பெண்மை-பெண்ணியம்-பெண் ஆற்றல்

author
0 minutes, 5 seconds Read
This entry is part 2 of 15 in the series 17 அக்டோபர் 2021

 

            

                                                                                            ப.சகதேவன்

                     மனிதனுக்குள் மறைந்திருக்கும் இனக்குழு சமுதாய உணர்வு தாலிபான்களிடம் மட்டுமில்லை. மிக நாகரீகமடைந்தவர்கள் என்று சொல்லப்படும் அமெரிக்கர்களிடம் கூடத் தான் இருக்கிறது. இல்லையென்றால் டோனல்டு டிரம்ப் என்கிற குடியரசுக்குரல் ‘அமெரிக்கா வெள்ளையர்களுக்கே’ என்று ஓங்கி ஒலித்திருக்காது என்று அமெரிக்கப் பத்திரிக்கையாளர் தாமஸ் ஃப்ரீட்மன் கூறுகிறார். எனவே மூக்கு இருக்கிற வரை சளி இருக்கும் என்பதைப் போல தாலிபானீயம் என்பது ஏதாவது ஒரு அளவில் இருந்து கொண்டு தான் இருக்கும். அது தலைதூக்கும்போது அதிகம் பாதிப்படைபவர்கள் பெண்கள் தான் என்பதால் பெண்மை-பெண்ணியம்- பெண் ஆற்றல் என்பவை குறித்த தெளிவு தேவையாகிறது. எல்லாமும் பெண்களைப் பற்றியதாக இருந்தாலும் அவற்றிற்கிடையே வேறுபாடுகள் இருக்கின்றன. அது புரிந்து கொள்ளும் முறையில் இருக்கிறது.

                 ஒவ்வொன்றை மையமாக வைத்தும் பெண்கள் காலங்காலமாகப் போராடிக்கொண்டே வந்திருக்கிறார்கள். ஒவ்வொன்றிலும் விளக்கிச் சொல்ல முடியாததும், விளக்கத் தேவையில்லாததுமான அம்சங்கள் நிறைய இருக்கின்றன.  எல்லா மனிதப் பிரச்சினைகளிலும் போலவே இந்தப் பிரச்சினையிலும் கூச்சல் எழுப்புபவர்களும் இருக்கிறார்கள்..அமைதியாக எதிர்கொண்டு பிரச்சினையைத் தீர்த்துக் கொள்பவர்களும் இருக்கிறார்கள்

                    இதில் முதன்மையாக இருப்பது பெண்மை..தமிழிலக்கியம் இது குறித்து நிறையப் பேசியிருக்கிறது. பேசாத தலைவியரும், பேசும் தோழியரும் பெண்மையின் வடிவங்களாக இருந்திருக்கிறார்கள். சமணத்தின் வெளிப்பாடான திருக்குறள் கூட பெண்மையை சரியாக இனங்கண்டிருக்கிறது. சிலப்பதிகாரத்தில் கண்ணகியும், மாதவியும் இதே பெண்மையின் இரண்டு வரைவிலக்கணங்களாக இருந்திருக்கிறார்கள். கண்ணகியுடையது வெறும் பெண்மை என்று மட்டுமே இருக்க மாதவியுடையது பெண்மையும், பெண்ணியமும் கலந்ததாக இருக்கிறது. பெண்மையை மட்டுமே பற்றியிருந்த கண்ணகி தேவையேற்பட்டதால் பெண் ஆற்றலையும் காண்பித்தாள். சங்ககால பெண்களிடம் இந்த மூன்றும் சமமாகக் கலந்திருந்தன. துரதிர்ஷ்ட வசமாக சங்கப்புலவர்கள் இதை அடையாளம் கண்ட அளவுக்கு சங்கச் சமுதாய ஆண்கள் இதை அடையாளம் காணவில்லை. ஆண்கள் எப்போதும் அப்படித்தான் இருப்பார்கள்..

                பெண்ணின் ஆன்மீகத்தேடலுக்கும் தமிழிலக்கியம் பல ஆதாரங்களைக் கொண்டிருக்கிறது. அர்ப்பிதா தாஸ் போன்றவர்கள் இதைச் சரியாக இனங்கண்டிருக்கிறார்கள் (காலச்சுவடு 261, செப்டம்பர் 2021) ஆனால் பெரும்பாலான சமயங்களில் இது அவர்களது ஆன்மீகத்தேடலை மட்டுமே குறிப்பதாக இருக்கிறது.. மீரா, ஆண்டாள் ஆகியோர் நினைக்கப்படும் அளவுக்கு கித்தூர் ராணியோ, ஜான்சி ராணியோ நினைக்கப் படுவதில்லை. ஆன்மீகம் மட்டுமல்லாமல் அழகியலும் கலந்து வருவதால் அவர்கள் அதிகமாக நினைக்கப்படுகிறார்களோ என்னமோ? இதில் கவனம் கொள்ள வேண்டியது ஆன்மீகத்தையோ, அழகியலையோ கைக்கொண்டவர்கள் பெண்ணியத்தைப் புறக்கணிக்கிறார்கள். பெண் ஆற்றலைக் கூட அவர்கள் பாலியல் நோக்கில் பார்ப்பதில்லை. ஆணாலும், பெண்ணாலானும் வெளிப்படுத்தப்படும்  ஆற்றல் ஒரே மாதிரியானது தான்.

 

(ஷுலமத் ஃபைர்ஸ்டோன்  (1945-2012))

               பெண்ணியம், பெண்ணுரிமை இரண்டையும் ஒன்றாகப் பார்க்க முடியுமா?  எப்படிப் பார்த்தாலும் அது ஒடுக்கப்படும்போது  உரத்த குரலை எழுப்புகிறது….’பாரம்பரியப் பெண்மைக்குக் கருமாதி செய்கிறேன்’ என்று கிளம்பிய அமெரிக்கப் பெண்ணியப் போராளி ஷுலமத் ஃபைர்ஸ்டோன்  (1945-2012) அப்படிப் பேசுவதற்கு அவரது யூதப் பின்னணியும், அவரது குடும்பம் ஜெர்மனியின் ஆரிய இனவாதத்தால் பாதிக்கப்பட்டு அவர்களது யூத அடையாளத்தையே துறக்குமளவுக்குப் போனதாக இருக்கலாம். ஜெர்மனியின் ஆரிய வாதம் ஆண்மைய வாதமாகப் பார்க்கப்பட்டிருக்கும்.  இந்த மனச்சிக்கல்களே அவரது பெண்ணியக் கருத்துக்களுக்குக் காரணமாகியிருக்கலாம். கடைசியில்  பிளவுபட்ட மன அமைப்பு நோயால் பாதிக்கப்பட்டு   ஃபைர்ஸ்டோன் தனிமையில் இறந்தார்.. கிட்டத்தட்ட அவரது சமகாலத்தவரான  ஜேமேன் கிரீயர் (1939-) பெண்மை-பெண்ணியம்-பெண் ஆற்றல் குறித்துத் தெளிவாக இருந்தார். ஃபிரான்சின் மாணவர் போராட்டம், அமெரிக்காவில் வியட்நாம் போருக்கான எதிர்ப்பு என்பவை கருத்துச் சுதந்திரத்தையும், மனிதனின் தன்மானம், கௌரவம் என்பவற்றின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தின. அதை மிக நன்றாகப் பயன்படுத்திக்கொண்ட கிரீயர் நகர்மயமாதலால் சுருங்கிப்போன சிறு குடும்பங்கள் பெண்ணின் உரிமையைப் பறித்ததோடல்லாமல் அவளது கண்ணியத்திற்கும் களங்கம் ஏற்படுத்தின என்றார். குறிப்பாக அவளைச் சிந்திக்க விடாமல் செய்தன என்ற அவர் அவள் சிந்திப்பதற்கான நேரம் அவளது கழிவறையில் மட்டுமே கிடைக்கிறது என்றார். அதனாலேயே அவரது ஆகச்சிறந்த நூலான ‘பெண்பால் திருநங்கை’ (ஃபீமேல் யூனக்) நூலிலுள்ள ஒவ்வொரு கட்டுரையையும் கழிவறையில் படிப்பதற்குண்டான கால அளவையே கொண்டவையாக எழுதியிருப்பதாகச் சொன்னார். ஒட்டுமொத்த சமுதாயமும் நுகர்வோர் சமுதாயமாக மாறும்போது அனைத்துப் படைப்பாற்றலையும் இழந்த ஒரு ஜென்மமாக ( ‘யூனக்’ என்பது இங்கே இந்த அர்த்தத்திலேயே பயன்படுத்தப்பட்டிருக்கிறது) பெண் மாறுகிறாள். ஐம்பதாண்டுகளுக்கு முன்னால் வெளியான ‘பெண்பால் திருநங்கை’ இப்போதும் பொருத்தப்படுடையதாக இருக்கிறது.. உலகம் முழுவதும் நாற்பது லட்சம் பிரதிகள் விற்றிருக்கின்றன.

 

           (ஜேமேன் கிரீயர்)

இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் கிரீயரின் கருத்துக்கள் செலாவணியாகின்றன. காரணம் அவை பெண்ணியத்தை மட்டும் தூக்கிப்பிடிக்காமல் அதைத் தாண்டிச்செல்லவும் முயற்சி செய்வது தான். மனித கௌரவம் என்பது பால் பாகுபாடில்லாமல் கடைப்பிடிக்கப்படவேண்டும் என்பது அவரது கருத்து. வயது எண்பதுக்கு மேலானாலும் இப்போதும் செல்வாக்குக் குறையாதவராகவே இருக்கிறார் கிரீயர். 2019-ம் ஆண்டு நடந்த ‘ஜெய்ப்பூர் இலக்கிய விழா’ விலும் கலந்து கொண்டார்.  இந்தியக் குடும்ப அமைப்பின் மீது அவருக்கு மரியாதை உண்டு. பெண்ணைத் தெய்வமாகப் பார்க்கும் இந்திய மரபு அவரைக் கவர்ந்திருக்கிறது. அவரது இந்த நாட்டத்தை இந்தியப்பெண்ணிய வாதிகள் அவ்வளவாக ரசிக்கவில்லை.

               அதைப்போலவே பெண்ணியவாதிகள் ‘எனக்கும் நேர்ந்தது..’ (மி டூ) இயக்கத்தை  கிரீயர் ஆதரிப்பார் என்று எதிர்பார்த்திருந்தபொழுது அவர் அதைப் பற்றிக் குறை சொன்னார். வன்புணர்வு என்பது ஒரு பிரச்சினையே இல்லை.. அது வெறும் ஒரு நிகழ்வு… ஒரு விபத்து… ஆனால் அதன் மூலம் பெண்ணுக்கு நிகழ்கிற தன்மான இழுக்கு என்பது கொடுமையானது. ‘மி டூ’ இயக்கத்தின் மூலம் ஆண்களைக் கோர்ட்டுக்கு இழுக்கிறபோது அங்கே அவமானப்படுபவர்கள் மீண்டும் பெண்கள் தான்.. பெண்ணின் சுதந்திரம், அவளது தன்மானம் என்பவற்றை நோக்கித்தான் நமது கவனம் இருக்க வேண்டுமேயொழிய வழக்காடுவதில் அல்ல என்றார். சொல்லப்போனால் கிரீயர் சொல்லும் ‘முழு விடுதலை’ என்பது பெண்ணுக்கு மட்டும் உரியதல்ல.. மனித இனம் முழுவதுக்குமுரியது. அரசியல் காரணமாக ஆணுக்கு அது ஏற்கனவே கிடைத்திருக்கிறது. பெண் அதைப் போராடிப் பெற வேண்டியவளாக இருக்கிறாள்.  பாலியல் உணர்வு, செயல்பாடு  என்பவை இயற்கையானவை தான். பெண் தான் அதில் முக்கிய இடம் வகிக்கிறாள். ஆனால் அது அவள் முழு சம்மதத்துடன் நடைபெறவேண்டும். வன்முறைக்கு அங்கே இடமில்லை. இந்தக் கருத்து பல எல்லைகளையும், தலைமுறைகளையும்  தாண்டி இந்தியா வரைக்கும் வந்திருக்கிறது.  

                  2016-ல் வெளியான இந்திப்படம் ‘பிங்க்’ அதன் தமிழ்ப்பதிப்பு ‘நேர் கொண்ட பார்வை’ முதலியவை இவற்றின் வெளிப்பாடு. ‘நேர் கொண்ட பார்வை’ யில் ‘தல’ அஜித் குமார் நடித்திருந்ததனால் அதன் கவனம் கொஞ்சம் சிதறிப்போயிற்று என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.. தமிழ்ச்சமூகம் இதை எந்த அளவுக்கு ஏற்றுக்கொண்டது எனத் தெரியவில்லை. இந்தியச் சூழலில் இது பெண்ணியத்தின் அதிக கவனம் தேவைப்படாத ஒரு பகுதி.. மேட்டுக்குடிப் பெண்ணிய வகையைச் சார்ந்தது. இதற்கு மாறாக ஒழுக்கம் என்பது இருபாலாருக்கும் பொது என்று வைக்கும்போது ‘ஆணியம்’ என்பதையும் வரையறை செய்ய வேண்டும். கட்டுப்பாடற்ற சுதந்திரம் என்ன விளைவுகளைக் கொண்டு வரும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

                 தனது நூலான ‘பெண்பால் திருநங்கை’ தனது காலத்தின் தேவையை முன்னிறுத்தியே எழுதப்பட்டதென்றும், இப்போது அதன் தேவை நிராகரிக்கப்பட்டால் அது குறித்துத் தான் வருத்தப்படப்போவதில்லையென்றும், அதே போல் இக்காலத்தின் தேவை கருதி ஒரு புத்தகம் வந்தால் தான் வரவேற்கத் தயாராக இருப்பதாகவும் கிரீயர் குறிப்பிட்டார்.  இது பெண்மை-பெண்ணியம்- பெண் ஆற்றல் என்ற மூன்று கருத்தாக்கங்களுக்கும் பொருந்தும். உலக மயமாதலுக்குப் பிறகு ‘பெண்மை’ பல புதிய தளங்களில் நுழைந்திருக்கிறது. தேவையான பொழுது பெண்ணியத்தின் துணை கொண்டு தனது பெண்ணாற்றலை வெளிப்படுத்தியிருக்கிறது.  இவை மூன்றினது இணைவு எந்த அளவுக்கு இன்றியமையாதது என்பதையும் உணர்த்தியிருக்கிறது.. இதில் பெண்மையும், பெண்ணாற்றலும் ஏற்கனவே இருந்தவை தான்.. குடும்பத்தோடு மட்டும் தனித்திருந்த அது இப்போது அதிக அளவில் பொது வெளிக்கு வந்திருக்கிறது. பெண்மையைத் தக்க வைத்துக்கொண்டே தனது ஆற்றலை வெளிப்படுத்த முடியும் என நிரூபித்துக் கொண்டிருக்கிறது. அதே சமயம் இயற்கையின் சமன் நிலையை அசைத்துப் பார்க்கும் பெண்ணியக்குரல்களும் கேட்கின்றன. ‘குழந்தை பெற்றுக்கொள்வதற்கு ஆண்கள் வேண்டும் என்கிற அவசியம் இல்லை… மார்க்கட்டில் கிடைக்கும் விந்துக்கள் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்’ என்று ஒரு தமிழ்ப் பெண்ணியவாதி சொன்னார். இது பெண்ணியத்தின் ஒரு தீவிரவாதக் குரல்.. ‘பெண்கள் விடுதலை பெற வேண்டுமானால் ’ஆண்மை’ அழிய வேண்டும்’ என்று பெரியார் சொன்னதும் ஒரு தீவிரவாதக் குரல் தான். ‘ஆண்மை’க்கு இரண்டு பக்கங்கள் இருக்கின்றன.  பண்பற்ற ஆண்மையைப் பண்புள்ளதாக மாற்ற வேண்டுமேயொழிய ஆண்மையையே ஒழிக்க வேண்டும் என்று சொல்வது சரியான தீர்வாகாது..’மேட்டுக்குடிப் பெண்ணிய’த்திற்கு மாற்றான- எல்லாவற்றையும் அனுசரித்துப் போகிற, இந்த மண்ணுக்குத் தேவையான பெண்ணியம் உருவாக வேண்டும். அதில் பெண்மைக்கும், பெண்ணாற்றலுக்கும் சரியான இடமிருக்கும். பெண்மை-பெண்ணியம்-பெண்ணாற்றல் என்பவற்றின் பொருளும் மேன்மையும் அவை ஆண்மை-ஆணியம்-ஆண் ஆற்றல் என்பவற்றின் இணைவினாலேயே வெளிப்படும். பெங்களூர் கோரமங்கலாவில் ஒரு தனியார் பள்ளியில் ஆண் ஊழியர்களே கிடையாது..ஆனால் பேருந்து ஓட்டுநர்கள் ஆண்களாக இருக்கிறார்கள். ஏதாவது ஒரு நிலையில் பால் இணைவு தேவையாகத் தான் இருக்கிறது

               தேரிகதாக் கவிஞர்கள், மீரா, ஆண்டாள் ஆகியோரது பங்களிப்புகள் ஆன்மீகமும், அழகியலும் கலந்ததாக இருக்கலாம். ஆனால் அவற்றில் ஒத்திசைவு இருக்கிறதா என்பது கேள்வி.. அது இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை.. தன்னளவில் அவை சிறப்புடையவை தான். ஆனால் அவர்களது ஆற்றல் மனிதனின் அடிப்படைத்தேவையைக் கவனத்தில் கொள்ளும்போது தான் மதிப்புக்குரியதாகிறது. பௌத்தமதத் துறவி மணிமேகலை  கவிதை இயற்றியதாகத் தெரியவில்லை.ஆனால் அவளிடத்தில் ஆற்றல் இருந்தது.. பெண்மை கலந்த ஆற்றல். பசிப்பிணி போக்கும் ஆற்றல். தன்னால் வெளிப்படுத்த முடியாத பெண்ணியத்தை  தெய்வங்கள் (தொன்மங்கள்) துணை கொண்டு வெளிப் படுத்தினாள்.  பெண்மையையும்  பெண்ணியத்தையும் தாண்டிய பெண்ணாற்றல் இது.

                 வரலாறு பெண்ணாற்றலின் பங்களிப்பை அங்கீகரிக்காமலே தான் இருந்து வந்தது. அதற்குக் காரணம் பெண் ஆணின் பிரிக்க முடியாத ஒரு பாகமாகக் கருதப்பட்டதாக இருக்கலாம். பெண்ணின் தனித்த அடையாளம் கண்டறியப்பட்ட பிறகு போராட்டங்கள் எழுந்தன..முதலில் குரலெழுப்பியவர்கள் மேல்தட்டு வர்க்கத்தவர்களாக இருந்தார்கள். அவர்களது கோரிக்கையும், சொத்துரிமை, வாக்குரிமை என்பவை பற்றியதாக இருந்தன. படிப்படியாக அது பல கட்டங்களைக் கடந்து, பல வர்க்கங்களை உள்ளடக்கி இப்போது பொதுவான பிரச்சினைகளைக் கொண்டதாக இருக்கிறது. தொழிற்புரட்சிக்குப் பிந்தைய சமுதாயத்தில் குடும்பத்திற்கு வெளியிலான பெண்களின் உழைப்பு அதிகமாகி அவர்களது உழைப்பு அங்கீகரிக்கப் படாமல் போனபோது தான் அவர்கள் பிரச்சினை பொது வெளிக்கு வந்தது..

 

              உலகமயமாதல் பெண்ணாற்றலுக்கு ஒரு வாய்ப்புத் தந்தது. உலகமயமாதல் வணிகத்தை மையமாகக் கொண்டது தான். ஆனால் பெண்களுக்குக் கிடைக்கும்  பொருளாதார சுதந்திரம் ஆண் மைய வாதத்தை அசைத்துப் பார்க்கிறது. வங்காளதேசத்தில் ஆயத்த ஆடை ஏற்றுமதி சூடு பிடித்த போது அதில் கணிசமான பங்களிப்பு பெண்களுடையதாக இருந்தது. ஆச்சாரமான ஒரு இசுலாமிய நாடு அதிகம் சமரசம் செய்து கொள்ளாமலே ஒரளவு சுபிட்சம் பார்த்தது. மிகக் குறைந்த கூலிக்குத் தயாராக இருந்த பெண்கள் எல்லாச்சுரண்டல்களையும் சகித்துக் கொண்டார்கள். கண்ணில் தெரியாத பெண்ணாற்றல் அது.

 

             ஆனால் வெள்ளைக் காலர் வேலை வழங்கும் ஐ.டி. வந்தததற்குப் பிறகு தமிழ்நாட்டில் (இந்தியாவின் பிற மாநிலங்களிலும் கூட) இது வேறு மாற்றங்களைக் கொண்டு வந்தது.. ஐ.டி.யில் வேலை செய்யும் பெண்கள் சர்வ சுதந்திரம் பெற்றவர்களாக ஆன போது நிலை தடுமாற்றம் நிகழ்ந்தது. பல மரபான மதிப்பீடுகள் ஆட்டம் கண்டன. பெண்ணாற்றல் வேகம் பெறுகிற போது இத்தகைய ‘சேதாரங்கள்’ இருக்கத்தான் செய்யும். அது நீளக் காலர் வேலையா, வெள்ளைக்காலர் வேலையா என்பதைப் பொறுத்து ‘சேதாரம்’  இருக்கும்.

 

             கடந்த நூற்றாண்டில் பெண்ணாற்றல் வெவ்வேறு துறைகளில் சாதனைகளை நிகழ்த்தியது..முத்துலட்சுமி ரெட்டி, பால சரஸ்வதி, வீணை தனம்மாள், பெங்களூர் நாகரத்தினம்மா ஆகியோரின் சாதனைகள் ஆணாதிக்கத்திற்கு எதிராக மட்டுமல்லாமல் தங்களுக்கு விருப்பமான துறைகளில் உச்சத்தையும் தொடுவதாக இருந்தன..

 

              தன்னலமில்லாத ஒட்டுமொத்த சமுதாயத்தையும் தழுவிய பெண்ணாற்றல்  என்பது இறையூழியல் செய்யும் அருட்சகோதரியர் மூலமாகவே வெளிப்பட்டது. கேரளத்தில் முதல் அருட்சகோதரியர் மடம் 1866-ம் ஆண்டு இத்தாலியிலிருந்து வந்த ஓர் அருட்தந்தை லியோபோல்ட் பெக்காரோ என்பவரும் அமலோற்பவ மேரியின் கார்மலித்தாக்கள் சபையைச் சேர்ந்த புனிதர் குரியாஸ் ஏலியாஸ் சாவராவும் சேர்ந்து தோற்றுவிக்கப்பட்டது. எலிஸ்வா என்கிற 34 வயது விதவையும் அவரின் 12 வயது மகளும் தான் முதல் அருட்சகோதரியர் மடத்தின் உறுப்பினர்கள். எந்த விதமான நிபந்தனையும் இல்லாமல் ஆண்டவர் திருப்பணிக்கு தங்களை ஒப்புக்கொடுப்பதாக அவர்கள் அறிவித்து தங்களுக்குச் சொத்தாகக் கிடைத்த இடத்திலேயே அருட்சகோதரியர் மடம் தொடங்கவும் அனுமதித்தார்கள். ஏர்ணாகுளத்தை அடுத்த கூனம்மாவு என்னுமிடத்தில் ஒரு ஓலைக்குடிசையில் அந்த முதல் அருட்சகோதரியர் மடம் துவங்கப்பட்டது.

             எந்த விதமான விளம்பரமும் இல்லாமல் கல்வி, மருத்துவம், சமூக சேவை என்னும்  துறைகளில் முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட அருட்சகோதரியர் தற்போது உலகெங்கும் பணி செய்து வருக்கிறார்கள். இவர்களது அறப்பணியின் மூலம் வெளிப்படும் பெண்ணாற்றல் புனிதமானது. ஒப்புவமை இல்லாதது.. சாதி, மதம், மொழி, இனம் என குறுகிய எல்லைக்குள் அடைபடாதது.  விளிம்பு நிலை மக்களுக்கும், ஆதரவற்றவர்களுக்கும் இவர்கள் ஆற்றும் பணி மிகவும் மேன்மையானது. புனிதமானது.

 

            உலகமயமாதல் மூலம் தமிழகத்திலுள்ள பல இடைநிலைச் சாதியிலுள்ள பெண்கள் பொதுவெளிக்கு வந்தார்கள்.  வந்து கொண்டிருக்கிறார்கள்..ஆனால் அவர்கள் நல்ல கல்வி, நல்ல வேலை, நல்ல சம்பளம் என்று குறுகிய வட்டத்திற்குள்ளேயே சுருங்கிக்கொண்டார்கள். ஒரு கம்பெனிக்குள்ளேயோ, ஒரு குடும்பத்திற்குள்ளேயோ என்றே அவர்கள் ஆற்றல் நின்று கொண்டது. சொல்லப்போனால் இத்தகைய சமூகங்களிலிருந்து ஒரு சமூக சேவகியோ, ஒரு நல்ல கலை விற்பன்னரோ, பேர் பெற்ற விஞ்ஞானியோ, மகத்தான எழுத்தாளரோ  தோன்றவில்லை. இது உலகமயமாதலின் வணிகம் சார், நுகர்வு சார் கலாச்சாரத்தையே பிரதிபலிக்கிறது. அதற்குப் பலியானவர்கள் இவர்கள். இப்படியொரு சமூகத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.

 

             தங்களது சாதி அடையாளத்தை தேவையானபோது மிகத்தீவிரமாக வெளிப்படுத்திக்கொள்ளும் இச்சாதியினர் தங்கள் சாதியைச் சேர்ந்த விளிம்பு நிலை மக்களையே கண்டு கொள்வதில்லை..இவர்களது மதமும் ஒரு கட்டமைப்புள்ள மதமாக இருந்து அவர்களை இத்தகைய புனிதப் பணி நோக்கிச் செலுத்தவில்லை. இந்த நிலையில் இவர்களது பெண்ணாற்றல் எந்த வகையாக வெளிப்படும்? அடக்கப்பட்ட பெண்மையாகவும், சுயநலம் நோக்கிய பெண்ணியமாகவும் மட்டுமாகவே தான் நிற்கும்.         

 

                                                               ********************************************

Series Navigationசொல்வனம் இணையப் பத்திரிகையின் 256 ஆம் இதழ்பொறுப்பு
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *