பெண்கள் அசடுகள் !

This entry is part 8 of 8 in the series 29 நவம்பர் 2020

(9.4.1995 ஆனந்த விகடனில் வந்தது. கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன்  “வாழ்வே தவமாக” எனும் சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றது.)

      அண்ணனும் தங்கையும் ஒருவரோடொருவர் வாக்குவாதம் செய்துகொள்ளும் போது தூள் பறக்காத குறைதான். அதிலும் ஆண்-பெண் சமத்துவம், பெண்களின் அடிமைப்படுத்தப்பட்டுள்ள நிலை ஆகியவை பற்றி இருவரும் சண்டை போடத் தொடங்கினால், அந்தச் சண்டை கிட்டத்தட்ட அடிதடியில் முடியக் கூடிய நிலை உருவாகும்.

      அன்றும் அப்படித்தான்.  அர்த்தமற்ற உணர்ச்சி வசப்பட்டு அசட்டுத்தனமாக நடந்து கொள்ளுகிறவர்கள் பெண்கள்தான் என்று அவன் அன்றைய சண்டையைத் தொடங்கிவைத்தான்.

       “பெண்கள் உணர்ச்சி வசப்படுகிறவர்கள் என்பதை ஒப்புக்கொள்ளுகிறேன்.  ஆனால், அதன் விளைவாக அவர்கள் அசட்டுத்தனமாக நடந்துகொள்ளுவார்கள் என்பதை என்னால் ஒப்புக்கொள்ள முடியாது. உணர்ச்சி வசப்படுதல் இல்லாததால் பல ஆண்கள் கொடுமைக்காரர்களாக இருப்பதை நான் சுட்டிக்காட்ட முடியும்,” என்றாள் அவள்.

       “உணர்ச்சி வசப்படுதல் தப்பா, சரியா, தேவையா, இல்லையா என்பது நான் எடுத்துக்கொண்ட விஷயம் அன்று. அப்படி உணர்ச்சியின் பிடியில் சிக்கி இருக்கும் போது அசட்டுத்தனமாக நடந்து கொள்ளுகிறவர்கள் பெண்கள் என்கிறேன் நான்!” என்றான் அவன் அழுத்தமாக.

      அவள் சில நொடிகள் வரையில் பதில் ஏதும் சொல்லாதிருந்தாள். ஆனால், ஆழமாக ஏதோ யோசிப்பவள் போன்ற முகச் சுருக்கங்களுடன் இருந்தாள். சட்டென்று அவள் முகம் ஒளிகொண்டு விட, கண்கள் பளிச்சிட்டன. உதடுகளில் வெற்றிப் புன்னகை வந்து உட்கார்ந்துகொண்டது.

       “அதீதமான அளவில் உணர்ச்சி வசப்படும் போது, ஆண்கள் முட்டாள்தனத்தின் எல்லைக்கே போய்விடுகிறார்கள் என்பதை என்னால் நிரூபிக்க முடியும்! இன்று மாலை நீ வீடு திரும்பும் போது அதற்கான ஆதாரங்களை நான் உனக்குக் காட்டுகிறேன்!” என்று சொன்ன அவளை அவன் வியப்பாகப் பார்த்தான்.

       ‘உணர்ச்சியின் பிடியில் இருக்கும் போது ஆண்கள் முட்டாள்தனத்தின் எல்லைக்கே போகிறார்களாமே! அதற்கான என்ன ஆதாரத்தை இவள் காட்டப் போகிறாள்?’ என்று அவன் திகைப்படைந்து விழிகள் விரிய அவளைப் பார்த்தான்.

       “என்ன ஆதாரம் காட்டப் போகிறாய்?  ஒன்றும் புரியவில்லையே!  … எதுவானாலும், நான் ஒப்புக் கொள்ளும் படியான ஆதாரமாக அது இருக்க வேண்டும்!” என்று அவன் நிபந்தனை போடுகிற குரலில் பேசினான்.

       “நிச்சயமாக!” என்றாள் அவள்.

       சற்று நேரத்தில் அவன் தன் நண்பன் ஒருவனோடு திரைப்படம் பார்ப்பதற்காக வெளியே புறப்பட்டுப் போனான்.

       அவன் போன பிறகு  அவள் தன் அப்பாவின் அறைக்குப் போனாள். அவள் அவரது அறைக்குள் நுழைந்த நேரத்தில் அவர் பிற்பகல் உறக்கத்துக்காகக் கட்டிலின் மீதிருந்த மெத்தையைச் சரி செய்து கொண்டிருந்தார்.

       “என்ன, அம்மா?”

       “அப்பா! பழைய தினத்தந்தி, தினமணி நாளிதழ்களை யெல்லாம் நாள் வரிசையாக அடுக்கி வைத்திருக்கிறீர்களே, அவற்றை யெல்லாம் புரட்டிப் பார்த்து நான் சில குறிப்புகளை எழுதிக்கொள்ள வேண்டும், அதற்குத்தான்”

       அவர் முப்பத்தைந்து ஆண்டுகளாகப் பத்திரிகை நிருபராகப் பணி புரிந்துகொண்டிருப்பவர். எல்லா நாளிதழ்களையும் ஆண்டுவாரியாக – நாள், மாதம் ஆகியவற்றின் வரிசைப்படி – அடுக்கி வைத்திருந்தார். இதற்கென்றே அந்த வீட்டின் ஓர் அறையைச் சுவரொட்டிய அலமாரிகளுடன் அவர் ஒதுக்கி வைத்திருந்தார். அந்த அறைக்குள் யரும் நுழைவதை அவர் பொதுவாக அனுமதிப்பதில்லை. பத்திரிகைகளின் ஒழுங்கான அமைப்பை அவற்றைப் புரட்டுபவர்கள் குலைத்து விடுவார்கள் என்கிற அச்சம் அவருக்கு.

       “ஏதாவது கட்டுரை எழுதப் போகிறாயா என்ன?” என்றார் அவர்.

       “எதற்காக என்பதை இன்று மாலை சொல்லுகிறேன், அப்பா! அண்ணனோடு ஒரு சண்டை! … அவனை மட்டந்தட்டுவதற்கான ஆதாரங்களைத் திரட்டப் போகிறேன்.”

       “எல்லாவற்றையும் அவற்றை எங்கிருந்து எடுத்தாயோ அதே இடத்தில், நான் வைத்திருந்தது மாதிரியே, தேதிப்படி வரிசையாக வைத்துவிட வேண்டும், புரிந்ததா? இல்லாவிட்டால் நாளைக்கு ஏதேனும் குறிப்பிட்ட நாளிதழைப் புரட்ட வேண்டிய அவசியம் எனக்கு வரும் போது, அதைத் தேடி எடுக்கும்படி ஆகிவிடும்!”

       “இல்லை, அப்பா! அதே ஒழுங்கில் அப்படியே திருப்பி வைத்துவிடுவேன்.”

       “உன் அண்ணனுக்கும் உனக்கும் என்ன சண்டை? அதற்கும் நீ பழைய நாளிதழ்களைப் புரட்டுவதற்கும் என்ன சம்பந்தம்?”

       “பெண்கள் உணர்ச்சி வசப்படும் போது அசட்டுத்தனமாக முடிவெடுப்பார்கள் என்கிறான். உணர்ச்சி வசப்படும் போது ஆண்கள்தான் அசட்டுத்தனத்தின் எல்லைக்கே போவார்கள் என்று நான் சொல்லுகிறேன்.”

       “அந்தப் பந்தயத்துக்கும் நீ பழைய நாளிதழ்களைக் கிளறுவதற்கும் என்ன சம்பந்தம்?”

       “நிறையவே சம்பந்தம் இருக்கிறது, அப்பா!  இன்று சாயந்தரம் அண்ணாவிடம் அது பற்றிப் பேசி அவன் நினைப்பது தப்பு என்பதை உங்கள் முன்னிலையிலேயே நிரூபிக்கிறேன். அப்போது நீங்களும் தெரிந்து கொள்ளுவீர்கள். அது வரையில் இது உங்களுக்கும் பரபரப்பாகவே இருக்கட்டும்!”

       அப்பா சிரித்தார்.

       “அறைச் சாவி வேண்டுமே?”

       அப்பா அதைத் தமது கைப்பையிலிருந்து எடுத்து அவளிடம் நீட்ட, அவள் அதை வாங்கிக்கொண்டாள். அவரது அறையை விட்டு முற்றாக வெளியேறுவதற்கு முன்னால் திரும்பிப் பார்த்த அவள், “அப்பா! நடிகர் கஜராஜன் இறந்து போன தேதி ஜனவரி பதினாலு, 1989 தானே?” என்று கேட்டாள்.

       “ஆமாம், அம்மா! நன்றாக ஞாபகம் வைத்துக் கொண்டிருக்கிறாயே!” என்று பாராட்டிய அவர், அடுத்த கணம், “இந்தக் காலத்துப் பிள்ளைகள் சினிமா சம்பந்தப்பட்ட விவரங்கள், தேதிகள் இவற்றை யெல்லாம் கம்ப்யூட்டர்த்தனமாக மூளையில் பதித்துக் கொள்ளுகிறார்கள். இந்த அக்கறையும் ஆர்வமும் படிப்பில் இல்லை!” என்று சிரித்தார்.

       “போங்கள், அப்பா! பி.எஸ்ஸி. முதல் வகுப்பில் தேறியவளிடம் போய் இப்படிப் பேசுகிறீர்களே! உங்களுக்கே சரியாகப் பட்டால் சரி!”

       “நான் சொன்னது பொதுவாக, அம்மா. உன்னைப் போய் அப்படிச் சொல்லுவேனா? ஆனாலும் இன்னோர் உண்மை இருக்கிறது. நீ தப்பாக எடுத்துக் கொள்ளா விட்டால் சொல்லுவேன்!”

       “இல்லை, அப்பா! தப்பாக எடுத்துக்கொள்ள மாட்டேன். சொல்லுங்கள்.”

       “காலஞ்சென்ற நடிகர் கஜராஜனுக்குப் பெண் ரசிகைகள் எக்கச்சக்கம்! ஒப்புக்கொள்ளுகிறாய்தானே?”

       “ஒப்புக்கொள்ளுகிறேன்!”

       “நீ எப்படி?”

       “எனக்கும் அவரைப் பிடிக்கும்!”

       “உன் உண்மையான பதிலைப் பாராட்டுகிறேன். அந்த நடிகருடைய அழகுதானே அதற்குக் காரணம்?”

       “அங்குதான் நீங்கள் தவறு செய்கிறீர்கள்.  நீங்கள் மட்டும் என்றில்லை. எல்லா ஆண்களுமே அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர் அழகர்தான்.  அதே நேரத்தில் நல்லவர்! பெண்களை மதிப்பவர், நேசிப்பவர். அதனால்தான் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் அவரை மிகவும் பிடித்திருக்கிறது!”

       “எப்படியோ! பெண் ரசிகைகள் அவருக்கு மிக அதிகம் என்பதை ஒப்புக் கொள்ளுகிறாயல்லவா?”

       “கண்டிப்பாக! இந்தக் குறிப்பை வைத்துத்தான் அண்ணனை இன்று தோற்கடிக்கப் போகிறேன்!”

       “என்னவோ போ! நீ பேசுவது புதிராக இருக்கிறது!.”

       “இன்று சாயந்தரம் புதிர் அவிழ்ந்துவிடும்!” என்று சிரித்த அவள் அவரது அறையிலிருந்து அகன்றாள்.

       …1989 ஜனவரி 14 –ஆம் நாளிலிருந்து தொடங்கி ஒரு வாரத்துக்கான இந்து, தினத்தந்தி, தினமணி ஆகிய நாளேடுகளை அவள் எடுத்துத் தனியாக வைத்துக்கொண்டு, கூடத்தின் ஓர் ஓரம் சென்றமர்ந்து அவற்றை யெல்லாம் வரிசையாகப் படிக்கலானாள்.

       படிக்கப் படிக்க அவள் முகத்தில் வெற்றிப் புன்னகை தோன்றியவாறாக இருந்தது. பந்தயத்தில் அண்ணனைத் தான் ஜெயிக்கப் போவது உறுதி எனும் நம்பிக்கையும் அவள் மனத்தில் தோன்றியது. 

       … மாலை ஆறு மணிக்கு மேல் அவன் வீடு திரும்பினான். 

       காபியைக் குடித்துக்கொண்டே, “என்ன! என்னமோ ஆதாரத்தோடு நிரூபிக்கப் போவதாய்ச் சொன்னாயே! எங்கே உனது ஆதாரம்?” என்றான் அவன்.

       “அதோ, அங்கே அடுக்கி வைத்திருக்கிறேன், பார்! தினத்தந்தியை மட்டும் பார்த்தாலே போதும்.  ஒரு வாரத்து நாளேடுகள் இருக்கின்றன. அவற்றில் வெளிவந்துள்ள சில செய்திகளை நான் சிவப்பு மசியால் கோடிட்டிருக்கிறேன். அவற்றை மட்டும் படித்தால் போதும்.”

       “ஆண்கள்தான் உணர்ச்சி வசப்பட்டுக் கொலை செய்கிறார்கள் என்று சொல்லுவதற்காகக் கொலை சம்பந்தப்பட செய்திகளைக் கோடிட்டுக் காட்டி இருக்கிறாயாக்கும்!”

       “அதுதான் ஊரறிந்த செய்தியாயிற்றே? நீ காலையில் சொன்னது என்ன? ‘உணர்ச்சியின் பிடியில் சிக்கி இருக்கும் போது அசட்டுத் தனமாக நடந்து கொள்ளுகிறவர்கள் பெண்கள்தான்’ என்றாய். சரிதானே?”

       “இப்போதும் சொல்லுகிறேன்!”

       “சரி. காலஞ்சென்ற திரைப்பட நடிகர் கஜராஜனின் மேல் பெண் ரசிகைகளுக்கு அதிக ஈடுபாடுதானே?”

       “ஈடுபாடா! பைத்தியங்கள் என்றே சொல்லலாம்! அந்த ஆள் நடிக்கிற படப்பிடிப்புகளில் ஆண்களின் கூட்டத்தைப் போல் இரண்டு மடங்கு இருக்கும் பெண்களின் கூட்டம்! நானே பார்த்திருக்கிறேன்!”

       “ஆக? அவர் மேல் பெண்களுக்குத்தான் அதிக எண்ணிக்கையில் ரசிகைகள்?”

        “சந்தேகமே இல்லாமல்!”

        “ஆண்களைவிட அதிக ஈடுபாடு?”

        “பைத்தியங்கள் என்றே சொன்னேனே!”

        “சரி! இப்போது நீ அந்தச் செய்திகளை முதலில் படி! இன்று காலை நமக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்துக்கு இந்தச் செய்திகளே தக்க பதிலை உள்ளடக்கி உள்ளன!” – இவ்வாறு சொல்லிவிட்டு அவள் எழுந்து போனாள்.

       அவன் முதலில் தினத்தந்தியை எடுத்தான். அதன் முதல் பக்கத்தில் நடிகர் கஜராஜனின் பெரிய அளவுப் புகைப்படம் வெளியாகி இருந்தது. கொட்டை எழுத்துகளில் அவரது சாவு பற்றிய செய்தியும் வெளியாகி இருந்தது.

       அதன் இரண்டாம் பக்கத்தில் நடிகரது பெரிய பங்களாவுக்கு முன்னால் குழுமி இருந்த கூட்டத்தின் புகைப்படம் மிகப் பெரிய அளவில் வெளியாகி இருந்தது. கூட்டத்தில் அழுதவாறும் அடித்துக்கொண்டவாறும் பெண்களே மிக அதிக எண்ணிக்கையில் இருந்தார்கள். ஆண்களும் அழுது கொண்டிருந்தார்கள்.

      நாளேட்டின் மூன்றாம் பக்கத்தில் அவன் தங்கை சிவப்புக் கோடிட்டிருந்த செய்திகள் இருந்தன.

       … கோயம்புத்தூரில் நடிகர் கஜராஜனின் மறைவுச் செய்தி பற்றிக் கேட்ட மறு நிமிடமே அவருடைய தீவிர ரசிகர் இராசேந்திரன் தன் மீது மண்ணெண்ணெய்யை ஊற்றிப் பற்ற வைத்துக்கொண்டார்… சிகிச்சை அளித்தும் பயன் அளிக்காமல் இறந்து போனார். இருபத்தாறு வயதான இந்த இளைஞர் தம் பெற்றோருக்கு ஒரே மகன்…..

       இது போல் சென்னையில் மண்ணெண்ணெய்யில் தீக்குளித்து உயிர் துறந்த ஏழு பேர் பற்றிய செய்திகளும் வெளியாகி இருந்தன. திருச்சியில் நான்கு பேர் … மதுரையில் ஏழு பேர் …. இப்படி …

       அவன் அந்த நாடேளுகளைப் புரட்டிக்கொண்டிருந்த நேரத்தில் அவன் தங்கை அப்பாவைக் கூட்டிக்கொண்டு வந்து அங்கே உட்காரவைத்தாள். தானும் ஒரு பக்கம் உட்கார்ந்தாள்.

       “அண்ணா! நீ தினத்தந்தியை மட்டும் படித்தாலே போதுமானது!”

       “ஆமாம். அதை மட்டும்தான் படிக்கிறேன். அதே செய்திகள்தானே மற்றவற்றிலும் இருக்கப் போகின்றன? இன்னும் ஒரே ஒரு நாளிதழ்தான் பாக்கி இருக்கிறது…”என்று பதில் சொன்ன அவன் முகம் களை இழந்திருந்தது.

       சற்றுப் பொறுத்து, “முடித்துவிட்டேன்!” என்றான்.

       “என்ன முடிவுக்கு வந்தாய்?”

       “இது போல் தீக்குளிப்பது வடிகட்டின முட்டாள்தனம்தான்!”

       “இதில் கண்டுள்ள இன்னொரு முக்கியமான செய்தியைப் பற்றி வாயே திறக்கமாட்டேன் என்கிறாயே! நீ அதை மனத்தில் வாங்காமல் இருந்திருக்கவே முடியாது – நமது வாக்குவாதத்தின் அடிப்படையில் யோசித்தால்!”

       “என்ன அம்மா சொல்லுகிறாய்?”

       “அப்பா! நடிகர் கஜராஜனுக்குப் பெண் ரசிகர்கள்தான் அதிகம் என்பது ஊரறிந்த ரகசியம்! நீங்களே இன்று காலை சொன்னீர்கள்…. தீக்குளிப்பில் சாகாமல் காயங்களுடன் தப்பினவர்கள் எண்பது பேர். இவர்களில் ஒரு பெண் கூட இல்லை, அப்பா – வெறித்தனமான ஈடுபாடு கொண்டவர்களாக இருந்தும்! தீக்குளித்து இறந்து போனவர்கள் அனைவருமே ஆண்கள்தான். …” என்ற அவள் வெற்றிச் சிரிப்புடன் தன் அண்ணனைப் பார்த்தாள்!

…….

Series Navigationதெளிவு
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *