மதுபானக்கடைகளைத் திறக்க இதுதானா நேரம்?

This entry is part 6 of 8 in the series 17 மே 2020

      கொரோனா கிருமியால் விளைந்துள்ள நோய்த்தொல்லையின் விளைவாய்க் கடந்த சில நாள்களாக மதுக்கடைகள் மூடப்பட்டுவந்துள்ளன. இதையே வாய்ப்பான ஒரு தருணமாய்ப் பயன்படுத்தி நாடு முழுவதிலும் மதுவிலக்கை அமலுக்கு எல்லா மாநில அரசுகளும் கொண்டுவரும் என்கிற நம்பிக்கையை வளர்த்துக்கொண்டிருந்த பெண்களின் தலைகளில் இப்போது இடிவிழுந்துள்ளது. இந்த அளவுக்கு நம்பிக்கை கொள்ள முடியாதுதானென்றாலும், அப்படிச் செய்தால் நன்றாக இருக்குமே என்கிற எண்ணம் பெண்களின் மனங்களில் ஓடிக்கொண்டிருந்த தென்னவோ உண்மை.

      கோரோனாவை எதிர்கொள்ள நேர்ந்த எதிர்பாராத நடவடிக்கைகளின் விளைவாக நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்துள்ளதால் அந்த இழப்பையும் சரிவையும் ஈடுகட்டும் பொருட்டே மதுபானக்கடைகளைத் திறந்தாக வேண்டிய கட்டாயம் நேர்ந்துள்ளதாய் எல்லா மாநில அரசுகளும் தங்கள் முடிவுக்குச் சப்பைக்கட்டுக் கட்டக்கூடும்தான்.

      தவறான பொருளாதாரக் கொள்கைகளாலும், அவை சார்ந்த நடவடிக்கைகளாலும், வாராக்கடன்களை வசூலிப்பதில் காட்டிவந்துள்ள மெத்தனத்தாலும் விளைந்துள்ள சிக்கல்களால்தான் இது போன்ற பேரிடர்த் தருணங்களின் போது – அவை இயற்கையானவையோ அல்லது மனிதர்களின் அக்கிரமங்களால் விளைந்தவையோ – அவற்றைச் சமாளிக்க முடியாமல் மைய அரசும் மாநில அரசுகளும் திணறுகின்றன என்பதில் சிறிதளவும் ஐயமே இல்லை.

      கொரோனாவின் ஆதிக்கத்தின் விளைவாய்த் தற்போது  “மனை முடங்குதலில்” பலரும் இருந்து வருகிற நிலையில் இப்படிக் கள்ளுக்கடைகளைத் திறந்தால் ஐந்து பேருக்கு மேல் கூடக்கூடாது என்பதாய் மைய அரசு இயற்றியுள்ள சட்டம் என்ன கதியாவது? இதை யாரும் எண்ணிப் பார்த்ததாகவே தெரியவில்லையே. மனைகளில் முடங்கியிருக்கச் சிலர் முன்வராத நிலையால் தான் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் மதுபானக் கடைகளைத் திறப்பது புத்திசாலித்தனமான செயல்தானா?

      கள் குடிப்பதைத் திடீரென்று நிறுத்தும்போது குடிகாரர்களுக்கு விளையும் நரம்புத்தளர்ச்சி, சிலர் சாக நேர்வது ஆகியவை பற்றிச் சிலர் பரிந்து பேசுவது வியப்பை அளிக்கிறது. இவர்கள் மீது இரக்கப்பட்டுக் குடியைக் கொண்டுவந்தால், கோரோனா நோய் மேன்மேலும் பரவி அதனால் சாவோரின் எண்ணிக்கை மேலும் மிகுமே? அது பரவாயில்லையாமா?

      மதுவிலக்கை அமல் படுத்தினால் கள்ளச் சாராயம் பெருகிவிடும் என்றும் அதைக் குடித்து விட்டுச் சிலர் சாவார்கள் என்றும் குடிகாரர்களின் சார்பில் பரிந்து பேசப்படுகிறது.

அமரர் ராஜாஜி குடிகாரர்களைப் பற்றிச் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது. “மது விலக்கால் கள்ளச் சாராயம் பெருகும் என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால், கள்ளச் சாராயத்தைக் குடித்துச் செத்தாலும் சாவேனே தவிர, குடிப்பதை நிறுத்த மாட்டேன் என்று சொல்லும் சிலருக்காக மது விலக்கை அமல் படுத்தாமலிருந்தால் அது முட்டாள்தனம்” என்று அவர் கூறியுள்ளார். 

கள்ளை ஒழிக்கவே முடியாது என்பது குடிகாரர்களுக்குப் பரிபவர்களின் வாதம். இதற்கு உதாரணமாய்ப் பெரும்பாலும் இவர்கள் அமெரிக்காவையே சுட்டிக் காட்டுகிறார்கள். அமெரிக்காவிலேயே முடியாமல் போனதை நம்மால் எப்படிச் செய்யமுடியும் என்பது இவர்களின் கேள்வி. எந்தக் குற்றத்தையும் அறவே ஒழிக்க முடியாதுதான். திருட்டு, கொள்ளை, கற்பழிப்பு, விபசாரம், கொலை ஆகியவற்றையெல்லாம் காவல்துறை ஒழித்துவிட்டதாமா? இதை மட்டும்தான் ஒழிக்க முடியவில்லையாமா? என்ன பிதற்றல் இது? குற்றங்களைக் கட்டுப்படுத்துவதுதான் சாத்தியமே ஒழிய, அவற்றை அறவே நிறுத்த முடியாது. அப்படிப் பார்த்தால். இப்போது பட்டியலிட்ட குற்றங்களையெல்லாம் ஒழிக்க முடியாது என்பதற்காகக் காவல்துறையே தேவையில்லை என்று அதை ஒழித்துக்கட்டிவிடலாகுமா? அவர்கள் அனைவருமே மோசமானவர்கள் அல்லரே? அதனால்தான் இந்த உலகம் இந்த மட்டுமாவது இருந்து வருகிறது என்பதுதானே கண்கூடான உண்மை?

மேலும் ஒரு கேள்வி எழுகிறது.  காவல்துறை நாணயமாகச் செயல்பட்டால், கள்ளச் சாராயம் எப்படிப் பெருகும்? கள்ளச் சாராயம் காய்ச்சப்படும் பகுதிக்குப் பொறுப்பாளராய் அந்த இடம் சார்ந்த காவல் துறை ஆய்வாளரையோ, அவருக்கும் மேற்பட்ட அதிகாரியையோ, பிற காவல்துறையினரையோ குற்றம் சாட்டி அவர்களைப் பணியிடை நீக்கம் செய்து தண்டிப்பது எனும் விதியை மேற்கொண்டால் கள்ளச் சாராயம் எப்படிப் பெருகுமாம்? குற்றவாளிகளிடமிருந்து கையூட்டுப் பெற்றுக் காவல்துறை கண்டும் காணாமல் இருப்பதுதான் இதற்குக் காரணம். சில குற்றங்களுக்காகப் பிடிபடும் காவல்துறையினருக்கு உரிய தண்டனை அளிக்கப்படுவதே இல்லை. பணியிட மாற்றம் ஒரும்தண்டனையாகுமா?

உயர் அரசு அதிகாரிகளிடையேயும், ஊழியர்களிடையேயும் – ஏன்? அமைச்சர்களிடையேயும் கூடத்தான் – கையூட்டுப் பெறும் வெட்கக்கேடு நிலவுகிறது. இதனால் மக்களின் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகளின் போதும் பெருந்தொகையை இவர்கள் ஒப்பந்தக்கார்களிடமிருந்து பெற்று வருகிறார்கள். இதன் விளைவாக இழப்பைச் சந்திக்க விரும்பாத ஒப்பந்தக்காரர்கள்  மட்டமான பொருள்களால் தங்கள் பணிகளை முடிக்கிறார்கள். பாலங்கள் கட்டப்படும் போதே சரிவதும் விரிசல்கள் காண்பதும், கட்டடங்கள் இடிவதும் இதனால்தான். (ஆங்காங்கு ஒட்டுவேலைகள் மூலம்) போட்ட தார்ப் பாதைகளையே திரும்பத் திரும்பப் போட்டுவிட்டு, முழுவதுமாய்ப் போட்டதாய்க் கணக்குக் காண்பிப்பதிலும். அதையெல்லாம் அமைச்சர்களும் அதிகாரிகாளும் கண்டும் காணாமல் இருப்பதிலும் மக்களின் வரிப்பணமெல்லாம் வீணாகிறது. அப்புறம், கொரோனா நோய் போன்ற பேரிடர்களால் வரும் நிதிப்பற்றாக்குறையை ஈடு செய்ய மதுபானக்கடைகளைத் திறக்காமல் இருப்பதைத் தவிர வேறு வழி இல்லை என்று இவர்கள் வாதிப்பதில் வியப்பதற்கு என்ன இருக்கிறது?

தவிர பல சாராயக் கடைகளுக்குச் சொந்தக்காரர்களாய்ச் சில உயர் அரசு அதிகாரிகளும் அரசியல்வாதிகளுமே இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

தமிழகத்தைப் பொறுத்த வரை, அனைத்துப் பணிப்பெண்களின் கணவர்களும் குடிகாரர்களாகவே இருக்கிறார்கள். ‘என் புருசன் எப்ப செத்து ஒழிவான்னு காத்துக்கிட்டிருக்கேன்’ என்று ஒருமையில் திட்டிப் பல பணிப்பெண்களும் அங்கலாய்க்கிற அளவுக்கு அந்தக் குடிகார ஆண்கள் தங்கள் மரியாதையை இழந்துள்ளார்கள். 

குடிப்பது தனி மனித உரிமை என்பது சில அறிவு ஜீவிகளின்  வாதம். இருக்கலாம்.  ஆனால், குடித்துவிட்டு ஒரு மூலையில் சுருண்டு படுத்தால் அதை ஓரளவுக்கு ஏற்கலாம். ஆனால், இவர்கள் குடிவெறியில் வன்னுகர்வு செய்வது, மனைவியை அடித்து நொறுக்குவது போன்ற செயல்களிலன்றோ ஈடுபடுகிறார்கள்? அது மட்டுமா? வீட்டுக்கு ஒரு காசு கூடச் செலவுக்குக் கொடுப்பதில்லை. மனைவி வேலை செய்து சம்பாதிப்பதையும் பிடுங்கிக்கொள்ளுகிறார்கள். இவர்களின் குழந்தைகள் அடையும் பாதிப்பைப்பற்றியோ சொல்லவே வேண்டியதில்லை. இதனாலேயே இந்தக் குழந்தைகள் கல்வியறிவு பெற முடிவதில்லை. சில குடும்பங்களில் பெண்களே சிரமப்பட்டுக் குழந்தைகளைப் படிக்க வைக்கிறார்கள்.

இவையெல்லாம் தெரிந்திருந்தும் இந்த வாய்ப்பான தருணத்தில் மதுவிலக்கைக் கொண்டுவருவதற்குப் பதில் மதுக்கடைகளைத் திறக்க முற்படுபவர்களை என்ன செய்தால் தகும்?

…….

Series Navigationஇன்னும் வெறுமையாகத்தான்…மாமனிதன்
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Comments

  1. Avatar
    BSV says:

    மது கடைகள் முதலில் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படாமல் திறக்கப்பட்டதால், கூட்டம் தாறுமாறாகப் போனது. அது ஒரு பீதியைக் கிளப்பி விட்டது. இப்போது மீண்டும் திறக்கப்பட கட்டுப்பாடுகள் கடுமையாக விதிக்கப்பட்டு பார்வையிடப்படுகின்றன. க்ரோனா பாதிப்பு தவிர்க்கப்படுகிறது. ஆனால், பிறகடை வியாபாரஙகள் (கோயம்பேடு) கூட்டங்களும், சமூக காலியிடத்தை பலவிடங்களில் பேணாமையாலும், இப்போது க்ரோனா தொற்று பெருகிறது. மது விற்பனை இனிமேலும் பூதாகாராமாகக் காட்ட முடியாது.

    மதுவிலக்கு என்பது இப்போது உடனே சாத்தியமன்று. ராஜாஜி காலத்தில் மக்கட்தொகை குறைவு. மக்கள் நலத்திட்டங்கள் குறைவு. அரசு மக்கள் வாழ்க்கையில் குறுக்கிடவில்லை. தற்போது மக்கள் அரசே எல்லாவற்றையும் செய்ய வேண்டுமென நினைக்கிறார்கள். இலவசங்களை வைத்து ஓர் அரசின் யோக்கியதையைத் தீர்மானிக்கிறார்கள்.

    நலத்திட்டங்களை ஓட்ட வருமானம் போதவில்லை என்பதால் மதுக்கடை திறப்பு. பெண்கள், குழந்தைகள், வயதானோர், ஏழைகள், உடற்குறையுள்ளோர் இவர்களுக்கான நலத்திட்டங்கள் எல்லாம் நடாத்த முடியா நிலை வரும்.

    பணிப்பெண்கள் வாழ்வில் கடைனிலை வர்க்கம். அங்கு ஆண்கள் குடும்பத்தைப் பற்றி கவலைப்படாமல் தாந்தோன்றித்தனத்தமான வாழ்க்கை விரும்புவர்கள். கணவன் திருத்த முடியா குடிகாரனாகிவிட்டால் அவனை விட்டு, குழந்தைகள் நலனுக்காக, தனிவாழ்க்கை வாழத்தான் வேண்டும். பணிப்பெண்கள் அதைத்தான் செய்ய வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *