பத்து நாட்கள்

author
3
0 minutes, 13 seconds Read
This entry is part 32 of 34 in the series 6 ஜனவரி 2013

mushar

முஷாரஃப் முதுநபீன் (முஷாஃபி)

கார்த்திக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அவனது கல்லூரியின் கல்விச் சுற்றுலா அடுத்த நாள் தொடங்குகிறது. பத்துநாள் சுற்றுலா. எல்லே நீர்வீழ்ச்சி, ஹக்கல பூந்தோட்டம், காலிமுகத்திடல், பேராதனைப் பூங்கா, யாழ் நூலகசாலை என இலங்கையின் முக்கியமான இடங்களுக்கெல்லாம் பயனிக்கவிருக்கிறது சுற்றுலா குழு. சுமார் 2 மாதங்களாகவே சுற்றுலா பற்றிய பேச்சுக்கள் கல்லூரியைஆக்கிரமித்திருந்தன. பெயர் பதிவுசெய்தல்,பணம் அறவிடுதல், சுற்றுலாவுக்குத் தேவையான பொருட்களைச் சேகரித்தல், கையேடுகளை பிரசுரித்து மாணவர்களுக்கு சுற்றுலா பற்றி அறிவூட்டல் என சுற்றுலாவுக்கு அனைவருமே தயாராகி வந்தனர். நாளை காலை சரியாக 7 மணிக்கு கல்லூரியிலிருந்து சுற்றுலாப் பேருந்து புறப்படுவதாகத் திட்டம். மாணவர்களும், ஆசிரியர்களும் 6 மணிக்கு முன்பதாகவே வருமாறு பணிக்கப்பட்டிருந்தனர்.

 

பத்துநாள் சுற்றுலா என்பதால் அதிக பணம் செலுத்த வேண்டியிருந்தது. கார்த்திக்கு அது முடியாது. ஏனெனில் அவனது தந்தையின் இறப்பிற்குப் பின்னர் அவனது மாமாவின் தயவில்தான் படித்துவந்தான். மாதாந்தம் படிப்பு மற்றும் ஏனைய செலவுகளுக்கே மாமாவிடம் அதிகமான பணம் வாங்குவதால்,சுற்றுலாவுக்கும் பணம் கேட்பது அவ்வளவு நல்லதல்ல என்பதால் கார்த்தி சுற்றுலாவைப் புறக்கணித்திருந்தான். இரண்டு நாட்களுக்கு முன்புவரை கார்த்திக்கு சுற்றுலா செல்லவில்லையென்ற கவலையிருக்கவில்லை. ஆனால் கடந்த இரண்டு நாட்களாக அவனது உள்ளம் எப்படியாவது தானும் சுற்றலாவுக்குச் செல்லவேண்டும் எனத் துடித்தது. இதற்குக் காரணம் ஸ்வேதா. அவளும் கார்த்தியின் வகுப்பு மாணவிதான். இந்தக் கல்லூரிக்கு வந்து சேர்ந்த ஆறு மாதத்துல கார்த்தி ஒருநாள் கூட கல்லூரியை’கட்’அடிக்காமைக்கு ஸ்வேதாதான் காரணம். ஸ்வேதா பூமி பார்த்த பெண். அதிகம் பேசமாட்டாள். அதிலும் ஆண்கள் என்றால் சொல்லவே வேண்டாம். அந்தக் கல்லூரியிலே முழு நீளக்கை வைத்த சுடிதார் அணியும் ஒரே பெண் ஸ்வேதாதான். நேர்த்தியாக ஆடை அணிந்திருப்பாள். யாரையும் நோகமாட்டாள். எல்லோருடனும் அன்பாகப் பழகுவாள். அவள் சிரிக்கும் போது அவளது கன்னத்தில் விழும் குழிக்குள் விழுந்த பலருள் கார்த்தியும் ஒருவன். அவளைப் பார்ப்பதற்கென்றே வேண்டுமென்று அவள் முன்னால் வருவது, அவள் கல்லூரிக்குச் செல்லும் வழியாலேயே அவனும் செல்வது, அவள் அமரும் கதிரைக்கு நேரே அவனும் சென்று அமர்வது இப்படியாக அவளையும் தன் பக்கம் ஈர்த்துக் கொள்வதற்காக இவன் படாதபாடுபட்டிருப்பான். இதில் எதுவும் பலனளிக்கவில்லை. ஆண்கள், பெண்கள் எல்லோருடனும் புன்னகைக்கும் அதே புன்னகைதான் கார்த்திக்கும் ஸ்தோவிடமிருந்து பதிலாகக் கிடைக்கும். அந்தப் புன்னகை வெகு சாதாரணமானதுதான் என்று அவனுக்குத் தெரிந்தாலும், அதன் மூலமும் இவன் பரவசமடைந்திருக்கிறான். சில சந்தர்ப்பங்களில் ஸ்வேதாவின் புன்னகையை தனக்குச் சாதகமான புன்னகையாகவும், அவள் தன்னிடம் வந்து காதலைச் சொல்வதாகவும், தான் காற்றில் பறப்பதுபோலவும் கனவுகண்டிருக்கின்றான். ஆனால் இரண்டுநாட்களுக்கு முன்பு வரையில் ஸ்வேதா இவனுடன் ஒருவார்த்தை கூட பேசியிருக்கமாட்டாள். இரண்டுநாட்களுக்கு முன்பு ஸ்வேதா இவனிடம் வந்து பேசிய போது கார்த்திக்கு ஏற்பட்ட மன அதிர்வை எந்த ரிச்டர் கருவியாலும் அளக்கமுடியாது. அது ஒரு பரவச அனுபவம் அவனுக்கு. இன்னும் அதிக வருடங்கள் சந்தோசமாக இவன் வாழ்வதற்கு அவளுடன் உரையாடிய அந்த ஒரு சில வினாடிகளின் நினைவே போதுமென்றிருந்தது…

 

அன்று காலை விஞ்ஞான கூடத்திலிருந்து எல்லோரும் பரிசோதனையை முடித்துக் கொண்டு வெளியில் சென்றுவிட்டனர். கார்த்தி தனது பழைய குறிப்பேடுகளை சரிபார்த்தவிட்டு இறுதியாக வேகமாக வெளியேற முற்பட்ட போது அந்த அறையின் வெளிப்புறமாக கதவருகே நின்றிருந்த ஸ்வேதாவுடன் மோதப்பார்த்தான். எதிர்பாராத இந்த சம்பவத்தால் நிலை குலைந்து போன கார்த்தி ஸ்வேதாவிடம் ‘சொரி’ சொன்னான். அவளோ சற்றும் கலக்கமடையாதவளாக ‘இட்ஸ்ஓகே.. நீங்க ட்ரிப் இற்கு வர்ரீங்கதானே…நீங்கமட்டும் வர்ரதில்லன்னு சொன்னாங்க…உண்மையா? எனக் கேட்டாள். கார்த்திக்கு அவளிடம் என்ன சொல்வதென்றே புரியவில்லை. அவளுடன் பேசுவதை நினைத்து சந்தோசப்படமுடியாதபடி அவளது கேள்வி கனத்திருந்தது அவனது மண்டைக்குள். ஆ..இல்ல வீட்டில முக்கியமான ஒரு விஸேசம். கட்டாயம் ஊருக்குபோகனும். அதுதான் வரமுடியல்ல’ன்னு சொல்லி முடித்தான்.. ஸ்வேதா சோர்வாக தயக்கத்துடன்.. அப்படியா ‘சொரி’சும்மா கேட்டேன். என்று சொல்லிவிட்டு அவ்விடத்திலிருந்து சென்றுவிட்டாள். கார்த்திக்கு நடந்தது கனவா? நனவா என்று புரியல்ல.. தன்னைத்தான் கிள்ளிப்பார்த்தான். ‘ஸ்வேதா தன்னொடு பேசினாளா? நம்பவே முடியல்ல. இந்தக் கல்லூரிக்கு வந்த 6 மாதத்துல முதன் முதலா என் கூட பேசியிருக்கின்றாள். இல்ல..இல்ல முதன்முதல்ல ஒரு ஆண் கூட பேசியிருக்கிறாள். ஹையோ…ஒருவேளை அவளும் என்ன லவ் பண்றாளோ’ இல்ல…நம்ம பெட்ஜ்லயே நாம மட்டும்தான் டூர் போகல்ல எங்கிறதால, நமக்கிட்ட காசு இல்லன்னு அறிஞ்சு அனுதாபத்துல பேசுறாளோ…ச்சே.. சே.. இருக்காது நமக்கிட்ட காசு இல்லாதது அவளுக்கு எப்படித் தெரியும். இங்கதான எல்லாரும் நம்மள பெரிய பணக்காரனா நெனச்சிட்டிருக்காங்க. மாமா காலேஜுக்கு’பென்ஸ்’கார்ல வந்ததப் பார்த்து எல்லோரும் நம்மள ரொம்பப் பணக்காரன் என்றுதானேநெனக்கிறாய்ங்க.. அவர் தான் படிப்பிக்கிறார்.. மத்தப்படி நானோ எங்க குடும்பமோ பணக்காரங்க கெடயாதுங்கிறது இவங்களுக்குத் தெரியாதே…அது இல்லாம…எத்தனையோ’கேர்ள்ஸ்’வகுப்புல இருக்கும் போது ஸ்வேதாமட்டும் ஏன் நமக்கிட்டகேட்கனும். ஐயோ மண்டவெடிச்சிரும் போல இருக்கே’எனகார்த்தி தனக்குள் புலம்பினான். பிசிக்ஸ் பாடத்துல கூட அவன் இப்படிக் குழம்பியது கிடையாது.

 

அன்று வகுப்பில் எந்தப் பாடமும் அவனுக்கு காதைத் தாண்டி உள்ளே செல்லவில்லை. சந்தோசமும், குழப்பமும் கலந்து அன்றைய பொழுது அவனுக்கு கழிந்தது. இரவு முழுக்க தூக்கமில்லை. காலையில் எழுந்தான். எப்பாடுபட்டும் தானும் சுற்றுலா செல்வதென்று தீர்மானித்தான். அவளைப் பிரிந்து பத்துநாள் இருக்கமுடியாது. தானும் சுற்றுலா சென்றால் ஒரு வேளை ஸ்வேதாவுடன் பழகும் வாயப்பு ஏற்படலாம். சிலநேரம் ஸ்வேதாவிடம் இருந்து அவளது விருப்பத்தையும் அறிந்துகொள்ளலாம் என்று ஆசைப்பட்டான். முதலில் பணத்தை ஆயத்தம் செய்யவேண்டும். அதற்காக மாமாவிடம் கேட்கத் தயங்கினான். தன் அம்மாவிற்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி சுற்றுலா பற்றியும் தான் மட்டும் செல்லவில்லை என்றும் சொல்லி பணம் இருக்கா எனக் கேட்டான். அம்மாவிற்கோ கார்த்தியின் அப்பா ஞாபகம் வர’உங்கஅப்பா இருந்திருந்தா இப்படி ஒரு நிலமை வந்திருக்குமா? அவர் எப்படியாவது உனக்கு பணத்தை தயார் பண்ணித் தந்திருப்பார். அவர்தான் நம்மள எல்லாம் விட்டுட்டு போயிட்டாரே’ன்னு புலம்பினாள். கார்த்திக்கு ஏன்டா கேட்டோம்னு ஆகிடுச்சு. ஒருவாறாக தன்னையும் சுதாரித்துக் கொண்டு அம்மாவை ஆறுதல் படுத்தினான். ‘உங்க மாமா பணம் கேட்டா நிச்சயம் தருவார். ஆனா எனக்கு ஒரு மாதிரியாக இருக்கு. ஒங்க அப்பா செத்ததுக்கப்புறம் இந்தக் குடும்பத்துக்காக நெறைய செலவு பண்ணிட்டிருக்கான். அவன் நல்லா இருக்கனும். தம்பிதான் எங்கிறதுக்காக திரும்பத்திரும்ப அவனுக்கு கஸ்டம் கொடுக்க எனக்கு விருப்பமில்ல’என கார்த்தியின் அம்மா சொன்னாள். ‘சரிம்மா அடுத்த முறை’ட்ரிப்’போகலாம். பரவாயில்லம்மா. நீங்க கவலப்படாதீங்க’ன்னு அம்மாவை சமாதானப் படுத்திவிட்டு அழைப்பைத் துண்டித்தான் கார்த்தி.

 

அவனுள் முகாமிட்டிருந்த ஸ்வேதாவின் நினைவு குறைந்து குடும்பநிலை, படித்தேயாக வேண்டிய கட்டாயம், எப்படியாவது படித்துப் பெரிய ஆளாக வேண்டியதன் அவசியம் போன்றன அவனுள் வளரத் தொடங்கியது. பொறுப்பின்றி நடந்து கொள்கிறோமோவென்ற கவலை அவனுக்குள் தொற்றிக் கொண்டது. ஸ்வேதா சாதாரணமாகக் கேட்டதை வீணாகப் பெரிதுபடுத்துகிறோமோவென அஞ்சினான். பெரிதும் சோர்ந்துபோய் மேசை மீதிருந்த கொப்பியை கையிலெடுத்தான். இது ஒன்றும் புதிதல்ல அவனுக்கு. எப்பவாவது குடும்பப் பொறுப்பை உணர நேர்கையில் கொப்பியை எடுப்பதும் அடுத்த நாளிலிருந்து தீவிரமாகபப் படிப்பதாக தீர்மானம் எடுப்பதும், அதற்காக புதிய நேர அட்டவனையைப் போடுவதும் அவனுக்கு வாடிக்கையான விடயம்தான். இவ்வாறு அவனது ஒவ்வொரு கொப்பியிலும் நிறைய நேர அட்டவணைகள் இருக்கும் ஒவ்வொன்றிலும் என்னென்ன திகதிக்குள் எந்த அலகைப் படித்து முடிப்பது என விபரமாக எழுதியிருப்பான். அவ்வாறு எழுதப்பட்ட காலத்திற்குள் ஒரு அலகையேனும் படித்து முடித்திருக்கமாட்டான் என்பது வேறு விடயம்.

 

சோகத்தோடு புதிய நேரசூசியை எழுதத் தொடங்கினான். அப்போது தொலைபேசி மணி ஒலித்தது. எதிர் முனையில் தனது மாமா. கார்த்தி பதற்றத்துடன், ஹலோ மாமா… ஹலோ..என்ன கார்த்தி எப்படி இருக்க ம்..நல்லா இருக்கன் மாமா என்ன சோகமா பேசுற… இல்லையே ..ஒன்னுமில்ல மாமா.. ஓங்க காலேஜ்ல ட்ரிப் போறதாக கேள்விப்பட்டேன். எப்ப போறாங்க? (கார்த்திஅதிர்ச்சியுடன்) நாளைக்கு மாமா.. நாளைக்கா? நீசொல்லவேயில்லையே? நீபெயர் கொடுக்கலயா? இல்லமாமா.. ஏன்? என்னத்துக்கு சும்மா காச வீணாக்குவானென்றுதான். என்னவீணாக்குறது. லூசுமாதிரிப் பேசுற? படிப்போடுசேர்த்து இந்தமாதிரி ட்ரிப் ,அதர் எக்டிவிடிஸ் எல்லாம் சேர்ந்து இருக்கிறதாலதான் காலேஜ்ல படிக்கிறோம். தனியே படிப்பு மட்டும்னா டுட்டோரியல்ல படிக்கலாமே… யார் யார் போகல்ல? நான் மட்டும்தான் மாமா? என்னது நீ மட்டுமா போகல்ல. காலேஜ்ல எல்லோரும் என்ன நெனச்சிருப்பாங்க? ச்சீ.. இப்ப காசு கொணடு வந்து தந்தா நாளைக்கு நீயும் அவங்களோட போகலாமா? (என மாமா கேட்க..சிறிதும் தாமதமின்றி கார்த்தி சொன்னான்) ஆமா மாமா…ஆமா மாமா… சரிசரி ஒங்க மாஸ்டர்கிட்ட நான் பேசுறன். பணத்துக்கும் ஏற்பாடு பன்றன் போயிட்டுவா என்று சொல்லி மாமா அழைப்பைத் துண்டித்தார்.

 

கார்த்திக்குத் தலை கால் புரியவில்லை. பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல இருந்தது அவனுக்கு. அவனடைந்த சந்தோசத்துக்கு அளவே இல்லை. எகிறிக் குதிக்க வேண்டும் போல இருந்தது அவனுக்கு. மாமாவின் பெருந்தன்மையை நினைத்து சந்தோசப்பட்டான். வேகமாக மாமாவிற்கு ‘தேங்ஸ்’ என குறுஞ்செய்தி அனுப்பினான். அடுத்த நாள் ஸ்வேதாவுடன் தானும் சுற்றுலாப் போகப் போவதை எண்ணி சந்தோசப்பட்டான். தான் புதிதாகப் போட்டிருந்த நேர சூசியை நக்கலாக ஒரு பார்வை பார்த்துவிட்டு கொப்பியை மூடி வைத்தான். தனது ஆடைகளை ஒவ்வொன்றாகத் தெரிவு செய்தான். தனது புத்தம் புதிய பயணப் பைக்குள் அழகாக அடுக்கி வைத்தான். தன்னிடமிருந்த இரண்டு ‘சென்ட்’ போத்தலையும் உள்ளே வைக்கு முன் ஒரு முறை தனது உடம்பில் அடித்து அதன் நறுமணத்தை சுவாசித்துக் கொண்டான். எல்லோரும் தான் வர மாட்டேன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். நூளை எல்லோருக்கும் அதிர்ச்சியைக் கொடுப்பதற்காய் இறுதி நேரத்தில் கல்லூரி பஸ் இல் ஏறுவதென தீர்மானித்தான். ஸ்வேதா நிச்சயம் சந்தோசப்படுவாள். தன் மேல் விருப்பம் இல்லாவிட்டாலும் கூட வரமாட்டேன்னு சொன்னீங்க? என்று கேட்பதற்காகவேனும் தன்னுடன் பேசுவாள் என தனக்குள் தீர்மானித்தான். இதை வைத்தே வரும் பத்து நாளும் ஸ்தோவுடன் பேசிப் பழகி அவள் மனதில் நங்கூரமிட்டு அமர்ந்து கொள்ள வேண்டும் எனத் திட்டம் தீட்டினான். அன்று இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை அவனுக்கு. ஆனால் தூங்காமலே கனவு கண்டு கொண்டிருந்தான். அதில் ஸ்வேதா தன்னைப் பார்த்து சந்தோசப்படுவது போலவும் தன்னிடம் விசாரிப்பது போலவும், பத்து நாட்களும் ஒன்றாகச் சுற்றுவது போலவும், அவளிடம் இவன் ‘ஐ லவ் யூ’ சொல்வது போலவும், பதிலுக்கு அவளும் சொல்வதாகவும்… அப்பப்பா அவன் கனவு தொடர் நாடகங்களையே தோற்கடித்திருந்தது.

 

பொழுது விடிந்தது. அதிகமாகக் குளித்தான் அழகுற ஆடை அணிந்தான். நேரத்தோடு சென்றாள் பாதையில் வைத்தே ஸ்வேதா பார்த்து விடுவாள் என்பதால் தாமதித்தே செல்வதற்காய் நேரம் பார்த்திருந்தான். தன் நண்பர் மூலம் அன்றிரவு மாமா கொடுத்தனுப்பியிருந்த பணத்தையும் எடுத்துக் கொண்டு இறுதியாக ஒரு முறை கண்ணாடியில் தன் அழகை ரசித்துக் கொண்டு கல்லூரி நோக்கி நடக்கலானான். நேரம் 6.30 ஐ நெருங்கியிருந்தது. எல்லோரையும் 6 மணிக்கு முன் வரச்சொல்லியிருந்தாலும், தான் தாமதித்துப் போவதில் ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை என அவனுக்குத் தெரியும். கல்லூரி வாயலை அடைந்தான். அங்கே எல்லோரும் பேருந்துக்குள் முண்டியடித்துக் கொண்டு ஏறிக் கொண்டிருந்தனர். ஆண்களுக்கான பேருந்து முன்புறமாகவும், பெண்களுக்கான பேருந்து பின்புறமாகவும் நின்றிருந்தன. கார்த்தியைப் பார்த்ததும் அவனது நண்பர்கள் ஆச்சரியத்தில் விழி பிதுங்கிக் கொண்டும் விசாரித்துக் கொண்டுமிருந்தனர். கார்த்தி எல்லோருக்கும் அதிர்ச்சியையும், மகிழ்ச்சியையும் கொடுத்தமையை எண்ணி உள்ளுர பெருமைப்பட்டபோதும், அவனது கண்ணகளோ பின்னாள் நின்றிருந்த பஸ்ஸிலிருக்கும் ஸ்வேதாவைத் தேடியது. ஆண்கள் ஏறியிருந்த பஸ்ஸின் பின்புறுமாக நின்று கொண்டு பின்னாள் நிற்கும் பஸ்ஸை உற்று நோக்கினான். அங்கே தனது வகுப்புத் தோழிகளில் பலர் நின்றிருப்பதும் தன்னைப் பார்த்து கையசைப்பதும் கண்டு அவனும் பதிலுக்கு கையசைத்தான். அதிக கூட்டத்திற்குள் ஸ்வேதாவை அவனால் அடையாளம் காண முடியவில்லை. சிறிது நேரத்தில் பஸ் புறப்பட்டது. எலலோரும் சந்தோசமாக கல்லூரியில் நின்று கொண்டிருந்த ஏனையவர்களுக்கு கையசைத்தவாறு சென்றனர். கார்த்திக்கோ ‘ஸ்வேதா தன்னைப் பார்த்திருப்பாளோ, அல்லது அவளது தோழிகள் சொல்லியிருப்பார்களோ என ஒரே பதற்றமாகவே இருந்தது.

 

சுற்றுலா அட்டவணைப்படி காலை 8.30 இற்கு காலை உணவு என்றிருந்தது. எனவே இன்னும் ஒன்றரை மணி நேரத்தில் காலை உணவுக்காக இறங்கும் இடம் வந்ததும் உடனியாகச் சென்று ஸ்வேதாவைக் காண வேண்டும். அவளோடு பேச வேண்டும் எனத் துடித்தான் கார்த்தி. அவன் வாழ்க்கையிலேயே இந்த ஒன்றரை மணி நேரம்தான் அதிக நேரமாகத் தோன்றியது அவனுக்கு. சக நண்பர்களும் பேருந்தினுள் பாடுவதும், ஆடுவதுமாக இருந்தனர். கார்த்தியோ அவர்கள் எல்லோரையும் விட நன்றாகப் பாடக்கூடியவனாயினும் இப்போது அவர்களோடிணைந்து பாட முடியவில்லை அவனுக்கு. ஒரு அழகான அவஸ்தையை அவன் அனுபவித்துக் கொண்டிருந்தான். அடிக்கடி நேரத்தை சரிபார்த்துக் கொண்டான்.குறித்த நேரத்தில் காலை ஆகாரத்திற்காக பேருந்து நிறுத்தப்பட்டது. முதல் ஆளாக கார்த்தி கீழே இறங்கினான். நேராக பின்னால் வந்து நின்ற பேருந்திற்கருகே சென்று , பேருந்திலிருந்து இறங்கிக்கொண்டிருந்த ஒவ்வொருவரையும் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். அடுத்தது ஸ்வேதாவாக இருக்கும். அடுத்தது ஸ்வேதாவாக இருக்கும்னு ஒவ்வொருவராக நம்பிக்கையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் கார்த்தி…

 

ஸ்வேதாவோ…அன்றிரவு முழுவதும் தூங்காததால் தூக்கக்கலக்கத்துடன் தனது வகுப்பு ‘பென்ஜ்;’ இல் உட்கார்ந்திருந்தாள். அவளால் எப்படி அன்றிரவு தூங்கியிருக்க முடியும்? பார்வைகளால் மட்டுமே பேசிக் கொண்டிருந்த கார்த்தியோடு 10 நாட்கள் எந்தத் தொந்தரவுமில்லாமல் பேசக்கூடிய வாய்ப்பு கிடைக்குமா என்ன? எத்தனை முறை அவனோடு பேச முனைந்திருப்பாள் ஸ்வேதா. பள்ளி நண்பர்கள் நிறைந்திருக்கும் போது அந்தப் பார்வையையும் புன்னகையையும் தாண்டி அவளால் கார்த்தியுடன் பேச முடியவில்லை. தன்னைப் பார்ப்பதற்காய் கார்த்தி தன்னைச்சுற்றிச் சுற்றி வரும்போதெல்லாம் ஸ்வேதாவின் மனதிற்குள் அவ்வளவு சந்தோசம் எழும். சில சமயங்களில் கார்த்தி வருவார்னு இவள் எதிர்பார்த்து ஏமாந்ததும் உண்டு. கார்த்திக்கென்றே ஒரு டயரி வைத்திருந்தாள் ஸ்வேதா. அந்த டையரியில் கார்த்தியைப் பார்க்கும் போது ஒவ்வொரு நாளும் அவளுக்கேற்பட்ட அந்தப் பரவச உணர்வு, பார்க்காத போது அவளுக்குள் ஏற்பட்ட பரிதவிப்பு, ஒரு முறை கார்த்தியின் கையை ஆய்வு கூடக் குப்பியோடு கிழித்து இரத்தம் வழிந்ததைப் பார்த்து அன்றைய நாள் முழுக்க இவள் சாப்பிடாமல் அழுது கொண்டே இருந்தது என ஸ்தோவின் மனசு முழுவதையும் எழுத்துக்களால் நிறைத்திருந்தாள். இந்த டையரியை கார்த்தியிடம் கொடுத்து விடுவதற்காக காத்திருந்தாள் ஸ்வேதா.. சுற்றுலா செல்லாமல் தன் நண்பிகளை ஏமாற்றிவிட்டோம் என்கிற கவலை அவளுக்கிருக்கவில்லை. மாறாக கார்த்தியோடு தான் மனம் விட்டுப் பேசிப் பழகப் போகின்றோம் என்ற சந்தோசம்தான் அவளுக்குள் மிகைத்திருந்தது. அவள் மனமோ கார்த்தி கார்த்தி என பல முறை சொல்லிக் கொண்டிருந்தது. கார்த்தியுடன் கழியப் போகும் இந்தப் பத்து நாளை எண்ணி எண்ணி அவள் மனம் பூரித்துக் கொண்டிருந்தது.

 

– முஷாரஃப் முதுநபீன் (முஷாஃபி),

இலங்கை

mushafi@gmail.com

Series Navigationமணலும், (வாலிகையும்) நுரையும்! (6)காரசாரம். – பெண் சிசுக்கொலை பற்றிய விழிப்புணர்வு
author

Similar Posts

3 Comments

  1. Avatar
    Kannan says:

    நல்ல அருமையான எழுத்து நடை. முஷாஃபி அவர்களுக்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதவும்.

    இப்படிக்கு
    இரா. கண்ணன்

    1. Avatar
      Mushafi says:

      தங்களது அன்புக்கும், கருத்துக்கும் நன்றி நண்பர் இரா. கண்ணண் அவர்களே. உங்களது வரவேற்பு உற்சாகத்தைத் தருகிறது.

      இப்படிக்கு
      முஷாஃபி

  2. Avatar
    ஜெயகாந்த். க says:

    அடுத்த கட்டத்துக்கு மனதை எடுத்து செல்லும் கதையின் முடிவு. சம்பவத்தை விவரிக்கும் எLத்தாற்றலுடன் நன்றாகவே கதை நகர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *