பெண்மனதின் அரூப யுத்தம் ‘அம்மாவின் ரகசியம்’

author
0 minutes, 12 seconds Read
This entry is part 2 of 26 in the series 29 டிசம்பர் 2013

Book-rizhan– ஷங்கர் ஆர்மன்ட், ஃபிரான்ஸ்

 

குறுநாவல் – அம்மாவின் ரகசியம்

ஆசிரியர் – சுநேத்ரா ராஜகருணாநாயக

தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

வெளியீடு – காலச்சுவடு பதிப்பகம்

விலை – ரூ 55

 

மனிதர்களின் வாழ்க்கைகளை தடம்புரள செய்வதில் அடக்குமுறை, அதிகாரங்கள் ஆகியன இனபேதங்களைப் பார்ப்பது இல்லை. விதவிதமான புரட்சிகளும் கூட தம் இலட்சியப் பயணங்களின் பாதைகளில் நசுங்கி விழும் சாதாரணர்களின் வாழ்க்கைகளிற்காக தம் நடையை நிறுத்துவதும் இல்லை. இந்த இரு எதிர் இயக்கங்களின் போக்குகளினூடு, மனிதர்கள் தம் வாழ்வின் போக்குகள் மாறிச் சிதையும் வினோதங்களை கண்டபடியே தாம் அடைய முடிந்திடா இலக்குகளை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். அதிகாரமும் சரி, புரட்சியும் சரி வீழ்ச்சியடையும் மனிதர்களின் வாழ்க்கைகளை தம் பிரச்சாரங்களிற்காகவே பயன்படுத்தக் கற்றுக் கொண்டிருக்கின்றன. படைப்பாளிகளே சாதாரணர்களின் வீழ்ச்சிகளை மானுட அக்கறையுடன் பதிந்து செல்பவர்களாக இருக்கிறார்கள்.

 

‘அம்மாவின் ரகசியம்’ எனும் இக் குறுநாவல் இலங்கையிலுள்ள ‘உடவளவ’ எனும் கிராமத்தில் வாழ்ந்திருந்த முத்துலதா எனும் பெண்ணின் வாழ்க்கை பெறும் மாற்றங்களை தன் சொற்களில் அரங்கேற்றுகிறது. 1970 களிலும் 1980 களிலும் இலங்கை அரச அதிகாரங்களிற்கு எதிராக புரட்சி செய்த தென்னிலங்கையை சார்ந்த புரட்சி அமைப்பான ‘ஜனதா விமுக்தி பெரமுன’விற்கு எதிராக பொலிஸ் மற்றும் இராணுவத்தின் உதவியுடன் கட்டவிழ்த்து விடப்பட்ட அரச வன்முறைகளின் பின்ணனியில் கதையின் ஆரம்பப் பகுதி கூறப்படுகிறது.

 

வறிய குடும்பமொன்றில் பிறந்த முத்துலதா, அரசாங்க உத்தியோகத்திலிருக்கும் உதயசிறியை திருமணம் செய்து கொள்கிறாள். முத்துலதா, உதயசிறியைத் திருமணம் செய்து கொள்ளும் முடிவிற்கு வருவதற்கு, முத்துலதாவின் தாய் பேபிநோனா, அவளை ஒரு விளக்குமாறு கட்டை உடையும்வரை அடிக்க வேண்டியிருந்தது. பேபிநோனாவிற்கு, தன் மகளின் வாழ்க்கையும், தன் வாழ்க்கைபோல ஆகிவிடக்கூடாது எனும் அக்கறை. பாலம் கட்ட வந்தாலும், படம் வரைய வந்தாலும் ஊர்க் குமரிகளின் வாழ்க்கைகள் பல அவ்வாறு வருபவர்களிடம் பலியாகத் தவறுவது இல்லை என்பதை பேபிநோனா அனுபவம் வழி அறிந்திருக்கிறாள். கிராமங்களில் தம் காமத்தைத் தணிக்கத் தவறாத, நகர்ப்புற அரச உத்தியோகஸ்தர்களின் இந்தப் பண்பாட்டை அந்த ஒரு வரியிலேயே ஆழமாக பதித்திருக்கிறார் கதாசிரியை சுநேத்ரா ராஜகருணாநாயக.

 

‘உடவளவ’ அமைதியான ஒரு கிராமம். சேனைப்பயிர்ச் செய்கை, இரத்தினச் சுரங்கங்களில் கூலி வேலை போன்றவற்றில் வறிய குடும்ப ஆண்கள் சிறுவயது முதலே இறங்கிவிடுகிறார்கள். பெண்கள் வசதி படைத்த வீடுகளில் பணிப்பெண்களாகவோ அல்லது தெருவோர உணவுக் கடைகளை நடத்துபவர்களாகவோ தம் வாழ்க்கைகளைக் கொண்டு செல்கிறார்கள். ஆறு கதிரைகளும், ஒரு மேசையும், ஒரு கண்ணாடி அலுமாரியும் எல்லாப் பெண்களினதும் கனவுகளிலும் இருக்கின்றன என்பதன் வழி அந்த அடித்தட்டு வர்க்கப் பெண்களின் கனவுகளின் உச்சம் என்ன என்பதை சுநேத்ரா தெளிவாக உணர்த்தி விடுகிறார். முத்துலதாவிற்குள்ளும் இக் கனவு இருக்கவே செய்கிறது. ஆனால் அவள் ஒரு தையல் இயந்திரத்தை வாங்குகிறாள். தான் தைத்துச் சம்பாதித்துச் சேகரித்த பணத்தில் அவள் மேலும் தையல் இயந்திரங்கள் வாங்க ஆசைப்படுகிறாள். தன் குடும்பத்தின் நிலை மாறவேண்டும் என எல்லாப் பெண்களுக்கும் இருக்கும் இலட்சியம் அவளிற்குள்ளும் உண்டு. அதிக பணம் கிடைக்கும் என தொப்பிகள்கூட தைத்து  விற்கிறாள். ஆனால், அவளது வாழ்க்கை நிலையில் பெரிதான மாற்றங்கள் எதையும் அவள் கண்டுவிடுவது இல்லை. முத்துலதாவின் கணவன் உதயசிறி கடினமான வேலைகளை செய்து பழக்கம் இல்லாதவன். ஆனாலும் நல்ல கணவன். நாட்டின் அரசியல் சூழல் குறித்த செய்திகளை வாசிக்கும் ஆர்வம் அவனுக்கு உண்டு. தலையில்லா உடல்கள் வீதிகளில் வீசப்படுவதும், டயர் அடுக்குகளினுள் மனிதர்கள் எரிக்கப்படுவதும், ஆறுகளில் உயிரற்ற சடலங்கள் மிதந்து வருவதும் என நாட்டின் நிலைமை சற்று பதட்டமாக இருக்கும் ஒரு காலத்திலேயே கதை நிகழ்கிறது. கணவன் உதயசிறியின் அரசியல் ஆர்வம் செய்திகளை வாசிப்பதுடன் திருப்தியுற்று விடும். அவன் எல்லை அவ்வளவே. பொலிஸைக் கண்டால்கூட விலகியே செல்பவன் அவன். ஆனால், உதயசிறி வீட்டில் இல்லாத ஒரு நாளில் அவனது தம்பியைத் தேடி அவன் வீட்டிற்கு இராணுவத்தினர் வருகிறார்கள். அந்தப் பொழுதில் இருந்து முத்துலதாவின் வாழ்க்கையானது அதன் வழமைநிலையை இழந்து போகிறது. தன் கணவனிற்குப் பதிலாக இராணுவ முகாம் செல்லும் முத்துலதா அங்கிருந்து திரும்புகையில் தன்னுடன் கூடவே ஒரு ரகசியத்தையும் எடுத்து வருபவள் ஆகிறாள்.

 

முத்துலதா, உதயசிறி, பேபிநோனா போன்ற பாத்திரங்கள் வழியாக உடவளவயின் அன்றைய நிலையை வாசகனிடம் ஆர்ப்பாட்டங்களின்றி எடுத்துச் சொல்கிறார் சுநேத்ரா. அடித்தட்டு மக்கள், அரசாங்க ஊழியர்கள், வசதி படைத்தவர்கள், அதிகாரமிக்கவர்கள் ஆகியவர்களினூடாக நகரும் கதையானது, அடித்தட்டு மக்களின் குரலிலேயே பேசப்படுகிறது. இதன் பின்னணியில் அம் மக்களை திகில் அடையச் செய்து கொண்டிருக்கும் நாட்டின் நிலையும் கூடவே வருகிறது. தன் கணவனை இழந்த பின்பாகவும்கூட தன் மனதில் வாழும் அந்த ரகசியத்துடன் முத்துலதா தன் வாழ்க்கையை மாற்றப் போராடுபவளாகவே இருக்கிறாள். முத்துலதா தன் வாழ்க்கை நிலை மாற வேண்டும் என்பதை வாழ்வின் துடிப்பாக கொண்ட பெண். இராணுவத்தினரை வெட்டிப் போட வேண்டும் எனும் கோபம் குடிவந்து அமர்ந்த பெண். இலங்கையில் வாழும் ஒரு அப்பாவிப் பெண்ணை இன மத பேதமின்றி அவளால் பிரதிநிதித்துவம் செய்ய முடிகிறது. எல்லைகளைத் தாண்டி, உலகில் வாழ்ந்திருக்கும் வறிய அப்பாவி பெண்களையும் அவளால் பிரதிநிதித்துவம் செய்ய முடிகிறது. தம் வாழ்க்கை நிலையை உயர்த்த வேண்டும் எனும் முனைப்புடன் நகர்ந்து கொண்டிருக்கும் பெண்களை அவர்கள் வாழும் நிலை மாறும்வரையில் நாம் அவதானிப்பதே இல்லை.

 

முத்துலதா, வீதியோர உணவகத்தினை நடாத்துகிறாள். அயல்நாடுகள் சென்று பணிப்பெண்ணாக பணிபுரிகிறாள். துபாய், சைப்பிரஸ், பிரான்ஸ், சீனா என அவள் வாழ் அனுபவங்கள் நீள்கின்றன. ஆனால் அவள் மனதில் உள்ள ரகசியம் ரகசியமாகவே இருக்கிறது. அதை அவள் யாரிடமும் கூறியது இல்லை. அயல்நாட்டில் பணிபுரிந்து, அவள் தனது வீட்டை அழகானதாகவும், உடவளவயிலேயே அற்புதமான பொருட்கள் நிறைந்ததாகவும் நிரப்பி தன் வாழ்க்கை நிலையை மாற்றியமைத்துவிட்ட பொழுதிலும் கூட அவளது ரகசியம் அவளிடமே இருக்கிறது. தனது வீடு எப்போதும் சுத்தமானதாகவே இருக்க வேண்டும் என்பதில் முத்துலதா முனைப்பாக இருக்கிறாள். சேற்றுக்காலுடன் தன் வீட்டிற்குள் யாரும் வரக்கூடாது என்கிறாள். வெற்றிலைச் சாற்றை உமிழ்ந்து தன் முற்றத்தை யாரும் அசிங்கப்படுத்த வேண்டாம் என்கிறாள். அவள் அகத்தில் வாழ்ந்திருக்கும் ரகசியத்திற்கு எதிரான தூய்மை கொண்டதாக முத்துலதா தன் புறத்தை பேணுவதில் அக்கறையாக இருக்கிறாள். தனித்து வாழும் பெண்கள் உள்ள ஒரு வீட்டில் அவள் ரகசியம் அவர்களை உயிருடன் புசிக்க விரும்பும் ஒரு அரக்கனாக  இருக்க முயல்கிறது. அவள் பிறர்க்கு விதிக்கும் கட்டுப்பாடுகளும், அவளின் வசதியான வாழ்க்கை நிலையும் ஊர் மக்களை துபாய்க்காரனிற்கும், சீனாக்காரனிற்கும் தூக்கிக் கொடுத்து கொண்டு வந்து கொட்டிய சொத்துதானே இது எனப் பேச வைக்கிறது. முத்துலதா அசையவில்லை. தன் மனதில் சுமையாக ஏறி அமர்ந்திருக்கும் ரகசியத்தை வெளியில் உரைத்தாள் இல்லை. ஆனாலும் ஒருநாள் முத்துலதா அழுத்திப் பாதுகாத்து வைத்திருந்த ரகசியத்தை அவளாகவே வெளியே சொல்லும் சந்தர்ப்பம் அவளைத் தேடி தானாகவே வந்து சேர்கிறது.

 

அலங்காரங்கள் ஏதுமற்ற, யதார்த்தம் நிறைந்த, எளிமையான எழுத்துக்கள்தான் சுநேத்ராவின் பலம். அவர் வாசகனை புதிர் நிறைந்த வரிகளால் வியக்க வைக்க முயல்வது இல்லை. மாறாக எளிமையின் ஆச்சர்யத்தில் பங்குகொள்ளச் செய்கிறார். இந்த எளிமையான கதையாடலே வாசகனை தயக்கமின்றி அவர் எழுத்துக்களுடன் இணக்கமாக்குகிறது. கதையை மொழிபெயர்த்திருக்கும் எம்.ரிஷான் ஷெரீப்பும் கதையை சரளமான தமிழ் நடையில் செவ்வனே மொழிபெயர்த்திருக்கிறார். ஒரு துன்பத்தை சுற்றி நெய்யப்படும் அழுவாச்சி காவியமாகவோ, அல்லது ஒப்பாரி சங்கீதமாகவோ கதையை உருவாக்காது, மிகையுணர்ச்சிகளின் உதவிகளை நாடாது, பரபரப்புக்களை விலக்கி, மனித மனங்களின் இயக்கங்களுடனும், வாழ்வின் நிகழ்வுகளுடனும், சம்பவங்களுடனும் இயல்பான ஓட்டத்தில் பயணிக்கிறது சுநேத்ராவின் குறுநாவல்.

 

அயல்வாழ் மக்களது வாழ்க்கைகளின் ஒரு சித்திரத்தை அனுபவிக்கும் வாய்ப்பை சுநேத்ராவின் கதை எமக்கு வழங்குகிறது. சுநேத்ரா சிங்கள மொழியில் பிரபலமான படைப்பாளி. பல தளங்களிலும் இயங்குபவர். அவரது குறுநாவலான இந்த ‘அம்மாவின் ரகசிய’த்தின் மிக முக்கியமான தருணம் அதன் முடிவில் முத்துலதா கூறுவதாக அமையும் வரிகளில் இருக்கிறது. “இப்ப அழ வேணாம். அந்த நாட்கள்ல எனக்கு அழத் தேவையிருந்தது ஆனாலும் அழ முடியாமப் போச்சு. எனக்கு செத்துபோக வேண்டியிருந்தது ஆனாலும் நான் வாழ்ந்தேன்” இவ்வரிகளைக் கூறி முடித்த பின்பும்கூட வாழ்க்கையிடமிருந்து அற்புதங்கள் எதையும் எதிர்பார்த்துக் காத்திராத ஒரு பெண்ணாகவே முத்துலதா புன்னகைக்கிறாள். கதையைப் படித்து வரும் வாசகனை அதில் பொதிந்திருக்கும் ஆழமான அர்த்தம் சற்று உலுக்கிப் பார்க்கவே முயல்கிறது. இந்த உலகில் எத்தனை பெண்கள் இதே போன்ற வரிகளை தம் வாழ்வில் சொல்லியிருப்பார்கள், எத்தனை பெண்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள், எத்தனை பெண்கள் சொல்லப் போகிறார்கள். இந்தப் புள்ளியில் உலகின் பெண்கள் அனைவரையும் சுநேத்ரா தொட்டு விடுகிறார்.

 

பெண்கள், வாழ்வு தரும் அற்புதங்களிற்காக காத்திருப்பவர்களாக இருக்க முடியாது. அவர்கள் தம் மனதின் ரகசியங்களோடு, அரூப யுத்தங்களை ஓயாது நிகழ்த்தியவாறே இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். ரகசியம் தன்னை அடையாளம் காட்டும்போது பலவீனமாகி விடுகிறது. ஆனால் அதை காலம்காலமாக சுமந்து வந்தவர்கள் கனமற்றவர்களாகி விடுகிறார்கள். அதன் பிறகு, வாழ்க்கையின் சொற்கள் அவர்களிடம் தயக்கமின்றி பேச ஆரம்பிக்கின்றன வசந்தத்தின் பூக்களைப்போல.

 

 

______________________________________________

 

கட்டுரையாசிரியர் – ஷங்கர் ஆர்மன்ட்

 

முகவரி – Mr. Shankar Armand,

9, Rue de la Petite Pierre,

75011 Paris,

FRANCE

தொலைபேசி இல +33611222982

 

 

Series Navigationஅறிதலின் தரத்தையும் அளவையும் உயர்த்துவதை நோக்கி… ரவிக்குமாரின் இரண்டு மொழிபெயர்ப்பு நூல்கள்தாகூரின் கீதப் பாமாலை – 95 உன் தேசப் பறவை.காரைக்குடிகம்பன் கழகத்தின்சார்பில் அகில உலகக் கருத்தரங்கு – கட்டுரை தரநிறைவுநாள்15-1-2014திண்ணையின் இலக்கியத் தடம்-15ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-15 உபப்லாவ்யம் இருவர் அணிகள்ஜாக்கி சான் 22. புது வாழ்வு – நியூ பிஸ்ட் ஆப் புயூரிஜெயந்தி சங்கர் எழுதிய சிறுகதைகளின் முழுத்தொகுப்பு விமர்சன அரங்குஉடைபட்ட மகாபாரதம் – ப.ஜீவகாருண்யனின் “கிருஷ்ணன் என்றொரு மானுடன்” நாவலை முன்வைத்துதவிர்க்க இயலாத தமிழர்தம் பட்டங்கள்நிர்வாணிமருத்துவக் கட்டுரை கிள்ளிய நரம்புநீங்காத நினைவுகள் – 27திருப்பாவை உணர்த்தும்வழிபாட்டுநெறிசில ஆலமரங்களுக்கு விழுதுகள் இல்லைபுகழ் ​பெற்ற ஏ​ழைகள் – 39என்னை ஆட்கொண்ட இசையும், நானும்கிராமத்து ராட்டினம், பூ மலரும் காலம் ஜி.மீனாட்சியின் இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் –பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பூதக்கோள் வியாழனின் துணைக்கோள் ஈரோப்பாவில் நீர் எழுச்சி ஊற்றுகள் முதன்முறைக் கண்டுபிடிப்பு
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *