடையது. ஆகையால் அவருடைய விருந்தாளியாக நீங்கள் வந்திருக்கிறீர்கள்? அவரை நெருங்கி, சகோதர வாஞ்சையோடு அவருடன் இருந்து, உண்டு குடித்து, வேலை செய்து, விளையாடி ஒரேயிடத்தில் காலங்கழிக்க வேண்டும்’ என்றேன். அவரும் ஒத்துக் கொண்டார். தங்களிடம் அபயம் கோரவேண்டும் என்றும் சொன்னார். அதைப்பற்றி முடிவு செய்ய வேண்டியவர்கள் தாங்கள்தான்” என்றது தமனகன்.

 

பிங்களகன் மிகுந்த சந்தோஷத்துடன், ”ரொம்ப நல்லது. நற்புத்தியுள்ளவனே! என் மனமறிந்து நீ பேசியிருக்கிறாய். அவருக்கு அபயமளிக்கிறேன். ஆனால் என் விஷயத்திலும் அவரிடம் ஒரு சபதம் வாங்கிக்கொள். வாங்கிக்கொண்ட பிறகு சீக்கிரம் கூட்டிவா!

 

நாகரிகமும், நேர்வழியும், தூயநட்பும் உள்ள செயலிலே சோதித்தறியப்பட்ட மந்திரிகள்தான் அரசாட்சி நடத்தத் தகுதி யுடையவர்கள். வீட்டுக்குத் தூண் மாதிரி அரசாட்சியின் தூண்கள் அவர்கள்.

 

(இந்தச் செய்யுளில் தூணுக்கும் மந்திரிக்கும் சிலேடை, பளபளப்பாயும், மரத்தின் தரம் பரிசோதிக்கப்பட்டும், கெட்டியாயும், நேராயும் இருக்கிற தூண்தான் வீட்டைத் தாங்கி நிற்கும் தகுதியுடையது.)

 

நட்பு முறிந்தபோது அதைச் சீர்படுத்திச் சேர்ப்பதிலே மந்திரிகளின் மதி நுட்பம் வெளியாகிறது. பெருநோய் வரும்போது வைத்தியனின் அறிவு வெளிப் படுகிறது.  நெருக்கடியற்ற சாதாரண காலங்களில் யார்தான் அறிவாளியாக இருக்க முடியாது?

 

என்று சொல்லி வைத்திருப்பது சரிதான்” என்றது பிங்களகன்.

 

சஞ்சீவகனைக் காணச் சென்ற தமனகன் வழியில் இவ்வாறு யோசிக்கத் தொடங்கியது: ‘ஆஹா, அரசர் என்மேல் கிருபை கொண்டு விட்டார். என் வார்த்தை வசமாகிவிட்டார். என்னைப் போல் அதிர்ஷ்டசாலி யாருமில்லை ஒரு பழமொழி கூறுவதுபோல்,

 

குளிர் காய்வதற்கு நெருப்புக் கிடைப்பது: தனக்குப் பிரிய மானவர்களைத் தரிசிப்பது; அரசனின் கொடையை பெறுவது; பால் சோறு சாப்பிடுவது; இவை நான்கும் அமுதம் கிடைத்த மாதிரிதான்”  

 

என்று சிந்தித்தது தமனகன்.

 

சஞ்சீவகனை நெருங்கியதும் தமனகன் மரியாதையோடு, ”நண்பனே! உன் விஷயத்தைச் சொல்லி அரசனைத் திருப்பதிப் படுத்தி அபயவாக்கு வாங்கி வந்திருக்கிறேன். நீ கவலையில்லாமல் போகலாம். ஆனால் ஒன்று. நீ அரசனின் அபிமானத்தைப் பெற்றபிறகு எனக்கு இணக்கமாக நடந்துகொள்ள வேண்டும். கர்வங் கொண்டு அதிகாரம் செய்யக்கூடாது. நானும் உன்னோடு சேர்ந்து கொண்டு, மந்திரிப் பதவி பெற்று, எல்லா ராஜ்ய பாரத்தையும் வகித்து வருவேன். இருவரும் சேர்ந்து ராஜ்ய லட்சுமியை அனுபவிக்கலாம்.

 

ஒரு பழமொழி கூறுவதுபோல்:

 

அதர்மத்தால் பாவங்கள் குவிவது போல் அரசனிடத்தில் சக்திகள் குவிந்து கிடக்கின்றன. ஒருவன் அரசனின் ஆதரவு பெறுகிறான்; மற்றவன் அவனை மிருகம் போல் கொன்று விடுகிறான்.

கர்வத்தால் சேவகர்களைச் சரியாக நடத்தாதவன், (கதையில் வரும்) தந்திலன் அரசனிடம் அனுபவித்ததுபோல், காலிடறி விழுகிறான்”

 

என்றது தமனகன்.

 

”அது எப்படி?” என்று சஞ்சீவகன் கேட்கவே, தமனகன் சொல்லத் தொடங்கியது.

Series Navigationமுனனணியின் பின்னணிகள் டபிள்யூ. சாமர்செட் மாம் 1930சமச்சீர் கல்வி : பிரசினைகளும் தீர்வுகளும்
author

அன்னபூர்னா ஈஸ்வரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *