புறநானூற்றால் அறியலாகும் தமிழர் பண்பாடுகள்

author
2
0 minutes, 10 seconds Read
This entry is part 8 of 19 in the series 19 ஏப்ரல் 2015

முனைவர் போ. சத்தியமூர்த்தி

b.sathiyamoorthy5

உதவிப்பேராசிரியர்

தமிழியல்துறை

தமிழியற்புலம்

மதுரை காமராசர் பல்கலைக்கழகம்

மதுரை – 625 021.

email: tamilkanikani@gmail.com

கைபேசி: 9488616100

 

 

செம்மொழி இலக்கியமான சங்க இலக்கியம் பாட்டும் தொகையும் எனக் கூறப்படும். பாட்டு என்பது பத்துப்பாட்டு. தொகை என்பது எட்டுத்தொகை. எட்டுத்தொகையில் ஒவ்வொன்றும் பல உதிரிப் பாடல்களின் தொகுப்பு எனலாம். பத்துப் பாட்டு நெடும் பாடல்களின் தொகுப்பு ஆகும். குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, ஐங்குறுநூறு., கலித்தொகை என்ற ஐந்து தொகை நூல்களும் அக இலக்கியத் தொகைகளாகும். பதிற்றுப் பத்தும் புறநானூறும் புறத் தொகைகளாகும். பரிபாடலில் வையை பற்றியன அகப் பாடல்களாகும். ஏனைய செவ்வேள், திருமால் பற்றிய கடவுள் வணக்கப் பாடல்கள் புறம் பற்றியன ஆகும் என்ற செய்திகள் சங்க இலக்கியம் பற்றிய பொதுச் செய்திகளாகும்.

 

~~எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான புறநானூறு புறம் என்றும் , புறப்பாட்டு, புறம்பு நானூறு என்றும் அழைக்கப் படுதல் உண்டு. தமிழர் வரலாற்றுக் களஞ்சியமாகப் பழந்தமிழ் வேந்தரகள், குறுநில மன்னர்களின் வரலாற்றை அறிவிக்கும் ஆவணமாக இதைக் கருதலாம். இந்நூலுக்குப் பழைய உரை ஒன்று உள்ளது. அது முதல் 266 பாடல்களுக்கு மட்டுமே கிடைக்கிறது என்பர்”.1  இப்பழையஉரை உ.வே. சாமிநாதையர் அவர்களால் பதிக்கப் பெற்றுள்ளது. அதில் காணப்படுகின்ற திணை, துறை பகுப்புக்கள் பிற்காலத்தன . வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் முதலிய புறத்திணைகள் பலவற்றிற்கும் எடுத்துக் காட்டான பாடல்கள் இதில் உள்ளன. இத்தகைய திணைப் பாடல்களைத் தனித்துப் பார்க்கும் பொழுது புறநானூற்றுக் காலத்துத் தமிழர்களின் பண்பாட்டினை அறிந்து கொள்ள முடிகிறது.

மேலும் தமிழ் மன்னர்களின் சீர்சால் பண்புகளாம் ஒழுக்கமும், புலவர்களின் பண்பாடுகளாம் தன்மான உணர்வும் , பண்டைத் தமிழ் மக்களின் வாழ்வியல் ஒழுங்குகளாம் பண்பாடுகளும் இந்நூலில் பதிவு செய்யப் பெற்றுப் பண்டைத் தமிழரின் பெருமையைப் புறநானூறு , மற்ற இனத்தாரும் . பிற நாட்டாரும் வியப்புறும் வண்ணம் வெளிப்படுத்துகிறது. அவற்றைத் தொகுத்துக் காட்டுவது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

 

திணைத் துறை வழி; பண்பாடு:

 

உ.வே.சாமிநாதையர் தன்னுடைய மூன்றாம் பதிப்பின் முகவுரையில் ~~காலஞ் சென்ற ஜி.யு.போப் துரை அவர்களுக்குத் தமிழில் அன்பு உண்டாவதற்குக் காரணமாக இருந்தவற்றுள் இப்புறநானூறு ஒன்றாகும். அவர் இந்நூல் வெளிவந்த காலத்தில் இந்நூலைப் பாராட்டி அடிக்கடி எனக்கு எழுதுவதுண்டு, இதில் உள்ள சில செய்யுட்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கின்றார்”2 என்று குறிப்பிட்டுள்ளார்.   இத்தகைய சிறப்புப் பெற்ற புறநானூற்றில் புறத்திணைக்கு உரிய திணை , துறை அமைப்பில் பல பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அத்தகைய திணை, துறைப் பாடல்கள் அனைத்தும் தமிழர்தம் பண்பாட்டை உறுதிப் படுத்துவன ஆகும். எனவே புறநானூறு பதிவு செய்துள்ள பண்பாட்டினைத் தொகுத்துக் கூறுவது கட்டுரையின் நோக்கம் ஆயினும் , புறநானூற்றில் பண்டைத் தமிழரின் பண்பாடு மிகுந்த நிலையில் இருப்பதால் இக்கட்டுரையில் திணை, துறை அமைப்பில் இடம் பெற்றுள்ள செய்திகளை அகர வரிசைப்படி ஒருசில எடுத்துக்காட்டுவது இக்கட்டுரை ஆகும்.

 

ஆனந்தப் பையுள்;

இது ஒரு துறையாகும். இத்துறை பற்றிப் புறப்பொருள் வெண்பாமாலை கீழ்வரும் சூத்திரத்தைக் குறிப்பிடும்.

~~விழுமங் கூர வேய்த்தோ ளரிவை

கொழுநன் வீயக் குழைந்துயங் கின்று”3

இதன் பொருள் – மூங்கில் போன்ற தோளினை உடையவளின் கணவன் இறப்ப மெலிந்து வருந்தியது. இப்புறப்பொருள் வெண்பாமாலை குறிப்பிடும் கருத்தை வெளிப் படுத்துகின்ற புறநானூற்றுப் பாடல் ப10தபாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு தீப் பாய்கின்ற பொழுது கூறிய பாடலாகும். கணவன் இறந்தவுடன் தானும் உடன்கட்டை ஏறுவதற்காக முற்பட்ட பொழுது, நாட்டார் தடுத்தனர். ஆனால் பெருங்கோப்பெண்டு தன்னுடைய கணவனின் ஈமத்தீ தனக்குத் துன்பம் தராது. அது குளிர்ச்சி பொருந்திய பொய்கை போன்றதாகும் என்று கூறி அத்தீயில் பாய்ந்தாள் என்பது பாடலால் பெறுகின்ற செய்தியாகும். இப்பாட்டில் அமைந்துள்ள,

~~உயவற் பேண்டிரேம் அல்லேம் மாதோ

பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டு ஈமம்

நுமக்குஅரிது ஆகுக தில்ல எம்ககுஎம்

பெருந்தோள் கணவன் மாய்ந்தென அரும்புஅற

வள்இதழ் அவிழ்ந்த தாமரை

நள்இரும் பொய்கையும் தீயும் ஓரற்றே” (பா. 246)

இப்பாடற் பகுதி அரசர்குல மகளிர் ஒருத்தியின் தன்னுரிமையை வெளிப்படுத்தும் பகுதியாகும். பண்டைக் காலத்தில் உடன்கட்டை ஏறுகின்ற வழக்கம் இருந்தமையால் அந்த வழக்கத்திற்கு அரச மகளிரும் விதிவிலக்கு அல்ல என்ற பண்பாட்டை இப்பகுதி சுட்டிக் காட்டுகிறது. இவ்வாறு தீப்பாய்தல் மக்களிடையே இருந்தது என்பதற்குப் பிற இலக்கியமும் சான்றாகின்றது.

~~காதலன் இறப்பில் கனைஎரி பொத்தி

ஊதுலை குறுகின் உயிர்த்தகத்து அடங்காது

இன்னுயிர் ஈவர்”4

என்பதும் பெண்டிரின் அக்காலப் பண்பாட்டை எடுத்து இயம்புவதாகும்.

 

இயன்மொழி வாழ்த்து:

இது ஒரு துறையாகும். ஒரு மன்னனைப் பற்றி இயல்பாக எடுத்துரைத்தல் இத்துறையாகும். இதனை,

~~கொடுப்போர் ஏத்திக் கொடாஅர்ப் பழித்தலும்

அடுத்து ஊர்ந்து ஏத்திய இயன்மொழி வாழ்த்தும்”5 என்ற சூத்திரப் பகுதியின்படி பண்டைத் தமிழ் மன்னர்களின் இயல்பான போர் நிகழ்ச்சிகளையும், அவர்தம் கொடைத் திறனையும் போற்றிப் புகழ்வதுண்டு. அவர்கள் கொடையினைத் தகுதி அறிந்து கொடுக்கவில்லை என்றாலும், கொடுப்பதற்குக் காலம் நீட்டித்தாலும் அம்மன்னனுடைய இழிந்த பண்பையும் புலவர்கள் உரைத்துள்ளனர்.

 

பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை, நெட்டிமையார் பாடிய பாடல் அவனுடைய இயல்பான கொடைத் திறத்தைப் புலவர் பாராட்டி அவன் பல்லாண்டு காலம் வாழவேண்டும் என்று வாழ்த்துகின்ற பாடலாக அமைந்துள்ளது. இப் பாடலில் கீழ்வரும் பகுதி தமிழரின் பண்பாட்டைப் பெருமையாக எடுத்துக் கூறும் பகுதியாகும்.

~~ஆவும் ஆனியற் பார்ப்பன மக்களும்

பெண்டிரும் புpணியுடை யீரும் பேணித்

தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்

பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்

எம்அம்பு கடிவிடுதும் நும்அரண் சேர்மின்என

அறத்துஆறு நுவலும் ப10ட்கை மறம்”       (பா. 9)

இப்பாடற் பகுதியில் பண்டைத் தமிழர்கள் பகைவர் நாட்டின் மீது படையெடுக்கப் புறப்படும் முன் தாங்கள் படையெடுத்து வருவதை முன்கூட்டி அறிவித்தலும் உண்டு. அவ்வாறு அறிவிக்கும் பொழுது தங்கள் படையெடுப்பால் சாதாரணப் பொதுமக்கள் உள்ளிட்டோர் துன்பப் படக்கூடாது, தக்க பாதுகாப்பில் இருக்கலாம் என்று கூறிப் போர் தொடுப்பதாக இப்பாடல் குறிப்பிடுகிறது. ஆனிறை, அந்தணர், பெண்கள், நோயாளிகள், புதல்வரைப் பெறாதவர்கள் ஆகியோர் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கூறுகின்ற செய்தி பண்டைத் தமிழர் போர்ப் பண்பாட்டைக் கூறுவதாக அமைந்துள்ளது. மேலும் புதல்வர் பெறுதல் வாழ்வின் சிறப்புக்கு அடித்தளமாக அமையும் என்ற பண்பாட்டையும் இப்பாடல் குறிப்பிடுகிறது.அத்துடன் புதல்வரின் கடமையையும் சுட்டிக் காட்டுகிறது. புதல்வர்கள் என்போர் தன்னுடைய முன்னோர்களுக்கு நினைந்து படையல் செய்து கடமையாற்ற வேண்டும் என்ற பண்பாட்டுச் செய்தியையும் இப்பாடல் குறிப்பிடுகிறது. எனவே இப்பாடல் தமிழர்தம் பண்பாட்டுக் கலைக் களஞ்சியமாக விளங்குகிறது என்றும் கூறலாம். இத்துறையின் மற்றொரு பகுதி கொடாதவரின் இயல்பையும் கூறுவதாகும்.

~~யாங்குஅறிந் தனனோ தாங்கருங் காவலன்

காணாது ஈத்த இப்பொருட்கு யானோர்

வாணிகப் பரிசிலன் அல்லேன் பேணித்

தினைஅனைத்து ஆயினும் இனிதுஅவர்

துணைஅளவு அறிந்து நல்கினர் விடினே” (பா. 208)

என்பது பெருஞ்சித்திரனாரின் தன்மான உணர்ச்சிப் பாடலாகும். புலவர் தன்னுடைய தகுதி அறியாது, தன்னை நேரிலும் சந்திக்காது காவலர் மூலம் கொடுத்து அனுப்பிய பரிசிலை ஏற்காததைக் காட்டுவது இப்பாடல். தன்னைப் பரிசிற்காக ஏங்கும் வாணிகன் அல்லன் என்றும், தகுதி அறிந்து கொடுக்கின்ற தினை அளவு பொருளை ஏற்பேன் என்றும் புலவர் கூறுவது பண்டைக் காலத் தமிழ்ப் புலவர்களின் தன்மான உணர்வை வெளிப்படுத்துவது ஆகும். எவ்வளவுதான் வறுமையில் வாடினாலும் தகுதி அறியாது தருகின்ற பரிசினை ஏற்காத புலவரின் உள்ளம் பண்டைத் தமிழரின் பண்பாட்டைத் தெற்றெனப் புலப்படுத்துகிறது.

உவகைக் கலுழ்ச்சி:

இத்துறை வாளால் புண்பட்ட உடம்பை உடைய கணவனைக் கண்டு மனைவி மகிழ்ந்து கண்ணீர் வடித்த நிலையைக் குறிப்பதாகும். இத்துறைப் பொருளை,     ~~பேரிசை மாய்ந்த மகனைச் சுற்றிய சுற்ற

மாய்ந்த g+சல் மயக்கம்”6

என்ற சூத்திரப் பகுதிக்கு எடுத்துக் காட்டாக உரையாசிரியர்கள் எடுத்துக் காட்டியிருப்பது குறிப்பிடத் தக்கதாகும். இத்துறைக்குரிய பாடல்,

~~மீன்உண் கொக்கின் தூவிஅன்ன

வால்நரைக் கூந்தல் முதியோள் சிறுவன்

களிறு எறிந்து பட்டனன் என்னும் உவகை

ஈன்ற ஞான்றினும் பெரிதே கண்ணீர்

நோன்கழை துயல்வரும் வெதிரத்து

வான்பெயத் தூங்கிய சிதரினும் பலவே” (பா. 277)

இப்பாடலில் போர்க்களத்தில் யானையை எதிர்த்து விழுப்புண் பட்டு இறந்த மகனின் இறப்புச் செய்தி கேட்டுப் பெற்ற தாய் மகிழ்ந்தாள்,; துன்பப்படவில்லை என்ற பண்பாட்டுச் செய்தி இடம் பெற்றுள்ளது. நாட்டிற்காகத் தன் உயிரை ஒருமகன் தியாகம் செய்த பொழுது, அதனைக் கேட்டு ஈன்ற பொழுதைக் காட்டிலும் தாய் மகிழந்தாள் என்ற செய்தி பண்டைத் தமிழ்ப் பெண்டிரின் பண்பாட்டினையும், பெருமையினையும் எடுத்துக் காட்டுகிறது.

 

 

 

எருமை மறம்:

 

எருமை மறம் ஒரு துறையாகும்.

~~வெயர் பொடிப்பச் சினங்கடைஇப்

பெயர் படைக்குப் பின்னின் றன்று”7

இத்துறை வியர்வை அரும்பச் சினம் கொண்ட வீரன் ஒருவன் புறமுதுகு காட்டிய தன் சேனைக்குப் பின்னே நின்று தன் வீரத்தை வெளிப்படுத்தியது என்பதாகும். இத்துறை சார்ந்த புறநானூற்றுப் பாடல்,

 

~~தன்வடிமாண் எஃகம் கடிமுகத்து ஏந்தி

ஓம்புமின் ஓம்புமின் இவண்என ஓம்பாது

தொடர்கொள் யானையின் குடர்கால் தட்பக்

கன்றுஅமர் கறவை மான

முன்சமத்து எதிர்ந்ததன் தோழற்கு வருமே” (பா. 275)

இப்பாடலில் பகைவர்கள் தங்களுடைய படைகளைச் சூழ்ந்து கொண்டு அழிக்கின்ற நேரத்தில் வீரன் ஒருவன் , தடைகள் எல்லாவற்றையும் கடந்து, தோல்வியைக் கண்டு கொண்டிருந்த தன் நண்பனைக் காப்பாற்றக் கன்றை விரும்பும் பசுவைப் போலப் பாய்ந்து சென்று நண்பனைக் காத்தான் என்பது பாடல்தரும் செய்தியாகும். இதில் நண்பன் தோல்வியுற்றுத் திரும்பும் நிலையில் வீரன் ஒருவன் பிணக்குவியல்களாம் தடைகளைக் கடந்து, தன் நண்பனைச் சூழ்ந்திருந்த படைகளை வெற்றி கொண்டு, நண்பனின் பக்கத்தில் சென்று அவனைக் காத்தான் என்ற செய்தி வீரப் பண்பாட்டையும், நண்பனைக்

காத்த நட்பின் பண்பாட்டையும் இப்பாடல் குறிப்பிட்டுப் பண்டைத் தமிழ் வீரனின் சிறப்பையும், நட்பின் பெருமையையும் எடுத்துக் காட்டுகிறது.

 

ஏர்க்கள உருவகம்:

இது ஒரு துறையாகும். போர்க்களத்தை ஏர்க்களமாக உருவகம் செய்தலாகும். இதற்குரிய விளக்கத்தை,

~~ஏரோர் களவழி அன்றிக் களவழித்

தேரோர் தோற்றிய வென்றியும”8

என்ற சூத்திரப் பகுதி எடுத்துக் காட்டுகிறது.இத்துறையை விளக்கும் புறநானூற்றுப் பாடல்,

~~ஈரச் செறுவயின் தேர்ஏ ராக

விடியல் புக்கு நெடிய நீட்டிநின்

செருப்படை மளிர்ந்த திருத்தறு பைஞ்சால்

பிடித்தெறி வெள்வேல் கணையமொடு வித்தி

விழுத்தலை சாய்த்த வெருவரு பைங்கூழ்ப்

பேய்மகள் பற்றிய பிணம்;பிறங்கு பல்போர்பு

கணநரி யொடு கழுதுகளம் படுப்பப்

ப10தம் காப்பப் பொலிகளந் தழீஇப்

பாடுநர்க்கு இருந்த பீடுடை யாள” (பா. 269)

இப்பாடலில் சேரனின் போர்க்களம் ஏர்க்களமாக உருவகிக்கப் பட்டுள்ளது. குருதி பாய்ந்த களம் வயலாகவும், தேர் ஏராகவும் , தேர் ஓடியதால் பள்ளமான இடம் படைச் சாலாகவும், பலரும் திரிந்து மிதித்ததால் மறுசாலாகவும், வேல், கணை விதைகளாகவும், தலைசாய்ந்து விழும் வீர்ர் தலை பசிய பயிராகவும், பிணக்குவியல் நெற்போராகவும் இப் பாடலில் உருவகம் செய்யப் பெற்றுள்ளது. வயலுக்குரிய உழவர் முன்னிலையில் ஏர்க் களத்தைப் பொருநர் பாட, அவர்களுக்கு உழவர்கள் நெல்லை இறைப்பது போல, இங்கு போர்க்களத்தைப் புலவர்கள் பாடச் செங்குட்டுவன் பரிசளித்தான் என்ற செய்தி இடம் பெற்றுள்ளது.

இதனால் பண்டைத் தமிழர் வாழ்க்கையில் உழவுத் தொழிலும் போர்த் தொழிலும் இன்றியமையாதனவாகக் கருதப்பட்டமை வெளிப்படுகிறது. ஒரு நாட்டின் சிறப்பிற்குக் காரணம் பண்டைக் காலத்தில் ஏர்வளமும் போர்வளமும் ஆகும் என்பதும் பெறப்படுகிறது. இப்பாடற் பகுதியால் ஏர் உழவர் வில்லேறு உழவராகக் கருதப் படுவதால் பண்டைத் தமிழர் உணவு நிலையிலும், வீரத்தின் நிலையிலும் சிறந்து நின்றனர் என்ற பண்பாடு வெளிப்படுகிறது.

 

ஏராண் முல்லை:

 

ஏராண் முல்லை ஒரு துறையாகும். இத்துறை பற்றி,

~~மாறின்றி மறங்கனலும்

ஏறாண்குடி யெடுத்துரைத்தன்று”9

என்ற சூத்திரப் பகுதி, எதிர் இல்லாது பகைவர்கள் ஒழியச் சினம் மிகுந்த ஆண்மைத் தன்மை உடைய குடியினைப் பற்றி உயர்த்திச் சொல்வது இதன் பொருளாகும். இத் துறைக்குரிய புறநானூற்றுப் பாடல்,

~~சிற்றில் நற்றூன் பற்றி நின்மகன்

யாண்டுள னோ?என வினவுதி என்மகன்

யாண்டுஉளன் ஆயினும் அறியேன் ஓரும்

புலிசேர்ந்து போகிய கல்அளை போல

ஈன்ற வயிறோ இதுவே

தோன்றுவன் மாதோ போர்க்களத் தானே”(பா. 86)

இப்பாடல் பண்டைத் தமிழ் தாயின் குடிப்பெருமையைக் கூறுவதாகும். உன் மகன் எங்கிருக்கிறான் என்று கேட்ட பெண் ஒருத்திக்கு, வீரனைப் பெற்ற தாய் என் மகன் எங்கிருக்கிறான் என்பதை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அவன் போர்க் களத்தில்தான் இருப்பான். அவனைப் பெற்றெடுத்த வயிறு இங்கிருக்கிறது. அது எது போல என்றால் புலி தான் வாழ்ந்திருந்த குகையை விட்டுச் சென்ற பிறகு, குகை தனியே

இங்கிருக்கிறது என்று கூறுவதாகப் பாடல் அமைந்துள்ளது. தன் மகனைப் புலி எனவும் தன் வயிற்றைப் புலி இருந்து சென்ற குகையாகவும் தாய் ஒருத்தி கூறுவது அவளுடைய பெருமிதத்தைக் காட்டுகிறது. எனவே பண்டைக் காலத் தமிழ்த்தாய் பெற்ற மகன் வீரனாகத்தான் திகழ்வான் என்பதும், அவனைப் பெற்றதற்கு அவன் போர் செய்த திறம் கேட்டுத் தாய் பெருமை அடைவாள் என்பதும் பண்டைத் தமிழர் பண்பாடாகிறது.

 

களிற்றுடனிலை:

களிற்றுடனிலை என்பது ஒரு புறத் துறையாகும். ஒரு வீரன் தன்னால் கொல்லப் பட்ட யானையுடன் தானும் வீழ்ந்து இறத்தலைக் கூறுவது. இதனை,

~~ஒளிற்றெஃகம் படவீழ்ந்த

களிற்றின்கீழ்க் கண்படுத்தன்று” 10

இச்சூத்திரத்தின் பொருள் – ஒளி பொருந்திய வேலை உடைய வீரன் ஒருவன் தன்னை எதிர்த்த யானையை வீழ்த்தி, அதனோடு தானும் இறந்து பட்ட வீரச் செயலைக் கூறுவதாகும். இதற்குரிய புறநானூற்றுப் பாடல்.

~~ஆசாகு எந்தை யாண்டுளன் கொல்லோ

குன்றத்து அன்ன களிற்றோடு பட்டோன்

—————————– ————————————–

வெஞ்சின யானை வேந்தனும் இக்களத்து

எஞ்சலிற் சிறந்தது பிறிதொன்று இல்எனப்

பண்கொளற்கு அருமை நோக்கி

நெஞ்சற வீழ்ந்த புரைமை யோனே”(பா. 307)

என்ற இப்பாடலில் போர்க்களத்தில் படைவீரன் ஒருவன் தான் வீழ்த்திய யானையோடு தானும் வீழ்ந்து இறந்து பட்டான். இதனைக் கண்ட அவ்வீரனின் தலைவனாகிய மன்னன் இப்போர்க் களத்தில் தானும் விழுப்புண் பட்டுப் புலவர்கள் பாடும் வண்ணம் இறந்து போவதே சிறந்தது என்று எண்ணித் தன் உயிரைப் பெரிதாகக் கருதாது இறந்து பட்டான் என்ற செய்தி இடம் பெற்றுள்ளது.

 

அதாவது ஆட்சியில் இருப்பவர்கள் தங்களுடைய தொண்டர்கள் துன்பப் படுவார்களேயானால் அந்தத் துன்பத்தைத் தாங்களும் ஏற்றுக் கொள்ளுகின்ற பண்பு மிக்கவர்களாகப் பண்டைத் தமிழர் விளங்கினார்கள் என்பதைத்தான் இந்தப் போர்க்களக் காட்சி படம்பிடித்துக் காட்டுகிறது. எனவே மன்னன் எவ்வழி அவ்வழி மக்கள் என்பது போலப் போர்க்களத்தில் வீரத் தொண்டன் எவ்வழி அவ்வழி சினம் கொண்ட மன்னன் என்ற பண்பாட்டுச் செய்தி இதனால் பெறப்படுகிறது.

 

 

 

 

குடிநிலை உரைத்தல்:

 

குடிநிலை உரைத்தல் என்பது ஒரு துறையாகும். தொன்று தொட்டு வரும் பழமையிலும் வீரத்திலும் புகழ் பெற்ற ஒரு வீரக்குடியின் வரலாற்றைக் குறிப்பிடுவது இத்துறையாகும்.

~~மண்டினி ஞாலத்துத் தொன்மையு மறனும்

கொண்டுபிற ரறியுங் குடிவர வுரைத்தன்று” 11

இச்சூத்திரத்தின் பொருள் – மண்ணகமான ப10மியிடத்துப் பழமை நிலையையும், தருகண்மையான வீரத்தையும் கொண்ட குடியின் வரலாற்றைச் சொல்லுவது இத்துறையாகும். இத்துறைக்குரிய புறநானூற்றுப் பாடல்,

~~நுந்தை தந்தைக்கு இவன்தந்தை தந்தை

எடுத்துஎறி ஞாட்பின் இமையான், தச்சன்

அடுத்துஎறி குறட்டின் நின்று மாய்ந் தனனே

மறப்புகழ் நிறைந்த மைந்தினோன் இவனும்

உறைப்புழி ஓலை போல

மறைக்குவன் பெருமநிற் குறித்துவரு வேலே” (பா. 290)

என்ற இப்பாடற் பகுதி போர்க்களத் தலைவனைப் பார்த்துக் கூறியது. ஒரு வீரனுக்குக் கள்ளை அதிகமாகக் கொடுக்க வேண்டும் என்று பாடலில் கூறப் பெற்றுள்ளது. அதற்குக் காரணம் தலைவனின் தந்தையின் தந்தைக்கு வீரனுடைய தந்தைக்குத் தந்தை போரில் உதவி செய்தவன். இவனும் உன்மீது பகைவர் எறிகின்ற வேலை இடையில் புகுந்து தான் தாங்குகின்ற வீரன் ஆவான். எனவே மரபு வழியாக உன்குடியும் இவன் குடியும் தொடர்புடைய குடியாகும். ஆதலால் கள்ளை அதிகமாக வார்க்க வேண்டும் என்று கூறப்பெற்றுள்ளது. இப்பாடற் பகுதியின் மூலம் வீரர்குடி என்பது தொன்று தொட்டு வரக் கூடிய குடி என்பதும். பரம்பரை பரம்பரையாக அவ்வீரக்குடி தங்கள் தலைவனாகிய மன்னரின் குலத்திற்கு நன்றியோடு கூடிய வீரக்குடியாக விளங்குவார்கள் என்பதும் பெறப் படுகிறது. அத்துடன் தனக்கு உதவி செய்கின்ற வீரக் குடிக்குத் தலைவர் குடி எப்பொழுதும் உரிய சிறப்பினைச் செய்யும் என்பதும் ஆகிய பண்பாட்டை இப்பாடல் அறிவிக்கிறது.

 

செவியறிவுறுத்தல்:

 

செவியறிவுறுத்தல் என்பது ஒரு துறையாகும். புலவர்கள் தயக்கமின்றி அரசனுக்கு அறத்தை எடுத்துச் சொல்லும் துறையாகும். அரசன் செய்ய வேண்டிய காவல் முறைமையினை அவன் செவியில் உணரும்படிச் சொல்லுவதால் இத்துறை இப்பெயர் பெற்றது. இதனை,

~~மறந்திரி வில்லா மண்பெருஞ் சூழ்ச்சி

அறந்தெரி கோலாற் கறிய வுரைத்தன்று” 12

என்ற சூத்திரம் குறிப்பிடுகிறது. இதன் பொருள் – வீரத்தில் கெடுதல் இல்லாத மன்னனுக்குச் செங்கோலின் அறத்தை எடுத்துச் சொல்வது இத்துறையாகும். இத்துறைக்குரிய பாடலாகப் புறநானூற்றில் அமைந்திருப்பது பிசிராந்தையாரின் பாடலாகும்.

~~காய்நெல் அறுத்துக் கவளங் கொளினே

மாநிறைவு இல்லதும் பன்னாட்கு ஆகும்

நூறுசெறு ஆயினும் தமித்துப்புக்கு உணினே

வாய்புக வதனினும் கால்பெரிது கெடுக்கும்

அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே

கோடி யாத்து நாடுபெரிது நந்தும்” (பா.. 184)

இப்பாடலில் பாண்டியன் அறிவுடை நம்பிக்கு மக்களிடம் வரி வாங்கும் சூழ்நிலையைப் புலவர் எடுத்துரைக்கிறார். ஒரு வயலில் விளைந்த நெல்லை அறுத்து யானைக்கு இ;ட்டால் அது பலநாட்களுக்கு வரும். ஆனால் விளைந்த நெல்லை வயலில் சென்று உண்ணட்டும் என்று யானையை வயலில் இறக்கினால், அது வாயில் புகும் நெல்லை விட அதன் கால்பட்டு அழிந்து அழிவு அதிகமாகும். அதுபோலத் தக்க நிலையில் குடிமக்களிடம் வரிப் பொருளைப் பெற்றால் மக்களுக்குத் துன்பம் ஏற்படாது. எனவே அரசன் இறை கொள்ளும் நெறியை அறிந்து மக்களிடம் பெற வேண்டும். அவன் நாடு அதற்கு ஏற்பக் கோடிப் பொருளினை ஈட்டிக் கொடுத்துத் தானும் மிகவும் தழைக்கும் என்று அறிவுறுத்துவதாகப் பாடல் அமைந்துள்ளது. இப்பாடலால் அரசன் தவறு செய்கின்ற பொழுது உடனிருக்கும் புலவர்கள் இடித்துரைத்துத் திருத்தும் பணியைச் செய்வார்கள் என்பது பெறப்படுகிறது. மேலும் மக்களிடம் உரிய பொருளை வரிப்பொருளாகப் பெறுதல் என்பது முடிமன்னர் ஆட்சியிலும் அடிப்படையான அறம், முடிமன்னர்கள் மக்களை வருத்திப் பொருளைப் பெறக்கூடாது என்பதும் அறம் என்ற பழைய நம்பிக்கையும் பாடல் மூலம் பண்பாடாக வெளிப்படுகிறது. இதனைப் பிற இலக்கியமும் குறிப்பிடுகின்றது.

 

~~வாய்ப்படுங் கேடு மின்றாம் வரிசையி னரிந்து நாளும்

காய்த்தநெற் கவளத் தீற்றிற் களிறுதான் கழனி மேயின்

வாய்ப்பட லின்றிப் பொன்றும் வல்லனாய் மன்னன் கொள்ளின்

நீத்தநீர் றூல மெல்லா நிதிநின்று சுரக்கு மன்றே”13 என்ற இலக்கியப் பகுதியும் புறநானூற்றுக் கருத்தை அப்படியே வலியுறுத்துகின்றது.

 

முடிவு:

எட்டுத்தொகை நூல்களில் புறநானூறு பண்டைத் தமிழரின் வாழ்வியல் பண்பாட்டை மெய்ம்மையுற விளக்கும் கலங்கரை விளக்கமாகும். ஒவ்வொரு பாடலும் பண்டைத் தமிழரின் பண்பாட்டை வரலாற்று முறையிலும், வினையின் அடிப்படையிலும் வெளிப்படுத்துவன என்றாலும், அவற்றின் விரிவு கருதி இக்கட்டுரை புறநானூற்றில் அமைந்த திணை, துறை அமைப்பில் சில பாடல்களைக் கொண்டு தமிழரின் பண்பாட்டைப் பாடல்கள் வழி பதிவு செய்துள்ளது.

அடிக்குறிப்புகள்

  1. டாக்டர். தமிழண்ணல், புதிய நோக்கில் தமிழிலக்கிய வரலாறு, 2002, ப. 141
  2. புறநானூறு, மூலமும் உரையும், நான்காம் பதிப்பு, 1950, ப. 8
  3. புறப்பொருள் வெண்பாமாலை, சூ. 266
  4. மணிமேகலை, காதை – 2, வரி 42-44
  5. தொல்காப்பியம், புறத்திணை இயல், நச்சினார்க்கினியர் உரை, சூ. 35
  6. தொல்காப்பியம், புறத்திணை இயல், நச்சினார்க்கினியர் உரை, சூ. 246.
  7. புறப்பொருள் வெண்பாமாலை, சூ. 139
  8. தொல்காப்பியம், புறத்திணை இயல், சூ. 21
  9. புறப்பொருள் வெண்பாமாலை, சூ. 17610. புறப்பொருள் வெண்பாமாலை, சூ. 146
  10. புறப்பொருள் வெண்பாமாலை, சூ. 35
  11. புறப்பொருள் வெண்பாமாலை, சூ. 221
  12. சீவகசிந்தாமணி, பா. 2907
Series Navigationஇலங்கையில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளின் சமுதாயப் பணிகள்தமிழ் ஸ்டுடியோவின் இலக்கிய இணைய இதழ் கூடு
author

Similar Posts

2 Comments

  1. Avatar
    ந.பாஸ்கரன். says:

    திணை,துறை அடிப்படையிலான பண்பாட்டுப் பதிவுகளின் தொகுப்பு மிக சிறப்பு முனைவர் போ.சத்தியமூர்த்திக்கு வாழ்த்துக்கள். கடலூர்,முனைவர் ந.பாஸ்கரன்.

Leave a Reply to ந.பாஸ்கரன். Cancel reply

Your email address will not be published. Required fields are marked *