பிராயசித்தம்

This entry is part 1 of 29 in the series 1 டிசம்பர் 2013

குறிப்பு :   பொதுவாக பீஷ்மர் இறுதி வரையில் துரியோதனன் பக்கமே இருந்தாலும் ரதசப்தமி அன்று பீஷ்மருக்காக அனைத்து மக்களும் தலையில் எருக்க இலை வைத்து  அவர் ஆத்மா சாந்தி அடைய வேண்டிக் கொண்டு நீராடுகிறோம். என்ன காரணம் என்று மகாபாரத்தில் தேடினேன். விளக்கம் கிடைக்கவில்லை. யுதிஷ்டிரன் பீஷ்மரிடம் கொல்ல அனுமதி கேட்கும் இடம் இதற்கு விடை சொன்னது. அந்த விடைதான் இந்த சிறுகதை.

போர்  தொடங்கி ஒன்பது நாட்கள் ஆகிவிட்டது.ஏதற்காக இவ்வளவு உக்கிரமான போர்?  வெறும் ஊசி முனை நிலத்தின் பொருட்டா?  அவித்தலம் விருகத்தலம்  மாகந்தி  வாரனாவதம் மற்றும் ஒரு கிராமம் கூட பெறப் படாமல் போனதாலா?  இது அந்நிய படைஎடுப்பினால் உண்டான போர் இல்லை. தன்னால் நிறுவப்பட்ட மாபெரும் அரசில் மூன்று உடன்பிறந்தவர்களின் பேதம்தான் இந்த போரில் கொண்டு விட்டிருக்கிறது. தான் எடுத்துக் கொண்ட சபதத்தின் பலன் இதுதானா?  தானும் மற்ற மன்னர்களைப் போல ராஜ்ஜியம் பட்டமகிஷி  அந்தப்புரம் என்று ஒரு வாழ்வை வாழ்ந்திருந்தால் இப்படி ஒரு போர் நிகழாமல் போயிருக்குமோ? பகைமை இப்படி ஒரு விருட்சமாய் வேர் ஊன்றி இருக்காதோ? எது காரணம்? பொறாமையா? பொறாமையினால் எழுந்த பகைமையா? பகைமையால்  தூண்டப்பட்ட தரும நாசமா? தரும நாசத்தின் உச்சமாக குருவம்ச சபையில் பெரியோரும் தர்மவான்களும் உள்ள இந்த  சபையில் ஒரே ஒரு மனிதன் கூட இல்லையா என்று கதறிய பாஞ்சாலியின்  அலறலா?

அந்த கதறல்தான் குருவம்சத்தின் ரத்தினமாக விளங்கிய கௌரவர்களின் பிதாமகர் வீட்டுமாச்சாரியாரை உறங்க விடாது துரத்திக் கொண்டிருந்தது. உறக்கமின்றி உலாவிக் கொண்டிருந்த குருனந்தனுடன்  விடை கிடைக்காத வினாக்களும் உடன் உலாவிக் கொண்டிருந்தன. உடன் இருக்கும் சேவகர்களையும் செல்லும் இடமெல்லாம் உடன் வரும் மேய்க்காவலர்களையும் உதறி விட்டு நதியின் படுகைகளில் கங்கையின் புதல்வனாக திரிந்த அந்த தேவா விரதனாக மாற வாய்ப்பே கிடையாதா?

சுற்றிலும் போரின் குரல். ஆடல் அரங்கிற்கும், கடவுள் இல்லத்திற்கும், அரச சபைக்கும் , அங்காடி வீதிக்கும் இருப்பதைப் போல் போர்க்களத்திற்கும் ஒரு குரல் உண்டு. ஆயுதங்களின் உராய்வுகளினாலும், குதிரைகளின் கனைப்புகளினாலும், யானைகளின் பிளிரலினாலும்  ஆவேசப் படும் அந்த குரல் இரவில் அவல ஓலைங்களாக தன் குரலை மாற்றிக் கொள்ளும் . உயிர் இருந்தும் பயனின்றி பிணம் தின்னும் கழுகுகளை விரட்ட இயலாத அவல ஓலங்களே போர் இரவின் குரல்.  நரிகளின் ஊளையும் செந்நாய்களின் உறுமல்களும் போரின் குரலை மேலும் செம்மைப் படுத்திக் கொண்டிருந்தன.

வெட்டபட்டக் கைகளும் துண்டாடப்பட்டக் கால்களும் மலை மலையாக குவிந்து கிடக்கின்றன.  இவ்வளவு கோரமாகும் என்று தெரிந்தும் ஏன் இந்த போர் தடுத்து நிறுத்தப் படவில்லை? ஏத்தனை சமாதான முயற்சிகள்? விதுரர் கிருபர் காந்தாரி என எத்தனை நல்லவர்கள் துரியோதனனிடம் போர் வேண்டாம் என்று கெஞ்சி இருப்பார்கள்? நர நாரயனர்களில் ஒருவனாய் அறியப்பட்ட அந்த துவாரகாபுரி மாதவன் தனது நிலையிலிருந்து கீழிறங்கி தூது வரவில்லையா?

நவரத்தின மணிகளால் அலங்கரிக்கப் பட்டிருந்த பீஷ்மப் பிதாமகரின் பொன் மகுடம் தங்க சிம்மாசனத்தின் மேல் மினுங்கிக் கொண்டிருந்தது. வகை வகையாய் விற்களும், குவியல் குவியலாக கூர் அம்புகளும்,கதைகளும்,கவசங்களும்,வாட்களும் இன்னும் பல ஆயுதங்களும் அந்த அறையினில் இறைந்து கிடந்தன. .வாசலில் வெண்ணிற உயர்மட்டக் குதிரைகள் பூட்டப்பட்டு, பொன்பனைமரக் கொடி தாங்கிய கொடிக் கம்பம் விளங்கும் பீஷ்மரின் தேர் கம்பீரமாக நின்று கொண்டிருந்தது.  எவராலும் வெல்லப் பட முடியாதவர் என்ற பட்டத்துடன் அன்றோ பீஷ்மர் போர்க் களத்தில் உலவி வருகிறார்?

போர் தொடங்கும் முதல் நாள் யுதிஷ்டிரன் போர் தொடங்கும் முன்பு தன்னை நோக்கி ஓடி வந்தது பீஷ்மரின் நினைவில் ஆடியது. அவன் தர்மவான். சத்தியத்திற்குக் கட்டுப் பட்டவன். எனவேதான் தன் அணியை விட்டு துணிச்சலாக பகைவர் அணியின் அருகில் வர முடிந்தது. ஆனால் தனக்கு குருவம்சத்தினரில் துரியோதனனும் ஒரு நிகர்; யுதிஷ்டிரனும் ஒரு நிகர். அவர் பாதங்களை பற்றி, “ வெல்லப் படாதவரே! இந்த போர் புரிய எனக்கு அனுமதி தாருங்கள். என்னை ஆசீர்வதியுங்கள் “ என்றானே.

பதின்மூன்று ஆண்டுகளாக விடை கிடைக்காமல் அலைந்து கொண்டிருந்த கேள்விக்கு அந்த ஒரு கணத்தில் மின்னலென விடை கிடைத்தது.

“ மனிதன் செல்வத்திற்கு அடிமை.செல்வம் மனிதர்களுக்கு அடிமையன்று ” அந்த கணத்தில் அவர் வாயிலிருந்து வந்த வாக்கு சத்திய வாக்காகவே ஆனது.

“ நான் துரியோதனின் செல்வத்தால் கட்டுப் பட்டுள்ளேன் செல்வமே ” என்றல்லவா ஆசி கேட்டு வந்த பாண்டு புத்திரனுக்கு விடை கூற முடிந்தது?

முடிச்சு அவிழ்ந்து விட்டது. குந்தியால் முடியாது. அவள் பதின்மூன்று ஆண்டுகளாக அடைக்கலமாக இருப்பவள். விதுரனால் முடியாது. அவன் தாமரை இலைத் தண்ணீர். மேலும் தாசி மகன் என்ற இழிப்பெயர் வேறு அவனுக்கு. திருதராட்டினனுக்கு பிள்ளைப் பாசத்தாலும் கண்களை இழந்தவன். கிருபரும், துரோணரும் மாத வருவாய் பெம் ஊழியர்கள்.ஆனால் நான் யார்? பிதாமகன். பெரிய தத்தா. குரு நந்தனன் .குரு வம்சம் இத்தனை சிறப்புடன் விளங்க காரணமான ஆதிமூலம். ஒற்றை ஆடையுடன் இருந்த கிருஷ்ணையை  சபைக்கு இழுத்து வர உத்தவிட்ட குரல்வளையை ஏன் நெரிக்காமல் போனேன்? ஹஸ்த்தினாபுர அரண்மனைவாசம் காரணம். இந்த பதவியும்,அதிகாரமும் , சொத்துக்க்களுமின்றி ஒரு நொடிப் பொழுது கூட வாழ முடியாத நிலை காரணம். இது எவ்வளவு பெரிய இழுக்கு? “ எனக்கு இந்த அரண்மனை வாழ்வும், கபோகமும் வேண்டாம்.துரியோதனா நிறுத்து உன் அக்கிரமத்தை” என்று அன்று ஒரு குரல் கொடுத்திருந்தால்  ஸ்ரீ  கிருஷ்ணருக்கு நிகராக ஆகியிருக்கலாமே? என் செல்வ நிலைக்கு ஆசைப் பட்டுத்தானே   அன்று பாஞ்சாலிக்கு நிகழ்ந்த உச்சமான துக்கத்தை தடுக்க முடியாத பாவியானேன்? இந்த நொடி வரையில் அந்த பாண்டு புத்திரரின் ஏழு அக்ஷவ்ஹிணிகளையும் சுழன்று தாக்கும் சண்ட மாருதம் போலன்றோ தாக்கி வருகிறேன்? பரசுராமராலும் வெல்லமுடியாதவன் என்ற பெருமையை இழக்க துணியவில்லையே? போர் புரிய மாட்டேன் என்று சபதம் செய்திருந்த ஸ்ரீ கிருஷ்ணன் கூட என் வில்லின் திண்மையைக் கண்டு கையில் சுதர்சன சக்கரத்துடன் என்னைக் கொல்ல ஓடி வந்தானே. அப்படியே கொன்றிருக்கக் கூடாதா? பரந்தாமன் கைகளினால்கதி மோட்சம் ஆகி இருக்குமே.

குற்ற உணர்வு பீஷ்மரை தகிக்கத் தொடங்கியது. தன் வாழ்வின் அர்த்தம் முழுவதையும் பாஞ்சாலியின் கதறல் பொருளற்றதாக செய்து விடுமோ என சிந்தை நிலை தடுமாறத் தொடங்கினார். திரௌபதிக்கு அவரால் என்ன செய்ய இயன்றது? சொத்து போனால் போரிட்டவது மீட்டுக் கொள்ளலாம். சபையில் போன மானத்தை யார் மீட்டுத் தருவார்? குற்றம் நடப் பதை தடுக்கும் சக்தி இருந்தும் அந்த குற்றம் நடப்பதை தடுக்காமல் வேடிக்கை பார்ப் பது கூட ஒரு குற்றம்தானே? கங்கையின் மைந்தனிடம் இவ்வளவு அழுக்கா?

பீஷ்மரின் இரவு உறங்காமலே நகர்ந்தது. யமுனையின் கீழ்வான முகட்டில் ஆதவன் செம்பிழம்பாய் தோன்றத் தொடங்கினான். தேர்ச் சாக்கடைகளை பழுது பார்ப்பதினால் எழும் ஓசையும், கூர் அம்புகளை கல்லில் தீட்டும் ஓசையும், குதிரைகளை தட்டிப் பழகும் ஓசையும், ஆயுதங்களின் உராய்வு ஒலியும் மீண்டும் ஒரு போர் நாளை நினைவு படுத்தியபடி பொழுது புலர்ந்தது. கழுகுகளும் பருந்துகளும் வழக்கம் போல போர்க்களத்தை விடுத்து உயரமான பனை மரங்களில் அமரத் தொடங்கின.

சேவகர் பாலையும் பழங்களையும் உணவு மேடையில் வைத்து விட்டு சென்றனர். உறக்கமின்றி சிவந்திருந்த முகத்தில் குளிர்ந்த நீர் விடு பீஷ்மர் கழுவிக் கொண்டார். அர்ஜுனனின் கூர் அம்புகளால் காயப் பட்ட பகுதிகளில் குளிர்ந்த நீர் படர்ந்ததும் எரிந்தது பச்சிலையால் கட்டப் பட்ட கட்டுக்களை அவிழ்த்துப் பார்த்தார். குருதி வழிவது நின்றிருந்தாலும் காயமும் நிணமும் பசுமையாக இருந்தன.

இந்த காயங்களின் வேதனை உன் கதறலுக்கு ஈடாகுமா பாஞ்சாலி?

துச்சாதனின் ஆக்கையைப் பிளந்து அவன் கிருதியைப் பூசிக் கொள்ளும் வரையில் கூந்தலை முடியேன் என்று சபதம் எடுத்தது போல எனக்கும் ஒரு சபதம் எடுத்திருக்கக் கூடாதா கிருஷ்ணே? வயது முதிர்ந்தவன் என்று எனக்கு சபையில் நீ அளித்த கெளரவம்  அல்லவா இத்தனை காயங்களிலும் பெரிதானது? அம்மா! என்ன கைமாறு செய்து என் பாபத்தைப் போக்கிக் கொள்ளப் போகிறேன்?

“ மகா பிரபுவிற்கு வந்தனம் “ வாயிற்காப்போன் குரல் கேட்டு பீஷ்மர் நிமிர்ந்தார்.

“ என்ன? “

“ பிதாமகரைக் காண பாண்டு மைந்தர்கள் வாயிலில் காத்திருக்கின்றனர்.”

“வரச் சொல் “

ஐவராக வந்து நின்றான் தருமன்.வெல்வதற்கு நேர்மையும் சத்தியமும் போதும்.பலமும் படையும் எதற்கு? சத்திய ஸ்வரூபியாக விளங்கிய தரும புத்திரன் நால்வருடன் பிதாமகரை வணங்கினான்.

“ சொல் யுதிஷ்டிரா”

“ ஒன்பது நாட்கள் யுத்தம் முடிந்து விட்டது.எங்கும் நிணமும் குருதியும் மரண ஓலமுமாக உள்ளன. லட்சக் கணக்கில் மானிடர்களும் விலங்குகளும் மாண்டு போய் விட்டன. கணவரை இழந்தோரும், பிள்ளைளை பறி கொடுத்தோரும் , பிள்ளைகளை பறி கொடுத்தோரும் , தந்தையை சகோதரர்களை இழந்தோரும்  இந்த யுத்த பூமியில் சுற்றி வருவதை காண சகியாதவனாக இருக்கிறேன். இவையெல்லாம் வேண்டாம் என்பதற்கு என்னாலான முயற்சிகள் எல்லாம் மேற்கொண்டேன். என் நோக்கம் நிறைவேறவில்லை. பரசுராமரால் கூட வெல்லப் படாதவரான நீங்கள் போர்க்களத்தில் காட்டு விலங்குகளின் நடுவில் சிம்மம் போல உலவி வருகிறீர்கள். அர்ஜுனனும் தனது அனைத்து அஸ்திர வித்தைகளையும் உம் மேல் பிரயோகித்துப் பார்த்து விட்டான். கடுகளவும் பயன் இல்லை. அதனால்………..”

“ அதனால்?” பீஷ்மர் தருமனிடம் எதி வினா எழுப்பினார்.

யுதிஷ்டிரன் பதில் கூறாமல் மெளனமாக நின்றான். அவனது தயக்கம் பீஷ்மரிடம் குழப்பத்தை ஏற்படுத்தியது.

“ தயங்காதே. சொல் “

“ தங்களை வெல்லும் வழிமுறையை ……..”

“என்னை வெல்லும் வழிமுறையை………….?”

‘ உங்களை வெல்லும் வழிமுறையை தாங்களே எங்களுக்கு கூற வேண்டும்”

“ வெல்லும் வழிமுறையா? கொல்லும் வழி முறையா? “

“ தாத்தா” பேரன் கண்களில் நீர் வழிய குருநாதனின் கால்களில் வீழ்ந்து வணங்கினான். இது என்ன என் சிந்தையும் இவனது சிந்தையும் ஒரே நேர் கோட்டில் சந்திக்கின்றன?

இந்த உபாயத்தை இவனே சிந்தித்து கேட்கிறானா? அல்லது அந்த மாய தேரோட்டி சொல்லி கொடுத்து கேட்கிறானா?

ஒரே ஒரு கணம்தான்.பீஷ்மர் சிந்தை தெளிவானது. ஆயிரம் தாமரை மலர்கள் ஒரு சேர மலர்ந்ததைப் போல முகம்  காந்தியுடன் மின்னியது.

“ எழுந்திரு யுதிஷ்டிரா”

தருமன் தலை கவிழ்ந்தபடி நின்றான் .தருமம் வெல்ல ஆணவம் அகந்தை அனைத்தையும் துறக்க வேண்டும் என்பதற்கு சாட்சியாக நின்றான்.

இந்த கிழவன் மேல் பரிதாபம் கொண்டு தர்மமே யுதிஷ்டிரன் உருவில் வந்திருக்கிறது. கௌரவர் சபையில் அக்கினியில் மலர்ந்த ஐவர் பத்தினியான பாஞ்சாலியின் கண்ணீர் தனது வாழ்வை சூனியமாக்கி விடுமோ என்று மருகிய தவிப்பு இனி இல்லை. சத்திரிய தர்மத்திலிருந்து விலகிய நீசன் என்ற பெயர் என் மரணத்திற்குப் பின் தொடராது. கிருஷ்னையின் கண்ணீருக்கு பிராயச்சித்தம் தேட தனக்கொரு வாய்ப்பு தருமன் உருவில் எதிர் நிற்கிறது.

“ என்னை கடைத்தேற்றினாய் யுதிஷ்டிரா! என்னை கடத்தேற்றினாய்.” ஆரத்தழுவிய பீஷ்மரின் வாயிலிருந்து உதிர்ந்த வார்த்தைகளை கேட்டு தருமன் ஆச்ச அடைந்தான்.

எதிரியிடமே வெல்லும் உபாயம் கேட்டால் இவர் ஏது இப்படி பிதற்றுகிறார்? சில தர்மங்கள் எளிதில் விளங்காது. போலும்.

பீஷ்மர் தொடர்ந்தார்.

“ பெண்களை எதிர்த்தோ அல்லது பெண்ணாக இருந்து பின் ஆணாக மாறியவர்களுடன்  போர் புரிய மாட்டேன் என சபதம் எடுத்தவன் நான். சால்வனாலும் என்னாலும் நிராகரிக்கப் பட்ட அம்பை என்னை பழி தீர்க்கும் பொருட்டு தீயில் உயிரை மாய்த்து துருபதனுக்கு சிகண்டினி என்ற பெண்ணாய்த் தோன்றினான். ஆணாக வளர்க்கப் பட்டான். யட்சகன் ஒருவனுடைய தயவால் சிகண்டினி சிகண்டி என்ற ஆணாக மாறினாள். அந்த சிகண்டியை பத்தாவது நாள் யுத்தமான இன்றைய யுத்தத்தில் நிறுத்து. நான் போர் செய்யாதொழிவேன். அந்த சமயம் சாத்யகி என்று அறியப்பட்ட பார்த்திபன் தன கணைகளால் என்னை வீழ்த்தட்டும். வெற்றி உங்களுக்கே.” என்றார் பீஷ்மர்.

யுதிஷ்டிரன் நன்றி கூறிவிட்டு தன் சகோதரர்களுடன் அகன்றான்.

என்றுமில்லாத உற்சாகத்துடன் மகுடமும் கவசமும் தாங்கி,வில்லும் அம்புராத்துணியும் ஏந்தி பிதாமகரும் குருனந்தனருமான வீட்டுமாச்சாரியார்  ஒரு பெண்ணால் தொடங்கபட்ட யுத்தம் ஒரு  பெண்ணால் முடிவுக்கு வரும் பொருட்டு யுத்த களம் நோக்கி புறப்பட்டார்.

……………………………..

 

 

 

Series Navigation‘ என் மோனாலிசா….’கவிஞர் வ. ஈசுவரமூர்த்தியின் கவிதையில் மறுமலர்ச்சி சிந்தனைகள்
author

சாம்பவி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *