பாரம்பரியத்தை பறைசாற்றும் கல்வெட்டுக்கள்

author
0 minutes, 0 seconds Read
This entry is part 1 of 15 in the series 1 மார்ச் 2015

வைகை அனிஷ்

இந்திய வரலாற்றையும், பண்பாட்டையும் முறையாக எழுதுவதற்கு கல்வெட்டுக்கள் முக்கிய சான்றுகளாக அமைகின்றன. இந்தியாவில் இதுவரை ஒரு லட்சம் கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் அறுபது விழுக்காடு கல்வெட்டுக்கள் தமிழ் கல்வெட்டுக்கள் ஆகும். கி.மு.5 ஆம் நூற்றாண்டிலிருந்து தமிழ்நாட்டில் கல்வெட்டுக்கள் கிடைக்கின்றன. அசோகர் காலத்திற்கு முன்பே தமிழக மக்கள் எழுத்தறிவைப் பெற்று விளங்கியிருந்தனர் என்பதை சமீப காலக் கல்வெட்டுக் கண்டுபிடிப்புகளின் மூலமும், பிற தரவுகளின் மூலமும் அறியமுடிகிறது. தமிழ் மொழிக்காக தமிழகத்தில் தோன்றிய பண்டைத் தமிழ் எழுத்துக்கள் பல்லவர்கள் தொண்டை மண்டலத்தில் காஞ்சிபுரத்தை தலைநகரமாகக் கொண்டு ஆட்சி அமைத்தபொழுது இருபிரிவுகளாக வளர்ச்சி பெற்றது. தலைநகரான காஞ்சிபுரத்தை சுற்றிலும் இருந்த பகுதிகளில் தமிழி எழுத்துக்களிலிருந்து வளர்ந்த ஒருவை எழுத்துக்கள் தமிழாகவும், மற்ற வகை பல்லவர்களின் எல்லைப்பகுதியில் இருந்த சி;ற்றூர்களில் வட்டெழுத்துக்களாகவும் பரிணமாம் பெற்றது. இதே கால கட்டத்தில் வடமொழி பல்லவர்களின் வழி தமிழகத்தில் ஊடுருவ ஆரம்பித்தது. தமிழ் அறியாத அரச பரம்பரையினர் தங்களுக்கு தெரிந்த அரச மொழியான வடமொழியை எழுதுவதற்கு தடுமாறினார்கள். இதன் காரணமாக வடமொழிக்கு ஏற்ற கிரந்த எழுத்துக்களை தங்களின் முன்னோர்கள் ஆந்திராவில் பயன்படுத்திய அசோகன் பிராமியிலிருந்து வளர்ச்சி பெற்று தென்னக பிராமியிலிருந்து உருவாக்கினர். இவ்வாறு கல்வெட்டுக்களின் மூலம் சேர, சோழ, பாண்டி மன்னர்கள், நவாப்புகள், விஜயநகரத்தினர், நாயக்கமன்னர்கள் என பல மன்னர்களின் அரசாட்சி,கோயில் கொடைகள், வணிக நிறுவனங்களின் சமூகப்பணிகள், சிற்றரசர்கள் தத்தம் பகுதி சமய நிறுவனங்களின் வளர்ச்சியில் காட்டிய அக்கறை போன்ற செய்திகள் கல்வெட்டுகளின் மூலம் பெறப்படுகின்றன.
கல்வெட்டுக்களின் மூலம் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் காலக்கல்வெட்டுகளில் அவனது பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்காக இக்கோயிலுக்கு 24 வேலி நிலமும், அவன் தமக்கையின் பிறந்த நாளுக்காக 12 வேலி நிலமும் கொடையளிக்கப்பட்டது. கோயில்களில் விளக்கு எரிப்பதற்கு ஆகும் செலவை, அவ்வ+ர் குளக்கரையில் வளர்க்கப்படும் பல்வகை மரங்களின் வருவாய் மூலம் ஈடுகட்டப்பட்டது. கொளக்காநத்தம் ஊர்க்கல்வெட்டு திருமலை நாயக்கரின் நன்மைக்காக அவனுடைய தளவாய் இராம அய்யன் 1000 குழி நிலதானம் அளித்துள்ளான். திருவாலந்துறையில் மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் இராராதேவன் வாணவ தரையன் என்னும் தலைவன் சித்திரை விழாவின்போது வழிபாடு செய்து கொண்டிருந்தான். அப்போது பாம்பு ஒன்று அரச சபையில் புகுந்துவிட்டது. தீயசகுனம் என்று இதனை நினைத்து தலைவன் பிராமணர்களை அழைத்து இதற்கு பரிகாரம் செய்யக்கேட்டான். அதற்கு அவர்கள் கோயிலுக்கு தேவதானமாகவும், பிராமணர்களுக்கு நிலதானமும் வழங்கினால் பரிகாரம் கிடைக்கும் என்று கூறினார். முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் தேவரடியார் பெண் ஒருத்தி வைகாசித் திருவிழாவின்போது இரண்டு நாடகம் நடத்துவற்காக 40 கலம் நெல் கொடையளித்துள்ளான். இவ்வாறாக பல ஆச்சரியமாகவும், வியப்ப+ட்டும் செய்தியும், இப்படி எல்லாம் நடந்திருக்குமா என ஆய்வு செய்வதற்கும் கல்வெட்டுக்கள் சான்றாக அமைகின்றன.
அவ்வகையில் 100 அடிமைகள் விலைக்கு வாங்கப்பட்டு அவர்களின் பெயர்களும், 7 தலைமுறை பெயர்களும், அரசாண்ட 52 வம்ச பெயர்களும் கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்டுள்ளது வியப்பிற்குரிய செயலே. இரண்டு தலைமுறை பெயர்களைக்கூட நாம் நினைவில் வைத்துக்கொள்ளமுடியாத நிலையில் தலைமுறைகளைப்பற்றி பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுக்களை இக்கட்டுரையில் காண்போம்.
100 அடிமைகளின் பெயர்களைப் பற்றிய கல்வெட்டுக்கள்
நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை வட்டத்தில் உள்ள கொறுக்கை என்ற ஊரில் மூன்றாம் இராஜராஜன் என்ற மன்னன் கி.பி.1235 ஆம் ஆண்டு ஆண்டுவந்தான். அவன் ஆண்ட 19 ஆண்டுகளில் பல நிகழ்வுகள் நடைபெற்றன். அதில் ஒன்று 100 அடிமைகள் பற்றியது.
இங்குள்ள வீரட்டானேஸ்வரர் கோயில் மகாமண்டபத்தில் உள்ள வடக்குச்சுவரில் கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் இராஜராஜசோழன் காலத்தில் வீரட்டரனேஸ்வரமுடையார் கோயிலுக்கும் பலரிடமிருந்து அடிமைகள் விலைக்கு வாங்கப்பட்டனர். சிலர் தானமாக கோயிலுக்கு அடிமைகளை அளித்துள்ளனர். இவ்வாறு பெறப்பட்ட அடிமைகள் அனைவரும் உறவுமுறையினர் ஆவர். மேலும் இம்மன்னனுக்கு முன்னர் ஆட்சிபுரிந்த இராஜாதிராஜன் ஆட்சிக்காலத்தில் விலைக்கு வாங்கிய அடிமைகள் பெயர்கள், குலோத்துங்கள் ஆட்சிக்காலத்தில் விலைக்கு வாங்கிய அடிமைகள் பெயர்கள் என மொத்தம் 100 அடிமைகளின் பெயர்கள் உறவு முறைகளை பட்டியலிட்டுக் காணப்படுகின்றன.
இக்கல்வெட்டின் எழுத்தமைதி கொண்டு இம்மன்னன் மூன்றாம் இராஜராஜசோழன் எனத் தெரிகிறது. ஆகையால் இங்கு குறிப்பிட்டுள்ள மன்னர்கள் இரண்டாம் இராஜாதிராஜனாகவும் மூன்றாம் குலோத்துங்கனாகவும் இருத்தல் வேண்டும். அவர்கள் காலத்தில் கல்லில் பொறிக்கப்படாததால், அவர்கள் காலத்தில் விலைக்கு வாங்கப்பட்ட அடிமைகளின் பெயர்களையும் தமது காலத்தில் பெறப்பட்ட அடிமைகளின் பெயர்களையடுத்து அதே கல்லிலும் பொறிப்பதற்கு ஆணையிடப்பட்ட செய்தி இக்கல்வெட்டால் அறியப்படுகிறது. அக்காலத்தில் குடும்பம் குடும்பமாக கோயிலுக்கும் தனியாருக்கும் தங்களை அடிமைகளாக விற்றுக்கொண்டது ஏன் என்பது ஆய்வுக்குறியதே.
கல்வெட்டு:
1ஸ்ரீ திரிபுவனச்சக்கரவரத்திகள் ஸ்ரீஇராஜராஜ தேவற்கு யாண்டு பத்தொன்பதாவது விருதராஜ பயங்கர குறுக்கை நாட்டுத் திருக்குறுக்கை உடையார் திருவீரட்டானமுடையர் எனத்துவங்கி
ளல் இந்த ஆச்சபிடாரன் மகன் ஆளுடையளாள் இவள் மகன் திருவெண்காடுடையாந் இவந் தம்பி மணவாளன் இவந் தங்கை ஆண்ட நங்கை இவள் தங்கை செல்வம் வீரவிநோத வேளான் இவந் தம்பி சிங்கபிரான் இவன் தங்கை மண்டையாண்டி அழியாந் மகந்; வ……..தங்கை செல்வம் இவன் மகன் பெருமாள் இவன் மகந் பெருங்காடந் இவத் தம்பி வேங்கடம் இவந்தம்பி தங்கை பெரியாள் இந்தப் பெருங் காடந்த சிறிய தாய் ஆழ்வா நங்கை இவள் மகந் வடையாந் இவந்தம்பி பெருமாள் இவந் தங்கை இவள் மகள் ஆண்டாள் இ
ப்பெரியாள் தங்கை செல்வம் இவள் மக்கள் உடையாண்டாள் சீவேதவனப் பெருமாள் நங்கை இச்செல்வத்தின் தங்கை பொற்சாத்தி தாழஞ்சேரிக் கம்பந் மருமகன் திருவீரட்டானமுடையான் கோவிந்தன் ஆச்சபிடாரன் உடப்பிறந்தாள் நாராயணி இவள் மகள் செல்வம் இவள் மகந் திருவெண்காடுடையாந் இவந் தம்பி ………
யா நாகமுடையாள் இவள் மகள் சோறுடையாள் செல்வி இவள் மகள் சோறுடையாள் சீதேவி நங்கை மகள் சோறுடையாள் ஆழ்வாந் நங்…ள் மகன் சோறுடையான் பெருங்காடன் இவன் மகன் சோறு டையாந் புற்றிடங் கொண்டான்.
என முடிவடைகிறது. இவ்வாறு 100 அடிமைகள் பற்றிய கல்வெட்டு கால ஓட்டத்தால் இன்றும் அழிக்கப்படாம் உள்ளதையும் அடிமைகள் முறை அன்றுமுதல் இன்று வரை உள்ளது என்பதற்கு இக்கல்வெட்டுக்கள் சாட்சியம் அளிக்கிறது.
கல்வெட்டில் ஏழு தலைமுறை
தூத்துக்குடி அருகே உள்ள காயல்பட்டினத்தில் பெரிய பள்ளிவாசலில் இறந்தவர்களை அடக்கம் செய்யும் கல்லறைகள் உள்ளது. அதில் ஏழுதலைமுறை முன்னோர்களை குறித்திருப்பது மிக அறிய நிகழ்வாகும். வேறு எங்கும் இவ்வளவு தலைமுறைப் பெயர்கள் கூறப்படவில்லை. 21.5.1581 அன்று இறந்த இம்முடிச் செண்பகராம முதலியார் என்கிற அப்துல் ஜபார் நயினாவின் முன்னோர் கீழ்க்கண்டவாறு கூறப்பட்டுள்ளனர்.
அசன் நயினா
இசுபு நயினா
ஓசு நயினா
சமால் நயினா
சையது அகமது நயினா
சேக் அப்துல்லா நயினா
சையது அகமது நயினா
இம்முடிச் செண்பகராம முதலியார் என்கிற அப்துல் ஜபார் நயினா (21.5.1581 மறைவு)
என குறிக்கப்பட்டுள்ளது.
அதே போல
ஹஸசானுதீன்
அசன் நயினா
ய+சுப்
ஜமாலுதீன்
சையது அகமது
ஷா அப்துல்லா
சையது அகமது
மௌலானா அப்துல் ஜபார் (மறைவு 21.5.1581)
என ஏழுதலைமுறைகளைப்பற்றி துயிலிடக் கல்வெட்டுக்களில் குறிக்கப்பட்டுள்ளது.
மாமல்லபுரம் 52 வம்ச பெயர்கள்
மாமல்லபுரத்திலிருந்து திருக்கழுகுன்றம் செல்லும் சாலையில் வயலூர் என்ற ஊர் உள்ளது. இவ்வ+ரின் இடதுபுறத்தில் வியாகரபுரீஸ்வரர் கோயில் காணப்படுகிறது. இக்கோயிலில் பல்லவர்களின் 52 வம்ச பெயர்கள் வரிசையாக பொறிக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே ஒரு முழு அரச வம்சத்தின் பெயர்கள் காணப்படுவது இக்கல்வெட்டுக்களில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
வியாகரபுரீஸ்வர் கோயிலின் நுழைவாயிலில் கனசதுரமான கோபுர வடிவ கற்தூணில் வடமொழியில் வேலைப்பாடமைந்த பல்லவ கிரந்த எழுத்துக்களில் இரண்டாம் நரசிம்மவர்மன் காலத்தில் கி.பி.690-728 கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
பல்லவரின் வம்சம்
1.ப்ரம்மா
2.அங்கிரஹ
3.பிரகஸ்பதிஹ
4.சம்புஹ
5.பரத்வாஜர்
6.துரோணர்
7.அஷ்வதத்தாமன்
8.பல்லவன்
9.அசோகன்
10.ஹரிகுப்தன்
11.ப+ததத்தன்
12.ச+ர்யவர்மன்
13.விஷ்ணுகோபன்
14.த்ருதகன்
15.கலிந்தன்
16.ஜ்யாமல்லன்
17.ரிபுமல்லன்
18.விமலன்
19.கோங்கனி
20.காலபர்த்
21.ச+தபல்லவன்
22.வீரகூர்ச்சன்
23.சந்திரவர்மன்
24.கராலன்
25.விஷ்ணுகோபன்
26.ஸ்கந்தமூலன்
27.கானகோபன்
28.வீரகூர்ச்சன்
29.ஸ்கந்தவர்மன்
30.குமாரவிஷ்ணு
31.புத்தவர்மன்
32.ஸ்கந்தவர்மன்
33.குமாரவிஷ்ணு
34.புத்தவர்மன்
35.ஸ்கந்தவர்மன்
36.விஷ்ணுகோபன்
37.விஷ்ணுதாசன்
38.ஸ்கந்தவர்மன்
39.சிம்ஹவர்மன்
40.ஸ்கந்தவர்மா
41.சிம்மவர்மன்
42.சிம்மவர்மன்
43.நந்திவர்மன்
44.சிம்மவர்மன்
45.சிம்மவர்மன்
46.விஷ்ணுகோபன்
47.சிம்மவர்மன்
48.சிம்மவிஷ்ணு
49.மகேந்திரவர்மன்
50.மகேந்திரவர்மன்
51.மகேந்திரவர்மன்
52.பரமேஸ்வரவர்மன்
இவை தவிர மாமல்லபுரத்தில் உள்ள வராக குகைக்கோயிலுள்ள இரண்டாம் நந்திவர்மனின் காலத்திய கல்வெட்டு விஷ்ணுவின் பத்து அவதாரங்களைக் கூறுகின்றது. இதில் ஒன்பதாவது அவதாரமாக புத்தர் அவதாரத்தினைக்குறிப்பிடுவது வியப்புக்குரிய செய்தியாகும்.
இவ்வாறு தமிழகத்தில் ஆய்வு செய்யப்படமல் உள்ள கல்வெட்டுக்களை ஆய்வு மேற்கொண்டால் இன்னும் பல அரிய தகவல்கள் வெளிவரும்.
கட்டுரையாளர்
வைகை அனிஷ்
3.பள்ளிவாசல் தெரு
தேவதானப்பட்டி-625 602
செல்:9715795795

Series Navigationமதநல்லிணக்கத்தின் சின்னமான நாகூர்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *