மன்னா மனிசரைப் பாடாதீர்

This entry is part 3 of 16 in the series 9 ஆகஸ்ட் 2020

                                              

                              சங்ககாலப்புலவர்கள் மன்னனையும் புரவலர்களையும் புகழ்ந்து பாடுவது அக்காலத்தில் ஒரு மரபா கவே கருதப்பட்டு வந்தது. ஔவையார் கபிலர் பரணர் போன்ற பெரும் புலவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல.அதியமானை,

      ”நீலமணி மிடற்றொருவன் போல மன்னுக பெரும நீயே!

என்று ஔவை வாழ்த்த, கபிலரும் பாரியை,

      பாரி பாரி என்று பல ஏத்தி

      ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர்

      பாரி ஒருவனுமல்லன்

      மாரியும் உண்டு ஈண்டு உலகு புரப்பதுவே

என்று புகழ்வதையும் பார்க்கிறோம்.

புலவர்களும் புரவலர்களும்

                               இவர்களைப்போல் பல புலவர்களும் பல மன்னர்களைப்புகழ்ந்து பாடி வாழ்த்தியிருக்கிறார்கள். ஆற் றுப்படை பாடிய புலவர்கள் தம் எதிரே வரும் புலவர்களுக்குத் தாம் மன்னனிடம் பெற்ற பரிசில்களைக் காட்டி,அம் மன்னன் அல்லது வள்ளல் இருக்குமிடம் செல்ல ஆற்றுப் படுத்து வதையும் காண்கிறோம். கவிச்சகரவர்த்தி கம்பரும் தன்னை ஆதரித்த சடை

யப்ப வள்ளலைத்தன் காப்பியத்தில் (இராமகாதை) ஆயிரம் பாடல் களுக்கு ஒரு பாடல் என்ற விகிதத்தில் புகழ்ந்துரைக்கிறார். பெரிய புராணம் பாடிய சேக்கிழாரும் மன்னன் அநபாயனைப் புகழ்ந்து வாழ்த்துகிறார். அண்மைக்காலத்தில் பாரதியும் எட்டையபுர மன்னனைப் புகழ்ந்து பாடியிருப்பதையும் காணலாம்.

மானிடம் பாட வேண்டாம்

                                இந்நிலையில்

      ”வாய்கொண்டு மானிடன் பாட வந்த கவியேன் அல்லேன்”

                 [3ம்பத்து,9ம்திருவாய்மொழி9]  2993

என்று சொல்பவரைப்பற்றித் தெரிந்துகொள்ள ஆவல் ஏற்படுகிற தல்லவா? அவர் சொல்வதைக் கேட்போமே! தன்னையே பெரிதாக நினைக்கும் அற்ப மானிடனைக் கவிபாடுவதால் என்ன பயன்? இதைச் சொன்னால் விரோதம் என்றாலும் நான் சொல்வதைக் கொஞ்சம் கவனமாகக் கேளுங்கள். திருமலையில் வந்து நமக்கா

கவே எழுந்தருளியிருக்கும் என் அப்பனைப்பாடாமல் வீணாக ஏன் நரனைப்புகழ்ந்து பாடுகிறீர்கள் என்கிறார் நம்மாழ்வார்.

                                          தன் செல்வத்தை

         வளனா மதிக்கும் இம்மானிடத்தைக் கவிபாடி என்?

                   [3ம்பத்து,9ம்திருவாய்மொழி,2] 2986

         சொன்னால் விரோதம் இது, ஆகிலும் சொல்லுவன்

                                          கேண்மினோ!

         என்நாவில் இன்கவி யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன்

         தென்னா தெனா என்று வண்டு முரல் திருவேங்கடத்து

         என் ஆனை என் அப்பன் எம்பெருமான் உளனாகவே

                                    புலவர்களே! தேவாதிதேவனாகிய

நம் பெருமானைத் தவிர்த்துப் பிறர் மீது ஏன் கவி பாடுகிறீர்கள்?

தன்னை அடையும் வழியையும் அவன் காட்டித்தருவான். இப்படிப் பட்ட கருணா மூர்த்தியான அவனை விட்டு விட்டுத் தாழ்ந்த மனி தர்களைப் பாடுவதால் என்ன பயன்கிட்டும்? (ஒன்றுமில்லை)

                              ஊழிதோறு ஊழி நிலாவப்போம்

      வழியைத்தரும் நங்கள் வானவர் ஈசனை நிற்கப்போய்க்

      கழிய, மிக நல்ல வான்கவி கொண்டு புலவீர்காள்!

      இழியக் கருதி ஓர் மானிடம் பாடல் என்னாவதே?

                  [3ம்பத்து,9ம்திருவாய்மொழி,3] 2987

என்று வினா எழுப்புகிறார்.

எத்தனை நாளைக்குப் போதும்?

                                     புலவர்களே! அழிந்துபோகும் மனிதர்களைப்பாடி, அவர்கள் தரும் பொன்னும் பொருளும் எத் தனை நாட்களூக்குப் போதுமானதாக இருக்கும்? அவையெல் லாம் ஒரு காலத்தில் தீர்ந்து விடும் பின் அழிந்துவிடும். ஆனால்

அழியாத செல்வமாக இருக்கும் எம்மானைப்பாடினால் இப்

பிறவியே அழிந்து விடுமே!

      மன்னா மனிசரைப்பாடிப் படைக்கும் பொருள்

      என்னாவது, எத்தனை நாளைக்குப் போதும்? புலவீர்காள்!

      மின்னார் மணிமுடி விண்னவர் தாதையைப் பாடினால்

      தன்னாகவே கொண்டு சன்மம் செய்யாமையும் கொள்ளுமே

                  [3ம்பத்து,9ம்திருவாய்மொழி,4] 2988

என்று இடித்துரைக்கிறார்.ராம பக்தரான ஸ்ரீதியாகராஜ சுவாமிகள்

தஞ்சை அரசரைப்பாட விழையாமல் செல்வம் சுகம் தருமா? என்ற கருத்தமைந்த நிதிசாலசுகமா என்ற கீர்த்தனையைப் பாடிய

தாகச் சொல்கிறார்கள். குமரகுருபரரும் நிறை செல்வத்தை, நீரில் குமிழி என்று இழித்துரைக்கிறார்

வீணாகும் வாக்கு வன்மை

                                       மீண்டும் புலவர்களை நோக்கி, புலவர்களே! வெறும் குப்பைக்கு நிகரான பொருளுக்காக உங்க ளுடைய வாக்கு வன்மையை வீணாகச் செலவழிக்காதீர்கள். கவி

பாடுவதற்கேற்ற, குற்றமில்லாத கலியாணகுணங்களை நிரம்பப் பெற்ற நம்பெருமான், அள்ள  அள்ளக் குறையாத செல்வத்தை வேண்டியபடி தருவான். வள்லலான அவனைப் பாடுங்கள். கவி சொல்லுங்கள் செல்வம் நிலையானதன்று. அது சகடக்கால் போல் வரும் போகும் தன்மையுடையது. அற்பமான மனிதர் களைப் பாடுவதைவிட உங்கள் மெய் வருந்திப் பணி செய் யுங்கள் என்று அறிவுறுத்துகிறார்.

      கொள்ளும் பயன் இல்லை; குப்பை கிளர்ந்தன்ன

                                           செல்வத்தை

      வள்ளல் புகழ்ந்து, நும் வாய்மை இழக்கும் புலவீர்காள்!

      கொள்ளக் குறைவிலன், வேண்டிற்று எல்லாம் தரும் என்

                                                கோது இல் என்

      வள்ளல் மணிவண்ணன் தன்னைக் கவி சொல்ல

               வம்மினோ! [3ம்பத்து,0ம்திருவாய்மொழி,5] 2989

                            புலவர்களே! வாருங்கள். மேகம் போல் கைம்மாறு கருதாமல் வாரி வழங்கும் ஆயிரம் பெயரை உடைய

நம் பெருமான் இருக்க, கொஞ்சமும் தகுதியில்லாத மனிதர்களை உண்மைக்குப் புறம்பாக பச்சைப் பொய்களை ஏன் அடுக்க வேண்டும்?

          சேரும் கொடை புகழ் எல்லை இலானை ஓர் ஆயிரம்

          பேரும் உடைய பிரானை அல்லால், மற்று யான்

                                                   கில்லேன்

         மாரி அனைய கை, மால் வரை ஒக்கும் தோள் என்று

         பாரில் ஓர் பற்றையைப் பச்சைப் பசும் பொய்கள் பேசவே!

                        [3ம்பத்து,9ம்திருவாய்மொழி,7]  2991

      இதேபோல்,

                   மிடுக்கில்லாதனை வீமனே விறல் விசயனே

என்றும்         

                   கொடுக்கில்லாதனைப் பாரியே என்றும் ஏன்

புகழ வேண்டும் என்றும் வினாத் தொடுக்கிறார், சுந்தரர் தமது தேவாரப் பாடலில்

                         என் உடல் கீழே விழும் வரை அவனையே துதிப்பேன், அவனைபர்றிப் பாடிக்கொண்டே யிருப்பேன். முடிவில் அவன் திருவடிகளில் புகுவதையே விரும்பிகிறேன். நிலையில் லாத, அழியக்கூடிய மனிதர்களை என் வாயால் பாடமாட்டேன்.

         காயம் கழிந்து அவன் தாளிணைக் கீழ்ப்புகும் காதலன்

         மாய மனிதரை என்சொல் வல்லேன் என் வாய்க்

            கொண்டே! [3ம்பத்து,9ம்திருவாய்மொழி,8] 2992

என்று வினவுகிறார்.

                         நான் மானிடரைப் பாட வந்தவன் இல்லை.

பெருமான் எனக்கே உரியவனாக இருக்கிறான். அப்பெருமான் எனக்கு வேண்டிய இவ்வுலக இன்பங்களையும் கொடுப்பதோடு, பரம பதத்தைக் கண்டு அங்கே சென்று கைங்கரியம் செய்வாய் என்ற பேற்றையும் தருவான். மேலும்

            நின்று நின்று பலநாள் உய்க்கும் இவ்வுடல் நீங்கப்

                                                      போய்ச்

            சென்று சென்றாகிலும் கண்டு, சன்மம் கழிப்பான்

                                                       எண்ணி

            ஒன்றி ஒன்றி உலகம் படைத்தான் கவி ஆயினேற்கு

            என்றும் என்றும் இனி மற்றொருவர் கவி ஏற்குமே

                        [3ம்பத்து,9ம்திருவாய்மொழி,10] 2994

                              உலகைப்படைத்த இறைவனைத்தவிர

வேறு எவரையும் கவிபாட மாட்டேன். என்னால் அது இயலாது. அவனைப்பாடிய வாயால் வேறு ஒருவரையும் பாட மாட்டேன் என்று சூளுரைக்கிறார்.

            சொன்னாவில் வாழி புலவீர்! சோறு கூறைக்காக

            மன்னாத மானிடரை வாழ்த்துதலால் என்னாகும்?

            என்னுடனே மாதவனை ஏத்தும்

            மன் அருளால் மாறும் சன்மம்.

என்று அறைகூவல் விடுக்கிறார். நம்மாழ்வார். அவரோடு சேர்ந்து

நாமும் மாதவனை ஏத்துவோம்                  04/05/2020

========================================================================

Series Navigationஅணுயுகப் பிரளய அரங்கேற்றம் !புத்தகச் சலுகையும். இலவசமும்
author

எஸ். ஜயலக்ஷ்மி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *