போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 27

This entry is part 7 of 25 in the series 7 ஜூலை 2013

ஒரு மலைப் பள்ளத்தாக்கில் பெரிய மான் கூட்டம் வாழ்ந்து வந்தது. அந்த மான்களில் தலைவனான ஒரு மான் அவர்களை ஒற்றுமையாக வைத்து பயங்கர விலங்குகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளக் கற்றுத் தந்து மான் இனத்தைப் பேணித் தலைமை வகித்து நடத்தியது. நன்கு வளர்ந்து நீண்டும் உயரமாகவும் இருந்த அந்தத் தலைவன் மான் மற்ற மான்களுக்கு வலிமையின் சின்னமாக இருந்தது. பக்கத்து மலையிலிருந்து ஒரு சிங்கக் கூட்டம் இந்த மான்களிருந்த மலையை நோக்கி வந்து கொண்டிருப்பதைத் தலைவன் ஒரு நாள் கண்டு கொண்டது. தப்ப இருந்த ஒரே வழி சிங்கங்களால் தாவிக் கடக்க முடியாத ஒரு காட்டாற்றைத் தாண்டிச் செல்வதுதான். அதே சமயம் அந்தக் காட்டாற்றைத் தாண்டிச் செல்வது மான்களுக்குமே பெரிய சவால் தான். ஆனால் வேறு வழி ஏதுமில்லை. காட்டாற்றில் வெள்ளத்தின் வேகமும் அதிகமாக இருந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட மான்கள் விரைவில் காட்டாற்றை விரைவில் கடந்தாக வேண்டும். கரையோரமாகச் சென்று ஒரு மரத்தின் நீண்ட வேர்கள் தண்ணீருக்கு அடியில் ஆழமாக ஊடுருவி நெருங்கி இருக்கும் ஒரு இடத்தில் நின்றது. சற்றே முன் சென்று தண்ணீரில் வேகமாகக் குதித்தது. அடித்து வரும் தண்ணீரில் நகர்ந்து வந்த அந்தத் தலைவன் அந்த மரத்தின் நெருங்கிய வேர்களில் தன் கொம்புகளைச் சிக்க வைத்தது. ஒவ்வொரு மானாகத் தன் மீது தாவி ஊன்றி எழும்பி மறு தாவலில் அக்கரை சேரும்படி ஆணையிட்டது. மான்கள் ஒவ்வொன்றாக அதன் மீது குளம்புகளைப் பதித்துத் தாவி மறுகரை சேரும் போது அவற்றின் குளம்புகள் மானின் முதுகின் மீது காயத்தை ஏற்படுத்தின. இருபது மான்கள் தாண்டும் முன்பே அதன் உடலில் இருந்து ரத்தம் பெருகத் தொடங்கியது. நூற்றுக்கும் மேற்பட்ட மான் கள் தாண்டி முடிக்கும் போது அதன் சதை முழுதும் பெயர்ந்து எலும்புகள் தென்படத் தொடங்கின. இதற்குள் காட்டாற்றில் வெள்ளம் மேலும் பெருக, அதன் நீர்மட்டம் தலைவன் மானின் கழுத்தையும் தாண்டி உயர்ந்து கொண்டே வந்தது. கடைசி மான் தாவும் போது தலைவன் மூழ்கி விட்டது. அது தன் கொம்புகளை விடுவிக்க முயன்றது. ஆனால் காயம் அதிகமாகி அதனால் விடுவித்துக் கொள்ள இயலவில்லை. வெள்ளம் மீது சிறிது நேரத்தில் அதன் உடல் மிதந்தது.

தியாகம் என்ற ஒன்று தான் அன்பின் அடையாளம். நாம் ஒருவரை நேசிக்கிறோம் என்றால் அப்போது அவருக்காக ஒன்றை விட்டுக் கொடுக்கவும் தியாகம் செய்யவும் முன் வரும் போதே அந்த அன்பு உண்மையானது என்று நிரூபணமாகிறது.

இப்படிப்பட்ட அன்புப் பிணைப்பில் சமூகம் பின்னிக் கொண்டால் அளக்கவே முடியாத சந்தோஷம் அந்த சமூகத்துக்குச் சொந்தமாகும். அன்பு தியாகத்துக்கு மட்டுமா வழிவகுக்கிறது? பரஸ்பர நம்பிக்கை, எதிர்காலம் குறித்த நன்னம்பிக்கை ஆகியவற்றுக்கும் அதுவே வழி வகுக்கிறது.

பௌத்தம் வேண்டுவதும் பௌத்தம் நிலை நிறுத்த முயல்வதும் இத்தகைய ஒரு சமுதாயத்தைத் தான்.

மரத்துண்டுகளை, செம்மண்ணை, மூங்கில்களை ஒரே இடத்துக்குக் கொண்டு வந்தால் அதற்கு வீடு என்னும் பெயர் வராது. செங்கற்களும் கதவுகளும் கூரைகளுமாக அவை ஒன்றாகி ஒரு வடிவம் பெற வேண்டும். அதே போலத் தனிமனித ஒழுக்கமும் புலனடக்கமும் ஆன அஒரு அஸ்திவாரத்தின் மீது மட்டுமே அன்பு என்னும் அழகிய வீடு உருவாக முடியும். பௌத்தம் சொல்லும் மேலான நல்வாழ்வுக்காகத் தன்னை மாற்றிக் கொள்ள நீங்கள் எல்லோரும் முன் வர வேண்டும்.

புத்தரின் உபதேசம் முடிந்து ஒவ்வொருவராகக் கலைந்து சென்ற பிறகும் மகாராணி பஜாபதி கோதமியும் யசோதராவும் காத்திருந்தனர். புத்தபிரானை இருவரும் வணங்கினர். “மன்னரின் இறுதிச் சடங்குகளில் எஞ்சிய ஓரிரு சடங்குகளும் இந்த வாரத்துக்குள் முடிந்து விடும். நானும் யசோதராவும் பல ஷத்திரியப் பெண்களும் சில மற்ற குலப் பெண்களும் பிட்சுணிகளாகத் துறவேற்று பௌத்தத்தில் இணைய விரும்புகிறோம்” என்றார்.

புத்தர் உடனே எந்த பதிலும் அளிக்கவில்லை. ஆனந்தனை அழைத்தார். “அடுத்த உபோசதா என்று ஆனந்தா?”

“இன்னும் ஐந்து நாட்களில் வரும் பௌர்ணமி அன்று”

“மகாராணி. தங்கள் விருப்பம் பற்றிய இறுதி முடிவை சங்கம் தான் எடுக்க வேண்டும்”

“ஏன் புத்தரே? நீங்கள் பிட்சுணிகளாக வரும் பெண்களை பௌத்தம் ஏற்க வேண்டுமென்று முடிவெடுக்கக் கூடாதா?”

“பௌத்தம் போதி மரத்திண் நிழலில் நான் பெற்ற ஞானத்தின் சாராம்சம். ஆனால் சங்கம் என் ஆரம்ப சீடர்களால் ஏற்படுத்தப் பட்டது. அமாவாசையன்றும் பௌர்ணமியன்றும் நடைபெறும் உபோசதா என்னும் அமர்வில் பிட்சுக்கள் தம் மனசாட்சிக்கு உறுத்திய செயல்களில் தாம் ஈடுபட்டிருந்தால் அந்தத் தவிப்பிலிருந்து மீண்டு சரியான வழியில் செல்லும் வாக்குமூலத்துக்கே வழி இருக்கிறது. சுதந்திரமாகத் தம் கருத்துக்களைச் சொல்லும் உரிமை எல்லோருக்கும் இருக்கிறது. என் காலத்துக்குப் பின்னும் சங்கமும் பௌத்தமும் தழைத்து நிலைக்க வேண்டும் என்பதே என் விருப்பம். என் முடிவுகளைச் சார்ந்து சங்க நடைமுறைகள் அமைவதே பழக்கமாகுமென்றால் என் காலத்துக்குப் பிறகு சங்கம் பௌத்தத்தின் பணியைத் தொடர்வது சந்தேகமாகி விடும். பிட்சுணிகளாகத் தங்களை ஏற்பது பற்றிய சங்கத்தின் முடிவு தெரியும் வரை தாங்கள் பொறுத்திருக்க வேண்டும்”

பிரதமை அன்று நிரோடையில் மீன் கள் உண்ண அரிசிப் பொரியைத் தூவிக் கொண்டிருந்தார் புத்தர். அவர் தியானத்தில் இருக்கும் போது அணில்கள் ஏறி விளையாடுகின்றன. மான் கள் அவரைச் சுற்றித் திரிகின்றன. விழித்திருக்கும் போது ஒரு ஆட்டுக்கோ மானுக்கோ மாட்டுக்கோ மீனுக்கோ தீனி கொடுத்து மகிழ்கிறார். இவர் பாடு எவ்வளவோ தேவலாம் என்று ஆனந்தனுக்குத் தோன்றியது.

“புத்தரே” .. என்று தொடங்கிய ஆனந்தன் மேலே என்ன பேசுவது என்று தெரியாமல் திணறினார்.

“சொல் ஆனந்தா.. நேற்றைய உபோசதாவில் எதுவும் பேச முடியாமற் போனதே என்று இப்போது மனம் வருந்துகிறாயா?” உள்ளக் கிடக்கையை அப்படியே பிட்டு வைக்கும் புத்தரின் அற்புத அனுமானம் ஒவ்வொரு முறையும் வியப்பையே அளித்தது ஆனந்தனுக்கு.

“புத்தபிரானே. நேற்று தேவதத்தன் தமது விஷமப் பிரசாரத்துக்கு பிட்சுணிகளாக விரும்பும் சாக்கிய வம்சப் பெண்மணிகளின் கோரிக்கையைப் பயன்படுத்திக் கொண்டார்”

“மேலே சொல் ஆனந்தா”

“தாங்கள் பிட்சுணிகளை ஏற்பது என்று ஏற்கனவே முடிவு எடுத்து விட்டீர்களாம். ஷ்ரமண வழி முறைகளிலிருந்து பிறழ்ந்து ஒரு ஞான மார்க்கத்தைத் தாங்கள் எவ்வாறு கொண்டு செல்ல இயலும் என்று அவருக்கு வியப்பாக இருக்கிறதாம். எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது”

“மனதில் உள்ளதைப் பேச உபோசதாவில் சுதந்திரம் இருக்கும் மார்க்கம் பௌத்தம் என்று நீ சந்தோஷப் பட்டிருக்கலாமே ஆனந்தா”

“உங்களுக்கு இந்த சுதந்திரத்தை தேவதத்தன் முறை கேடாகப் பயன்படுத்துவது தவறாகவே தென்பட வில்லையா?”

“ஏன் ஆனந்தா? சுதந்திரம் தேவதத்தனுக்கு மட்டும் தான் பயன் படுமா? நல்வழி காணும் பிட்சுக்களுக்கும் அது பயன் படத் தானே செய்யும்?’

“………………….”

“குற்றம் சாட்டுவதும் மறுப்பதும் ஒரு புறம் இருக்கட்டும் ஆனந்தா. ஞானமும் உண்மையும் தேடுவோருக்கு அது தெளிவாகத் தென்படும். அதற்குக் காலம் ஆகலாம். ஆனால் கண்டிப்பாகத் தென்படும். தேவதத்தன் உன் கருத்துப் படி பிட்சுக்களை சோதிப்பதாக வைத்துக் கொண்டாலும் அதைத் தாண்டுவது இயலாமற் போனால் அவர்களது இறுதி லட்சியமான விடுதலை அல்லது நிர்வாணம் அசாத்தியமாகி விடும்”

“உங்களைப் போலவே பிட்சுக்களும் ஞானத் தேடலில் வெல்வார்கள் என்று சொல்ல முடியுமா புத்த தேவரே?”

“இதில் ஐயமென்ன ஆனந்தா? எனக்கு மட்டும் ஞானமும் நிர்வாணமும் சித்திக்க வேண்டும் என்பதற்காகவா நான் பல தேசங்களிலும் பௌத்த வழி வருவோரை வரவேற்கச் செல்லுகிறேன்?”

“தேவதத்தன் செய்யும் எதுவுமே தங்களுக்கு ஒரு பொருட்டாகவே இல்லை புத்தரே. அவரை மீறி பௌத்தத்தை வளர்ப்பது என்பது மிகப் பெரிய சவாலாகத் தோன்றுகிறது”

“ஞானமும் நிர்வாணமும் சித்திக்கும் வரை அல்லது குறைந்த பட்சம் அந்தப் பாதையில் ஒருவர் நிலைக்கும் வரை எல்லாமே இருளாக இருக்கும். துரதிர்ஷ்டவசமாகப் பார்வையே இல்லாதவர் போன்ற நிலை அது. தேவதத்தன் காட்டும் எதிர் வழியையும் அவர் தரும் குழப்பத்தையும் மீறி ஞானத் தேடலில் நிற்போருக்குக் கண்டிப்பாக வெளிச்சம் தென்படும்”

“எனக்கு ஆறுதலாக இவற்றைக் கூறுகிறீர்களா புத்த பிரானே?”

“இல்லை ஆனந்தா.. மனித மனதுக்குள் சன்மார்க்கத்தில் நிலைக்கும், அவ்வழியில் விடுதலை தேடும் ஒரு ஆன்மீகத் தாகம் நீறு பூத்த நெருப்பாக எப்போதும் கனன்று கொண்டுதான் இருக்கிறது. நீரோடையை இனங்கண்டு பல வகை விலங்குகளும் வருவது போல எல்லா குலத்தவரும் ஆணோ பெண்ணோ யாரும் அதைத் தேடி, தேடலில் நிலைத்து இலக்கை அடைவார்கள்”

*************************

“சென்ற வாரம் ஒரு இரவில் பிட்சை ஏற்ற வீட்டில் குடும்பத் தலைவர் என்னிடம் பௌத்த நெறிகள் பற்றி மிகவும் ஆர்வமாக வினவினார். அவர் அதை ஒரு விவாதமாக வளர்க்கவே நேரம் போனதே தெரியவில்லை. பிட்சை உணவையும் அவரது வீட்டிலேயே உண்டு இரவு வெகு நேரம் பேசிக் கொண்டிருக்கும் போது கடுமையான மழை பெய்யத் தொடங்கியது. அதனால் அவர் விருப்பப்படி அங்கேயே தங்கி விட்டேன். அப்போது அந்த வீட்டில் பெண்களும் இருக்கக் கூடும் என்பது எனக்குக் தோன்றவில்லை. காலையில் அவர்கள் நடமாடும் போது தான் ஒரே கூரையின் கீழ் பெண்கள் இருக்கும் இடத்தில் நான் தங்கியதை உணர்ந்தேன். இதற்காக உபோசதாவில் நான் மனம் வருந்துகிறேன்” என்று ஒரு பிட்சு தனது குற்றா உணர்வைப் பற்றிய வாக்குமூலத்தைச் சொல்லி அமர்ந்தார்.

உபோசதாவில் இருந்த எல்லா பிட்சுக்களின் மனதிலும் ஒரே கேள்வி தான் இருந்தது. ஆறு மாதம் முன் தேவதத்தன் கடுமையாக எதிர்த்ததால் பிட்சுணிகளாகப் பெண்களை அனுமதிப்பது பற்றிய விவாதம் அல்லது ஆலோசனை நின்று போனது. இப்போது கபிலவாஸ்து மகாராணி பஜாபதி கோதமி, இளவரசியார் யசோதரா, மற்றும் நூற்றுக்கணக்கான பெண்கள் பிட்சுணிகள் ஆகும் முடிவுடன் வந்துள்ளார்கள். அவர்களுக்கு என்ன விடையளிப்பது?

அந்த இளம் துறவி தமது குற்ற உணர்வைப் பகிர்ந்து கொண்ட பிறகு வேறு யாரும் பேசவில்லை. ஆனந்தன் தம் தரப்புக் கருத்துக்களைக் கூறுவார் என்று அனைவரும் அவரது முகத்தையே பார்த்தபடி இருந்தனர்.

சங்கம் தன் முடிவைத் தானே அடையும் என்று புத்தர் பலமுறை குறிப்பிட்டிருக்கிறார். இன்று சங்கம் முடிவெடுத்தே ஆக வேண்டும். ஏன் நானும் அந்த முடிவுக்காகக் காத்திருக்கக் கூடாது? ஆனந்தன் இப்போது தம் மனதைப் பேச வேண்டும் என்றால் அது புத்தரின் வழியாக இருக்காதோ?

தயக்கத்தைத் தாண்டி ஆனந்தன் “என் கருத்தோ தேவதத்தன் கருத்தோ சங்கத்தின் முடிவாக இருக்க வேண்டிய அவசியமில்லை. சாக்கிய வம்சப் பெண்கள் இன்று ராஜகஹத்துக்கு வந்து விட்டார்கள். நம் முடிவைப் பொருட்படுத்தாமலேயே வந்திருக்கிறார்கள். இப்போது நாம் அவர்களுக்கு நம் தெளிவான முடிவைச் சொல்லக் கடமைப் பட்டிருக்கிறோம்” என்றார்.

பிறகும் மௌனமே தொடர்ந்தது. ஆனந்தன் மனதில் பதட்டம் ஏற்பட்டது. இப்போதும் முடிவு வராவிட்டால் இத்தனை தூரம் உண்மையான சிரத்தையுடனும் ஆழ்ந்த நம்பிக்கையுடனும் வந்திருக்கும் அன்னைகளுக்கு அது அநீதியும் அவமதிப்பும் ஆகுமே? புத்தபிரானே! நீங்கள் இந்த ஒரு முறை விதி விலக்காக சங்கத்துக்கு ஏன் ஆணையிடக் கூடாது? உங்களது திரு உள்ளத்தை யாரறிவார்? உங்கள் அருளின் படியே எதுவும் நடக்கட்டும்.

நடுவயதுள்ள ஒரு பிட்சு எழுந்தார் ” மூத்தவர் ஆனந்தரே மௌனமாகி விட்டார். அவர் மனதில் ஏதோ வருத்தம் இருக்கிறது என்றே கருதுகிறேன். பணிவாக என் தரப்பில் ஒன்று சொல்ல விரும்புவேன். பிட்சை ஏற்கவென நாம் வீடுகளுக்குச் செல்லும் போது அங்கே நமக்கு உணவை அன்போடு அளிப்பவர் தாய்களான பெண்களே. தம் குடும்பம், துறவிகள் என சமுதாயத்தின் இரண்டு பகுதிகளையும் தமது தாயன்பால் காப்பாற்றும் அன்னையர்கள் பிட்சுணிகளாக ஆகும் போது பௌத்தத்தின் தூய்மையைக் கட்டுப்பாடுகளைப் பேணுவார்கள். புத்த தேவரின் ஞான மார்க்கம் அவர்களால் மேலும் சிறப்பையே அடையும். அனேகமாக நம் அனைவரின் கருத்துமே இது தானே?’ என்று கேள்வியும் எழுப்பினார்.

உடனே ஒரு இளம் துறவி எழுந்து “பெண்கள் சகவாசமே கூடாது என்று நாம் கட்டுப்பாடுடன் இருக்கும் போது சங்கத்தில் எப்படி ஏற்பது?” என்றார்.

“நம்மோடு இல்லாமல் தனியாக இருந்தால் சம்மதிக்கலாமா?” என்றார் ஆனந்தன். “இது நல்ல முடிவு” என்று ஒரு குரல் வந்தது. “மகாராணியும் மற்றவர்களும் பிட்சுணிகள் ஆகட்டும்” என்றது இன்னொரு குரல்.

“இதுவே அனைவரின் முடிவா?” என்றார் ஆனந்தன். “ஆம்” என்று கூட்டாக ஆமோதிப்பு வந்தது. கூட்டத்தில் தேவதத்தன் இல்லை.

Series Navigationநான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…………26 ஜெயமோகன் – ‘புதிய காலம்’கவிகங்கையின் ஞானஅனுபவம்
author

சத்யானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *