பழமொழிகளில் ‘வெட்கம்’

This entry is part 36 of 39 in the series 19 ஆகஸ்ட் 2012

முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.

E. Mail: Malar.sethu@gmail.com

உணர்ச்சிகளில் மிகவும் நுட்பமானதும் குறிப்பிடத் தகுந்ததுமாகவும் விளங்குவது வெட்கம் என்ற உணர்ச்சியாகும். செய்யத் தகாத செயல்களைச் செய்ய நேரிடுகின்றபோதோ பிறர் செய்கின்ற போதோ அவ்வாறு செய்பவர்களைப் பார்த்து,

‘‘உனக்கு வெட்கமில்லை’’

என்றோ,

‘‘நான் இதுக்காக வெட்கப்படுகிறேன்’’

என்றோ கூறுகின்றனர். வெட்கம் என்றால் என்ன? பழிபாவங்களுக்கு நாணுதலே வெட்கமுறுதல் எனும் உணர்வாகும்.

ஆனால் பெண்களுக்கே உரிய வெட்கம் என்பது போன்றதே என்றாலும் இதிலிருந்து சற்று வேறுபட்டதாக அமைந்துள்ளது. தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் விரும்பினர். இருவருக்கும் திருமணம் நடந்தேறியது. முதலிரவு அன்று தலைவனும் தலைவியும் தனித்து விடப்படுகின்றனர். தலைவிதன் முகத்தைப் புத்தம் புதுச் சேலையால் முக்காடிட்டு மறைத்துக் கொண்டிருக்கிறாள். அதனைக் கண்ட தலைவன் தலைவியின் முந்தானையைப் பிடித்து இழுக்க அவளோ வேறுபக்கம் திரப்பிக் கொண்டாள். இதனை,

‘‘ஒய்யென நாணினள்’’

என்று அகநானூற்றுப் பாடல் காட்சிப்படுத்துகிறது.

இது போன்ற வெட்கம்(நாணம்) என்பது முந்தையதிலிருந்து வேறுபட்டிருப்பதை அகநானூற்றுப்பாடல் தெளிவாக விளக்கியிருப்பது நோக்கத்தக்கது. வெட்கமாகிய இவ்வுணர்வைப் பண்பாட்டின் அடிப்படையில் பழமொழிகள் விளக்கி இருப்பது சிற்பிற்குரியதாக அமைந்துள்ளது.

ஆசையும் வெட்கமும்

ஆசை அறிவை அழிக்கும். ஆக்கத்தைக் கெடுக்கும். அன்பையும் முறிக்கும் தன்மை கொண்டது. அதிலும் பேராசைப்படுபவன் எதையும் கருத்தில் கொண்டு நடக்கமாட்டான். அவன் தனது எண்ணம் முழுமையாக நிறைவேறுவதையே குறிப்பாகக் கொண்டிருப்பான். ஆசையிலும் பொன்னாசை, பெண்ணாசை, மண்ணாசை என்பன குறிப்பிடத்தக்கன. இவற்றில் மிகக் கொடுந்தன்மை உடையது பெண்ணாசை ஆகும். இதில் வீழ்ந்தவர் எதையும் துறப்பர். அவர்களுக்கு அஃது ஒரு பொருட்டே அல்ல. எனலாம். தனது எண்ணம் நிறைவேறுகிறதா? அல்லது ஏதேனும் குறுக்கீடுகள் உள்ளதா? என்று பார்த்து அவை பழியையும் பாவத்தையும் தரும் எனத் தெரிந்தாலும் அவற்றைச் செய்யத் தயங்காது செய்வர். அதனால் தான் வள்ளுவர்,

‘‘காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றும் ஒருவன்

நாமம் கெடக்கெடும் நோய்’’.

என்று குறிப்பிடுகிறார். அதிலும் காமமாகிய பெண்ணைாசையை முன்னர் வைக்கின்றார்.

இதற்கு வரலாற்றில் பல உதாரணங்கள் உள்ளன. ரோம நாட்டின் ஆட்சி அதிகாரத்திலிருந்த நீரோ மன்னனை ஆட்சியதிகாரத்திற்கு ஆசைப்பட்ட அவனது தாய் தனது உடலழகால் வசீகரித்துத் தன்வயப்படுத்தி வைத்திருந்தாள். என்றும் பின்னர் தாயின் நிலையறிந்த நீரோவே தனது வாளால் தாயைக் கொலை செய்தான் என்றும் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

அதுபோன்று பாண்டவர்கள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகக் கர்ணனின் உயிரைக் கவர உலகளந்த நாயகனாகிய திருமால் அந்தண வேடத்தில் சென்று வெட்கத்தை விட்டு யாசிக்கின்றான்.

இன்றும் பல மனிதர்களும் ஆசைக்கு ஆட்பட்டு வெட்கமின்றிப் பல்வேறுவிதமான தரந்தாழ்ந்த செயல்களில் ஈடுபடுகின்றனர். மனிதர்களின் இப்பண்பை,

‘‘ஆசை வெட்கமறியாது’’

என்ற பழமொழி தெளிவுறுத்துகிறது.

பணத்திற்கு ஆசைப்படுபவன், மண்ணிற்கு ஆசைப்படுபவன் பெண்ணிற்கும், புகழிற்கும் ஆசைப்படுபவன் வெட்கமுறாது கீழான செயல்களைச் செய்ய நேர்ந்தாலும் வெட்கமுறாது செய்வான் என்பதை இப்பழமொழி விளக்குகின்றது.

வெட்கம் கெட்டவர்கள்

சிலருக்கு எதுவும் தவறாகத் தெரிவதில்லை. பிறர் பழிக்குமாறு நடப்பது வெட்கக் கேடானது என்று அறிந்திருந்தும் மீண்டும் அதே பழிச் செயலைச் செய்து கொண்டிருப்பர். தவறு செய்தல் கூடாது. அங்ஙனம் தவறு செய்வது இழிவானது. வெட்கக் கேடானது. பழியான செயல்களை அறம் தவறிய செயல்களைச் செய்வதற்கு வெட்கப்படுபவர் பெரியோராவர்.

ஆனால் வெட்கத்தை விட்டவர்கள், நாணிலிகள், அறம் தவறி நடந்து கொள்வதை உயர்வானதாகக் கருதுவர். தவறிழைப்பதையே சரியாகக் கருதுவோரும் தங்களின் செயலுக்காக வருத்தப்படுவதோ, வெட்கப்படுவதோ இல்லை. மாறாக அதை நியாயப்படுத்தவே முயல்வர். இல்லையெனில்,

‘‘ஆமாமா… இவுக மட்டும் பெரிய ஒழுக்கமானவுக என்று பெருமை அடித்துக் கொள்கிறார்’’

என்று மற்றவரைத் தரக்குறைவாகப் பேசுவார். அதுபோல் தெரிந்தே தவறு செய்தாலும்கூட அதனைத் திருத்திக் கொள்ளாது வாளாவிருப்பர். இவர்களை மக்கள் , ‘வெட்கம் கெட்டவர்கள்’ என்று இழிவாகக் கூறுவார்கள். அவர்களின் செயலுக்குகாக அவர்களை,

‘‘வெட்கங் கெட்ட கழுதைக்கு முக்காடு எதுக்கு’’

என்ற பழமொழிகளைக் கூறி இழிவுபடுத்துவர்.

இன்று பலரும் தவறுசெய்துவிட்டு அதற்காகக் கைதாகும்போது முகத்தை மூடிக் கொண்டு செல்வர். ஏனென்றால் தங்களை யாரும் பார்த்து அடையாளம் காணுதல் கூடாது என்பதற்காக அவ்வாறு முகத்தைச் சுற்றிக் கருப்புத் துணியோ அல்லது கையில் இருக்கும் தாள், புத்தகம், கைக்குட்டையால் மறைத்துக் கொண்டோ செல்வர். இவர்களின் செயல்பாட்டைக் கண்ட மக்கள் மேற் குறிப்பிட்ட பழமொழியைக் குறிப்பிடுவர். இப்பழமொழியை,

‘‘வெட்கங் கெட்ட மூளி(மூதி)க்கு முக்காடு எதற்கு?’’

(மூளி-காது உள்ளிட்ட உறுப்புக் குறைபாடுடையவள்)

‘‘வெட்கங் கெட்ட மூளி(மூதி)க்கு முக்காடு எதற்கு?’’

(மூதி-மூதேவி)

என்றும் வழக்கில் கூறுவர்.

வெட்கமும் – துக்கமும்

ஒருவன் தான் செய்த செயல்கள் எல்லாவற்றையும் வெளிப்படையாகச் சொல்ல முடியாது. ஏனெனில் அவை வொருந்தாதவைகளாக, சொல்ல முடியாதவைகளாக இருக்கம். பாண்டவர்கள் போர் முடிநற்து துரியோதனனை வென்று தங்கள் இருப்பிடத்திற்கு மீள நினைக்கும்போது, துரியோதனன் பாண்டவர்களைப் பார்த்து,

‘‘வெட்கங் கெட்டவர்களே! நீங்கள் யாருடனாவது நியாயமாகப் போர்புரிந்தீர்களா? நியாயமாகப் போர்புரிந்திருந்தால் வெற்றி பெற்றிருக்க முடியுமா? கபடமாகப் போர் செய்து வென்றீர்கள். உங்கள் மனசாட்சியைக் கேட்டுக் கொள்ளுங்கள். நீங்கள் நிம்மதியாக அரசாள முடியாது’’

என்று இகழ்ந்து கூறினான்.

அவனது பேச்சைக் கேட்ட பாண்டவர்கள் வெட்கத்துடன் தலையைக் குணிந்து கொண்டு நின்றார்கள். அவர்களுடன் இருந்த கண்ணபரமாத்மா, பாண்டவர்களைப் பார்த்து,

‘‘ஆம் துரியோதனன் கூறியது உண்மைதான். ஏனெனில் நாம் நியாயமாகப் போரிட்டிருந்தால் வென்றிருக்க முடியாது’’

என்று வெட்கத்துடன் கூறி துரியோதனன் கூறியதை ஒப்புக் கொண்டான். இதனை எப்படி வெளிப்படக் கூற முடியும். பாண்டவர்கள் வெளியில் கூற முடியாது தவித்துத் துக்கத்தில் ஆழ்ந்தனர். இதுபோன்றே பல மனிதர்களின் வாழ்க்கையிலும் பல நிகழ்வுகள் நிழ்ந்திருக்கும். அவற்றை வெளியில் கூற முடியாது மனதிற்குள்ளேயே வைத்து மறுகிக் கொண்டு துன்பப்படுவர். அவர்களின் இத்தகைய நிலையை,

‘‘வெளியே சொன்னா வெட்கம்

அழுது போனாத் துக்கம்’’

என்ற பழமொழி தெளிவுறுத்துகிறது.

வெட்கமும் – வேலையும்

சில வேலைகளைச் செய்கின்றபோது வெட்கப்படுவர். உயர்ந்த நிலையில் வாழ்ந்தவன் அல்லது சுய கௌரவம் பார்ப்பவர்கள் பலர் முன்னிலையில் வேலை செய்வதற்கு வெட்கப்படுவர். சில வேலைகளை மேலாடையைக் கழற்றிவிட்டுச் செ்ய வேண்டியநிலை ஏற்படும். அப்போது நான் மேலாடையைக் கழற்ற மாட்டேன் என்று (ஆண்கள்)கூறினால் வேலையும் நடக்காது.அத்தகைய நபருக்கு வேலையும் கொடுக்க மாட்டார்கள். இத்தகைய நிலையில் இருப்பவரைப் பார்த்து,

‘‘வெட்கத்தைத் தூக்கிக் கக்கத்துல

வச்சுகிட்டு வேலையைப் பாடரடா’’

என்ற பழமொழியைக் கூறி வேலைபார்க்குமாறு கூறுவர். இதனை வலியுறுத்துவதாக,

‘‘கம்புக் கூட்டக் காட்டாம வேலை பார்க்க முடியுமா?’’

என்ற பழமொழியும் அமைந்துள்ளது. கை உடம்புடன் இணைந்த பகுதியைக் கம்புக் கூடு என்பர். வேலை செய்யும்போது கையினைத் தூக்கியே வேலை செய்ய இயலும். கையினைத் தூக்காமல் எந்த வேலையும் செய்ய முடியாது என்பதை இப்பழமொழி தெளிவுறுத்துவதாக உள்ளது மேற்கூறியவை வழக்குத் தொடர் போன்று காணப்பட்டாலும் இவை வேலை பார்த்தால் மட்டுமே வாழ்க்கையில் உயர முடியும் என்ற வாழ்க்கை நெறியையும் எடுத்துரைக்கிறது.

வெட்கம் என்ற உணர்வு இருந்தால் பிறர் பழிக்கும் செயல்களைச் செய்யக் கூசுவர். பழிபாவங்களுக்கு அஞ்சி நல்வழியில் நடப்பர். வாழ்க்கை நெறிப்படும். வையத்தில் அவர் வாழ்வாங்கு வாழ்வார். பிறர் பழிக்கும் செயல்களைச் செய்ய வெட்கமுறுவோம். வெற்றியாளர்களாகத் திகழ்வோம். வாழ்க்கை வளமுறும்.

Series Navigationகருணைத் தெய்வம் குவான் யின்படைப்பாளி ‘பழமனு’க்கு ஒரு விமர்சனக் கடிதம் (‘கள்ளிக்கென்ன வேலி’ நாவல் குறித்து)
author

முனைவர் சி.சேதுராமன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *