பாமாவின் ‘கருக்கு” – தலித் பெண்ணியப் பார்வை

author
1
0 minutes, 0 seconds Read
This entry is part 12 of 42 in the series 25 நவம்பர் 2012

திருமதி.லெ.ஆனந்தவள்ளி
முனைவர்பட்ட ஆய்வாளர்,
கணேசர் செந்தமிழ் கல்லூரி,
பொன்னமராவதி.
முன்னுரை:
இன்றைய படைப்புலகில் பல பெண் எழுத்தாளர்கள் தோன்றி படைப்புகளில் வெளிப்படுத்துகின்றனர். நாவல், சிறுகதை, கவிதை எனப் பல வடிவங்களில் இப்பணியினைச் செய்கின்றனர். அவ்வகையில் தலித் இலக்கியப் படைப்பாளியான பாமா ‘கருக்கு” நாவலில் தம் வாழ்வையும் தலித் பெண்கள் அனுபவிக்கும் கொடுமைகளையும் எழுத்தாக்கியுள்ளார். குடும்பத்திலும், சமுதாயத்திலும் ஆணோடு சமத்துவம் இன்றி வாழும் தலித் பெண்கள் குறித்து பாமா கூறும் கருத்துக்களை ஆய்வதே இவ்வாய்வின் நோக்கமாக அமைகிறது.
தலித் யார்?
‘மராட்டிய மாநிலத்தில் ஒடுக்கப்படும் மக்கள் தலித் என்று அழைக்கப்பட்டனர். அது இந்திய அளவில் ஒடுக்கப்பட்ட எல்லா மக்களுக்கும் பொதுவான சொல்லாட்சியாகவே கருதப்பட்டது. ஆனால் தமிழக அளவில் தாழ்த்தப்பட்டோர் என்று வழக்கில் இருந்தாலும் தேசிய அளவில் பரந்துபட்ட மக்கள் இங்கு இருப்பது சுட்டிக் காட்டப்பட வேண்டியுள்ளது.” என்று விழி பா.இதயவேந்தன் குறிப்பிடுகிறார். (தலித் அழகியல், ப.19)
பெண்நிலை வாதம்:
சமுதாயத்தில் இன்றைய புதிய சமூக நிலைகள் மக்களின் வாழ்க்கையைப் பற்றிய சிந்தனைத் தளத்தில் பல மாறுதல்களை ஏற்படுத்தி வருகின்றன. அவ்வகையிலேயே பெண்களிடம் சமூகம் அவர்களுக்குக் கொடுத்துள்ள முக்கியத்துவம், தகுதி மற்றும் அதிகாரம் ஆகியவற்றின் அடிப்படையில் சில மாற்றங்களைக் கோருகின்றது. இம்மாற்றங்களின் விழைவு பெண்நிலை வாதத்தினை முன்னிறுத்துகிறது. நடுத்தர வர்க்கப் பெண்களின் பிரச்சினைகளையே பெரும்பான்மையாகப் பேசி வருகின்ற இ;ன்றைய பெண்நிலை வாதம் இன்றையச் சூழலில் தலித் பெண்களின் நிலை குறித்த கருத்தியலை முன்வைக்கிறது.
தலித்தியமும் பெண்ணியமும்:
சாதிய அடிப்படையில் தீண்டாமைக்கு உள்ளாக்கப்பட்ட தலித்துக்களாகவும் பால் (பெண்) அடிப்படையிலும் தலித் பெண்கள் அடக்குமுறைக்கு ஆளாகி இருவித நெருக்கடிகளில் அல்லல்படுவதைப் பாமாவின் ‘கருக்கு” வெளிக் கொணர்வதால் தலித்தியம் பெண்ணியம் இரண்டையும் ஒன்றிணைத்துப் பார்க்க வேண்டியுள்ளது.
தலித்தியம் ஒடுக்கப்பட்ட மக்களான தாழ்த்தப்பட்டவர்களைச் சமூக அளவில் முன்னேற்றவும் பெண்ணியம், சமூக ரீதியாகப் பெண்களை முன்னேற்றவும் எழுந்த இயக்கங்களாகும். சமூக உரிமைகளைப் பெறவே இவ்விரண்டு இயக்கங்களும் (தலித்தியம், பெண்ணியம்) போராடி வருகின்றன.
தலித்தியம் இன முன்னேற்றத்திற்கான இலக்கைக் கொண்டு இந்துக்களையும் இந்து தத்துவத்தையும் மேல்சாதி கிறிஸ்தவர்களையும் பாரிதிமார்களையும் கடுமையாக எதிர்ப்பது ஆகும். பெண்ணியம் அடிமை நிலையில் இருந்து பெண்களை மீட்கும் போராட்டத்தை இலக்காகக் கொண்டுள்ளது. இவ்விரு இயக்கங்கள் பற்றி ஒட்டியும் வெட்டியும் கருத்து மோதல்கள் தலித் இலக்கிய உலகில் நிலவி வருகின்றன. இவ்விரு இயக்கங்களின் கருத்துச் செறிவுகளை உள்வாங்கி அமைந்திருப்பது பாமாவின் ‘கருக்கு” நாவலாகும்.
தலித் பெண்களின் நிலை:
தலித் பெண்கள் உடலியற்கூறுகளாலும் பல்வேறு கட்டுப்பாடுகளாலும் அச்சுறுத்தப்பட்டும் பொது இடங்களில் பேசுவதற்கும் கலப்பு மணம் முடிப்பதற்கும் உயர் சாதி ஆண்களால் பணியிடங்களிலும் தனது சாதியை சார்ந்த ஆண்களால் பாலியல் பலாத்காரத்திற்கும் ஆளாகின்றனர். நான் அடிமைப்பட்டிருக்கிறேன் என்ற நிலைமையை உணராமலேயே இதுதான் தலைவிதி என்ற விதிக்கோட்பாட்டை ஏற்று அப்படியே வாழ்ந்து கெண்டிருப்பவர்கள் தலித் பெண்கள் இந்நிலையினை பாமா ‘கருக்கு” நாவலில் பதிவு செய்துள்ளார்.
சாதிய மோதல்களும் தலித் பெண்களும்:
‘தலித் பெண்ணானவள் தான் ஒரு ‘பெண்” என்பதைக் காட்டிலும் தலித் பெண் என்ற காரணத்தினால் இரண்டு விதமான ஒடுக்கு முறைக்குத் தள்ளப்படுகிறார். இந்தியாவில் தமிழகத்தில் சாதிய ஆதிக்கத்திற்கு எதிராக எந்தப் போராட்டம் நடந்தாலும் அதில் அதிகமாக பாதிக்கப்படுபவர் தலித் பெண்தான் என்பதை நாம் மறந்து விடவும் முடியாது. மறுத்து விடவும் முடியாது.
‘அனைத்து சாதிய மோதல்களிலும் அதிகமாகப் பாதிக்கப்படுவது பெண்கள்தான். ஆதிக்க சாதிகள் அடக்குமுறைகளைக் கையாளும் பொழுது ஆண்கள் அனைவரும் ஊரைவிட்டு வெளியேறி விடுகின்றனர். தலித் பெண்களும் பிள்ளைகளும் பாதிக்கப்படுவார்களே என்ற சிந்தனையின்றி தாங்கள் தப்பித்துக் கொள்கின்ற நிலை அதிகமாக உள்ளது. இப்படி தலித் ஆண்கள் இல்லா நிலையில் பெண்கள் மீது அத்துமீறிச் செல்கிறது. இறுதியில் பிரச்சினைகள் ஓயும்போதோ, சமாதானம் அடையும்போதோ தலித் பெண்களுக்கு எதிராக ஏற்பட்ட வன்முறை என்பது ஒரு பொருட்டாகவே கருதப்படுவதும், பேசப்படுவதும் இல்லை. தலித் இயக்கங்களும் இவற்றினைப் பெரிதாகக் கருதுவதில்லை.” என்கிறார் மோகன்லார்பீர் (மோகன்லார்பீர் (தொ.ஆ) தலித் பெண்ணியம் ப.11)
‘கருக்கு நாவலில் சாலியர்களுக்கும் பறையர்களுக்கும் நடந்த சண்டையில் போலீசுக்குப் பயந்து தலித் ஆண்கள் ஓடி ஒளிந்து கொள்ள வீட்டில் தனித்து இருந்த தலித் பெண்களிடம் காவல்துறையினர் அத்துமீறி நடந்து கொண்ட நிகழ்வு ஒன்று பாமாவால் பதிவு செய்யப்பட்டுள்ளது.
‘வீடுவீடா புகுந்து ஆம்பளைகளை புடிக்கும் போது வீட்டுல இருந்த பொம்பளைக்கிட்ட போலிசுக்காரனுக தப்பிதமா நடந்தானுகளாம். கெட்ட வார்த்தையால வஞ்சுக்கிட்டு ராத்திரிக்குப் புருசம் மாரு இல்லைல, ரெடியா இருங்கடி நாங்க வரோம்னு சொல்லி கண்ணடிச்சிக்கிட்டு வைக்கக்கூடாத எடத்துல எல்லாம் துப்பாக்கிய வச்சு இடுச்சானுகளாம் (கருக்கு ப.33) தலித் பெண்களுக்கு எதிராக ஆதிக்கச் சாதியினர் அதிகார வர்க்கத்தினர் செய்யும் பாலியல் வன்முறை நிகழ்வானது இன்று வரையிலும் தொடர்ந்து கொண்டிருக்கும் அவல நிலையாக உள்ளது.
உழைப்புச் சுரண்டல்:
‘கருக்கு” நாவலில் தலித் பெண்கள் வலுவேற்றோரிலும் நலிவுற்றோராகத் திகழ்கின்றனர் தலித் இன ஆண்களும் பெண்களும் வயல் வரப்புகளில் இடைவிடா வேலை செய்கின்றனர். ஆண்களும் பெண்களும் உழைத்தால்தான் வாழ்வியலுக்கு அடிப்படையான உணவுப் பொருட்கள் கிடைக்கின்றன. மேல்சாதி விவசாயிகளிடம் வேலைக்குச் செல்லும் தலித் பெண்களுக்கு தலித் ஆண்களை விடவும் குறைவான கூலிக் கொடுக்கப்படுகின்றது. உயர்சாதியினரால் உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாகும் தலித் பெண்களின் நிலையினை பாமாவின் படைப்பு வெளிக்காட்டுகின்றன.
‘ஆம்புள பொம்பல அம்புட்டுப்பேரும் இப்படித் தெனமும் தேஞ்சு போக ஒழைக்குறதுக்கு எம்புட்டு முன்னுக்கு வரலாம். அப்படின்னும் நெனப்பேன். ஆனா இவுக ஒழைக்குறதுக்குத் தக்கன கூலி கெடைக்குறுது இல்ல. அதுலகூட ஒரே வேலை ஆம்பளையும் பொம்பளையும் செஞ்சாக்கூட ஆம்பளைக்கு ஒரு சம்பளம் பொம்பளைக்கு ஒரு சம்பளம் தான் ஆம்பளைக்கு கொஞ்சம் கூடுதலான சம்பளம் தர்ராங்க ஏன்னுதான் வெளங்க மாட்டிங்குது (கருக்கு ப.44) என்று தலித்’ இன ஆண் பெண்ணின் உடலுழைப்பு சுரண்டப்படும் நிலையினையும் ஆண்களைவிட பெண்களுக்கு குறைவான கூலி கொடுக்கப்படுவதையும் பாமாவின் படைப்புச் சுட்டிக் காட்டுகின்றன.
தலித் அரசியலும் தலித் பெண்ணியமும்:
தலித்துக்கள் என்றைக்கு அரசியல் ரீதியான அதிகாரம் பெறுகிறார்களோ? அன்றுதான் தீண்டாமையை முற்றிலுமாக ஒழித்து விட முடியும் என்று அண்ணல் அம்பேத்கார் கூறினார். அவரது கனவை நனவாக்கும் விதத்தில் இன்றைய இந்திய தமிழகச் சூழலில் தலித் அரசியல் கட்சிகளின் செல்வாக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் காணப்படுகிறது.
தலித் விடுதலையும் தலித் பெண்களின் விடுதலையும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கம் போன்றது என்று பேராசிரியை சக்குபாய் கூறுகிறார். தாழ்த்தப்பட்ட சமூகப் பெண்களின் விடுதலையின்றி தாழ்த்தப்பட்டவர்களின் விடுதலை என்பது முழுமை பெறாது. தொழிலாளர் விடுதலை எப்படி தொழிலாளரால் வென்றெடுக்க வேண்டிய தேவையோ அதைப் போலவே உழைக்கும் பெண்களின் விடுதலையும் அவர்களாலேயே வென்றெடுக்கப்பட வேண்டியது என்பார் லெனின். தாழ்த்தப்பட்ட பெண்களின் விடுதலையும் அப்பெண்களாலேயே வென்றெடுக்கப்பட வேண்டும்.
முடிவுரை:
இந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் ஒரு தலித் பெண்ணானவள் பெண் என்ற அடிப்படையிலும் தலித் பெண் என்பதனால் அனுபவிக்கும் கொடுமையான நிகழ்வுகளையும் பாமாவின் படைப்புக்களின் வழி அறிந்து கொள்ள முடிகிறது. எனவே தான் பாமாவின் ‘கருக்கு” நாவல் வழி தலித் பெண்ணியம் என்று தனியாகத் தோன்றுவதற்கான காரணங்கள் இவ்வாய்வில் ஆராய்ந்து கூறப்பட்டுள்ளன.

Series Navigationஇராத்திரியின் சக்கரங்கள்ரஞ்சினியும், இஞ்சி கசாயமும்
author

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *