புலவி விராய பத்து

author
1
0 minutes, 12 seconds Read
This entry is part 4 of 11 in the series 16 ஏப்ரல் 2017

 

“புலவி” என்னும் சொல்லுக்கு ஊடல், வெறுப்பு, பிணக்கு என்று அகராதி பொருள் கூறுகிறது. படித்துச் சுவைப்போர் எப்பொருளை மேற்கொண்டாலும் சரியாகவே உள்ளது. முதலில் பார்த்தப் புலவிப் பத்து என்பதில் தலைவியும் அவள் கருத்து உணர்ந்த தோழியுமே புலந்து கூறினர். ஆனால் இதில் அத்துணை சிறப்பில்லாத காதற்பரத்தையர் புலவியும் விரவி வருதலால் இதனைப் புலவி விராய பத்து எனக்கூறினர்.

புலவி விராய பத்து—1

 

குருகுடைத் துண்ட வெள்ளக ட்டியாமை

அரிப்பறை வினைஞர் அல்குமிசைக் கூட்டும்

மலரணி வாயிற் பொய்கை யூர!நீ

என்னை ’நயந்தென்’ என்றி;நின்

மனையோள் கேட்கின், வருந்துவள் பெரிதே

 

[குருகு=நீர்ப்பறவை; அகடு=வயிறு; அரிப்பறை=உழவர் எழுப்பும் ஓசை; வினைஞர்=உழவர்; அல்குமிசை= மிக்க உணவு; வாயில்=நீர்த்துறை]

 

அவன் தான் கட்டினவளை விட்டுட்டு, வேற ஒருத்தியோட போய்ச் சேந்திருக்கான்; கட்டினவ அந்த வேற ஒருத்தியைப் பத்திக் கொடுமையாப் பேசினா; அது அந்த வேற ஒருத்தியோட காதுக்குப் போய் விழுந்திடுச்சி; அவளுக்குக் கட்டினவ மேல கோபம் வருது; ஆனாலும் அவளுக்கு என்னா செய்யறதுன்னு தெரியல; கட்டினவளுக்குதான உரிமைன்னு அவ நெனக்கறா; அப்ப அவன் அங்க வரான். வந்தவன் அவகிட்ட தான் வச்சிருக்கற அன்பைத் தெரிவிக்கறான் அவன்கிட்ட சொல்றாப்போல கட்டினவளுக்கும் தோழிக்கும் சொல்ற பாட்டு இது.

 

”குருகுன்ற பறவை என்னா செய்யுது: அது வெள்ளையா வயிறு இருக்கற ஆமையை ஒடச்சு அந்த இறைச்சியைத் தின்னுது. அதுல மீந்து போன இறைச்சியை அரிபறைன்ற ஓசையை எழுப்பற உழவரெல்லாம் தின்னுவாங்க; இன்னும் அங்க நெறைய பூவெல்லாம் கொளமெல்லாம் இருக்கற ஊரைச் சேந்தவனே! இப்ப நீ இங்க வந்து என்னை ரொம்பவும் விரும்பறேன்னு சொல்ற; இதை ஒன் பொண்டாட்டி கேட்டா அதிகமா வருந்துவா”

 

அதால நீ என்னை மறந்துடுன்னு அவ சொல்றான்றதுதான் கருத்தாம். குருகு தின்னு மீந்த இறச்சியைத் தான் உழவர்கள் தின்றாங்கன்னு சொல்றதால நான் அனுபவித்த அவனைத்தான் கட்டினவளும் அனுபவிப்பாள்னு மறைவா அவ சொல்லிக்காட்டறா; வயல்ல அறுப்பு அறுக்கறதுக்கு  முன்னால அந்த வயல்ல கூடு கட்டி இருக்கற பறவையெல்லாம் ஓடிப் போயிடணும்னு பறையடிச்சு ஒசை எழுப்பறதுதான் அரிப்பறையாம். சங்க காலத்துல என்னா அன்பு பாருங்க.

 

புலவி விரய பத்து—2

 

வெகுண்டனள் என்ப, பாண, நின் தலைமகள்

’மகிழ்நன் மார்பின் அவிழிணர் நறுந்தார்த்

தாதுண் பறவை வந்து,எம்

போதர் கூந்தல் இருந்தன’ எனவே!

 

[அவிழிணர்=இதழவிந்த மலர்க்கொத்து; நறுந்தார்=நறுமணம் கமழும் மாலை; தாதுண் பறவை=தேன் அருந்தும் வண்டினம்]

 

வேற ஒருத்தி ஊட்ல போயி இருந்த அவன் இப்பத் தன் தோழனோட இங்க தன் சொந்த ஊட்டுக்கு வரான். கட்டினவகிட்டப் பேசி சமாதானமா போலாம்னு ஆசையோட கிட்ட வரான். அப்ப ஊட்லயே இருக்கறவ தோழன்கிட்ட சொல்ற மாதிரி அவன் காதிலயும் உழணும்னு சொல்ற பாட்டு இது. அவ சொல்றா.

“தோழனே! அவனோட மாரில அழகான வாசனையுள்ள அப்பதான் பூத்த பூக்களால கட்டின மாலை இருக்கு; வண்டெல்லாம் அங்க வந்து பூக்களிலே இருக்கற தேனைக் குடிக்குதுங்க; அந்த வண்டெல்லாம் அப்பறம் இங்க வந்து என் தலையில நான் வச்சிருக்கற பூவுலயும் வந்து தங்குதுங்க; இதுக்கே அவன் போய்த் தங்கி இருந்தானே அந்த ஊட்ல இருக்கறவ கோவிச்சுக்கிட்டாஅன்னு சொல்றாங்களே!”

கட்டினவ தலையில் இருக்கற பூவைப்போயி தலைவன் மாரில இருந்த மாலையில ஒக்காந்த வண்டு மொய்க்குதுன்னா அவனும் அவளும் எவ்வளவு நெருக்கம்னு சொல்றா; அதைக்கேட்ட அந்த வேற ஒருத்தி அது ரெண்டு பேரும் சேர்ந்து கட்டிக்கிட்டதாலன்னு கோச்சுக்கிட்டாளாம்.

புலவி விராய பத்து—3

 

மணந்தனை அருளாய் ஆயினும், பைபயத்

தணந்தனை யாகி, உய்ம்மோ—நம்மூர்

ஒண்தொடி முன்கை ஆயமும்

தண்துறை  ஊரன் பெண்டெனப்  படற்கே

 

[பைபய=மெல்ல மெல்ல; தணந்தனையாகி=நீங்கினையாகி; ஆயம்=பரத்தையர்; ஊரன் பெண்டு=ஊரனுக்கு உரிய பெண்]

 

அவன் மனம் விரும்பிக் கட்டிகிட்டவளோட ரொம்ப நாளு கூட இல்ல; அதுக்குள்ளயே வேற ஒருத்தி ஊட்டுக்குப் போயிட்டான்; அதை எல்லாரும் வந்து இவகிட்ட சொல்றாங்க; அப்பறமா அவன் கட்டினவகிட்ட வரான்; அப்ப அவ சொல்றா.

 

“நீ என்னை விரும்பித்தான் கட்டிக்கிட்ட; அதுக்குள்ளயே என்னை உட்டுட்டுப் போயிட்ட; ஆனாலும் நல்லா வளையெல்லாம் போட்டுட்டு இருக்கற அவங்கள்ளாம் “குளிர்ச்சியான தண்ணித்துறை இருக்கற ஊருக்கு உரியவதாம் ஒன் மனைவி” ன்னு அவங்களைப் பத்திச் சொல்லணும்னு நெனக்கறாங்க; அப்படி அவங்களச் சொல்ற நிலைக்கு அவங்களை ஆக்குதற்கு மெல்லமெல்ல என்னை உட்டுட்டுப் போயிடு”

 

அவனைப் பிரிஞ்சதால கட்டிட்ட அவன் மனைவி வருந்தறா; என்னைப் போல அவன் போய் இப்பச் சேந்திருக்கறவங்களையும் ஊரார் நெனக்கணும்னு அவன் நெனச்சான்னா அதைக் கொஞ்சம் மெதுவா மெதுவா செய்யின்னு கோபத்துலதான் சொல்றா; குளிர்ச்சியான தண்ணித் துறைன்னு சொன்னது அவன் அவங்களோட நீராடியது தனக்குத் தெரியும்னு காட்டறதுக்குத்தான்.

 

புலவி விராய பத்து—4

 

செவியிற் கேட்பினும் சொல்இறந்து வெகுள்வோள்

கண்ணிற் காணின், என்னா குவள்கொல்–

நறுவீ ஐம்பால் மகளிர் ஆடும்

தைஇத் தண்கயம் போலப்,

பலர்படிந் துண்ணும் நின் பரத்தை மார்பே?

 

[சொல் இறந்து=சொல்லும் அடங்காமற்படிக்கு; ஐம்பால்=கூந்தல்; உண்ணல்=நுகர்தல்]

 

வேற பொண்ணுங்களோட கூடி இருந்திட்டு இப்ப அவன் தன் சொந்த ஊட்டுக்கு வரான்; கட்டினவள்கிட்டப் போய்சேரப்போறான்; அப்ப அவ பொய்க் கோபத்தோட ஒதுங்கறா; அங்க தோழி சொல்ற பாட்டு இது.

 

”தலைவனே! தை மாசத்துல எல்லாப் பொண்ணுங்களும் தலை நெறைய நல்ல வாசனையான பூவை வச்சுக்கிட்டுக் கொளத்துல எல்லாம் குளிப்பாங்க; அதுபோல எல்லாப் பொண்ணுங்களும் ஆசையோட தழுவுற ஒன் மார்பைப் பத்தி அவங்கள்ளாம் அழகாப் பேசுவாங்க; அதை எல்லாம் இவ காதால கேப்பா; அதுக்கே இவளுக்குத் தாங்கமாட்டாத கோவம் வந்துடும்; அப்படி இருக்கச்சே இப்ப நீ அவங்களோட கூடின குறிகளோடயே வந்திருக்கயே? அவ பாவம் என்ன ஆவாளோ?”

 

பொதுவா எல்லாரும் குளிக்கற கொளம்னு சொல்றதால எல்லாரும் தழுவுற மார்புன்னு அவன் மார்பைச் சொல்லிக்காட்டறா; அத்தோட ஒருத்தர் குளிச்சுட்டுப் போன கொளம்னு ஒதுங்காம வேற பொண்ணுங்களும் வந்து குளிப்பாங்க. அதுபோலவே ஒருத்தி கூட இருந்தவன்தானேன்னு நெனக்காம புதுப் பொண்ணுங்களும் வந்து ஒன்னைச் சேருவாங்க; அதேபோல இவளையும் நீ நெனக்கறது சரியில்ல.

புலவி விராயப் பத்து—5

வெண்ணுதற் கம்புள் அரிக்குரல் பேடை

தண்னறும் பழனத்துக் கிளையோ டாலும்

மறுவில் யாணர் மலிகேழ் ஊர!நீ

சிறுவரின் இனைய செய்தி;

நகாரோ பெரும! நிற்கண்டிசி னோரே!

 

[நுதல்=தலையின் மேற்பகுதி; கம்புள்=சம்பங்கோழி; கிளை=பிற கோழிகள்; ஆலும்=கூவும்; மறுவில்=குற்றமற்ற; செய்தி=செயல்]

 

அவன் கட்டினவள உட்டுட்டு வேற ஒருத்தி ஊட்டுக்குப் போக முடிவுக்கு வந்துட்டான்; சரி, கொஞ்ச நேரம் கழிச்சுப் போலாம்னு மறுபடியும் தன் ஊட்டுள்ள வந்தான்; அப்ப அவ சொல்றா,

”சம்பங்கோழி தலை வெள்ளையா இருக்கும்; அது தன் துணை பிரிந்து போனதால அதையே நெனச்சுத் தன் சொந்தங்களோட கூவிக்கொண்டிருக்கும்; அப்படிப்பட்ட வயலையும், நிறைய தண்ணீரையும் உடைய ஊரைச் சேந்தவன் நீ! பின்னாடி என்னா நடக்கும்றது தெரியாத சின்னப்பசங்க போல நீ இப்படிச் செய்யறியே? பாக்கரவங்க எல்லாரும் சிரிக்கமாட்டாங்களா?

கோழி பொலம்பறது போல நீ போனபின்னால நானும் பொலம்ப வேண்டியிருக்கும்; பாக்கறவங்க சிரிப்பாங்களேன்றது ஊரார் பழிச்சுப் பேசப் போறாங்களேன்னு மறைமுகமா சொல்லிக்காட்டறாளாம்.

புலவி விராய பத்து—6

வெந்தலைக் குருகின் மென்பறை விளிக்குரல்

நீள்வயல் நண்ணி இமிழும் ஊர!

எம்மிவண் நல்குதல் அரிது!

நும்மனை மடந்தையொடு தலைப்பெய் தீமே

 

[மென்பறை=சிறு குஞ்சுகள்; இமிழும்=ஒலித்தபடி இருக்கும்; நல்குதல்=இன்பம் தரல்; தலைப்பெய்தல்=கூடி மகிழ்தல்]

 

இந்தப் பாட்டு கொஞ்சம் புது மாதிரியா இருக்கும்; அதாவது அவன் கட்டினவள உட்டுட்டு வேற ஒருத்தியோட இருக்கான்; அப்ப அவனோட புள்ள சொன்ன சேதிய அவனோட மனைவியோட தோழிங்க வந்து சொல்றாங்க; அந்த சொல்படியே அவன் நடக்கறான். அதப் பார்த்த அந்த வேற ஒருத்தி சொல்ற பாட்டு அது.

 

”              குருகோட தலை வெள்ளையா இருக்கும்; அதோட சின்னக் குஞ்சுகள் கூவி அழச்சுக்கிட்டே இருக்கும்; அப்படிப்பட்ட வயலெல்லாம் இருக்கற ஊரைச் சேந்தவனே! இனிமே நீ இங்க வந்து என்னோட இருக்கறது முடியாதுன்னு நெனக்கறேன். அதால நீ இனிமேல ஒன்னைக் கட்டினவகிட்ட போயி ஒன் ஊட்லயே அவ கூடயே இருந்து அவளுக்கே இன்பம் குடுத்துட்டு இருந்து வாழ்ந்திடு”

 

குருகோட குஞ்செல்லாம் கூப்பிடும்னு சொல்றது ஒன் புள்ள ஒன்னைக் கூப்பிட்ட கொரலு இது வரைக்கும் கேக்குதுன்ற மாதிரின்னு சொல்றா; குருகுப்பறவை அதோட குஞ்சு கூப்பிட்ட ஒடனே வராப்ல அவனும் புள்ளகிட்ட போகப் போறன்றதும் இங்க செய்தியாகும்.

புலவி விரய பத்து—7

பகன்றைக் கண்ணிப் பல்லான் கோவலர்

கரும்பு குணிலா மாங்கனி உதிர்க்கும்

யாணர் ஊர! நின் மனையோள்

யாரையும் புலக்கும்; எம்மை மற்றெவனோ?

 

[பகன்றை=வெண்ணிறமாய்ப் பூப்பூக்கும் ஒருவகைச் செடி; கண்ணி=மாலை; கோவலர்=பசுமேய்ப்போர்; குணில்=குறுந்தடி]

 

”அது என்னா நியாயம்? ஒன் ஊட்டுக்காரி என்னைப் பத்திப் பழிச்சுப் பேசினாலாமே”ன்னு அவன் போய்ச் சேத்துக்கிட்ட ஒருத்தி அவனோட தோழரெல்லாம் கேக்கற மாதிரி சொல்ற பாட்டு இது.

 

”வெள்ளையா இருக்கற பகன்றைப் பூவையெல்லாம் ஒண்ணா சேத்து மாலையாக் கட்டி தலையில வச்சிருக்கற பசு மாட்டை மேய்க்கறவங்க எல்லாரும் கரும்பு கையில வச்சிருப்பாங்க; ஆன அவங்க என்னா செய்வாங்க தெரியுமா? கையில இருக்கற சின்ன தடியை எறிந்து மாம்பழத்தை உதிர்க்க வைப்பாங்க; அப்படிப்பட்ட ஊரைச் சேந்தவனே! ஒன் பொண்டாட்டி எல்லாரயும் கோபிச்சுக்கிட்டுப் பேசற மாதிரி என்னையும் பேசினாளாமே? அதன் ஏன்னு கேக்கறேன்?

 

கரும்பைக் கையில வச்சிருக்கறவங்க அதைக் கடிச்சுத்தின்றது போதாதுன்னு மறுபடியும் மாம்பழத்தை வேற உதிர்க்கறாங்கண்னு சொல்றது அவன் வேற பொண்ணுங்களோட போய்ச் சேருவான்; அப்பறம் அவங்களை எல்லாம் உட்டுட்டு மறுபடியும் கட்டினவகிட்டயே வருவான்னு பொருளாம்.

புலவி விராய பத்து—8

”வண்டுறை நயவரும் வளமலர்ப் பொய்கைத்

தண்டுறை ஊரனை, எவ்வை எம்வயின்

வருதல் வேண்டுவதும் என்பது

ஒல்லேம் போல், யாம் அது வேண்டுதுமே”

 

[எவ்வை=மூத்தாள் அல்லது தங்கை; ஒல்லேம் போல்=பொருந்தேம்; வேண்டுதும்=விரும்புவோம்]

 

அவனை சேத்துக்கச்ச அவனை மேலுக்கு விருப்பமே இல்லாத மாதிரி காமிச்சுப்பா; ஆனா அவன் தங்கிட்ட வர்றதுக்குத்தான் அவ விரும்புவான்னு கட்டின பொண்டாட்டி வேற ஒருத்தியைப் பத்தி சொல்றா; ஆனா அதுபோல நடக்க தன்னால முடியாதுன்னும் அவ சொல்றா; கட்டினவ இதுமாதிரி சொன்னதைக் கேட்ட சேத்துக்கிட்டவ கேள்விப்படறா; அப்ப அவ சொல்ற பாட்டு இது.

 

அவனோட ஊருல நெறய தண்ணி இருக்குற குளம் ஏரி எல்லாம் இருக்கும்; அங்க வாசனையோட எல்லாரும் விரும்பற தெனம் பூக்கற புதுப் பூவெல்லாம் பூக்கும்; அப்படிப்பட்ட ஊரை சேந்தவன் அவன்; அவன் என்கிட்ட வர்றதுதான் எனக்குப் புடிக்கும்னு அவன் பொண்டாட்டி அதாவது என்தங்கை சொல்றாளாம்; நானும் அவன் வர்றது புடிக்கலேன்னு வெளியில சும்மா காட்டிக்கிட்டு ஆனா அவன் என்கிட்ட வர்றதையே மனசில நெனச்சுகறேன்.

 

அவனைக் கட்டினவ தன்னைப் பழிக்கற மாதிரி சொல்லவே, அவ எனக்கு அவன் வேணும்னு வெளிப்படையா சொல்றா; எல்லாரும் விரும்பற பூவெல்லாம் பூக்கும்னு சொல்றது அவனை எல்லாப் பொண்ணுங்களும் விரும்புவாங்கன்னு சொல்ற மாதிரியாம்;

புலவி விராய பத்து—9

அம்ம வாழி பாண எவ்வைக்கு

எவன்பெரி தளிக்கும் என்ப பழனத்து

வண்டு தாதூறும் ஊரன்

பெண்டென விரும்பின்று அவள்தன் பண்பே

 

அவன் எப்பவும் கட்டினவகிட்டயே இருக்கான்னு எல்லாரும் வந்து அவன் சேத்துக்கிட்டு இருக்கற வேற ஒருத்திகிட்ட  சொல்றாங்க; அது கேட்ட அந்த வேற ஒருத்தி அவனோட தோழனான பாணன்கிட்ட சொல்றா.

 

”பாணனே! இதைக் கேளு; வயல்ல பூத்திருக்கற பூக்கள்ள இருக்கறத் தேன உறிஞ்சி எடுக்க வண்டெல்லாம் வர்ற ஊரைச் சேந்தவன் அவன்; அவன் இதுமாதிரி செய்யறது அவனைக் கட்டிக்கிட்டவளோட கொணம்தான் காரணம் தெரியுமா?”

ஊரார் பழிக்காதிருக்கவும், கட்டினவகிட்ட வச்சிருக்கற அன்பு காரணமாகவும்தான் அவன் இப்படிச் செய்யறானாம்; வண்டு வந்து தேனை எடுக்கறது அவன் வேற பொண்ணுங்ககிட்டப்போயி இருக்கறதைக் காட்டுது.

 

புலவி விராய பத்து—10

மகிழ்நன் மாண்குணம் வண்டுகொண் டனகொல்?

வண்டின் மாண்குணம் மகிழ்நன்கொண் டான்கொல்

அன்ன தாகலும் அறியாள்

எம்மனொடு புலக்கும்அவன் புதல்வன் தாயே

 

அவன் எப்பவும் தன்கிட்ட வராம அங்கயெ வேற ஒருத்திக்கிட்ட இருக்கான்னு அவனைக் கட்டிக்கிட்டவ சொல்றான்னு கேள்விப்பட்ட அந்த வேற ஒருத்தி அவனும் அவனோட தோழரும் கேக்கற மாதிரி  சொல்றா.

 

அவனோட கொணமெல்லாம் வண்டுங்க எடுத்துக்குச்சோ? அல்லது வண்டுங்களோட கொணமெல்லாம் அவன் எடுத்துக்கிட்டானோ? அவன் செயலும் வண்டு செயலும் ஒண்ணாதான் இருக்கே? அது எப்படி ஆச்சுன்னு அவளுக்குத் தெரியலே; அதை நெனக்காம அவனோட புள்ளக்குத் தாயா இருக்கற அவ நான்தான் அவனை விடாமப் புடிச்சு வச்சிருக்கேன்னு என்னைப் பத்தி சொல்றாளே: இது சரியா?

——————

Series Navigationசினிமா விமர்சனம் – பயிற்சிப்பட்டறைபால்வீதி ஒளிமந்தையின் கருந்துளை, கரும்பிண்டம் வடிவெடுக்கும் நுணுக்கத் திறன் முதன்முதல் வெளியாகி உள்ளது
author

Similar Posts

Comments

  1. Avatar
    நாகராஜான் says:

    திண்ணை இதழுக்கு வணக்கம். சில கட்டுரைகள் நன்றாக உள்ளன. ஒரு புதுமையான முறையில் ஐங்குறுநூறு புலவி விராயப் பத்து உரை அமைந்திருக்கிறது. சாமானிய வாசிப்பாளன் புரிந்துகொள்ளும் தன்மையில் அது அமைந்துள்ளது. இதுபோல் ஒவ்வொரு சங்க இலக்கியத்தையும் வெளியிட்டால் சிறப்பு. மேலும், தொல்காப்பியம் பொருளதிகாரத்தை வெளியிடலாம். தங்களது இதழில் வெளியிட சங்க இலக்கியக் கட்டுரைகளை அனுப்பலாமா…

Leave a Reply to நாகராஜான் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *