மதிலுகள் ஒரு பார்வை

This entry is part 7 of 23 in the series 7 அக்டோபர் 2012

மீளமுடியாத ஒரு சிறைக்குள் நாமெல்லாம் மாட்டிக் கொண்டிருப்பது போல ஒரு கனவுச் சித்திரத்தை அங்கங்கே உண்டுபண்ணுகிறது மதிலுகள். பெண்ணின் வாசனை கூட ஒரு மதில்தான். மீளமுடியாத மதில். அது காதலியின் வாசனையாய் இருக்கலாம். அல்லது மனைவியின் ஏன் அம்மாவினதும் கூட. இந்த வாசனைகள் எழுப்பும் சிறைகளைத் தாண்டி ஒரு ஆணால் எப்போதுமே பயணிக்க முடிந்ததில்லை. விடுதலை பெற முடிந்ததில்லை.

உலகம் என்னும் பிரபஞ்சம் என்னும் இன்னொரு சிறைக்குள் அடைபட்டே அலைகிறான் வாழ்நாளெல்லாம். ஒரு சிறை கூட பெண் வாசத்தாலும் பாசத்தாலும் இன்பமயமான சிறையாய் இருக்கக்கூடும் என உணர முடிகிறது . வயதும் பக்குவமும் இந்த அனுபவங்களை எந்தச் சங்கடமும் இல்லாமல் சரளமாகப் பகிரச் செய்கிறது.பெருஞ்சிறைக்குள் அடைபட்ட ஒவ்வொருவனும் கண்ணுக்குத் தெரியாத சிறுஞ்சிறைக்குள் அடைபட்டே வாழ்கிறான். மதம், சாதி, இனம், இன்னும் நாடு, மொழி என..கர்ப்பச் சிறையில் இருந்து வெளியேறும் ஒவ்வொருவனும் சமுதாயச் சிறையில் சங்கிலிகளோடு, தனக்கான தண்டனைகளோடு அலைகிறான் அஸ்வத்தாமன் போல.

எந்தச் சிறையையும் உடைக்கும் கைதிகளால் கூட அன்பெனும் சிறையை உடைத்துச் செல்ல முடிவதில்லை. விட்டு விடுதலையாகும் பேரின்பம் கூட தண்டனையாகிறது ஒரு பெண்ணை விட்டு அவளின் அன்பை, அண்மையை அருகாமையை விட்டுப் போகும்போது.

ஒரு பெண்ணின் வாசனை, நறுமணம், சிரிப்புச் சத்தம், தூக்குமரத்தின் பக்கமாய் நடக்கும்போதும் ஒரு ஆணின் மனதில் ஏற்படுத்தும் கிளர்ச்சி,கர்ப்பத்தின் இருட்டைப்போலிருக்கும் சிறையின் இருட்டிலிருந்து கோடி சூர்யப் பிரகாசமுள்ள ஒரு காதல் உலகத்துள் அடி எடுத்து வைக்கும் ஒருவனின் அந்தராத்மாவின் ஏக்கம்.

ஒரு ரோஜாவைப் பதியனிட்டு ஒரு ரோஜாக்கூட்டத்தை உருவாக்கும்  ஒரு இலக்கிய சிறைக் கைதி காதல் வயப்படாமல் என்ன செய்வான். ரோஜாவின் வாசமும் காதலின் வாசமும் வேறு வேறா என்ன..

எத்தனை பூக்களிருந்தும் அதைச்சூடும் பெண் பூவைத் தேடும் மனம். பூ,பூவை,பூங்கா என்று தடுமாறும் ஒரு சிறைக்கைதியும் இருக்கலாம் என்பதை  நாம் அறியாமலே போயிருக்கக்கூடும். மரணத்தையோ, விடுதலையையோ சிரித்துக்கொண்டே சந்தியுங்கள் என்று தைரியம் சொல்லும் ஒருவன் ஒரு பெண்ணை அறிந்தும் சந்திக்கமுடியாமலே போகப் போகிறோம் என்றவுடன் யாருக்கு வேண்டும் சுதந்திரம் என்று கேட்பது வினோதம்தான்.

காதலியர் கடைக்கண் காட்டிவிட்டால் காதலர்க்கு மாமலையும் ஒரு கடுகாம். காதலி கேட்டதால் புவனத்தில் இருக்கும் எல்லா ரோஜாக்களையும் தர விரும்பும் ஒருவன் , அவளுக்குத் தரப்போகும் பூச்செடியின் முட்களைக் கூட முத்தமிடுன் ஒருவன், ஒரு சிகப்பு ரோஜாப்பூவுடன் தன் காதலிக்கான எந்தத் தாக்கலும் சொல்ல இயலாமல் வெளியேறுவது சோகம்.

நிறைவேறாத காதல்களே அமரத்துவம் பெறுகின்றன என்பதாய் இந்தக் காதலும் இதன் நிறைவேறாத சந்திப்பும் கிளர்த்தும் எண்ணங்கள் அநேகம்.  ஒரு பெண் என்பவள் ஒரு உணர்வாக ,வாசமாக, நூற்றாண்டுகள் தோறும் தொடரும் ஒரு சம்பவமாக ஒரு ஆணின் வாழ்வில் இருக்கிறாள்.ஆண் பெண் ஈர்ப்பு கடவுளின் வரம். காதலர்கள் குரல் கேட்டதும் குழையும் உடல் ஒரு அற்புதம்.ஒரு தடவை பார்க்கவேண்டும் என்ற ஆவலை எத்தகைய உறவும் ஏற்படுத்தும் என்கும்போது காதலிக்கும் இருவர் நிச்சயம் துடிப்போடுதான் இருப்பார்கள். அந்தத் துடிப்பே இதயத் துடிப்பாய் இருந்து கொண்டிருக்கும். அது மதிலைக் கூட ஆத்மா உள்ளதாய் உண்டாக்கி இருக்கும்.

இருவருக்கும் நடுவில் ஈர்ப்புக்குக் காரணம் அழகு என்பதல்ல.. ஒரு பெண் தன் அன்பான அணுகுமுறையால்  ஒரு ஆணிடம் உண்டாக்கும் உணர்வை அப்படியே போட்டுடைப்பது போல இருக்கும் இருவருக்குமான உரையாடல், அது உண்டாக்கும் நெகிழ்வுகள் மதில்களைப் பல வருடங்களாக நேசித்து வாசிக்க வைத்திருக்கிறது.

எல்லா நெகிழ்வின் போதும் பெண்களுக்கு அழுகை வரும். நாராயணிக்கு வருவதுபோல. காதலிக்க ஆரம்பித்ததில் இருந்து பிரிவு , சாவு வரை எதை நினைத்தாலும் கண்ணீர்தான். காதல் சிலசமயம் வலி கொண்டதாகத்தான் இருக்கிறது. காதலிப்பவர்களுக்கு அல்லது அவர்களைச் சார்ந்தவர்களுக்கு . பூந்தோட்டமே இருந்தாலும்  அதைச் சூடும் காதலியோ, கண்டு ரசிக்கும் காதலனோ இல்லாவிட்டால் எல்லாமே வீண் தானே.

ஒரு கட்டத்தில் காதலன் காதலி இருவருக்கும் எங்கு மதில்களைக்கண்டாலும் இருவரின் நினைப்பும் பரஸ்பரம் வரலாம். அந்த அளவு அவர்கள் காதலில் சாட்சியாக, உயிரோடு இருக்கிறது மதில்கள். ஒரு சிறையையே பூங்காவனமாக்கும் காதல். யாரும் வாசிக்காமலே போகும் ஒரு காதல் கடிதம் தன்னிடமே பத்திரமாய் பூதம் காத்த புதையலாய் பெண்ணின் மனதைச் சுமந்தபடி போகும் ஒருவனுடன் காதலின் வாசனைகளும் கரைந்தபடி பயணிக்கின்றன.

Series Navigationவாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் –31கதையே கவிதையாய் (8)
author

தேனம்மை லெக்ஷ்மணன்

Similar Posts

Comments

  1. Avatar
    கௌதமன் says:

    //மீளமுடியாத ஒரு சிறைக்குள் நாமெல்லாம் மாட்டிக் கொண்டிருப்பது போல ஒரு கனவுச் சித்திரத்தை அங்கங்கே உண்டுபண்ணுகிறது மதிலுகள். பெண்ணின் வாசனை கூட ஒரு மதில்தான். மீளமுடியாத மதில். அது காதலியின் வாசனையாய் இருக்கலாம். அல்லது மனைவியின் ஏன் அம்மாவினதும் கூட. இந்த வாசனைகள் எழுப்பும் சிறைகளைத் தாண்டி ஒரு ஆணால் எப்போதுமே பயணிக்க முடிந்ததில்லை. விடுதலை பெற முடிந்ததில்லை.//

    இது மறுக்க முடியாத பேருண்மை. அழகான வார்த்தைகள்.

Leave a Reply to கௌதமன் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *