பயணங்கள்

This entry is part 17 of 41 in the series 7 ஆகஸ்ட் 2011

கடுமையான டிராபிக் ஜாமில் ஹனீஸ். எப்படியும் பள்ளிகூடத்தை சென்றடைய குறைந்தது ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆகிவிடும். +2 கணித தேர்வு இன்னும் 10 நிமிடத்தில் ஆரம்பித்து விடும்.பாதையில் விபத்தா? மந்திரி வருகின்றாரா? என்ன எளவோ எதனால் இத்தனை தாமதம். எந்த வாகனமும் ஒரு அடி கூட நகரவில்லை. என்ன செய்வது என்றே புரியவில்லை.சீக்கிரம் பள்ளிக் கூடம் போவனும் “யா அல்லாஹ் …யாஅல்லாஹ் எனக்கு கருணை செய் ரப்பே” பரிதவித்தான் ஹனீஸ்.
000
ஹனீஸ் +2 வின் முதல் வருடம் சேர்ந்த போது அவனது முஸ்லிம் நண்பர்களில் அவனைத் தவிர அனைவரும் “பத்தாவுதுக்கு மேலே படிக்கிறது அவுட் ஆஃப் பேஷன்டா” ன்னு சம்பாதிக்க சவுதிக்கு சென்று விட்டார்கள். அவன் தெருவில் அதிகம் படித்தவர் அவன் வாப்பா முஸ்தஃபா தான். PUC வரை படித்தவர் . ஹனீஸின் தந்தை முஸ்தஃபா வெளிநாட்டில் வேலை பார்த்தவர். சிக்ரெட்டை தவிர எந்த கெட்ட பழக்கமும் இல்லாத நல்ல மனிதர்.ஊரில் குடும்பம் இருக்க வேலை முடிந்த தனிமையில் சிக்ரெட்டுன் புகைந்தவர். ஹார்ட அட்டாக் வந்து சபுரை முடித்துக் கொண்டு ஊரோடு வந்து சிறியதாக ஒரு கடை வைத்திருந்ததார். இரண்டு தங்கைகள். தாய், தந்தை, ஹனீஸ் என்ற ஐவர் குடும்பத்திற்கு அந்த சின்ன கடை வருமானம் சிரமமாய் தான் இருந்தது. ஆனாலும் அவன் படிக்க ஆசை பட்ட போது, “நீயாவது நம்ப குடும்பத்துல நல்லா படி ஹனீஸு. நல்லா படிச்சு உள்ளூர்லேயே நல்ல வேலைக்கு வாடான்னு”ன்னு ஹனீஸை ஊக்குவித்தவர் அவர்தான். குடும்பமே அவன் நன்றாக படிக்க எந்த கஷ்டத்தையும் தாங்கிக் கொள்ள முன் வந்தது. ஹனீஸ் +2 வில் மிகவும் நன்றாக படித்தான். முதல் வருடத்தில் பள்ளியிலேயே அதிக மதிப்பெண் வாங்கியிருந்தான். “துலுக்கனா இருந்துகிட்டு எப்புடி மாப்புளே நீ இவ்வளவு நல்லா படிக்கிறே” ன்னு அவனது நெருங்கிய நண்பன் மாணிக்கம் கேட்ட போது தமிழ் கட்டுரை போட்டி, பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி என எல்லாவற்றிலும் வெளுத்து வாங்கும் பச்சை தமிழனான தன்னை துலுக்கன்னு சொன்னதையும் மறந்து சிரித்தான் ஹனீஸ். ஹனீஸ் படிப்பில் மட்டுமல்ல அரட்டையிலும் முதல்வன். பொழுதெல்லாம் தெருவில் விளையாட்டு, அரட்டை என இருப்பவன் காலையில் வெகு சீக்கிரம் எழுந்து படித்து ஈடுகட்டி விடுவான். வெற்றியும், மகிழ்வுமாய் சென்ற வாழ்வின் திசை மாற்றிய அந்த நாள்….
000
அரைமணி நேரமாகியும் டிராபிக் ஜாம் துளியும் குறையவில்லை. ஹனீஸின் டென்சன் அதிகரித்தது.
அவன் பக்கத்து வீட்டில் தான் தங்கியிருந்தார் கணித ஆசிரியர் நடராஜன் சார். பள்ளிக்கு கிளம்பும் போது “ஹனீஸு எப்படியும் செண்டம் அடிச்சுடனும்” என்ற நடராஜனிடம், “டெஃபனெட்டா சார்” என்றான் உறுதியான நம்பிக்கையுடன்.எவ்வளவு சிரமப்பட்டு படித்தது. இந்த டிராபிக் ஜாமால் எல்லாம் வீணாயிடுச்சே….. நெஞ்சே வெடித்து விடும் போல் இருந்தது. ‘யாராவது வான வழியாக ஹெலிக்காப்டரில் தூக்கி சென்று பள்ளியில் விட்டு விட மாட்டார்களா? யா அல்லாஹ்’ பதைபதைத்து நின்றான். தூரத்தில் ஹெலிகாப்டரின் ஓசை கேட்டது. பிரம்மையா?
“என்னங்க சுப்ஹ் (அதிகாலை தொழுகை) முடிய இன்னும் அரை மணி நேரம் தான் இருக்கு எழுந்திரிங்க” என ஹனீஸை உசுப்பி எழுப்பினாள் ரஹ்மத். ஹனீஸின் மனைவி.
“ஹெலிகாப்டர் வந்துடுச்சா?” ன்னு கேட்டவணணம் முழித்தவனிடம், “மனாம் (கனவு) கண்டீங்களா?”ன்னு சிரித்தாள் ரஹ்மத்.
‘கனவா?’, ஹனீஸ் பெருமூச்சுடன் புரண்டு படுத்தான். ஆசைகள் கனவாய் போன அந்த நாள்..
+2 இரண்டாம் வருடம் தொடங்கி ஒரு வாரம் தான் இருக்கும் இரண்டாவதாக வந்த ஹார்ட் அட்டாக்கில் மீளாது கண் மூடி விட்டார் ஹனீஸின் தந்தை.
“ஒரு கதவ அடச்ச அல்லாஹ் ஒன்பது கதவை தெறப்பான் கவலை படாதே”ன்னு மையத்துக்கு வந்த எதிர் வீட்டு மாமா சொன்னார். அவர் சொன்ன படி சவுதியில் வேலை என்ற கதவு திறந்தது. ஆனால் தந்தையுடன் கல்வி போனது.
இருபது வருட சவுதி வாழ்க்கையில் பாலைவன வெப்ப மணலில் வெந்து தணிந்த ஆசைகளை கொன்று புதைத்து, கடுமையாக உழைத்து தங்கச்சிகளை கட்டிக் கொடுத்து, தாமதமாக தான் திருமணம் முடித்த ஹனீஸ், இன்று மேனேஜர். சென்ற வருடம் முதல் பிள்ளைகள் சவுதியிலேயே படிக்க மகிழ்ச்சியானது வாலிப வயதை கடந்த பின் வாய்த்த குடும்ப வாழ்க்கை. இருபது வருட உழைப்பில் Freight business ஹனீஸுக்கு அத்துப்படி. ஆனாலும் நேற்று அலுவலகத்தில் அமெரிக்காவில் லாஜிஸ்டிக் பிஸினஸ் அசோஸியேசன் மேனேஜர்கள் சந்தித்து கொள்ளும் வருடாந்திர மீட்டிங்க்கு அவனுக்கு பதிலாக அஸிஸ்டெண்ட் மேனேஜர் ராகவனை தேர்ந்தெடுத்தபோது அதற்கு கம்பெனியின் மேனேஜ்மெண்ட் சொன்ன காரணம் ராகவன் MBA படித்தவன் என்பது தான். மனதின் வலிஉடல் முழுவதும் கடுத்தது. Rheumatic pain.
“எழுந்திருக்கங்கம்மா டைம் ஆச்சு இன்னும் என்ன மானாங் கண்டுகிட்டு” என்று அவன் தலைமுடியை கோதினாள் ரஹ்மத். சற்று ரிலாக்ஸான ஹனீஸ் ரஹ்மத்தை பார்த்து சிரித்தான். வெகு தூரத்தில் ஹெலிகாப்டரின் ஓசை மெலிதாய் கேட்டது.

ஒ.நூருல் அமீன்

Series Navigation“திறமான அடிப்படை வரலாறு’’ நூல் மதிப்புரைஜென் ஒரு புரிதல் பகுதி -5
author

ஒ.நூருல் அமீன்

Similar Posts

2 Comments

  1. Avatar
    sabeer says:

    பெருங்கனவை உள்ளடக்கிய சிறுகதை நல்லாருக்கு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *