புத்தனின் விரல் பற்றிய நகரம் கவிஞர் அய்யப்ப மாதவனின் தேர்ந்தெடுத்த கவிதைகள் அடங்கிய தொகுப்பு. தோழமை பதிப்பக வெளியீடு நூல் வெளியீட்டுவிழா குறித்த சில மனப்பதிவுகள்

This entry is part 24 of 26 in the series 23 ஆகஸ்ட் 2015

லதா ராமகிருஷ்ணன்

(புத்தனின் விரல் பற்றிய நகரம், கவிஞர் அய்யப்ப மாதவனின் தேர்ந்தெடுத்த கவிதைகள் அடங்கிய தொகுப்பு.
தோழமை பதிப்பக வெளியீடு
நூல் வெளியீட்டுவிழா குறித்த சில மனப்பதிவுகள்)
புத்தனின் விரல்  பற்றிய நகரம்_html_63a7ee9c

பலவகையான ’ஆட்கழிப்பு’ உத்திகளைப் பயன்படுத்தி இந்தியாவின் பிற பகுதிகளிலும், கடல் கடந்த நாடுகளிலும் நவீன தமிழின் தனிப்பெருங் கவியாய்த் தங்களை அடையாளங்காட்டிக்கொள்ள அலைக்கழிந்துகொண்டிருக்கும் சிலரைத் தாண்டிய அளவில், தற்காலத் தமிழில் குறிப்பிடத்தக்க கவிஞர்கள் கணிசமாகவே உண்டு. சமீபத்தில் தோழமைப் பதிப்பக வெளியிட்டுள்ள கவிஞர் அய்யப்ப மாதவனின் தேர்ந்தெடுத்த கவிதைகள் அடங்கிய தொகுப்பான புத்தனின் விரல் பற்றிய நகரம் இதற்குக் கட்டியங்கூறுவதாய் அமைந்துள்ளது.

புத்தனின் விரல்  பற்றிய நகரம்_html_me8033af

கவிஞர் அய்யப்ப மாதவன் தொடர்ந்த ரீதியில் நவீன தமிழ்க்கவிதையுலகில் இயங்கி வருபவர். அவருடைய கவிதைகள் ஆத்மார்த்தமானவை. உலகாயுதக் கணக்குகளையோ, கைத்தட்டலையோ கணக்கில் கொள்ளாதவை. தரமான, ஆத்மார்த்தமான, அலட்டிக்கொள் ளாத, ஆரவாரமற்ற கவிதைகளை எழுதிக்கொண்டிருப்பவர்.

இதுவரை வெளிவந்துள்ள கவிதைநூல்கள்:

1. தீயின் பிணம்

2. மழைக்குப் பிறகு ம ழை

3. நானென்பது வேறொருவன்

4. நீர்வெளி

5. பிறகொருநாள் கோடை

6. எஸ் புல்லட்

7. நிசிஅகவல்

8. சொல்லில் விழுந்த கணம்

9. குவளைக் கைப்பிடியில் குளிர்காலம்

10. ஆப்பிளுக்குள் ஓடும் ரயில்

11. குரல்வளையில் இறங்கும் ஆறு

உலகம் அன்புமயமாக இருக்கவேண்டும் என்ற தீராத்தாகம் கொண்டவர். உலகில் நடந்துவரும் அநீதிகள், கொடுமைகளால் அமைதியிழந்து அலைக்கழிபவர். நட்பினரின் அண்மையில் நிம்மதியுணர்பவர்.

விழாவில் சக கவிஞர்கள் தேவேந்திரபூபதி (விழா நடக்க பெரிதும் உதவியவர் என்று கவிஞர் அய்யப்ப மாதவன் நெகிழ்வோடு மேடையில் குறிப்பிட்டார்), அசதா, தாரா கணேசன், ரவி சுப்பிரமணியன், நான், திரைப்பட ஒளிப்பதிவுக்கலைஞரும் எழுத்தாளருமான செழியன், திரைப்பட இயக்குனர்கள் மிஷ்கின், சீனு ராமசாமி, பாரதி கிருஷ்ணகுமார், ஓவியர் செல்வா இன்னும் பலர் அய்யப்ப மாதவனின் கவித்துவம் குறித்துத் தங்கள் மனப்பதிவுகளை முன்வைத்தார்கள்.

புத்தனின் விரல்  பற்றிய நகரம்_html_mabb181

தன் உரையின் நடுவில் திரு. செழியன் சமீபத்தில் இயற்கையெய்திய தன் தாயின் நினைவில் பொங்கிய துக்கம் நெஞ்சையடைக்க மேலே பேச முடியாமல் சில கணங்கள் செயலிழந்து நின்றபோது அந்தச் சோகம் அரங்கெங்கும் கவிந்தது. தன்னுடைய திரைப்படமொன்று சரியாக ஓடாததில் மனமுடைந்துபோயிருந்த சமயத்தில் தன் வாடிய முகத்தின் காரணத்தைக் கேட்டறிந்த தன் தாயார் ‘அதிகம் படித்த நிபுணர்கள் பலர் கூடி வானுக்கு அனுப்பும் விண்கலம் கூட எரிந்துவீழ்ந்துவிடுவதில்லையா என்ன?’ என்று கேட்டு தனக்கு ஆறுதலும் தைரியமும் அளித்ததாக இயக்குனர் சீனு ராமசாமி நெகிழ்வோடு தன் தாயை நினைவுகூர்ந்தார்.

ஓவியர் செல்வா ஒரு ஓவியனின் கலைப்படைப்புக்குக் கிடைக்கும் சன்மானத்தோடு நவீனத் தமிழ்க்கவிஞனுக்குக் கிடைக்கும் சன்மானத்தை ஒப்பிட்டுப்பார்த்து வருந்தினார். அய்யப்ப மாதவனின் கவிதைகளுக்கான ஓவியக்கண்காட்சி நடைபெறும் என்று உறுதி தெரிவித்தார் தாரா கணேசன். ரவி சுப்பிரமணியன் பாரதியாரின் கவிதையொன்றை இசைத்தார். அய்யப்ப மாதவனின் கவிதைகளைத் தொடர்ந்து இருபதாண்டுகளுக்கும் மேலாக வாசித்துவரும் முகமறியா கவிதை ஆர்வலர் அன்று விழா மேடையில் ஐயாயிரம் நன்கொடையாகத் தந்து கவிதைத்த்குப்பை வாங்கிக்கொண்டு கவிஞனுடைய வரிகளில் தனக்குக் கிடைத்த அண்மைக்கு பதில் மரியாதை செய்தார்!

நான் அய்யப்ப மாதவனின் கவிமனம், கவித்துவம் குறித்து ஒரு கவிதை எழுதிக்கொண்டுபோயிருந்தேன். மாதக் கடைசியாதலால் அக்கவிதையை அழகாகச் சட்டமிட்டுத் தர இயலாத நிலையைக் குறிப்பிட்டு ‘பொன் வைக்கும் இடத்தில் பூ வைப்பதுபோல் அக்கவிதையை வெள்ளைத்தாளிலேயே தருவதாகவும், கவிஞர்கள் பொன்னை விட பூவையே அதிகம் விரும்புகிறவர்கள் என்றும் கூறி என் கவிதையை தோழர் அய்யப்ப மாதவனுக்கு சாதாரண வெள்ளைத்தாளில் தந்தேன். அத்தனை மகிழ்ச்சியோடு அதைப் பெற்றுக்கொண்டார் அய்யப்ப மாதவன்! என்னுடைய கவிதை கீழே தரப்பட்டுள்ளது:

யானைக்கு இறக்கையை தானமாய்த் தருபவன்!
புத்தனின் விரல்  பற்றிய நகரம்_html_m1c4f5e99

யதேச்சையாக உன் பார்வை திரும்புமிடத்தில்

ஒரு சிற்றெறும்பு ஊர்ந்துகொண்டிருக்கிறது.

மறுகணம் அதற்குள் கூடுவிட்டுக்கூடுபாய்ந்துவிடுகிறாய்!

அருகிலிருக்கும் மாமன்னன் அலங்கமலங்க விழிக்கிறான். வாழ்வின் ’அ’வன்னாவையே இன்னும் அவனால் பொருள்பெயர்க்க முடியாதபோது

இவன் ’ஃ’கன்னா வரை புகுந்துபுறப்பட்டது போதாதென்று

புதிதுபுதிதாய் அகர இகரங்களையும் அகரமுதலிகளையும்

விரல்சொடுக்கில் புழக்கத்திற்குக் கொண்டுவந்துவிடுகிறானே

என்று அதிசயப்பட்டுக்கொண்டேயிருக்கத்தான் முடிகிறது அவனால்.

அரிதாய் மாமன்னர்கள் சிலர்

நீ காட்டும் வாழ்க்கைச் சித்திரத்தின் பிரம்மாண்டத்தை ஓரளவு உள்வாங்கிக்கொள்ள முடிந்தவர்களாய்

சில குதிரைகளையும் யானைகளையும் உனக்குப் பரிசளிக்கிறார்கள்.

கொஞ்ச காலம் அவற்றின் அழகை ரசித்துக்கொண்டிருந்த பின்

சொற்களால் வடிவமைத்த சிறகுகளை அவற்றுக்குப் பொருத்தி

பறக்கவும் கற்றுக்கொடுத்து வழியனுப்பிவிடுகிறாய்.

விண்வெளியில் அவற்றைப் பார்க்கும் புள்ளினங்களெல்லாம்

அவற்றின் இறக்கைகளின் விரிவையும் விசையையும் வண்ணங்களையும் அன்பைக்கொண்டு நம்பமுடியாத அளவு வழவழப்பாய் அவை வனையப் பட்டிருக்கும் செய்நேர்த்தியையும்

வைத்தகண் வாங்காமல் பார்க்கின்றன.

எண்ணிறந்த உலகங்களை உருவாக்கியபடியே போகும்

உன் நிறைவுறாத இதயத்திலும் கும்பியிலும்

இரண்டறக் கலந்திருக்கிறது

அரசனுக்கும் ஆண்டிக்கும் இடையறாது அள்ளிவழங்கவோர்

அட்சயபாத்திரம்.

ஒவ்வொரு எட்டிலும்

உயிரோசை ரீங்கரிக்க

உன்மத்த வெளி விரிய

உலகத்துயிர்கள் அனைத்தும் நீயாகிவிடும் சூக்குமம் அறிந்தவன் நீ.

மனம் வெளுக்க வழிசொல்லும் முத்துமாரி உன் எத்தனையோ பத்துவரிகளில் பிரசன்னமாகியிருக்கிறாள் தெரியுமா!

யாதுமாகி நின்ற காளி

உன் அன்புத்தோழியாவாள்தான்!

அய்யப்பனா? மாதவனா? அல்லாவா? ஏசுவா?

அஹம் பிரம்மாஸ்மியா?

பூஜ்யத்திற்குள்ளே ராஜ்யத்தை ஆண்டுகொண்டிருக்கும்

கவிப்பரம்பரையின் வழித்தோன்றலல்லவா நீ!

காக்கும் கவிதையுன்னைக் காத்தருளும் என்றும்.

அய்யப்ப மாதவனுக்கு

தோழமையுடன் ‘ரிஷி’

அய்யப்ப மாதவனின் ஏற்புரை நிஜம் நிறைந்திருந்தது. திரைப்பட இயக்குனராகவேண்டும் என்பது அய்யப்ப மாதவனின் நெடுநாள் கனவு. தனது பிள்ளைப்பிராய நண்பர் செழியனோடு இயங்கிவரும் இவர் சிறந்த புகைப்படக்கலைஞரும் கூட. இவருடைய கவிதை ‘இன்று’ காணொளிப்படமாக வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அய்யப்ப மாதவனின் முகநூல் பக்கங்களில் இடம்பெறும் புகைப்படங்களும் கவிதைகளும் பரவலான கவனத்தையும் வரவேற்பையும் பெற்றுவருகின்றன. இந்தக் கவிமனதின் கனவு நனவாகும் வாய்ப்பு விரைவில் அவருக்குக் கைகூட வேண்டும். அவருடைய திரையுலக் நண்பர்கள் முயன்றால் அது கண்டிப்பாக முடியும்!

450 பக்கங்களுக்கு மேல் உள்ள இந்த கவிதைத்தொகுப்பின் விலை ரூ 400 தான். இதிலுள்ள பல கவிதைகள் நம் மனதோடு பேஉபவை; நம்மிடம் பரிவதிர்வை ஏற்படுத்துபவை. மூத்த கவிஞர்கள் ஞானக்கூத்தன், கலாப்ரியாவின் அருமையான அணிந்துரைகளோடு வெளியாகியுள்ள புத்தனின் கைபற்றிய நகரம் கிடைக்க கவிஞர் அய்யப்ப மாதவனின் கைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். 9952089604.

தொகுப்பில் இடம்பெறும் அய்யப்ப மாதவனின் கவிதைகள் சில:

சித்திர வியாபாரியிடம் சிக்கிய சித்தார்த்தன்

ஆழ்ந்த தவத்தில் அமர்ந்திருந்த புத்தனின்

இடது காது பெரியதாகிவிட்டது

நேராகிவிட்டது கழுத்து

பார்வையிலுறைந்த சாந்தம் பிடித்திருந்ததுபோலும்

தலையின் பின் சுழலும் ஒளிவட்டத்தில்

வர்ண பேதங்களிருந்ததாக வருத்தம் தெரிவித்தனர்

ஞானச்சுடர் பெருகுமிடம்

மிக முக்கியமென வலியுறுத்தினர்

பின்னாலிருந்த மரமும் இலைகளும்

புத்தனை அமைதியில் அமிழ்த்துவிட்டதாக

பெருமிதத்திலிருந்தனர்

ஒரு பாதம் சிறியதாகிவிட்டதாகவும்

பாதம் பாதமாகயில்லையென்றும்

அடுக்கிக் கொண்டிருந்தனர் குற்றங்களை

நிஜப் புத்த கற்பனையோடு

தரையிலிருந்த ஐந்து சீடர்களில்

ஒருவனின் கண்கள் மட்டும்தான்

புத்த கொள்கையால் நிரம்பி

ததும்புவதாக மகிழ்ந்துரைத்தனர்

அபூர்வங்கள்

அற்புதங்கள்

அதிசயங்கள்

அபூர்வமான உலகில் ஓர் அதிசயமாகப்

புலனுணர்கிறேன்.

பிரபஞ்சம் தீர்ந்துவிடாத

வியப்பையளித்துக்கொண்டேயிருக்கின்றது.

வண்ணங்கள் கொன்றைமரப் பூக்கள்

வெகுவாகக் கவர்ந்துவிடுகின்றன

இறுதி ஊர்வலத்தில் இறைந்திருந்த ரோஜாக்களில்

சிவப்பின் உயிர்ப்பையுணர்கிறேன்.

கடலில் விரவியிருக்கும் நீரின் தோற்றத்தில்

கண்கள் விரிய விரிய நிற்கிறேன்

உள்விரியும் ஆழுலகில் மூழ்கிப்போகிறேன்

திரும்பமுடியாதவாறு

அந்தரத்தில் சுழலும் நிலத்தின் மீது

எவ்வளவு விநோதங்கள்

விநோதங்களில் நீண்ட ஆயுளில்வேறு வாழ்வு

ஒரு பறவையைப்போலவோ

ஒரு மீனைப்போலவோ

ஒரு தவளையைப்போலவோ இல்லாது

உடலுள் மறைந்திருக்கும் உயிர்

விவரிக்க முடியா ஆச்சர்யம்

யோசிப்பின் திறனில் அரிய மனிதனாக

அற்புதங்களையெழுதும் கவிஞனாக

எப்படியொரு பாக்யத்தில் அவதரித்திருக்கிறேன்

உரையாடலில் மொழி வழியே என்னை

இவ்வுலகின் மீது எழுதிக் காட்டுகிறேன்

மொழியின் ஆழ்ந்த காதலில் மாபெரும் அகிலத்தில்

அபூர்வங்களைக் கண்μற்கி சொற்களில் தீட்டுகிறேன்

ஒளிந்திருக்கும் பேரதிசயங்களில் அமிழ்கிறேன்

வெகு ஆழத்தில் விரியும் கனவுகளில்

 

 

கவிஞனாகிய அற்புதம்

மஞ்சளாக மாறுகிற நிலவின் அதிசயத்தில்

வண்ணங்களைக் குறித்து

இதயத்தைக் கிளறுகிற அந்தியில்

சாலையில் மஞ்சளுடுப்பில் மஞ்சள் பூச்சூடி

வடிவாகச் செல்லும் பெண்ணில்

நிலவை விரல் நீட்டி குழந்தமையை நினைவூட்;டும்

குழந்தையில்

பிரிந்த காதலியின் கண்ணீரில்

உதிர்த்துப்போட்ட இலைகளின் குவியலுக்குப்பின்

நிற்கும் மொட்டைமரத்தின் பேரிழப்பில்

குப்பைகளைக் கிளரும் பூனைகளின் பசியில்

கோடையைத் தாங்கும் இலையடர்ந்த

பச்சை இலைகளின் கவர்ச்சியில்

கண்களைக் குச்சியில் பொருத்தி நடந்துபோகும்

குருடனில்

அமைதியிலுறைந்த புல்லாங்குழல்களைக் கூவி

விற்பவனில்

கயிறில் நடக்கும் சிறுமியின் விழுந்துவிடும் அபாயத்தில்

வசந்தம் தொடர உலகே மலர்களாகிச் சிரிக்கும்

காலத்தில்

முகில்கள் கருத்துச் சொட்டும் திடீர் மழையில்

அடம்பிடிக்கும் அடைமழையில்

தெறித்து உடல் நனைக்கும் சாரலில்

குடை மறந்து கொட்டும் மழையில் நனைதலில்

புழுங்கும் போது மரமசைந்து வரும் தென்றலில்

மழைக்காலம் முடிந்து துவங்கும் பனியின் நடுக்கத்தில்

பகலை வரையும் பரிதியில் இரவைத் தீட்டும்

வான்சுடர்களில்

என் உயிரின் மர்மத்தில் இவ்வுலகில் தோன்றியதில்

சொற்களால் கவிஞனாகிவிட்ட அற்புதத்தில்

விடுபடமுடியாத பால்யத்தில்

பறந்த வண்ணத்துப்பூச்சிகளில் விட்டில்களில்

மீன்களில்

உலகைக் காட்டிய என அம்மாவில்

அன்பின் உருவமான தகப்பனில்

தம்பி தங்கை ரத்தத் துடிப்புகளில்

நட்பில் படர்ந்த உயிரில் ஒரு கவிதை விரிகிறது

அனுபவத்தில் ஒரு சொல் பல சொல்லாகி

வாழ்வாகி புனைவாகி எழுதி முடிக்கப்பட்டவை

சுவரில் மாட்டிய காணக் கிடைக்காச் சித்திரங்கள்.

 

 

 

கவிதையுச்சாடனம்

கசப்பும் புளிப்பும் வெறுப்பும் விரக்தியுமாய்

செய்யப்பட்ட நகரம் கடுஞ்சொற்களால் பாய்ச்சுகிறது

வடிவிழக்கிறது இதயம்

நம்பிக்கையிலிருந்து ஓடும் குருதியைப் பார்த்துக்

கெக்களிக்கும் விரோதங்கள் நடுவில்

துரோகங்களால் துண்டாகும் தலையைக்

கையில் தூக்கிக்கொண்டு அலைகிறேன்

இருள் நீக்கும் சுடரின் ஒளிக்காளிணி

கடும் தவத்தில் ஒளியூட்டிக்கொள்கிறேன்

ஒளிரும் பாதைகளில் இம்சிக்கும்

இருட்டுப் பிசாசுகளை

கவிதை உச்சாடனத்தில் விரட்டுகிறேன்

எத்தனையோ திசைகள் எத்தனையோ சுடர்கள்

எத்தனையோ கதவுகள் இருப்பதான மாயையில்

உயிர்க்கொடி படர்கிறது

என் வெறுமை சூன்யம் என்பவற்றை பூஞ்சோலையாக்க

வற்றவே வற்றாத நதியாகிக்கொள்கிறேன்

சுழன்று வீசும் வாஷீமீகளில் சதைகள் பிய்ந்து எலும்புகள்

வெளித் தெரிந்தபோதும் வெறிபிடித்த இலக்குகளால்

தைலங்களில் ஆற்றிக்கொள்கிறேன்

காயங்களும் காயங்களை ஆற்றுகிற

தைலங்களுமிருப்பதால்

காலம் வாள் வீசுவது வீண்

அதோ ஓடுகிற ஆற்றில் மிதக்கும் என் பரிசல்கள்

அக்கரையினைக் கடக்க

களவாடப்பட்ட துடுப்புகள் இல்லாததால்

கைகளால் நீரினைத் தள்ளிக்கொள்கிறேன்

அப்பக்கம் இருக்கும் நெருப்பு

என் கடுமிருளையொழிக்க எரிந்துகொண்டேயுள்ளது.

 

Series Navigationதொடுவானம் 82. வேளாங்கண்ணி மாதா தேவாலயம்இயக்குனர் மிஷ்கின் – தமிழ் ஸ்டுடியோ நடத்தும் இரண்டு நாள் சினிமாப் பயிற்சிப் பட்டறை
author

லதா ராமகிருஷ்ணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *