போதி மரம் பாகம் இரண்டு – புத்தர் அத்தியாயம் – 21

This entry is part 19 of 40 in the series 26 மே 2013

 

Buddha_in_Sarnath_Museum_(Dhammajak_Mutra) (1)பிம்பிசாரரின் அரண்மனையில் ராஜசபை கூடியிருந்தது. மன்னருக்கு அடுத்து ராஜ குரு, பிரதான அமைச்சர், மற்ற மந்திரிகள், படைத்தலைவர் என இருக்கும் வரிசை அப்படியே இருந்தது. மன்னருக்கு இணையான ஆசனம் ஒன்று இருக்காது. இன்று அப்படி ஒன்று இருந்தது. ராஜகஹ நகரத்தில் எல்லா கிராமணிகள், இசைக் கலைஞர்கள், சிற்பிகள், புத்தரின் சீடர்கள் எனப் பலருக்கும் சபை நிறைத்து இருக்கைகள் இருந்தன. அதற்கு அடுத்த சுற்றிலும் இறுதியான சுற்று முழுவதும் வெளியே தோட்டத்திலும் பணியாளர்களும் பொது மக்களும் கூடியிருந்தனர்.

அரண்மனையில் தரப்பட்ட விருந்தை மன்னர் பிம்பிசாரர் பல முறை வேண்டிக் கொண்டதால் புத்தரும் அவருடன் வந்த சீடர்களும் உண்டனர். உணவு உண்டு முடித்து சபைக்குள் பிம்பிசாரரும் புத்தரும் நுழையும் போது அனைவரும் எழுந்து நின்று வணங்கினர். தமக்குச் சமமாக இடப்பட்டிருந்த ஆசனத்தில் புத்தர் அமர்ந்த பிறகு அவரது பாதம் பணிந்து மன்னரும் ராணியும் அமர்ந்தனர்.

“சாக்கிய முனி என நம்மால் அன்புடன் அழைக்கப் பட்ட புத்தரை நம் ராஜகஹமும் மகத நாடும் வணங்குகின்றன. பரிவிராஜராக, துறவியாக நம் நாட்டில் பல இடங்களிலும் தவமிருந்த புத்தபிரான் மகதத்துக்கும் மற்ற எல்லா தேசங்களுக்கும் பௌத்தம் என்னும் வழியைக் காட்டியிருக்கிறார்” என பிம்பிசாரர் தம் உரையைத் துவங்கினார். “பௌத்தத்தைத் தழுவிய நான் மக்கள் நலம் பேணும் அற நெறியில் நிற்க வேண்டும் என்னும் அவரது வழி காட்டுதல் படி நடப்பேன். பௌத்தமே எல்லா மக்களும் நல வாழ்வு வாழ்வும், பிறரின் நலம் பேணும் பெரு வாழ்வு வாழவும் வழி வகுக்கும். தமக்கு ஞானம் சித்தித்த பின் ராஜகஹத்துக்கு வருவதாக வாக்களித்திருந்த புத்தர் அவ்வாறே விஜயம் செய்தது நம்க்கு மிகவும் பெருமையானது” என்று கூறி அமர்ந்தார்.

புத்தர் பேச எழுந்ததும் அனைவரும் முழு கவனத்துடன் உன்னிப்பாகக் கேட்கத் துவங்கினர்.

“தர்மம் என்பது சடங்குகள் சம்பிரதாயங்கள் என்று நின்றுவிடக் கூடாது. வருணம் பேதம் பேசி சடங்குகளில் மட்டுமே கவனமாயிருந்து மனித குலம் என்கிற அடையாளம் மறைந்து கொண்டிருந்த கால கட்டத்தில் தான் ஷ்ரமணம் என்னும் மார்க்கம் பல மகான்களின் கருணையால் நாம் உய்ய வழி காட்டியது. அவர்களில் வர்த்தமான மகாவீரர் அன்பின் கருணையின் சிறப்பை நமக்கு உணர்த்தினார். ஷ்ரமணத்தின் சிறப்பு மனதை நல் வழிப்படுத்தும் கட்டுப்பாடுகளும் நல்வழி தேடும் முனைப்புமாகும். இந்த வழிமுறையை நாம் பௌத்தத்திலும் பின்பற்றுகிறோம். நிலத்தில் உழுது, விதைத்து, பயிரைப் பாதுகாத்துப் பின்பு தான் விளைச்சலை அறுவடை செய்து சமுதாயம் முழுவதற்கும் பயனாகச் செய்கிறோம்.

உழவரின் அரும் பணி அது. நமது பணிகள் எதிலுமே மூன்று விதமான சக்திகளுள் ஒன்று உண்டு. எவை எந்த மூன்று விதமான சக்திகள்? இச்சா சக்தி, க்ரியா சக்தி, ஞான சக்தி என்று அவற்றை அறிகிறோம். இச்சிப்பது மனதில் இயல்பு. அதுவே சொல் என்று பேச்சில் வடிவம் பெற்று பின் செயலாகும் போது வெளிப்படும் முயற்சியில் உள்ளதே கிரியா சக்தி. ஞான சக்தி நல்லதும் தீயதும் எவை எவை என்று வேறுபடுத்தி வழி காட்டும் போது தான் சமுதாய மேன்மைக்கான செயல்களைச் செய்பவராகிறோம். ஆசைகள் காட்டும் வழியில் சுகம் – பொருள் என்னும் போகத்தில் இருக்கும் போது, பிறருக்குத் தீங்கு நிகழ்ந்தாலும் பொருட்படுத்தாத மிருக நிலைக்கே போய் விடுகிறோம். அந்த ஆசை தரும் அலைக்கழிப்பே துன்பம். பிறரின் நலத்தையும் பொருட்படுத்தாத செயல்களுக்கு அது காரணமாவதால் அனைவரையும் துயரில் ஆழ்த்தி விடுகிறது. எண்ணம், சொல் , செயல் என்னும் மூன்றிலும் தூய வழி காணவே பௌத்தம் உங்களுக்கு நான்கு நெறிகளையும் எட்டு கட்டுப்பாடுகளையும் அளிக்கிறது.

தனக்காகவும் தன் குடும்பத்துக்காகவும் மட்டும் ஒரு உழவர் விதை விதைத்துப் பயிர் செய்வதில்லை. வியர்வை சிந்துவதில்லை. அவர் நம் அனைவருக்காகவும் தானும் தன் குடும்பமுமாகத் தீர்மானமான முடிவுடன் உழைத்துப் பாடுபடுகிறார். இந்தத் தீர்மானமான சமுதாய நன்மைக்கான முனைப்பு ஒவ்வொரு எண்ணம் மற்றும் செயலில் நம்மிடம் இருக்குமேயானால், பிறருக்குத் தீங்கே இருக்காது நம்மால். பிறரது நன்மையே நம்மை வழி நடத்தும். பௌத்தத்தின் கட்டுப்பாடுகள் இந்த மன உறுதியை நமக்கு அளிக்கும். இந்த ஞானம் எனக்கு வரத் தேடலின் போது எனக்கு வழிகாட்டிய புண்ணிய பூமியே மகதம்”. புத்தர் தம் உரையை நிறைவு செய்தார்.

*************************

அறியூபியா கிராமத்தின் கிராமணி, ஊர்மக்கள் யாவரும் மாம்பழத் தோட்டத்தில் குழுமியிருந்தனர். இளவரசர் சித்தார்த்தரின் சித்தப்பாக்களின் மகன்கள் ஆனந்தன், அனிருத்தன், தேவதத்தன் மற்றும் பல்லியன் யாவரும் குடில்கள் அமைக்கும் பணியை மேற்பார்வையிட வந்திருந்தனர்.

மூங்கிலும் கோரைப் புற்களுமான கூரை. செங்கல்லும் செம்மண்ணுமான சுவர்கள், குறுகிய நுழைவாயிலில் மூங்கிற் தட்டியில் பின்னிய கோரைப் புற்கள் கதவாக, குளிர்காலத்துக்கு ஏற்ற குடியிருப்பு. தண்ணீர் அருந்த ஒரு மண் பானை, குவளை, கணப்புக்கென ஒரு மண் பாண்டம் – அதில் இடுவதற்கு சுள்ளிகள் இருந்தன. புத்தரும் சீடரும் கட்டில்களில் படுக்க மாட்டார்கள் என்பதால் ஏழு அடி நீளமுள்ள மண் மேடையின் மேல் பாயும் கம்பளமும் விரிக்கப் பட்டிருந்தன.

“அண்ணா ஏன் கட்டிலில் படுக்கக் கூடாது? என்றார் அனிருத்தன் ஆனந்தனிடம். “ஷரமணர்கள் கட்டிலில் படுக்க மாட்டார்கள்” என்றார் பல்லியன்.

“ஷ்ரமணர்கள் பெண்கள் தொட அனுமதித்ததே கிடையாது. அண்ணா ஒரு பெண் தொட்டுக் கால் கழுவ அனுமதித்தாரே” என்றார் தேவதத்தன்.

“ஷ்ரமண மார்க்கத்தின் சில முரட்டு வழிகளையும், வைதீகத்தின் சில மூட வழி முறைகளையும் விலக்கியதாக பௌத்தம் இடைப்பட்ட பாதை தேவதத்தா” என்றார் ஆனந்தன.

“அண்ணாவை நீதான் அதிகமாகப் புரிந்து வைத்தது போலப் பேசாதே”

“தேவதத்தா. அண்ணா பல தேசத்து மாந்தருக்கும் சொந்தமானவர். அவரது உபதேசங்கள் எழுதப் பட்டு லிகிதங்களாக, கல்வெட்டுக்களாக மகதம் முழுவதும் வாசிக்கப் படுகின்றன. அவற்றிலிருந்து மக்கள் பௌத்தத்தை எப்படிப் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதையே நான் கூறினேன்”

“சித்தார்த்தனுடன் சிறுவயது முதலே அதிகம் நெருங்கிப் பழகியவன் நான் தான்”

“அவர் இப்போது கௌதம புத்தர். சித்தார்த்தரில்லை” என்றார் ஆனந்தன்.

“ஆனந்தா. சித்தப்பாக்களின் எல்லா மகன்களும் சமமானவர்களில்லை. விளையாட்டோ கத்திச் சண்டையோ மல்யுத்தமோ நானும் சித்தார்த்தனும் எப்போதும் சமமானவர்கள்”

“அவர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகள் இன்னும் முடியவில்லை. நீங்கள் ஏன் சண்டையிடுகிறீர்கள்?” என்றார் பல்லியன்.

மாந்தோப்பு, மக்களின் வருகையால் மிகவும் சந்தடி நிறைந்ததாக ஆகியிருந்தது. “மாளிகையிலிருந்து தள்ளி இருக்கும் இந்த இடத்திலிருந்து புத்தர் எப்படி அரண்மனைக்கு வருவார்? இவ்வளவு தூரம் நடப்பது சிரமமாக இருக்காதா? ” என்று ஆனந்தனுக்கு உள்ளூரக் கவலையாக இருந்தது. சேவகர்கள், சமையற்காரர்கள், காவல் வீரர்கள் எவரின் சேவையையும் புத்தர் ஏற்பதில்லை என்றே ராஜகஹத்திலிருந்து வந்த செய்திகள் கூறின. கபிலவாஸ்துவில் மட்டுமேனும் புத்தர் தமது நியமங்களைத் தளர்த்தினால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

“ராகுலன் மிகவும் சந்தோஷப்பட்டிருப்பானே?’ என்றார் சுத்தோதனர் உற்சாகமாக.

“நம்மை விட அவன் தான் எச்சரிக்கையாக இருக்கிறான் ” என்றார் ராணி பஜாபதி.

“புரியவில்லை. என்ன எச்சரிக்கை?”

“மௌனமாகவும் இது ஒரு சாதாரண செய்தி போலவும் யசோதரா எடுத்துக் கொண்டதை அவன் கவனித்துத் தானும் பெரிய அளவில் சந்தோஷப் படாமல் நடந்து கொள்கிறான்”

“யசோதராவை என்னால் புரிந்து கொள்ளவே இயலவில்லை. என் தம்பி மகன்கள் அனிருத்தன், தேவதத்தன், ஆனந்தன், பல்லியன், நம் மகன் நந்தா அனைவரும் குழந்தைகள் போலக் குதூகலமாக எப்போது சித்தார்த்தன் வருவானென்று தவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் யசோதராவோ நிஷ்சலனமாக நடப்பது நடக்கட்டும் என்பது போல இருக்கிறாள். நாளை சித்தார்த்தன் மனம்மாறி இல்லறம் புகுந்தால் அது யசோதராவாலும், ராகுலனாலும் மட்டுமே நடக்கமுடியும் பஜாபதி”

“மாமன்னரே. தாங்கள் எப்படி அவனது ஒன்று விட்ட சகோதரர்களையும் யசோதராவையும் ஒப்பிடுகிறீர்கள்? அவர்கள் தம் அண்ணனை, ஒரு விளையாட்டுத் தோழனை, அவன் புகழின் உச்சியில் இருக்கும் போது சந்திக்கும் உற்சாகத்தில் இருக்கிறார்கள். ஆனால் யசோதராவுக்கும் மட்டும் தான் சித்தார்த்தன் என்பது இறந்த காலம், புத்தர் என்பது நிகழ்காலம் என்பது தெளிவாகப் புரிந்திருக்கிறது”

“புதிராகப் பேசுகிறாய்”

“ஆமாம் மாமன்னரே. யசோதராவின் வாழ்க்கையின் புதிருக்கான விடை கிட்டத்தட்ட அவளுக்குத் தெரிந்திருக்கிறது. தனது கணவன் உலகையே உய்விக்க வந்த மகான் என்னும் போது தன் வாழ்க்கை என்று தனித்தும் இல்லாமல் புத்தருடன் பிணைக்கவும் வழியற்றதாகவே இருக்கக் கூடும் என்று அவள் உணர்ந்திருக்கிறாள்”

“கபிலவாஸ்துவில் நம் அனைவரின் அருகாமையில் கண்டிப்பாக சித்தார்த்தனிடம் மனமாற்றம் இருக்கும் என்றே நம்புகிறேன்”

நதிக்கரையில் கபிலவாஸ்துவே திரண்டிருந்தது. ஒவ்வொரு படகிலும் புத்தரைத் தேடியவர்களுக்கு, கடைசிப் படகில் இருந்து சீடர்களுடன் புத்தர் இறங்கிய போது அவரை அடையாளம் காணுவதற்கு சற்றே நேரமானது.

மக்களில் பலரால் கபிலவாஸ்துவின் இளவரசர்கள் மஹாநாமா, அஸ்வஜித், பஷிகா, பஸ்பா இவர்களையே பிரித்து அடையாளம் காண இயலவில்லை. அந்தணர் கௌடின்யரை சிலர் கண்டுபிடித்தார்கள்.

ஆனந்தனுக்கு புத்தரைக் கண்டவுடன் மகிழ்ச்சி பொங்கியது. தோற்றத்தில் மெலிந்திருந்தாலும் மிகுந்த தேஜஸுடன் அவர் திரும்பி வந்திப்பதாக ஆனந்தனுக்குத் தோன்றியது. படைவீரர்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த இளவரசர்கள் மட்டுமே புத்தரின் அருகில் செல்ல அனுமதிக்கப் பட்டனர். ஆனந்தனுக்கு அவரிடம் பேச மிகவும் தயக்கமாக இருந்தது. தரையில் விழுந்து வணங்கிப் பின் ஒதுங்கி நின்றார். புத்தரே ஆனந்தனின் அருகில் வந்து “நலமா ஆனந்தா?” என்று அழைத்து அணைத்துக் கொண்டவுடன் ஆனந்தன் கண்களில் நீர் நிறைந்தது.

மஹாநாமா மற்றவருக்கு “இவர்தான் மௌகல்யாயனர், அவர் மஹாகாஸ்யபர், பின்னாலிருப்பது சரிபுட்டர் என்று அடையாளம் காட்டினார். மஹாநாமாவின் மூலமாக ஆனந்தன் அன்றைக்கான புத்தரின் பிரயாண ஓய்வு நேரங்கள் பற்றித் தெரிந்து கொள்ள விரும்பினார். உபலி என்பவர் பிட்சுக்களை, பிற சீடர்களை ஓரிடத்தில் அமர வைத்தார். அப்போது புத்தருடன் சுபோதி என்னும் பிட்சு பேசிக் கொண்டிருந்தார். மஹாநாமா முதலில் இரண்டு பிட்சுக்களை ஆனந்தனுடன் அனுப்பித் தங்குமிடத்தின் வழியைத் தெரிந்து கொள்ளும்படி கூறினார். மஹாக்னா மற்றும் புன்னா ஆகிய அந்த இருவரும் ஆனந்தனுடன் தோப்பு வரை நடந்து வந்து, பிறகு மீண்டும் நதிக்கரைக்கே திரும்பினர்.

ஆனந்தன் தோப்பிலேயே காத்திருக்க முடிவு செய்தார். புத்தர் தங்கும் குடிலில் அவரை வரவேற்று வசதிகளை மேற்பார்வையிட எண்ணியிருந்தார். காலையுணவு மட்டுமே பிரதானமானது இரவு உணவு என்று ஒன்று கிடையாது. ஆனாலும் உடல் நலம் சரியில்லாதவர்கள் இரவு உணவை சூரிய அஸ்தமனத்துக்குள் சாப்பிடலாம். ஆனந்தனுக்கு பௌத்தத்தில் கட்டுப்பாடுகள் ஷ்ரமண வழிமுறையில் இருப்பதாகத் தோன்றியது.

தேவதத்தன் அரண்மனையின் பிரதான வாயிலிலேயே பரபரப்பாக உலவிக் கொண்டிருந்தார். புத்தர் வந்து சேர்ந்த செய்தியைக் கொண்டு வந்த படை வீரன் அவரையும் நந்தாவையும் வணங்கி அவர்கள் வந்து விட்டதாகத் தெரிவித்தானே ஒழிய அனைவரும் ஏன் இன்னும் ரதங்களில் வந்து சேரவில்லை என்னும் கேள்விக்கு விடை தெரியாமல் விழித்தான். தேவதத்தன் கையைத் தட்டினார். ஓடி வந்த பணியாளிடம் “ரதத்தைப் பூட்டச் சொல்” என்றார். தேவதத்தன் அதில் ஏறும் நேரத்தில் வேறு ஒரு சேவகன் ஓடி வந்து “மாமன்னர் தங்களை அழைத்தார்” என்றான்.”கிளம்பி விட்டேன் என்று அவரிடம் சொல்” என்று ரதத்தைச் செலுத்த ஆணையிட்டார். அந்தணர் தெரு, ஷத்திரியர் தெரு, வைசியர் தெரு என்று எங்குமே புத்தரின் ரதங்கள் வந்திருக்கவில்லை. விவசாயிகளின் இருப்பிடங்களும், பின் நிலங்களுமாக நகரின் விளிம்புப் பகுதியே வந்து விட்டது.

முடி திருத்துபவர், துணி துவைப்பவர், காலணிகள் செய்பவர், நகரின் ஜலதாரைகளைத் தூர் எடுப்பவர் வாழும் பகுதி நெருங்கிய போது தான் பெரிய ஜனத்திரள் அங்கே கூடியிருப்பது தெரிந்தது. “இளவரசர் தேவதத்தன் வருகிறார்” என்று ரதத்தின் முன்னே சென்ற குதிரை வீரர்கள் அறிவித்த பிறகு தான் மக்கள் ஒதுங்கி வழி விட்டனர். தேவதத்தன் ரதத்தில் இருந்து இறங்கும் போது நாவிதர் உபாலி அவரது காலில் விழுந்தார் ” இளவரசரே. நாங்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேட்காமல் புத்த தேவர் எங்கள் தெருக்களில் பிட்சை ஏற்றுக் கொண்டார்” என்றார். தேவதத்தன் மேற்கொண்டு அவர் பேசுவைதக் கேட்காமல் தெருவுக்குள் செல்ல, உபாலியின் வீட்டு வாயிலில் நின்றிருந்த புத்தரின் பாதத்தை அனைவரும் தொட்டு வணங்கிக் கொண்டிருந்தனர். தேவதத்தனுக்கு அவர்கள் புத்தரைத் தொடுவது அதிர்ச்சியாகவும் அருவருப்பாகவும் இருந்தது.

தோப்பில் வெகுநேரமாகியும் புத்தர் வராததால் அவர் அங்கே வரப் போவதில்லை என்று புரிந்து கொண்டார் ஆனந்தன். மனம் வருத்தப் பட்டது. தானே சென்று இருக்குமிடம் தெரிந்து கொள்ளலாம் என்றால் அதற்குள் அவர் இங்கே வந்து விட்டால் என்ன செய்வது என்று கவலையாயிருந்தது.

சிறிது நேரத்தில் ரதத்தில் வந்த நந்தா குறிப்பறிந்து இறங்கும் முன்னரே “புத்தர் தீண்டத்தகாதவர் வசிக்கும் பகுதியில் சென்று பிட்சை எடுத்து உண்டார். மாலைக்குள் தோப்புக்கு வருகிறார். இன்று அரண்மனைக்கு அவர் வரவில்லை” என்று விவரம் கூறினார்.

Series Navigationதாகூரின் கீதப் பாமாலை – 66 பிரியும் வேளையில் நீ சொல்லி விடு .. !தமிழ்க்கல்வி சிறக்க பரிந்துரைகள் சில
author

சத்யானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *