மருத்துவக் கட்டுரை இருதய தமனி நோய்

This entry is part 13 of 30 in the series 28 ஜூலை 2013

 

                                                    டாக்டர் ஜி .ஜான்சன்
          மாரடைப்பு ( HEART ATTACK ) என்பது இருதய இரத்தக் குழாயில் முழு அடைப்பு உண்டாவதால் ஏற்படும் உயிருக்கு ஆபத்தான நிலை.           இதன் முன்னோடியை இதயக் குருதிக் குறைநோய் ( ISCHAEMIC HEART DISEASE ) என்கிறோம்.இது இதயத் தசைகளுக்கு போதிய இரத்தம் செல்லாததால் உண்டாகும் இதய நோய்.இதனால் உயிருக்கு உடனடி ஆபத்து இல்லையெனினும், சரிவர கவனிக்காவிடில் மாரடைப்பை உண்டுபண்ணிவிடும்.இருதய தசைகளுக்குத் தேவையான பிராணவாயுவும், இதர சத்துகளும் ( nutrients ) போதிய அளவு இரத்தக் குழாய் கொண்டுவரவில்லை எனில் அதை இதயக் குருதி குறைநோய் என்கிறோம்.

இதற்கு கீழ்கண்ட கரணங்களைக் கூறலாம்:

1. இருதய தசைகளுக்கு இரத்தம் கொண்டு செல்லும் காரொனரி தமனிகளில் அடைப்பு உண்டாகியிருக்கலாம்..அதை உண்டாக்கும் சில காரணிகள் வருமாறு:

* தமனி தடிப்பு அல்லது தமனி வீக்கம் ( atheroma )

* குருதியுறைவு ( thrombosis )

* இசிவு , திடீர்ச் சுருக்கம் ( spasm )

* குருதிக்குமிழ் ( embolism )

* இருதய தமனி குறுக்கம் ( stenosis )

2. இருதய தசைகளுக்கு கொண்டுவரப்படும் தமனி இரத்தத்தில் கீழ்க்கண்ட காரணங்களால் குறைவான பிராண வாயு இருக்க நேரலாம்:

* இரத்ர்ஹச் சோகை ( anaemia )

* இரத்தத்தில் கார்பன் மானாக்சைட் எனும் நஞ்சு தன்மைமிக்க வாயு கலந்திருத்தல் ( carboxyhaemoglobinaemia )

* குறைந்த இரத்த அழுத்தம் ( hypotension )

3. இருதயம் வீக்கமுற்றிருந்தாலோ அல்லது இருதயம் வேகமாக இயங்கினாலோ ( உதாரணம்: துரித தைராய்டு செயல்பாடு ) அதன் பிராணவாயுவின் தேவை அதிகமாகும்.

இவ்வாறு இருதய தமனி வியாதியை ( coronary artery disease ) துரிதப்படுத்தக்கூடிய சில காரணிகளை நாம் தெரிந்து வைத்திருப்பது நல்லது.அவை வருமாறு:

* வயது

* பால் – ஆண்கள்

* பரம்பரை

* இனம்

மேற்கூறியவை அனைத்தும் நம்மால் மாற்ற இயலாதவை.இதில் பரம்பரையும் ஒரு முக்கிய காரணமாக இருப்பதால் சொந்தத்திலேயே திருமணம் செய்து கொள்வதை குறைத்துக் கொள்ளலாம்.( ஒரே ஜாதியில் மணந்து கொள்வதைக்கூட குறைத்து கலப்பு மணம் புரிந்து கொள்வதும் நல்லதே! )

* உயர்வான கொழுப்பின் அளவு

* புகைத்தல்

* உயர் இரத்த அழுத்தம்

* நீரிழிவு நோய்

* உடற்பயிற்சியின்மை

* இரத்தம் உறையும் தன்மை அதிகரித்தல்

* C -எதிர்விளைவு புரோதம் ( C – reactive Protein )

* இரத்தத்தில் கந்தக அளவின் உயர்வு ( homocysteinaemia )

* பண்பு நலன் ( personality )

* உயர்வான உடல் பருமன் ( obeisity )

* யூரிக் அமில மூட்டு வீக்கம் ( gout )

* கருத்தடை மாத்திரை

* மதுவுக்கு அடிமை

மேற்கூறியவற்றை நம்மால் ஓரளவு மாற்றவோ அல்லது குறைக்கவோ மூடியும்.

அவற்றை சற்று விரிவாக கவனிப்போம்.

* பால் – ஆண்கள்.

பெண்களைவிட ஆண்கள் இருதய தமனி வியாதியால் அதிகம் பதிக்கப் படுகின்றனர்.இதற்குக் காரணம் பெண்களுக்கு மெனோபாஸ் வரை ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அளிக்கும் பாதுகாப்பேயாகும்.

* பரம்பரை.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலருக்கு இருதய தமனி நோய் காணப்படலாம்.இதனால் சொந்தத்தில் திருமணம் செய்து கொள்வதை தவிர்ப்பது நல்லது.

* புகைத்தல்

இருதய தமனி நோய் புகைத்தலுடன் நேரடி தொடர்புடையது.ஒருவர் எத்தனை சிகரெட் புகைக்கின்றாரோ, அதற்கேற்ப அதிகமாக தமனி நோய் உண்டாகும் ஆபத்தும் உள்ளது.

* உணவு

கொழுப்பு அதிகமுள்ள உணவு வகைகளை உட்கொள்வ்தோடு தமனி நோய் அதிகம் தொடர்புடையது.

* உயர் இரத்த அழுத்தம்

உயர் இரத்த அழுத்தம் தமனி நோயுடன் நேரடித் தொடர்புடியது.

* நீரிழிவு வியாதி

நீரிழிவு வியாதியில் தமனிகள் நேரடியாகப் பாதிப்புக்கு உள்ளாவதால் இருதய தமனி நோய் எளிதில் உண்டாகிறது.

* உடற்பயிற்சியின்மையும் இருதய தமனி நோய்க்கு ஒரு முக்கிய காரணமாகும்.

ஆகவே மாரடைப்பு உண்டாவதற்கு முன்னோடியாகத் திகழும் இருதய தமனி நோய் பற்றி ஓரளவு இந்த வாரம் விளக்கியுள்ளேன். இதில் கூறப்பட்டுள்ள சில முக்கிய காரணிகளை நாம் விலக்கி வாழ முற்பட்டால் நம் இருதயத்தை மரடைப்பிலிருந்து காத்துக்கொள்ளலாம்.

( முடிந்தது

Series Navigationஉயில்பொசலான்
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *