பெற்றால்தான் பிள்ளையா?

This entry is part 16 of 33 in the series 12 ஜூன் 2011

காலை வேலைகளுடன் அந்தக் காலை நடையும் சேர்ந்து கொண்டது செல்வாவிற்கு. ரேஸ் கோர்ஸ் சாலையில் வாசம். காலை ஏழு மணிக்கு நடை தொடங்கும். ஃபேரர் பார்க் தொடக்கப் பள்ளி, திடல், நீச்சல்குளம், பெக்கியோ ஈரச்சந்தை என்று பாதையை நிர்ணயித்துக் கொண்டார். நீச்சல் குளத்தைக் கடக்கும்போது அந்த சிமிண்ட் நாற்காலியில் உட்கார்ந்தபடியோ அல்லது அருகில் நடமாடியபடியோ அந்தப் பெரியவரை செல்வா தினமும் பார்க்கிறார்.

வயது எழுபது இருக்கலாம். முள்ளாக தாடி மீசை. விரக்தியும் வறுமையும் வரைந்த உருவம். பார்க்கும் போதெல்லாம் ஏதாவது பேச நினைப்பார் செல்வா. நினைத்துக் கொண்டிருக்கும்போதே கால்கள் கடந்துவிடும்.

ஒருநாள். செல்வா அந்த நீச்சல் குளத்தை அடைந்த போது அந்தக் கால்வாயில் எதையோ தொலைத்துவிட்டுத் தேடிக் கொண்டிருந்தார் பெரியவர். அருகில் சென்றார் செல்வா.

‘ஐயா, எதையும் தொலைத்துவிட்டீர்களா?’

‘ஆம் தம்பீ. என் மூக்குக் கண்ணாடி.’

‘விழுந்த இடம் தெரிந்திருக்குமே?’

‘இல்லை தம்பீ. சட்டைப் பையில் வைத்திருந்தேன். எங்கோ விழுந்துவிட்டது.’

பெரியவர் தங்கியிருக்கும் ஓரறை வீட்டை விசாரித்துக் கொண்டார் செல்வா. பெரியவர் வந்த வழியே அடி அடியாக எடுத்துவைத்து அந்த மூக்குக் கண்ணாடியைத் தேடினார். வழியில் இருந்த குப்பைத் தோம்புகளைத் திறந்து பார்த்தார். பின் மூடினார். கண்ணில் பட்டவர்களிட மெல்லாம் கேட்டார். ஒருவரிடமிருந்தும் சாதகமான பதில் இல்லை. பெரியவரிடம் வந்தார்.

‘ஐயா, என்னால் முடிந்தமட்டும் முயன்றுவிட்டேன். கிடைக்கவில்லை ஐயா.’

‘பரவாயில்லை தம்பீ. எத்தனையோ சுமைகளில் இது ஒரு சுமை. கண்ணாடி இல்லாமல் நடமாட முடியாது. கண்ணாடி இப்போது வாங்கவும் முடியாது. நடக்கிறபடி நடக்கட்டும். ரொம்ப நன்றி தம்பீ.’

‘ஐயா. இந்த ஐம்பது வெள்ளியை வைத்துக் கொள்ளுங்கள். புதுக் கண்ணாடிக்கு முன் பணமாகக் கொடுங்கள். நாளை மீதியைச் சொல்லுங்கள். கொடுத்துவிடுகிறேன். எனக்கு இப்போது நேரமாகி விட்டது. வருகிறேன்.’ பெரியவரின் பதிலுக்காக செல்வா காத்திருக்கவில்லை.

அடுத்த நாள். அதே இடம்.

‘ஐயா, கண்ணாடி வாங்கிவிட்டீர்களா?’

‘வாங்கிவிட்டேன் தம்பீ.’

‘மீதம் எவ்வளவு ஐயா?’

‘பரவாயில்லை தம்பீ.’

‘இல்லை ஐயா. அந்தக் கண்ணாடி நான் வாங்கித் தந்ததாக இருக்கட்டும்.’

இன்னொரு ஐம்பது வெள்ளியை அவர் சட்டைப் பையில் திணித்துவிட்டு, கோயில் உண்டியலில் காசு போட்ட திருப்தியில் விடை பெற்றார் செல்வா.

செல்வாவிற்கு மிக நெருங்கிய நண்பர் அமீர். தேக்கா ஈரச் சந்தையில்தான் அமீரின் ரொட்டிப் பரோட்டாக் கடை. எப்போதாவது மாலை நேரங்களில் அமீர் கடைக்கு செல்வா வருவார். அன்றும் அதுபோல்தான் வந்தார்.

அட! அந்த மேசையில் அதே பெரியவர். குனிந்த தலை நிமிரவில்லை. செல்வாவையும் பார்க்கவில்லை. பார்வை முழுதும் அந்த மீகோரிங் தட்டில்தான். மீகோரிங்கை முள் கரண்டியில் எடுத்தபோது கை நடுக்கத்தில் சில கொடிகள் உதிர்ந்தன.

‘ஐயா, நன்றாக இருக்கிறீர்களா?’

இப்போதுதான் நிமிர்கிறார் பெரியவர்.

‘இருக்கிறேன் தம்பீ.’

‘ரொம்பவும் சிரமப்பட்டுப் பார்க்கிறீர்களே. அந்தக் கண்ணாடி எங்கே?’

‘வீட்டில் இருக்கிறது. மறந்துவிட்டேன்.’

‘கண்ணாடி இல்லாமல் நடமாடவே முடியாது என்றீர்களே?’

பெரியவர் மீண்டும் நிமிர்கிறார். செல்வாவை ஆழமாகப் பார்க்கிறார். அந்தக் கண்களில் நீர் கோர்த்து நழுவப் பார்க்கிறது. தன் ஒட்டுத்தாளில் துடைத்துவிட்டார் செல்வா. பெரியவர் உடைந்தார். எத்தனை ஆண்டுகள் ஓடிவிட்டன இப்படி ஒரு தீண்டலை அனுபவித்து. எத்தனையோ பேரைப் பார்க்கிறோம். பேசுகிறோம். தீண்டல்கள் என்பது அரிதாகவே இருக்கிறது. பெரியவர் கேட்டார்.

‘தம்பீ, கொஞ்சம் பேசலாமா? ஊமைபோல்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். யாரிடம் பேசுவது? நான் கொஞ்சம் பேச வேண்டும் தம்பீ.’

‘பேசுங்களய்யா.’

‘தம்பீ நானும் வேலை செய்து கொண்டுதான் இருந்தேன். கை நடுக்கம் வந்தது.  முடியவில்லை. விட்டுவிட்டேன். ஓரறை வீடு. மனைவி இல்லை. ஒரே மகள் வயது நாற்பது. முதிர்கன்னி. கே. கே மருத்துவமனையில் துப்புரவுப் பணி. வீட்டில் சமையல் என்பது வெந்நீரும் காப்பித் தண்ணியும்தான். காலையில் ரொட்டித் துண்டுகள். இரவில் பொட்டலச் சாப்பாடு. மதியம் உயிர் போவதுபோல் பசிக்கும். சில சமயம் காசிருக்கும். பல சமயம் இருக்காது. மகளிடம் கேட்பது உயிர் போவதுபோல் இருக்கிறது. கடவுளிடம் இதுவரை நான் இரண்டு வரங்கள்தான் கேட்டேன். ரொம்ப காலமாக ஒர மகன் வேண்டுமென்று கேட்டேன். அந்த நீலகண்டன் நிராகரித்துவிட்டான். இப்போது ‘பிச்சை எடுக்கும்படி வைத்துவிடாதே’ என்று கேட்டுக் கொண்டிருக்கிறேன். அதையும் நிராகரித்துவிட்டான் உங்கள் மூலமாக. கண்ணாடி என்றதெல்லாம் பொய்யய்யா.’ பெரியவர் இன்னும் உடைகிறார். செல்வா சொன்னார்.

ஐயா, காசு தாருங்கள் என்று நீங்கள் கேட்கவில்லை. உங்களுடைய தேவைக்கு ஒரு கதையைச் சொன்னீர்கள். பசியின் வலியால்தான் சொன்னீர்கள். காசு நானாகத்தான் தந்தேன். அது பிச்சை என்றால் உலகத்தில் நாம் எல்லாருமே பிச்சைக்காரர்கள் தானய்யா.

‘அப்படி யென்றால் நான் கேட்டது பிச்சை இல்லையா?’

‘இல்லை.’

‘நன்றி தம்பீ. இனிமேலும் இப்படி நடந்துவிடக்கூடாது.’

‘நடக்காதய்யா.’ என்று சொல்லிவிட்டு அமீரை அழைத்தார் செல்வா.

‘அமீர். இதோ இவர் என் அப்பா மாதிரி.’

வார்த்தைகளைக் கேட்டதும் உதிர்ந்தார் பெரியவர். ‘இன்னொரு சுமை இறங்குமுன் இந்த சுகமான வார்த்தையுடன் செத்துவிடக்கூடாதா?’ தனக்குள் வேண்டிக் கொண்டார் அவர். இமைகளை மெதுவாக மூடி கண்ணீரை இதமாக வழியவிட்டார். செல்வா தொடர்ந்தார்.

‘இவர்கள் எப்போது வந்தாலும் நல்ல சாப்பாடாகக் கொடுங்கள். தங்களிடம் இல்லாவிட்டாலும் அவர் விரும்புவதை வாங்கிக் கொடுங்கள். எல்லாம் என் கணக்காக இருக்கட்டும்.’

இன்னொரு ஐம்பது வெள்ளியை பெரியவர் சட்டைப் பையில் திணித்தார் செல்வா. பின் சொன்னார். ‘அய்யா உங்களின் இன்னொரு வரத்தையும் இன்று கடவுள் நிறைவேற்றி இருக்கிறாரய்யா.’ வார்த்தைகள் வெளியாகும்போதே பெரியவரின் கையை அழுந்தப் பற்றினார். பின் தொடர்ந்தார். ‘என் அப்பாவை இளமையிலேயே இழந்தவனய்யா நான். நானே உங்களுக்கு மகனாக இருக்கிறேனய்யா. அய்யா! பெற்றால்தான் பிள்ளையா?

அந்த அழுந்திய கரங்கள் அழுந்தியபடியே நின்றன. சொட்டுச் சொட்டாக இறங்கிற கண்ணீர் அந்த மீகோரிங்குக்கு உப்பு சேர்த்துக் கொண்டிருந்தது.

யூசுப் ராவுத்தர் ரஜித்

yousuf_rajid@yahoo.com.sg

Series Navigationசாமானியனிடம் இந்திய சர்க்கார் கேட்கும் பத்து சாதாரண கேள்விகள்நெருப்பின் நிழல்
author

யூசுப் ராவுத்தர் ரஜித்

Similar Posts

Comments

Leave a Reply to Samy Cancel reply

Your email address will not be published. Required fields are marked *