பூச்சிகள்

This entry is part 17 of 24 in the series 1 நவம்பர் 2015

 

கலவரப்பட்ட ஒட்டகம் மாதிரி அந்த அம்மா கத்தியதில் கையிலிருந்த கண்ணாடிக் குவளை கீழே ணங்கென்று விழுந்து உடைந்தது. சில்லுகள் காலில் குத்திவிடாமல் தாண்டித் தாண்டி சென்று பார்த்தால் அந்த அம்மா நெற்றியைப் பிடித்தபடி கழிவறையிலிருந்து வந்துகொண்டிருந்தார். என்ன நடந்ததாம்? கழிவறையில் ஒரு கரப்பான் பூச்சி மல்லாந்து கிடந்து கால்களை உதறிக்கொண்டிருந்ததைப் பார்த்துவிட்டு கத்தி எதிர்ச் சுவற்றில் மோதி நெற்றியைப் பிடித்துக் கொண்டு வருகிறார். அந்தக் கரப்பான் பூச்சியைக் கையில் பொத்தி எடுத்து உயிரோடு வெளியே போட்டுவிட்டேன். அந்த அம்மாவிடம் சொன்னேன். ‘மல்லாக்கப் போட்டால் குப்புறக்கூடத் தெரியாத அப்பாவி ஜிவனம்மா இந்தக் கரப்பாம்பூச்சி. ஏதாவது உணவுப் பிசுக்கு கிடைக்காதா என்றுதான் வருகிறது. கரப்பாம்பூச்சி கடித்து யாரும் செத்துவிட்டதாக கேள்விப்பட்ருக்கீங்களா? என்றேன். அந்த அம்மா வீட்டில் சாளரங்களைத் திறப்பதே இல்லையாம். தோம்புத் துவாரத்தைக் கூட ஒட்டுக் காகிதத்தால் நிரந்தரமாக மூடிவிட்டார்களாம். அன்றாடக் குப்பையை வெளியே போகும்போது வெளித் தோம்பில் போட்டுவிடுவார்களாம். அவர் மட்டுமா? எத்தனையோ பேர் அப்படி இருக்கிறார்கள்.

என் மகன் வீட்டுக்குள் நுழையும்போதே அகழ்வாராய்ச்சி நிபுணன் போல் குனிந்துகொண்டேதான் வருவான். எறும்புச் சாரியைப் பார்த்தால் பேகான் மருந்தை அரைடின் காலியாகும் வரை அடித்துவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பான். குளியலறையிலிருந்து என் மனைவியோ மகனோ பதறிக் கொண்டு ஓடி வந்தால் புரிந்து கொள்ளுங்கள் அங்கு ஒரு கரப்பாம்பூச்சியோ பல்லியோ இருக்கிறதென்று. பல்லியை சில சமயம் ஒற்றுத்தாளால் பொத்தி காயம்படாமல் எடுத்து வெளியே போட்டுவிடுவேன். கரப்பாம்பூச்சியை வெறும் கையாலேயே பொத்தி வெளியே போட்டுவிடுவேன். நான் கொல்லமாட்டேன் என்று அந்தப் பூச்சிகளுக்குத் தெரியுமோ என்னவோ, என்னைப் பார்த்தால் அவைகள் அஞ்சி ஓடுவதில்லை. சிறுசிறு பூச்சிகளைப் பிடிக்கத்தான் பல்லி வருகிறது. பல்லி உணவில் விழுந்தால் விஷம். அது பல்லியின் குற்றமல்ல. உணவைத் திறந்து வைத்த நம் குற்றம்தானே. எத்தனையோ தடவை சொல்லிவிட்டேன். என்றாலும் அவர்களுக்கு பயம் பயம்தான்.

எனக்குத் தெரியாமல் என் மகன் பல்லிப் பொறியை வாங்கி குளிர் பதனப் பெட்டிக்குக் கீழ் வைத்துவிட்டான். பல்லிப் பொறி என்றால் தெரியுமா? அது ஒரு பயங்கரமான பிசின். நீங்கள் விரலை வைத்தால்கூட தோலை பிய்த்துத்தான் விரலை எடுக்கவேண்டும். அந்தப் பிசினில் ஒரு பல்லி விழுந்து அசைய முடியாமல் உயிர் போனபின்னும் உயிர்த்துடிப்புடன் இருப்பதுபோல் கிடந்தது. அதை எடுக்கக்கூட அவனுக்கு பயம். அவன் என்னை அழைத்தான். பூச்சிகளை அவன் கொல்வதை நான் வெறுத்தாலும் ஒரு தடவை கூட என் கோபத்தை அவனிடம் காட்டியதில்லை. அது ஒரு கொடுமையான பொறுமை. அன்று அந்தப் பல்லியைப் பார்த்ததும் வெடித்துவிட்டேன். ‘இந்தப் பல்லியைப் போல் ஒரு மனிதனைக் கொல்வதை கற்பனை செய்து பார். ஒட்டிவைத்து அவன் துடித்துத்துடித்து ஒரு அங்குலம் கூட ஒரு உறுப்பையும் அசைக்கமுடியாமல் சாவது 100 தூக்குதண்டனைக்குச் சமமடா பாவி. ஏண்டா இப்புடிச் செஞ்சே. பூச்சிய அடிக்குறதுலேயே குறியா இருக்கியே, அந்தப் பூச்சி வர என்ன காரணம்.? வீடு சுத்தமா இல்லாததுதான். வாரத்துக்கு ரெண்டு தடவ மோப் பண்றேன். டாய்லட் பாத்ரூம் கழுவுறேன். வாஷ் பேசின மணிக்கணக்க யூஸ் பண்றியே, பக்கத்திலதானெ ப்ரஷ் இருக்கு. அத எடுத்து ஒரு தடவையாச்சும் சுத்தம் பண்ணியிருக்கியா? அவுத்துப் போட்டுட்டு அடுத்த ட்ரஸெ மாட்டிக்குட்டு கெளம்பீர்றே, அந்த அழுக்கு சட்டை உன் அலமாரி போய்ச் சேர்ர வரைக்கும் எவ்வளவு வேல இருக்குன்னு தெரியுமா? மடையா! ஏதாவது ஒரு வேல செஞ்சிருக்கியாடா? தொவச்சுக் கெடக்கிறத மடிச்சாவது வச்சிருக்கியாடா? ராஸ்கல். ‘

என் மனைவி என்னை சமாதானப்படுத்தினார் ‘இப்பப் பேசுனது யாரு? என் அத்தாவா? இவருக்கு இப்படி ஒரு முகம் இருக்கா? அவன் திகைப்பிலிருந்து விடுபடவில்லை. அதிர்ந்து உறைந்துவிட்டான். அன்றுமுதல் அவன் ஒரு புது மனிதனாக மாறிவிட்டான். எடுத்ததற்கெல்லாம் காட்டும் கோபத்திற்கு சக்தி இல்லை. அடக்கி அடக்கி வெடிக்கும் கோபத்திற்கு ஒரு சக்தி உண்டு. என் மகன் முற்றிலும் மாறிவிட்டான். இப்போது வீட்டு வேலைகள் முழுதும் அவன்தான் பார்க்கிறான்.

என்னிடம் படிக்கும் ஒரு மாணவன் இருக்கிறான். விசையைப் பற்றி சொல்லிக்கொடுத்துக் கொண்டிருக்கும்போது துள்ளிக் குதித்து பத்தடி தூரத்தில் நின்று கையை அவன் நீட்டினால் அந்தப் புத்தகத்தில் ஒரு பூச்சி இருக்கிறதென்று அர்த்தம். அது ஒரு சாதாரண தவிட்டுப் பூச்சி. பேன் மாதிரியே இருக்கும் ஆனால் பேனல்லா. அது ஒரு தரைவீடு. வீட்டைச்சுற்றி தோட்டம். இவனுக்காகவே அவர்கள் எந்த சாளரத்தையும் திறப்பதில்லை. ஒரு தாளை வைத்து அந்தப் பூச்சியை அதில் ஏறவிட்டு அப்படியே காயம்படாமல் மடித்து வெளியே வீசிவிட்டேன். அவன் வந்து அமர்ந்தான். அந்தப் பையனின் அம்மா சொன்னார். அவனுக்காகவே ஓர் அறையை 10000 செலவழித்து புதுப்பித்து தந்திருக்கிறார்களாம் ஒரு நாள் அந்த அறையில் ஒரு வெட்டுக்கிளியைப் பார்த்துவிட்டானாம். அந்த அறைக்கே இப்போது அவன் போவதில்லையாம். தவிட்டுப்பூச்சிக்கே பயப்படுகிறவனுக்கு வெட்டுக்கிளியை சகிக்கமுடியுமா? பூச்சி அவனுக்கு மனோவியாதிபோல் ஆகிவிடுமோ என்று அந்த அம்மா பயந்தார். ஒரு நாள் நான் இருக்கும்போதே ஒரு வெட்டுக்கிளி எங்கிருந்தோ வந்து சுவற்றில் அமர்ந்ததை அவனிடம் காண்பித்தேன். ஓடப்பார்த்தான். பிடித்து வைத்துக்கொண்டேன். அவன் ஒரு சிறந்த ஓவியன் என்பது இன்னொரு செய்தி. நான் மெதுவாக அருகில் சென்று அந்த வெட்டுக்கிளி மேல் சூறாவளி வேகத்தில் என் கையை வீசி பொத்தியதில் கைக்குள் சிக்கிவிட்டது வெட்டுக்கிளி. வெட்டுக்கிளியை நீங்கள் வேறு வகையில் பிடிக்கமுடியாது. பிடித்தபின் ஏனோதானோவென்று கையை மூடியிருந்தால் உதைத்துக்கொண்டு தப்பிவிடும். காயபம்படாமல் இறுகப் பொத்திக் கொண்டேன். பின்னங்கால்களின் அந்த முழங்கால் மடிப்பைப் பிடித்துவிட்டால் அதனால் ஒன்றுமே செய்யமுடியாது. பிடித்துவிட்டேன். அவன் அருகில் வந்தேன். அவன் வெகுண்டான். ‘நான்தான் பிடித்திருக்கிறேனே பயப்படாதே. இந்த முகத்தைப் பார்த்தாயா? ‘என்னெ நம்பி யாருமில்ல. யார நம்பியும் நானுமில்ல. நீ அடிச்சா செத்துருவேன். விட்டா பறந்துடுவேன். போடா’ என்று சொல்வதுபோல் இல்ல.’ இப்போதுதான் அவன் அந்த முகத்தையே பார்க்கிறான். ‘இந்த முகத்த நீ ஏன் வரஞ்சு பார்க்கக் கூடாது. ஒரு பாட்டில் எடுத்து வா.’ ஒரு ப்ரூ பாட்டிலை எடுத்து வந்தான். அதன் தகர மூடியில் நாலைந்து ஓட்டைகள் போட்டேன். பாட்டிலுக்குள் வெட்டுக்கிளியை விட்டு நாலைந்து புல் இலைகளைப் போட்டு வைத்தேன். ‘இப்போது அது தப்பிக்க முடியாது. அந்தச் சிறகுகளைப் பார். வரய வேண்டாம். எந்தக் கலர எப்புடி வேணும்னாலும் சேர்த்து இந்த சிறகின் கலரை கொண்வர முடியுதா பார்.’ என்றேன். மிகப் பெரிய ஆச்சரியம் என்ன தெரியுமா? அடுத்த நாள் கிட்டத்தட்ட 20 ஓவியங்களை வரைந்துவிட்டான். அவன் பயந்த வெட்டுக்கிளி அவனுக்கு நண்பனாகிவிட்டது. என்னிடம் சொன்னான். ‘பாவம் சார். இத விட்டுடுவோம். வேற கலர்ல வேற பூச்சி புடிப்போம். வரஞ்சு பாக்கிறேன்.’ எந்தப் பூச்சிக்கு பயந்தானோ அந்தப் பூச்சியை இப்போது அவனே தேடுகிறான். அவன் தாயாருக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி. எவ்வளவு பெரிய மனோவியாதியிலிருந்து விடுபட்டிருக்கிறான்.

ஒரு நாள் என் கைத்தொலைபேசியின் அந்த அம்மாவின் எண் மின்னியது. அவர் எப்போதும் குறுஞ்செய்திதான் அனுப்புவார். அவரின் இலங்கைத்தமிழ் கேட்க சுகமாக இருக்கும். ஆனாலும் அவர் அதிகமாகப் பேசுவதில்லை. இப்போது அவர் அழைத்தது ஆச்சிரியம்தான். எடுத்துப் பேசினேன். ‘தயவுசெய்து நீங்கள் உடனே இங்கு வரமுடியுமா சார்?’ என்றார். ‘ஏதும் பிரச்சினையாமா?’ என்று கேட்டேன். ‘நல்ல சேதிதான். நீங்க ஒடனே வந்தா நல்லது சார்.’ ‘சரி வருகிறேன்’ என்று சொல்லிவிட்டு உடனே புறப்பட்டேன். அந்தக் குடும்பம் யாழ்ப்பாணத்திலிருந்து வந்த குடும்பம். வீட்டில் இரண்டு புத்த சாமியார்கள் இருந்தார்கள். அவர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து வந்திருக்கிறார்கள் அங்கே விசாக் டே கொண்டாடுகிறார்களாம். அவர்கள் கொஞ்சம் வித்தியாசமாக கொண்டாடுகிறார்கள். யாழ்ப்பாணம் கிளிநொச்சி பகுதிகளிலிருந்து குழந்தைகளை ஒன்று திரட்டி உயிர்களிடம் அன்பு செலுத்தத் தூண்டும் விழாவாம். அந்த விழாவிற்கு அந்தப் பையனின் தந்தையை சிறப்பு விருத்தினராக அழைத்திருக்கிறார்கள். அந்தச் சாமியார்களுக்கு 50 வயதிருக்கும். காவி உடையில் முகம் தாமரையாய்ச் சிவந்திருந்தது. அந்தப் பையனின் தந்தை அவர்களிடம் என்னைப்பற்றிக் கூறி நான்தான் அந்த அழைப்புக்குப் பொருத்தமானவன் என்று சொல்லியிருக்கிறார்கள். அந்த சாமியார்களில் ஒருவர் என்னிடம் சொன்னார். ‘நீங்கதான் எங்களோட சிறப்பு விருந்தினர். யாழ்ப்பாணம் வாங்க. எல்லாவற்றையும் நாங்க பாத்துக்கிறோம். எங்க கொழந்தங்கக்கிட்ட ஒரு அரை மணி நேரம் பேசணும். அது போதும். பாஸ்போட் காபி கொடுங்க. டிக்கட் அனுப்பிவைக்கிறோம். மூன்று நாள்தான். நீங்கதான் எங்களோட முக்கிய விருந்தாளி.’ என்றார். எனக்கு தூக்கிவாரிப் போட்டது. எனக்கு இவ்வளவு பெரிய கவுரவமா? பதின்ம வயதில் நான் செய்த உயிர்கொலைகளைச் சொன்னால் அவர்கள் திரும்பிக் கூடப் பார்க்கமாட்டார்களே! உயிர்களையே கொல்லாதவன் நான் என்று இவர்களை நம்பவைத்து இலங்கை செல்ல எனக்கு விருப்பமில்லை. நான் எப்படி எப்போது இப்படி மாறினேன், எத்தனை பூச்சிகளை ஈவிரக்கமின்றி கொன்றிருக்கிறேன் என்பதை இவர்களிடம் சொல்லி அதற்குப் பிறகும் விரும்பினால்தான் செல்ல வேண்டும் என்று முடிவு செந்து கொண்டேன். அலைஅலையாக என் சிந்தனைகள் என் 5ஆம் வகுப்பு காலங்களுக்கு என்னை இழுத்துச் சென்றன.

அறந்தாங்கியில் எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு பெரிய பொட்டல் உண்டு.கட்டுமாவடி கோட்டப்பட்டணத்திலிருந்து செவ்வாய் அதிகாலை சந்தை வியாபாரத்துக்காக கருவாடுகள் அங்குதான் இறங்கும். பெரிய பெரிய கொடுவா, அரக்குலா, கட்டா கருவாடுகளை அகல விரித்து வெள்ளைப் பலகைக் கல்லில் ஓங்ஙி அடிப்பார்கள் புழுக்கள் முதுகு தூக்கிக் கொண்டு சிதறி ஓடும். பிறகு இரண்டு கை உப்பை அள்ளிப் பரப்பி மீண்டும் மூடி கட்டிவிடுவார்கள். நல்ல கருவாடு ஒன்றிரண்டை எடுத்துக்கொண்டு மரக்காயர் வீட்டுக்கே வந்துவிடுவார். அந்தப் பொட்டலுக்கு அவர் தரும் வாடகை அதுதான். இந்த வேலைகளெல்லாம் முடிந்த ஒரு செவ்வாய்க்கிழமை சாயந்தரம் நானும் என் நண்பன் கலந்தரும் அந்தப் பொட்டலில் நடந்து வந்தோம். ஏராளமான ஈக்கள் மொய்த்தன. அப்போது கலா டாக்கீஸில் ‘ஆயிரம் தலை வாங்கி அபூர்வ சிந்தாமணி’ ஓடிக்கொண்டிருக்கிறது. எம்ஜியாருக்கு மனைவியாவதற்கு முன் வி.என். ஜானகி நடித்த படம் அது. கலந்தர் கேட்டான். ‘அவள் ஆயிரம் தலையை வாங்குவது இருக்கட்டும். உன்னால் ஆயிரம் ஈயைக் கொல்லமுடியுமா?’ ‘கொன்னா என்ன தருவே?’ ‘என் காசில ரெண்டு பேரும் படம் பாக்கிறோம்.’ என்று சொல்லி எட்டணாவைக் காட்டினான். சவாலை ஏற்றுக் கொண்டேன். வீட்டுக்குப் போய் இரண்டு வெல்லக்கட்டியும் ஒரு அலுமினியத் தட்டும் எடுத்து வந்தேன். அலுமினியத் தட்டில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி வெல்லக்கட்டியைக் கரைத்து அதிகமாக ஈக்கள் மொய்க்கும் நாலைந்து இடங்களில் தெளித்துவிட்டேன். போட்டிக்குத் தயாரானேன். வெல்லக்கட்டி, கருவாடு இது போதாதா இந்த ஈக்களுக்கு. ஒன்றின் மீது ஒன்று ஏறிக்கொண்டு மொய்த்தது. புயலாக என் இடது கையை அதன்மீது வீசி பொத்தினேன். 30,40 ஈக்கள் சிக்கியிருக்கும். விரல் இடுக்கில் வெளியேற முயற்சித்தன. பிள்ளையார் கோயிலில் தேங்காய் உடைப்பதுபோல் வெள்ளைப் பலகைக் கல்லில் நச்சென்று ஓங்ஙி அடித்தேன். எல்லாம் செத்து வீழ்ந்தன. ஒரு சில தள்ளாடித்தள்ளாடி நடந்தன. அந்த ஈக்களையும் மண்டையில் தட்டிக் கொன்றேன். கலந்தர் எண்ணி எண்ணி அலுமினியத் தட்டில் போட்டான். பிறகு அடுத்த இடம் அடுத்த இடம். முப்பது வீச்சில் ஆயிரம் ஈக்கள் செத்து வீழ்ந்தன. டிக்கட்டுக்கு அவன் தந்த விலை மூன்றணா. நான் தந்த விலை ஆயிரம் ஈக்களின் உயிர்.

ஆடிமாதம் வந்தால் பயிர்க்குழி வேலையை ஆரம்பித்து விடுவார் அத்தம்மா. (அப்பாவின் அம்மா) புடலைப் பந்தலை விசாலமாகப் போட்டு கொடியை கொம்பில் ஏற்றி விடுவார். புடலை ஒரு நாளைக்கு ஒரு சாண் வளரும். மூன்றே வாரத்தில் பூ பூத்தது. பிஞ்சு வந்தது. அடுத்த நாள் பிஞ்சு இருக்காது. கரட்டான்கள் (ஓணான்கள்) கடித்துவிடும். என்ன செய்யலாம். நாலைந்து கரட்டான்களை அடித்துத் தொங்கவிட்டால் கரட்டான்கள் வராதாம். கரட்டான் கொண்டு வரும் வேலையை அத்தம்மா என்னிடம் தந்தார். ஞாயிற்றுக் கிழமைகளில் கரட்டான் வேட்டை எங்களுக்கு மிகவும் பிடித்த விளையாட்டு. எங்களில் ஒரு சங்கர்லால் இருப்பான். அவன்தான் முன்னே செல்வான். தமிழ்வாணனின் துப்பறியும் கதைகளில் வரும் அந்த சங்கர்லாலை யாராலும் மறக்க முடியாது எங்களிடமும் ஒரு சங்கர்லால். கரட்டானைத் துப்பறிவான். கரட்டானைப் பார்த்துவிட்டால் எங்களை எச்சரித்து விடுவான். முதல் கல் வீசுவது நான்தான். எனக்குப் பேரே ‘நொட்டாங்கை பன்னீர்’ சாப்பிடுவது தவிர எல்லாமே இடது கைதான். பொட்டில் அடித்தால்தான் ஒரே அடியில் விழும். வேறு இடத்தில் அடித்தால் அடியை வாங்கிக்கொண்டு ஓடிவிடும். கொல்வதைவிட அரைகுறை உயிருடன் பிடிப்பதே எங்களுக்குப் பிடிக்கும். புகையிலையோடு ‘அம்பக்கு அஜ்மீர்’ தயாராக இருப்பான். அதன் வாயைப் பிளந்து இரண்டு புகையிலைத் துண்டை வைத்தால் பைத்தியம் போல் சுற்றிச் சுற்றி வரும். நாங்கள் கைதட்டி ரசிப்போம். நாலைந்து கரட்டான்களை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு ஓடினேன். அத்தம்மா கட்டித் தொங்கவிட்டார். ஒரு பாகம் நீளத்திற்கு புடலங்காய் காய்த்துத் தொங்கியது. அதோடு எலும்பும் தோலுமாக கரட்டான்களும் தொங்கின. செத்த எலிபோல் கொடுமையான நாற்றம். இன்றுகூட புடலங்காயைப் பார்த்தால் அந்தக் கரட்டான் ஞாபகம்தான் எனக்கு வருகிறது.

ஜிலேபிக்கெண்டை என்ற ஒரு மீன் வகை அறிமுகமாகியிருந்தது. அந்தக் குஞ்சை வாங்கி குளங்களில் விட்டால் மூன்றே மாதத்தில் 500 கிராம் அளவுக்கு பெருத்துவிடும். ராவுத்தர் தன் குளத்தில் ஏராளமான குஞ்சுகளை விட்டிருந்தார். குளத்தில் சிறு முறுக்குத் துண்டைப் போட்டாலும் ஏராளமான மீன்கள் சுழிக்கும். ஞாயிற்றுக் கிழமைகளில் தூண்டில் போடுவது எங்களின் இன்னொரு விளையாட்டு. தூண்டில் செய்வதில் நான் கில்லாடி. நைலான் நரம்பில்தான் தூண்டிமுள்ளைக் கட்டவேண்டும். மயிலிறகுத் தட்டைக்கும் தூண்டிமுள்ளுக்கும் இடையே உள்ள தூரம் கச்சிதமாக இருக்க வேண்டும். இதிலெல்லாம் எனக்கு ஒரு நிபுணத்துவமே இருந்தது. தூண்டில் போடுவதற்கு முன் நாக்கட்டாம்பூச்சி சேர்க்க வேண்டும். நாக்கட்டாம்பூச்சியின் இலக்கியச் சொல் மண்புழு. ஜெமீலாக்காவின் சாணிக்குப்பையில் ஒரு குத்து குத்தி நெம்பினால் போதும். நூடுல்ஸ் மாதிரி மண்புழுக்கள் சுருட்டிக் கொண்டு வெளியாகி மீண்டும் மண்ணுக்குள் ஓடப்பார்க்கும். ஒரு கொட்டாங்கச்சியில் மண் போட்டு நாக்கட்டாம்பூச்சி சேர்ப்போம். அந்தப் பூச்சியை மூள்ளில் ஏற்றுவதே ஒரு கலை. தலையின் முனைப்பகுதியை முள் நுனியில் வைத்து துடிக்கத் துடிக்க ஏற்ற வேண்டும். புழுவில் முள் பொத்துக்கொண்டு வெளியே வந்துவிடக்கூடாது. முழு முள்ளையும் அந்தப் பரிதபத்துக்குரிய புழு மூடியிருக்க வேண்டும். எஞ்சிய பகுதி பல்லிவால் மாதிரி துடிக்கும். அதைக்கிள்ளி கொட்டாங்கச்சியில் போட்டுவிடுவோம். அது அடுத்த முள்ளுக்கு. சாயந்தரத்துக்குள் 20,30 மீன்கள் பிடித்துவிடுவோம். தெக்குவாடி போய் ‘மீனு மீனு’ என்று கூவினால் முக்கால் ரூபாய் அல்லது ஒரு ரூபாய் சேர்ந்துவிடும். முறுக்கு சுண்டலோடு சினிமா பார்க்கலாம். அப்படி மீன் விற்று நான் பார்த்த முதல் படம் ‘மக்களைப் பெற்ற மகராசி’ ஒரு கவிதையில் கூட எழுதியிருப்பேன்.

‘கொண்டுவிற்ற எட்டணாவில்

மண்தரை வெண்திரையில்

மக்களைப் பெற்ற மகராசி’ என்று

விரால் மீன் பிடிப்பது இன்னொரு கலை. இந்த இடத்தில் உங்களுக்குக் கொஞ்சம் அலுப்புத் தட்டலாம். இப்போதுதான் கதையின் உயிரே தொடங்குகிறது. தயவுசெய்து என்னோடு தொடருங்கள். விரால் மீன் பிடிக்க பம்பரக் கயிறு வேண்டும். தூண்டி முள் மூன்று மடங்கு பெரிதாக இருக்கும். மண்புழுவெல்லாம் அதற்குப் பிடிக்காது. சிறிய கெண்டைக் குஞ்சை நசுக்கி அந்த முள்ளில் கோர்க்க வேண்டும். நீளமான மூங்கில் குச்சி தேவையில்லை. ஒரு சாண் நீளத்தில் கட்டையான ஒரு குச்சி போதும். நூலின் நீளம் பத்தடி இருக்க வேண்டும். மாலை 6 மணிக்கு கவண்கல் விடுவது போல் தூண்டிலை தலைக்கு மேல் மூன்று சுற்று சுற்றி குளத்துக்குள் வீச வேண்டும். தட்டையெல்லாம் தேவையில்லை. அப்படியே சகதியில் மொத்தமும் பதிந்து மறைந்துவிடும். விராக்கள் சகதியில்தான் வாழும். காலை 6 மணிக்கு இழுத்துப் பார்த்தால் விரால் விழலாம். பத்துத் தடவைக்கு ஒரு தடவைதான் விழும்.

இப்படித்தான் ஒரு தடவை விரால் தூண்டிலை தலைக்கு மேல் சுழற்றினேன். சுற்றிவந்த தூண்டிமுள் நச்சென்று என் தொடையில் ஏறிவிட்டது. உய்யென்று கூட்டம் கூடிவிட்டது. ராவுத்தரின் ஆள் வந்துவிட்டால் ஆபத்து. சேதி அத்தாவுக்குப் போய்விடும். தூண்டிலின் நாக்குப் பகுதி உள்ளே இறங்கிவிட்டது. கிழித்துத்தான் அதை எடுக்கமுடியும். என் தம்பி அலறி அடித்துக்கொண்டு ஓடிவந்து கூட்டத்தை விரட்டினான். நூலை எல்லாம் அறுத்துவிட்டு ஒரு சைக்கிளை எடுத்து வந்து என்னை பின்னால் உட்காரவைத்து கம்பவுண்டர் நாராயணசாமி வீட்டுக்கு அழுத்தினான். மருத்துவமனையெல்லாம் அந்த நேரம் இருக்காது. அப்படியே இருந்தாலும் டாக்டர் உடனே அத்தாவுக்குத்தான் ஆள் அனுப்புவார். நல்லவேளை. நாராயணசாமி இருந்தார்.

‘வாங்கடா பசங்களா.என்ன சேதி?

‘பன்னீருக்கு தூண்டிமுள் குத்திருச்சு.’

‘முள்ளா? எங்கடா?’

நான் காலை காண்பித்தேன். ‘அடப்பாவி! எப்புர்றா இப்புடி குத்திக்கிட்டே. இதக் கிழிக்காமெ எடுக்கமுடியாதுடா. மயக்க மருந்து தர எனக்குத் தெரியாதுடா. என்னடா இப்புடிப் பண்ணிட்டிங்களேடா.’

‘கிழிச்சாவது எடுங்க சார். வலியத் தாங்கிக் கிர்றேன் சார்.’

‘சரி. டேய் அக்பரு. போய் ஒரு பனாமா பிளேடு வாங்கிட்டு வா. காசு இருக்கா? தரவா?’

‘இருக்குசார்’ என்று அவன் ஓடினான். ஐந்தே நிமிடத்தில் பிளேடோடு வந்தான். பேப்பரோடு அதை இரண்டாக உடைத்தார். நான் இறுகக் கண்களை மூடிக்கொண்டு ஒரு மரண தண்டனைக்குத் தயாரானேன். என் பொட்டில் துப்பாக்கி குறிவைத்திருக்கிறது. அது சிறிது நேரத்தில் என் பொட்டை பிளக்கப் போகிறது என்று எனக்குள் ஒரு திகில்.

அந்த முள் குத்திய வாயில் பிளேடை அழுத்திக் கிழித்து பிளந்து பார்த்தார். நாக்கு தென்பட்டது. அதற்கு மேலுள்ள தசைநாரை லேசாக வெட்டிவிட்டு முள்ளை எடுத்துவிட்டார். வழிந்த ரத்தத்தை பொறுமையாக அக்பர் துடைத்தான். ஒரு பிளாஸ்டரைப் போட்டு போகச் சொல்லி விட்டார். இருக்கும் காசையெல்லாம் தேற்றியதில் ஒரு ரூபாய் தேறியது. அக்பர் கொடுத்தான். ‘யாருக்குடா காசு தர்றே? எனக்குக் கடை தந்து யாபாரத்துக்கு காசும் தந்து என்னெ ஆளாக்குனவருடா ஒங்க அத்தா. வேற ஒரு புள்ளயா இருந்தா தொட்டுருக்க மாட்டேன்டா. மட்டமான பசங்கடா நீங்க.’ அக்பர் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டான். ‘அத்தாக்கிட்ட சொல்லிடாதீங்க’ என்றான். தட்டிக்கொடுத்து அவனைத் தூக்கினார். ‘நா சொல்லமாட்டேன். வேறு யாரும் சொல்லாம பாத்துக்கப்பா’ என்றார்.

சரியா ஒரு வாரம். புண்ணெல்லாம் ஆறிவிட்டது. கவட்டையில் (தொடையின் மேல் பகுதி) ஒரு கட்டி புறப்பட்டது. அதற்குப் பெயர் சிலந்திக் கட்டியாம். முகம் தெரியாமல் சிவப்பாய் உப்பிக் கொண்டு வந்தது. கல் மாதிரி அழுத்தம். தொட்டால் செத்துவிடலாமா என்று நினைக்கத் தோன்றும் வலி. விண் விண்ணென்று தெறித்தது. ஆடாதோட இலையைப் பறிந்து வந்து விளக்கெண்ணையைத் தடவி அனலில் வாட்டி புண்ணில் மேல் வைத்தார் அத்தம்மா. ஒரு வாரம் இப்படிச் செய்து அதைப் பழுக்க வைத்தார். அது உடைந்தபோது ரத்தமும் சீழும் ஒரு கொட்டாங்கச்சி நிறைய வந்தது. அதைத் தொடர்ந்து முழங்காலில் ஒரு கட்டி. காலை மடக்க நீட்ட முடியவில்லை. முழங்கைதான் கால்கள். இருப்பிடத்தைத் தரையில் ஊன்றி நக்கரித்து நக்கரித்துத்தான் நகரவேண்டும். பிறகு அடுத்த காலிலும் முழங்காலை மடக்கும் இடத்தில் இன்னொடு கட்டி. இப்போது நக்கரிக்கவும் முடியாமல் போய்விட்டது. அத்தம்மா என் தலைமாட்டிலேயே இருந்தார். உமிக்கருக்கால் பல் தேய்த்துவிட்டு வாய் கொப்பளிக்க வைப்பார். பருப்புத் துவயலோடு மறுஉலைக் கஞ்சியை ஊட்டிவிடுவார். ஒரு அலுமினியச் சகானில் ஒன்னுக்கைப் பிடித்து வெளியே கொட்டிவிட்டு மீண்டும் சாம்பலில் தேய்த்து அடுத்த ஒன்னுக்குக்கு தயாராய் கொண்டு வந்துவிடுவார். மலம் பிடிக்க இன்னொரு சகான். மலத்தை அகற்றி கழுவிவிடுவார் ஒரு வெள்ளைத்துணியை வெந்நீரில் நனைத்து உடம்பு முழுவதும் துடைத்துவிட்டு ரெமி பவுடர் போட்டு விடுவார். ஐந்து வேளையும் என் தலைமாட்டிலேயே தொழுது கொள்வார். யாசின் ஓதி அழுது அழுது துஆ கேட்டார். ‘என் அத்தம்மா எனக்குச் செய்த பணிவிடைகளை உயிராகப் பிறந்த யாராலுமே செய்யமுடியாதய்யா. அந்த அத்தம்மாவுக்கு நான் ஒன்னுமே செய்யலியேய்யா.நெனச்சாலே வயிறு குப்புன்னு பத்திக்கிதே அய்யா.’

புதுக்கோட்டையிலிருந்து ராமச்சந்திரன் பிள்ளை என்று ஒரு டாக்டர் ஒரு கல்யாணத்துக்காக அறந்தாங்கி வந்தார். அவரை அத்தா வீட்டுக்குக் கூட்டி வந்தார். கட்டியைப் பார்த்தவுடன் கேட்டார். ‘ஒடம்புல எங்காச்சும் முள்ளு கிள்ளு குத்திச்சா?’

அத்தா சொன்னார். ‘எப்போதும் இந்த வேலிக் கருவக் காட்டுலதான் வெளையார்றாங்கே. குத்துனாக்கூட அவிங்களுக்குத் தெரியாது சார்.’ நாங்கள் சொல்ல வேண்டிய பொய்யை அத்தாவே சொல்லிவிட்டார். ‘இதுக்கு ஒரு வெல ஒசந்த மாத்திரை இருக்கு. அது பென்சிலின் ஜாதி. சிலருக்கு ஒத்துக்காது. ஒரு மாத்திரயப் போடு. ஒடம்பெல்லாம் அரிச்சா சாப்டக் கூடாது.’ என்று சொல்லிவிட்டு கைவசமிருந்து ஒரு மாத்திரையைக் கொடுத்தார். அதன் பெயர் கூட எனக்கு ஞாபகம் இருக்கிறது. ‘பெண்டிட்ஸ்’. எனக்கு ஒன்றுமே ஆகவில்லை. அந்த மாத்திரை 30 சாப்பிடவேண்டும் ஒரு நாளைக்கு நாலு வேளை. ‘ஒரு மாத்திரையிலேயே அந்தக் கட்டி வராது. திரும்ப வந்துச்சு ஒடனே புதுக்கோட்டைக்கு கூட்டி வந்திருங்க’ என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார். அந்தக் கட்டி பிறகு எட்டிப் பார்க்கவே இல்லை. கிட்டத்தட்ட மூன்று மாதம் பள்ளிக்கூடம் போகவில்லை. என்னுடைய கூட்டமெல்லாம் என்னைப் பார்க்க அடிக்கடி வீட்டுக்கு வந்தார்கள். ஆசிரியர்கள் வந்தார்கள். அப்போதுதான் எனக்கு ஞானோதயமாக உதித்தது. ‘பூச்சிகளைக் கொல்லாதே. தேவையில்லாமல் அவைகளை துன்புறுத்தாதே. நீ கொன்றதற்கெல்லாம் தண்டனை அனுபவித்து விட்டாய்.’ என்று அடிக்கடி கனவில் ஒரு குரல் கேட்டுக் கொண்டே இருந்தது.

‘என்ன சார் ரொம்ப யோசிக்கிறிங்க?’ என்ற சாமியாரின் குரல் கேட்டு நினைவு திரும்பினேன். அவரிடம் சொன்னேன். ‘சின்ன வயசில ஆயிரக்கணக்கான பூச்சிகள ஈவு இரக்கமில்லாம கொன்னுருக்கேன். ஒங்க அழைப்பை ஏத்துக்க நான் தகுதியான ஆளு இல்லய்யா.? கேட்ட மாத்திரத்தில் ‘ஹோ…ஹோ…’ என்று சப்தமாகச் சிரித்தார். அந்த சாமியார் சிரித்ததில் அதுவரை ஒளிந்து கொண்டிருந்த கடவாய்த் தங்கப்பல் முகம் காட்டி மின்னியது. ‘என்ன அய்யா. எதுவும் தப்பா சொல்லிட்டேனா?’

தப்பு இல்லங்க அதான் நிஜம். அசோகச் சக்கரவர்த்தி லட்சம் பேரக் கொன்னுட்டுதான் புத்த மதத்துக்கு வந்தார். அவர வேணாமுன்னு யாரும் சொல்லலியே. தவறே செய்யாதவன விட தவறு செஞ்சு திருந்துறவன்தானய்யா ஞானி. திரும்பவும் அந்தத் தவற மனசுல கூட நெனக்காதவந்தாய்யா யோகி’ மீண்டும் சிரித்தார். நீங்க யோகி.

இப்போது நான் கொழும்புக்கு பறந்து கொண்டிருக்கிறேன். அந்தக் குழந்தைகளிடமெல்லாம் சொல்லப் போகிறேன். ‘பூச்சிகளை சித்ரவதை செய்யாதீர்கள். கொல்லாதீர்கள்’ என்று. அவர்களுக்கு மட்டுமா. உங்களுக்கும்தான் சொல்கிறேன். ‘பூச்சிகளைக் கொல்லாதீர்கள். பூச்சிகள் வருவதற்கான காரணத்தைக் கொல்லுங்கள்.

 

யூசுப் ராவுத்தர் ரஜித்

 

 

Series Navigationஎழுத்தாளர்கள் சந்திப்பு நவம்பர் 21,22 : திருப்பூர்மகன்வினையா? அதன்வினையா?
author

யூசுப் ராவுத்தர் ரஜித்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *