பல்லக்கு

author
0 minutes, 0 seconds Read
This entry is part 15 of 25 in the series 17 மே 2015

மாதவன் ஸ்ரீரங்கம்

( பொன்னியின் செல்வனை அடியொற்றி எழுதப்பட்டது )

பல்லக்குமெல்ல ஆடியசைந்து சென்றுகொண்டிருந்தது. சுற்றிலும் தீவட்டி பிடித்த வீரர்களும் குதிரையில் தொடர்ந்தார்கள்.

பார்த்துக்கொண்டிருந்த ஆழ்வார்க்கடியான் வந்தியத்தேவனிடம் திரும்பி ஜாடை செய்தான். குதிரைகளின் குளம்பொலி குறையும்வரை காத்திருந்துவிட்டு, பிறகு மெதுவாக ஆழ்வார்க்கடியான் சொன்னான்.

“பார்த்தாயா தம்பி”?

“ஓய் வைஷ்ணவ சிகாமணியே, சித்தம் பிசகிவிட்டதா உமக்கு ? நள்ளிரவில், எந்தவித கொடிபடைகளுமின்றி பயணிக்கும் ஒரு பல்லக்கை காட்டி பார்த்தாயா என்று கேட்டால் என்னத்தை சொல்வது ” ?

ஆழ்வார்க்கடியான் வந்தியத்தேவனையே சற்றுநேரம் உற்றுப்பார்த்தான்.

“என்னய்யா என் முகத்தை அப்படிப்பார்க்கின்றீர். எனக்கு ஏதும் பெண்பார்க்கப்போகின்றீரா” ?

” அது இல்லையப்பா. முதன்முறையாக நாம் சந்தித்துக்கொண்டது நினைவிற்கு வந்தது அடியேனுக்கு”

“அதற்கென்ன வந்தது இப்பொழுது ? இதைச்சொல்லத்தான் மிகமுக்கியமான செய்தியென்று இந்த காட்டிற்குள் அழைத்துவந்தீரா”?

“இல்லை தம்பி இல்லை. அன்று போலவே இன்றும் இருக்கின்றாயே என்றுதான் யோசிக்கின்றேன். ராஜாங்க விவகாரத்தில் இருப்பவர்களுக்கு பார்வையும் செவிகளும் மனமும் மிகக் கூர்மையாம இருக்கவேணும் அப்பனே”.

வந்தியத்தேவன் சில நொடிகள் எதுவும் பேசாமலிருந்தான். இந்த வைஷ்ணவன் ஏதோ விஷயத்தோடுதான் இங்கு அழைத்து வந்திருக்கிறான்.

சமீபத்தில் நிகழ்ந்த ஆதித்த கரிகாலரின் துர்மரணத்திற்குப் பிறகு பித்தனைப்போல சுற்றிக்கொண்டிருந்தான் வந்தியத்தேவன்.

கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் அன்று என்ன நிகழ்ந்ததென்றே இறுதிவரை தெரியவில்லை. இளவரசர் துர்மரணத்திற்கு தனது கவனக்குறைவுதான் காரணமென்று நம்பினான்.

படுபாதகி நந்தினி நினைத்தபடியே தனது சபதத்தை நிறைவேற்றிக்கொண்டாளே.

இளவரசி குந்தவைத்தேவியை எந்த முகத்துடன் சந்திப்பது.இனி ?

அந்த குடந்தை ஜோதிடர் முன்பே எச்சரித்தாரே.

என்றெல்லாம் மருகியபடி மனம்போகும் போக்கில் சுற்றிக்கொண்டிருந்தான்.

கிடைத்த இடத்தில் உணவருந்தி, கோவில் பிரகாரத்தில் படுத்துக்கொள்வதுமாக ஊர் ஊராக அலைந்து பொழுதைக் கழித்துக்கொண்டிருந்தான்.

அப்படித்தான் இரண்டுநாள் முன்பு, அருகில் ஏதோ ரகளை நடக்கும் சத்தம் கேட்டு சென்று பார்த்தான்,

அங்கே முன்குடுமி வைஷ்ணவன் ஆழ்வார்க்கடியான்தான் ஒரு சிவனடியாரோடு சொல்யுத்தம் நடத்திக்கொண்டிருந்தார்.

உண்மையில் வந்தியத்தேவனுக்கு அவனை சந்தித்ததில் பேருவகை பொங்கியது. ஓடிச்சென்று கட்டிக்கொண்டான்.

இருவரும் தனிமைப்பட்டதும். ஆழ்வார்க்கடியான் கேட்டான்

“ஏனப்பா எங்களையெல்லாம் பாபிகளென்று முடிவுசெய்துவிட்டாயா ? அல்லது பவுத்த சமயத்தில் சேர்ந்துகொள்வதாக உத்தேசமா ? இப்படி சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பி வந்துவிட்டாய்”?

“தங்களுக்கு தெரியாதது என்ன அய்யா. உற்ற சகோதரனைப் போல அல்லவா என்னை வைத்துக்கொண்டிருந்தார் இளவரசர். அடியேனின் பிழையால் அல்லவா கரிகாலர் மரணமெய்தினார்”?

“அடடா அது துக்ககரமான விஷயம்தான் தம்பி. ஆனால் ஆண்டாண்டு அழுதுபுரண்டாலும் மாண்டோர் வருவதில்லை என்னும் வழக்கை நீ கேட்டதில்லையா அப்பனே. வீரபுருஷர்கள் எப்பொழுதும் மறைவதில்லை தம்பி”

“புரிகின்றது சுவாமி. அவர்கள் என்றும் நிலைத்திருக்கும் வீரசுவர்க்கத்தை அடைவார்கள்”

“ஆமாம் அப்பா ஆமாம். காரணங்களின்றி காரியங்களில்லை. நாம் எல்லோருமே ஏதேதோ காரியங்கள் செய்வதற்கென்றே பிறப்பெடுத்திருக்கின்றோம்”.

ஆழ்வார்க்கடியான் அமைதியாக இருந்தான். பிறகு,

“இந்தா தம்பி. குந்தவைப்பிராட்டியார் இந்த ஓலையை உன்னிடம் சேர்ப்பிக்கச்சொன்னார்” என்று ஒரு ஓலையை வந்தியத்தேவனிடம் கொடுத்தான்.

ஆவலுடன் வாங்கி அந்த ஓலையைப்படித்துப்பார்த்தான்.

“வாணர்குலத்து வீரரே,
தடயமின்றி காணாமல்போவதுதான் தங்கள் குலத்து வழக்கமா ? தங்கள் முன்னோர்கள் மன்னாதிமன்னர்களுக்கெல்லாம் பரிசில் வழங்கியதாக சொன்ன பாடல் உண்மையென்றால், இந்த ஏழை இளவரசிக்கு தாங்கள் தரும் பரிசாக, இந்த ஓலை கொண்டுவரும் ஆழ்வார்க்கடியான் திருமலைநம்பியோடு திரும்பி வாருங்கள். வீர புருஷர்கள் மரணிப்பதில்லை. மறைவதுமில்லை”..

“படித்துவிட்டாயா அப்பா ? நாம் கிளம்பலாமா? கோடிக்கரைக்கு இன்னும் இரண்டுநாள் பயணிக்கவேண்டும்”

“என்ன கோடிக்கரைக்கா? சிறிய பிராட்டியார் அங்கேயா இருக்கிறார் “?

“ஏன் தம்பி குந்தவைத்தேவி இருந்தால்தான் வருவேன் என்றுகூட சொல்லுவாயோ”

வந்தியத்தேவன் சங்கடத்தில் நெளிந்தான். இந்த வைஷ்ணவனிடம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.

“கோடிக்கரையில் சில முக்கியமான விஷயங்கள் இருக்கின்றது தம்பி. நீ அவசியம் வரவேண்டும். ஒரு ஐந்தாறு தினங்கள் மட்டும் பொறுத்துக்கொள் அப்பனே. உன்னை இளவரசியிடம் சேர்ப்பிக்க வேண்டியது என் கடைமை”.

அப்படி எல்லாம் கூறி அழைத்துக்கொண்டுவந்து கோடிக்கரை அருகிலுள்ள ஒரு காட்டில் ஒளிந்திருந்து ஒரு பல்லக்கு செல்வதை காட்டுகின்றான். என்னவென்று கேட்டால் ராஜகாரியம் பார்வை மனம் கூர்மை என்று போதனைகள்வேறு.

அங்கிருந்து பல்லக்கு சென்றவழியில் அவர்களறியாது பின்தொடர்ந்தார்கள். வந்தியத்தேவன் ஏதோ பேசவரும்போதெல்லாம். ஆழ்வார்க்கடியான் அமைதியாக இருக்கும்படி ஜாடை செய்தான்.

சற்றுதூரத்தில் ஒரு மண்டபத்தின் அருகில் பல்லக்கு பரிவாரம் இளைப்பாறிக்கொண்டிருந்தது.

இப்போது ஆழ்வார்க்கடியான் விசித்திரமாக ஒரு காரியம் செய்தான். இருவரும் ஒளிந்து நின்றிருந்த மரத்தின் பின்னாலிருந்தபடியே,

அதிக சத்தமின்றி அடித்தொண்டையிலிருந்து ஒரு மாதிரியாக சப்தமெழுப்பினான்.

சிறிது நேரம் கழித்து அந்த கூட்டத்திலிருந்து ஒரு ஆள்மட்டும் பம்மிப்பம்மி வந்தான்.

கொஞ்சதூரத்தில் அவனும் ஆழ்வார்க்கடியானும் ஏதோ ரகசியமாக பேசிக்கொண்டார்கள்.

வந்தியத்தேவன் உற்றுக்கேட்கலாமென்று கொஞ்சம் நகர்ந்தான். முழங்காலுக்குக்கீழே சுரீரென்று ஏதோ குத்தியது.

சிறிதுநேரத்திற்கெல்லாம் அவனை மயக்கம் ஆட்கொண்டது.

வந்தியத்தேவன் மறுபடி கண்விழித்தபோது அருகில் ஆழ்வார்க்கடியான் சிரித்தபடி நின்றுகொண்டிருந்தான்.

குடிப்பதற்கு கூழோ என்னவோ கலயத்திலிருந்து புகட்டிய பெண்ணின் முகம் எங்கோ பார்த்ததுபோலிருந்தது.

“என்ன தம்பி உன் முன்னோர்களெல்லாம் பார்த்துவிட்டு வந்தாயா எப்படியிருக்கிறார்கள்”?

” இது என்ன இடம் வைஷ்ணவரே ? யாருடைய குடிசை ? எனக்கு என்னவாயிற்று ?”

“அது வேறொன்றுமில்லை தம்பி. என் அப்பன் எம்பெருமான் நாராயாணன் பள்ளிகொள்ள மஞ்சமாய்படுத்திருக்கும் ஆதிசேஷனார் வழித்தோன்றலில் வந்த சர்ப்பமொன்று, உன் கால்களில் முத்தமிட்டுவிட்டு போயிருக்கின்றது. அவ்வளவுதான்”.

“என்ன சர்ப்பமா ?”

“ஆமாம் தம்பி. சாதாரண சர்ப்பமென்பதாலோ பிழைத்தாய். கடும் விஷமுள்ள சர்ப்பமாயிருந்திருந்தால் சாட்ஷாத் வைகுந்தத்திற்கே சென்றிருப்பாய்”

“பாழும் வைஷ்ணவரே
நான் உமக்கு செய்த தீங்குதான் என்ன ? அங்குதானே ஆதித்த கரிகாலர் இருப்பார் ? அவரை சந்தித்து மன்னிப்பு கேட்டிருப்பேனே. காரியத்தை கெடுத்துவிட்டீரே”

ஆழ்வார்க்கடியான் தன் கணத்த சரீரம் குலுங்கச்சிரித்தான்.

“அதற்குப்போய் பிராணனை விடுவானேன் தம்பி. இதோ அவரே இருக்கிறார். அவரிடமே கேட்டுவிடேன் உனது மன்னிப்பை”

அப்போதுதான் ஆதித்த கரிகாலர் முன்னால் வந்தார். அவனருகே அமர்ந்துகொண்டு அணைத்துக்கொண்டார்.

“எப்படியிருக்கிறாய் வந்தியத்தேவா”?

வந்தியத்தேவன் வாயடைத்துக் கிடந்தான்.

“இளவரசே தாங்கள்.. தாங்கள்.”

“பார்த்தாயா திருமலை. நான் இறந்துவிட்டேனா இல்லையா என்றுகூட கேட்க மனம் வரவில்லை என் நண்பனுக்கு. நான் நன்றாக இருக்கிறேன் நண்பா. மிகுந்த மகிழ்வோடு இருக்கிறேன்”

வந்தியத்தேவன் புரியாமல் முழித்தபடியிருக்க கரிகாலர் தொடர்ந்தார்.

“இது வெகுகாலமாக உன்னிடம் கூட சொல்லமுடியவில்லை வந்தியத்தேவா. நந்தினிக்கும் எனக்குமான காதலை என் தந்தையோ தேசமோ ஏற்றுக்கொள்ளாது. சோழ சிம்மாசனத்தில் சித்தப்பா மதுராந்தகரோ என் இளவல் அருண்மொழித்தேவனோ அமர்ந்துகொள்ளட்டும். எத்தனை போர்கள் எத்தனை உயிர்கள். போதும்நண்பா போதும். மிகப்பெரிய குற்றவுணர்வுகள் ஏதுமற்ற ஒரு எளிய மனிதனாக வாழ்ந்தாலே போதுமென்றுதான் அன்று கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் ஒரு நாடகத்தை.அரங்கேற்றினேன். இவையெல்லாம் என் உயிரிலும் மேலான குந்தவைக்கோ அருண்மொழிக்கோ கூட தெரியாது நண்பா. இந்த வைஷ்ணவனுக்கும் உனக்கும் தவிர”.

மெல்ல நடந்துவந்து நெற்றியில் ஏதோ மருந்துபூசிவிட்டுப்போனபோது, நந்தினியின் முகம் குந்தவைப்பிராட்டியைவிட ஆயிரம் மடங்கு பிரகாசமாக இருந்ததாகப்பட்டது வந்தியத்தேவனுக்கு.

குந்தவையை சந்திக்கப்போகும் இன்பமான தருணத்தை நினைத்தபடியே, நான்கைந்து நாட்களுக்குப்பிறகு திரும்பிச்செல்கையில் ஆழ்வார்க்கடியானிடம் கேட்டான், “அதெல்லாம் சரிதான் ஓய். அன்று இரவு பல்லக்கு தூக்கிகளில் ஒருவனை சந்தித்து ஏதோ ரகசியம் பேசினீரே அது என்ன கதை வைஷ்ணவரே ?

“என்ன தம்பி இன்னுமா உனக்குத் தெரியவில்லை ? வீரத்தை விட்டுவிடலாம். மணிமகுடத்தை மண்ணில் தள்ளலாம், சிம்மாசனத்தை துறந்துவிடலாம் ஆனால் பாழ் வயிற்றை ஏதும் செய்துவிடலாகுமோ ? இளவரசரென்ன பல்லக்கு தூக்கியென்ன எல்லாம் ஒன்றே இறைவனுக்குமுன்னே”.

Series Navigationமுழுக்குதனலெட்சுமி பாஸ்கரன் கவிதைகள் ‘ பறையொலி ” தொகுப்பை முன் வைத்து…
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *