பாக்தாத் நகரத்தில் நடந்த சில சுவையான அனுபவங்கள்

author
0 minutes, 0 seconds Read
This entry is part 23 of 23 in the series 18 ஜனவரி 2015

ஜெயக்குமார்

—————————–
2012 மத்தியில் ஜெயக்குமார், நீங்கள் ஈராக்கில் நமது கம்பெனியின் கிளை திறப்பது குறித்தான சர்வேக்காக ஈராக்கின் முக்கிய நகரங்களை குறிப்பாக எண்ணெய் வளமிக்க பிராந்தியங்களை சுற்றி வந்து கம்பெனியின் கிளை திறப்பது லாபகரமானதா என்ற அறிக்கையை சமர்பிக்கவேண்டும் என்ற உத்தரவை கேட்டதும் முதலில் மனதில் அப்படி ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி, எனக்கு.

பாடப்புத்தகத்தில் மட்டுமே படித்திருந்த யூப்ரடிஸ், டைக்ரிஸ் நதியினையும், காலத்தால் உறைந்த கட்டிடங்களையும், அலிபாபாவும், நாற்பது திருடர்களும் உலவிய தெருக்களையும் பார்க்கும் ஆவலில் உடனே ஒப்புக்கொண்டேன்.

அடுத்த நாளே பரபரப்புடன் ஈராக்கில் முதலில் எங்கு போய் இறங்குவது என்பதில் ஆரம்பித்து எந்தெந்த நகரங்கள் வழியாக சுற்றி வருவது என ஒரு அறிக்கை என் கணக்கில் தயாரித்து அனுப்பி ஒப்புதலும் வாங்கிவிட்டேன். (கம்பெனியிலும் ஒருவருக்கும் ஈராக் குறித்து அனா, ஆவன்னா தெரியாது என்பதால் உடனே ஒப்புதலும் கிடைத்துவிட்டது)

முதலில் போய் இறங்கியது பாக்தாத். மதியம் கிளம்பிய விமானம் பலமணி நேரம் பறக்கும் என நினைத்துக்கொண்டிருக்க 1 மணி நேரம் 45 நிமிடங்களில் பாக்தாதில் இறக்கி விட்டுவிட்டனர். சுற்றுலா விசா என்பதால் யாரும் கேள்வி ஏதும் கேட்காமல் சீல் அடித்து அனுப்பிவிட்டனர். சதாமின் தாத்தா காலத்திய கன்வேயர் பெல்ட் செக்குமாடு சுற்றி வருவது போல சுற்றிவர கூடுதலாக முக்கலும், முனகலுமாக ஓடிக்கொண்டிருந்தது. அவ்வப்போது இளைப்பாறவும் செய்தது. ஒருவழியாக பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியே வர கராடா என்ற இடத்தில் இருக்கும் ஓட்டலுக்குச் செல்ல டாக்சி பிடித்தேன். பய, ஊருக்கு புதுசு என்பதை எனது திரு திரு விழியில் கண்டு கொண்ட ட்ரைவர் 50 டாலர் வாங்குவதற்கு பதிலாக 100 டாலர் என பேரம் பேசினார். புது ஊரில் வம்பு வேண்டாம், முதலில் ஹோட்டலில் போய் சேர்ந்துவிடுவோம், பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என 100 டாலருக்கு ஒப்புக்கொண்டு ஜி எம்சி யில் அமர்ந்துகொள்ள விமான நிலையம் கிளம்பி வெளிச்சாலையை தொடும் முன்னர் 3 செக் போஸ்ட்டுகள். பின்னர் சாலையை தொட்டதுமுதல் ஹோட்டல் செல்வதற்குள் கிட்டத்தட்ட 5 செக் போஸ்ட்டுகள். ஒரு வழியாய் ஹோட்டல் வந்து சேர்ந்து முன்னரே பதிவு செய்திருந்த அல் ரிமால் ஹோட்டலில் செக் இன் செய்துவிட்டு பெட்டியை ரூமில் வைத்துவிட்டு கம்பெனிக்கும் ”வந்து சேர்ந்துவிட்டேன்” என தகவல் சொல்லிவிட்டு கீழே காஃபி ஷாப் போய் காஃபி சாப்பிடலாம் என வந்தேன்.

ஒரு காஃபி என ஆர்டர் செய்துவிட்டு காத்திருக்க கருப்பாய் ஒரு திரவம் 10 மிலி அளவில் 50 மிலி கொள்ளும் ஒரு கப்பின் அடியில் ஒட்டிக்கொண்டிருந்தது. சரி, இந்த ஊரில் முதலில் டிகாக்‌ஷனை முதலில் கொடுப்பார்கள் போல. பால், சக்கரையெல்லாம் பின்னால் வரும் என காத்திருக்க 10 நிமிடமாக யாரும் வரவில்லை. பேரரிடம் ”ஐ ஆஸ்க்ட் காஃபி” என கொஞ்சம் குரலை உயர்த்திச் சொல்ல அவர் அரபியில் நன்றி சொல்லிப்போனார். 98 சதவீத ஈராக்கியர்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்பது பின்னர் தெரிந்தது.

என்ன கொடுமைடா இது என நினைத்துக்கொண்டிருக்க, அருகில் இருந்த ஒரு ஆங்கிலம் தெரிந்த ஈராக்கி இதுதான் தம்பி காஃபி, வேற என்ன எதிர்பாக்குற எனக் கேட்டார். பால், சக்கரையெல்லாம் போட்டு குடிக்கிற காப்பிதான் நான் குடிப்பேன் என்றதும், அவர் பேரரை அழைத்து இவனுக்கு நெஸ் கஃபே வேண்டுமாம் எனச் சொல்ல, அவரும் மரியாதையுடன் வணங்கி பழைய காப்பியை எடுத்துச் சென்றார். கொஞ்ச நேரம் கழித்து மூன்று கப்புகளுடன் வந்தார். ஒன்றில் நெஸ்கஃபே பவுடரை வெந்நீரில் கலக்கி ஒரு கப், குளிர்பதனப்பெட்டியில் இருந்து எடுக்கப்பட்ட பால் ஒரு கப்பில், கலந்து குடிக்க ஒரு கப். அடிவயிற்றில் ஆத்திரமும், வெறுப்பும் எழ, அதையெல்லாம் இந்த ஊரில் காண்பித்தால் மறுநாள் நிர்மலா பெரியசாமி “ஈராக்கில் இந்தியர் மர்மச் சாவு” என செய்தி வாசிக்க வாய்ப்பிருப்பதால், எல்லாவற்ரையும் உள்ளே அமுக்கிவிட்டு அவரிடம் மெதுவாக ஹார் ஹலீஃப், நெஸ் கஃபே, சக்கர், ஜீப் எனச் சொல்ல ( சுடுபாலும், நெஸ்கஃபேயும், சர்க்கரையும் கொண்டுவா) அவரும் ஒரே கப்பில் சூடான பாலில் 3 கரண்டி சர்க்கரையும், 3 கரண்டி நெஸ்கஃபேயும், போட்டு எடுத்து வந்தார். மீண்டும் வெறி ஏறினாலும், இலக்கை கிட்டத்தட்ட நெருங்கிவிட்டோம், கோபம் வேலைக்காகாது என்பதை உணர்ந்து மீண்டும் அவனிடம் அருகில் டேபிளில் இருந்த மூன்று கப்புகளை என் டேபிளில் வைத்து இது சூடான பால், இது நெஸ் கஃபே, இது சக்கரை. மூன்றையும் சேர்க்கக்க்கூடாது, தனித்தனியாக கொண்டுவா என்பதைச் சொல்லி அனுப்பினேன். கடைசியாக மூன்றும் தனித்தனியாக கிடைக்க ஒரு வாய் காஃபியை எனக்குப் பிடித்தாற்போல கலந்து குடித்து முடிக்க இரவு உணவுக்கான நேரம் ஆகி இருந்தது. ஆனால், இந்த அலுப்பை கொஞ்சம் போக்கலாம் என கொஞ்சம் காலாற நடந்துவிட்டு வரலாம் என சுற்றக்கிளம்பினேன். மொபைலில் ஹோட்டலை முதலில் போட்டோ எடுத்துக்கொண்டேன், அதுவும் அரபியில் எழுதி இருக்கும் பெயர்ப்பலகையை படம் எடுத்து வைத்துக்கொண்டேன். ஹோட்டலின் விசிடிங் கார்டுகள் சட்டைப்பையில் ஒன்று, பர்ஸில் ஒன்று மற்றும் பேண்ட் பாக்கெட்டில் ஒன்றாக வைத்துக்கொண்டு சுற்ற ஆரம்பித்தேன்.

ரொம்ப நேரம் ஆச்சே, இங்கனயே எங்கையாச்சும் இந்திய ஹோட்டல் இருந்தா சாப்பிட்டு போயிரலாமே என வேட்டையை ஆரம்பித்தேன். சாலையில் நின்றிருந்த மிலிட்டரி ஆட்கள் எல்லாம் நட்பாகவே பேசியதால் அவர்களிடம் சென்று இந்திய சாப்பாடு எங்கே கிடைக்கும் எனக் கேட்டேன். அவர் உலகளாவிய எண்ணம் கொண்டவர்போல. சாப்பாட்டில் என்னய்யா இந்தியா,, ஈராக்குனு வித்தியாசம் இந்த ரோடு முழுக்க ஹோட்டல்தான் சாப்பிட்டுக்கோ என அனுப்பி வைத்தார். வரிசையாக ஹோட்டல்கள். ஜெனரேட்டர் மின்சாரத்தில் ஹோட்டல் ஜொலித்துக்கொண்டிருந்தது. எல்லோரும் அலங்காரத்துக்காக சீரியல் செட் போடுவார்கள். ஆனால், பாக்தாத்தில் பெரும்பாலான ஹோட்டல்களில் முழு மாடு மற்றும் ஆடு வெளியே தொங்கிக்கொண்டிருக்க பிடித்த பகுதிகளை அறுத்து தீயில் சுட்டுக்கொடுத்துக்கொண்டிருந்தனர் வாடிக்கையாளர்களுக்கு. அங்கிருந்த ஒரே சைவ ஐட்டம் என்பது வினிகரில் ஊறிய காய்கறிகளும், ஈராக்கிய ரொட்டியுமே.

சரி, நம்பிக்கை இழந்துவிடக்கூடாது என மனதை தேற்றிக்கொண்டு அடுத்த மிலிட்டரிக்காரரிடம் “ஆனா, ரீத் கூத்ரவாத் அகில்” என்றேன். ( எனக்கு சைவ சாப்பாடு வேண்டும், எங்கே கிடைக்கும் என்றதும் அரை செகண்ட் ஏளனப்பார்வை பார்த்துவிட்டு உடனே எப்படி எனக்கு உதவுவது என யோசிக்க ஆரம்பித்தார். உடனிருந்த மிலிட்டரிகாரர்களும் சிந்தனைக்காக தாடையைச் சொறிந்து யோசிக்க ஆரம்பித்தனர். ஆனால், யாருக்கும், எந்த பிடியும் கிடைக்கவில்லை. இன்னொரு மிலிட்டரிக்காரர் வேகமாய் வந்தார் உனக்கு சைவம்தானே வேண்டும் என்றார். இவர்களின் சைவம் குறித்த புரிதலில் எனக்கு சந்தேகம் இருந்ததால் ஆனா ரீத் அகில் அதா மாஃபி சிக்கன், மாஃபி மட்டன், மாஃபி பீஃப்,, மாஃபி சமக்” என்றேன். எனக்கு மீன், ஆடு, மாடு, கோழி இல்லாத உணவு வேண்டுமென்றேன். என் கையைப்பிடித்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தார். பொதுவாக இந்தியர்கள் மீது ஈராக்கியருக்கு நல்ல அபிப்ராயம் உண்டென்றாலும் அவர் என்னை அழைத்துச் சென்றவிதம் அடுத்து என்ன ஆகுமோ என படபடப்புடன் அவருடன் சென்றுகொண்டிருந்தேன், பயந்ததை வெளியே காட்டிக்கொள்ளாமல் அவருடன் பேசிக்கொண்டே நடந்து சென்றேன். ஒரு கடையில் நிறுத்தி இந்த இந்தியனுக்கு ஈராக்கிய ரொட்டியில் ஹமுஸ் தடவி ஃபிலாபிலை உள்ளே வைத்து காய்கறிகளையும் தினித்து ரெண்டு செட் கொடு எனச் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். அதைச்சாப்பிட்டதும் கொஞ்சம் காரசாரத்துடனும், பருப்புவடையை சாப்பிட்ட திருப்தியுமாக, ஒரு ஈராக்கிய டீயை (கடும் டீ) குடித்துவிட்டு வந்த வழியே ஹோட்டலுக்கு மீண்டேன்.

மறுநாள் காலை ஹோட்டலிலேயே காலையுணவு. ஈராக்கிய ரொட்டிக்குள் ஜாமைத்தடவி சாப்பிட்ட என்னை சக டேபிளர்கள் அதிசயமாய் பார்த்துக்கொண்டிருந்தனர். முதல்நாள் மாலை காஃபிக்கு நடந்த களேபரங்கள் ஹோட்டலில் அனைவருக்கும் தெரிந்திருந்தபடியால் எனக்காக பால் தனியாக, காஃபிப்பொடி தனியாக, சர்க்கரை தனியாக கொண்டுவத்து அசத்தினார்கள்.

மதிய உணவு என ஒன்றை நாம் சாப்பிடப்போவதில்லை என்பது நேற்றிரவு நடந்த அனுபவங்கள் கற்றுக்கொடுத்தமையால் மனதளவில் மாலை வந்து சாப்பிடப்போகிறோம் என எனக்கு நானே சொல்லிக்கொண்டு கிளம்பினேன். கம்பெனிக்காக வேலைகள் செய்துகொண்டே இந்திய ஹோட்டலுக்கும் வேட்டையை தொடர்ந்துகொண்டிருந்தேன். சேம்பர் ஆஃப் காமர்ஸின் தலைவரை சந்திப்பதும் என் பயணத்திட்டத்தில் அடக்கம். அவர் ஒரு இந்தியன் வந்திருக்கிறான் எனக் கேளவிப்பட்டதும் சீட்டிலிருந்தே எழுந்துவந்து கைகுலுக்கி அரபி முறையில் தோளோடு தோள் உரசி, முத்தங்கள் பரிமாறி அவர் கேபினுக்கு அழைத்துச் சென்று அவருக்கும், இந்தியாவுக்குமான உறவுகள், வியாபார நட்புகள் எல்லாவற்றையும் விளக்கிவிட்டு நான் வந்திருந்த வேலைக்கான தகவல்களை அளித்துவிட்டு மதியம் சாப்பிட வருமாறு அழைத்தார். ஏதேனும் இந்திய ஹோட்டலுக்கு அழைத்துச் செல்வதாய் இருந்தால் வருகிறேன் எனச் சொன்னதும் அவரும் நீண்ட யோசனையில் ஆழ்ந்தார். கடந்த 10 வருடங்களில் நான் இந்திய உணவு வகைகளையே சாப்பிட்டதில்லை. இரு, என் நண்பர்களை விசாரிக்கிறேன் என ஒரு ஐந்துபேருக்கு ஃபோன் செய்தார். கடைசியில் தொங்கிய முகத்துடன் என்னை ஏறிட்டுப்பார்க்கும்போதே சரி இன்றைக்கு மதிய உணவென்பது பழங்கள் மட்டுமே என்பது புரிந்தது. இருந்தாலும் அவர் வற்புறுத்தலுக்காகச் சென்று ஒரு தட்டு நிறைய சாலட்டும், ஈராக்கிய ரொட்டியும், ஹூக்காவும், காபியுமாக கழிந்தது. இம்முறை ஆனது ஆகட்டும் என கடுங்காப்பியை குடித்தேன். கசப்பின் உச்சமாய் இருந்தாலும் நன்றாய் இருப்பதாக மனது சமாதானம் செய்துகொண்டது. காஃபி கோப்பையை நீட்டினால் இன்னும் கொஞ்சம் ஊத்து என அர்த்தம், கோப்பையை இட வலமாக ஆட்டினால் வேண்டாம் அல்லது போதும் என அர்த்தம். நான் மூன்றுமுறை வாங்கிக்குடித்துவிட்டு இட வலமாக ஆட்டினேன்.

மாலை ஹோட்டலிலேயே உணவு சாப்பிட தீர்மானித்து அறைக்குச் செல்லும் முன்னரே செஃப்பை வரச்சொல்லி நான் மீன், ஆடு, மாடு கோழி இவைகளை சாப்பிடுவதில்லை. எனவே கொஞ்சம் காரமாக சூப்பும், வெள்ளை அரிசியும், கொஞ்சம் தயிரும் கொடுங்கள் எனச் சொல்ல அவர் உனக்கு நல்ல குருமா செய்து தருகிறேனே என்றார். ஆஹா, இவ்வளவு அருமையான செஃப்பை விட்டுவிட்டா நாம் ஊரெல்லாம் திரிந்தோம் என நினைத்துக்கொண்டு அவருக்கு இந்திய உணவான குருமா தெரிந்திருப்பதை பாராட்டி கைகொடுத்துவிட்டு அறைக்கு அனுப்பிவிடும்படி சொல்லிச் சென்றேன்.

ஒருமணி நேரத்தில் அருமையாக சர்வ் செய்தார் பேரர். சூப் எனச் சொல்லி ஒன்றை வைத்தார். கிட்டத்தட்ட முக்கால் லிட்டர் இருக்கும். அப்புறம் குருமா என ஒன்றை வைத்தார். சூப்புக்கு அதற்குமான வித்தியாசம் குருமாவில் சில கேரட்டுகள் மிதந்ததும், கொஞ்சம் சிவப்பு நிறத்தில் இருந்தது மட்டுமே. மற்றபடி அதே மாவுக்கூழ். பில் வேறு 60 டாலருக்கு வந்திருந்தது. என்ன கொடுமைடா இது என நினைத்துக்கொண்டே கையெழுத்து இட்டு அனுப்பினேன். சூப் குடித்துக்கொண்டே இருந்தேன், கிட்டத்தட்ட முக்கால் மணி நேரமாக. அதிலேயே பசியெல்லாம் அடங்கிவிட்டது. ரொட்டி வேறு வழக்கமானதாக இல்லாமல் மஞ்சள் கலரில் இருந்தது. இரு அடுக்குகளாக பிரிக்கும்படியாகவும் இருந்தது. உள்ளே பூரனமாக துருவிய மாட்டுக்கறியை தூவி இருந்தனர். நிச்சயம் காய்கறி இல்லை என்பதால் ரெஸ்டாரண்டுக்கு ஃபோன் அடித்து செஃபை அழைத்து மஞ்சள் கலர் ரொட்டியின் உள்ளே இருப்பது என்ன எனக் கேட்டதில் அது மாட்டுக்கறிதான் என்பது உறுதியானது. சாதத்தில் என்ன கறியை சேர்த்திருக்கிறீர்கள் எனக் கேட்டதற்கு நீங்கள்தான் எதுவும் சேர்க்கக்கூடாது எனச் சொல்லிவிடீர்களே அதனால் வெறும் சாதம் மட்டும், நெய்யில் பிரட்டியது என்றார். ஒருவழியாக சாதத்துடன் கெட்டி சூப்பையும் ( குருமா எனச் சொல்லி செஃப் அனுப்பி இருந்தார்) சேர்த்து சாப்பிட்டு தூங்கினேன்.

என்னுடன் சேர்ந்துகொள்ள வேண்டிய நண்பர் இரு நாட்கள் கழித்து பாக்தாத் வந்து சேர்ந்தார். அதற்குள் ஓரளவு பாக்தாத் நகரம் குறித்த ஐடியா கிடைத்திருந்தது. எனவே எங்கெல்லாம் ஓரளவு வயிற்றை நிரப்பிக்கொள்ளும் அளவு சாப்பாடு கிடைக்கும், எதைத்தின்றால் வயிற்றை நிரப்பலாம் என்ற ஐடியா கிடைத்திருந்ததால் அவருக்கும் எனது அனுபவம் உதவியது. இறுதியாக லப்லபி என்றழைக்கப்படும் நம்மூர் சுண்டல் (உப்பு நீரில் வேகவைத்தது) கிடைத்தது. ஒரு டாலருக்கு ஒரு கப் நிறையத்தருவார்கள். அதில் எலுமிச்சைப்பழச்சாறு பிழிந்து, மிளகாய்ப்பொடிதூவி, உப்பு சேர்த்து நம்மூர் சுவையை அதில் கொண்டுவந்து சாப்பிட்டு இரவுகளை ஓட்டினோம்.

பாக்தாதில் 15 நாட்கள் சுற்றிய பின்னர் எங்களின் அடுத்த இலக்கான பாஸ்ரா வந்து சேர்ந்தோம். நல்லவேளையாக அங்கே ஒரு நேபாளி சமையல்காரர் ஹோட்டலில் இருந்தார். அவரிடம் முதல்நாளே அறிமுகம் ஆகி எங்கள் சோகக்கதையைச் சொன்னதும் தினமும் ஒரு சைவ குருமா, அல்லது காய்கறிகள் இட்டு இந்திய மசாலாக்கள் சேர்த்த உணவுகள் எனக்கும், நண்பருக்கு நம்மூர் ஸ்டைலில் சமைத்த அசைவ உணவையும் செய்துகொடுத்தார். ஒரு வழியாக சாப்பாடு மட்டுமே பிரச்சினை. மற்றபடி கம்பெனியை தொடங்குவதில் எந்த பிரச்சினையும் இல்லை என அறிக்கை சமர்ப்பித்தோம். என்னையே ஈராக்கிற்கு கம்பெனியை திறக்கச் சொல்லி அனுப்பி வைத்தனர். 2012 நவம்பரில் கால்வைத்து இன்றுவரை பிழைப்பு ஓடிக்கொண்டிருக்கிறது. இன்றும் துபாய் அல்லது அபுதாபி செல்லும்போதெல்லாம் ஏர்போர்ட்டில் இருந்து வெளியே வந்ததும் ட்ரைவருக்கு ஸ்டாண்டிங் இன்ஸ்ட்ரக்ஷன் ஏதாவது ஒரு நல்ல ஹோட்டலுக்கு என்னை அழைத்துச் செல்வதே.

இங்கு எண்ணெய்துரப்பனப்பணியில் வேலைசெய்யும் பெரும்பாலான இந்தியர்களுக்கு கம்பெனி மெஸ் இருக்கும். அவர்களுக்கு இந்திய உணவை சமைக்க என ஆட்கள் வைத்திருப்பார்கள். எந்த நாட்டு மக்கள் அதிகமிருந்தாலும் பாஸ்மதி சாதமும், ஒரு தாலும், ஒரு சப்ஜியும், தயிரும் இந்தியர்களுக்கு கிடைக்கும்படி பார்த்துக்கொள்வார்கள். இல்லையெனில், போங்கடா நீங்களும், உங்க வேலையும் என ஓடிவிடுவார்கள் என்பதால்.

Series Navigationபேசாமொழி பதிப்பகத்தின் புதிய புத்தகம் – ஒளி எனும் மொழி (ஒளிப்பதிவாளர் விஜய் ஆர்ம்ஸ்ட்ராங்)
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *