மந்தைவெளி மரணக்கிணறுகள்

This entry is part 10 of 10 in the series 10 நவம்பர் 2019

கிணறு தரையில்தான் திறந்திருக்க

வேண்டுமென்பதில்லை.

இரு சக்கர முச்சக்கர நாற்சக்கரங்களில்

வெறிமீறிய வேகத்தில் வருமவற்றில்

விழுந்துவிடாது தப்பிக்கப் பிரயத்தனம்

செய்பவர்களில்

முதியவர்கள் மாற்றுத்திறனாளிகள்

மாணாக்கர்கள் பல பருவங்களில்

மழலையை ஏந்திச்செல்பவர்கள்

எனப் பலதிறத்தார்…

கரணம் தப்பினால் மரணம் சம்பவிக்கும்

அந்த உருண்டோடும் கிணறுகளில்.

ஒருமுறை அப்படித்தான் சம்பவித்தது

கோர விபத்து.

உயிர்பலி ஒன்றோ இரண்டோ –

நினைவில்லை.

(வரம்போலும் சாபம் போலும்

மறதி வாழ்வில்)

உறுத்தும் மனசாட்சியை அடக்க

மந்தைவெளி பஸ் டெர்மினஸைச்

சுற்றியுள்ள

நான்கு வீதிகளும் ‘ஒன் வே’ ஆக மாறின.

சிறிதுகாலம் சட்டப்படி நடந்து

கொண்டவர்கள்

மெல்லமெல்ல தம் இட்டப்படி

நடக்க ஆரம்பித்தார்கள்.

சரியாகச் சொல்வதென்றால்,

ஓட்ட ஆரம்பித்தார்கள்.

தொடக்கத்தில் அங்கங்கே காவல்துறை

யினர் சிலர் காட்சியளித்தார்கள்.

காலப்போக்கில் அவர்களும்

காணாமல் போனார்கள்.

காணக்கிடைக்காதவை

நடைபாதைகள்.

பெரியவர்கள் படித்தவர்கள்

அவரவர் வீடு கடைகளுக்கு

வாயிலாக நடைபாதைகளை

வெட்டிச்சாய்த்து, வேலியிட்டு

மாமாங்கமாகிவிட்டது.

இருக்கும் அற்பசொற்ப நடைபாதைகளை

பூக்கடை, காய்கறிக்கடை,

வத்தல் வடாம் கடை

வாகாய் அடைத்திருக்க _

வேகமாய்த் திரும்பும் பேருந்துகளையும்

பொருட்படுத்தாமல்

வீதியோரமாகவே நடக்கவேண்டும்

பாதசாரிகள்.

ஏழை வியாபாரிகளிடம் சட்டம் பேசினால்

ஏழை பாதசாரி ஏகாதிபத்தியவாதி

யாகிவிடுவார்.

அத்திபூத்தாற்போலிருக்குமொரு

பிளாட்பாரத்தின் பெருஞ்சதுரப்பகுதியில்

PRESS என்ற சொல்லைத் தாங்கிய

கார்வண்டியொன்று

காலங்காலமாக நின்றுகொண்

டிருக்கிறது.

பேருந்தை ஓவர்-டேக் செய்யும்

இருசக்கரவாகனம்

வீதியோரமாய்ப் போவோரை வெட்டிச்

சாய்க்காதிருந்தால்

அது அவர் அதிர்ஷ்டம்.

மந்தைவெளி பேருந்துநிலையத்தினுள்

புகுந்து வெளியேறும்

மோட்டோர்பைக்குகளும்

ஆட்டோரிக்‌ஷாக்களும்

முழுவேகத்தில்.

ஒன் -வே தானே என்று

வண்டிவரக்கூடாத பக்கம் ஒதுங்கி நடந்து

வந்தால்

கொன்றுவிடும் வேகத்தில்

ஒன் – வேயை டூ-வே ஆக்கி

எதிரே சட்டத்திற்குப் புறம்பாய்

சீறிக்கொண்டுவரும் வண்டியின் ஓட்டுநர்

முறைப்பார் நம்மை.

சமயத்தில் கெட்டவார்த்தையில்

திட்டவும் செய்வார்.

மதியழிந்தொரு கணம் தோன்றும்

நாம்தான் சரிவரவில்லையோவென்று.

இம்மை மறுமை யென்பதான

வார்த்தைகளெல்லாம்

நம்மையும் மீறி நினைக்கப்படும்.

ஒன் – வே என்று தெரிந்தும்

இந்த வீதிகளில்

வரக்கூடாத வழியில்

புகுந்து புறப்படுபவர்கள்

முன்பெல்லாம்

கள்ளனுக்கேயுரித்தான திருட்டுமுழியுடன்

செல்வார்கள் சற்று மெல்ல.

இன்றோ

இது சரியல்ல என்று நாம் சொல்வதைக்

கேட்டுப்

புத்தி பேதலித்துவிட்டதோ என்றொரு

பார்வை பார்த்து

பத்திரம் தொலைத்துச்

சீறிப் பாய்கிறார்கள்.

இன்றைய தலைமுறைக்குத் தெரியாத

அரசியல் ரகசியங்கள்போல் _

இன்னும் சரியாகச் சொல்வதென்றால்,

அரசியல்வாதிகள் சிலரின் அறியாத்

திரைமறைவுச் சரித்திரங்கள்போல் _

இந்த வீதிகள் ஒன் – வே என்றறியாத

ஒரு தலைமுறை உருவாகிவிட்டது

புரிகிறது.

கரணம் தப்பி யாரேனும்

நரபலியானால்

ஒருவேளை மீள்கவனம் பெறக்கூடும்

மந்தைவெளி ஒருவழிச்சாலைகள்.

Series Navigationமழைப்பருவத் தொடக்கம்
author

ரிஷி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *