பெர்லினும் தமிழ் இலக்கியத்துள் வந்தாச்சு

This entry is part 1 of 27 in the series 21 செப்டம்பர் 2014

நான் பத்திரிகைகள் படித்து வந்த ஆரம்ப காலத்தில் கல்கி யாழ்ப்பாணம் சென்று வந்த கதைகளை சுவாரஸ்யமாகச் சொல்வார். ”யாழ்ப்பாணத் தமிழ் மணம் பற்றி மற்றவர்கள் எத்தனையோ குணம் கண்டு சொல்வார்கள். எனக்கு அது என்னவென்று யாழ்ப்பாணம் சென்ற பிறகு தான் தெரிந்தது. யாழ்ப்பாண அன்பர்கள் பேசும்போது கமழும் யாழ்ப்பாணப் புகையிலை மணம் தான் அது” என்பார் அவர். கி.வா.ஜகன்னாதன் இலக்கியச் சொற்பொழிவுகளுக்கு அங்கு நல்ல வரவேற்பு இருந்தது. அங்கு தமிழ்ப் பத்திரிகைகளுக்கு நல்ல மார்க்கெட். அங்கு செல்லும் போதெல்லாம், அங்குள்ள எழுத்தாளர்களை உற்சாகப்படுத்த தம் பத்திரிகைகளுக்கு எழுதச் சொல்வார்கள். ஒரே ஒரு வேண்டுகோள். ”எம் வாசகர்களுக்கு புரியும் தமிழில் எழுதுங்கள்,” என்பது தான் அது. அவர்களும் எழுதியிருப்பார்கள்.
என் நினைவில் நான் படித்த எதிலும் அவர்கள் வாழும் இடத்தின், மொழியின் , வாழ்க்கையின் பரிச்சயம் கிடைத்ததில்லை. மெரினா பீச்சில், காதல் புரியும் கதைகளாகவே, அன்றைய பத்திரிகைக் கதைத் தமிழில் பேசுவார்கள் காதல் செய்வார்கள். தமிழ் வாசகர்களுக்கு புரியும் விதத்தில் அவர்கள் விரும்பும் உலகைச் சொன்னார்கள். பத்திரிகைகள் அப்படி வேண்டின. லக்ஷ்மி என்று ஒருவர் அந்தக் காலத்தில் ஆனந்த விகடனில் தொடர்ந்து கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக எழுதி வந்தார்.  அவர் இங்கு மருத்துவ கல்வி பெற்று தென்னாப்பிரிக்கா சென்றார். அங்கிருந்து அவர் நிறைய எழுதினார். என் நினைவில் லட்சியவாதி, காஞ்சனா,  மிதிலா விலாஸ் என பல தொடர்கதைகள்.  அவ்வளவுதான்  என் நினைவில் இருப்பது. அவ்வளவு கதைகளும் நடப்பது தமிழ் நாட்டில். ஊர் பேர் தெரியாத ஊரில். தென்னாப்பிரிக்க வாழ்க்கையோ அனுபவங்களோ எட்டிப் பார்த்ததே இல்லை. கடைசியாக எழுதிய, சாகித்ய அகாடமி பரிசு பெற்ற ஒரு நாவல், ”காவிரியைப் போல,” என்று நினைவு. அதில் தான் தென்னாப்பிரிக்கா எட்டிப் பார்க்கிறது. தாமறிந்த வாழ்க்கையை, பழகிய மனிதர்களை எழுதுவது என்பதே அக்காலத்தில் இவர்கள் மனதில் தோன்றியதில்லை.
ஒரே ஒரு விதிவிலக்கு.  எங்கும் நேரும் விதிவிலக்கு. ப.சிங்காரம். ஆனால் தமிழரே ஆனாலும் தமிழ்ச் சூழலால் பாதிக்கப்படாது எங்கோ, வாழ்ந்தவர். அவர் கொணர்ந்த வாழ்க்கையும் தமிழ் இலக்கியத்துக்குப் புதிது. விதிவிலக்கு விலகி நின்ற ஒன்றாகவே ஆகியது.
இது மாறியது ”சரஸ்வதி” பத்திரிகை காலத்தில். இலங்கையிலிருந்து எழுதுபவர்கள் தாம் வாழ்ந்த வாழ்க்கையை அனுபவங்களை, எமக்கு அவர்கள் பரிச்சயப் படுத்தியது அப்போதிலிருந்து தான். அதையும் ஒரு சிறு வாசகர் வட்டம் ஏற்றுக்கொண்டது. திருநெல்வேலித் தமிழும் கொங்கு நாட்டுத் தமிழும் எவ்வளவு அன்னியமோ அவ்வளவு அன்னியம் தான் யாழ்ப்பாணத் தமிழும் மட்டக்களப்பு மனிதர்களும். அந்தத் தமிழும் தமிழுக்கு புதிய வண்ணங்களைச் சேர்த்தது. படிக்க மகிழ்ச்சியாக,  இந்தத் தமிழைக் கேட்க அதுவும் ஒரு அழகாகத்தான் இருக்கும் என்று எண்ணத் தோன்றியது. ஒரு சிறு வட்டத்துக்குள், அகிலனையும் ஜெகச்சிற்பியனும் மாத்திரமல்ல, டொமினிக் ஜீவா, கே டேனியல், வ.அ.ராசரத்தினம் எழுதுவதும் தமிழ் உலகம் தான், என்ற ஏற்பு, தமிழ் இலக்கியத்தின் பூகோளப் பரப்பை விஸ்தரித்தது. வேடிக்கை என்னவென்றால், இந்த நிகழ்வு, அகிலன் போன்றாரைப் பின் தள்ளிவிட்டு டேனியல், பொன்னுதுரை போன்றாரை முன் வைத்தது. இலங்கை எழுத்து தமிழ் நாட்டுக்கு இருபது வருடங்கள் பின்னுக்கு இருக்கிறது என்று அங்கு போய் கண்டு சொன்னவர்கள் கேலிக்கு ஆளாகவேண்டியதாய்ப் போயிற்று.
தமிழ் எழுத்தின், இப்பூகோளப் பரப்பு தென்னாப்பிரிக்கா, மலேசியா, ஃபிஜி என்றெல்லாம் விஸ்தரித்திருக்க வேண்டும். கயானாவுக்கும் மலேசியா வுக்கும் முருகனை மறக்காது எடுத்துச் சென்ற தமிழர், தம் இலக்கியப் பரப்பை விஸ்தரிக்க வில்லை. கூலிகளாகச் சென்ற, தென்னாப்பிரிக்கத் தமிழர் தம் சடங்குகளை மறக்கவில்லை. அவர்களது அடையாளங்கள் காக்கப்பட்டது,  சடங்குளிலும் பெயர்களிலும் தான்.  சாமி என்ற பெயர் போதும். கூலி என்றும் தமிழர் என்றும் அடையாளப் படுத்த. அங்கு அரசியல் காரணங்களுக்காகச் சென்ற வி.எஸ் சீனுவாச சாஸ்திரிகளை, ,  ”ஒரு சாஸ்திரிகள், வேத விற்பன்னர் வந்தது எங்கள் பாக்கியம், நீங்கள் தான் நல்லபடியாக மந்திரங்கள் சொல்வீர்கள்” என்று அவர்கள் சடங்குகளை நடத்துவிக்க அவரை நிர்ப்பந்தித்தார்கள் எனவும், தான் அவர்களின் அன்பின் பெருக்கத்தில் அகப்பட்டுத் தவித்ததாகச் சொல்கிறார், சாஸ்திரிகள்.
அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து என உலகம் முழுதும் தமிழகத்திலிருந்து சென்ற தமிழர்கள் வாழ்வதைக்காணலாம். அங்கு அவர்கள் தம் இன அடையாளங்களைக் காப்பது சங்கீதத்தில், சடங்குகளில், தெய்வ நம்பிக்கைகளில், கோவில்களில், உணவுப் பழக்கங்களில், தமிழ்ப் பத்திரிகைக் கடைகளில் வத்தல்,வடாம், ஊறுகாய்களில். ஆனால் ஏனோ அவர்கள் இலக்கிய உலக சிந்தனைகள் தமிழ் பத்திரிகைகளைத் தாண்டிச் செல்லவில்லை.
எண்பதுகளில் இலங்கையில் நடந்த இனவெறித் தாக்குதல்கள் முற்றிய நிலையின் முதல் அடையாளமாக யாழ்ப்பாண பொது நூலரங்கு தீவைத்து அழிக்கப்பட்டதும்  தமிழர்களின் வெளியேற்றம் தீவிரம் அடையத் தொடங்கியது. அது தொடரும் ஒரு பெரு நிகழ்வு. ஒரு சில வருடங்கள் எங்கெங்கோ அலைந்து தடுமாறிக் கடைசியில் அவர்கள் தஞ்சமடைந்தது, ஜெர்மனியோ, இங்கிலாந்தோ, இல்லை கனடாவோ, அகதிகளாகவோ,  இல்லை உணவுக்கூடங்களில் பீங்கான் தட்டுக்கள் கழுவியோ, இல்லை என்ன வேலை கிடைக்கிறதோ அதில் நுழைந்து. ஆச்சரியம் அவர்கள் அந்த நிலையிலும் தமிழில் எழுத விரும்பினார்கள். தம் அனுபவங்களைப் பதிய, பகிர்ந்து கொள்ள விரும்பினார்கள்.  அவர்களிடமிருந்து எழுந்துள்ள ஒரு சிறந்த கவிஞராக நான் கருதும் திருமாவளவன், இரவில் யந்திரங்களோடு உழன்று விடி காலையில் பத்திரிகைகள் வினியோகித்து வாழத் தொடங்கியவர், கடைசியாக தஞ்சம் அடைந்த கனடாவில் கூட இப்போதும் அவர் வாழ்க்கை அப்படித்தான் தொடர்கிறது. ஈழத்திலிருந்து வந்துள்ள முதல் தர கவிஞர் அவர். நாடு கடந்த ஆரம்ப வருடங்களில் படும் அவல வாழ்வைப் பற்றிய ஒரு சித்திரம் ஷோபா சக்தியின் எழுத்துக்களில்,  ‘ம்” “தேசத்துரோகி”, போன்றவற்றில் காணலாம்.  இன்னமும் அடுத்த வேலை எங்கு கிடைக்கும் என்ற நிச்சயமற்ற நிலையில் இருப்பவர்கள், இரவு நேரத்தில் காவலாளியாக இருப்பவர்களைக் காணலாம். அவர்கள் தமிழ் எழுத்துலகைச் சேர்ந்தவர்கள். சிரிக்கச் சிரிக்க பேசுபவர்கள்.  தமிழ் நாட்டிலிருந்து வரும் எழுத்தாளர்களை வரவேற்று விருந்தளிப்பவர்கள். இவர்களே பெரும் பாலானவர்கள். தமிழ்ச் சூழலின் குணத்துக்கு மாறாக, தமிழுக்குக் கொடை என்று தாம் கருதும் எழுத்தை அங்கீகரித்து கௌரவிப்பவர்களும் அவர்கள் தான்.
ஆனாலும் இத்தகைய அனுபவங்களால் துரத்தப் படாத புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களும் உண்டு. அவர்களும் தற்காலத் தமிழ் இலக்கியத்துக்கு மிகச் சிறப்பான பங்களிப்பவர்கள், அ.முத்துலிங்கம், சேரன் சட்டென நினைவுக்கு வருபவர்கள். இதிலும் அ. முத்துலிங்கத்தின் எழுத்து தமிழ் இலக்கிய பூகோள பரப்பின் எல்லைகளை உலகப் பரப்பிற்கே விஸ்தரிப்பது. அவர் சென்றவிடங்களின் அனுபவங்களும் மனிதர்களும் சுபாவங்களும் இன்றைய தமிழ் எழுத்தில் பதிவாகி யிருக்கின்றன. மனிதர் எந்த பூகம்பம் வெடித்தாலும், எந்த எரிமலை தீக் கங்குளை உமிழ்ந்தாலும், எந்த அதீத சூழலிலும் மனுஷனுக்கு மந்திர ஸ்தாயி தான். விளம்ப காலம் தான். மெல்லிய சலனங்களை எழுப்பும் வீணையின் நாதம் தான். என்ன அபூர்வமான அமைதி கொண்ட மனநிலை இவருக்கு?
போகட்டும். நான் சொல்ல வந்தது, இது போன்ற ஒரு விஸ்தரிப்பை வேறு யாரிடம் காண்கிறோம்? இருக்கக் கூடும் யாராவது! ஆனால், நீண்ட யோசனையிலும் எனக்கு ஒருவர் தோன்றவில்லை. சாமர்செட் மாம்? ஜோசஃப் கான்ராட்? பேர்ல் எஸ் பக்.  ஊஹூம்ம்ம்……
நாடிழந்து, நிம்மதியும் அமைதியும் இழந்து, அகதிகளாக பிழைப்பும் வாழும் வகையும் தேடி அலைந்த ஒரு இனம் தமிழை மறக்கவில்லை. அது தன் தகிப்பிலும் தமிழுக்கு வளம் தருகிறது. அதன் இலக்கிய பரப்பை விஸ்தரித்து, பல நிற வண்ணங்களும் குணங்களும் நிறைந்ததாக ஆக்குகிறது.
இந்த மாதிரியான பயங்கர உத்பாதங்கள் ஏதும் நிகழாமல், எதற்கும் ஆட்படாமல், அரசு தரும் மான்யங்களிலேயே சுக வாழ்க்கை வாழும் தமிழ் நாட்டு மக்களுக்கு தமிழில் பேசும் விருப்பம் கூட இருப்பதில்லை. மட்டரகமான சினிமாவில் கள் மயக்கம் கொள்கிறது கூத்தாடிகளைக் கலைஞர்களாகக் கண்டு பரவசம் கொள்கிறது. ஆனால் பிரசாரப்படுத்தப் படும் தமிழ்வெறி என்னமோ உண்டு. அத்தோடு நிற்பது அது. ஆனால், எந்த ஆசை காட்டலுக்கும் தம் அடையாளங்கள் எதையும் இழக்கவும் அவர்கள் தயார். நினைத்துப் பார்க்க மனம் பிசைகிறது.
இப்போது என் முன்னால் பொ. கருணாகரமூர்த்தி. முப்பது வருஷங்களுக்கு முன்னதாக இலங்கையின் புத்தூரை விட்டு ஜெர்மனிக்குப் புலம் பெயர்ந்தவர் கருணாகர மூர்த்தி பத்து வருடங்களுக்கு முன்னரே எனக்கு பரிச்சயமான பெயர் தான். கவனிக்கத் தக்க பெயர் என்று.  அவரது ஒரு சின்ன புத்தகம் ஒன்று, ஒரு அகதி உருவாகும் நேரம், பச்சை வர்ணத்தில் அட்டை போட்டது என்ற அளவில் நினைவிருக்கிறது. ஆனால் நான் படிக்கும் முன் யார் எடுத்துச் சென்றார்களோ, திரும்பவில்லை. குறிப்பிடப் படவேண்டிய, படிக்க வேண்டிய, ஒருவர் என்று எப்படியோ யார் சொல்லியோ, படித்தோ நினைவில் பதிவாகியிருந்தது.  சின்ன புத்தகம் தானே, கைக்குக் கிடைத்தும் படிக்காது தவறவிட்டோமே என்ற குற்ற உணர்வு இருக்கத் தான் செய்கிறது. இப்போது அவரது “அனந்தியின் டயறி” முன் இருக்கும் போது, அந்த குற்ற உணர்வு கொஞ்சம் அதிகமாகவே உறுத்துகிறது தான்.
டயறிக் குறிப்புகளை புதினம் என்று சொல்லி நமக்குத் தந்துள்ளார். ஜனவரி 1, 2012 லிருந்து டிஸம்பர் 31 வரையிலான ஒரு வருட டயறிக் குறிப்புகள். எழுதுவது அனந்தி என்னும் 17- 18 வயதுப் பெண். கல்லூரியில் படிப்பவள். காளிதாஸ் அவளது தந்தை. ஒரு உணவகத்தில் வேலை செய்பவர். கடம்பன் என்று பத்து வயதில் ஒரு தம்பி.  பின் குழந்தை நயனிகா. அம்மா ஒரு தமிழ் பள்ளிக்குச் செல்வதுண்டு படிப்பிக்க. எல்லோருக்கும் ஜெர்மன் மொழி தெரியும். அப்பாவுக்கும் அனந்திக்கும் நன்றாக.  அம்மாவுக்குக் கொஞ்சம் குறைவாக. அனந்தி தமிழும் கற்று வருகிறாள். நடனமும். அவ்வப்போது கற்பது வர்ணமா, பதமா, தில்லானாவா என்று டயரிக் குறிப்புகள் எழுதுவாள். கடம்பன் கொஞ்சம் வாய்த்துடுக்கு. “அப்பா உங்கள் சாவுக்குப் பிறகு அந்த அலமாரியை எறிந்து விடலாமா? என்று கேட்கும் இக்கட்டான, என்ன சொல்கிறோம் என்று தெரியாத, அப்பாவித்தன வாய்த்துடுக்கு. அவ்வப்போது அப்பாவிடம் ஜெர்மன் மொழி கேள்விகள் கேட்டு கிண்டல் செய்வான்.  இரவு பணி முடிந்ததும் அப்பா தன் விஸ்கி போத்தலும் சோடாவும் கோலாவுமாக உட்கார்ந்து விடுவார். அம்மா சகித்துக்கொள்ளப் பழகியவர். களைத்துப் போய் வந்த உடம்புக்கு விஸ்கி உற்சாகம் கொடுக்கும் என்று பதில் சொல்லும் அப்பாவை, பின் ஏன் குடித்த உடன் படுத்துத் தூங்கிப் போகிறீர்கள்? என்று கேட்கும் அனந்தி அதிபுத்திசாலிப் பெண். ஆங்கிலத்திலும் ஜெர்மனிலும் இலக்கிய படைப்புகளை நாடுபவள். கார்ஸியாவும் டாஸ்டாய்வ்ஸ்கியும் படிக்கிறாள். இரானிய கொரிய படங்களைப் பற்றி விவாதிக்கிறாள். தமிழ்ப் படங்களைக் கேலி செய்கிறாள். அவ்வப்போது கவிதை எழுதுகிறாள். Memories of my Meloncholy whores புத்தகம் பற்றி அதை எழுதியவரின் சொந்த வாழ்க்கை, 50 வயது வரை அவர் கட்டிலைப் பகிர்ந்து கொண்ட பெண்களின் எண்ணிக்கை 514 என்றும் தன் 80 பிறந்த நாளுக்கு ஒரு கன்னி பரிசாக வேண்டும் என்று ஆசைப்படுகிறவர், அது அவருக்கு ஒரு விபசார விடுதியிலிருந்து கிடைத்தும் விடுகிறது என்பது அனந்தியின் டயறிக் குறிப்புகளில் ஒன்று. சமையலும் வீடும் அம்மாவின் பொறுப்பு. ஏதாவது வேலைக்குப் போக விரும்புகிறார், வீட்டுச் செலவுக்கு உதவும் என்று.  வெகு சுலபமாக, இயல்பாக ஜெர்மன் கலாசார சூழலில் வாழும் குடும்பம். அனந்தி யாரைக் கல்யாணம் செய்து கொள்கிறாள் என்பது அவள் பொறுப்பு. ஆனால் அவள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், யோசித்து முடிவெடுத்தால் அவள் யாரையும் திருமணம் செய்துகொள்ளலாம், தடை சொல்ல மாட்டேன் என்கிறார். இது அவரது முற்போக்கு சிந்தனையா இல்லை, ஜெர்மனில் வாழும் கலாசாரப் பாதிப்பின்  முதல் அடி வைப்பா, தெரியாது.  ஒரு அமெரிக்க பையன் வீட்டுக்கு விருந்தாளியாக வந்து சில நாட்கள் தங்குவான் என்றதும் அம்மாவுக்கு அது இஷ்டமில்லை. ஆனால் அப்பா அதுக்கு அனுமதி தருகிறார். அனந்திக்கு தன்னைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு உண்டு, எப்போதும் அவளுக்கு காவல் இருக்க முடியாது என்ற எண்ணம். ஜெர்மன் வாழ்க்கையின் அதி தீவிர தாக்குதலுக்கு அங்குள்ள சில புலம்பெயர்ந்தோர் குடும்பமும் பாதிக்கப்படுகிறது.  அனந்தியுடன் அவ்வளவு நெருக்க மில்லாத தோழி தான் கர்ப்பமாக இருப்பதாகவும் தன் பெற்றோருக்குச் சொல்ல அனந்தி உதவவேண்டும் என்று கேட்கிறாள். இன்னொரு வகுப்புத் தோழி 17 வயதினள் 42 வயதுடைய அமெரிக்கனுடன் தனித்து வாழ வீட்டை விட்டுப் போகிறாள், பெற்றோரின் சம்மதத்துடன். தன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் பொறுப்பு, சுதந்திரம் தன்னது என்கிறாள். இந்த சூழலில் வாழும் அனந்திக்கு தன்னிடம் காதல் கொண்டதாகச் சொல்லும், கடிதம் எழுதும் சம வயதுப் பையனை மென்மையாக அவன் மனம் நோகாது கண்ணியத்துடன் தவிர்த்து விடத் தெரிகிறது, இருவரிடையே கலாசார வேற்றுமைகள் நிறைய என்று சொல்லி. 2012 டிஸம்பரில் தில்லியில் ஒரு பெண்ணுக்கு நிகழ்ந்த கற்பழிப்பும் கொலையும் பெர்லின் பத்திரிகைகளில் படிக்கும் அனந்தியின் சிந்தனை, பாலியல் கல்வியும் சுதந்திரமும் நிறைந்த ஜெர்மனியில் இது போன்ற வன்முறை ஏதும் நிகழ்வதில்லையே கட்டுப் பாடுகள் நிறைந்த இந்தியாவில் நிகழ்வது ஏன்? என்று செல்கிறது.
அம்மாவுக்கு நிறைய தோழிகள் உண்டு. அவர்கள் அவ்வப்போது வந்து போவதுண்டு. சாறி(புடவை)யைப் பற்றியே என்னேரமும் பேசும் ஒரு ஆன்டி, சீட்டுக்கட்டச் சொல்லி வரும் ஒரு ஆன்டி, தமிழ் ஹிந்தி சினிமா நடிகைகளை டிவியிலும் டிவிடியிலும் இரவு நெடு நேரம்  பார்த்துப் பார்த்து ஏக்கம் கொள்ளும் தன் கணவர் தன் தாகத்தைத் தணித்துக் கொள்ள, பின்னிரவில், தன்னை வந்து துவம்சம் செய்வதைப் பற்றி அம்மாவிடம் புகார் செய்யும் ஒரு ஆன்டி, யாருக்கு ஆண்மை அதிகம், யார் என்ன பீற்றிக்கொண்டாலும் இன்னாருக்கு உள்ளது போல் வேறு யாருக்கும் இல்லை, என்று அம்மாவிடம் சொல்லும் ஒரு நர்ஸ் ஆன்டி. இதெல்லாம் அனந்தியின் காதில் விழுந்துவிடப்போகிறதே என்று கவலை கொள்ளும் அம்மா. எல்லாரிடமும் சீட்டுக் கட்டச் சொல்லி பணம் வசூலித்து ஏமாற்றி, இலங்கையில் வீடும் நிலமும் வாங்கிப் பின் ஜெர்மனி திரும்பும் ஒரு ஆன்டி அம்மாவின் சிபாரிசில் தான் பணம் கட்டியதால், அம்மா தான் ஈடு செய்யவேண்டும் என்று பிடுங்கும் ஆன்டிகள், இப்படி பெர்லினில் கூட இலங்கைத் தமிழ் வாழ்வை தம்  மண்ணிலிருந்து பெயர்த்து எடுத்து வந்து பெர்லினில் நாற்று  நட்டது போன்று தோற்றம். அவ்வப்போது ஹாலந்திலிருந்தோ ஃப்ராங்க் பர்ட்டிலிருந்தோ விருந்துக்கு வரும் புலம் பெயர்ந்த தமிழர்,
ஹாலந்திலிருந்து அப்பாவுக்கு தொலைபேசி வருகிறது. ”காளி தாஸ்தானா, உங்கள் நம்பர் கொடுத்தது இன்னார் என்று சொல்லி, தன் கோரிக்கையைச் சொல்கிறார், அந்த இலங்கைத் தமிழர். என் பையன் இங்கு படிக்க வந்து முடித்து விட்டதாகவும் மேலே படிக்க விசா கிடைப்பது சிரமமாக இருப்பதாகவும், அவனுக்கு இங்கு ஒரு கல்யாணத்தைச் செய்துவிட்டால், அவனுக்கு விசா கிடைக்க ஒரு வழி கிடைக்கும், காளி தாஸை அணுகினால் அவர் பெண்ணைக் கல்யாணம் செய்துகொள்ளலாம் என்று தனக்கு அந்த இடை மனிதர் சொன்னதாகவும் சொல்கிறார். இப்படியான கூத்துக்களும் புலம் பெயர்வாழ்வின் பாதிப்புகள் தான்.
அனந்தி வாரம் ஒரு முறை தன் வீட்டுக்குச் சிலதெருக்கள் தாண்டி இருக்கும் ஒரு வீட்டில் இருக்கும் முதியவள் ஒருத்திக்கு வேண்டும் உதவி செய்ய வாரம் ஒரு முறை செல்லும் தன்னார்வ தொண்டை அனந்தியின் கல்லூரி ஏற்பாடு செய்கிறது.  அப்பா காளி தாஸும் வேலை கிடைக்காது இருந்த போது இப்படி ஒரு தன்னார்வ தொண்டைச் சிலகாலம் செய்கிறார். அம்மாவும் தன்னார்வத் தொண்டாகவே தமிழாலயம் ஒன்றிற்குச் சென்று வருகிறார் இப்போது. அனந்தி அந்த முதியவள் வீடு சென்று அவளைக் குளிப்பாட்டுவது, உடை தரித்துவிடுவது, அழுக்குடைகளை வாஷிங் மெஷினில் போட்டுத் தருவது, அவ்வப்போது சூப் செய்து தருவது, அவளுக்குப் பிடித்த்மான் கஞ்சியைத் தன் வீட்டிலிருந்து செய்து எடுத்துச் செல்வது இப்படியாக இருக்கும். சில சமயம் அம்மாவும் அப்பாவும் கூட சேர்ந்து கொள்வார்கள்.
ஒரு சமயம் மகிழ்ச்சி மேலிட்டு அந்த முதியவள் அம்மாவின் கையில் பரிசாக ஒரு கவரைத் தருகிறாள். அதை உடனே பிரித்துப் பார்ப்பது அநாகரீகமாக நாம் கருதுவோம். ஆனால் அம்முதியவள் தன் முன்னாலேயே பிரித்துப் பார்க்கச் சொல்கிறாள். அப்பா பிரித்துப் பார்க்கும்படி அப்பா சாடை காட்ட, அம்மா பிரிக்கிறாள். அதில் பத்தாயிரம் யூரோ பணம் இருக்கிறது. பெரும் தொகை அது. தன்னார்வத் தொண்டு என்பது சமூகத்தின் எல்லாப் பிரிவினரும் கலந்து கொள்ளும், மெய்யாகவே ஆர்வம் கொள்ளும், தொண்டாகவே இருக்கிறது.
இப்படி அனந்தி என்னும் 17 வயதுப் பெண்ணின் ஒரு வருட கால, அவ்வப்போது தன் மனதுக்குப் பட்ட, சுற்றி நிகழும் நிகழ்வுகள், மனிதர்களைப்பற்றி, கோவையற்று துண்டு துண்டாக பதிவு செய்யும் டயறிக் குறிப்புகளிலிருந்தே நமக்கு ஒரு சித்திரம் கிடைத்து விடுகிறது. ஒரு கட்டுப்பாடான இலங்கைத் தமிழ்க் குடும்பம், கட்டுப் பாடற்ற சுதந்திரம் நிறைந்த ஜெர்மன் சமூகத்தின் இடையே அவர்களுடனும் நெருக்கமாக வாழ்ந்து கொண்டு, மாறியும், அதே சமயம் மாற மறுத்தும் தன் இலங்கை வாழ்வையும் சிந்தனைகளையும் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு வாழும் சக தமிழர்களுடனும் தொடர்பு விடாது,  தன்னை மாற்றிக்கொண்டும், மாற்றிக்கொள்ள மறுத்தும் தன் அடையாளங்களை காத்துக்கொண்டும் புதுப்பித்துக்கொண்டும் வாழும் ஒரு சமூகத்தின் சித்திரம் இப்பதிவுச் சிதறல்களில் கிடைத்து விடுகிறது.
சம்பிரதாய கோர்வையான நீண்ட வாழ்க்கைச் சித்திரமின்றியே, பாத்திரங்களின் முழுமையான சித்திரம் இன்றியே ஜெர்மன் சூழலையும் அதனிடையே வாழும் புலம் பெயர் தமிழரின் மாறாத, மாறி வரும் சலங்களைச் சொல்லிவிட முடிகிறது.
சில சமயங்களில் கவிதையோ, சில புத்தகங்களைப் பற்றிய கருத்துப் பதிவுகளோ, பாலியல் சிந்தனைகளோ யாரது, அனந்தியினதா இல்லை கருணாகரமூர்த்தியினதா என்ற ஒரு ஊசலாடும்  பிரமை தோன்றும். அது காளிதாஸின் பெண், ஜெர்மன் சூழலில் பிறந்து வாழும் பெண், தவிரவும் கொஞ்சம் அதிகமாக புத்திசாலித்தனம் வாய்க்கப் பெற்ற பெண், அது நமக்கு இந்தியாவில் தமிழ் நாட்டின் பாரம்பரியச் சிந்தனையில் வாழும் நமக்கு, தமிழ் சினிமாவிலும் தமிழ் அரசியலிலும் வாழும் நமக்கு அப்படித் தான் தோன்றும்.
கருணாகர மூர்த்தி, அனந்தியின் டயறி என்ற வடிவில்  ஜெர்மன் வாழ் புலம் பெயர் தமிழர் சித்திரத்தை ஒரு புதினம் என்று சொல்லி தந்திருக்கிறார். எந்த புதினமும், கற்பனை என்று என்னதான் சொல்லிக் கொண்டாலும், அது முழுதும் கற்பனை அல்ல.  வாழ்வின் நிதர்சனம் பெறும் சுதந்திர வடிவம் அது.
ஜெர்மன் சூழலில் ஒரு இலங்கைத் தமிழ்க் குடும்பம் தன் பாரம்பரிய வாழ்வினைக் காத்துக்கொண்டும், ஜெர்மன் சூழலின் செல்வாக்கை ஏற்றுத் தன்னை மாற்றிக்கொண்டும், வாழும் சித்திரம் இரண்டு மாறுபட்ட கலாச்சாரங்களின்  சக வாழ்வில் இணைவும் உண்டு, மாற்றமும் உண்டு ஒதுங்கி வாழ்தலும் தான். இவையும்  இயல்பாகவே தம்மை வெளிப்படுத்திக்கொள்கின்றன, திட்டமிடாமலே.
__________________________________________________________________________________
விரைவில் காலச்சுவடு வெளியீடாக வெளிவரவிருக்கும் பொ.கருணாகரமூர்த்தியின் “அனந்தியின் டயறி” புதினத்துக்கு அளித்த அறிமுக உரை.
வெங்கட் சாமிநாதன்/29.8.2014

Series Navigationவாக்குமூலம்சிறந்த நாவல்கள் ஒரு பட்டியல்- 1அதிகார எதிர்ப்பும் ஆழ்மனநிலையும்சாகித்ய அகாதெமியின் திரையிடல் என்னும் இலக்கியச்சடங்கு
author

வெங்கட் சாமிநாதன்

Similar Posts

6 Comments

  1. Avatar
    IIM Ganapathi Raman says:

    //மனிதர் எந்த பூகம்பம் வெடித்தாலும், எந்த எரிமலை தீக் கங்குளை உமிழ்ந்தாலும், எந்த அதீத சூழலிலும் மனுஷனுக்கு மந்திர ஸ்தாயி தான். விளம்ப காலம் தான். மெல்லிய சலனங்களை எழுப்பும் வீணையின் நாதம் தான். என்ன அபூர்வமான அமைதி கொண்ட மனநிலை இவருக்கு?//

    என்ன சொல்லவருகிறார்? புரியலையே! விளம்ப காலம் என்றால் என்ன பொருள்? புதுமையான தமிழ் :-)

    //போகட்டும். நான் சொல்ல வந்தது, இது போன்ற ஒரு விஸ்தரிப்பை வேறு யாரிடம் காண்கிறோம்? இருக்கக் கூடும் யாராவது! ஆனால், நீண்ட யோசனையிலும் எனக்கு ஒருவர் தோன்றவில்லை. சாமர்செட் மாம்? ஜோசஃப் கான்ராட்? பேர்ல் எஸ் பக். ஊஹூம்ம்ம்……//

    என்ன விஸ்தரிப்பை இவர் Somerset Maugham, Joseph Conrad and Pearl. S.Buck இவர்களிடம் கண்டார்? ஏன் இவர்கள் பெயர்கள் இங்கே குறிப்பிடப்படுகின்றன?

  2. Avatar
    IIM Ganapathi Raman says:

    //அங்கு அவர்கள் தம் இன அடையாளங்களைக் காப்பது சங்கீதத்தில், சடங்குகளில், தெய்வ நம்பிக்கைகளில், கோவில்களில், உணவுப் பழக்கங்களில், தமிழ்ப் பத்திரிகைக் கடைகளில் வத்தல்,வடாம், ஊறுகாய்களில். ஆனால் ஏனோ அவர்கள் இலக்கிய உலக சிந்தனைகள் தமிழ் பத்திரிகைகளைத் தாண்டிச் செல்லவில்லை.//

    தவறொன்றுமில்லை. உணவு, உடை, இருக்க இடம் – இவைதான் மனிதன் வாழ அடிப்படை தேவைகள். இவற்றுடன் இறை நம்பிக்கையையும் சேர்ப்பார் நல்ல சிந்தனையாளர்கள். ஏனென்றால், மனிதனுக்குப் பயம் என்பது ஒரு விலகாப் பேய். அதனிடமிருந்து தன்னைக்காத்துக்கொள்ள இறைநம்பிக்கை அவசியமாகிறது பாமரருக்கு. ஆக, உணவு, உடை, இருக்க இடம், இறை நம்பிக்கை – மனிதனின் அடிப்படைத்தேவைகள். இவைகள் நிரம்பியவுடன் கேளிக்கை தேவைப்படும். அப்போதுதான் இலக்கியம், இசை என்று தொடங்கும். இலக்கியமும் இசையும் அவனின் பலவிடயங்களுக்கும் உதவலாமென்றறிந்து அவை அவனின் சிந்தனைக்கு ஒரு சுகமாகவும், (Intellecutal pleasure) இறைவணக்கத்துக்கு ஒரு கருவியாகவும் (devotional literature) ஆக்கப்படுகின்றன.

    கடைசியில் வருவது எப்படி முதலில் வரும்? வராது. புலம்பெயர்ந்தோர் முதலில் வாழ்க்கையை நிலைப்படுத்தியபின்னரே மற்றவற்றை சிந்திக்கவியலும். ஒருவேளை, அவர்கள் நிலைப்படுத்திக்கொள்வதிலேயே நிலையாக இருந்துவிட வாய்ப்புண்டு.

    வெங்கட் சாமிநாதனைப்போன்ற இலக்கிய ஜீவிகளின் பார்வை குறுகியது. நர்சிசிசம் போல. தன்னைத்தான் பார்த்து மகிழ்வார்கள். தமக்கு இலக்கியம் ஜீவிதம். மற்றவருக்கு அப்படித்தான் இருக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு .

    வாழ்க்கை பரந்து பட்டது. அப்பரந்த பன்முனைப்பெட்டகத்தில் ஒரு சிறிய பட்டகமே இலக்கியம் என்று புரிவது நன்று. No expectations, no disappointments !

    1. Avatar
      I I M Ganapathi Raman says:

      Good editing indeed :-)

      I appreciate your effort dear Editor. Well done Instead of throwing my message out of Thinnai lock, stock and barrel, it is better to edit it here and there and allow the core message stand as you have done now!

      KEEP IT UP !

  3. Avatar
    ஒரு அரிசோனன் says:

    //இந்த மாதிரியான பயங்கர உத்பாதங்கள் ஏதும் நிகழாமல், எதற்கும் ஆட்படாமல், அரசு தரும் மான்யங்களிலேயே சுக வாழ்க்கை வாழும் தமிழ் நாட்டு மக்களுக்கு தமிழில் பேசும் விருப்பம் கூட இருப்பதில்லை.//

    அமெரிக்க மண்ணில் பல்லாண்டு காலமாக இருக்கும் நான் தமிழகம் செல்லும் பொது இனிய தமிழிக் காதுற விரும்புகிறேன். அது சென்னையில் ஒலிப்பதில்லை. கிராமங்கள் சென்றால் தான் அது நிறைவேறுகிறது.

    என்னுடனும், என் மகனுடனும், ஆங்கிலத்தில் பேசி, அவர்களது ஆங்கில ஒலிப்பைச் சரிசெய்ய விரும்புகிறார்களே தவிர, தமிழில் உரையாட விரும்புவதில்லை.

    இது தமிழுக்கே உள்ள சாபக்கேடோ! “தமிழ் முகமற்ற மொழி!” என்று சிலர் பரிகசிப்பதும் அதனால்தானோ!

    1. Avatar
      I I M Ganapathi Raman says:

      வெங்கட் சாமிநாதன் எழதுபவற்றை அப்படியே நம்பக்கூடாது. நான் மதுரையிலும் நெல்லையிலும் கிராமங்களிலும் வசித்ததுண்டு. எவருமே ஆங்கிலத்தில் பேசுவது கிடையாது. சென்னையில் மட்டுமே கல்லூரி மாணவிகள் மாணவர்கள் பேசுவார்கள். அது ஒரு அலட்டலுக்காக. அப்படிப்பேசுபவர்களுக்கு ஆங்கிலத்தின் அடிப்படை இலக்கணம் தகிடுதத்தம் என்பது வேறு ஒரு கதை. சென்னை சென்ட்ரல் போர்ட்டர் ஆங்கிலம் சரளமாகப் பேசுவான் !

      ஒட்டு மொத்த தமிழகமக்களைத்திட்டுவது வெ சாவிற்கு ஒரு வாடிக்கை. sadistic pleasure ! நேற்றைய உச்சநீதிமன்றம் ஒரு வழக்கில் கொடுத்த தீர்ப்பில், hate speech களை மக்கள் சட்டை பண்ணக்கூடாது என்று சொல்லியிருக்கிறது. எனவே இப்படி தமிழ்மக்களைத் திட்டுவோரை நாம் சட்டை பண்ணக்கூடாது.

      மதுரையில் இரு கல்லூரி மாணவர்களோ, ஆசிரியர்களோ பேசுவது தமிழில்தான். தமிழில் ஆங்கிலக்கலப்பு இருப்பது காலத்தில் கோலமே தவிர, அவர்களின் குற்றமன்று.

      சென்னையில் தமிழ்குளறுபடியாகப் போனது, பிறமக்களின் வரவால். அதிலும் தெலுஙகைத் தாய்மொழியாகக்கொண்டோரால், சென்னைத்தமிழ் பிறந்தது. தவிர்க்கவிய‌லாதது. நெல்லூரிலிருந்து, சித்தூரிலிருந்து, காலை புறப்பட்டு வேலை முடிந்தவுடன் இரவு வீடு திரும்பலாம். தெலுங்கு மக்கள் சென்னையை பிழைக்கும் களமாக வெள்ளைக்காரன் காலத்திலிருந்தே கொண்டதாலும் அவர்கள் ஒரு புதுமொழியை கேட்டுப்பேசமட்டுமே முடிவதாலும் (நடுத்தர வயதில் கற்க முடியாது) அவர்களுக்கு தமிழ் மொழி தெரிவதில்லை. கொச்சைமட்டுமே முடியும். அதில் தெலுங்கை விரவி பேச சென்னைத்தமிழானது. ‘ழ’ உச்சரிப்பு வாயில் நுழையாது. தமிழர்களால் தமிழ் அப்படியாக்கப்படவில்லை. இதைப்புரியாதவர்கள் திட்டுவதிலேயே காலம் கழிக்கிறார்கள்.

      ஆனால், இன்று ஆங்கிலமும் ஓடிப்போச்சு. கற்பிக்கப்படும் ஆங்கிலம் காலணாப்பெறாது. இன்னும் சிலகாலத்தில் ஹிந்தி தமிழை விழுங்கும். அதைத்தான் பலர் விரும்புகிறார்கள்!

  4. Avatar
    ரெ.கா. says:

    //கயானாவுக்கும் மலேசியா வுக்கும் முருகனை மறக்காது எடுத்துச் சென்ற தமிழர், தம் இலக்கியப் பரப்பை விஸ்தரிக்க வில்லை.//
    கயானா பற்றி நானும் அறியேன். ஆனால் மலேசியாவில் இலக்கியப் பரப்பு இல்லை என்பது அபத்தத்திலும் அபத்தம். மலாயா காலத்திலிருந்து நூறாண்டுகளாக இங்கு எங்கள் வாழ்க்கை பற்றி அசல் இலக்கியம் எழுதி வருகிறோம். சிங்கப்பூரிலும் அவர்கள் வாழ்க்கை பற்றி எழுதியிருக்கிறார்கள். ரப்பர் தோட்ட/ செம்பனைத் தோட்ட வாழ்வு, காலனித்துவக் கொடுமைகள், ஜப்பான் ஆக்கிரமிப்பில் நிகழ்ந்த கொடுமைகள், மரண ரயில்வே, கம்யூனிஸ்டு பயங்கரவாதம், புதிய மலேசியா இவற்றினூடே இந்திய எழுத்தாளார்களின் வீச்சுக்கு எட்டாத புதிய விஷயங்களாக எங்கள் வாழ்க்கை கவிதைகளாலும், சிறுகதைகளாலும், நாவல்களினாலும் எழுதப்பட்டுள்ளது. அப்படி இருக்கும்போது இங்கு ஒன்றுமில்லை என்று கையை விரிப்பதற்கு அதனை அறியாமையும் அறிந்து கொள்ள முயலாமையுமே காரணங்கள். தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் அயலக இலக்கியத் துறை இருக்கிறது. அங்கு மலேசிய, சிங்கப்பூர் இலக்கியங்களுக்குத் தனிப் பகுதி இருக்கிறது. வெங்கட் சுவாமிநாதன் தம் arm chair-ஐ விட்டு எழுந்தால் அறிந்து கொள்வார். ஏன் சிங்கப்பூர் வாழ்க்கை பற்றி ஜெயந்தி சங்கர், கமலா அரவிந்தன் ஆகியோரின் படைப்புக்களை அவரே பாராட்டி எழுதியது அவ்வளவு சீக்கிரமா மறந்துவிட்டது?

Leave a Reply to I I M Ganapathi Raman Cancel reply

Your email address will not be published. Required fields are marked *