மணல்வெளி மான்கள் – 1

2
0 minutes, 1 second Read
This entry is part 3 of 25 in the series 17 மே 2015

முன்னுரை

மணல் வெளியில் மான்கள் வசிப்பதில்லை. ஆனால் குரூர சக்திகள் துரத்தி வரும்போது அவை மணல் வெளிகளைக் கடக்க முயலும். சில சமயம் வெல்லும்; சில சமயம் மடியும்.

மனிதகுலமேதான் இன்றைய மணல்வெளி மான்கள். துரத்துவது வன்முறை. தடுப்பதற்கு அல்லது தவிர்ப்பதற்கு மனிதர்களைத் தவிர வேறு எவருமில்லை.

எதிர்த்துத்தாக்கு!

தீயைத் தீயால் அணை!

முள்ளை முள்ளால் எடு!

இதுதான் காட்டுமிராண்டி வாழ்வின் ஆதி அம்சம். மனிதனின் அந்த விலங்குத் தன்மையை மாற்றி மாற்றி எழுந்த மகான்களின் குரல்கள் மறு பரிசீலனை செய்தன; பக்குவப்படுத்தின.

எனினும் அது இடையறாத போராட்டம் ஆயிற்று. நன்மைக்கும் தீமைக்குமான நிரந்தர யுத்தமாகியது.

இதை நீக்க மெய்யறிவு உதவியதைப் போல் அறிவியல் உதவவில்லை. அறிவியல் உதவ்வில்லை. அறிவியல் இதயத்தை, உணர்வுகளை, மனிதனிடம் உள்ள மனிதத்துவத்தை மேன்மைப் படுத்துவதற்கு மாறாக ஒருவரை ஒருவர் அழித்துக் கொள்ளவே அதிநவீன ஆயுதங்களையே உற்பத்தி செய்து வருகின்றது.

அதன் விளைவுகளை அமெரிக்காவில் ‘பெண்டகன்’ சந்தித்தது.

அறிவுக்கு மாற்று மருந்து உணர்வின் மேன்மை, கலைகள் அதற்கே முயலுகின்றன.

கலைகளின் தலைமைப்பீடம் இன்றும், இலக்கியமாகவே இருந்து வருகிறது. உலகெங்கும் நிகழும் வன்முறைகளைக் கண்டு மனங் கசிந்து வெற்றுக் கண்ணீர் விடாமல் மேலான பாத்திரங்களைச் சிருஷ்டித்துக் காட்ட வேண்டிய பொறுப்பு இலக்கிய ஆசிரியனுக்கு உண்டு.

இந்த நாவல் அதையே உத்தேசமாகக் கொண்டது. இதன் கதாநாயகனும் கதாநாயகியும் வாழ்ந்து காட்டி, வன்முறைக்கு இரையாகாமல் நிமிர்ந்து நிற்பது எப்படி என்று நிரூபிக்க முனைந்துள்ளார்கள்.

நாவலைப் பொழுது போக்குச் சாதனமாகக் கருதாமல் ஆத்மீக வழிபாடாகக் கொண்டு படைத்த முயற்சி இது. படித்துப்பாருங்கள்.

 

சென்னை – 42

மிக்க அன்புடன்

வையவன்

+++++++++++++++++++

 மதிப்புரைகள் / கருத்தோட்டங்கள்:

மணல்வெளி மான்கள் பற்றி :

அண்மைக் காலத்தில் பத்திரிகைகளில் பரசுரமாகியுள்ள தொடர்கதைகளில் ஓர் உன்னதமான இடத்தை இந்த நாவல் பெற்றிருக்கிறது என்பதில் எனக்கு ஐயமில்லை. உணர்ச்சிகளை அளவோடும் யதார்த்தமாகவும் வெளியிட்டு எழுதியிருக்கிறீர்கள். நல்லதொரு இலக்கியத்தரமான படைப்பாக “மணல்வெளி  மான்கள்’ விளங்குகிறது.

கி. ராஜேந்திரன், கல்கி ஆசிரியர்.

“மணல்வெளி மான்கள்’ சற்றும் மிகையற்று, கதைகளுக்கு அளிக்கப்படும் அடிப்படைக் கற்பனைச் சுதந்திரத்தைக் கூடப் பயன்படுத்தாமல், முற்றிலும் யதார்த்தமாகவே வெளிப்பட்டிருந்தது. இது நடைமுறை எழுத்துலகுக்குப் புதுமையானது,  வையவனுக்கு வாழ்த்துக்கள்!

திருச்சி, மேகதூதன்.

இவ்வளவு மென்மையான ஆழமான – நிதர்சனமான ஒரு காதல்

கதையை இதுவரை நான் படித்ததில்லை.

தாயு. ஆண்டாள்.

ஒரு லட்சிய இளைஞனின் யதார்த்தமான கதை! இறுதிவரை உறுதி கொண்ட நெஞ்சினனான கௌதம் – இன்றைய இளைஞர்களுக்கு ஒரு முன்னுதாரணம்!

பழநி,கி. நாகராஜன்.

நாயகன் கௌதம் முதல், வண்டிக்கார சிங்காரம் வரை அனைவரது உள்ளத்து உணர்வுகளையும் எழுத்தில் வெளிக்கொணர்ந்த வையவனுக்கு எங்களின் மனமார்ந்த பாராட்டுகள்.

“மணல்வெளி மான்கள்’ நாவல் பல விதங்களில் தனித்தன்மை வாய்ந்தது. கதை முழுவதும் கௌதம் என்ற உத்தம  மனிதனைச் சுற்றியே பின்னப் பட்டிருக்கிறது. அவனது இலட்சிய நோக்கையும் உயர்ந்த பண்பையும் வெளிப்படுத்தும் நாவல்

++++++++++++++,

 

மணல்வெளி மான்கள்

1

தென் மேற்கிலிருந்து வட கிழக்காக நீண்டிருக்கிறது அந்த நெடுஞ்சாலை. இரவும் பகலும் அதற்கு ஓய்வில்லை. லாரிகள், பஸ்கள், வேன்கள் கார்கள் என்று எல்லா வாகனங்களும் இருட்டு வெளிச்சம் பார்க்காமல், மழை வெய்யில் என்று பொருட்படுத்தாமல் ஓடிக் கொண்டே இருக்கின்றன.

பெங்களூரிலிருந்து சென்னைக்கு என இரு மாநகரங்களுக்கும் இடையே எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் அது போடப்பட்டது. தற்போது அதன் ஒரு கிளை பிரிந்து வலுத்து, கோவைக்குப் போகிறது. அங்கிருந்து கேரளம், பெங்களூரிலிருந்து பூனா, பம்பாய்.

அந்தச் சாலையின் தொட்க்கப் புள்ளி எது முடியும் புள்ளி எது என்று தற்போது சொல்ல முடியாதவாறு, காலம் அந்தச் சாலையை ஒரு கிளையோடு மறு கிளையாய் இணைத்து என்னென்னவோ கோலம் போட்டு விட்டது. மூன்று கடற்கரைகள், சென்னை பம்பாய் கன்னியாகுமரி ஆகியவை. கடைசியாக அந்தச் சாலையை வழிமறிக்கின்றன.

வழியில் எத்தனையோ சிறு பெருநகரங்கள், சிறிய பெரிய ஊர்கள். அவற்றை அலட்சியமாகக் கடந்து வாகனங்கள் காலதேவனின் கட்டளையை ஏந்திச் செல்வது போல் இடைவிடாது போய்க் கொண்டே இருக்கின்றன.

நெடுஞ்சாலை தன் சிறு கிளையாக, வடமேற்கே கை நீட்டியது போல் ஒரு குறுஞ்சாலை. பூந்துறை ரயில்வே ஸ்டேஷனுக்குப் போகிறது.

அந்தக் குறுக்குச்சாலை வெட்டித் திரும்பும் இடம் தான் விட்டலாபுரம். தேர்வு நிலைப் பேரூராட்சி. 22 கி.மீட்டரில் ஒரு மாவட்டத் தலைநகருக்கும், 9கி.மீட்டரில் ஒரு வட்டத் தலைநகருக்கும் இடையில் மாட்டிக் கொள்கிற எந்தப் பேரூரும் சிற்றூரும் எப்படி வளர வழியின்றித் தேங்கித் திகைத்து நிற்குமோ,அப்படித்தான் விட்டலாபுரமும் நின்றது. நூற்றாண்டு நூற்றாண்டுகளாக

பாலாற்றுப் படுகை இருப்பதால் தொழில் வேளாண்மைதான். தென்னை, நெல், கரும்பு, மாதா கோயில், மசூதி, பெருமாள், சிவன், கோயில்கள் உண்டு. எல்லையம்மன் செல்லியம்மன் இவர்களுக்கும்தான்!

ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனி மேல்நிலைப் பள்ளிகள் ஒரு காவல் நிலையம், சினிமாக்கொட்டகை, கயிறு பாக்டரி, மரம் அறுக்கும் தொழிற்கூடம் எல்லாம் உண்டு. காலையில் ஓடும் வாகனங்களை, முறைத்து வெறித்து வெறித்துப் பார்த்திருக்கும் விட்டலாபுரத்தில் கல்யாண முகூர்த்தங்கள் வந்தால், கொஞ்சம் கலகலப்பு கூடிவிடும்.

விட்டலாபுரத்தில் நிறைய கல்யாணச் சத்திரங்கள். அதுதவிர அனந்த சயன பெருமாள் கோயிலேயே ஒரே சமயத்தில் ஏழெட்டுக் கல்யாணங்கள் நடக்கும்.

நெடுஞ்சாலையிலிருந்து ஊருக்குள்ளே நுழையும் குறுஞ்சாலையில் 2 கி.மீ. தள்ளி, பாலாற்றின் கரையோரமாக அனந்த சயன பெருமாள் கோயில்.

கரையோரங்கள் நாளுக்கு நாள் குறுகி, ஆறே குறுகிக் கொண்டு வருகின்றது மனித ஆக்கிரமிப்பைப் பார்த்துப் பெருமூச்செறிந்தபடி, பல ஆண்டுகளாக மழை மேகங்கள் கடந்து சென்று கொண்டே இருக்கின்றன.

எல்லா அநீதிகளையும் ஆக்கிரமிப்புக்களையும் புரட்டித் தள்ளி பிரளயப் பிரவாகமாக ஓடவேண்டிய ஒரு மழைவெள்ளத்தை ஆற்று மணல் எதிர்நோக்கி நின்றது. ஆறா இல்லை ஏதாவது சுரங்கமா என்று கேள்விக் குறிகள் போல் ஆங்காங்கே ஆயிரமாயிரமாக லாரிகளில் மணல் திருட்டுப் போய் மூளி மூளியாக நிற்கிறது ஆறு.

ஆற்றங்கரை ஓரமாக ஒரு சிறு தென்னந் தோப்பு உள்ள நிலம். கரையிலிருந்து உள்ளே ஒதுங்கி வெட்டிய பெரிய கிணறு. பம்பு ஷெட். கிணற்று நீர் வழிந்தோடி நிலத்துக்குப்பாய வெட்டிய கால்வாயின் குறுக்கே துணிதுவைக்க வசதியாகப் பலகைக் கல் போட்டிருந்தது.

கிணற்றின் எதிர்ப்பக்கத்தில், பம்பு ஷெட் போடுவதற்கு முன், தாழ்ந்து இறங்கும். மாடு இழுத்துக் கவலை ஓடி நீர் இறைக்கக் கட்டிய மேடை. மாடு ஏறி இறங்கப் போட்ட பாதை. பட்டறைக் கம்பில் துருவேறிய அச்சுப் பதித்த மர ராட்டினம். இரண்டு மாடுகள் கால் கடுக்க கிணற்று மேட்டில் நின்றன. பம்பு ஷெட்டில் ஏதோ ரிப்பேர்.

கிணற்றைச் சுற்றிலும் யாரும் இல்லை. மாடுகள் மட்டும் நின்றன. கிணற்றுக்குள்ளேயிருந்து லொட்டு லொட்டென்று ஓர் ஓசை. எதையோ யாரோ முடுக்குவது போல் விட்டு விட்டுக் கேட்கும் ஓசை.

வியர்த்தது, பின்னங் கழுத்தில். பனியனுக்குள், உடம்பின் ஒவ்வொரு மயிர்க் காலிலும்…

பனியனையும் உரித்துச் சுருட்டிக் கிடாசி விட்டு அப்படியே கிணற்றில், நிற்கிற திட்டிலிருந்தே ஒரு டைவ் அடிக்க வேண்டும்.

‘பொறு!’ அவன் உடம்பு அரிப்புக்குக் கட்டளையிட்டான். கட்டியிருந்த லுங்கி அவிழ்ந்தது. ஸ்பேனரை ஸக்ஷன் பம்ப் கட்டை மீது வைத்து லுங்கியை இறுகக் கட்டினான்.

இன்னும் இரண்டு சுற்று சுற்றினால் அந்த நட்டு இறுகிவிடும். ஸ்பானர்தான் வழுக்குகிறது. கொஞ்சம் வாய் விரிசல். இருந்தாலென்ன? கௌதமுக்குச் சவால்கள். இப்படிச் சின்னச்சின்ன இடைஞ்சல்கள் பிடிக்கும்.

கௌதம் இரண்டு சுற்று வழுக்கி வழுக்கி ‘டைட்’ வைத்தான். ஸக்ஷன் பம்பின் நட்டு, மாடு பிடித் திருவிழாவில் பிடித்து நிறுத்திய காளை மாதிரி ஸ்தம்பித்தது.

அவன் ஸ்பானரைக் கீழே வைத்தான். நெற்றி வியர்வையை விரல் வைத்து வழித்தெறிந்தான்.

ஏழு மணிக்குக் கிணற்றில் இறங்கியது. ஒரு மணி நேரம் ஆகியிருக்கலாம்.

போனது ஃபுட் வால்வ் லெதர் என்று தெரியாமல் ஆதிகேசவன் அலைமோதிவிட்டான். கார் நெல்லுக்கு அன்றாடம் நீர் பாய்ச்ச மோட்டார் பம்ப் கை விட்டு விட, பழைய பாணியில் கவலை மாடுகளை நம்பினான்.

ஏழு நாட்களாக மோட்டார் சப்தம் ஓய்ந்து போன கிணற்றில் இனி அது பலிக்கும்.

ஆதி கிணற்றுக்கு மேலே தான் நின்று கொண்டிருப்பான். கௌதம் உள்ளே இருந்து குரல் கொடுத்தான்.

“ஆதி… மோட்டாரைப் போடு.”

கிணற்றின் சுற்றுச் சுவரில் பட்டுப்பட்டு எதிரொலிகள். ஒன்று, இரண்டு, மூன்று முறை… பதில் வரவில்லை. எங்கே போய்விட்டான்?

தன் சிரமம் பலித்திருக்கிறதா என்று கௌதமுக்கு உடனே முடிவை எதிர்பார்க்கும் தவிப்பு. மேலே போகலாமா? ஸ்பானரை எடுக்கக் கௌதம் குனிந்தபோது அவன் முதுகில் லொட்டென்று குறி பார்த்து அடித்த மாதிரி எதுவோ தாக்கியது. முதுகைத் தாக்கிவிட்டு அந்த ஏதோ ஒன்று தாவி விழுந்து தண்ணீரில் மறைந்தது.

சிவுக்கென்று தலை நிமிர்த்தினான். கிணற்றுக்கு மேலே சாலும் வடக்கயிறும் தொங்கின. யாரும் தென்படவில்லை. ஆனாலும் யாரோ விளையாடுகிறார்கள். ஆதியா? இல்லை. அவனிடம் ஆதி விளையாடமாட்டான். ஸ்பானரை இன்னும் வைத்த இடத்திலிருந்து எடுக்கவில்லை. எனவே மீண்டும் குனிந்தான்.

லொட்டென்று மீண்டும் முதுகில் பனியனின் ஈர நைப்புக்கு உறைக்கிற மாதிரி ஒரு கொட்டையளவு ஏதோ விழுந்தது. அதிகம் வலிக்கவில்லை.

வெள்ளி மணலாக அடி தெரிந்த கிணற்று நீரின் இள நீலத்தில் ஒரு சிலும்பல். இப்போது விழுந்தது ஒரு சின்னஞ்சிறு மாம் பிஞ்சு.

கௌதம் மனசில் ஒரு முகம் தெரிந்தது. நித்யாவாகத் தான் இருக்கும்.

“மேலே ஏறி வந்தா என்ன நடக்கும் தெரியுமா நித்யா?” என்று தலை உயர்த்தாமல் கத்தினான்.

‘நித்யா’ என்று கிணற்றில் எதிரொலி வந்தது. மும்முறை. கிணற்று நீரின் ஒருபுறத்தில், கரை மீதிருந்த நித்யாவின் பிம்பம் சிலும்பலில் நெளிந்தது.

“என்ன பண்ணுவே?” மேலே நின்றபடி நித்யா கேட்டாள்.

அவன் பிம்பத்தைப் பார்த்தே பேசினான்.

“ஆத்து மணல்லே, அன்னக் கூடையை இடுப்பிலே தூக்க வச்சு ஓட ஓடத் துரத்துவேன்.”

“நீ?” என்றாள் நித்யா – எகத்தாளம். கொஞ்சம் சவால்.

கிணற்றின் அலைகள் தத்தித் தத்தி, கோடை வானத்தின் வெளிர் நீலப் பின்னணியில் நித்யாவின் முகபிம்பத்தை அலைக்கழித்தன. அவள் பற்கள் தெரியச் சிரித்தாள்.

“மேலே யாரும் இல்லியா?”

அவன் பிம்பத்தைப் பார்த்துப் பேசினான். அவளும் அவன் பிம்பத்தைப் பார்த்துப் பதில் சொன்னாள்.

“கேக்கறே பாரேன் கேள்வி!”

நாக்கைக் கடித்துக் கொண்டான்.

முட்டாள்! யாராவது இருந்தால் அவள் இப்படி விளையாடுவாளா?

“ஆதி இருப்பானே!” அவன் சமாளித்தான்.

“நுணா மரத்துப் பம்பு ஷெட்டாண்ட ஒரு கூட்டம் நிக்குது. அவரு அங்கே நிக்கறாரு.”

“கூட்டமா?”

“ஆமா…என்னமோ தகராறுன்னு நெனைக்கிறேன்.”

“சரிதான். இப்பத்திக்கி வர மாட்டான்! அப்ப ஒண்ணு செய்யி…”

“என்ன?”

“கெணத்திலே குதிச்சுடு!”

“ஐயா வந்து காப்பாத்திடுவீங்க…”

“நீ குதிச்சா உன்னைக் காப்பாத்தற சாக்கிலே சேர்ந்து குளிக்கலாம் பாரு.”

“இப்ப நெஜமாலும் ஒன் தலை மேல குதிச்சுடுவேன்.”

“இன்னும் சௌகரியம்.”

“வர வர உனக்கு வாய் கொழுத்துப் போச்சு. நான் போறேன்.”

அவள் முகம் விருட்டென்று மறைந்தது.

“நித்யா..நித்யா!”

என்ன?” மீண்டும் அவள் பிம்பம்.

“மோட்டார் ஸ்விட்சு தெரியுமில்லே ஒனக்கு?”

“சொல்லு…”

“அதைப் போடேன். ஃபுட் வால்வ் லெதர் மாத்தினேன். தண்ணி எடுக்குதான்னு பார்க்கணும்.”

“கரெண்ட போயி அரை மணி நேரம் ஆவுது.”

அவன் வெறுத்துப் போனான். பிறகு அவள் வாயைக் கிண்டினாள்.

“வழக்கமா ஒங்க அம்மாதானே துணி துவைக்க வருவாங்க?”

“ஆமா! அவங்க சொந்தக்காரங்க கருமாதிக்குப் போயிருக்காங்க.”

“அதான் நேரா இங்கே வந்துட்டே.”

“ஆமா. பம்ப் ஷெட் ரிப்பேருக்குக்காக கெணத்திலே எறங்கி இருப்பாருன்னு ஞான திருஷ்டியிலே தெரிஞ்சது.” மீண்டும் தலை மறைந்தாள்.

“துணி துவைக்கணுமா வேண்டாமா?”

“அதான் கரண்ட்டும் இல்லே… தண்ணியும் இறைக்கலியே!”

“மாடுங்க நுகத்தடி பூட்டி நிக்குதுங்க இல்லே?”

“நிக்குதுங்க.”

“இரு… தோ வர்றேன்.”

அவன் செருகு செருகாகப் படிக்குப் பதில் கிணற்றோடு பதித்திருந்த ஜல்லிக் கல்லில் ஒவ்வொரு கல்லாகத் தாவித்தாவி ஏறினான். என்ன வேகமாக ஏறுகிறான்! கால் வழுக்கி விடாது என்று நினைத்தாள் நித்யா.

அவளுக்கு அவன் வேகத்தின் மீது இலேசான பயம்.

அவன் கடைசி ஜல்லிக் கல்லில் நின்றபோது கண் பூத்து விடுகிற மாதிரி கிழக்கு மேற்காய் ஆற்று மணல் தெரிந்தது. விட்டலாபுரத்திற்கும் அன்னவாசலுக்கும் இடையில் பாலாற்றின் குறுக்கே போட்ட நீண்ட தாம்போகிப் பாதை தெரிந்தது.

கல் பரவிய அந்தப் பாதை மீது எட்டரை மணி ரயிலின் வரவுக்காகப் பூந்துறை ஸ்டேஷனுக்குச் செல்லும் டவுன் பஸ் போவது தெரிந்தது.

அந்த எட்டரை மணி பஸ்ஸைப் பார்க்கும் போதெல்லாம் ஒரு மீன்கொத்தி மாதிரி மனசு இறந்த காலத்திற்குப் பாய்கிறது.

ஒரு நொடி – இல்லை; ஒரு நொடியில் ஒரு சிறு கூறு…

அந்த பஸ்ஸில்தான் பூத்துறையில் அம்மா இறங்குவாள் என்ற ஆவலோடு பதினாலு வயது கௌதம் பூந்துறைக்குப் போவான்.

மனசு விசித்தரமானது. பழக்க வாசனையுள்ள புறா மாதிரி ஒரே கூட்டிற்குத் திரும்பித் திரும்பிப் போகிறது.

நினைவை உதறி விட்டு நித்யாவைப் பார்த்தான். பத்தொன்பது வயசில் எதற்குக் கோடாலி முடிச்சு? சாக்லேட் பாவாடை. பொன்னிழை ஓடிய கறுப்புத் தாவணி… அவன் அவன் நெற்றித் திலகத்தை, கண்மையை, முகத்தை ரசித்துக் கொண்டே நிற்பதை நித்யாவும் ரசித்தாள்.

“இவ்வளவு சிவப்பு ரொம்ப ஓவர்!”

அவன் தன் நிறத்தைச் சொல்கிறான் என்று அவளுக்கும் புரிந்தது.

“என்ன பண்ணச் சொல்றே? கறுப்பு பெயிண்ட் அடிச்சுக்கவா?”

“முயற்சி பண்ணு!”

“இதைச் சொல்றதுக்குத்தான் கெணத்தை விட்டு மேல வந்தியா?”

பூட்டிய நுகத்தடியோடு சிவனே என்று நிற்கும் கவலை மாடுகளை நோக்கி அவன் நடந்தான்.

“தா… ஹை!” என்று மாடுகளை அதட்டினான். ஒன்று திரும்பிப் பார்த்துக் கொம்புகளை ஆட்டிற்று. கலகலவென்று கழுத்துச் சலங்கை மணிகள் அதிர்ந்தன.

“அது முட்டற மாடு. ஒன்னைக் கெணத்துலே தள்ளப் போவுது” என்று நித்யா மிரட்டினாள்.

“இப்பப் பாரு…”

கௌதம் அவற்றின் அருகே சென்று கழுத்தை நீவி, முதுகை இதமாகத் தட்டிக் கொடுத்தான். கொம்பை ஆட்டிய மாட்டின் முதுகுத் தோல் சிலிர்த்துத் துடித்தது.

வடக்கயிற்றைப் பிடித்துக் கொண்டு பின்னோக்கி இழுத்தான். மாடுகள் இரண்டும் பின்வாங்கி நடந்தன. கிணற்றை எட்டிப் பார்த்தான். சால் கிணற்று நீரை முத்தமிட்டது. அமிழ்ந்தது. நிறைந்தது.

‘தா…ஹை’ என்று மாடுகளைத் தட்டி விட்டதும் தாழ்வாகக் குழி போல் இறங்கிய நடைபாதையில் அவை நகர்ந்தன. கூடவே போய் ஒருவாகாக சிவுக்கென்று வடக்கயிற்றின் மீது உட்கார்ந்தான். அவற்றின் இழுவைப் பளு சற்றே குறைந்தது.

கிரிகிரிகிரியென்று ராட்டின சங்கீதம். இன்னும் கொஞ்சம்… இன்னும் கொஞ்சம் என்று கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல.

தொட்டியில் கொக்கரித்துக் கொண்டு தண்ணீர் பாய்ந்தது.

“பரவால்லே. எண்பது மார்க்!” என்றாள் நித்யா.

திரும்பி அவளைப் பார்த்தான். அவள் கண்களில் வேறு பார்வை. பொய்க் கூச்சமின்றி, மாசுபடாத சௌஜன்யத்தோடு, தன்னை வெளியிடும் அந்த வெளியீட்டிலேயே கிட்டும் பரவசத்தோடு…

…தொட்டி நீர் மாதிரி மனசு உள்ளே நிறைந்தது. மாடுகளை விட்டு விட்டு… அவன் மனசில் இச்சை ஓடிய ஓட்டத்தை இழுத்துப் பிடித்தான் – மூக்கணாங்கயிறு போட்டான். வேலை முக்கியமானது. உரம் ஊட்டுவது!

“ரெண்டு சாலோட நிறுத்திக்கோ. நான் மொதல்லே துணியை நனைச்சுக்கணும்!”

இரண்டாவது சாலுக்கு மாடுகளைக் கிணற்று மேட்டுக்க ஏற்றும் போது தான் கௌதம் திரும்பிப் பார்த்தான். நுணா மரத்துப் பம்பு ஷெட் தெரிந்தது. சிறு கூட்டம். ஆதி கையை ஆட்டி ஆட்டிப் பேசும் அங்க அசைவு. தகராறு யாருடன்?

சால் கிணற்றில் அமிழ்ந்து சாலுடன் இணைந்த தொண்டலக் கயிறு எவ்வி இழுத்தது. ஆதி கையை நீட்டி நீட்டிப் பேசக் கண்ட அதிர்ச்சியில் கௌதம் சால் நிரம்பியதைப் பொருட்படுத்தவில்லை. ஆதி அப்படிப் பேசுகிறவன் அல்ல! கன்னத்தில் அறைந்தால் கூட மென்று விழுங்கி வாங்கிக் கொள்பவன்.

கூட்டத்தைப் பிளந்து, இழுத்துப் பிடித்த இரண்டு புஜங்களை உதறிக் கொண்டு, நுணா மரத்துப் பம்பு ஷெட்டில் குடியிருக்கும் மாசிலா, ஓங்கி ஆதி மார்பில் ஒரு குத்து விட்டது இங்கிருந்து தெரிந்தது. கௌதம் கூர்ந்து கவனித்தான்.

ஆதி பதிலுக்கு மாசிலா மீது தாவி விட்டான். அதற்குள் நாலைந்து பேர் இழுத்து, அவனைத் தடுத்துக் கொண்டு நின்றனர்.

“மாட்டுக்காரே! நீ இப்படி ஒட்டினா நான் துணியை நனைச்ச மாதிரிதான்!” நித்யா அதட்டினாள். கவனம் திருப்பி, நிற்கும் மாடுகளை தட்டிக் கொடுத்தான். இரண்டாவது சால் நீர் தொட்டிக்குள் கொப்புளித்தது.

“நுணா மரத்துப் பம்பு ஷெட்டிலே அடிதடிபோல இருக்கு நித்யா!”

அவளும் திரும்பினாள். தூரத்தில் நுணா மரத்தடியில் கூட்டம் இரு பிளவாக ஆதியையும் மாசிலாவையும் பிரித்து நிறுத்திக் கொண்டிருந்தது.

“யாரு யாரை அடிச்சது?”

“மாசிலா ஆதியை அடிச்சுட்டான்.”

நித்யா பார்த்துக் கொண்டே நின்றாள். முகம் திரும்பாமல் சொன்னாள்.

“இது இத்தோட நிக்கப் போறதில்லே…”

அவள் குரலில் அருள் வாக்கு சொல்கிற மாதிரி ஒரு தூர திருஷ்டி ஒலி.

“என்ன சொல்றே?”

“ஆமா! நாலஞ்சு நாளுக்கு முன்னாடி கூட ஊர்ல ஆதியண்ணனுக்கும் மாசிலாவுக்கும் தகராறுன்னு பேச்சு அடிபட்டது.”

“தகராறா?”

“ஒனக்குத் தெரியாது! நீ எங்கே இருக்கே? ஊர் ஊரா பம்பு ஷெட் ரிப்பேருக்குப் போயிடறே…”

“என்ன விஷயம்?”

“ஆதியண்ணன் மாசிலாவுக்குத் தெரிஞ்சவன் யார்கிட்டேயோ துபாய்க்குப் போறதுக்காக ஆயிரம் ரூபாய் பணம் குடுத்திருக்காம். ஆறு மாசமாகப் போவுது. இதோ அதோன்னு இழுக்கிறானாம் அந்த ஆளு….”

ஆதிக்கு அப்படி ஓர் ஆசை உண்டு என்று கௌதம் அறிவான். இருபத்தெட்டு வயசாகியும் எதிலும் நிலை கொள்ள முடியவில்லை அவனால். மேஸ்திரி வேலை செய்தான். டீக்கடை வைத்தான். டைலராயிருந்தான். ஜவ்வாது மலையில் மூங்கில் கூப்பு காண்ட்ராக்டராக இருந்த முனீம்சாயபுக்கு உதவியாளாய்ப் போனான்.

இந்த நிலம் கூட குத்தகைப் பயிர்தான். நிலை கொள்வதற்கு, தன்னைக் கண்டுபிடிப்பதற்கு, அவன் செய்து வரும் இடைவிடாத பரிசோதனைகளில் இதுதான் சமீபமானது.

துபாய்! எத்தனை மனக்கோட்டைகளுக்கு அங்கே கதவு திறந்திருக்கிறது? தங்கம் தெருவிலே கொட்டிக் கிடக்கிறதென்று போகிறார்களோ!

“பா… பா… பா” என்று குரல் கேட்டுத் திரும்பினான்.

தலையில் கஞ்சிக் கலயத்தோடு ஆதியின் அம்மா மங்கலட்சுமி நின்றாள்.

அவன் பிறவி ஊமை.

மகன் எங்கே என்று கேட்கிறாள்.

என்ன சொல்வது?

“கஞ்சிக் கலயத்தை வச்சுட்டுப் போகச் சொல்லு. வேற விவரம் சொல்லாதே. அதுக்கு மனசு துடிச்சிடும். வாயும் பேச முடியாம பேபேன்னு கத்திக்கிட்டு கண்ணிலே மாலை மாலையாகத் தண்ணி விடும்” என்றாள் நித்யா.

Series Navigationகிரீன்லாந்தின் பனித்தளம் விரைவில் ஆறுகளாய் உருகி ஓடிக் கடல் நீர் மட்டம் உயர்கிறதுமலேசியா தமிழ் எழுத்தாளர் திரு.பாலகோபால நம்பியார்
author

வையவன்

Similar Posts

2 Comments

  1. Avatar
    பொன்.முத்துக்குமார் says:

    கல்கியில் தொடராக வந்தபோது படித்தது. நல்லதொரு தொடர். மறுபடியும் இணையத்தில் படிக்க மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது.

  2. Avatar
    பொன்.முத்துக்குமார் says:

    எங்கே தொடரின் இவ்வாரப்பகுதி ?

Leave a Reply to பொன்.முத்துக்குமார் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *