படித்தோம் சொல்கின்றோம்: மதுரையின் முழுமையான வரலாற்றை பேசும் அ. முத்துக்கிருஷ்ணனின்  தூங்கா நகர் நினைவுகள்

author
0 minutes, 24 seconds Read
This entry is part 10 of 20 in the series 29 ஜனவரி 2023

முருகபூபதி

தனது வாழ்நாட்களில் பெரும்பாலான பொழுதுகளை பயணித்துக்கொண்டே கடந்து செல்லும்  எழுத்தாளர், களப்பணியாளர், மனித உரிமை ஆர்வலர்,  மொழி பெயர்ப்பாளர், தேர்ந்த  வாசகர், தானும் இயங்கி, மற்றவர்களையும் இயங்கவைக்கும் ரஸவாதம் கற்றவர்,          அ. முத்துக்கிருஷ்ணன்.

எங்கள் அவுஸ்திரேலியாவின் நிரந்தர  இலக்கிய விருந்தினர்.  மெல்பனில் வாசகர் வட்டம் அமைப்பதற்கு தூண்டுகோளாகவிருந்தவர். இன்றளவும் அதன் பணிகளில் இணைந்திருப்பவர்.  உறவாடுவதற்கு எளிமையானவர். 

இத்தனை சிறப்பியல்புகளை கொண்டிருப்பவரின் மற்றும்  ஒரு வரவு,  தூங்கா நகர் நினைவுகள்.  மதுரையின் முழுமையான வரலாற்றையே இதனைப் படித்து நாம் தெரிந்துகொள்ள முடியும்.

விகடன் பிரசுரமாக வெளிவந்துள்ள இந்நூல், விரைவில் ஆங்கிலத்திலும் இதர இந்திய மொழிகளிலும் வெளிவரவிருக்கும்  நற்செய்தியும், அண்மையில் சென்னையில் நடந்த புத்தக திருவிழாவின்போது அறிய முடிகிறது. 

முதல், இடை, கடை என மூன்று சங்கம் வைத்து தமிழை வளர்த்த நான்மாடக்கூடலின் கதையை, வாசகர்களை கைப்பிடித்து அழைத்துச் சென்று சொல்லுமாப்போன்று எழுதியிருக்கிறார் முத்துக்கிருஷ்ணன்.  அவரது நீண்ட கால உழைப்பும், தேடுதலும் இந்நூலில் தெரிகிறது.  அவர்  சேகரித்து பதிவேற்றியிருக்கும் அரிய படங்களும், ஓவியங்களும் இந்த நூலுக்கு அணிசேர்த்துள்ளன.

கமல்ஹாசன்  எடுக்கவிருந்து பாதித் தயாரிப்போடு நின்றுவிட்ட  மருதநாயகம்  திரைப்படம் பற்றி அறிந்திருப்பீர்கள். அந்த மருதநாயகம்,  கான் சாகிப் ஆகிய பின்னர் மதுரையின் ஆளுநராகவிருந்து மேற்கொண்ட சேவைகள் முதற்கொண்டு,  பாண்டிய மன்னர்களுக்கு முற்பட்ட காலம் தொடக்கம், சுதந்திரத்திற்குப் பின்னர் மதுரையம்பதியில் நேர்ந்துள்ள மாற்றங்கள் பற்றியும் விரிவாகக் கூறும் நூல், என அழைப்பதை விட ஆவணம் என்றே சொல்லத்தோன்றுகிறது.

எழுத்தாளர் முத்துக்கிருஷ்ணனின் ரிஷிமூலம் எமக்கு வியப்பை ஏற்படுத்துகிறது. மதுரையில் இவர் பிறந்திருந்தாலும், தனது இளமைப்பருவத்தை மும்பை மாநகரிலேயே கழித்திருக்கிறார்.  அதனால், இவரது தொடக்க கால பள்ளிப்படிப்பில், தாய் மொழி தமிழ் அந்நியமாகியிருக்கிறது. 1986 ஆம் ஆண்டிற்குப்பின்னர்தான் மீண்டும் மதுரையில் கால் பதிக்கிறார்.

பிறப்பால் தமிழரான இவர், தனது தாய்மொழியை தனது 21 வயதிற்குப்பின்னரே கற்றார் என்பதை அறியும்போது திகைத்துவிடுகின்றோம்.

எனினும்,  அவரது உள்ளார்ந்த தேடல், இன்று அவரை ஒரு கவனத்திற்குரிய தமிழ் எழுத்தாளராக அடையாளம் காண்பித்திருக்கிறது. அதற்கான மூலதனம் அவரது கடின உழைப்பும், அவர் மேற்கொண்டுவரும் பயணங்களும்தான்.

எழுத்துப்பணிகளுக்கு அப்பால், தொடர் வாசிப்பு,  தொல்லியல் – வரலாறு தொடர்பான ஆய்வுகள், மனித உரிமை மீறல்களுக்கு எதிரான போர்க்குரல், சுற்றுப்புறச்சூழல் தொடர்பான விழிப்புணர்வு இயக்கம், விளிம்பு நிலை மக்களின் நலன் சார்ந்த சேவைகள், உலகமயமாதல் முதலான துறைகளில் தீவிர கவனம் என பன்முக ஆற்றலும் ஆளுமையும் மிக்க முத்துக்கிருஷ்ணன்,  புது டெல்லியிலிருந்து தரைவழியாக சுமார் பத்தாயிரம் கிலோ மீற்றர் தூரம் பயணித்திருப்பவர்.

அவ்வாறு சென்று, பாலஸ்தீனத்தின் காசாவுக்கு வந்து திரும்பிய சர்வதேச குழுவில் இடம்பெற்ற ஒரே ஒரு தமிழர் என்ற பெருமையையும் தனதாக்கிக்கொண்டிருப்பவர்.

பெரியார், அம்பேத்கார் விருதுகளும் பெற்றிருக்கும் இவர் பற்றி மேலதிகமாக  பலருக்கும் தெரிந்த சிறிய தகவல் ஒன்றும் இருக்கிறது.

அதுதான் கோபி நயினார் இயக்கத்தில் வெளியான 2017 இல்  நயன்தாரா நடித்து வெளியான அறம் திரைப்படம். இதில் முத்துக்கிருஷ்ணன் நடித்திருப்பார்.

இதனை இங்கு குறிப்பிடுவதற்கு காரணம் :   சில வருடங்களுக்கு முன்னர் மெல்பனில் ஒரு அரங்கில் முத்துக்கிருஷ்ணன் கீழடி அகழ்வாரய்ச்சி பற்றியும் தொல்லியல் குறித்தும் உரையாற்றியபோது, இறுதியில் சபையினர் கேள்வி கேட்கும் நேரம் வந்தபோது,  பலரும் முத்துக்கிருஷ்ணனின் தேடல் தொடர்பாக கேள்விகள் கேட்டபோது, ஒருவர் மாத்திரம்,  நயன்தாராவுடன் உங்கள் அடுத்த திரைப்படம் என்ன..? எனக்கேட்டு சபையை சிரிப்பில் மூழ்கவைத்தார்.

ஆனால், முத்துக்கிருஷ்ணன், சிரிக்காமலேயே அதனையும் ஒரு கேள்வியாக ஏற்று நிதானமாக பதில் தந்தார்.

மெல்பனில் புறநகரத்தில் வதியும் என்னைத் தேடிக்கொண்டு மோர்வல் நகரத்திற்கு வந்து கலை, இலக்கிய புதினங்கள் மட்டுமன்றி, தமிழ்நாட்டில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஈழ அகதிகள் பற்றியும் பேசினார்.  அத்துடன் ஒரு ஈழ அகதியுடன் என்னை பேசுவதற்கும் ஏற்பாடு செய்தார். அவ்வாறு மனித நேயத் தன்னார்வப் பணிகளிலும்  ஈடுபட்டுவரும் முத்துக்கிருஷ்ணன், மெல்பன் வாசகர் வட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் சிவா – சாந்தி தம்பதியருக்கே  தூங்கா நகர் நினைவுகள் நூலை சமர்ப்பித்துள்ளார்.

இவர்கள் மூலமே எனக்கு இந்த நூல் படிக்கக் கிடைத்தது.

மதுரையின் ஆரம்பகால வரலாற்றையும்  ஆதாரங்களுடன் பதிவு செய்து,  ஆட்சி புரிந்த  மன்னர்கள் முதல், படையெடுத்து வந்து ஆக்கிரமிப்புச் செய்தவர்கள் வரையில்,  அவர்களுக்குள் இருந்த சூழ்ச்சி, சதி, வீரம், விவேகம் பற்றியெல்லாம் விவரிக்கின்றார்.

அத்துடன் பக்கத்திற்கு பக்கம் தனக்கிருக்கும் ஆதங்கத்தையும் சொல்லிவிட்டு கடந்து செல்கிறார்.

துருக்கியின் இஸ்தான்புல், சிரியாவின் டமாஸ்கஸ் முதலான நகரங்களை சுற்றிப்பார்த்திருக்கும் முத்துக்கிருஷ்ணன்,                      “  இந்த வரலாற்று நகரங்களை அதன் பழைய தன்மை மாறாமல் அங்கேயுள்ள அரசுகள் பாதுகாக்கின்றன. அவர்களின் தெருக்கள், வரலாற்று கட்டடங்கள், பழைய பஜார்கள் என எல்லாமே ஒரு கால இயந்திரத்தில் நாம் சென்று பார்ப்பதுபோலவே கடந்த காலத்தின் வாசனையுடன் தன்மை மாறாமல் பாதுகாக்கப்படுகின்றன. நம் ஊரில் வரலாற்றுப்பூர்வமான எல்லாவற்றையும் அழித்துவிட்டு, அதன் மீது டைல்ஸையும் கிரானைட்டையும் ஒட்டுவதை நாகரீகம் என்று நினைக்கிறோம். வரலாற்றை உணர்வதில், பாதுகாப்பதில் எங்கோ ஒரு பிசகு நிகழ்ந்துள்ளது அல்லது நம் புரிதல்களின் மீது ஏதோ கறை படிந்துள்ளது.  “ என்று தனது அறச்சீற்றத்தை பக்குவமாக எடுத்துரைக்கிறார்.

இந்த வரிகள் எனது தாயகமான இலங்கைக்கும் பொருந்தும்.

பாண்டிய மன்னர்களின் கொடியாக மீன் சித்திரிக்கப்பட்டதன் கதையையும் சொல்கிறார்.  பாண்டியர்கள் முதலில் ஆட்சி செய்த இடம் கொற்கை என்பதனால், அந்தத்  துறைமுகத்தின் வழியே வணிகம் நடத்தியிருக்கிறார்கள். கடல் தங்களை வாழவைத்தமையால், மீனை தங்களின் சின்னமாக்கியிருக்கிறார்கள். கொற்கை துறைமுகம் கடற்கோளினால் சிதைந்தவுடன், பாண்டியர்கள் தங்கள் தலைநகரத்தை மதுரைக்கு மாற்றியிருக்கிறார்கள். எனினும் மீன் இலட்சினையை அவர்கள் கைவிடவில்லை என்ற சரித்திரம் தெரிகிறது.

மண் ஆசை – பெண் ஆசை – பொன் ஆசை பல மன்னர்களின் வாழ்வில் ஏற்றத்தையும் வீழ்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது என்பதையும், மதுரையில் கால் பதித்த பிறமாநில ஆக்கிரமிப்பாளர்களின் செயல்களிலிருந்து அறியப்படுகிறது.

வரலாற்றுச் சிறப்புகள் பெற்ற மதுரை மாநகர் என்றைக்கும் உறங்கவில்லை, விழித்தே இருக்கிறது  என்பதை ஆதாரங்களுடன் விவரித்துள்ள முத்துக்கிருஷ்ணன், தமது தேடலுக்கும் உழைப்பிற்கும் பக்கததுணையாகவிருந்த சிலர் பற்றியும் நன்றியோடு தனது என்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.

மதுரையிலிருந்த மன்னர்கள் முதல், அங்கே வந்த மகாத்மா காந்தியடிகள், அம்பேத்கார்  வரையிலும் பல சரித்திர முக்கியத்துவம் பெற்ற செய்திகளை திகதி வாரியாகவும் முத்துக்கிருஷ்ணன் பதிவுசெய்துள்ளார்.

அச்செய்திகளுக்கு ஆதாரமாக பல அரிய ஒளிப்படங்களையும் ஓவியங்களையும் இந்நூலில் இடம்பெறச்செய்திருப்பதன் மூலம்,  தொல்லியல், வரலாறு  முதலான துறைகளில் பல்கலைக்கழக கல்லூரி மட்டத்தில் ஆய்வுசெய்யும் மாணவர்களுக்கும் இந்நூல் சிறந்த உசாத்துணையாகத் திகழுகிறது.

29 அங்கங்களில் மதுரையின் கதையை சொல்லியிருக்கும் முத்துக்கிருஷ்ணன்,  “ மதுரையின் ஒவ்வொரு கல்லிலும் சரித்திரம் இருக்கிறது. மதுரையின் ஒவ்வொரு திருப்பத்திலும் வரலாறு பொதிந்திருக்கிறது. மதுரையின் முதியவர்கள் ஒவ்வொருவரின் நாவிலும்  வரலாற்றின் விதைகள் இருக்கின்றன.  “ எனச்சொல்கிறார்.

ஆம், அந்த விதைகள் விருட்சமாகி மேலும் பல கதைகளை எதிர்காலத்தில் சொல்லும்.

முத்துக்கிருஷ்ணன் அவர்களுக்கு எமது வாழ்த்துக்கள்.

letchumananm@gmail.com

Series Navigationஇரண்டாம் தொப்பூழ்க் கொடி சொல்வனம் இணையப் பத்திரிகையின் 287 ஆம் இதழ் வெளியீடு- அறிக்கை
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *