மரணம் பற்றிய தேடல் குறிப்புகள் – வெ. இறையன்புவின் இரு நாவல்களை முன் வைத்து..

This entry is part 5 of 19 in the series 6 ஜூலை 2014

 

* “ தூங்குவது போலும் சாக்காடு
தூங்கி விழிப்பதும் போலும் பிறப்பு “
– – சித்தர் பாடலொன்று.

* “ காலா என்னருகில் வாடா
உனை காலால் மிதிக்கிறேன் “ –பாரதி

* சாவே உனக்கொரு சாவு வராதா” – கண்ணதாசன்

* “ சாவு சாவல்ல
சாவுக்கு முன் நிகழும்
போராட்டமே சாவு “ – புகாரி

* “இறந்து போகிறவனின் சரீரம், இந்திரியம், மனம், புத்தி இவைகளிலிருந்து வேறாக ஆத்மா என்று ஒன்று இருக்கிறதா. அது ஒருவனுடைய மரணத்திற்குப் பிறகு வேறு தேகத்தை அடைகிறது என்றும் அப்படி வேறான ஆத்மா எதுவும் இல்லை என்றும் இரு கருத்துக்கள் உள்ளன. இதன் தத்துவத்தை எனக்குத் தாங்கள் விளக்கவேண்டும். யமதர்மரே, இதுதான் நான் கேட்கும் மூன்றாவது வரமாகும் “ வாமனனின் மூன்றாவது அடியையும் நசிகேதன் கேட்ட வரம் மிஞ்சிவிட்டது போலிருந்தது. யமதர்மனின் அருகிலிருந்த சிரவணர்களுக்கும் யமதர்மனுக்கும் கேட்கக் கூடாததைக் கேட்டு விட்டானே என்ற மலைப்பு. ஒரு மானுடப்பிறவிக்கு ஆத்மஞான உபதேசம் பெற பூரணமான யோக்கியதை இருக்கிறதா என்று முதலில் பரிசீலிக்க வேண்டும். சுகபோகங்களுக்கு மயங்காதவனா என்று கண்டு கொள்ள வேண்டும் என்றிருந்தது. “ என்ன அசட்டுத்தனமான கேள்வி. இது சாதாரண ஜன்ங்களால் அறிய முடியாதது. இந்த ஆத்ம தத்துவ விசயமாக தேவர்களுக்கே இன்னும் சந்தேகம் இருக்கிறது. எளிதில் அறிய முடியாத விசயம். இதை விட்டு வேறு வரத்தைக் கேள். என்னை இம்சிக்காதே.மரணத்திற்குப் பின் உலகம் இருக்கிறதா இல்லையா என்பதை மட்டும் கேட்காதே ”
( – சுப்ரபாரதிமணியனின் “ மூன்றாவது வரம்” சிறுகதையிலிருந்து-சுப்ரபாரதிமணியன் சிறுகதைகள் தொகுப்பு 333ம் பக்கம்-காவ்யா வெளியீடு )

* அவ்வுலகம் நினைவின் நீட்சியாகவும் அமைவதுண்டு. கனவின் காட்சியாகவும் அமைவதுண்டு. நம்மைச் சுற்றி உள்ள உலகங்களை நாமே சிருஷ்டித்துக் கொள்கிறோம் “- வெ.இறையன்பு

* * *

இறையன்புவின் “ அவ்வுலகம் “ நாவலில் இதுவரைக் கடலைப் பார்த்திராத மனைவி கடலைப் பார்த்து வியந்து போவது பற்றி கணவனுடன் டைரிக்குறிப்பொன்றில் பகிர்ந்து கொள்வவதாய் ஒரு பத்தி உள்ளது. கடல் பற்றிய வியப்பு அதில் உள்ளது. அம்மனைவியின் பெருமிதம் போல் இறையன்புவின் படைப்புகள் தமிழ்ச்சூழலில் வாசகர்களை வெகுவாக வியப்பு ஏற்படுத்துபவை. சந்தோசப்படுத்துபவை. சுயமுன்னேற்ற நூல்கள், உரைகள், படைப்பிலக்கிய அம்சங்கள் என்று எல்லா தளங்களிலும் வியாபித்து பல லட்சம் தமிழ் வாசகர்களை தன்னுள் கொண்டு மகிழ்வித்துக் கொண்டிருப்பவர். நாவலிலும் அவரின் பங்களிப்பு தொடர்கிறது.மரணம் பற்றிய அவரின் “ சாகாவரம் “, “ அவ்வுலகம் “ நாவல்களில் மரணம் பற்றிய தத்துவ விசாரங்களைக் காண்கிறோம்.சிந்தனையும் புனைவும் கூடின கருத்துலக நாவல்களாக இவை பரிமளித்துள்ளன.

அவரின் ” சாகாவரம் “ நாவல் நசிகேதன் எதிர்கொள்ளும் மரணம் பற்றிய போசிப்புகளூம், தேடலும் சில அனுபவங்களில் விரிந்துள்ளது.நசிகேதன் தொடர்ந்து சிலரின் மரணங்களைப் பார்க்கிறான். கபீர் அலி செத்து விடுகிறான். உணர்வில் ஒன்றி விட்ட மனிதனை பூமிக்குத் தின்னக் கொடுப்பது பெரிய அதிர்ச்சியாய் அவனுக்கு அமைந்து விடுகிறது. விவரம் தெரியாத வயதில் இறந்து போகிற தாத்தா பாட்டியின் மரணத்தின் போது “ கலயாண சாவாய் ” அனுபவங்கள் உற்சாகமாய் அமைந்து விடுகின்றன, உறவுகளும், சடங்குகளும், கொண்டாட்டமுமாக இருந்தது சின்னவயதிற்கு மகிழ்ச்சி தந்திருகிறது. முன்பு முப்பது வருடங்களாக செய்தித்தாள்களில் வருகிற மரண செய்திகளால் அவை அமைகிற போது மூன்று மாதங்களில் நிகழும் சிலரின் மரணங்கள் அவனை நிலை குலைய வைக்கின்றன.தனிமையும் வெறுமையும் அலைக்கழிக்கின்றன. எல்லோரூக்கும் வேலை, எல்லோருக்கும் சாப்பாடு, எந்த உயிருக்கும் கெடுதல் பண்ணக் கூடாதென்ற திடமான எண்ணம். திருமணமும் கை கூடி வரவில்லை. முதல் மரணத்தில் ஒரு தற்கொலையை தரிசிக்க நேர்கிறது அவனுக்கு.அது பார்த்திபனுடையது. திருமணம் செய்து கொண்டவன். கல் குவாரியில் நஷ்டம் அனுபவித்தவன்.கடன் அவனைத் துன்புறுத்துகிறது. தற்கொலை செய்து கொள்கிறான்.கோபி ஏழ்மையில் உழன்றவன்.படித்து குடும்பத்திற்கு உதவுபவன். மார்அடைப்பால் இறந்து போகிறான்.
நசிகேதனுக்கு தொடர்ச்சியான மரணச் செய்திகள் நிலைகுலைய வைக்கின்றன. தாவரவியல் ஆசிரியரான அவன் வேலையை சரிவர கவனிக்க முடியாமல் அலைக்கழிகிறான்.அவனை ஒரு நிலைப்படுத்த ரூப் என்ற நண்பன் பேரிஜம் என்ற காட்டுப்பகுதிக்கு அனுப்புகிறான். ரூப்பிற்கு நன்றி சொல்ல வேண்டும் என்று நினைக்கையில் அவன் மரணம் பற்றிய செய்தி கிடைக்கிறது.மன அமைதிக்காக பூர்ணானந்தா என்ற சாமியாரைப்பார்க்கிறான். அது பழைய கல்லூரி சேர்மனின் வேறு ரூபம் என்பது தெரிகிறது. சாமியாரின் நிஜம் தெரிகிறபோது வெறுக்கிறான்.மரணத்தைப் பற்றிக் “ கடோ உபநிடதம் “ படிக்கிறான். அதில் வரும் நசிகேதாவைப் போல் அவனும் மாற ஆசைப்படுகிறான். தம்பியின் மரணத்தை, உயிர் பிரிவதை விபத்து மூலம் காண்கிறான்.நாவலின் அடுத்த பகுதி ” பயணமா“க அமைகிறது. சிந்தனையாளர் சபையின் உபந்யாசங்களுக்கு செல்கிறான். பல பயிற்சிகளைச் செய்கிறான்.கொல்லிமலைக்குப் போகிறான். மலைப்பகுதியில் ஏழு நாட்கள் நடக்கிறான். ஞானி ஒருவரைச் சந்திக்கிறான். கடிகாரமும், நாள்காட்டியும் இல்லாத இடத்தில் புது அனுபவம், வாழ்க்கை என்பது நினைவுகளின் தொகுப்பாக அமைகிறது.ஏழு சக்கரங்கள், கிடைக்கும் ஓலைச்சுவடிகளில் உணவு முறை பற்றித் தெரிந்து கொள்கிறான்.சாட்சிகளாக நின்று பார்க்கும் பக்குவம் பற்றியும் தெரிந்து கொள்கிறான். மனிதர்களை அலைக்கழிக்கிற பாலுணர்வு பற்றி அறிந்து கொள்கிறான்.ஞானியின் மரணத்தை முக்தியாக எடுத்துக் கொள்கிறான். மலையிலிருந்து திரும்புகையில் ஆதிவாசிகளுடன் பழகுகிறான்மீண்டும் நாமக்கல் வந்து ஒரு பரதேசியுடன் சில நாட்களைக் கழிக்கிறான்.தமிழ் வளர்ந்த பொதிகை மலைக்குச் செல்கிறான்.சிரஞ்சிவி வெளியை அடைகிறான்.அடுத்து ” சலனம் ‘ என்ற தலைப்பில் நாவல் அமைந்திருக்கிறது. அங்கே சாவு கிடையாது. சாவு பற்றிய சிந்தனை உள்ள மனிதர்களைப்பார்க்கிறான். இலைகள் பழுக்கவோ, தளிர்கள் துளிர்க்கவோ செய்யாத மரங்களைக் காண்கிறான். நிர்வாணம் என்றாலும் ஆண், பெண் என்கிற படைப்பின் அடிப்படை நோக்கமே தேவையில்லாத இடத்தில் வெட்கமும் காமமும் இல்லாதிருப்பதைக் காண்கிறான். பழங்களின் சுவை என்பது கூட இல்லை. பசி எடுக்காத நிலை எதையும் சாப்பிட முடியாத உடல் ஸ்திதி.அங்கு வாழ்வது சாவின் நீட்சி. இயங்குவது வாழ்வு. தேங்குவது சாவு என்பதும் தெரிகிறது. அவனுடைய நெடிய தேடல் சூன்யத்தில் முடிந்து விட்டது எல்லோருடைய மரணத்திலும் அவன் மரணமும் சின்னதாக ஒட்டிக் கொண்டிருக்கப் போகிறது. மரணமற்ற மரணத்தின் சாயலையும், பார்வையற்ற வாழ்வின் ஆரம்பத்தையும் உணர்கிறான். சாவு பற்றிய யோசிப்பும் விசாரணையுமாக நாவல் நிரப்பப்பட்டிருக்கிரது.
மரணத்தைப் பற்றி யோசிக்கிற போதே அதற்குப் பின் என்ன என்பதும் யோசிப்பும் வந்து விடுகிறது. அந்த யோசிப்பில் நீள்கிறது “ அவ்வுலகம் ” நாவல். த்ரிவிக்ரமனுக்கு தாத்தாவின் சாவு பற்றிய செய்தி கிடைக்கிறபோது துர்நாற்றத்துடன் ஈக்கள் மொய்த்த பிணமும் அதன் நெற்றியில் இருக்கும் அய்ந்து ரூபாய் நாணயமும் ஞாபகம் வருகிறது. “ ஹை அய்ந்து ரூபாய்க்கு எவ்ளோ தேன் மிட்டாய் வாங்கிச் சாப்டலம். இப்படி வீண் பண்றாங்களே “ என்று வெகுளித்தனமாக நினைக்கிறான். இப்படியும்: “ சாமியைத் தொட்டுப் பாக்கணும். நிறைய பேசணும். எப்பப்பாத்தாலும் கடிக்கிற மாதிரி கொலைக்கற கோடி வீட்டு நாயோட வாயை அடைக்கச் சொல்லிக் கேக்கணும் “ சாமி வெறும் சிலைதான் என்பது தெரிகிறது. புத்தக வாசிப்பாய் உயிர் வாழ்ந்த காளிதாசை அவ்வப்போது பார்க்கிறான்.த்ரிவிக்ரமனுக்கு வயதாகி உடம்பு சுகமில்லாமல் போகிறது.காளிதாசின் புத்தகங்கள் அவனுக்குத் துணையாகிறது.
திடிரென வேறு அனுபவம் கிட்டுகிறது. வேறு உலகம். எங்கு வேண்டுமானாலும் சென்று வரும் சுதந்திரம் கிடைக்கிறது. கண்ணிற்கு ஏற்கனவே பரிச்சயமானவர்கள் மட்டுமே தெரிய ஆரம்பிப்பார்கள் என்பது நிபந்தனையாகிறது.மரணத்தைக் கொண்டாடும் மனநிலையோடு அங்கு வருபவர்கள் வரவேற்கப்படுகிறார்கள். அவன் பலரைச் சந்திக்கிறான். வியாபார தந்திரம் கொண்ட உபதேசி தென்படுகிறார்.பழைய காதலி சாயாவைச் சந்திக்கிறான். குழந்தைகளின் சாகச விளையாட்டில் செத்துப்போன மகன் சத்யகாம் தென்படுகிறான். விதவிதமான சாவுகள். மனைவி கங்காவைச் சந்திக்கிற போது அவளின் உயில் போன்ற நோட்டுப்புத்தகம் அவளின் வாழ்க்கைச் சித்திரத்தை விவரிக்கிறது. வாழாமப் போனதைப் பத்தி யோசிக்கறதும் வாழ்ந்ததைப் பற்றி கவலைப்படறதும் பிரயோசமில்லாதது என்பது தெரிகிறது.
மறு உலக அனுபவம் முடிந்து விடுகிறது. வாழ்க்கையின் போது சிந்திக்காதவற்றை செத்தபின் சிந்திக்கிற அவகாசம் ஏற்படுகிறது. மனதில் ஒட்டிக் கொண்டிருக்கும் அழுக்குகள் கொஞ்ச நஞ்சத்தை நீக்கும் குளியலாக அமைகிறது
த்ரிவிக்ரமனுக்கு மரணம் நிகழ்கிறது. வாழும் போதே மரணத்தைக் கடந்தவாராகத் தென்படுகிறார்.மரணம் இருளையும் வெளிச்சத்தையும் ஒரு சேர கொண்டு வந்திருக்கிறது.மரணம் பற்றிய சிந்தனைகள் ஒவ்வொருவரும் கடந்து செல்ல வேண்டிய குகைகளின் திறவு கோலாக இந்நாவலில் சித்தரிகப்படிருக்கிறது.சிந்தனைகளின் குவியலும் கற்பனையும் முயங்கி மரணம் பற்றிச் சிந்திக்க வைக்கிறது.. மனம் விசித்திரமாக இருக்கிறது. இந்த விசித்திர மனமும் சதா சிந்தித்துக் கொண்டே இருக்கிறது. சிந்தனையில் பல சமயங்களில் மரணம் பற்றி அதிக விசயங்கள் ஆக்கிரமித்து விடுகின்றன.உலகவாழ்வு, மரணம் பற்றி வியாகியானங்கள் செய்பவர்களை அடையாளம் காட்டி பரிகாசம் செய்யும் தன்மையும் இதில் உள்ளது.
இரண்டு நாவல்களும் மரணத்திலிருந்து தொடங்கின்றன. அது வாழ்க்கைக் கதையாக பின்னால் விரிகிறது. நினைவுகள் ஓயாமல் அந்தக் கதாபாத்திரங்களை அலைக்கழித்துக் கொண்டே இருக்கின்றன. நினைவுகளின் மீதான சஞ்சலங்களும் பலரின் மரணம் பற்றிய நினைவுகளும் ஊடாடிப் போகின்றன. நினைவுகள் மூலமும், பயணங்கள் மூலமும் மரணத்தைத் தாண்டிச் செல்வதற்கான ஆயத்தங்களைக் காண்கிறோம். எல்லோரும் மரண பயம் இல்லாமல்தான் கடந்து கொண்டிருக்கிறார்கள், நோய்களும் விபத்துகளும், மரண செய்திகளும் மரணத்தை நினைவூட்டிக் கொண்டே இருக்கின்றன, மரணத்திடம் ஏதாவது வகையில் சமரசம் செய்யத்தான் வேண்டியிருக்கிறது. நினைவுகள் அதிலிருந்து மீளவும் சில சமயங்களில் உதவுகிறது. இதைத்தான் சில அனுபவங்கள் மூலம் இந்நாவல்கள் சொல்லிச் செல்கின்றன.நாம் வாழும் வாழ்வின் உருவாக்கங்களில் பிறப்பும், மரணமும்,நினைவுகளும் துரத்திக் கொண்டே இருக்கின்றன. மரணம் இல்லாவிட்டால் வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லாமல் போய் விடுகிறது மரணம் எல்லாவற்றுக்கும் முற்றுப் புள்ளி வைத்து. விடுகிறது.இதை தேடலின் அம்சங்களாக்குகிறார் இறையன்பு.

தேர்ந்த உரையாடலாராக, பேச்சாளராக , கதை சொல்லியாக பரிணமித்திருக்கும் இறையன்பு உரைநடையிலும் ஜாலங்களைக் காட்டுபவராக கவர்ச்சிகரமான தத்துவ சாயல் கொண்ட சொற்றொடர்கள், உரைநடை மூலம் நாவலை புதுப்பித்துக் கொண்டே செல்கிறார். காட்சிமொழி கதையாடல், உயிர்ப்பான உரையாடல்கள் , டைரிக்குறிப்புகள், நனவிலி மனத்தின் சிக்கல்கள் என்று கதைப்பிரதியை வடிவமைத்துள்ளார்.

வாழ்க்கை அனுபவங்களிலிருந்து தத்துவசாரத்திற்குச் செல்லாமல் தத்துவத்தை மனதில் கொண்டு அந்த வகை அனுபவங்களை தேடிச் செல்கிற வித்தையை இறையன்பின் இந்த இரண்டு நாவல்களில் காண்கிறோம். அதை விவரிப்பதில் அவரின் வேறுபட்ட கருத்துலபரிமாணங்களில் தென்படும் புனைவுலகத்தின் நீட்சி சுவாரஸ்யத்தன்மையுடன் வெளிப்பட்டிருக்கிறது..மரணத்தை எல்லோரும் ருசித்துப் பார்க்கலாம்.

( சுப்ரபாரதிமணியன்., 8/2635 பாண்டியன் நகர்., திருப்பூர் 641 602.

Series Navigationசுத்தம் செய்வதுமறைமலையடிகளாரின் நடைக் கோட்பாடு
author

சுப்ரபாரதிமணியன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *